Wednesday, December 30, 2015

எழுத்து---- அன்றும் இன்றும்


                                     எழுத்து----அன்றும் இன்றும்
                                    --------------------------------------------

சில நாட்களாகவே எழுதுவது ஏதும்  திருப்தி தருவதில்லைபொழுது போக்கும் எழுத்துக்கள் எந்த மதிப்பும்  இல்லாதவை. நண்பர் ஏகாந்தன் என் வீட்டுக்கு வந்தபோது என் பழைய பதிவுகள் சிலவற்றைக் காட்டினேன் அண்மையில் எழுதிய சிலவற்றையும் காண்பித்தேன் அவர் சொன்ன கருத்து சரி என்றே தெரிகிறதுமுன்பு எழுத்தில் இருந்த ஓட்டமும் கருத்தும் இப்போதைய எழுத்துக்களில் இல்லையே என்று கேட்டார். எனக்கே என் பழைய பதிவுகளைப் படிக்கும் போது அந்த எண்ணம் தோன்றுகிறதுகாரணம் ஆராய முற்பட்டால் அந்த நாளைய எழுத்துக்களுக்கு  உரமூட்டும் பின்னூட்டங்கள் இருந்தன. என் எழுத்துக்களுக்கு பின்னூட்டமிடுபவர்களின் கருத்தை வெளிக்கொண்ரும் சக்தி இருந்தது. நான் அன்று எழுதிய பதிவு ஒன்றினையும்  அதற்கு வந்த பின்னூட்டங்களில்  சிலவற்றையும் இப்போது பதிவிடுகிறேன் ஒருவேளை அத்தகைய பின்னூட்டங்களே அல்லது வாசகர்களின் கருத்துக்களே என் எழுத்துக்கு  உரமூட்டியதோ என்னவோ நீங்களும்தான் பாருங்களேன்

அறியாமை  இருள்.

             
என்னுடைய விடியலுக்காகக் காத்திருக்கிறேன் என்ற
பதிவில்,விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும், விளங்கா நிலையில்,
என்றோ, எவனோ, வரைந்து முடித்துவிட்ட வட்டத்தின்
தொடக்கப் புள்ளி தேடி,நாம் ஏன் சோர்வுற வேண்டும்,
அறியாமை இருளில் இருப்பதே சுகம் என்று எழுதி இருந்தேன்..
அண்ட  வெளியின்  இருட்டின் வியாபிப்பும், அதில் ஒளி தருவதே
ஞாயிறின் ஜொலிப்பு என்றும், அறியாமையும் ,அவலங்களுமாய்
இருண்டிருக்கும் வாழ்வியலில், நம்பிக்கையே ஞாயிறின்  ஒளி
என்றும், அந்த ஞாயிறின் விடியலுக்காகக்  காத்திருக்கிறேன்
என்று ம் எழுதியிருந்தேன்.
          அப்படியே நான் எழுதி விட்டாலும், நம்பிக்கை என்று வரும்
போது, அது அறிவு சார்ந்த்ததாக இருக்க வேண்டும் என்பதில்
குறியாய் இருக்கிறேன்..அணு, அண்டம் அறிவியல் என்று ஒரு
பக்கம் எழுதியதைப் படிக்கும்போதும், ஒரு பக்கம் உருவமே
இல்லாத ஒன்றுக்கு ஆயிரம் உருவங்களும் ,நாமங்களும்
கொடுத்து, “ ஐயனே ,உம்முடைய அழகான பாதத்தை அர்ச்சித்து
இருப்பதும் நான் எப்போ.?”என்று  உள்ளத்தாலும், உதடுகளாலும்,
எழுத்துக்களாலும், ஏங்கிக் கொண்டிருப்பவனைப் பார்க்கும்போது,
இரண்டுக்கும்  பாலமாகப் பதிலாக, சாதாரணன் பகுத்தறிவின்படி,
ஒப்புக்கொள்ளும் படியான விளக்கங்கள் கிடைப்பதில்லை.
இல்லையென்றால் கிடைத்தவற்றைப் புரிந்து கொள்ளும் அறிவு
இருப்பதில்லை. நான் என்னைக் குறித்தே குறைபடுகிறேன்.
          அறியாத ஒன்றைப் பூரணமாக அறிந்து கொள்ள வேண்டும்
என்ற ஆர்வம், அதே சமயம் எல்லாம் அறிந்துவிட்டதாகச் சிலர்
நம்பி உண்மையில் அந்த அறிவைத்தேடி, விளக்கில் மாயும்
விட்டில் பூச்சிகள் போல், ஏதும் அறியாமல் புரியாமல் சாதிக்காமல்
செத்து மடிவதைக் காணும்போது மனம் ஆயாசப்படுகிறது

