Thursday, March 14, 2013

மன சாட்சி ( நாடகம்) ....2....

                                 மன சாட்சி ( நாடகம் )
காட்சி-3. இடம்.- கனகசபை வீடு.
பாத்திரங்கள்.- கனகசபை, வேதவதி, சபாபதி.
( திரை உயரும்போது, கனகசபை ரூபாய் நாணயங்களைத் தட்டிப் பார்ப்பதும் எண்ணிப் பார்பதுமாக இருக்கிறார்.உள்ளே ரேடியோ “ பணமே உன்னால் என்ன குணமேஎன்று பாட எரிச்சலுடன் )
கனகசபை.:- வேதவதி... வேதம்...!  ஏ...வேதா....!

வேதவதி.:-( கையில் கரண்டியுடன் வந்து கொண்டே )வேதா...வேதா... வேதா..... வேதத்துக்கு இப்ப என்னவாம்.?
கனகசபை.:- சரி..சரி.. ரேடியோவைக் கொஞ்சம் மூடு.....
வேதவதி.:- ரேடியோ பாடறதுக்குத்தான் இருக்கு. மூட இல்லை....
கனகசபை.:- அட ஆண்டவனே.... ஒரு ரேடியோவை மூட ஆசைப்பட்டு இன்னொரு ரேடியோவைத் திறந்திட்டேனே. ....
வேதவதி.:- என்னையா ரேடியோங்கறீங்க... ...
கனகசபை.:- சேச்சே....! ரேடியோவை இஷ்டப்பட்டா மூடலாம். உன் திருவாயை மூட ......
வேதவதி.:- என்ன......!( என்று மிரட்ட கனகசபை தன் வாயைப் பொத்திக்கொள்ள அவர் கையில் ரூபாய் நோட்டைப் பார்த்து )பணம்.... பணம்... ரூபா நோட்டுங்க ... ரூபா நோட்டு..இதை வாயிலே போட்டுக்கப் பாத்தீங்களே... ஏங்க... காயிதம்னு நெனச்சீங்களா..?
கனகசபை.:- அட.. யார்றா இவ... சுத்த இவளா இருக்கா ,,, கழுதை கூட ரூபா நோட்டுன்னா காயிதம்தானேன்னு தின்னுடாது.தெரியுமா... .எடுத்து மடியிலே வெச்சுக்கும்.... !( ரேடியோ இன்னும் பலமாக , “ பணமே உன்னால் என்ன குணமே.எனப் பாட) அடச்சே   பாட்டைப் பாரு பாட்டை.! பாட்டைப் பாட பேரம் பேசி ஒரு ரேட்டைக் கரெக்டா வாங்கி இருப்பான். ஆனா பாட்டு மட்டும் “ சரிகமபதநிச பணமே உன்னால் என்ன குணமே...ஹூம் வேஷக்கார உலகம்.
 ..
வேதவதி.:- கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. சங்கீதத்தை ரசிக்க உங்களுக்குத் தெரியலைன்னு சொல்லிட்டுப் போங்களேன்.
கனகசபை.:- எனக்காடி தெரியாது... ரூபாயோடு ரூபா மோதறப்போ ... ஆஹா... இதைவிட என்ன சங்கீதம் வேற இருக்கு.? சங்கீதஸ்வரம் ஏழும் இந்த ஸ்வரம் பேசலைன்னா சைலண்ட் தெரியுமா. ? ஆம்மா... ஆதார ஸ்ருதியாச்சே இது.......வேதம் நெசமாச் சொல்றேன்.... அந்தக் காலத்தில உன்னைத் தொட்டுப் பார்த்தப்போ கூட இந்த நைஸ் இருந்ததில்லை.
   வேதவதி.:- போதும் ...போங்க..
.


