வியாழன், 21 மார்ச், 2013

மன சாட்சி ( நாடகம் )-4







                                 மன சாட்சி ( நாடகம் )
               ---------------------

காட்சி-5          இடம் .:-சாலை
பாத்திரங்கள்.:-கனகசபை, நவகோடி, சபாபதி, பத்திரிக்கை நிருபர்.

( திரை உயருகிறது.கனகசபை, சபாபதி வர, எதிரே நவகோடி வேகமாகக் கடந்து போகிறார். )

கனகசபை.:- டேய்.. சபாபதி, .........இப்போ போனது நவகோடி தானேடா....
சபாபதி.:-  இன்னும் அரை ஃபர்லாங் போனப்புறம் கேளுங்க.. எதிர்ல வரும்போ போறதப்பார்த்தா எலியும் பூனையும் போல இருக்கிறது.எனக்கென்னன்னு இருந்துட்டேன். ....ஹும்...சரி... அவரைக் கூப்பிடவா ( கைதட்டி ) இந்தாங்க மிஸ்டர்..... உங்களைத்தானே... ..ஓஓ....அடடே... நவகோடி சார்....
கனகசபை.:- என்ன நவகோடி, ..பார்த்தும் பார்க்காமப் போறீங்க.
சபாபதி.:- ( மெள்ள ) கிட்டப் பார்வை போலிருக்கு.....
நவகோடி.:- அதெல்லாம் ஒண்ணுமில்லை. ..என்னவோ யோசனை...
கனகசபை.:- ரொம்ப பலமோ.?
நவகோடி.:- பின்னென்ன கனகசபை.....கேட்டியா அநியாயத்தை........
கனகசபை.:- என்ன விஷயம்...? பதறாமச் சொல்லு....
நவகோடி.:- ஹூம்.....! நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.... கேட்கிற வழியைக் காணோம்....நான் எவ்வளவு பாடுபட்டுச் சேர்த்தது...ஹும்....
கனகசபை.:- என்ன நவகோடி... விஷயத்தைச் சொல்லாமல்.....
நவகோடி.:_ என்ன அநியாயமிது... என் பெண்ணு நவநீதம் கல்யாணம் செய்துக்குவேங்குது.....!
சபாபதி.:- அடிரா சக்கைன்னானாம். ...ரொம்பப் பொல்லாத ஆசையாயிருக்கே...
கனகசபை.:-என்னைய்யா இது... பொண்ணா பொறந்தா கல்யாணம் செய்துக்கறதுதானே லட்சணம்.