           
யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே, ஐயன் புகழ்
பாடு, என்று அறியாத ஒருவனுக்குள்ள ஆயிரம் நாமங்களில்,
சிலவற்றைப் பாடி, அவனுக்காக கற்பிக்கப்பட்ட ஆயிரம் கதை
களையும் அப்படியே உண்மை என்று நம்பி, நான் முன்பு கூறியபடி
அறியாமை இருளில் மூழ்கிக் கிடப்பதே சுகம் என்று காலம் கடத்த
வேண்டும்..ஆனால் என் செய்ய.? என் பாழும் மனம் ஒப்புவதில்லை.
          நான் முன்பே ஒருமுறை எழுதியிருக்கிறேன்.கடவுள்களும்
அவர்களுக்கான உருவங்களும், கதைகளும் ,ஏதோ ஒரு
நம்பிக்கையை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட புனைவுகளே.ஆனால்
ஆச்சரியம் என்னவென்றால், இந்தப் புனைவுகள் இந்தியத் துணை
கண்டத்தின் எல்லாப் பகுதிகளிலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக
உலவுவதுதான்.ஆதியிலிருந்தே மனிதன், தன்னைக் காத்துக்
கொள்ள, தன்னிலும் மேலான சக்தியிடம், தன்னை ஒப்படைத்து
இனி அவன் பாடு, என்று பொறுப்பை, விட்டுக்கொடுத்துவிட்டான்.
தன்னில் அடங்காத, தன் சக்திக்கும் மேலான, அதே சமயம் தன்
வாழ்வுக்கு இன்றியமையாத, பொருள்களுக்கு உருவகம் கொடுத்து,
அதையே வழிபட்டு நம்பிக்கையை வளர்த்து வருகிறான்.நீர், நிலம்
நெருப்பு, அண்டம் ,காற்று, என்பவற்றைக் கடவுளாக பாவிக்கத்
தொடங்கினான். விஞ்ஞானம் வளர வளர, அவையே மனிதனின்
உடலில் இருப்பவை என்று உணரத்துவங்கி, அதையே கடவுள்
உன்னில் உள்ளான் என்று மெய்ஞ்ஞானம்கூறுவதாக
எண்ணினால், ஏதோ புரிகிறது போல் தெரிகிறது.

       
இதையே ஸ்ரீ நாராயணகுரு அவர்கள்கூறியது ,நான் படித்துப்
புரிந்து கொண்டபடிஆத்ம விடுதலைக்காக ஆண்டவனை                                            வேண்டும ஒருவன், அவனையே ஆராதிக்கலாம்  என்றும், ஒரு                 கடவுள்  சிலையோ ,ஆண்டவன் உருவப்படமோ உண்மையில்        அவனுடைய பிரதிபலிப்பே என்றும், நிலைககண்ணாடி முன்                         நின்று, அவனையே அர்ச்சித்துக் கொள்வதற்கு ஒப்பாகும் என்றும்                தேடுப வனும், தேடப்படுபவனும், ஒன்றாகிறான் என்றும்,         வேண்டுபவனும்  வேண்டப்படுபனும் ஐக்கிய
மாக வேண்டும் என்றும்  கூறுவார்.இதையேஅஹம்
ப்ரம்ஹாஸ்மிஎன்று கூறுகிறார்கள் போலும்.

            
ஆனால் இப்படி வழிபடுவது சாதாரணனுக்கு சாத்தியம்
இல்லையே. அவனுக்கு உருவம் வேண்டும், உருவகம்
வேண்டும், கதை வேண்டும் ,அதில் ஒன்றிக் கலக்க வேண்டும்.
ஆனால் கடைசி வரையில் பெரும்பாலும் உண்மை உணரப்
படாமலேயே போய் விடுகிறது.
       
             
நம் முன்னோர்கள் கூறிவிட்டுச் சென்ற  கதைகள்
பொய்யா.?கதையை நடந்தவையாகப் பாவித்தால்தான்
நம்பிக்கை வரலாம். கதைகளின் நிகழ்ச்சிகளால் மனிதனின்,
வாழ்வியலுக்குத் தேவையான அனேக விஷயங்கள்
அறிவுறுத்தப் படுகின்றன.ஆனால் உண்மை நிலை என்ன.?
நாம் அந்த சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திடம் மயங்கி, அதனால்
சொல்லப்படும் கருத்துகளை மறந்து விடுகிறோம்.நமது
பதிவர்களின் ஒரு பதிவில், கதைகளின் கருத்தை மறந்து,
கருத்து சொல்பவர்களைப் பற்றிய கருத்துகளையே  உலாவ
விடுகிறார்கள் என்று படித்த நினைவு.
             
என்னுடைய எண்ணங்களும், கேள்விகளும், ஏற்ற
தாழ்வில்லா சமுதாயம் மலர்ந்து, அதற்கான விளக்கங்களும்
காரணங்களும் கிடைக்கப் பெறும்போதுதான் முற்றுப்பெறும்
என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை அபத்தமானதுஎன்பதும்
எனக்குத் தெரியும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவிடை
ல்லாமல் மயக்கத்தில் இருக்கும் வாழ்க்கை நியதிகளுக்கு
விடை காண இயலுமா. ? “ பரித்ராணாய  ஸாதூனாம்
விநாசாய  துஷ்க்ருதாம்.....தர்ம-ஸம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகேசாதுக்களை காத்தற்கும் துஷ்டர்களை
அழித்தற்கும் தருமத்தை நிலை நாட்டுத ற்கும் யுகந்தோறும்
வந்துதிப்பேன்என்று மக்களுக்கு நம்பிக்கை நிலைநாட்ட
பகவான் கூறியது  உண்மையாக்க அந்த ஆண்டவனுக்கு
நேரம் இன்னும் வரவில்லையா.?இந்த யுகம் முடியும்
தருவாயில் கல்கி அவதாரமாக வந்து காத்தருள்வார்  என்று
நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டுமா?
          எப்போதும்போல் என் சந்தேகங்கள் சில. 1). விலங்கு
களிலும், பறவைகளிலும் ஏழை பணக்காரன், படித்தவன்
படிக்காதவன், சாதி வேறு பாடுகள் இல்லையே.மனிதனுக்குள்
ஏன்.? 2).மனிதனுக்கு மட்டும்தான் பூர்வ ஜென்ம பலா பலனா.?

           
தலைவிதி , பூர்வ ஜென்ம  பலன் இன்ன பிற போன்ற
விஷயங்கள் தலையைப் பிய்க்கின்றன. மறுபடியும்
தோன்றுகிறது.அறியாமை இருளில் இருப்பதே சுகமோ.? 
=============================================
===  
இந்தப்பதிவுக்கு வந்த  பின்னூட்டங்கள் சிலவற்றைப் பாருங்கள்
1.   அறிவென்பது சுமைதான். அறிவு ஆராதிக்கப்படும்போது உண்டாகும் போதை மேலும் அறிவதற்கான பயணத்தை ஊக்குவித்து சுமையையும் அதிகரிக்கிறது.