கனகசபை.:-ஆஹா ..ஆஹா.. நீ இப்படி நாணிக் கோணி நிக்கறது, நம்ம சாந்தி முகூர்த்தத்தில நீ முகம் செவக்க நின்னியே அதை ஞாபகப் படுத்துது.
வேதவதி.:- ஐயே ...போதும் போங்க
...
கனகசபை.:- வேதம்..... வேதம்.....( கிழட்டு தாபத்தில் நெருங்க, ரேடியோவில் “ மன்மத லீலையை வென்றார் உண்டோ) அடச்சீ....மூடுடா...ரேடியோவை.....( ரேடியோ நிற்கிறது )
சபாபதி.:- ( வந்துகொண்டே) சே...சே...இந்த வீட்டில மகனாப் பொறந்ததைவிட ஒரு கூத்தாடிக்குப் பிள்ளயாப் பொறந்திருக்கலாம். நல்ல அப்பா.....ஒரு பாட்டுப் பிடிக்காது... ஒரு கூத்துப் பிடிக்காது.....உங்களுக்கு என்னதான் பிடிக்கும்.?

வேதவதி.:- ஏன்... அவருக்குப் பைத்தியம் பிடிக்கும்......!
கனகசபை.:- இனிமேதானா பிடிக்கணும்.? செத்துப்போன ச்ண்முக சுந்தரம் ஷீலாவுக்கு உயில் எழுதி என்னக்கி என்னையும் நவகோடியையும் ட்ரஸ்டியா வெச்சானோ அன்னைக்கே பிடிச்சாச்சுடி பைத்தியம்.....
வேதவதி.: ஏன் நவகோடியையும் உங்களையும் சேர்த்து ட்ரஸ்டியா வெச்சாரு.?
சபாபதி.:- ஹாங்... மனுஷனுக்கு உலகம் தெரியும்.நவகோடி இல்லேன்னா, ஷீலாவுக்கு உயில் மட்டும்தாம்மா மிஞ்சும். உயில்ல உள்ளதெல்லாம் உன் உடம்பில நகையாக் கொஞ்சும்..
..
கனகசபை.:- இப்ப மட்டும் என்ன கெட்டது? எப்படியும் அவளுக்குக் கலியாணம் ஆனபிறகுதான் சொத்துன்னு உயில்ல எழுதி இருக்கு. நீ மட்டும் மனசு வெச்சு ஷீலாவைக் கட்டிக்கிட்டா .....ஹாங்...ஹாங்.. ஷீலாவை உன்னைக் கட்டிக்க சம்மதிக்க வச்சீன்னா.
.
சபாபதி.:-நானென்னப்பா செய்யறது.... ஷீலாவுக்கு என்னையெல்லாம் பார்த்தா ஆம்பிளைன்னே தோண மாட்டேங்குது. அவளுக்குன்னு உள்ளவன் ஒரு ஆணழகனா இருக்கணுமாம். ...யார் மேல அவளுக்கு ஒரு இது ஏற்படுதோ அவனையே கட்டிப்பாளாம். அந்தக் காலத்துல ஒரு அல்லின்னா இந்தக் காலத்துல ஒரு ஷீலா.
..
கனகசபை.:- அந்த அல்லிக்கு ஒரு அர்ச்சுனன். இந்த ஷீலாவுக்கு ஒரு சபாபதி.
.....
சபாபதி.:- அதெப்படி முடியும்.....அர்ச்சுனன் ஆணழகன்.....நானு எவம்மா என்னை ஆணழகன்னு சொல்லுவா.? அவன் அல்லிக்காக எதையும் செய்வான். நானு.... என்னால முடியுமா.? எனக்கு உயிருன்னா வெல்லமாச்சே ...ஷீலா சொத்து கெடச்சாக் கெடைக்கட்டும் இல்லேன்னா போகட்டும். ..உங்களுக்கப்புறம் உங்க சொத்தாவது கிடைக்கணும்னா நான் உசிரோடு இருக்கணுமேப்பா 
கனகசபை.:- அது என் நல்ல காலம்.என் உசிரை வாங்கினப்புறம்தானே முடியும்னு சொல்லாம உட்டியே.  ஊம்... அங்க நவகோடி என்னடான்னா மொத்து மொத்துன்னு சாத்தறான் அவன் பெண்டாட்டிய. ஷீலாவக் கட்டிக்க ஒரு ஆண் பிள்ளையப் பெறாம ஒரு பெண்ணப் பெத்ததுக்காக. பகவான் புண்ணியத்தில நீ தப்பிச்சுக்கிட்டெ ஒரு பிள்ளையப் பெத்து. இருந்தும் அதன் லட்சணத்தப் பாரு. 
...
வேதவதி.:- உங்களால வேறெப்படியும் ‘ அட்ஜீஸ்ட் செய்ய முடியாதா...?
கனகசபை.:- அட்ஜீஸ்ட்பண்றதாம் ‘அட்ஜீஸ்ட்என்னத்தடீ பண்ணித் தொலைக்கிறது.?
சபாபதி.:- எங்கிட்ட ஒரு ஒப்பந்தத்துக்கு வாங்க. எப்படியாவது ஷீலாவைக் கட்டிக்கிறேனா இல்லையாப் பாருங்க.
   கனகசபை.:- பணத்தைத்தவிர வேறெதுவானாலும் கேளு.
.......
சபாபதி.:-அதைத் தவிர உங்ககிட்ட என்ன இருக்கு.? ஆங்... பணம் தர மனசில்லேன்னா சாவிக் கொத்தைத் தாங்க.
கனகசபை.:- ஐயையோ வேண்டாண்டா.... பணமே தரேன்.
                     ( திரை )                      (தொடரும்)   ...
      .    

