Friday, December 18, 2015

மடேஸ்நானவும் எடே ஸ்நானவும்


                                   மடேஸ்நானவும்   எடேஸ்நானவும்
                                    -------------------------------------------------------

கர்நாடகத்தில் ஏறத்தாழ எல்லா பிரசித்தி பெற்ற கோயில்களுக்கும் சென்றிருக்கிறோம். தர்மஸ்தலா மல்லிகார்ஜுனா ஆலயம். ஹொரநாடு அன்னபூரணி ஆலயம், சிருங்கேரி சாரதா தேவி கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், கொல்லூர் மூகாம்பிகை ஆலயம், குக்கே சுப்பிரமணியா கோயில்போன்றவற்றில் அன்னதானம் பிரசித்தம். பலரும் ஆண்டவனின் பிரசாதமாக உணவை உட்கொள்ளுகின்றனர். எல்லோருக்கும் உணவு என்ற மட்டில் மகிழ்ச்சியளித்தாலும் உணவு பரிமாறப் படுவதில் பேதம் காட்டுகிறார்கள். எல்லா இடத்திலும் அந்த பேதம் கடைபிடிக்கப் படுகிறதா என்று அனுபவத்தில் சொல்ல முடியாவிட்டாலும், குக்கே சுப்பிரமணியாவில் அதை நேரிலே பார்த்தேன். பிராமணர்களுக்கு தனி பந்தி .பிராமணன் என்று நிலை நாட்ட வேட்டியணிந்து பூணூல் இருக்கவேண்டும். எனக்கு இந்த வித்தியாசம் உடன்பாடில்லாததால் அங்கு உணவருந்துவதைத் தவிர்த்தோம். எங்களுடன் வந்த அந்தண நண்பர்கள், உணவருந்தி வந்தனர்
இதையெல்லாம் மீறி அங்கு நடைமுறையில் இருக்கும் இன்னொரு வழக்கம்/ சடங்கு மிகவும் வருத்த மளிக்கிறது. அப்படி பிராமணர்கள் உண்டு முடித்த இலைகளின் மேல் அங்கப் பிரதட்சிணம்போல் உருண்டு வேண்டுதல்கள் நிறை வேற்றுகிறார்கள். அதற்கு மடே ஸ்நானா என்று பெயர். இதனை எதிர்த்துக் குரல் எழுப்பி நீதிமன்றம் வரை போய் வழக்குப் பதிவு செய்யப்பட்டது அது குறித்த விவரங்கள் கீழே. 
. நம்பிக்கை என்னும் பெயரில் என்னென்னவோ நடக்கிறது. மனசு வலிக்கிறது. உயர்வு தாழ்வு பற்றி எழுதுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய எனக்கு செய்தித் தாள்களில் படித்தபோது மனசில் பட்டதைச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை இந்த கதியில் நாம் முன்னேறுவது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும். குருட்டு நம்பிக்கைகளை வளர விட்டு வேற்றுமை காட்டும் பழக்கங்களை தொடர்வதில் யாருக்கோ பலன் இருக்க வேண்டும்.இந்த மாதிரி கோயில்களில் உணவு அளிப்பதில் வேற்றுமை காண்பிக்கும் போது நெஞ்சில் நியாய நிலை கொண்டவர் அதை முற்றிலும் புறக்கணிக்க வேண்டாமா.? ஆண்டவன் பெயரில், அவனிருக்கும் இடத்தில் வித்தியாசம் பாராட்டுவது பலரது கீழான எண்ணங்களின் வெளிப்பாடல்லவா. வர்ணாசிரம தர்மத்தின் (?) மிச்ச மீதிகளைக் கண்டு பொங்கி எழ வேண்டாமா. ? என் எண்ணங்களைத் தாங்கி வரும்  பதிவுகளுக்கு ஆதரவாகப் பின்னூட்டங்கள் இல்லாதிருப்பது , நம்மில் பலரும் மாறவில்லையோ, அல்லது மாற விரும்பவில்லையோ என்பதைத்தானே காட்டுகிறது. .உச்ச நீதிமன்றமே இந்த நம்பிக்கைகளில் தலையிடுவதில்லை என்பது இன்னும் வருந்தத்தக்க விஷயம்