அறியாமையின் இருளில் வாழ்வதுதான் உகந்தது. ஆனால் மிருகங்கள் அறியாமையில் வாழ்பவையல்ல. அவை உணர்வுகளால் தன் பலம் பலவீனத்தால் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு அதிலேயே அமைதியடைகின்றன. மனிதனின் சிந்தனைதான் அவனின் முற்பிறவி குறித்தும் கர்மா வினை குறித்தும் சிந்திக்க வைக்கிறது. அவற்றிலிருந்து கிடைக்கும் தெளிவு ஒரு தற்காலிக போதையே. அந்தத் தெளிவுக்குப் பின் புதிய கேள்விகளும் புதிய சந்தேகங்களும் தொடருவதால் அறிவென்பது மஹா சுமையே.

ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய நிறைய எண்ணங்களைத் தூண்டிய விசேஷமான பதிவு பாலு சார்.
2.   "நம்ம சிந்தனைகள்- ரொம்ப strong இருந்தா- அது கண்டிப்பா எங்கேயாவது பிரதிபலிக்கும்"- னு அம்மா சொல்லுவாள். "ததாஸ்து" கதையெல்லாம் இதையொட்டி தான் வரும். இந்த விஷயத்துல எனக்கு கொஞ்சம் நம்பிக்கை உண்டு. ஏதாவது பாட்டு நான் மனதில் பாடிக்கொண்டிருக்குகையில்- எங்காவது கேட்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்... இன்னிக்கு காலையில் 'prodigy', பூர்வ ஜென்மம்' பத்தியெல்லாம் நினைத்திருந்தேன்... இந்த போஸ்ட் இப்போ படிக்கறேன்...

there's an argument. not argument, kind of inference that we came up with when me and my dad were discussing about something a few days back. "Once knowledge is gained, there's is no going back to ignorance". That much we can agree upon, I guess, sir. So what we know- we know. We cannot pretend that we do not know. We are already out of darkness (may be we are in semi-darkness, now). 

பூர்வ ஜென்மத்த பத்தி- அப்பாவோட கருத்து ஒண்ணு. மனுஷனுக்கு மேல ஒன்னும் கிடையாது. பூனை-லேர்ந்து மனுஷ பிறவிக்கு progression நடக்கலாம். ஆனா- மனுஷன்லேர்ந்து கீழ போக இயலாது. இது எங்கயோ அவர் படிச்சது. ஆனா-- புனர் ஜென்மம் concept ரொம்பவே complicated ஆன ஒண்ணு.
May be this is crazy - ஆனா துப்பாண்டி- பத்தி எனக்கொண்ணு தோணும். அவன் பூனையா இருந்தாலும்- "nearly human tendencies" அவனுக்கு உண்டு. அவன கடந்த ஒரு வருஷமா நாங்க பாக்கரதிலேர்ந்து- இந்த விஷயம் வந்தது. Bushy கு இல்லாத சில குணாதிசயங்கள் துப்பாண்டி-கு உண்டு. விட்டுக்கொடுத்தல்- முக்கியமா. Magnanimity. ஒரு சில சமயத்துல- அவன் செயலெல்லாம்- may be அடுத்த ஜென்மத்துல அவன் மனுஷனா போகப் போறானோ-ன்னு தோணும்.

But this is just my view... Who knows, what's real?

Thought provoking post...

 3 புனைவுகள் எப்போதும் சுவையானவை. அவை சுவையோடு சிலசமயம் நாம் அனுமதிக்காமலேயே நம்முடைய வாழ்வில் புகுந்து நாம் விரும்பும் விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். நாம் அதனை நம்பவேண்டுமோ என்கிற ஒரு மனோபாவத்தையும் அது காட்சிப்படுத்திவிடும். கதைகள் எப்போதும் தேவையானவை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் ஒரு மாற்றத்தையும் அதற்கான கணிசமான விளைவையும் ஏற்படுத்தித்தான் இதுவரை நிலை நின்றிருக்கின்றன.

விலங்குகள் அறிவியல் விதிப்படி தெளிவானவை. அவற்றில் வாழ்வியலும் அதனைத் தக்க வைத்தலும் அவற்றிற்கு சொன்னதை செய் என்பதுபோல செருகப்பட்டே படைக்கப்பட்டுள்ளன. இரை வாசமும் அதனை உண்ணும்போது அர்ப்பணிப்பும் தின்று இளைப்பாறும்போது அதே தன்மையிலான இரைகள் அருகே இருந்தும் அவற்றைப் பற்றிய அலட்சியமும் அவற்றுக்கு பேச்சில்லாமல் சொல்லப்பட்டவை. இது அறிவியலின் தன்மை.
நாம் எல்லாவற்றையும் திணித்துக்கொள்ள இயலாது. திணித்துக்கொள்ள மனம் கிடந்து அலைகிறது. சில காட்டிக்கொள்கின்றன. சில நடிக்கின்றன. சில சொல்லாமல் போகின்றன. இருப்பினும் எல்லாவற்றையும் அதனதற்கரிய களத்தில் பிரமிப்போடு அனுபவித்துவிட்டு மறக்கலாம். அடுத்தடுத்து இதுபோன்று பல காத்துகிடக்கினற்ன.

தலைவிதி, பூர்வஜென்மம் இவை பற்றியெல்லாம் பெரிதாக சிந்தனை கொள்ளவேண்டியதில்லை. இவற்றை பசிக்கேற்றவாறு உணவு எடுத்துக்கொள்வதைப்போல தேவைக்கேற்பப் பயன்படுத்திப் பார்க்கலாம். இதன் விளைவுகளையும் இப்படியே எண்ணி ஏற்கலாம். அல்லது விலக்கலாம். சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பயன்படுத்தியும் பார்க்கலாம்.