சபாபதி.:- இதுல மட்டும் கொறச்சலில்லை...ஏன் ஆணாப் பொறந்தாக் கல்யாணம் செய்துக்கறது லட்சணமில்லையா..?
கனகசபை.:- அதெல்லாம் லட்சணமானவங்களுக்கடா....
நவகோடி.:- என்னைய்யா இது ... விஷயம் தெரியாம என்னென்னவோ பேசிட்டிருக்கீங்களே.. நவநீதத்தைத் தவிர வேறு வாரிசே எனக்குக் கிடையாதே....அதைக் கட்டிக் கொடுத்திட்டா..என் சொத்தெல்லாம் மாப்பிள்ளைக்கில்ல போயிடும். ..
சபாபதி.:- அப்பா... எனக்கு ஒரு ப்ரில்லியண்ட் ஐடியா... அப்படிச் செஞ்சா என்ன...?
கனகசபை.:- எப்படி.?
சபாபதி.:- நானே நவநீதத்தைக் கட்டிக்கிட்டா அவரு சொத்து நம்ம சொத்து எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கும்.
கனகசபை.:- நல்ல யோசனைதான்....... அப்ப ஷீலாவோட சொத்து....?
சபாபதி.:- அதுவும் நமக்குத்தான். நானே அவளையும் கல்யாணம் செய்துக்கறேன்.
கனகசபை. :-டேய்..... டேய்.....சொத்துக்காக எவ்வளவு கல்யாணம்டா செய்துக்குவே......சட்டத்துல பைகாமி. பாலிகாமி எல்லாம் நாட் பெர்மிட்டெட்.பலதாரச் சட்டம் இங்கே கிடையாது...
சபாபதி.:- நவகோடி சார்... எங்க அப்பாவுக்கு ஒலகமே தெரியலை. அப்பா... புருஷன்னா தெய்வம் ஆச்சே பாரதப் பெண்களுக்கு. ..!எந்தப் பெண்டாட்டி புருஷன் பேர்ல கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்புவா,.? என்ன மிஸ்டர் நவகோடி, நான் சொல்றது சரிதானே. ..?
கனகசபை.:-டேய்..டேய்..டேய்...என்னடா இது...மிஸ்டர் நவகோடி சிவகோடின்னுட்டு... ஹாங்.....மாமான்னு கூப்பிடு...
சபாபதி.:-போங்கப்பா.... எனக்கு வெக்கமா இருக்கு....
நவகோடி.:- அதனாலென்ன... பரவாயில்லை... பரவாயில்லை....
சபாபதி.:- அப்போ... ஹையா... எனக்கு ரெண்டு கல்யாணம்னு தீர்மானம் ஆயிடுச்சு. ..அப்பா.... மேரேஜுக்கு முந்தி இந்த ரோட்டிலெ பாதியை அடமானத்திலிருந்து மீட்கணும். !
கனகசபை.:- என்ன சொல்றெ நீ.....
சபாபதி.:- இல்லேப்பா....வந்து...எனக்கு அந்தக் கடையில கொஞ்சம் பத்து வரவு.......கடன் கொஞ்சம் ஜாஸ்தியானபோது, இந்த ரோட்டிலெ பாதியை அடமானம் வெச்சேன். அந்தப் பாதி ரோட்டை இப்ப நான் யூஸ் பண்றதேயில்லையே.......இப்ப அந்தக் கடனைத் தீர்க்கணும்.....நவநீதம் மூலமா.....நவகோடி மாமாகிட்டெயிருந்து கொஞ்சம்......
நவகோடி.:-அதுதான் நம்ம நவநீதத்துக்கிட்ட நடக்காது. அது உன்னைக் கொண்டுபோய் ஜவுளிக் கடையிலெ அடமானம் வெச்சிட்டு கடையையே வீட்டுக்குக் கொண்டு வந்திடுவா......என்ன  கனகசபை.....
கனகசபை.:- என்னடா இது.... சம்பந்தி விஷயம் தெரியாதவராயிருக்கார்.... சொல்லுடா.. அவர்கிட்ட.....சம்பந்தம் பண்ணிக்கிறவங்க ஒருத்தருக்கொருத்தர் நேருக்கு நேரா பேசிக்கிற வழக்கம் இல்லைன்னு..சொல்லுடா அவர்கிட்ட...
சபாபதி.:- அட ...ஆண்டவனே.....மாப்பிள்ளைக்கே தரகு வேலையா....?
நவகோடி.:- ஆமா... மாப்பிள்ளை...! அதை நான் மறந்துட்டேன். ... இதப் பாருங்க ....கல்யாணம்னு நிச்சயம் ஆயிட்ட பிறகு சட்டுப் புட்டுன்னு லௌகீக காரியங்களை முடிக்கணும். நவநீதத்துக்கும் உங்களுக்கும் நடக்கப் போற கல்யாணச் செலவு உங்களோடதுன்னு உங்கப்பாகிட்ட சொல்லுங்க மாப்பிள்ளை.
சபாபதி.:- அப்பா.... நவநீதத்துக்கும் உங்களுக்கும் நடக்கப் போறக் கல்யாணச் செலவு உங்களோடதாம்... ஹாங்...இல்லேப்பா... நவநீதத்துக்கும் எனக்கும் நடக்கப் போற கல்யாணச் செலவு உங்களுடையது...
கனகசபை.:- என்னது.....?
சபாபதி.:- நான் சொல்லலை. இவர் சொன்னாரப்பா.....
கனகசபை.:- ஊம்ம்ம்ம்....மாப்பிள்ளை அழைப்புக்கு வாடகைக் கார் கூடாது.புதுசா கார் வாங்கற செலவு பெண் வீட்டாருதுன்னு உங்க மாமனார்கிட்ட சொல்லுடா மகனே. ..
சபாபதி.:- போங்கப்பா.... மாமனார்ட்ட பேசணும்னா மாப்பிள்ளைக்கு வெக்கமா இருக்காதா.....
கனகசபை.:- அடப் படவா ராஸ்கல்... சொல்லுடான்னா......
சபாபதி.:-மாப்பிள்ளை அழைப்புக்கு வாடகைக் கார் கூடாது. புதுசாக் கார் வாங்கற செலவு பெண்வீட்டாருடையது... அப்பா சொன்னார்..
நவகோடி.:- கலியாணச் செலவை வேணுன்னா நான் ஏத்துக்கறேன். கார் வாங்கற செலவு மாப்பிள்ளை வீட்டாருடையது....ஆம்   மாம்..!
கனகசபை.:- அதுதான் நடக்காது. ...
நவகோடி.:- நடக்காதா...?
கனகசபை..:- நடக்குமா... ?
சபாபதி.:- கல்யாணத்துல ஒரு ஐட்டம் சம்பந்திச் சண்டை ... ஆரம்பமாயிடுச்சு ஆமா... சண்டை வந்தா மட்டும் சம்பந்திகள் நேருக்கு நேர் பேசிக்குவாங்க போலிருக்கு.
நவகோடி.:- நடக்குமா நடக்காதான்னு நான் பார்த்துடறேன்..நீ  வா... மாப்பிள்ளை.
கனகசபை.:- போயிடுவியாடா நீ...( என்று இருவரும் சபாபதியை ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்க)
சபாபதி.:-கை...கை...கை..அப்பா ....மாமா....கை....என்னோட கை...( அப்போது அங்கு ஓடிவரும் )
பத்திரிக்கை நிருபர்.:-என்னையா இது.... நடுரோட்டிலெ யுத்தம்..... நீங்க யாரு.... உங்க பேரு.....?
நவகோடி.:-ஐயா...ஐ..நா.. சபைப் பார்வையாளரா....?