இந்தபழக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடரப் பட்டது. அரசாங்கம் பதில் மனுவாகநடை முறையில் சில மாற்றத்துடன் இந்த மடேஸ்நானத்துக்குப்பதில் எடே ஸ்நான அனுமதிக்கப் படலாம்  என்று கேட்டிருந்தது. இந்த எடே ஸ்நான  என்பது அந்தணர்கள் உண்ட எச்சில் இலைகளில் உருளுவதைத் தவிர்த்துஆண்டவன் பிரசாத இலைகளில் உருள அனுமதிக்கலாம் என்று கூறி இருந்தது. உயர் நீதி மன்றமும் 2012-ல் இதைத் தற்காலிகமாக அனுமதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது
தலித் அமைப்புகள் உச்ச நீதி மன்றத்தில்இது குறித்து மனுசெய்ய உச்சநீதிமன்றம் உயர் நீதி மன்றத்துக்கே வழக்கைத் திருப்பி அனுப்பியது. இதில் வருத்தப்படத் தக்க விஷயம் என்னவென்றால் உயர் நீதி மன்றம் நவம்பர் 2014-ல் மடே ஸ்நானவையே அனுமதித்துத் தீர்ப்பு வழங்கியது. 1600 நபர்கள் குக்கி சுப்பிரமணியாவில் நவம்பர் 2014-ல் மடே ஸ்நான உருளல் செய்தார்கள். டிசம்பர் 2014 –ல் உச்ச நீதி மன்றம்  இந்தப் பழக்கத்தைத் தடை செய்தது  இதற்கு மாற்றாக இப்போது எடே ஸ்நான செய்யப்படுகிறது/2015-ல் இதுவரை 400 பேர்களுக்குமேல் எடேஸ்நான செய்து விட்டார்கள். இந்த வேண்டுதல்நோன்பு இன்னும்  இரு தினங்களுக்கு நீடிக்கலாம்
 நம் நாட்டில் மூட நம்பிக்கைகளுக்கு அளவே இல்லை பதிவில் இது பற்றி எழுதினால் அது அவரவர் நம்பிக்கை என்று உதாசீனப் படுத்தப்படுகிறது  மக்களின் பகுத்தறிவு எங்கே போகிறது எச்சில் இலைகளில் உருண்டெழுந்தால்  நோய்கள் நலமாகும்  என்னும் அறிவற்ற போதனைகள்  தானே நினைக்க இயலாத பாமர மக்களின்  மனதில் ஏற்றப்பட்டிருக்கும்  மூட நம்பிக்கை.  உயர் நீதி மன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியபோது 1600 பேர்கள் எச்சில் இலைகளில் உருண்டார்கள் இதையே உயர் நீதி மன்றம் தடை செய்திருந்தால் இவர்களது வேண்டுதல்கள் என்னாகி இருக்கும்
இந்தமாதிரியான வழக்கங்களே ஏற்ற தாழ்வின் அஸ்திவாரம்  யார் எப்படிப் போனால் எனக்கென்ன என்று இருக்க முடியவில்லை.  இதைப் படிக்கும்  பலராவது உணர்ந்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல மாட்டார்களாஎன்னும் நப்பாசையில்தான் எழுதுகிறேன் இந்தவருடம் நடந்த எடே ஸ்நான உருளலில் ஒரு மாற்றத்துக்கு சில அந்தணர்களும்  உருண்டதாகக் கேள்வி. யார் உருண்டால் என்ன இந்த வழக்கம் பகுத்தறிவுக்கு முரண்பட்டது  வழக்கம் போல் பலர் தாண்டிப் போகாமல் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறேன்    .


