வியாழன், 14 மார்ச், 2013

மன சாட்சி ( நாடகம்) ....2....





                                 மன சாட்சி ( நாடகம் )
காட்சி-3. இடம்.- கனகசபை வீடு.
பாத்திரங்கள்.- கனகசபை, வேதவதி, சபாபதி.
( திரை உயரும்போது, கனகசபை ரூபாய் நாணயங்களைத் தட்டிப் பார்ப்பதும் எண்ணிப் பார்பதுமாக இருக்கிறார்.உள்ளே ரேடியோ “ பணமே உன்னால் என்ன குணமேஎன்று பாட எரிச்சலுடன் )
கனகசபை.:- வேதவதி... வேதம்...!  ஏ...வேதா....!

வேதவதி.:-( கையில் கரண்டியுடன் வந்து கொண்டே )வேதா...வேதா... வேதா..... வேதத்துக்கு இப்ப என்னவாம்.?
கனகசபை.:- சரி..சரி.. ரேடியோவைக் கொஞ்சம் மூடு.....
வேதவதி.:- ரேடியோ பாடறதுக்குத்தான் இருக்கு. மூட இல்லை....
கனகசபை.:- அட ஆண்டவனே.... ஒரு ரேடியோவை மூட ஆசைப்பட்டு இன்னொரு ரேடியோவைத் திறந்திட்டேனே. ....
வேதவதி.:- என்னையா ரேடியோங்கறீங்க... ...
கனகசபை.:- சேச்சே....! ரேடியோவை இஷ்டப்பட்டா மூடலாம். உன் திருவாயை மூட ......
வேதவதி.:- என்ன......!( என்று மிரட்ட கனகசபை தன் வாயைப் பொத்திக்கொள்ள அவர் கையில் ரூபாய் நோட்டைப் பார்த்து )பணம்.... பணம்... ரூபா நோட்டுங்க ... ரூபா நோட்டு..இதை வாயிலே போட்டுக்கப் பாத்தீங்களே... ஏங்க... காயிதம்னு நெனச்சீங்களா..?
கனகசபை.:- அட.. யார்றா இவ... சுத்த இவளா இருக்கா ,,, கழுதை கூட ரூபா நோட்டுன்னா காயிதம்தானேன்னு தின்னுடாது.தெரியுமா... .எடுத்து மடியிலே வெச்சுக்கும்.... !( ரேடியோ இன்னும் பலமாக , “ பணமே உன்னால் என்ன குணமே.எனப் பாட) அடச்சே   பாட்டைப் பாரு பாட்டை.! பாட்டைப் பாட பேரம் பேசி ஒரு ரேட்டைக் கரெக்டா வாங்கி இருப்பான். ஆனா பாட்டு மட்டும் “ சரிகமபதநிச பணமே உன்னால் என்ன குணமே...ஹூம் வேஷக்கார உலகம்.
 ..
வேதவதி.:- கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. சங்கீதத்தை ரசிக்க உங்களுக்குத் தெரியலைன்னு சொல்லிட்டுப் போங்களேன்.
கனகசபை.:- எனக்காடி தெரியாது... ரூபாயோடு ரூபா மோதறப்போ ... ஆஹா... இதைவிட என்ன சங்கீதம் வேற இருக்கு.? சங்கீதஸ்வரம் ஏழும் இந்த ஸ்வரம் பேசலைன்னா சைலண்ட் தெரியுமா. ? ஆம்மா... ஆதார ஸ்ருதியாச்சே இது.......வேதம் நெசமாச் சொல்றேன்.... அந்தக் காலத்தில உன்னைத் தொட்டுப் பார்த்தப்போ கூட இந்த நைஸ் இருந்ததில்லை.
   வேதவதி.:- போதும் ...போங்க..
.


கனகசபை.:-ஆஹா ..ஆஹா.. நீ இப்படி நாணிக் கோணி நிக்கறது, நம்ம சாந்தி முகூர்த்தத்தில நீ முகம் செவக்க நின்னியே அதை ஞாபகப் படுத்துது.
வேதவதி.:- ஐயே ...போதும் போங்க
...
கனகசபை.:- வேதம்..... வேதம்.....( கிழட்டு தாபத்தில் நெருங்க, ரேடியோவில் “ மன்மத லீலையை வென்றார் உண்டோ) அடச்சீ....மூடுடா...ரேடியோவை.....( ரேடியோ நிற்கிறது )
சபாபதி.:- ( வந்துகொண்டே) சே...சே...இந்த வீட்டில மகனாப் பொறந்ததைவிட ஒரு கூத்தாடிக்குப் பிள்ளயாப் பொறந்திருக்கலாம். நல்ல அப்பா.....ஒரு பாட்டுப் பிடிக்காது... ஒரு கூத்துப் பிடிக்காது.....உங்களுக்கு என்னதான் பிடிக்கும்.?