அறிவினால் விளங்கி கொள்ள முடியாத போது அது பயத்தையும் ஆச்சர்யதையும் பழங்கால மனிதனுக்குக் கொடுத்தது. பயந்தான். பயன்படுத்தினான். அவனையறியாமல் வணங்கிப் போற்றிக் கொண்டாடினான். இது எல்லோரும் அறிந்ததுதான். தெரிந்தபோது பயன்படுத்தினான். சிந்தை தெளிந்தபோது இவற்றினைப் பற்றிய தெளிய ஆராய ஆரம்பித்தான்.
முன்னோரகள் சொல்லிய கதைகள் வீணல்ல. அவை அற்புதப் புதையல். அவற்றின் நீதிகளை அல்லது முடிவுகளை மட்டுமே உள் வாங்கிக்கொள்ளலாம். அவை பற்றிய ஆய்வு வேண்டியதில்லை என்பது என்னுடைய பணிவான கருத்து. 

எல்லாவற்றையும் அறிந்துகொள்ளவும் அறிந்து கொண்டபின் அனுபவிக்கவும் செய்தபின் எதுவுமே தெரியவில்லை என்கிற அறியாமையை உண்டாக்கிகொண்டால் இன்னும் சுவை கூடிவிடும். 

தொடர்ந்து பல்முனையிலும் யோசிக்க வைக்கும் பதிவு ஐயா.
உங்கள் பதிவுகள் எப்போதும் சுவையானவை மட்டுமல்ல. அது சிந்தனையை அசைப்பவை. எல்லோருக்கும் எல்லாமும் அனுபவமாகக் கிடைத்திருந்தாலும். ஒவ்வொருவர் வயதின் தளத்தில் அது தனித்துவமும் ஆர்வத்தையும் தருகிறது. நான் உங்கள் பதிவில் அந்த சுகத்தை அனுபவிக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் ஐயா. நன்றிகள்.

 4  Your Objective is to provoke your readers to ‘think’, and in that, you have achieved your objective; 

“Ignorance is Bliss “is a statement, probably made by people who experienced the same ‘pain ‘, as yourself..? Perhaps, to fancy that I must know all the answers to all my ( tormenting ) questions, is also a sort of egotism …( ? )… 

Bertrand Russell says ( quoting John Stuart Mill ) : Talking about the First Cause argument … The question Who created the world can not be answered , because it will lead to the ultimate question , Who created God; I am able to imagine and accept that the world is simply there! I am at peace with this proposition; if you are not able to imagine that the world is simply there, then that only shows your “poverty of imagination” … ( ! ) 

This is the same as 

சொல்லற சும்மா இரு” ; 

கண்டவர் விண்டிலர்;

“Choice less awareness”
“ Discussion implies non-understanding; Understanding implies non-discussion….” 
Thank you for provoking me to share this with you / readers….

எழுத்தாளன் எழுதுவதோடு நிற்பதில்லை. அந்த எழுத்துக்களின்  தாக்கமும் அறிய வேண்டுகிறான் ஆனால் இப்போதைய பதிவுகளில் இவன் இப்படித்தான்  என்று முத்திரை குத்தப்பட்டு விட்டதாலோ என்னவோ எழுத்துக்களின்  தாக்கம் தெரிவதில்லை. இல்லை ஒரு வேளை எழுத்துக்களுக்கு எந்த தாக்கமும் இல்லாது போய் விட்டதோ என்னவோ.
டாக்டர் கந்தசாமி பதிவுகளும் பின்னூட்டங்களும்  என்பது பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தார் சிலர் நமக்குத் தெரிந்தவர் , வேண்டியவர் அல்லது நாம் அவர் தளத்துக்குச் செல்வதால் பின்னூட்டம் இடுபவர் என்றெல்லாம் வகைப் படுத்தி எழுதி இருந்தார்  எனக்கென்னவோ பின்னூட்டங்களின் எண்ணிக்கையை விட  கருத்துச் செறிவான பின்னூட்டங்களே பதிவரை மேலும் எழுதத் தூண்டுபவை என்று நினைக்கிறேன் உங்கள் பின்னூட்டங்களை எதிர் நோக்கி.
இன்னொரு விஷயமும் பகிர விரும்புகிறேன்  பலரும் பின்னூட்டங்கள் பாராட்டியோ நிந்தித்தோதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனக்குத்தோன்றுவது என்னவென்றால் பதிவைப்படிக்கும் போது ஒத்த கருத்தோ எதிர்வினைக்கருத்தோ மட்டுமல்லாமல் படிக்கும் போது வாசிப்பவருக்குத் தோன்றும் கருத்துக்களையும் பதிவிடலாமே
32 comments:

 1. பொக்கிஷம் போலிருக்கின்றது..
  சிந்தனைக்கு விருந்து..

  ReplyDelete
 2. ஆம் பதிவின் சிறப்பினுக்கு
  பின் ஊட்டங்களும் ஒரு காரணமே
  என்னைப் போல் பதிவை விட பின்னூட்டங்களில்
  அதிக ஆர்வம் கொண்டிருக்கும் பலர்
  அதிகம் பின்னூட்டமிட முடியாமல் போனதும்

  சிறந்த பின்னூட்டங்களைத் தருகிற
  பலர் பின்னூட்டமிடாமல் இருப்பதுமே
  பதிவுகள் குறைந்தும்கொஞ்சம் மெருகு இன்றி
  இருத்தலுக்குக் காரணம் என்றால்
  அது மிகையில்லை

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா சிறந்த பின்னூட்டங்களே நம்மை மேலும் எழுத்தில் ஊக்கம் தருகிறது நல்ல அலசல் பதிவு

  ReplyDelete
 4. ஆழ்ந்த சிந்தனைகளைத் தூண்டும் பதிவு, இப்போதைய அவசரத்தில் யாருக்கும் இப்படிச் சிந்திக்க நேரமில்லையோ என்னவோ!

