மொழி அறிவு.தெரிந்ததெரியாத லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழி அறிவு.தெரிந்ததெரியாத லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 மார்ச், 2015

பூனை நக்கிக் குடித்தது


                                 பூனை நக்கிக் குடித்தது
                             ---------------------------------------


இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து பதிவுகள் ஏதும் வெளியிடாவிட்டால் பதிவுலகம் நம்மை மறந்து விடும். தொடர்ச்சியாக எழுத கற்பனைகை கொடுக்காதபோது என் பழைய பதிவுகளைப் பார்ப்பது வழக்கம் அண்மையில்திரு ஜோசப் விஜு அவர்களது “ஊமைக்கனவுகள்என்னும் தளத்தில் சங்ககாலக் கவிதைகள் பற்றி எழுதி வருகிறார். என் மர மண்டைக்குப் பலவும் புரிவதில்லை. இந்தக் கேள்வி எனக்கு என்ன புரியும் என்று நான் என்னையே கேட்டுக் கொண்டு பதிவாக்கியதையும் பார்க்க நேர்ந்தது. அது மீள் பதிவாக்கினாலும் பழையதாய்த் தெரியாது என்று தோன்றியதால் மீண்டும் அப்பதிவு. இதை ஏற்கனவே படித்திருந்தாலும் அநேகமாக நினைவுக்கு வராத ஒரு பகிர்வுதான்

கேள்வி:- உனக்கு எத்த்னை மொழிகள் தெரியும்.?
பதில்:-   எனக்கு எழுத படிக்க பேச தமிழும் ஆங்கிலமும் தெரியும். சுமாராகப் பேச , பேசினால் புரிந்து கொள்ள மலையாள்மும் , கன்னடமும்தெரியும். பேசினால் ஓரளவு புரிந்து கொள்ளும் அளவுக்கு தெலுங்கு தெரியும். கஷ்டப்பட்டு எழுத படிக்க பேச இந்தியும் தெரியும்
.
கேள்வி:- தமிழ் ஆங்கிலம் போன்ற மொழிகளில் புலமை இருக்கிறதா.?
பதில் :-  புலமை என்றால்.... குழப்பமாக இருக்கிறது. அண்மையில் கன்னட ஆசிரியர்களுள் சிறந்தவர் என்று கருதப் பட்ட டி.பி. கைலாஸ் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய DRONA என்னும் கவிதையை தமிழில் மொழி பெயர்க்க முடியாமல் தமிழாக்கம் செய்து என் ஆங்கில அறிவை வெளிப்படுத்திக் கொண்டேன்...! தமிழாக்கம் செய்ய அருகில் ஆங்கில அகராதியை வைத்துக் கொண்டு வார்த்தைகளுக்கு பொருள் தேடி  புரிந்து கொண்டேன் ஆக ஆங்கிலத்தில் புலமை என்று சொல்வதை விட WORKING KNOWLEDGE இருக்கிறது என்று சொல்வதே சரியாயிருக்கும்.

கேள்வி அப்படியானால் தமிழில் நல்ல புலமை இருக்கிறதாக எண்ணலாமா.?
பதில்:- தமிழில் எதை வைத்து புலமையை எடை போடுவது
.
கேள்வி: - தமிழில் நிறையப் படித்திருக்கிறாயா.?
பதில்:- பள்ளியில் படித்ததைவிட படிக்காததே அதிகம். பள்ளியில் கற்றிருக்க வேண்டிய இலக்கண இலக்கிய தெளிவுகள் கற்காமல் விட்டதாலும் என் ஞானம் பற்றி எனக்கே சந்தேகம் வருவதாலும் இக்கேள்விக்கு பதிலை கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்.

கேள்வி:- சரி. அப்படியே செய்யலாம். இந்திய இதிகாச நூல்களைப் படிதிருக்கிறாயா.?
பதில்:- ஓ..! படித்திருக்கிறேனே.

கேள்வி:- கேள்வியை சரியாகப் புரிந்து கொள். தெரியுமா என்று கேட்கவில்லை. படித்திருக்கிறாயா என்பதுதான் கேள்வி.
பதில்.:- தெரியும் என்பதற்கும் படித்திருக்கிறேன் என்பதற்கும் அவ்வளவு வித்தியாசமா.?