37 comments:

 1. நான் தங்களின் மேலான கருத்திற்கு உடன்படுகின்றேன்..

  அன்னதானம் என்பது பெறுபவனுக்கும் கொடுப்பவனுக்கு இடையே உள்ள ஏற்ற தாழ்வினை அகற்றுவது..

  அது ஒன்றே தான் அதன் நோக்கம்.. பசி தீர்த்தல் என்பது வேறு..

  அப்படியிக்க -
  எல்லாருக்கும் பொதுவான இறைவன் சந்நிதியில் பேதம் காட்டுவதை விடக் கொடியது அன்னதானத்தில் பேதம் காட்டுவது..

  பெரியோர் உண்ட உணவின் மிச்சமானது புனிதம் என்று ஒரு நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்..

  பெரியோர் எனில் வேறுபாடுகளைக் களைந்தவராக கடந்தவராக இருப்பவர்..

  சதாசிவப்ரம்மேந்திரரின் ஆராதனையில் இவ்வாறு நிகழ்வதாகக் கேட்டிருக்கின்றேன்..

  ஆனால் - ஒரு சாரார் சாப்பிட்ட இலை - என்பது களையப்படவேண்டியதே..

  ஆயினும் - எவரும் அவராகவே விரும்பினால் அது அவரது சுதந்திரம் என்று ஆகாதா?..

  ReplyDelete
 2. தங்களின் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன். இதையெல்லாம் பார்க்கும்போது ‘திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்றே பாடத்தோன்றுகிறது.

  ReplyDelete
 3. பக்தியின் உச்சகட்டம் என்பதானது இவ்வாறான கீழ்த்தரமான நிலைக்கு இட்டுச்செல்வது என்பது வேதனையைத்தருகிறது. இவர்களைப் போன்றவர்கள் திருந்த வாய்ப்பே இல்லை.

  ReplyDelete
 4. உங்கள் கருத்துதான் எங்களதும் சார். இது பற்றி நாங்கள் எங்கள் தளத்தில் பல மாதங்களுக்கு முன் ஒரு பதிவு போட்டிருந்தோம்..இதோ அதன் சுட்டி..

  http://thillaiakathuchronicles.blogspot.com/2013/12/madesnana-superstition.html

  ReplyDelete
 5. 28-04-2015 அன்று 101 வது நடைபெற்ற ஆராதனை விழா: இந்த நிலையில், 28-04-2015 அன்று 101 வது ஆராதனை விழா நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேண்டிக் கொண்டு சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு விழா கடந்த 23ம்தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சாப்பிட்ட இலையில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி மதியம் 1.30 மணியளவில் நடைபெற்றது. இதற்காக, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநில பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்சணம் செய்வதாக வேண்டிக் கொண்டு விரதம் இருந்து கோயிலுக்கு வந்திருந்தனர். இம்முறை வழக்கத்திற்கு மாறாக, அங்கப்பிரதட்சணம் செய்பவர்கள் ஒரு விருப்ப-விண்னப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ரூ.20/- செல்லுத்தி, கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டனர். அந்த படிவத்தில் கீழுள்ளவை இருந்தன:

  நெரூர் - 2015 - சாப்படு தயார், மூன்று வரிசை பந்தி - கூட்டம் அதிகம் - 28-04-2015.
  நெரூர் – 2015 – சாப்படு தயார், மூன்று வரிசை பந்தி – கூட்டம் அதிகம் – 28-04-2015.
  நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திர சபா
  19, அக்ரஹாரம், நெரூர் – 639 004.

  ஆராதனை அங்கபிரதட்சிணம் செய்வதற்கான ஒப்புதல்

  இன்று 28-04-2015 நடை பெறும் நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திராள் 101வது ஆராதனை விழாவில் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டும், கட்டுப்பட்டும் நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்:

  1. நான் எனது சுய விருப்பத்தின் பேரில் எந்தவிதமானதும், எவருடைய கட்டாயமும், யாருடைய வற்புறுத்துதலும் இன்றி எனது சொந்த நம்பிக்கையின் பேரிலேயே இந்த பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கபிரதட்சிணம் செய்கிறேன்.

  2. நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் மீது நான் கொண்டுள்ள பக்தியினால், நான் எனது சுய விருப்பத்தின் பேரிலேயே வேண்டுதல் செய்து கொண்டு, பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கபிரதட்சிணம் செய்ய சம்மதிக்கிறேன்.

  3. எனது இந்த வேண்டுகோள் நிறைவேற்றிக் கொள்வதற்காக நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திர சபா அவர்கள் நல்லமுறையில் சிறப்பான வசதிகளையும், பாதுகாப்பும் அளித்திருக்கிறார்கள்.

