மூட நம்பிக்கைகள் மடே ஸ்நான லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூட நம்பிக்கைகள் மடே ஸ்நான லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 டிசம்பர், 2015

மடேஸ்நானவும் எடே ஸ்நானவும்


                                   மடேஸ்நானவும்   எடேஸ்நானவும்
                                    -------------------------------------------------------

கர்நாடகத்தில் ஏறத்தாழ எல்லா பிரசித்தி பெற்ற கோயில்களுக்கும் சென்றிருக்கிறோம். தர்மஸ்தலா மல்லிகார்ஜுனா ஆலயம். ஹொரநாடு அன்னபூரணி ஆலயம், சிருங்கேரி சாரதா தேவி கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், கொல்லூர் மூகாம்பிகை ஆலயம், குக்கே சுப்பிரமணியா கோயில்போன்றவற்றில் அன்னதானம் பிரசித்தம். பலரும் ஆண்டவனின் பிரசாதமாக உணவை உட்கொள்ளுகின்றனர். எல்லோருக்கும் உணவு என்ற மட்டில் மகிழ்ச்சியளித்தாலும் உணவு பரிமாறப் படுவதில் பேதம் காட்டுகிறார்கள். எல்லா இடத்திலும் அந்த பேதம் கடைபிடிக்கப் படுகிறதா என்று அனுபவத்தில் சொல்ல முடியாவிட்டாலும், குக்கே சுப்பிரமணியாவில் அதை நேரிலே பார்த்தேன். பிராமணர்களுக்கு தனி பந்தி .பிராமணன் என்று நிலை நாட்ட வேட்டியணிந்து பூணூல் இருக்கவேண்டும். எனக்கு இந்த வித்தியாசம் உடன்பாடில்லாததால் அங்கு உணவருந்துவதைத் தவிர்த்தோம். எங்களுடன் வந்த அந்தண நண்பர்கள், உணவருந்தி வந்தனர்
இதையெல்லாம் மீறி அங்கு நடைமுறையில் இருக்கும் இன்னொரு வழக்கம்/ சடங்கு மிகவும் வருத்த மளிக்கிறது. அப்படி பிராமணர்கள் உண்டு முடித்த இலைகளின் மேல் அங்கப் பிரதட்சிணம்போல் உருண்டு வேண்டுதல்கள் நிறை வேற்றுகிறார்கள். அதற்கு மடே ஸ்நானா என்று பெயர். இதனை எதிர்த்துக் குரல் எழுப்பி நீதிமன்றம் வரை போய் வழக்குப் பதிவு செய்யப்பட்டது அது குறித்த விவரங்கள் கீழே. 
. நம்பிக்கை என்னும் பெயரில் என்னென்னவோ நடக்கிறது. மனசு வலிக்கிறது. உயர்வு தாழ்வு பற்றி எழுதுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய எனக்கு செய்தித் தாள்களில் படித்தபோது மனசில் பட்டதைச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை இந்த கதியில் நாம் முன்னேறுவது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும். குருட்டு நம்பிக்கைகளை வளர விட்டு வேற்றுமை காட்டும் பழக்கங்களை தொடர்வதில் யாருக்கோ பலன் இருக்க வேண்டும்.இந்த மாதிரி கோயில்களில் உணவு அளிப்பதில் வேற்றுமை காண்பிக்கும் போது நெஞ்சில் நியாய நிலை கொண்டவர் அதை முற்றிலும் புறக்கணிக்க வேண்டாமா.? ஆண்டவன் பெயரில், அவனிருக்கும் இடத்தில் வித்தியாசம் பாராட்டுவது பலரது கீழான எண்ணங்களின் வெளிப்பாடல்லவா. வர்ணாசிரம தர்மத்தின் (?) மிச்ச மீதிகளைக் கண்டு பொங்கி எழ வேண்டாமா. ? என் எண்ணங்களைத் தாங்கி வரும்  பதிவுகளுக்கு ஆதரவாகப் பின்னூட்டங்கள் இல்லாதிருப்பது , நம்மில் பலரும் மாறவில்லையோ, அல்லது மாற விரும்பவில்லையோ என்பதைத்தானே காட்டுகிறது. .உச்ச நீதிமன்றமே இந்த நம்பிக்கைகளில் தலையிடுவதில்லை என்பது இன்னும் வருந்தத்தக்க விஷயம்