  ReplyDelete
 5. #தலைவிதி , பூர்வ ஜென்ம பலன் இன்ன பிற போன்ற
  விஷயங்கள் தலையைப் பிய்க்கின்றன. #
  இவையெல்லாம் இருக்கவே வாய்ப்பில்லை என்று முடிவோடு இருந்தால்,தலையைப் பிய்க்கவைக்காது ,மதில் மேல் பூனை நிலையில் இருந்தால் குழப்பம்தான் :)

  ReplyDelete
 6. பின்னூட்டங்கள் நமது எழுத்தை ஊக்குவிக்கும்
  உற்சாகப் படுத்தும் என்பது உண்மைதான் ஐயா
  ஆனால் இன்று பின்னூட்டம் இடுபவர்களின் எண்ணிக்கை
  மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது.
  இந்நிலை மாற வேண்டும் என்பதே என் விருப்பம் ஐயா

  ReplyDelete
 7. பின்னூட்டங்களின் எண்ணிக்கையை விட கருத்துச் செறிவான பின்னூட்டங்களே பதிவரை மேலும் எழுதத் தூண்டுபவை // உண்மைதான் சார்! அருமை சிறப்பு என்று சென்று விடுவது பொதுவாக நடப்பதுதான். கொஞ்சம் விரிவாகப் பின்னூட்டம் இடும் நாங்களுமே, அதுவும் கருத்துகள் முன் வைத்து, சில சமயங்களில் ஒற்றை வார்த்தையுடன் அல்லது ஒற்றை வரியுடன் செல்ல வேண்டியதாகிவிடுகின்றது என்பது நிதர்சனமான உண்மை. கருத்துகள் பரிமாற்றம் என்பது குறைந்துவிட்டது எனலாம். நேரமின்மை, இணையப் பிரச்சனைகள் என்றுப் பல காரணங்கள் இருக்கலாம்.

  எனக்குத்தோன்றுவது என்னவென்றால் பதிவைப்படிக்கும் போது ஒத்த கருத்தோ எதிர்வினைக்கருத்தோ மட்டுமல்லாமல் படிக்கும் போது வாசிப்பவருக்குத் தோன்றும் கருத்துக்களையும் பதிவிடலாமே // சரியே சார்.

  ஆனால் பல சமயங்களில் கருத்துகள் தொடர்வதில்லை, தொடரப்படுவதில்லை என்பதால் குறைந்துவிடுகின்றது.

  ஊமைக்கனவுகள் விஜு, நீங்கள் பின்னூட்டங்களில் பல சமயம் உங்கள் கருத்துகளையும் சொல்லுவதுண்டு. இப்போது கூட எங்கள் பதிவிற்கு அழகான விளக்கம் கொடுத்டிருந்தீர்கள். அதுவும் மிகவும் பொருத்தமாகச் சிந்திக்க வைத்தவகையில்.

  இப்போது அவசர உலகம் ஆகிப் போனதால் எல்லோரும் காலில் கஞ்சித் தண்ணியைக் கொட்டிக் கொண்டு ஓடுகின்ற நிலைமை. எங்களில் கூட துளசிக்கு நேரம் மிக மிகக் குறைவுதான் இணையம் இல்லை. மொபைலில் பார்த்து இருவரும் கருத்துச் சொல்லி, இருவர் எழுதுவதால், கீதா வீட்டில் இருப்பதால் ஏதோ பதிவுகள் கருத்துகள் என்று செய்ய முடிகின்றது. ஒரே நபர் என்றால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகின்றது சார்..

  உங்கள் பதிவு நல்ல ஆழ்ந்த கருத்துள்ள பதிவு. சார். தலைவிதி, பூர்வ ஜென்மம், என்பவை மனிதர்கள் தங்களை ஒரு சில கஷ்டங்களிலிருந்து மனதை விடுவித்துக் கொள்ள தங்களை ஆற்றிக் கொள்ள உபயோகப்படுத்தப்படுபவை.இதில் கீதாவின் கருத்து .. அதுவும் ஒரு புள்ளி வரையே. அது எல்லையை மீறும் போது ஒரு வித மெத்தனம் வந்துவிடுகின்றது. முயற்சி செய்யும் எண்ணத்தையும் புறம்தள்ளிவிடுகின்றது. அடுத்த அடி கூட எடுத்துவைக்க ஒரு மனத் தடை வந்துவிடும். சோம்பேறித்தனத்தையும் வளர்த்துவிடுவதுண்டு. சில சமயம் நிகழ்வுக்கான காரண காரியங்களைக் கூட ஆராய முற்படாமல் இருக்கச் செய்துவிடும். அப்படி இருந்திருந்தால் பல அறிவியல் தீர்வுகள், விரிவாக்கங்கள் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்காது. இன்னும் அறிவியல் நொடிக்கு நொடி வளர்ந்து புதிய புதியவை வந்து கொண்டுதான் இருக்கின்றது.

  எனவே, சில நிகழ்வுகள் நம்மையும் மீறி நடப்பவைதான் என்றாலும் நம்மை சுயசிந்தனைக்கு உட்படுத்தி, நம்மை இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும் தேங்கி நின்றுவிடாமல்..விதி என்று நின்றுவிட்டால் இந்த உலக்மே இயங்காமல் நிற்க வேண்டுமே..