  4. மேற்படி அங்கபிரதட்சிணம் செய்து முடிந்தவுடன் எனக்கு குளிக்கவும், உடை மாற்றிக் கொள்ள செய்யப்பட்டுள்ள வசதிகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

  5. ஜாதி, சமயம், இனம், மொழி, இவைகளைக் கடந்து, எனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவே, நான் எனது சுய விருப்பத்தின் பேரிலேயே, எனது சொந்த நம்பிக்கை பேரிலேயே மேற்படி கட்டணம் செலுத்தி இந்த பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கபிரதட்சிணம் செய்கிறேன்.

  இப்படிக்கு,

  ReplyDelete
 6. தனிப்பந்தி என்பது தவறாக இருக்கலாம். ஆனால் யாரும் கட்டாயப்படுத்தாமல், தங்களது சுய விருப்பத்தின் பேரில் மக்கள் நிறைவேற்றும் இது போன்ற பிரார்த்தனைச் செயல்களுக்கு என்ன செய்ய முடியும்? எச்சில் இலைகளில் உருள்வதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நாம் சாப்பிட்ட இலையிலேயே நாம் உருள மாட்டோம். தலையில் தேங்காய் உடைத்தல் கூட பயங்கர வேண்டுதல்தான். யார் தடுக்க முடிகிறது? நீங்களே கூட அங்கு சாப்பிடுவதைத் தவிர்த்தீர்களே தவிர, உங்கள் கருத்தை அங்கிருந்தோரிடம் சத்தமாகக் கூற முடிந்ததா? தடுக்க முயற்சிக்க முடிந்ததா? இங்கு வந்து நம் கருத்தை எழுதலாம். அவ்வளவுதான். இதுதான் நிதர்சனம்.

  ReplyDelete
 7. வணக்கம் ஐயா
  இறைவனுக்கு முன் அனைவரும் ஒன்றே ஏழை-செல்வந்தன் என்பது சமூகத்துக்கு உட்பட்ட விடயம் இந்த வகையான விடயங்களை காணும் பொழுதுதான் எனக்கு இறை நம்பிக்கையில் ஐயம் ஏற்படுகிறது தங்களது ஆதங்கம் நியாயமானதே.?..
  சுனாமி வரும் பொழுது ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை எல்லோரையும் ஒன்றாக அழை(டி)த்து செல்கிறதே எப்படி ?

  ReplyDelete
 8. கருத்து சொல்லக் கூடாது என்பதல்ல காரணம். யாரோ சாப்பிடுகிறார்கள் யாரோ அவர்கள் சாப்பிட்ட இலையில் உருளுகிறார்கள். இதில் நமக்கென்னாச்சு – என்ற மனப்பான்மைதான் காரணம். மேலும் அந்த எச்சிலையில் உருளுகிறவர்களுக்கு அறிவு வேண்டும். உருளுகிறவர்கள் நின்றுவிட்டால் அப்புறம் இந்த சம்பிரதாயம் தானாகவே செயல் இழந்துவிடும்.

  ReplyDelete
 9. நம்பிக்கைகள் பலவிதம். எல்லா நம்பிக்கைகளும் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டவைதான். ஆனாலும் அவைகளை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். மனோதத்துவ கோட்பாடுகளின்படி மனநம்பிக்கை பல சாதனைகளைச் சாதிக்கவல்லது என்கிறார்க்ள. அது ஓரளவிற்கு உண்மையே.

  நாம் ஒரு காரியத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக முடிப்பதற்கு மனதில் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை அவசியம். நயாகரா நீர்வீழ்ச்சியின் குறுக்கே கம்பி கட்டி அதன் மேல் ஒருவன் நடந்து ஒரு கரையிலிருந்து மறுகரை செல்கிறான். இது ஒரு அனாவசியமான வேலை என்று நாம் நினைக்கலாம். ஆனால் அந்த சாதனை செய்பவன் தன்னுடைய மனோபலத்தை நிரூபிக்கிறான்.

  அது போல் கோவிலுக்குச் செல்வது என்பதே ஒரு மூட நம்பிக்கைதான். ஆனால் சமீப காலங்களில் எத்தனை புதிய கோவில்கள் உருவாகி இருக்கின்றன? மனிதன் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று நம்புவதாலேயே இப்படி புது புதுக் கோவில்கள் உருவாகின்றன.