கேள்வி:- ஆம். இது உன் மொழி அறிவை சோதிக்க கேட்ட கேள்வி.
பதில்:- கம்ப ராமாயணம் படித்திருக்கிறேன். பாரதியின் பாஞ்சாலி சபதம் படித்திருக்கிறேன்..ஏன்... சாதாரணன்ராமாயணம் என்று  ஒரு கவிதை ஒரே வாக்கியத்தில்  நானே எழுதி இருக்கிறேன்.(சுட்டியைத் தட்டிப் படிக்கலாம்)

கேள்வி:- கவிதையா .? யாப்பிலக்கணத்தில் எதனைச் சார்ந்தது அது...?
பதில்: -யாப்பிலக்கணமா.. ? அது புதுக் கவிதை. எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வராது.வார்த்தைகளை மடக்கிப் போட்டு வரிவடிவம் கொடுத்து எழுதுவது அது

கேள்வி:-மொழியும் தெரிய வேண்டாம் இலக்கணமும் தெரிய வேண்டாம்  என்பவர்களே புதுக் கவிதைக்கும் வசன கவிதைக்கும் வக்காலத்து வாங்குபவர்கள்.. போகட்டும். வால்மீகி ராமாயணத்தை கம்பர் தமிழில் எழுதியபோது  இராம காதை என்னும் தலைப்பில் எழுதினார் என்பதாவது தெரியுமா,?ஆறு காண்டங்களுடன் 118 படலங்களுடன் பன்னீராயிரத்துக்கும் அதிகமான விருத்தப் பாடல்கள் கொண்டது கம்ப ராமாயணம் எனப் படும் இராமகாதை. அங்கும் இங்கும் சில பாடல்களைப் படித்துவிட்டு கம்பராமாயணம் படித்திருக்கிறேன் என்று கூறுவது சரியா. ,செவி வழிக் கேட்டு கதை தெரிந்து கொள்வது வேறு, பொருள் தெரிந்து படித்தறிவது என்பது வேறு. மகாபாரதத்தை தமிழில் எழுதியவர் யார் என்றாவது தெரியுமா.?
பதில்.:-தெரியும் வில்லிபுத்தூரார் எழுதிய வில்லி பாரதம்.படித்ததில்லை. ஆனால் இதில் வியாசரால் எழுதப் பட்ட மகாபாரதத்தின் முக்கிய பகுத்யான பகவத் கீதை பற்றி எழுதப்படவில்லையாம்.. மேலும் இவரால் விடப் பட்ட சில பகுதிகளை அரங்கநாதர் பாரதம் என்ற பெயரில் எழுதினாலும் அதை வில்லிபாரதத்தின் துணை நூலாகவே கருதுகின்றனர். பாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் என்ற தலைப்பில் பாரதியார் பாடியிருக்கிறார்.

கேள்வி.:- ஐம்பெருங்காப்பியங்கள் என்னவென்று தெரியுமா. ?
பதில்.:- சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி. இவை அணிகலன்களின் பெயரால் அறியப் படுபவை. இவற்றில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப் படுகின்றன. சிலப்பதிகாரத்தை குடிமகன் காப்பியம் என்று கூறுவார்கள். கடவுளையோ அரசனையோ பாட்டுடைத் தலைவனாக்காமல் கோவலன் எனும் ஒரு குடிமகனின் கதையைக் காப்பியமாக்கி இருக்கிறார் இளங்கோவடிகள்.  இதெல்லாம் படித்துத் தெரிந்தது. ஆனால் சிலப்பதிகாரத்தை அவர் இயற்றிய வடிவில் படித்ததில்லை. அதேபோல்தான் மணிமேகலை எனும் காப்பியமும். வளையாபதி குண்டலகேசி ... மூச். ஒன்றுமே தெரியாது. ஆனால் இந்த சீவகசிந்தாமணி கதையை மூன்றாம் சுழியில் அப்பாதுரை எழுதியது படித்தது மூலம் தெரிந்து கொண்டேன்.

