என் கேள்விக்கென்ன பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் கேள்விக்கென்ன பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 அக்டோபர், 2017

கந்தனிடம் ஒரு கேள்வி


                      கந்தனிடம் ஒரு கேள்வி
                     ----------------------------------------
வலைப் பதிவுகளில் நாளும்   முருகனைப் பற்றிய பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன  காலத்துக்கு ஏற்ற பதிவுகள் நேற்று திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் இன்று சஷ்டி  எனக்கும்  முருகனைப் பிடிக்கும்   நான் படித்த கதைகளில் இருந்து  திரட்டியவை என்  பாணியில் பக்தியாகவும்  ஒரு வேளை தென்படலாம்  முன்பு நான்  எழுதிய ஃப்லோ இப்போது இல்லை என்கிறார் ஏகாந்தன்  சரியென்றே தோன்று கிறது  அதனால் என்ன முன்பு எழுதியதையே மீண்டும் வெளியிடலாமல்லவா

    நாளும் என் நினைவிலும் நாவிலும்
    வந்தமரும் குமரா, கந்தா- எனக்குன்னைப்
    பிடிக்கும் என்றொரு முறை எழுதி இருந்தேன்..
    அதில் நமக்குள்ள சமன்பாட்டைக் கூறி,
    ஏன் பிடிக்கும் எனவும் எழுதி இருந்தேன்.
    ஐயா, எனக்கொரு ஐயம்எனக்குனைப்
    பிடிக்கும் ,உனக்கெனைப் பிடிக்குமா.?

    நாளும் நெறி தவறி குணங்கெட்டு
    கோபுரம் மேலிருந்து கீழே விழுந்தவரைத்
    தாங்கிப் பிடித்தவர் நாவில் வேலால்
    “ சரவண பவ “ என எழுதி 
    “ முத்தை திரு பத்தித் திரு நகை “என
    அடியெடுத்துக் கொடுத்து அவர் உன்
    புகழ் பாட அருள் புரிந்தாயே
    எனக்கென்ன செய்தாய் நீ. ? 

    மண்ணுலகில் வந்துதித்து ஐந்து பிராயம்
    வாய் பேசாது ஊமையாய் நின்ற்வருக்கு
    வாயுரைக்க மட்டுமின்றி உன் மேல்
    பக்தியில் பாடவும் அருள் புரிந்தாயே
    எனக்கென்ன செய்தாய் நீ. ?


    கந்தா.! உன் புராணம் பாட வந்த

    கச்சியப்ப சிவாச்சாரியருக்கு

    எடுத்துக் கொடுத்த பாடல் முதல் அடி

   “ திகட சக்கர செம்முக மைந்துளான் “
    இலக்கணப் பிழை கொண்ட தென்று
    குமரகோட்டப் புலவர் பெருமக்கள்
    எடுத்துரைக்கத் தவறேதுமில்லை என்று
    நீயே செந்தமிழ்க் குமரனாய் வந்து
    சோழ நாட்டு வீர சோழியம் என்ற
    இலக்கண நூல் ஆதாரங் காட்டி அருளினாயே,
    எனக்கென்ன செய்தாய் நீ. ?

    மண்ணும் விண்ணும் தொடும் மாமரமாய் எதிர்நின்ற
    மாயையின் மைந்தன் சூர பதுமனை இரு கூராக்கி
    சேவலும் மயிலுமாய் தடுத்தாட் கொண்டாயே, மாலவன்
    மருகா, மாயையில் கட்டுண்டு மனம் பிதற்றும்
    எனக்கென்ன செய்தாய் நீ .?


 முன்னறிவிப் பேதுமின்றி குப்புற வீழ்ந்த

   என் கூடு விட்டு உயிர்ப் பறவை பறத்தல்

   உணர்ந்து “ ஐயோ “என்று அவன் மனையாளை

   அழைத்தவள் அஞ்சு முகம் கண்டு ஆறு முகம்
   தோற்றினாயே, நெஞ்சமதில் அஞ்சேல் என உன்
   வேல் காட்டினாயே, முருகனே, செந்தில் முதல்வனே
   மாயன் மருகனே, ஈசன் மகனே, ஒரு கை முகன்
   தம்பியே, உன் தண்டைக்கால் நம்பியே நாளும்
   பொலிவுறும் இப்பித்தன் எனக்கென்ன செய்தாய்
   ! 

முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும் போன்ற பதிவுகள் சிலருக்கு நினைவுக்கு வரலாம்பதிவுகளைப் படிக்க சொடுக்கவும்) 

(ஐயோ என்பது யமனின்  மனைவி பெயர் )