Tuesday, May 21, 2013

துக்கடாக்கள்.


                                             துக்கடாக்கள்.
                                            --------------------போன வருடம் வாசமில்லா மலரிது என்று என் வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் சில பூக்கள் குறித்து எழுதி இருந்தேன். பெயர் தெரியாத பூவின் பெயரை கீதமஞ்சரி எப்படியோ தேடிக் கண்டு பிடித்து அதை blood lilly அல்லது football lilly என்று  தெரிவித்தார். அதில் விசேஷம் என்னவென்றால் சொல்லி வைத்தாற்போல் மே மாதம் செடி துளிர் விட்டு வந்து ஒரே ஒரு பூ பூக்கும். சுமார் பத்து நாட்கள்வரை இருக்கும் .அதன் பின் செடியும் பூவும் காணாமல் போய்விடும். இந்த வருடம் மே மாதம் ஒருவாரம் கழிந்தும் செடியைக் காணவில்லையே என்றிருந்தோம். குருவாயூர் பயணம் முன்பு சிறிதாய் துளிர் கண்டோம். மே 11-ம் தேதி செடி நன்றாகத் தெரிந்தது. என்ன ஆச்சரியம் ஒரு வாரத்தில் ஒரு செடி இருந்த இடத்தில் நான்கு செடிகள் வந்தன. செடிக்கு ஒன்றாக இப்போது நான்கு பூக்கள் இருக்கின்றன. நேரம் காலம் என்று ஒரு ஒழுங்குடன் செடி வளர்ந்து பூ பூப்பதைக் காணும் போது இயற்கையின் சக்தியில் பெருமையும் ஆச்சரியமும் தோன்றுகிறது.இந்தச் செடிகள் எப்படி இனப் பெருக்கம் செய்கின்றனவோ?

போன வருடம் பூத்த BLOOD LILLY                                                                                                                                          
இந்த வருடம் பூத்த நான்கு மலர்கள்.  திருட்டு மெஷின்
----------------திருடனைக் கண்டு பிடிக்கும் மெஷின் ஒன்று கண்டு பிடிக்கப் பட்டதாம். அதனை demonstrate  செய்ய பல நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப் பட்டதாம். அமெரிக்காவில் அது 30 நிமிடங்களில் 20 திருடர்களைக் கண்டு பிடித்ததாம்.இங்கிலாந்தில் 30 நிமிடங்களில் 50 திருடர்களைக் கண்டு பிடித்ததாம். ஸ்பெயினில் 30 நிமிடங்களில் 65 திருடர்களை கண்டு பிடித்ததாம். கானாவில் 30 நிமிடங்களில் 600திருடர்களைக் கண்டு பிடித்ததாம்.இந்தியாவில் 15 நிமிடங்களில் அந்த மெஷினே திருட்டுப் போய் விட்டதாம். !

நான் ஒரு இந்தியன்
------------------பாட்டிலில் ஷாம்பூ காலியான பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி இன்னும் ஒரு குளியலுக்கு அதை உபயோகிப்பேன்.
பற்பசை காலியானாலும் அதைத் தட்டி தகடாக்கி சுருட்டி எல்லாப் பேஸ்ட்டையும் வெளியில் எடுப்பேன்.
இருநூறு ரூபாய்க்குக் காய்கறிகள் வாங்கினாலும் கொஞ்சம் கொத்துமல்லித் தழை கொசுராக வாங்குவேன்.
கிடைத்த பரிசுப் பொருட்களையே மீண்டும் பரிசாகக் கொடுக்க அது பொதிந்து வந்த வண்ணத் தாளையே உபயோகிப்பேன்.என் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த bone chjna கோப்பை, தட்டுகளை விருந்தினர் வரும்போதுமட்டும் வெளியில் எடுப்பேன்.
ஒரு பொட்டுத் தங்கம் வாங்கும் எண்ணம் இல்லாவிட்டாலும் கூட அதன் விலை ஏற்றம் பற்றிக் கவலை கொள்வேன்.
TV ரிமோட்டைத் தட்டித் தட்டி அதன் உயிர் எடுப்பேன். புது பாட்டரி வாங்காமல் காலம் கழிப்பேன்.
விருந்துக்குப் போகுமுன் பட்டினி கிடந்து வயிற்றைக் காலியாக வைத்துக் கொள்வேன்
என்னுடைய T ஷர்ட் பழையதானால் அதை இரவில் உடுத்துவேன். இன்னும் பழையதானால் ஹோலி அன்றைக்கு உடுத்துவேன். இன்னும் பழையதானால் வீடு துடைக்க உபயோகிப்பேன்.