கேள்வி.:- ஐஞ்சிறு காப்பியங்கள் பெயராவது தெரியுமா. ?
பதில்.:- அப்படியும் காப்பியங்கள் இருக்கின்றனவா..தெரியாதே
.
கேள்வி..:- இப்போதாவது தெரிந்து கொள். அவை, நீலகேசி,யசோதரகாவியம், நாககுமாரகாவியம்,உதயண குமார காவியம், சூளாமணி.
பதில்.: -கடைசியாகச் சொன்ன தலைப்பில் அப்பாதுரை எழுதத் துவங்கி நிறுத்தி விட்டாரே அதுவா.?

கேள்வி .:- அது சூடாமுடி. பெயரைக்கூட சரியாக வாசிக்காமல் .....உனக்கு எவ்வளவு மலர்களின் பெயர்கள் தெரியும்.?
பதில்.:- ஏதோ நான்கைந்து . இல்லை ஏழெட்டு மலர்களின் பெயர்கள் தெரியும். சில நாட்களுக்கு முன் பதிவர் ஒருவர் ( சசிகலா என்று நினைக்கிறேன்) பல மலர்களின் படங்களுடன் பெயர்களையும் குறிப் பிட்டிருந்தார். நடிகர் சிவ குமார் அவ்வப்போது நூறு மலர்களின் பெயர்களை மூச்சு விடாமல் கூறி அசத்துவார்

கேள்வி.:- அவை குறிஞ்சிப் பாடலில் கபிலர் எழுதியவை ஆகியிருக்கும். மணிமேகலையில் சாத்தனார் பல மலர்களின் பெயரைக் கூறுகிறார்.
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி
ஏதாவது தெரிகிறதா. ?

பதில் :- கேள்வி கேட்பது எளிது. உண்மையில் எத்தனை பேருக்கு இந்தப் பூக்களை அடையாளம் காட்ட முடியும். சரி. நான் ஒரு பாடல் கூறுகிறேன். யார் இயற்றியது என்று ஊகிக்க முடிகிறதா பாருங்கள்.
வடவரையை மத்து ஆக்கி வாசுகியை நாண்ஆக்கிக்
கடல்வண்ணன் பண்டு ஒருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையர் கடை கயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

கேள்வி.:- நான்தான் கேள்வி கேட்பேன். இருந்தாலும் பாடலைப் படிக்கும்போது ஆழ்வார்களில் யாராவது எழுதி இருக்கக் கூடும். என்பதே என் ஊகம்.

பதில்.:- அதுதான் இல்லை. நாலாயிரப் பிரபந்தப் பாடல்களின் மொழிபோல் இருந்தாலும்  இதைப் பாடியது இளங்கோ அடிகள் என்ற சமண முனிவர்..!

கேள்வி.:- குறவஞ்சி பாடல்களில் , மலர்களின் பெயர்களைப்போல், சுமார் 80 பறவைகளின் பெயர்களும் காணக் கிடைக்கும். தேடிப் படித்துப் பார். இப்போது கூறு.  உனக்குத் தமிழ் மொழி தெரியுமா.?

பதில்.:-கம்ப ராமாயணத்தில் இராமாவதாரத்தில் பாயுரச் செய்யுளாகக் கம்பனே

ஓசை பெற்று உயர் பார்கடல் உற்று ஒரு
பூசை, முற்றவும் நக்குபு  புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன், மற்று, இக்
-
காசில் கொற்றத்து இராமன் கதை அரோ

என்று. கூறுவான். தமிழ் ர்ன்னும் கடலை நக்கிக் குடிக்க நினைக்கும் பூனையா நான்.
தமிழ் கற்றேன் என்னும் அகந்தை சிறிதும் இல்லை.கற்றது கைம்மண் அளவு என்பார்கள். நானோ கடுகளவு என்பேன் உபரியாக... .சமீபத்திய தமிழ்க் காவியமாக இராவணன் காவியம் எழுதப் பட்டு வெளியிட்டிருக்கிறார்களாமே. 

( ஒரு திரைப்படத்தில் வடிவேலு, தன் வலக்கையை . ஆள்காட்டி விரல் அவரது கண்ணை நோக்கியவாறு வைத்து ஏதோ கூறுவார்.. அதுபோல் நான் என்னை நோக்கிக் கூறுவது : உனக்கு இது தேவையா.? உன் பவிசு எல்லோருக்கும் தெரிய வேண்டுமா..?)