  ReplyDelete
 8. @ துரைசெல்வராஜு
  ஆம் ஐயா சில பதிவுகளும் அதற்கு வந்த செறிவுமிகுந்த பின்னூட்டங்களும் பொக்கிஷம்போல்தான் தோன்றுகிறதுவருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 9. @ ரமணி
  பின்னூட்டங்களின் எண்ணிக்கையைவிட பதிவு ஏற்படுத்தும் சலனங்களே பின்னூட்டமாய் இருப்பதுதான் சிறப்பு ஐயா. அதில்லாமல் எழுத்தின் தாக்கம் என்னவென்றே அறிய முடியாத சில ஒற்றைவரிபின்னூட்டங்கள் ஏதோ கடமைக்காக எழுதுவதுபோல் இருக்கிறது நிச்சயமாக சில பின்னூட்டங்கள் எழுதுபவனுக்கு டானிக் போன்றவையே வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 10. @ கில்லர்ஜி
  ஒத்த கருத்தோ பாராட்டோதான் சிறந்த பின்னூட்டம் என்று நான் எண்ணுவதில்லை ஜி. நம் எழுத்தின் தாக்கம் வெளியாக வேண்டும் வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 11. @ கீதா சாம்பசிவம்
  சிந்திக்காமல் எழுதப்படும் பதிவுகளும் உண்டா என்ன.:ஆனால் நம்மை வெளிப்படுத்தும் பதிவுகளாக அநேக பதிவுகள் அமைவதில்லை. அப்படி அமைந்தால் இவன் இப்படித்தான் எனும் மெத்தனம் வாசிப்போருக்கு வந்து விடும் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 12. @ பகவான் ஜி
  சில முடிவுகள் சிந்தனைக்குப் பின் வருபவை. சில சிந்திக்கும்போது தலையைப் பிய்க்கின்றன என்றே கூறி இருக்கிறேன் வருகைக்கு நன்றி ஜி.

  ReplyDelete

 13. @ கரந்தை ஜெயக்குமார்
  இப்போது பின்னூட்டம் இடுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்கிறீர்கள். நான் அப்படிச் சொல்லவில்லை. கருத்துள்ள பின்னூட்டங்கள் குறைந்து வருகின்றன என்றே தோன்றுகிறதுஅதாவது நீ இட்டால் நான் இடுவேன் என்பதையே அதிகம் காட்டுகிறதுவருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 14. ரசனைமிக்க பின்னூட்டம் துளசிதரன்!

  ReplyDelete
 15. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா ...!

  ReplyDelete

 16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
 17. எல்லா நலமும் பெற்று வாழ்க நலமுடன்..
  அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 18. சிந்திக்கவைக்கும் பகிர்வு அவசர உலகில் இப்போது காத்திரமான பின்னூட்டம் அரிதாகிவிட்டது என்று எண்ணத்தோன்று ஐயா! இன்னொன்னொன்று இவர் இப்படி என்ற முத்திரையும் பலரை பின்னூட்டம் இட தயக்கம் காட்ட காரணியாக அமைகின்றது!

  ReplyDelete
 19. அவசர யுகத்தில் சற்றே நீளமான பதிவுகளுக்கே படிப்பவர்கள் மிகக் குறைவு. கதையாக இருந்தாலும் நான் படிக்கவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் தருபவர்களும் இருக்கிறார்கள். பதிவின் சாரத்தை மறுத்துப் பேச பொதுவாகவே யாரும் விரும்புவதில்லை. நட்பு இதனால் கெட்டுவிடக் கூடாது என்கிற காரணம் கூட இருக்கலாம்.

  என் அலுவலகத்தில் ஒருவர் இருந்தார். அவர் என்ன சொல்கிறாரோ, அதைத்தான் நாங்களும் சொல்வோம். ஆனாலும் என்ன காரணமோ, அவர் காட்டமாகவே பதில் சொல்வார். 'இவர் நம்மை எதிர்த்துத்தான் எப்போதும் பேசுவார்' என்கிற எண்ணம் எல்லோரைப் பற்றியுமே அவருக்கு இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.

  பதிவுலகில் டெம்ப்ளேட் கமெண்ட் என்று சொல்லப் படும் பொதுப்படையான கருத்துகளே அதிகம்.

  ReplyDelete
 20. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார்! :-)

  ReplyDelete

 21. @ அப்பாதுரை
  துளசிதரன் தளப் பின்னூட்டம் சில காரணங்களை முன் வைக்கிறது. இருந்தாலும் வாசிப்பவர்கள் சிறிது நேரமாவது கருத்துச் சொல்ல எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் நீங்களும் அதற்கு விதி விலக்காகக் கூடாது என்றும் எண்ணுகிறேன் ஏனென்றால் உங்களைப் போல் இருப்பவரிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கப் படுகிறது வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 22. @ இனியா
  பின்னூட்டத்தில் வெறுமே புத்தாண்டு வாழ்த்துமட்டுமே கூறும் உங்களுக்கு நன்றி.

  ReplyDelete

 23. @ பரிவை சே குமார்
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

  ReplyDelete

 24. @ துரை செல்வராஜு
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

  ReplyDelete

 25. @ தனிமரம்
  பின்னூட்டங்கள் காத்திரமானவையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வாசிக்கும்போது தோன்றும் எண்ணங்களும் கருத்தாடல்களாக அமையலாமே. வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 26. @ ஸ்ரீராம்
  பின்னூட்டங்கள் சாரத்தை ஒட்டியோ வெட்டியோதான் அமைய வேண்டும் என்று இல்லையே. மேலும் எதிர்வினைக் கருத்து நட்பைப் பாதிக்கும் என்றால் அது நட்பே அல்ல.இதைத்தான் நான் பதிவுலக நட்பை வெறும் அறிமுகங்கள் என்பேன் எழுத்தைத்தான் விமரிசிக்கிறோமே தவிர எழுதுபவனை அல்ல என்ற உணர்வு வேண்டும் டெம்ப்லேட் காமெண்டுகள் வேண்டுமானால் பின்னூட்ட எண்ணிக்கையை உயர்த்தலாம் இன்னுமொரு விஷயம் பதிவில் எழுத விட்டுப் போனது. பின்னூட்டம் எழுதியவர்களின் கருத்து எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பது பின்னூட்டம் இடுபவருக்குத் தெரிய அவசியம் மறுமொழி இட வேண்டும் என்பதும் முக்கியமானதாகும் வருகைக்கு நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 27. @ சேட்டைக்காரன்
  புத்தாண்டு தொடக்கத்திலாவது என் தள நினைப்பு வந்ததற்கு நன்றி சார். அடிக்கடி வாருங்கள். கருத்துக்களைப் பகிருங்கள்