9 comments:

 1. அவ்வப்போது நல்ல பாடல்கள் தான் ஒலிக்கிறது...!!!

  ReplyDelete
 2. நாடகம் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.
  பழைய சினிமாக்களில் வரும் கணவன் , மனைவி உரையாடலை நினைவுபடுத்துகிறது.
  ரேடியோ பாடும் பாடல்கள் நன்றாக உள்ளது.

  ReplyDelete
 3. //அட ஆண்டவனே.... ஒரு ரேடியோவை மூட ஆசைப்பட்டு இன்னொரு ரேடியோவைத் திறந்திட்டேனே//
  அட்டகாசமான ஹ்யூமர் சென்ஸ் ஐயா உங்களும்ம். .நகைச்சுவை நாடகம் அருமை
  தொடரட்டும்.

  ReplyDelete
 4. GMB...

  காலையில் வாசித்தேன்..."என்னை நானே உணர வை..."

  நல்ல introspection...எல்லோருக்கும் தேவையே...வருகைக்கும் அழைப்புக்கும் நன்றி GMB...

  பித்தர்...புலவர் அய்யா...

  நீங்கள் எல்லாம் எங்களுக்கு நல்ல inspiration...

  Hopefully you 3 pen for years...

  ReplyDelete
 5. தொடர்கிறேன். நாடக வசனங்களில் மனம் ஒன்றியது. இது ஒரு பொம்மலாட்ட வேலை. எந்த நேரத்தில் எந்தக் கயிறை உயர்த்த வேண்டும் எதைத் தாழ்த்த வேண்டும் என்பது போல, எந்த நேரத்தில் யாரை எப்படிப் பேச வைக்க வேண்டும் என்று உணர்ந்து பேசி (எழுதி)யிருக்கிறீர்கள்.

  நானும் சில ரேடியோ நாடகங்களை எழுதியிருக்கிறேன். பெரியவர் சுகி சுப்ரமணியன் அவர்கள் சென்னை வானொலியில் இருந்த காலத்தில் அவை ஒலிபரப்பாகியிருக்கின்றன.

  நினைத்துப் பார்க்கிறேன். இந்த பாட்டையை யார் போட்டுக் கொடுத்தார்களோ, தெரியவில்லை. போட்டு வைத்திருந்த பாட்டையில் நடந்தோம். நாடகம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு Formula அந்தக் காலத்தில் இருந்ததினால், அதை வெற்றிகரமாகச் செய்தோம் என்பதில் ஒரு நிறைவு.