இந்தபழக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடரப் பட்டது. அரசாங்கம் பதில் மனுவாகநடை முறையில் சில மாற்றத்துடன் இந்த மடேஸ்நானத்துக்குப்பதில் எடே ஸ்நான அனுமதிக்கப் படலாம்  என்று கேட்டிருந்தது. இந்த எடே ஸ்நான  என்பது அந்தணர்கள் உண்ட எச்சில் இலைகளில் உருளுவதைத் தவிர்த்துஆண்டவன் பிரசாத இலைகளில் உருள அனுமதிக்கலாம் என்று கூறி இருந்தது. உயர் நீதி மன்றமும் 2012-ல் இதைத் தற்காலிகமாக அனுமதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது
தலித் அமைப்புகள் உச்ச நீதி மன்றத்தில்இது குறித்து மனுசெய்ய உச்சநீதிமன்றம் உயர் நீதி மன்றத்துக்கே வழக்கைத் திருப்பி அனுப்பியது. இதில் வருத்தப்படத் தக்க விஷயம் என்னவென்றால் உயர் நீதி மன்றம் நவம்பர் 2014-ல் மடே ஸ்நானவையே அனுமதித்துத் தீர்ப்பு வழங்கியது. 1600 நபர்கள் குக்கி சுப்பிரமணியாவில் நவம்பர் 2014-ல் மடே ஸ்நான உருளல் செய்தார்கள். டிசம்பர் 2014 –ல் உச்ச நீதி மன்றம்  இந்தப் பழக்கத்தைத் தடை செய்தது  இதற்கு மாற்றாக இப்போது எடே ஸ்நான செய்யப்படுகிறது/2015-ல் இதுவரை 400 பேர்களுக்குமேல் எடேஸ்நான செய்து விட்டார்கள். இந்த வேண்டுதல்நோன்பு இன்னும்  இரு தினங்களுக்கு நீடிக்கலாம்
 நம் நாட்டில் மூட நம்பிக்கைகளுக்கு அளவே இல்லை பதிவில் இது பற்றி எழுதினால் அது அவரவர் நம்பிக்கை என்று உதாசீனப் படுத்தப்படுகிறது  மக்களின் பகுத்தறிவு எங்கே போகிறது எச்சில் இலைகளில் உருண்டெழுந்தால்  நோய்கள் நலமாகும்  என்னும் அறிவற்ற போதனைகள்  தானே நினைக்க இயலாத பாமர மக்களின்  மனதில் ஏற்றப்பட்டிருக்கும்  மூட நம்பிக்கை.  உயர் நீதி மன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியபோது 1600 பேர்கள் எச்சில் இலைகளில் உருண்டார்கள் இதையே உயர் நீதி மன்றம் தடை செய்திருந்தால் இவர்களது வேண்டுதல்கள் என்னாகி இருக்கும்
இந்தமாதிரியான வழக்கங்களே ஏற்ற தாழ்வின் அஸ்திவாரம்  யார் எப்படிப் போனால் எனக்கென்ன என்று இருக்க முடியவில்லை.  இதைப் படிக்கும்  பலராவது உணர்ந்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல மாட்டார்களாஎன்னும் நப்பாசையில்தான் எழுதுகிறேன் இந்தவருடம் நடந்த எடே ஸ்நான உருளலில் ஒரு மாற்றத்துக்கு சில அந்தணர்களும்  உருண்டதாகக் கேள்வி. யார் உருண்டால் என்ன இந்த வழக்கம் பகுத்தறிவுக்கு முரண்பட்டது  வழக்கம் போல் பலர் தாண்டிப் போகாமல் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறேன்    .