  ReplyDelete

 28. @ துளசிதரன் /கீதா
  நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி. அதை ரசித்திருக்கிறார் அப்பாதுரை அவர்கள்நான் விரிவான பின்னூட்டங்கள் இடவேண்டும் என்று சொல்லவில்லை. ஒட்டியோ வெட்டியோ இருக்கவேண்டும் என்றும் சொல்லவில்லை. எழுத்து வாசகரை எந்த அளவு பாதிக்கிறது என்பதே தெரியாத பின்னூட்டங்களே அதிகம் ஒரு வாக்கியத்திலும் பாதிப்பைக் கூறலாம் பொதுவாகவே எதிர்வினைக்கருத்து இல்லாவிட்டல் பாராட்டும் கருத்து என்று மட்டுமே புரிந்து கொள்ளப் படுவது எனக்கு உடன் பாடில்லை. என் பின்னூட்டம் உங்கள் பதிவில் பதிந்திருப்பதையே சுட்டிக்காட்டுகிறேன் அதில் என் எண்ண வெளிப்பாடு இருக்குமே தவிர புகழ்ந்தோ விமரிசித்தோ இருக்காது. பதிவைப் படித்ததும் என்மன ஓட்டமே பின்னூட்டமாய் இருக்கிறது. அதுவும் ஒரு லாட்டெரல் திங்கிங் என்னும்படி அமைந்து விட்டது/ வருகைக்கும் விளக்கமான கருத்துக்கும் நன்றி சார்/மேடம்

  ReplyDelete
 29. உங்களது இந்தப் பதிவினை நேற்று இரவுதான் பார்க்க நேர்ந்தது. பதிலெழுதுவதில் சிறிது அவகாசம் எடுத்துக்கொண்டேன்.
  `எழுத்து-அன்றும் இன்றும்` என்று ஆரம்பித்து எங்கெங்கோ இழுத்துச் சென்றிருக்கிறீர்கள்! இத்தகைய பதிவுகளுக்கு பதில்போட நினைத்தும், சில சமயங்களில் தயங்கி விட்டுவிடுகிறேன். காரணம் கருதுபொருளின் ஆழத்தினால், பின்னூட்டம் தன்னுடைய வடிவிலிருந்து நீண்டு, ஒரு தனிப்பதிவு என்கிற அளவுக்கு வளர்ந்துவிடும் அபாயம். எனினும் கொஞ்சம் எழுதுகிறேன் இப்போது:
  நீங்கள் குறிப்பிட்டுள்ள பழைய பதிவு(அறியாமை இருள்) உங்களது சிந்தனைப்போக்கைக் காண்பிக்க முயல்கிறது. அதற்கு வந்திருந்த பின்னூட்டங்களில் குறிப்பிடப்பட்ட நான்கும்- விஸ்தாரமானவை, சிந்தனையை ஆழமான தளங்களுக்கு அழைத்துச் செல்பவை. சம்பந்தப்பட்டவர்கள் கொஞ்ச தூரம் பயணித்திருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

  பொதுவாக வலைத்தளங்களில் அளிக்கப்படும் பின்னூட்டங்களில் வெகு சிலவே, கருத்தாழம் கொண்டுள்ளன. மற்றவை எல்லாம் `எனக்கு நீ கை தட்டினாய்..போனால்போகிறது, நானும் உனக்குத் தட்டிவைக்கிறேன்!` கதைதான். I don’t get excited by such comments. ஒட்டியோ, வெட்டியோ அல்லது வேறு கருத்துகொண்டோ-`அசலாக` வரும் பின்னூட்டங்கள், பதிவு எழுதியவருக்கு உற்சாகத்தை நிச்சயம் அளிக்கின்றன. அந்த உற்சாகம் எழுதுபவரிடம் உறங்கிக்கிடக்கும் படைப்புசக்தியை பீரிட்டு எழ வைக்கக்கூடும்.