வேதவதி.:- ஏன்... அவருக்குப் பைத்தியம் பிடிக்கும்......!
கனகசபை.:- இனிமேதானா பிடிக்கணும்.? செத்துப்போன ச்ண்முக சுந்தரம் ஷீலாவுக்கு உயில் எழுதி என்னக்கி என்னையும் நவகோடியையும் ட்ரஸ்டியா வெச்சானோ அன்னைக்கே பிடிச்சாச்சுடி பைத்தியம்.....
வேதவதி.: ஏன் நவகோடியையும் உங்களையும் சேர்த்து ட்ரஸ்டியா வெச்சாரு.?
சபாபதி.:- ஹாங்... மனுஷனுக்கு உலகம் தெரியும்.நவகோடி இல்லேன்னா, ஷீலாவுக்கு உயில் மட்டும்தாம்மா மிஞ்சும். உயில்ல உள்ளதெல்லாம் உன் உடம்பில நகையாக் கொஞ்சும்..
..
கனகசபை.:- இப்ப மட்டும் என்ன கெட்டது? எப்படியும் அவளுக்குக் கலியாணம் ஆனபிறகுதான் சொத்துன்னு உயில்ல எழுதி இருக்கு. நீ மட்டும் மனசு வெச்சு ஷீலாவைக் கட்டிக்கிட்டா .....ஹாங்...ஹாங்.. ஷீலாவை உன்னைக் கட்டிக்க சம்மதிக்க வச்சீன்னா.
.
சபாபதி.:-நானென்னப்பா செய்யறது.... ஷீலாவுக்கு என்னையெல்லாம் பார்த்தா ஆம்பிளைன்னே தோண மாட்டேங்குது. அவளுக்குன்னு உள்ளவன் ஒரு ஆணழகனா இருக்கணுமாம். ...யார் மேல அவளுக்கு ஒரு இது ஏற்படுதோ அவனையே கட்டிப்பாளாம். அந்தக் காலத்துல ஒரு அல்லின்னா இந்தக் காலத்துல ஒரு ஷீலா.
..
கனகசபை.:- அந்த அல்லிக்கு ஒரு அர்ச்சுனன். இந்த ஷீலாவுக்கு ஒரு சபாபதி.
.....
சபாபதி.:- அதெப்படி முடியும்.....அர்ச்சுனன் ஆணழகன்.....நானு எவம்மா என்னை ஆணழகன்னு சொல்லுவா.? அவன் அல்லிக்காக எதையும் செய்வான். நானு.... என்னால முடியுமா.? எனக்கு உயிருன்னா வெல்லமாச்சே ...ஷீலா சொத்து கெடச்சாக் கெடைக்கட்டும் இல்லேன்னா போகட்டும். ..உங்களுக்கப்புறம் உங்க சொத்தாவது கிடைக்கணும்னா நான் உசிரோடு இருக்கணுமேப்பா 
கனகசபை.:- அது என் நல்ல காலம்.என் உசிரை வாங்கினப்புறம்தானே முடியும்னு சொல்லாம உட்டியே.  ஊம்... அங்க நவகோடி என்னடான்னா மொத்து மொத்துன்னு சாத்தறான் அவன் பெண்டாட்டிய. ஷீலாவக் கட்டிக்க ஒரு ஆண் பிள்ளையப் பெறாம ஒரு பெண்ணப் பெத்ததுக்காக. பகவான் புண்ணியத்தில நீ தப்பிச்சுக்கிட்டெ ஒரு பிள்ளையப் பெத்து. இருந்தும் அதன் லட்சணத்தப் பாரு. 
...
வேதவதி.:- உங்களால வேறெப்படியும் ‘ அட்ஜீஸ்ட் செய்ய முடியாதா...?
கனகசபை.:- அட்ஜீஸ்ட்பண்றதாம் ‘அட்ஜீஸ்ட்என்னத்தடீ பண்ணித் தொலைக்கிறது.?
சபாபதி.:- எங்கிட்ட ஒரு ஒப்பந்தத்துக்கு வாங்க. எப்படியாவது ஷீலாவைக் கட்டிக்கிறேனா இல்லையாப் பாருங்க.
   கனகசபை.:- பணத்தைத்தவிர வேறெதுவானாலும் கேளு.
.......
சபாபதி.:-அதைத் தவிர உங்ககிட்ட என்ன இருக்கு.? ஆங்... பணம் தர மனசில்லேன்னா சாவிக் கொத்தைத் தாங்க.
கனகசபை.:- ஐயையோ வேண்டாண்டா.... பணமே தரேன்.
                     ( திரை )                      (தொடரும்)   ...
      .    

செவ்வாய், 12 மார்ச், 2013

மனசாட்சி ( நாடகம் )


                                                      


                                       மன சாட்சி ( நாடகம் )
(ான் மாட்சி என்றிறுகை ஒன்றைப் பிவிட்டிருக்கிறேன். ு 1970-கில் எழியு அையே மேடை நாடாகும் அரங்கேற்றி இருக்கிறேன். சிறுகை நாடிவம் பூணுவை இங்கு பிர்கிறேன் ) 
பாத்திரங்கள்:-
1.)      ஷீலா-------------- கதைக்கு நாயகி.
2.)      ரவி  -------------- ஷீலாவின் கணவன், கதாநாயகன்.
3.)      கனகசபை ----------ட்ரஸ்டி-1
4.)      நவகோடி  ----------ட்ரஸ்டி-2
5.)      சபாபதி  ------------கனகசபையின் மகன்
6.)      வேதா  -------------கனகசபையின் மனைவி
7.)      பத்திரிக்கை நிருபர்.
8.)      கணபதி -------------வேலையாள்.