  பொதுவாக அடுத்தவர்களின் நம்பிக்கையை கேலி செய்வது தேவையில்லாதது.

  ReplyDelete
 10. என்னைப் பொறுத்தவரை தெய்வம் என்பது நம்மை வழிநடத்துவதாக
  நல் வழிப் படுத்துவதாக,மனிதனுக்குச் சிந்திக்கின்ற ஆற்றலை வழங்குவதாக இருக்க
  வேண்டும்.காசு கொடுத்தால் உடன் தரிசனம், காசில்லாவிட்டால் காத்திரு என்பதிலும்
  எச்சில் இலைகளில் உருள்வதிலும் நம்பிக்கை இல்லை.
  பொதுவாகவே கடவுள் என்ற கருத்தே
  மனிதனின் தன்னம்பிக்கைக்கு எதிரானது என்று எண்ணுகின்றேன்.

  ReplyDelete

 11. @ துரை செல்வராஜு

  /ஆயினும் - எவரும் அவராகவே விரும்பினால் அது அவரது சுதந்திரம் என்று ஆகாதா/ இல்லைஐயா அநேகமாக மூளை சலவை செய்யப்பட்டவர்களுக்கு சுதந்திரம் என்பதே இல்லை. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 12. @ வே நடன சபாபதி
  திருந்தாத ஜன்மங்கள் அல்ல ஐயா. சுய அறிவை அடகு வைத்த ஜன்மங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete

 13. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  பக்தியின் உச்ச கட்டம் என்கிறீர்களா ஐயா. எனக்கென்னவோ பைத்தியக்காரத்தனத்தின் உச்சகட்டம் என்றே தோன்றுகிறதுவருகைக்கு நன்றி.

  ReplyDelete

 14. @ துளசிதரன் தில்லையகத்து
  நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் காணும் பதிவுக்கு அதைலேயே பின்னூட்டம் தருகிறேன் இந்தப் பதிவுக்குமுன்பே டிசம்பர் 2012 லேயே மடேஸ்நானமா மடஸ்நானமா என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் அதன் நீட்சிதான் இப்போதைய பதிவுவருகைக்கு நன்றி

  ReplyDelete

 15. ! GOPAL USML-HO

  உங்களது இந்தப் பின்னூட்டத்தின் மூலம் இந்த உருளுதல் கர்நாடகாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் நேரூரிலும் நடக்கிறது என்று தெரிகிறது இந்தமாதிரியான ஒப்புதல் மூலம் உருளுகிறவர்கள் தாங்கள் கட்டாயப்படுத்த ப் படவில்லை என்று கூறுகிறார்களா? அவர்கள்தான் ஏற்கனவே மூளை சலவை ஆனவர்களாயிற்றே இந்தப் பின்னூட்டம் மூலம் எதைச் சொல்ல வருகிறீர்கள் புரியவில்லை. வருகைக்கும் தகவலுக்கும் நன்றி

  ReplyDelete

 16. @ ஸ்ரீராம்
  தனிப்பட்ட முறையில் என் கருத்தைச் சத்தமாக அங்கே கூறி இருந்தால் நான் ஒரு காட்சிப் பொருளாயிருப்பேன் என்பது தவிர வேறு மாற்றம் ஏதும் நிகழ்ந்திருக்காது நீதிமன்றங்களே இவற்றைத் தடுத்து நிறுத்தத் தயங்குகின்றன என்பதே என் ஆதங்கம். நிதரிசன உண்மைகள் எத்தனையோ கண்முன் நிகழ்கிறது. சில ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. எழுதுபவன் என்ன செய்ய முடியும் பத்துபேர் நூறு பேர் ஆயிரம் பேர் படிக்கிறார்கள் என்றால் ஒரு ஒத்த கருத்து உருவாகலாமே என்னும் நப்பாசைதான் எழுத வைக்கிறது அதுவும் சந்தேகம்தான் வந்திருக்கும் பின்னூட்டங்களே சாட்சி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 17. @ கில்லர்ஜி
  இந்த மக்கள் கோலத்தில் போனால் தடுக்கில் போகிறார்கள். மடே ஸ்நானத்துக்கு தடை என்றால் எடேஸ்நான என்கிறார்கள் சுயமாக சிந்திக்கும் அறிவை அடகு வைத்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது வருகைக்கு நன்றிஜி.

