Tuesday, December 15, 2015

அது நீங்களில்லையா....?


                                          அது நீங்களில்லையா..........?
                                          ----------------------------------------------

நான் அம்பர்நாத் பயிற்சிப் பள்ளியில்  பொறி இயல் பயிற்சி பெற்றவன் என்று எனது முந்தைய பதிவுகள் சிலவற்றில் பகிர்ந்துள்ளேன்  அங்கு பயிற்சி பெற்றவர்கள் ATS AMBARNATH ALUMNI MEET என்று ஆண்டு தோறும் கூடுகிறார்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும்  இதற்கான சாப்டர்கள் துவங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சாப்டரில் கூடுகிறார்கள்

 நான் சென்னை சாப்டரில் 2010-ம் ஆண்டு கலந்து கொண்டேன்  இந்தமாதிரி கூடும் போது ஆகும் செலவுக்கு ரெஜிஸ்திரேஷன்  என்று ஒரு தொகை வருபவர்களிடம் இருந்து வசூலிக்கப் படுகிறது 2010-ம் ஆண்டு ரூ. தலைக்கு ரூ 600-/ என்று வசூலித்தார்கள் . மேலும் அந்த சாப்டரின் கமிட்டி மெம்பர்கள்  கூடுவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறார்கள் ஒரு சூவநீரும் பதிவிடுகிறார்கள் 2016-ம் ஆண்டு ஃபெப்ருவரி மாதக் கடைசியில் பெங்களூரு சாப்டர்  துவங்கி கூடுதலுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அம்பர்நாத் பயிற்சிப் பள்ளியின் மாணவர்கள் அகில இந்தியாவிலிருந்தும் வருபவர்கள்
நாங்கள் எச் ஏ எல்  லிலிருந்து பயிற்சிக்கு அனுப்பப் பட்டவர்கள் மொத்தமாக சுமார் 200 பேர்கள் எச் ஏ எல் லிலிருந்து பயிற்சி அளிக்கப் பட்டனர். நான் முதலாம் பாட்சைச் சேர்ந்தவன் சில ஆண்டுகள் கழிந்ததும் அந்த மாதிரி பயிற்சி நடத்துவது நின்று விட்டது பயிற்சி பெற்றவர்கள் உலகின் எல்லாக் கோடிகளிலும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்
2016-ம் ஆண்டுக்கான ஆலும்னி மீட்டில் சுமார் 200 பேர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கிறார்கள் தனி நபருக்கு ரூ1500-/ ம் மனைவியுடன் வந்தால்  ரூ2500-/ம்  கட்ட வேண்டும் இரண்டு நாள்  நிகழ்ச்சி . முதல் நாள் சந்திப்பும் கூடுதலும் இரண்டாம் நாள் பெங்களூரைச் சுற்றி உலாவும்  இருக்கும்  சூவநீரும் தயாராகிக் கொண்டிருக்கிறது


எனக்கு இந்த மாதிரி கூடுதலில் பெரிய அளவு நம்பிக்கை இல்லை.  நான்  1957-லிருந்து 1959 வரை பயிற்சியில் இருந்தேன் அந்த நாளைய நண்பர்கள் வெகு சிலரிடமே தொடர்பு உள்ளது.  மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற வருவோர்  பெரும்பாலானோர் எனக்குப் பரிச்சயப் படாதவர்களே. பதிவர் சந்திப்பிலாவது என் எழுத்துக்களைப் படிப்பவர்க்கு நான் யாரென்று தெரிந்திருக்கலாம் ஆனால் ஒரே பயிற்சிப்பள்ளியில் பயின்றவர்கள் என்பது தவிர வருவோரைப் பிணைக்கும்  சக்தி ஏதாவது இருக்கிறதா தெரியவில்லை.

இருந்தாலும் இந்தச் சந்திப்புக் கமிட்டி என் முகவரி தெரிந்து என்னைத் தொடர்பு கொண்டு அழைப்பிதழும் ரெஜிஸ்திரேஷன் படிவமும்  அனுப்பி இருக்கிறார்கள்.  பெங்களூரிலேயே சந்திப்பு என்பதால் நானும் என்  துணைவியாருடன் பங்கு கொள்ளப் போகிறேன்  இதில் இன்னொரு சுவாரசியமானத் தகவல் என்ன வென்றால்  பங்கு பெறுவோர் அனைவரும் அவர்களது எழுபதுகளில் இருக்கும்  இளைஞர்கள். சந்திப்புக் கமிட்டியின் காரியதரிசி என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வந்திருந்தார் அது பற்றி ஒரு பதிவும் எழுதி இருந்தேன் “ வெக்கலாமா பெட் “ எனக்கு இந்தக் குழுவிலிருந்து வரும் செய்திகளில்  முக்கியமானது யாராவது ஒருவரது மறைவுச் செய்தியைத் தாங்கி இருக்கும்  ஒரு மாதத்தில் குறைந்தது நான்கு மறைவுச் செய்திகளாவது இருக்கும்