                 ( மற்றும் பலர் )

                                   A DRAMA FROM---G.M.BALASUBRAMANIAM. 

காட்சி-1    இடம்- ஷீலா வீடு.
பாத்திரங்கள்ஷீலா ,ரவி.
(திரை உயரும்போது பின்னணியில் இடியுடன் மழை. ஷீலா பீதியுடன் உட்கார்ந்திருக்கிறாள். கர்ப்பவதி. அவளுக்கு திடீரென்று கண்களை இருட்டிக் கொண்டு வருகிறது. அடிவயிற்றைப் பிடித்துக் கொள்கிறாள். அவள் மனம் பேயாய் அலைக்கழிக்கிறது. )

ஷீலா...! நீ இருக்க வேண்டிய நிலை என்ன...? இருந்த முறை என்ன.? சே...நீயும் ஒரு பெண்ணா..?

இந்த நிலையில் இதைவிட வேறென்ன செய்திருக்க முடியும்.? மனசாட்சிக்கு விரோதமில்லாமல்தானே இதெல்லாம் நடந்திருக்கிறது?

மனசாட்சி..........ஹஹஹஹ.ஹா.மனசாட்சி.....

......ஆஆ....ஐயோ.....
..( வலியால் துடிக்கிறாள். அதைக் கண்டு கொண்டே வரும் ரவிமெள்ள மனம் பேதலிக்கிறான்.அவன் ஷீலாவை மெள்ள நெருங்குகிறான். அவள் அவனைக் கண்டு பயந்து எழுந்து ஓடுகிறாள். அவன் அருகில் வரக் கால் தடுக்கிக் கீழே விழுகிறாள். வீல் என்றுக் கூக்குரலிடுகிறாள், மயங்கிச் சாய்கிறாள். சிறிது நேரம் செய்வதறியாத ரவி கீழே இரத்த வெள்ளத்தில் இருக்கும் ஷீலாவைப் பார்க்கிறான். பிறகு வெறி பிடித்துச் சிரிக்கிறான். )
                            ( திரை )     (தொடரும்) 



                மன சாட்சி ( நாடகம் )

காட்சி-2    இடம்:- க்ளப் ஹவுஸ்

பாத்திரங்கள்:- ஷீலா, ரவி மற்றும் பலர்.



(திரை உயரும்போது, shadow scene  ல் பலர் நின்று பேசிக்கொண்டும் குடித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களில் இருவர் இரண்டு ஓரங்களில் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மெல்ல ஒருவரை ஒருவர் நெருங்குகிறார்கள். பின்னணியில் இசை துவங்குகிறது. இருவரும் ஒருவரைஒருவர் அணைத்து ஆடத் துவங்குகிறார்கள். மேடையில் வெளிச்சம் பாய )
  ..

ரவி.:- OH..! YOU ARE BEAUTIFUL….!

ஷீலா.:- OH.! YOU ARE MARVELOUS.!

( இசை நின்றதுமொருவரை ஒருவர் பிடித்திருந்த பிடியும் நழுவ திடீரென ரவி சற்றே விலகிக் கொள்கிறான். பிறகு மெல்ல ஏக்கப் பார்வையுடன் சற்றே திரும்ப )

ஷீலா.:- OH.! FEELING GUILTY.?குற்ற உணர்ச்சியா.? ( கலகலவென நகைத்து) ஓ..... மறந்து விட்டேனே.... ஐ யாம் ஷீலா.....
ரவி.:- ( தெளிவு பெற்று ) ஐ யாம் ரவி..... பாருக்குப் போவோமே....
ஷீலா.:- ஐ டோண்ட் மைண்ட்....
ரவி.:-  வைன்...?

ஷீலா.:- நோ.! தாங்க்ஸ்.சாஃப்ட் ட்ரிங்க்ஸ் ப்ளீஸ்...( பெற்றுக் கொண்டு) மிஸ்டர் ரவி....இன்று நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா..! உலகமே உல்லாசபுரி போலத் தோன்றுகிறது. மனத்தின் அடித்தளத்திலிருந்து ந் எங்கோ இருந்து கொண்டு எனக்குத் தெரியாமலேயே உங்களை நான் அழைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களைப் பார்த்தவுடனேஎன் மனசு லேசாவது மாதிரி உணர்வேனா.? என்ன ரவி... நான் பாட்டுக்குப் பேசிட்டே போறேன்...நீங்க என்னடான்னா.....
ரவி.:- கணத்துக்குக் கணம் ஆசைகளும் விருப்பங்களும் மாறுபடும் சபல உணர்வே உனக்குத்தான் பெண் என்று பெயர்....
ஷீலா.:- ஹாங்....
ரவி.:- நான் சொல்லலை. ஷேக்ஸ்பியர் சொன்னது இப்போ நினைவுக்கு வந்தது.
ஷீலா.:- அவர் சொன்னது தவறு. பெண்களுக்கு சபல உணர்வே கிடையாது.
ரவி.: - பெரியவங்களும் அறிஞர்களும் சொன்னது அனுபவத்தின் பேரில் கண்ட உண்மைகள். தவறுன்னு எப்படிச் சொல்ல முடியும். ?
ஷீலா.:- நிரூபிச்சுக் காட்ட என்னால முடியும்.
ரவி..:- வீணா சவாலெல்லாம் எதுக்கு ஷீலா.? மனோரம்யமான இந்த வேளையிலே மனசுக்கு இதம் அளிக்கும் விஷயங்கள் இல்லையா என்ன..?சரி. உன்னைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே.
 ஷீலா.:- என்னைப் பற்றி எல்லாமே சொல்கிறேன் வாருங்கள்.
                           ( திரை )                     (தொடரும்)    .    