  ReplyDelete

 18. @ தி தமிழ் இளங்கோ
  பதிவிடுபவன் கருத்துக்களை வேண்டுகிறேன் நம்மைச் சுற்றி நிகழும் விஷ்யங்களில் மனம் லயிக்கிறது என்பதே எழுதுவதன் காரணம் 2012 -ம் ஆண்டு டிசம்பர் மாதமே மடேஸ்நானவா மடஸ்நானவா என்று பதிவிட்டிருந்தேன் கடந்த சில நாட்களாக இந்தச் செய்தி பத்திரிக்கைகளில் வருவதால் அந்தப் பதிவின் நீட்சியே இது. வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 19. @டாக்டர் கந்தசாமி
  /நாம் ஒரு காரியத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக முடிப்பதற்கு மனதில் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை அவசியம். நயாகரா நீர்வீழ்ச்சியின் குறுக்கே கம்பி கட்டி அதன் மேல் ஒருவன் நடந்து ஒரு கரையிலிருந்து மறுகரை செல்கிறான். இது ஒரு அனாவசியமான வேலை என்று நாம் நினைக்கலாம். ஆனால் அந்த சாதனை செய்பவன் தன்னுடைய மனோபலத்தை நிரூபிக்கிறான்./ ஆனால் இம்மாதிரிச் சடங்குகளில் ஈடுபடுபவர்களுக்கு தன்னம்பிக்கையே இல்லை என்றே தெரிகிறது அடுத்தவர்கள் நம்பிக்கையை கேலி செய்யவில்லை. குருட்டு நம்பிக்கைகளையே சாடுகிறேன் வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 20. @ கரந்தை ஜெயக்குமார்
  /பொதுவாகவே கடவுள் என்ற கருத்தே
  மனிதனின் தன்னம்பிக்கைக்கு எதிரானது என்று எண்ணுகின்றேன்/.
  முதன்முதலாக உங்கள் கருத்தை வெளியிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 21. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  http://www.ypvnpubs.com/

  ReplyDelete

 22. @ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜ லிங்கம்
  சிந்தித்ததின் முடிவைக் கருத்தாக்கி இருக்கலாமே வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 23. ****பிராமணர்களுக்கு தனி பந்தி .பிராமணன் என்று நிலை நாட்ட வேட்டியணிந்து பூணூல் இருக்கவேண்டும். எனக்கு இந்த வித்தியாசம் உடன்பாடில்லாததால் அங்கு உணவருந்துவதைத் தவிர்த்தோம்****

  21 ம் நூற்றாண்டில் இப்படி நடக்குது!!! தந்தை பெரியார் காலத்திற்கு சென்றோமானால் இதைவிட பலமடங்கு மோசமாகத்தான் இருந்து இருக்கும்.

  நீங்கள் கண்டதை உங்களுக்கு பிடிக்காததை இப்படி வெளிப்படையாக சொல்வதே பாராட்டுக்குரியது சார். பலர் இதையெல்லாம் பார்த்தும், தங்கள் மன வருத்தத்தைச் சொல்ல தயங்கும் கோழைகள். ஏன் என்றால் பெரியாரை வில்லனாக்கிய உலகம் அவர்களையும் வில்லனாக்கிவிடும் என்கிற பயம்.

  தங்கள் உடன்பாடில்லாமமையை பகிர்ந்ததுக்கு பாராட்டுக்கள், சார்!

  ReplyDelete
 24. கஷ்டகாலம் என்ற சொல் இத்தகைய நிகழ்வுகளைச் சலிப்பதற்காகவே உருவானதோ?

  ReplyDelete
 25. எல்லா அசிங்கததுக்ம் ஆபாசத்துக்கும்...கடவுள் நம்பிக்கை என்று பொய்யை சொன்னால் படித்த அறிவாளிகள் முனைவர்கள் எச்சசை இலையில் உருளுவார்கள்.

