வர்ணனைகள் --ஒரு ஒப்பீடு
-----------------------------------------
அண்மையில் குருவாயூர்க் கண்ணனைக் கேசாதி பாதம் வரை வர்ணித்து எழுதினேன். அப்படியே என் காதலியை வர்ணித்து எழுதினால் எப்படி இருக்கும் என்று தோன்ற எழுதியது கீழே.என் இருபதுகளில் எழுதியதும் அடியில் . எழுத்தில் நடையில் வித்தியாசங்கள் தெரிகிறது அல்லவா.?ஏன்.?
வெங்காய சருகு சேலை
தலைப்பு காற்றில் படபடக்க
வெண்சங்குக் கழுத்தில் கருமணியில்
ஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்
நீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி
உன்னை நான் எதிரே கடந்து செல்கையில்
படபடக்கும் உன் கண் இமைகள் என்ன
பட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.
சிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்
புரள, எடுப்பான நாசி, இரு ஓரங்களில்
பெரிய வளையங்களுடன் காதுகள்
புண்ணியம் செய்தவை; சிகையின் முத்தச்
சுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை.
உச்சந்தலை தொடங்கி உன் அழகை
ரசிக்க என் கண்கள் உன் உடல் மேய
அநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாட
எனக்கோ மறைக்க முயல்வதைக் காணத் துடிப்பு
சாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது
என்றாலும் மங்கை உன் மென்
நடையின் சிறு அதிர்வில் குலுங்கும்
இரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின்
அழகைக் கூட்டிக் காண்பிக்கிறதோ?
துகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின்
வழுக்கலில் விட்டு விட்டுக் காணும்
தொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை.
அடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்
மதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ
என்னவாயிருந்தாலும் பாதசரம் கிணு கிணுக்கையில்
உன் கேசாதி பாதக் காட்சியில் திளைக்கிறேன்
பாவையே எனை நான் மறக்கிறேன்.
( என்னுடைய இருபதுகளில் அன்று நான் காதலில் எழுதியது இதோ)
வெண்ணிற மேனியாள் எனக்கு
மிளிரும் நீலவானம் சரிதுகில்
பன்னிறம் தெரியப் பதித்த மணிகள்
மின்னும் தாரகை நல்லணிகலன்
எனக்கு நிகர் யாரே இப்புவிமீதே எனவே
உன்னாது இயம்பும் மதியும்--கிளியே
கறை துடைத்த மதிவதனம் அவள்
மேனிக்கணியும் பட்டோ மற்றோ பொலிவுறும்
பேருண்மை- ஆங்கு
இதழிலோடும் புன்னகையும் நன்னகையாம்
வண்டென விரைந்தாடும் மலர் விழிகளும்
கண்டதும் கவி பாடத் தூண்டும்—என்
காதல் ஜோதி.!கன்னல் மொழியினள்—அவள்
காண்பார் கண் கூசும் பேரெழில்—கண்டும்
செறுக்கொழிந்தாளில்லை—ஏன்.?
சிந்தை கவர்ந்த என் பூங்கொடியாள் தன்
நடை,குரல், அதரம் கண்டும்-ஈண்டு
தோகை மயிலின் களிநடம் குறைந்திலை
கானக் குயிலின் இன்னிசைக் குறைந்திலை
கொவ்வைக் கனியதன் செம்மையும் குறைந்திலை-ஏன்?
கட்டழகன் எந்தன் கொட்டமடக்க
வட்டமிடும் கழுகன்ன சுற்றிவரும்
நான்முகன் திட்டமெலாம் தரைமட்டம்
இயற்கையின் படைப்பினில் எனதவள் சிறந்தவள்
கண்கூடு .தேவையில்லை அத்தாட்சி இதற்கு
யாரும் செறுக்கொழியற்க.! யானும் ஒழிகிலேனே.!