 

 


.
 

திங்கள், 11 மார்ச், 2013

காலம் மாறிவிட்டதா.?


                                         காலம் மாறிவிட்டதா.?
                                          -----------------------------



பழைய நோட்டுப் புத்தகங்களையும் டைரிப் பக்கங்களையும் புரட்டிக் கொண்டிருந்தபோது, அவற்றில் கண்ட சில விலைப் பட்டியல்கள் “அந்த நாளும் வந்திடாதோ ,என்று எண்ண வைத்தது. கூடவே ஒரு பாட்டும் நினைவுக்கு வந்தது அஞ்சு ரூபா நோட்டக் கொஞ்ச முன்னெ மாத்தி மிச்சமில்லெ, காசு மிச்சமில்லெ. ... கத்திரிக்கா வில கூட கட்டவில்லையாச்சுக் காலம் கெட்டுப் போச்சு எப்படிப் பிழைப்பதிந்த நாட்டிலே..... “ என்று போகும் அப்பாட்டு. எழுபதுகளின் தொடக்கம் என்று நினைக்கிறேன். ஆறு பேர் கொண்ட எங்கள் குடும்பத்துக்கு வாங்கிய சாமான்கள்  மாதம் ஒன்றுக்கு அரிசி ரூ.55-/ பால் ரூ.75-/ மளிகை ரூ.68-/மின்சார பில் ரூ.10-/எரிவாயு ரூ.25-/ என்று எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால் அப்போதைய மாத வருமானமும் மிகக் குறைவே.One thing is clear. Income and inflation have not increased relatively. 


 இதை எழுதுவது ஒரு சாம்பிள் ஒப்பீடலுக்கே. அதே சமயத்தில் நாங்கள் BHEL குடியிருப்பில் இருந்தோம். தொலைக் காட்சிகள் வந்திருக்கவில்லை. ரேடியோ தான் பொழுது போக்கு சாதனம். மதியம் ஆல் இந்தியா ரேடியோ , திருச்சியில் பூவையர் பூங்கா என்று ஒரு நிகழ்ச்சி நடக்கும். என் மனைவி அதில் நிறையவே பங்கேற்றிருக்கிறாள். ஒரு முறை வரதட்சிணை பற்றிப் பேச கேட்டிருந்தனர். அதற்காக அடியேன் எழுதிக் கொடுத்திருந்த குறிப்புகள் இந்தப் பழைய பேப்பர்களில் கண்டெடுத்தேன். அதை இங்கு மீண்டும் பதிவாக்குகிறேன்.