நாம் இந்தியர்கள்.
----------------ஆண்குழந்தைக்காக வேண்டுவோம். பெண்சிசுக்களை வேண்டோம்.முடிந்தால் கருவிலேயே அழிப்போம். பெரியோர்களின் ஆசியும் ஆண்மகவுக்கே பெண்ணுக்கல்ல.
ஆனால்
செல்வம் வேண்டுமென்றால் மஹாலக்ஷ்மியை வேண்டுவோம்.
கல்வி வேண்டுமென்றால் சரஸ்வதியை வேண்டுவோம்.
துக்கங்களில் இருந்து நிவாரணம் கிடைக்க  தாய் சக்தியை நாடுவோம்
பேய் பிசாசுகளில் இருந்து பயம் அகல காளிமாதாவை தரிசிப்போம்.
நாம் இந்தியர்கள். WE ARE HYPOCRITES.!

குருவாயூர் நாராயணீய பாராயணம் செய்தபோது எடுத்த சில படங்கள். இப்போதுதான் கிடைத்தது.   

     


14 comments:

 1. அழகான பூக்கள்... மகிழ்ச்சி...

  திருட்டு மெஷின் - ஹா... ஹா...

  இந்திய உண்மைகள் கொடுமைகள்...

  ReplyDelete
 2. பூக்கைளையும் தொடர்ந்து கவனித்து புகைப் படம் எடுத்து வெளியிட்டிருப்பது, தங்களின் கனிவான அக்கறையினைப் பறைசாற்றுகின்றது அய்யா. மகிழ்ந்தேன்

  ReplyDelete
 3. நேரம் காலம் என்று ஒரு ஒழுங்குடன் செடி வளர்ந்து பூ பூப்பதைக் காணும் போது இயற்கையின் சக்தியில் பெருமையும் ஆச்சரியமும் தோன்றுகிறது.

  ReplyDelete
 4. அழகான பூக்கள். அது பூக்கும் காலம் சரியாக பூப்பது ஆச்சிரியம் .இயற்கையின் ஒழுங்கு அமைப்பு வியக்க வைக்கிறது.

  லஞ்சம் வாங்கினார்களா என்று விசாரிக்க வ்ரும் அதிகாரிக்கே லஞ்சம் கொடுக்கும் நாடு அல்லவா? (நிலக்கரி ஊழல்)

  குருவாயூர் நாராயணீய பாராயணம் செய்தபோது எடுத்த படங்கள் அருமை.

  ReplyDelete
 5. திருட்டு மெஷின் சிரிப்பை வரவழைத்தது. உங்கள் வீட்டுப் பூ
  வியப்பாயிருக்கிறது.
  குருவாயூர் போட்டோக்கள் அருமை.

  ReplyDelete
 6. // நேரம் காலம் என்று ஒரு ஒழுங்குடன் செடி வளர்ந்து பூ பூப்பதைக் காணும் போது இயற்கையின் சக்தியில் பெருமையும் ஆச்சரியமும் தோன்றுகிறது //

  இயற்கையாகவே நடக்கும் இந்த ஒழுங்கை யோசிக்கையில் , உண்மையாகவே பிரமிப்பாகவும், நம்மை யாரோ நமக்குத் தெரியாமல் கண்காணிப்பதைப் போன்றும் தோன்றுகிறது.

  திருட்டு மெஷின், நான் ஒரு இந்தியன், நாம் இந்தியர்கள் – என்ற தலைப்புகளில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த துக்கடாக்கள்.

  ReplyDelete
 7. திருட்டு ஜோக் பிரமாதம்.

  பெண் தெய்வம் சுருக் என்றது. இந்தப் பார்வையில் யாரும் இதுவரை சொல்லவில்லை.

  படங்கள் அழகாக வந்திருக்கின்றன.

  இருநூறு ரூபாய்க்கு காய்கறி வாங்கினால் கூட கொசுறு கேட்டுத்தான் தருவார்களா? சரியாப்போச்சு!

  ReplyDelete
 8. //விருந்துக்குப் போகுமுன் பட்டினி கிடந்து வயிற்றைக் காலியாக வைத்துக் கொள்வேன்.//

  தப்பே இல்லை. வயிற்றில் உணவு இருக்கையில் மேலும், மேலும் அதை நிரப்புவது நமக்குத் தான் கெடுதல். இன்னும் சொல்லப் போனால் இரவு உணவுக்கு யாராவது வரப் போகிறார்கள் என்றால் அதற்கேற்றாற்போல் காலை உணவைச் சீரமைக்கும் திட்டம் வருடக்கணக்காக அமல் படுத்து வருகிறேன். இதைச் சிலர் கேலியும் செய்தது உண்டு. லக்ஷியம் செய்வதில்லை. அப்புறம் காலை சமைத்தது வீணாகும், விருந்தினருக்கும் போட முடியாது. :)))))  //என்னுடைய T ஷர்ட் பழையதானால் அதை இரவில் உடுத்துவேன். //

