நவம்பர் மாதம் ஸ்கார்ப்பியோ ராசியில் பிறந்த சில பிரபலங்களின் பெயரைக் கூறு. .
பண்டிட் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி , ஜீ.எம். பாலசுப்பிரமணியம். .!
கடைசிப் பெயர் அனைவரும் அறிந்ததே. இந்த 74 வயது இளைஞன் பிறந்தது
11- 11-1938 மணம் முடித்தது 11-11-1964. AND GOING STRONG//! எப்போதும் போல் ஏதோ கிறுக்கத் தோன்றியது அடியில் காண்க.
ஆண்டொன்று போக அகவை ஒன்று கூட
இன்றுறங்கி நாளை எழுவேனா என்றறியாமலேயே
சேர்த்துவிட்டேன் ஏழு பத்துகளுடன் நாலாண்டுகளும்
ஆசை எனும் அரவமே அனைத்து வினைகளுக்கும்
ஆதி காரணம் என்றறிந்தும் பாசவலையில் கட்டுண்டு
காலம் கழிந்து விட்டது.. அன்பால் கட்டுவதும்
அன்பினால் கட்டப் படுவதும் இன்பம்தான்
மறுப்பதற்கில்லை, மறப்பதற்கில்லை. .புவியில்
வந்துதித்த நாளே இல்லத் துணையுடன் சேர
தேர்ந்தெடுத்த நாளும் எனும்போது கூடுகிறது
மகிழ்ச்சி குறையில்லாப் பொலிவுடன்.
அல்லல்கள் பலவற்றோடு அனுபவங்கள்
கற்றுத் தந்த பாடங்கள் அசைபோட்டு உணரும்போது
இன்னுமொரு வாழ்வு அமையுமானால் , கேள்வி எழுகிறது,
இதையே தேர்ந்தெடுப்பேனா என்று. .நிச்சயமாய் இதையே
தேர்ந்தெடுப்பேன், என்னில் இருந்த சில குறைகள் நீக்க
எனக்கொரு வாய்ப்பு அது நல்குமல்லவா.?
குறைவற்ற வாழ்வுதனை நிறைவாக வாழ்ந்து விட்டேன்.
இனி எனக்கொரு குறையிலை நான் தயார் யாரும்
அறியாத அண்டப் பேரண்ட வெளிக்குள் ஒளியிலோ இருளிலோ
நான் நுழைய, இருப்பினும் அனுபவங்கள் பகிர எனக்கங்கொருவலைத்தளம் இருக்குமா, தெரியவில்லையே..!
சில நாட்களுக்குமுன் உன்னை வணங்குகிறேன் என்னும் ஒரு பதிவு எழுதி உருவமில்லா சக்தியை வணங்கி சில வரிகள் எழுதி இருந்தேன். அதை அருமை வலையுலக நண்பர் சூரி சிவா ( சுப்புத் தாத்தா ) பாடி எனக்கு அணுப்பி இருந்தார். அதை அனைவருடனும் பகிர விரும்பினேன் ஆனால் என்ன செய்தாலும் ட்ராஃப்டில் வருவது ப்ரீவியூவில் வருவதில்லை. இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு என் மதிப்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிவுலக நண்பர்கள்
அனைவருக்கும் என் மனக்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்