“ பெண்ணைப் பெற்றவர் பிள்ளையை விலைக்கு வாங்கும் கொடுமைக்குக் கௌரவமான பெயர் வரதட்சிணை. வரும் வரனுக்கு தட்சிணை என்று அர்த்தமும் செய்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் பிள்ளை பெண்வீட்டுக்கு வருவதில்லை. பெண்தான் பிள்ளையின் வீட்டைப் புகுந்த வீடாக ஏற்றுப் போகிறாள். பெண்ணையும் கொடுத்துக் கூடவே பொருளையும் இழக்க வேண்டிய ஒரு இழிவான நிலையில்நம் சமுதாயத்தில் எத்தனைக் குடும்பங்கள்தான் அல்லல் பட்டிருக்கின்றன. ஆண்டவனின் படைப்பில் மனித குலம் தழைக்க சம பங்கேற்கும் பெண்ணினம் பிறப்பதையே அஞ்சி நடுங்கும் நடுத்தரக் குடும்பங்கள் எத்தனை எத்தனை.இதற்கெல்லாம் அடிப்படைக் காரணங்கள் எதுவாயிருந்தாலும் அவை எல்லாம் காலப்போக்கிலும் வளர்ந்து வரும் சமுதாயக் கண்ணோட்டத்திலும் மாற வேண்டாமா.?ஆதியிலே நம் நாட்டில் வர்ணபேத அடிப்படையில் சமூகம் இயங்கியது. இன்று தகர்த்தெறிய்ப்பட்டுக் கொண்டு இருக்கவில்லையா. வர்ண பேதங்களினால் சமூகத்தில் ஒரு பகுதியினர் அடக்கி ஒடுக்கப் பட்டு இருந்தனர். அவர்களே அதை உணர்ந்து போராடி ஜாதிமத பேதமற்ற சமுதாயத்தை                
சிருஷ்டிக்கும்  போது  இது என்ன மட்டமான போலி சம்பிரதாயம். ஆணுக்குப் பெண்.அடிமையா. இதற்கு முடிவு கட்ட வேண்டாமா.?நாமெல்லாம் இங்கு கூடி கருத்துப் பறிமாறுகிறோம். வாய் கிழியப் பேசுவோம். அவ்வளவுதானா.?இதுவரையில் இந்த அளவில்தான் நடந்திருக்கிறது. இனிமேல் இதற்கு ஒரு மாற்றம் தேவை. நம் எண்ணத்திலும் பேச்சிலும் தூய்மை உண்டென்று நாம் உண்மையில் நம்பினால் அதைச் செயலில் காட்டத் தயக்கம் ஏன்.?பெண்ணினத்தவராகிய நாம் வரதட்சிணை கொடுக்கக் கூடாது. என்று முழங்கும்போது, ஒன்றைமட்டும் மறந்து விடக்கூடாது. வரதட்சிணை கேட்கவும் கூடாது. இந்தப் போலி சம்பிரதாயமும் வறட்டுக் கௌரமும் தொடர்ந்து நீடிக்க நாம்தான் காரணம். ஏனென்றால் நம் பிள்ளைகளுக்கு நாம்தானே சீர்வரிசையும் வரதட்சிணையையும் எதிர் பார்க்கிறோம். பெண்பிறந்தது என்றால் சுணக்கமும் பிள்ளை பிறந்தது என்றால் மகிழ்ச்சியும் அடைவதும் நாம்தான். இந்த ஒரு உணர்ச்சி நம் ரத்தத்தில் ஊறி ஆணுக்குப் பெண் தாழ்ந்தவள் என்ற ஒரு திடமான ஆனால் தவறான மனப்பான்மையை வளர்த்துவிட்டது. ஆணும் பெண்ணும் சமம் என்று நாம் உண்மையிலேயே நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையில் உள்ளத் தெளிவு காண வேண்டும். ஆணைப் போல் பெண்ணையும் வளர்க்க வேண்டும். பெண்குழந்தைகளுக்கு வீண் பயத்தையும் போலி அடக்கத்தையும் புகட்டாமல் பாரதி சொன்னபடி,நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ‘கொண்டவர்களாக வளர்க்க வேண்டும். வாழ்க்கைப் பொறுப்பைத் தேடிக்கொள்ள சம உரிமை அளிக்க வேண்டும். அதற்கு முக்கியமாக வேண்டியது நெஞ்சுரமும் தன் நம்பிக்கையும். இவை வளர உலகப் பொது அறிவு வளர வேண்டும். அதற்கு கல்வி அவசியம். அந்தக் கல்வி வளர்ச்சியும் பகுத்தறிவும் வளர்ந்தால் நம் பெண்களுக்கு  தேவைப்பட்டால் வாழ்க்கையில் தனித்தியங்கும் நம்பிக்கையும் துணிவும் வளரும். வரதட்சிணை என்னும் கட்டாயக் கொடுமைக்கு ஆட்பட்டு அல்லல் படுவதைவிட இம்மாதிரி தனித்தியங்குவதையே பெண்கள் விரும்புவார்கள் என்ற நிலை வந்து விட்டால்வரதட்சிணை கேட்பவர்கள் இருக்க மாட்டார்கள். பிறருக்குப் பாரமாக இல்லாமல் ஒரு பெண் அவளுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கல்வியும், பக்குவப்பட்ட மன முதிர்ச்சிக்கு வயதும் முக்கியம். பெண்கள் கட்டாயமாகக் கல்வி கற்க வேண்டும். அவர்களாக அவர்கள் வாழ்க்கையை அமைக்கும்வரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஒரு ஆண் படித்து முடித்ததும் மணம் செய்து கொள்வதில்லை. ஒரு வேலையில் அமர்ந்துநிரந்தர வருவாய் உண்டுஎன்று நிச்சயப்பட்ட பின்புதான் மணவினை பற்றிச் சிந்திக்கிறான். இது ஒரு பெண்ணுக்கும் பொருந்த வேண்டும்.
பெண்கள் இருபது இருபத்திரண்டு வயதுக்கு மேல்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு மனப் பக்குவம் அப்போதுதான் இருக்கும். கல்வி கற்றவர்கள் அவர்களது சொந்தக் கால்களில் நிற்கத் துணிவு பெற வேண்டும்.
பெண்களை பாரமாக நினைக்காமல் ஆணும் பெண்ணும் உண்மையில் சமம் என்று நம்பி , வரதட்சிணை வாங்கவும் கூடாது. கொடுக்கவும் கூடாது. என்று நாமே ஒரு நல்ல முடிவு எடுத்துக் கொண்டு முயல்வோமேயானால்நம் சமூகத்திலிருந்து, வரதட்சிணை என்னும் காட்டுமிராண்டித்தனமான
உளுத்துப்போன கொடிய பழக்கம்நிச்சயம் ஒழியும். அதை ஒழிக்க வேண்டியது நம் எல்லோருடையக் கடமையும் ஆகும்.இந்த நேரத்தில் ஏன் நாம் அதைஒரு பிரதிக்ஞையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.?
(1970-களின் முற்பகுதியில் எழுதியது இது. சுமார் நாற்பது வருடங்களுக்குப் பின்னும் நிலைமை மாறி இருக்கிறதா.? எனக்கென்னவோ மாற்றங்கள் இருந்தாலும் போதிய அளவு இல்லை என்றே தோன்றுகிறது. பூவையர்கள் என்ன நினைக்கிறார்கள்.?)
------------------------------------------------------------------------------------------

 

வெள்ளி, 8 மார்ச், 2013

மகளிர் தின நினைவுகள்


                                   மகளிர் தின நினைவுகள்.
                                  ----------------------------------