  படிப்புக்கும் அறிவுக்கும் சம்பதம் இல்லை என்பதை காட்டவே எச்க இளைல்யில் உருளுவது...நம்பிக்கை என்று சொன்னால் அந்த எச்சியை கூட சாப்பிடும்-படித்த எச்சி கலைகள்!

  ReplyDelete
 26. நாம்பிக்கை என்ற பேரில் பேன்ட லத்திகள் மேலே உருளுவார்களா?
  சூதிரப்பயல்கள், முனைவர் படிப்பு படித்தாலும் உருளுவார்கள்..சூத்திரப் பய என்ன படித்தாலும் தலையில் களி தான்---அப்படி முட்டாளா வார்த்து எடுத்து இருக்கிறார்கள்...சுயமா சிந்தக்க தெரியாத முட்டாள்கள்.

  ReplyDelete
 27. இதைப் போன்ற நம்பிக்கைகள் எல்லா மதங்களிலும் இருக்கின்றன. ஒரு வகையில் நம்முடைய ஈகோவை(அகங்காரத்தை) குறைக்க இவைகள் உதவுகின்றன. மக்களுடைய குற்ற உணர்சிகளுக்கு ஒரு வடிகாலாக இத்தகைய பிரார்தனைகள் இருக்கும் என்று உளவியல் கூறுகிறது. எப்படி இருந்தாலும் தனி நபர் விருப்பம்.

  ReplyDelete

 28. @ வருண்
  என் தளத்தின் முகப்பில் காணும் வாசகங்களைப் படித்திருப்பீர்கள் அல்லவா எனக்கு மனதில் பட்டதை எந்தக் காழ்ப்பு உணர்வும் இல்லாமல் பகிர்கிறேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 29. @அப்பாதுரை
  வெகு நாட்கள் அஞ்ஞாதவாசத்தில் போய் விடுகிறீர்கள். வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 30. @ நம்பள்கி
  சில நம்பிக்கைகள் மனதுக்கு உரம் ஊட்டுபவையாக இருக்கும் முன்பொரு திரைப்படம் பார்த்தேன் மாமன் மகள் என்று நினைவு. அதில் ஜெமினிகணேசன் கதாநாயகன் மிகவும் கோழை. அவனுக்கு தைரியம் ஊட்டுவதற்கு அவனது பாட்டி ஒரு தாயத்தைக்கட்டுவாள். அது தைரியத்தையும் சக்தியையும் கொடுக்கும். அவனது தாத்தா அணிந்தது என்று கூறுவாள் அதை அணிந்தபின் கணேசன் மிகுந்த தைரியசாலியாகவும் சக்தியுள்ளவனாகவும் மாறிவிடுவார். ஒரு முறை அது தொலைந்து போக பழையபடி கோழையாகி விடுவார். அது ஏனோ நினைவுக்கு வருகிறது வர்ணாசிரம பேதங்களைக்குறை கூறும் நான் எந்த பேதமும் பார்ப்பதில்லை அது இல்லாத உயர்வு தாழ்வற்ற நிலை உருவாக வேண்டும் என்பதே விருப்பம்

  ReplyDelete

 31. @ பானுமதி வெங்கடேஸ்வரன்
  குருட்டு நம்பிக்கைகள் எந்த மதத்தில் இருந்தாலும் களையப்பட வேண்டியவை. தனிநபர் விருப்பம் என்பதற்காக அவை சரியாவதில்லை. அதைப் பேணும் எதுவும் உடன்பாடில்லை.

  ReplyDelete
 32. ஒரு மோசமான வழக்கத்தைக் கண்டித்தமைக்கு நன்றியும் வணக்கமும் அய்யா.
  “வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்,
  கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்“ என்பார் பாரதிதாசன்.
  தனிநபர் விருப்பம் என்றும் இதைக் கடந்து போய்விட முடியாது.
  எந்த மதத்திலாயினும் அடுத்தவர் தொடர்ந்தால் நல்லது என்னும் பொதுவான விதிகளை வைத்துக்கொண்டால் நல்லது. இதைக் காட்டுமிராண்டித்தனம் என்ற உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.. இதைத் தடுக்க ஆணையிட்ட உங்கள் மாநில முதல்வர் திரு.சித்தராமையா அவர்கள் பாராட்டுக்குரியவர். அதை எதிர்த்தும் வழக்குமன்றம் போயிருப்பதாகச் செய்திகள்..வழக்கு என்னாகுமோ? ஆகம விதி என்று அரசியல் சட்டவிதி சொன்னால் எங்கே போய் முட்டுவதோ? மொத்தத்தில் ஒரு நல்ல பதிவு வணக்கம்