  மற்றபடி, நீங்கள் எடுத்துக்கொண்ட பேசுபொருள், ஆழமான நோக்கு, சிந்தனை, கருத்துப் பகிரலைக் கோருகிறது. தத்துவம், மெய்ஞானம் பற்றி ஆராய்ந்துகொண்டே, எழுதிக்கொண்டே போகலாம். எல்லோராலும் செய்யப்படக்கூடிய காரியம் அல்ல அது. அதற்கு ஒரு Energy level தேவைப்படுகிறது. நுனிப்புல் மேயாமல், அரைத்ததேயே அரைத்துக்கொண்டிராமல், தேடுபொருளின் ஆழத்துக்குள் சென்று நீந்தத் தயாராக இருக்கவேண்டும். (இல்லாவிடில், அதற்குள் நுழையாமல் இருப்பதே நல்லது). இங்கே, ஆரம்ப நிலையில் புரிந்துகொள்ளவேண்டியது: சாதாரண மனிதனின் `அறிவு (knowledge)` என்பது at the outset, சக்தி வாய்ந்ததாகத் தோன்றினாலும், பொதுவாக, அது அவனுக்கு இரண்டே வகைகளில்தான் சாத்தியமாகியிருக்கிறது. ஒன்று - அது மற்றவர்களால், சூழலால் வாய்த்திருக்கலாம்(knowledge acquired from others/outside sources); இரண்டாவது- அவனே அனுபவபூர்வமாய் தெரிந்துகொண்டது (acquired/understood by his own experience). இந்த இரு எல்லைகளுக்குள் அது முடிகிறது. ஒருவன் தன் வாழ்நாளில் கற்றுக்கொள்வதும், அனுபவிப்பதும் கால அளவு, சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் சார்ந்தது. ஆதலால் குறுகிய வட்டம் சார்ந்ததே அது.எனவே, மனித மனத்தின், மூளையின் அறிவு உயர்நிலை (knowledge, wisdom ) ஒரு எல்லைக்குள் நின்றுவிடுவதே. நிச்சயமாக எல்லையற்ற ஒன்றல்ல. மனித மனம் `காலவெளி`, `அறிவு` (knowledge/experience) ஆகிய இரண்டு விஷயங்களுக்குள் தான் உலவ முடியும். ‘’கடவுள்’’ அல்லது ‘’இறுதி உண்மை’’(God or Absolute Truth) என்பது இந்த இரண்டு நிலைகளைத் தாண்டிய விஷயம். `கால அளவைக் கடந்த, எல்லையற்ற ஒன்றினைப் புரிந்துகொள்ள, சராசரி மனிதன் இதுவரைக் காலடிவைக்காத வெளியில், அறிந்திராத பிரதேசத்தில் பயணிக்கவேண்டியிருக்கிறது. (to journey through hitherto unknown, unchartered territory which is beyond time and space). மனிதனின் மேதமை(genius), rationality, logical thinking ஆகிய `சராசரி அறிவு நிலைகளை`த் தாண்டிய வெளியில் செல்லும் பயணம். அதனை மேற்கொள்பவனுக்குக் கிட்டத்தட்ட வாழ்நாளின் பெரும்பகுதியை உறிஞ்சிவிடும் பிரமிப்பான பயணம். இதுவரை சென்றடைந்திராத ஏதோ ஒரு புள்ளியில் மனித மனத்தைக் கொண்டுபோய் அது விடும். அது ஒரு முடிவற்ற வெளி. அந்த வெறுமையை, முடிவிலியை, முழுமையாக எதிர்நோக்க, உணர, அவன் (அறிய விரும்புபவன்) ஆயத்தமாக இருக்கவேண்டும், சக்தி இருக்கவேண்டும். புத்தி மிரண்டுவிடாமல், சோர்ந்துபோகாமல், சமநிலையில் இருக்கவேண்டும். அந்த நிலைக்கு வந்து அதை முழுமையாக எதிர்கொண்டு, அதனூடே பயணித்து அறிந்தவர்களே உண்மையில் `அறிந்தவர்கள்`. `உண்மை`யை அறிந்தவர்கள். ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற வெகு சிலர் என அறியப்படும் ஞானிகள்.(அவர்கள் ஒருபோதும் தாங்கள் `அறிந்ததாக` சொன்னதில்லை என்றபோதிலும். கண்டவர் விண்டிலர்!) மற்றவர்களெல்லாம் அறிதல், புரிதல் என்று காலமெலாம் கதைபேசி, கதாகாலட்சேபம் செய்து திரிபவர்கள். நம்புபவர், நம்பாதவர் மற்றும் இரண்டுக்கும் நடுவில் நின்று இடது, வலதாகப் பார்த்துக்கொண்டிருப்பவர் என்கிற வகைமைகளின் கீழ் வருபவர்கள்.

  சாரி, ரொம்பவும் போரடித்துவிட்டேன்; இதற்குத்தான் நான் பின்னூட்டம் பக்கம் அடிக்கடி வருவதில்லை!

  ReplyDelete
 30. @ ஒரு கருப்பொருளை எடுத்துக் கொண்டு எழுதத் தொடங்கினால் என் மனம் போனபடி எழுத்துக்கள் வந்து விழும் ஆனால் எனக்கு அப்ஸ்ட்ராக்ட் ஆக எழுத வராது. ஆனால் எழுதுவது மனதின் பிரதிபலிப்பே. ஆனால் இப்போதெல்லாம் அம்மாதிரி எழுத வரவில்லை. காரணம் ஆராய விழைந்ததின் விளைவே இப்பதிவு. வாசகனும் எழுதுபவனுக்கு கருத்தாடல் மூலம் பின்னூட்டமிட்டால் நம் எழுத்து செல்லும் திக்கும் ஆழமும் தெரியும் அந்த ஆதங்கமே இப்பதிவு/அதை ஒரு உதாரணத்துடன் விளக்கவே பழைய பதிவும் பின்னூட்டங்களும் படித்துப் பார்க்கும்போது என் கருத்து புரியும் என்று நினைக்கிறேன் உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்

  ReplyDelete
 31. எதுவும் எண்ணப்படி எழுத்தில் கொண்டுவருவது பல சமயங்களில் கஷ்டம்தான். சும்மா இருக்கும்போது சிந்தனையில் வருபவற்றை எழுத உட்கார்ந்தால் தொய்வு வருவது உண்மை. ஆனாலும் எழுதவேண்டும் என்று மனசின் ஒரு மூலையில் எண்ணம் ஒன்று இடைவிடாமல் நச்சரித்துக்கொண்டுதானே இருக்கு!

  முந்தி எழுதுனதைப்போலவே இப்பவுமெழுத முடியுமா என்ன? எண்ண ஓட்டம், காலம் இவையெல்லாம் நம்ம ஸ்டைலை மாத்திருதே!

  ReplyDelete

 32. @ துளசி கோபால்
  /முந்தி எழுதுனதைப்போலவே இப்பவுமெழுத முடியுமா என்ன? எண்ண ஓட்டம், காலம் இவையெல்லாம் நம்ம ஸ்டைலை மாத்திருதே!/ அது மாத்திரமல்ல எழுத்து போய்ச் சேரும் இடமும் எழுத்தை நிர்ணயம் செய்கிறது


  ReplyDelete