மகளிர் தினத்தில் பேரும் புகழும் பெற்ற மகளிரைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் வழக்கமாகிவிட, எனக்கு மனசில் தோன்றியதைப் பதிவிடுகிறேன். ஆண்டவன் படைப்பில் ஆணும் பெண்ணும் சமம் என்று உரக்கக் கூறினாலும், எங்கோ  உள்ளத்தின் அடியில் பெண்களை சமமாக நினைக்கவும், நடத்தவும் இந்த ஆணாதிக்க சமுதாயம் தயாராயில்லை என்பதையே அண்மைய நிகழ்வுகள் தெளிவு படுத்துகின்றன. பெண் எனப் படுபவள் ஒரு உடைமைப் பொருள் என்றே கருதப் படுகிறாள். இல்லை என்று காட்டத்தானோ என்னவோ இந்த மாதிரி மகளிர் தின நினைவுகள் ஒரு பிராயச்சித்தமாக அனுஷ்டிக்கப் படுகின்றன.எடுத்துக்காட்டாக புகழ் பெற்ற மகளிரைப் பற்றி பேசுகிறோம். பெண்களின் பெருமையைப் பற்றிப் எழுத நான் எடுத்துக்கொள்ளப் போவது எனக்கு நன்கு பரிச்சயமான, என்னைத்தெரிந்த பெண்களில் சிலரைத்தான். பெண் என்றாலேயே எனக்கு நினைவுக்கு வருவது என் மனைவியைத்தான்.அவள் பட்டம் பெற்றவள் அல்ல. பணிக்குச் செல்பவளும் அல்ல. எனக்காக செய்து வந்த பணியையும் துறந்து எனக்காகவே வாழ்பவள். என்னை விட அவளை நான் நேசிக்கிறேன். இது எல்லாக் கணவர்களும் சொல்வது தான் என்பதுபோல் தோன்றினாலும், நான் எழுதுவது ‘அக்மார்க்உண்மை. நான் பார்த்துப் பொறாமைப் படும் பெண்களும் இருக்கிறார்கள்.பதிவுலகில் என்னை பிரமிக்க வைக்கும் பெண்மணிகளின் ஒரு பட்டியலையே தருகிறேன்.

1)       தன்னை ஒரு 23 வயது தற்கால சமூகத்தின் பிரதிநிதியாக அறிமுகப் படுத்திக் கொண்டவர் “ மைத்துளிகள்வலை ஆசிரியர் மாதங்கி மாலி. அவரது வயதுக்கு மீறி ஆழ்ந்து சிந்திப்பவர். என்னுடைய ஒரு பதிவில் ஆண்டவனின் கர்ப்பக் கிரகத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் ஆண்டவனின் உருவத்தைக் காண்பது சிரமமாக இருக்கிறது என்று எழுதி இருந்தேன். உருவமில்லா ஆண்டவனின் எந்த உருவமும் உருவகப் படுத்தியதுதானே என்ற பொருளில் அவர் பின்னூட்டம் எழுதி இருந்தார். அப்போது நான் ஒரு சில நொடிகள் என் பேதைமையை உணர்ந்தேன். தீர்க்கமாக சிந்திப்பவர் வாழ்வில் ஒரு சாதனையாளராவார் என்று நம்புகிறேன்.
 

2)       கோவையில் இருந்து கொண்டு ஆஸ்திரேலியா பற்றிய விஷயங்களை எப்படித் துல்லிய மாகப் பதிவிடுகிறார் என்று ஒரு முறை அவரிடம் எழுதிக் கேட்டேன். அவர் கோவையில் இருந்தாலும் உள்ளம் அயல்நாட்டில் இருக்கும் தன் மகனிடமே இருக்கிறது என்று எழுதிய திருமதி. இராஜராஜேஸ்வரி என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறார். அவரது பதிவுகளைப் பார்க்கும்போது ஒரு பதிவுத் தொழிற்சாலையையே இயக்குகிறார் என்று எண்ணத்தோன்றும். வண்ணப் புகைப்படங்கள் எங்கிருந்துதான் கிடைக்கிறதோ. சுருங்கச் சொல்லப் போனால் அவரது பதிவுகள் ஒரு ஆன்மீக என்சைக்கிளோபீடியா.ஒரு முறை ஒரு கடினமான சுடோகு தீர்வு கேட்டு பதிவிட்டிருந்தேன். அதைஅவர் சரியாக  தீர்வு செய்ய மகிழ்ந்து அவருக்கு ஜீனியஸ் என்று பட்டமளித்து மகிழ்ந்தேன். திரு ஜீவியும், திரு அப்பாதுரையும் இரா இரா (பெயர்ச் சுருக்கம்) வுக்குத் தெரியாத விஷயங்களே இல்லையோ என்று வியந்திருக்கின்றனர்.
3)       1500 பதிவு கண்ட திருமதி. கீதா சாம்பசிவம் இன்னொரு பெண்மணி. என்னை வியப்பில் ஆழ்த்துபவர். வெகு காலமாக பதிவு எழுதி வருபவர். கூகிளில் சில விஷயங்கள் தேடும்போது சில பதிவுகள் அவர் எழுதி இருப்பது கண்டிருக்கிறேன். என் பதிவுகளை அவர் படித்துக் கருத்துக் கூற வலியவே அழைத்திருக்கிறேன். சரி என்று அவருக்குப் பட்டதைக் கூறுவார் என்று நம்பிக்கைதான் காரணம். நம் பாரம்பரியங்கள் மீது அசையாத நம்பிக்கை கொண்டவர். 