  ReplyDelete

 33. @ முத்து நிலவன்
  வாராதவர் வந்தமைக்கு முதலில் நன்றி ஐயா. முதல்வர் ஆணையிட்டதால் தடுத்து நிறுத்த முடியுமா. ? அவரது கருத்து அங்கு வெளியாகி இருக்கிறது அவ்வளவே நீதி மன்றங்களே மதம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் ஆணை பிறப்பிக்கத் தயங்குகின்றனவே சில மூட நம்பிக்கைகள் சிலரது ரத்தத்தில் ஊறி இருக்கிறது./மூட நம்பிக்கைகளை ஆகம விதி என்று யாரும் சொன்னதாகத் தெரியவில்லைஎன்றைக்கு மனிதன் சுயமாகச் சிந்திக்கத் துவங்குகிறானோ அன்றே நல்ல நாள். பதிவைப் பாராட்டியதற்கு நன்றி ஐயா

  ReplyDelete
 34. எதனை தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் மக்களின் பலவீனமனப்போக்கை ,ஒரு சாரார் தன் ego வை திருப்தி படுத்திக்கொள்ள ஏற் படுத்திய பழக்கமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் இந்த எச்சில் எலையில் உருளும் பழக்கம் . என்ன ஒரு அநியாயம் . the people who had performed this are so vulnerable and dumb, that they believe such idiotic pracitces would make some changes in there life .நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால் ..... எத்தனை பாரதி , எத்தனை பெரியார் வந்தாலும் மாறாது .

  நீங்கள் அந்த இடத்தில் எதுவும் செய்ய முடியாது . சாப்பிடாமல் மட்டுமே வர முடியும் . கோவில் நிர்வாகம் நினைத்தால் முதலில் பிராமணர்களுக்கு தனி பந்தி என்பதனை முதலில் மாற்ற வேண்டும் , பின் தானாக இந்த உருளும் பழக்கம் இல்லாமல் போகும் அல்லவா ?

  ReplyDelete
 35. மதுரையில் வைக்கத்து அஷ்டமி சமாராதனையிலும் இந்த வழக்கம் உண்டு. ஆனால் பிராமணர்கள் மட்டும் சாப்பிட்ட பந்தி என இருந்தது இல்லை. அனைவரும் சாப்பிடுவார்கள். அந்த முதல்பந்தியில் மட்டும் அங்கப் பிரதக்ஷிணம் நடக்கும். இது அவரவர் விருப்பம் என்று விட வேண்டியது தான்! என்னைப் பொறுத்தவரையில் இம்மாதிரி வேண்டுதல்களைச் செய்து கொள்வதில்லை. :)

  ReplyDelete

 36. @ சசிகலா
  முதலில் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றிநமது சமுதாயத்தில் நிகழும் அநேக காரியங்களின் பின்னணியில் மதமும் எற்றதாழ்வு நிலைகளும் காரணமாய் இருக்கும் மனிதனை சுயமாகச் சிந்திக்க விடாமல் அடிமைத்தனத்தில் மூழ்க வைப்பவை. ஏதும் செய்ய இயலாத நிலையில் ஆதங்கங்களைப் பகிர்கிறேன்

  ReplyDelete

 37. @ கீதா சாம்பசிவம்
  ஏதோ ஓரிரு இடங்களில் கர்நாடகாவில் மட்டும்தான் நடை பெறுகிறது என்று நினைத்திருந்தேன் ஆனால் தமிழ் நாட்டிலும் இந்த பழக்கம் சில இடங்களில் இருப்பது வேதனை அதிகரிக்கச் செய்கிறது இது அவரவர் விருப்பம் என்று விட முடியவில்லை. மனிதன் தலை நிமிர்ந்து நிற்க முடியாமல் செய்வது நெஞ்சு பொறுக்கவில்லை. வருகைக்கும் தகவலுக்கும் நன்றி மேம்

  ReplyDelete