  ஏழைகளாகப் பார்த்துக் கொடுத்துடுவேன். போட்டுக்காட்டியும் பாத்திரக் காரனுக்குப் போட்டு பாத்திரம் வாங்கிப்பாங்களே. புடைவைகளை அப்படித் தான் கொடுத்துவிடுகிறேன். :))))

  ReplyDelete
 9. யாரும் சொல்லாமலே காலம் தெரிந்து பூக்கும் பூக்கள் அருமையாக உள்ளன. இங்கெல்லாம் காய்கறிக்கடைகளில் 200 ரூபாய்க்குக் காய்கள் வாங்கினால் அவங்களே பத்து ரூபாய்க் கொத்துமல்லிக்கட்டை இலவசமாய்க் கொடுக்கின்றனர். நாம கேட்க வேண்டியதில்லை. :))))

  ReplyDelete
 10. பெண் குழந்தையை வேண்டாமென்று கிராமங்களில் தான் சொல்கிறார்கள் என நினைக்கிறேன். இப்போதெல்லாம் நகரங்களில் ,பெண்ணோ, பிள்ளையோ கவலைப்படுவதில்லை என்றே தோன்றுகிறது.

  ஆண் குழந்தை மூலம் தான் வம்சம் விருத்தியாகும் என்பது விஞ்ஞான வழியிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே பொதுவான ஆசை ஆண் குழந்தையிடம் இருந்தாலும் பெரும்பாலும் பெண் குழந்தைகள் பிறப்பதையே காண்கிறேன்.

  ReplyDelete

 11. @ திண்டுக்கல் தனபாலன்
  @ கரந்தை ஜெயக்குமார்
  @ இராஜராஜேஸ்வரி
  @ கோமதி அரசு
  @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
  @ தி.தமிழ் இளங்கோ
  @ அப்பாதுரை
  @ கீதா சாம்பசிவம்
  பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி.பூவைப் பற்றி பதிவிட்டதன் நோக்கமே I WONDER என்று சொல்லத்தான். உறங்கச் சென்று விழித்தெழுவதே நிச்சயம் செய்ய முடியாத நாம் இயற்கையின் ஒழுங்கு கண்டு ஆச்சரியப் படாமல் இருக்க முடிவதில்லை. நம்முடைய சில இயற்கையான குணங்கள் பற்றி எழுதி ஒரு பதிவாய் வெளியிட்டேன். இங்கு பெங்களூரில் காய்கறிக் கடையில் பத்து ரூபாய்க்குக் குறைந்து எதுவுமே வாங்க முடியாது. கேட்காமலேயே கொசிறு தருகிறார்களா ஆச்சரியம் நம்முடைய traits சிலவற்றை எழுதினேன். தவறு சரி என்று ஏதும் சொல்ல வில்லை. லஞ்ச ஊழல் பற்றி விசாரிக்க வந்தவர்க்கே லஞ்சமா. நான் சொல்லவில்லையே.

  ReplyDelete
 12. //ஒழுங்குடன் செடி வளர்ந்து பூ பூப்பதைக் காணும் போது இயற்கையின் சக்தியில் பெருமையும் ஆச்சரியமும் தோன்றுகிறது.//

  இங்கு ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீக்காக காத்திருக்கும் தாவரங்களும் உள்ளன. தீ முடிந்த பிறகு, வெப்பத்தால் விதை வெடித்து, சாம்பலில் விதை முளைக்கிறது. இயற்கையின் வலிமை நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது.

  ReplyDelete

 13. @ packirisamy.N

  / இங்கு ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீக்காக காத்திருக்கும் தாவரங்களும் உள்ளன. தீ முடிந்த பிறகு, வெப்பத்தால் விதை வெடித்து, சாம்பலில் விதை முளைக்கிறது. இயற்கையின் வலிமை நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது./ இதுவரை தெரியாத தகவலுக்கு நன்றி.

  M

  ReplyDelete
 14. ஒற்றையாய் தலைநீட்டிய பூச்செடியோடு விளையாட இப்போது நான்கு பந்துப்பூக்கள்! அழகு.. அதிசயம்.. அடுத்த வருடம் இன்னும் பலவாக தோட்டத்தில் பந்துப்பூக்கள் படம் காண ஆவல்.

  இந்தியர்கள் பற்றிய தகவல்கள் மிகைப்படுத்தலின்றியும் இழிவுபடுத்தலின்றியும் நேர்மையாகவே உள்ளன. பகிர்வுக்கு நன்றி ஐயா.. துக்கடாக்கள் யாவும் ரசிக்கவைத்தன.

  ReplyDelete