இருந்தாலும் பங்கு பெறப் போவோரின் ஆர்வம் ஆச்சரியமளிக்கிறது இந்தியாவிலிருந்தும்  உலகின்  பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருவோர் நன்கு முன் கூட்டியே திட்டமிட வேண்டும் விமான முன் பதிவு, ரயில் முன் பதிவு. தங்குமிடம் பற்றிய முன் பதிவுக்கான விவரங்களுடன் குழுவுடன் தகவல் பரிமாற்றம்  சந்திப்பு எல்லாம் திட்டமிடப்பட்டு நடக்க வேண்டும் இதன்  அகில இந்தியக் குழுவின் தலைவர் தற்போது  அமெரிக்காவில் இருக்கிறார். அவரது பேரன் அமெரிக்க ஜனாதிபதியின் கையால்  டென்னிஸ் விளையாட்டில் பரிசு வாங்கினார் என்று பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்ஹாக்கி விளையாட்டில் தேர்ச்சி பெற்றிருந்தார் இப்போதெல்லாம் நேர்முக வர்ணனைகளில்  ஈடுபடுகிறார்
எனக்கு பரிச்சயமானவர்கள் வெகு சிலரே என்னுடன் பயிற்சி பெற்ற என் பாட்ச் மேட் பல ஆண்டுகளுக்குப் பின் அதே ஏ டி எஸ் பயிற்சிப்பள்ளியில் வைஸ் ப்ரின்சிபாலாக இருந்தவர் அண்மையில் காலமானார்
நாட்களை எண்ணிக் கொண்டிருப்போர் ஆனாலும் இருக்கும்  போது வாழ்க்கையை அனுபவித்து விட வேண்டும் என்று நினைப்பவரே இந்த மாதிரி சந்திப்பில் பங்கு கொள்ள நினைப்பார்கள் என்று நம்புகிறேன்  ஆகவேதான் நானும்  பங்கு பெற எண்ணுகிறேன் 
 ஒரு கொசுறுச் செய்தி
நான் காலையில் நடைப் பயிற்சியில் இருக்கும் போது ஒருவர் அறிமுகமில்லாதவர்  என்னை நிறுத்தி என் வீட்டருகே அண்மையில் ஏதாவது இறப்பு நிகழ்ந்ததா என்று கேட்டார். நான் முதலில் இல்லை என்று சொல்லி சற்று நேரம் கழிந்து என் வீட்டு மாடியில் குடி யிருப்பவர் ஒருவர் அண்மையில்  தவறி விட்டார் என்றேன் “ ஓ அதுதானே பார்த்தேன் அது நீங்களில்லையா.? சந்தேகமாய் இருந்தது...” என்றாரே பார்க்கலாம்..........!


 

26 comments:

 1. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் மலரும் நினைவுகள்தான் நல்ல நட்பாய் இருக்கும் என்று தோன்றுகிறது. இளமையின் நினைவுகள் முதுமையில் இருந்து கொண்டுதானே இருக்கும்.

  வழியில் நிறுத்தியவர் உங்களுக்கு திருஷ்டி கழித்து விட்டார் என்று சொல்லுங்கள்!

  ReplyDelete
 2. வயதாகி நினைவும் தப்பாமல் இருந்தால் நமது நல்ல நினைவுகளே நம்மை வழிநடத்திச் சென்றுவிடும். சில சமயங்களில் இளமையாகவும் இருக்கச் செய்யும். நீங்கள் ஆர்வமுடன் கலந்து கொள்வதிலேயே தெரிகின்றது சார்.

  அது சரி அந்த மனிதரின் வார்த்தைகள் அநாகரீகமாக எங்களுக்குத்தோன்றியது.

  ஸ்ரீராம் அதை திருஷ்டிக் கழித்துவிட்டார் என்று பாசிட்டிவாகச் சொல்லியதையும் ரசித்தோம் சார்..