4)       அயல் நாட்டில் இருந்து கொண்டு மரபுக் கவிதைகளை எழுதும் அருணாசெல்வம், தென்றலாகக் கவிதையில் அசத்தும் சசிகலா, முனைவர் பட்டம் பெற்று பள்ளிப் பணியாற்றும் ஆதிரா, தானாகப் பதிவுகள் அதிகம் எழுதாவிட்டாலும் , மற்றவரின் பதிவுகளையும் மிஞ்சும் விததில் அலசும் மஞ்சு பாஷிணி. என்று பலரும் நினைவில் வருகிறார்கள்.                        
   அரசியல் மருத்துவம், கலைகள் தொண்டு என்று பலதுறைப் பெண்களை அநேகமாக எல்லோரும் நினைவு கூறும்போது, எனக்கு மட்டும் அவர்கள் பற்றித் தெரியாதா என்ன.? இருந்தாலும் குடத்தில் இருக்கும் விளக்குகளை குன்றில் ஏற்றிப் பார்க்கத் தோன்றியது.இவர்களிடம் குறை என்று நான் காண்பது .... வேண்டாமே.... எல்லாமே நிறைவுதான்.....!  
------------------------------------------------------------------
 

வியாழன், 7 மார்ச், 2013

மதுரைப் பயணம்.





      
                                                          மதுரைப் பயணம்.
                                                          --------------------------

                                              மதுரை மீனாட்சி அம்மன் ஓவியம்
                                              ------------------------------------------------   




மதுரைக்கு நான் நான்கைந்து முறை வந்திருந்தாலும் இப்போதையப் பயணம்,ஒரு விதத்தில் சிறப்பாக அமைந்தது. அமைய வேண்டும் என்று விரும்பி திட்ட மிட்ட பயணம், திட்டமிட்டுச் செய்த பயணம். என் மனைவி பலமுறை பார்த்த மதுரைக்கு இப்போது செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டாள்.. மதுரையில் தமிழ் வளர்க்கும்  முகம் காணாத பதிவுலக நண்பர்களைக் காண வேண்டும் , அவர்களுடன் சற்று நேரமாவது பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தைக் கூறியவுடன் அவளும் பச்சைக் கொடி காட்டினாள்.  பெங்களூரில் இருந்து மதுரைக்கு ரயில் பயணச்சீட்டு கிடைப்பது அரிதாயிருந்தது. நான் வார இறுதி நாட்களைத் தேர்வு செய்தேன். அப்போதுதானே எல்லோரையும் சந்திக்க ஏதுவாயிருக்கும்..டிக்கட் கிடைக்க ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டும்.எனக்கோ பொறுமை இல்லை. “சங்கம் முழங்கும் திரு மதுரை நகர் வளரும் இங்கிதம் பொங்க வரும் எழில் தரும் மீனாட்சிஎன்று சிறு வயதில் பாடும் என் தம்பிக்கு மதுரைப் பயணம் கூறி ஆவல் ஏற்படுத்தினேன். அவனது மனைவியின் வீட்டில் மீனாட்சி அம்மனுக்கு தனி பூசை செய்யும் வழக்கம் கேள்விப்பட்டு அவர்களுக்காக, மீனாட்சி அம்மனின் திரு உருவப் படம் ஒன்றை தஞ்சாவூர் ஓவியமாகத் தீட்டி இருந்தேன். அதை ஒரு வருட காலமாக அவர்களிடம் சேர்ப்பிக்க முடியாமல் காத்திருந்தேன். அதை அவனிடம் சேர்ப்பித்து கோவையிலிருந்து அவர்களையும் கூட்டிக்கொண்டு மதுரை செல்லத் திட்டமிட்டேன்.பிறகென்ன. ஒரே கல்லில் பல மாங்காய்கள். ஓவியத்தை அவர்களிடம் சேர்ப்பது, அவர்களுக்கு மதுரையைச் சுற்றிக் காண்பிப்பது, எனக்கு என் பதிவுலக நண்பர்களைக் காண ஒரு சந்தர்ப்பம் அமைப்பது. என்று எல்லாமே திட்டமிட்டபடி நடந்து இன்றுதான் பெங்களூர் திரும்பினோம். 