  ஒலிபரப்பாவதை ஒலிப்பதிவு செய்யக் கூட வசதியில்லாத காலம் அது. இன்ன நேரத்திற்கு ஒலிப்பரப்பாகிறது என்றால், அந்த நேரத்திற்கு வீட்டில் இருக்கும்படி வைத்துக் கொண்டு குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து ஒலிபரப்பாவதைக் கேட்பதில் சந்தோஷம். கேட்கக் கொடுத்து வைத்திருப்பதும் ஒரு முறைதான்.
  அந்த நேரத்தில் நாடகத்தைக் கேட்க உட்கார்ந்து கொண்டு வேறு ஏதாவது விஷயத்தை யாராவது வளவளவென்று பேசினால் எரிச்சலாக வரும்.

  எழுதுவது, ஒலிபரப்பாவது, அதற்காக செக் வருவது இதையெல்லாம் தாண்டி
  ஒலிபரப்புவதை ஒழுங்காகக் கேட்க வேண்டுமே என்கிற ஆதங்கம் வேறு அடித்துக் கொள்ளும். அலுவலக வேலை நேரத்தில் ஒலிபரப்பாகி கேட்க கொடுத்து வைக்காமல் போன நேரங்களும் உண்டு. சிலது மறு ஒலிப்பரப்பாகும் நேரத்தில் கேட்டதும் உண்டு. எல்லாம் சேர்ந்த கலவையான அனுபவங்கள் நெறைய.

  ReplyDelete

 6. @ திண்டுக்கல் தனபாலன்
  @ கோமதி அரசு
  @ டி.என்.முரளிதரன்
  @ ரெவெரி
  @ ஜீவி.
  வருகைக்கு நன்றி.பொதுவாக நான் ஒரு சீரியஸ் பேர்வழி. ஒரு சிக்கலான கருத்தை நாடகமாக்கவும் அதைப் பலரும் ரசிக்கவும் வேண்டுமென்றால் சில பல உத்திகளை கையாள வேண்டி இருந்தது. இதில் கதாநாயகனாக நடிக்கவே பலரும் தயங்கினார்கள். சொல்ல வந்ததை விரசமில்லாமல் பலரும் ஏற்றுக் கொள்ளும்படி நாடகமாக்குவது சிரமம். நகைச் சுவைகள் எல்லாம் நாடகத்தை நடத்திச் செல்லவும் ரசிக்கவும் வேண்டி எழுதப் பட்டது. கோமதி அரசு சொல்வது போல் நகைச் சுவை வசனங்கள் பழைய கால சினிமாக்களில் வருவதைப் போல் இருக்கிறது என்றால் இது அந்தக் காலத்தில் எழுதப்பட்டதுதானே. எனக்கும் அந்த பாதிப்புகள் இருந்திருக்கலாம்.எனக்கு இவற்றையெல்லாம் சொல்ல வைக்கும்படி கருத்து எழுதும் ஜீவிக்கும் மற்றவருக்கும் நன்றி.

  ReplyDelete
 7. ரேடியோ ஜோக் சூப்பர்.
  வசனங்கள் நிறைய இடங்களில் அருமை.

  ReplyDelete
 8. காட்சிகள் சிறப்பாக நகர்கிறது. தொடர்கிறோம்.

  ReplyDelete
 9. பணமே என்ன குணமே பாடலைக் கேட்டதில்லை... மன்மத லீலை பலமுறை கேட்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்தக் காலத்துப் பாடல்களோடு ஒட்டி கதையை நகர்த்தியது ரசிக்கவைத்தது. ஷீலாவின் சொத்தைக் கொள்ளையடிக்க திட்டம் போடப்படுகிறதா...திட்டம் என்னவென்று தொடர்ந்து வந்து பார்க்கிறேன்.

  ReplyDelete