  ReplyDelete
 3. 77 years ..still young.GREAT. HATS OFF.MY BEST WISHES.
  kalakarthik
  karthik amma

  ReplyDelete
 4. வணக்கம் ஐயா 100ஐத் தாண்டுவீர்கள் அதுவரை பதிவுகளும் வரும்
  நண்பர் ஸ்ரீராம் அவர்கள் சொன்னது சரிதான்.

  ReplyDelete
 5. இந்த மாதிரி அலும்னி மீட்டுக்கு ஏற்பாடு செய்வதும், கலந்து கொள்வதும் உற்சாகமானதுதான். இருந்தாலும், காலம் கடந்துவிட்ட நிலையில் யாரையும் சரியாகத் தெரிந்துகொள்ளமுடியாமல் புதியவர்களைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனத் தோன்றுகிறது.இருந்தும் சந்திப்பு சந்திப்புதானே!

  எதிரே வந்து கேள்விகேட்ட அந்த ஆசாமிபற்றி, டீ போட்டுக்கொண்டிருந்த மனைவியிடம் சொன்னேன். அவள் அதிர்ந்து ``அடப்பாவி! என்ன திமிரு அவனுக்கு! இப்படித்தான் இந்தக் காலத்துல மனுஷனுங்க இருக்கானுங்க. இவன்கள நாலு சாத்து சாத்தி ஏதாவது எழுதுங்கப்பா!``என்றாள். கோபத்தில் போட்ட கொதிக்கும் டீ, குளிருக்கு இதமாக இருந்தது.

  ReplyDelete
 6. எதிரில் உங்களை விசாரித்த நபர்
  நிச்சயம் கொழுப்பெடுத்த மனிதர்தான்
  ஆனால் அதையும் எழுதியதை மிகவும் இரசித்தேன்
  வாழ்வை அதன் போக்கில் இரசித்து வாழ்கிறீர்கள்
  என்பதற்கு இதுவே அத்தாட்சி.

  ReplyDelete
 7. குறிப்பிட்ட வயதுக்கு மேல் பழைய நண்பர்களையும் உறவுகளையும் காண்பதில் தனிசுகம் தான் உள்ளது சார்...உங்கள கேட்ட ஆள சும்மா விட்டுருக்கக்கூடாது..

  ReplyDelete
 8. பலருக்கு என்ன பேசுகிறது என்ற விவஸ்தை இல்லை. நேற்றைக்கு அலுவலகத்தில் ஒரு நபர் தனது மகளுக்குத் திருமணம் என பத்திரிக்கை கொடுக்க வந்தபோது அவரிடம் இன்னொருவர் கேட்டது - ஏய்யா உன் மகள் நல்லா இருக்கறது உனக்குப் பிடிக்கலையா? திருமணம் செய்வது ஒரு வேஸ்ட்! எனச் சொன்னார்......

  சந்திப்பு சிறக்க எனது வாழ்த்துகள்.... சென்று வந்த பிறகு உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்!

  ReplyDelete
 9. நானும் சந்திப்புக்கு அழைப்பிதழ் அளிக்க வந்தவர்தான் ,உங்களின் இருப்பை விசாரித்து விட்டு வந்தாரோ என நினைத்தேன் ,கடைசியில் பார்த்தால் தமாஷ் பேர்வழியா இருக்காரே :)

  ReplyDelete
 10. அந்நாள் நட்புகளை பார்ப்பதும் பேசுவதும் தனிசுகம்தான்

  ReplyDelete
 11. பதிவின் கடைசி வரிகள் உங்கள் பாணியில் நச்சென்று இருந்தது. இவ்வரிகளைப் படித்ததும் ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறி செய்தித்தாளில் வருத்தப்படுகிறோம் என்று கூறி அறிவிப்பு வந்ததாம். உண்மையில் அவர் இறக்கவில்லை. அவர் மறுப்பு தெரிவித்தவுடன் மறுநாள் செய்தியில் அவர் இறக்கவில்லை என்பதைக் கூறுவதில் வருத்தப்படுகிறோம் என்று செய்தி வெளியானதாம்.