மதுரையில் பதிவுலக நண்பர்களுக்கு என் பிரயாண திட்டங்களை அஞ்சல் மூலம் தெரிவித்தேன். நண்பர் S.வெங்கட்டுக்கு என் தனி நன்றியைச் சொல்ல வேண்டும். திரு. ரமணியின் அஞ்சல் முகவரி தொலை பேசி எண்ணென்று கொடுத்து உதவினார். மதுரை சரவணனை முன்பே பெங்களூரில் சந்தித்து இருக்கிறேன். என் வீட்டுக்கும் வந்திருந்தார். என்னைப் பற்றி பெங்களூர்த் தந்தை என்று ஒரு பதிவையே எழுதி கௌரவித்திருந்தார். எனக்கு அவர் மேல் ஒரு தனி மரியாதை. ஆசிரியப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்பவர். அவர் மூலம் திரு. சீனா அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவரிடம் திரு. சீனாவையும் பார்த்துப் பேச விருப்பம் தெரிவித்து அவரையும் அழைத்து வர வேண்டி இருந்தேன். சிவகுமாரனின் கவிதைகளுக்கு நான் அடிமை. என்னவோ அவர் மேல் ஒரு சொல்ல முடியாத பாசம். அவரையும் பார்க்க விருப்பம் தெரிவித்திருந்தேன். இதையேல்லாம் விட ஒரு போனசாக சரவணன்  தமிழ் வாசி பிரகாஷையும் அழைத்து வந்திருந்தார்.
நான்தான் ஒவ்வொருவரையும் அவர்களுடைய இடத்துக்குச் சென்று பார்த்திருக்க வேண்டும். ஆனால் மாறாக என் விருப்பத்துக்குக் மதிப்பு கொடுத்து நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் டைம்ஸுக்கு என்னைப் பார்க்க வந்து அவர்களது நேரத்தை எனக்காக ஒதுக்கி வைத்தது மகிழ்ச்சி அளித்தது. நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தோம். மகிழ்ச்சியில் மூழ்கிய தருணங்கள். அவை. என்னால் மறக்க முடியாதது.


சிவகுமாரனின் மனைவிக்கு உடல் நலம் சரியாக இல்லாமலிருந்ததால் அவர் சற்று நேரம் தாமதித்து வந்தார். ரமணி அவர்களுடன் நிறையப் பேசினேன். அவரவர் எழுத்து மற்றும் சொல்லும் விதம் என்று நிறையப் பேசினோம். எல்லோருக்கும் அப்பாதுரையின் எழுத்தையும் அவரையும் பிடித்திருந்தது தெளிவாகப் புரிந்தது.அந்த சில மணிநேரம் மதுரை குலுங்கி இருக்க வேண்டும். இந்தப் பயணத்தின் மூலம் தமிழ்வாசியின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது. நான் அவரது பதிவுகளை எப்படி தவற விட்டேன் என்பது புரியவில்லை. என்னுடைய காமிராவில் சில படங்கள் எடுத்தேன். அவை அவ்வளவு நன்றாக வரவில்லை. தமிழ் வாசி அவரது பதிவில் ஒரு போட்டொ இணைத்திருக்கிறார். பதிவர் சந்திப்பு என்று எழுதியும்விட்டார்.
திருமதி .கீதா சாம்பசிவம் நான் மதுரை சென்று வந்த பிறகு மதுரையைப் பற்றி எழுதச் சொல்லி இருந்தார்.

மதுரையின் மைந்தர்கள் அநியாயத்துக்கும் நல்லவர்களாக இருக்கிறார்கள். போகுமிடத்துக்கு வழி கேட்டால் ஒன்றுக்கு மூவர் ஆர்வத்துடன் பதில் தருகிறார்கள். எல்லாமே கோவிலைச் சுற்றியே இருப்பதாலும். எப்படி இருந்தாலும் மக்கள் வருகை குறையாது என்பதாலும், எல்லாம் அப்படி அப்படியே இருக்கின்றன என்று தோன்றுகிறது. கஸ்டமர் திருப்தி என்பதைப் பற்றிக் கவலையே படுவதில்லை என்றே தோன்றுகிறது. கோவிலுக்கு வெளியே ஃபோட்டோ எடுக்க அனுமதி இல்லை என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் கோவிலுக்கு உள்ளே புகைப்படக் காமிராவுக்கு இவ்வளவு , வீடியோ காமிராவுக்கு இவ்வளவு கட்டணம் என்று அறிவிப்பு தொங்குகிறது. காரணம் கேட்டால் ஹைதராபாத் குண்டு வெடிப்பு என்கிறார்கள். என்ன. .... எனக்கு ஃபோட்டோவிலோ வீடியோவிலோ பதிவு செய்யும் பாக்கியம் கிடைக்கவில்லை. மீனாட்சி அம்மனின் கோவிலை அனுபவித்து தரிசிக்க “ஒரு நாள் போதுமா.?அருமையான சிற்பங்கள், ஓவியங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை கூறுகிறது. சிவகுமாரன் ஒரு முறை கல் யானைக்குக் கரும்பு கொடுத்தவரே என்று எழுதி இருந்தார்.அக்கதைகூறும் ஒரு சிற்பம் கண்டேன். என் மகனின் நண்பர் ஒருவரின் உபயத்தால் மீனாட்சி , சோமசுந்தரர் தரிசனம் திவ்யமாய் அமைந்தது. திருப்பரங்குன்றம் சென்றோம். அங்கே குமரனின் திருக்கல்யாணம் யார் உபயத்திலோ நடந்து கொண்டிருந்தது.  கண்ணாரக் கண்டோம். அழகர் மலையில் நூபுர கங்கை காண அவ்வளவு கூட்டம். இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாகி விட்டது.  நாங்கள் நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தபோது என் குடும்பத்தவர் நாயக்கர் மஹாலில் லைட் அண்ட் சௌண்ட் ஷோ, கண்டு வந்தனர்.
எல்லோரும் திருப்தியடைந்த இந்தப் பயணம் will linger in my memory for a long time.