  ReplyDelete
 12. நிச்சயம் இது போன்ற சந்திப்புகளில் கலந்துகொள்வது அவசியம்.அது மனதிற்கு உற்சாகம் தருவதை நான் உணர்ந்திருக்கிறேன்.
  அந்த அறிமுகமில்லாதவர் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லியிருக்கவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

  ReplyDelete

 13. @ ஸ்ரீராம்
  இந்த சந்திப்பில் பல புதிய அறிமுகங்களும் நட்பும் இருக்கும் என்று நம்புகிறேன் வேறு டிஸ்ட்ராக்‌ஷன்ஸ் இல்லாத போது ஒருவருடன் ஒருவர் பேசி மகிழ்தல் இருக்கும் என்று நம்புகிறேன் திருஷ்டி கழிப்பு என்றால் என்ன ஸ்ரீ . வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 14. @ துளசிதரன் தில்லையகத்து
  வருகைக்கு நன்றி சார்/மேம்.எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இந்த சந்திப்பில் என்னைவிட இளமையாக நினைப்பவர்கள் பலரையும் சந்திக்கலாம் என்பதே. நல்ல வேளை என் நினைவுகளும் என் போலவே இளமையாக இருக்கிறது.
  அறிமுகமில்லாதவர் அம்மாதிரிக் கேட்டது எனக்கு தவறாகப் படவில்லை. என்ன மனிதர் மனதில் இருந்ததை பட்டவர்த்தனமாகக் கேட்டு விட்டார்

  ReplyDelete

 15. @ பொன்னியின் செல்வன் கார்த்திகேயன்
  முதல் வருகைக்கு நன்றி சார் அல்லது மேம் கார்த்தியின் வலையில் அவரது அம்மா எழுதுவதாகப் படித்த நினைவு. உங்கள் தளத்துக்கும் வந்து பார்த்தேன் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. என்னைவிட மூத்தவர்கள் வலைத் தளங்களில் கலக்குகிறார்கள்.

  ReplyDelete

 16. @ கில்லர்ஜி
  எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் பிறருக்குக் கஷ்டம் கொடுக்காமல் இருக்கவே விரும்புகிறேன் வருகைக்கு நன்றி ஜி.

  ReplyDelete

 17. @ ஏகாந்தன்
  முதலில் புதியவர்கள் பழகினால் பழையவர்களாகலாம் அறிமுகமில்லாதவர் ஒரு வெகுளி. மனதில் தோன்றியதைச் சொல்லி விட்டார்/ எனக்கோ என் மனைவிக்கோ கோபமோ வருத்தமோ வரவில்லை.

  ReplyDelete

 18. @ ரமணி
  ஐயா அவர் கொழுப்பெடுத்தவர் போல் தோன்றவில்லை. வெகுளி என்றே நினைத்தேன் என்ன ஆனால் என்ன பதிவெழுத வழி வகுத்தாரே. வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 19. @ எம்.கீதா
  நய்புகளையும் உறவுகளையும் சந்திக்க வயதுஒரு பொருட்டா மேம் . வருகைக்கு நன்றி

  ReplyDelete

 20. @ வெங்கட் நாகராஜ்
  வியவஸ்தை இல்லாமல் என்று தோன்றவில்லை. வெகுளித்தனமாகவே பட்டது. வாழ்த்துக்கு நன்றி சார்.

  ReplyDelete

 21. @ பகவான் ஜி
  அஞ்சல் முகவரி கிடைத்ததும் அவரை என் வீட்டுக்கு நான் அழைத்தேன் தமாஷ் பேர்வழிதான்/நானும் சந்திப்புக்கு அழைப்பிதழ் அளிக்க வந்தவர்தான்/ புரியவில்லையே

  ReplyDelete

 22. @ கரந்தை ஜெயக்குமார் அந்தநாள் நட்பென்னவோ மிகச் சிலரிடமே இனி நட்பாக்கிக் கொள்வோம் வருகைக்கு நன்றி. ஐயா.

  ReplyDelete

 23. @ திண்டுக்கல் தனபாலன்
  வருகைக்கு நன்றி டிடி.

  ReplyDelete

 24. @ அவர் நானல்ல என்று தெரிந்ததும் அறிமுகமில்லாதவர் வருத்தப் பட்டது போல் இருக்கவில்லை. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 25. @ வே நடனசபாபதி
  நான் பதில் சொல்லாவிட்டால் இறந்தது நானல்ல என்றால் வேறு யார் என்ற குழப்பத்திலேயே இருந்திருப்பார். அறிமுகமில்லாதவர்கள் சந்தித்து அனுபவங்களை பகீரப் போகிறோம் என்று நினைக்கிறேன்

  ReplyDelete