ப.நிருபர்.:- சேச்சே.... நிமிஷக் கொலைநிருபர் நான். எங்கெங்கே வாலிபர்களைப் பருவப் பெண்கள் ‘ கும், கும்னுகுத்தறாங்களோ.எங்கெங்கே குடிகாரர்கள் சினிமாப் பாட்டைப் பாடி கலாட்டா செய்யறாங்களோ எங்கெங்கே கொலைகார மாப்பிள்ளைகள் மாமனார்களை சதக், சதக்னு குத்தறாங்களோ அங்கெல்லாம் நான் காட்சி அளிப்பேன். பெர்மநெண்ட் அட்ரஸ் c/o  கோர்ட். இந்த நடுரோட்டு யுத்தத்துக்கான காரணங்களைச் சொல்றீங்களா....?
சபாபதி.:-எழுதிக்குங்க சார்...மகனுக்கும் மகளுக்கும் நடக்கப் போற கல்யாணத்தை பற்றி சம்பந்திகள் நடுத்தெரு சண்டை. தாலி கட்டப்போகும் மாப்பிள்ளை கைகளை ஆளுக்கொன்றாகப் பிய்த்தெடுத்த கோரம்.... அந்தோ பரிதாபம்....
கனகசபை.:- ஆமாண்டா........மெனக்கெட்டு எல்லாத்தையும் புட்டுப் உட்டுச் சொல்லு. சம்பந்திகள் இன்னைக்கு அடிச்சுக்குவாங்க  நாளைக்குக் கூடிப்பாங்க..... என்ன... நவகோடி....?
நவகோடி.:- நாளைக்கென்ன.... இன்னிக்கே கூடிக்குவோம்....வாங்க.....
சபாபதி.”-உங்களுக்கு என் அனுதாபம் சார்.. .. இன்னும் எப்பவாவது சண்டை வந்தா உங்களுக்குத் தெரிவிகிறேன்.......வரேன் சார்....வணக்கம் போடக்கூட கையைத் தூக்க முடியலியே......!
  
                        ( திரை )                   ( தொடரும் ).  
 

 
 ...

9 கருத்துகள்:

  1. பணம் நல்லாவே விளையாடுகிறது...

    நிமிஷக் கொலை’ நிருபர் வரவு செம...

    பதிலளிநீக்கு
  2. ’நிமிஷக் கொலை’ நிருபர்

    புதுமையான படைப்பு ...

    பதிலளிநீக்கு
  3. கைவிட்டு பண்ம், சொத்து போககூடாது என்று நவகோடியும், கனகசபையும் அடிக்கும் கூத்துகள் ,
    இரண்டு கல்யாணம் என்று மகிழும் சபாபதி, நிமிஷக் கொலை நிருபர் எல்லோரும் பேசும் வசனங்கள் நன்றாக இருக்கிறது.
    நாடகத்தை அன்று பார்த்தவர்கள் இந்த உரையடாலை கண்டு ரசித்து சிரித்து இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு

  4. @ திண்டுக்கல் தனபாலன்.
    @ இராஜராஜேஸ்வரி,
    @ கோமதி அரசு. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.நிமிஷக் கொலை நிருபர் என்னும் பாத்திரப் படைப்பு, அவலச் சுவை மிகுந்து உள்ள நாடகத்தைக் கொஞ்சம் நகைச்சுவை கூட்டி நகர்த்துவதன் உத்தியே. சிறு கதை எழுதும்போது எண்ணங்களை வார்த்தைகளில் வெளிப் படுத்தி விடலாம். அது நாடகத்தில் கொண்டு வருவது கடினம். கனமான பாத்திர படைப்பின் ஊடே fringe பாத்திரங்களும் அவசியம். அடுத்து வரும் காட்சிகள் கதையின் உட்கருத்துக்கு இட்டுச் செல்லும். தொடர்ந்து வர வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. //கனகசபை.:-என்னைய்யா இது... பொண்ணா பொறந்தா கல்யாணம் செய்துக்கறதுதானே லட்சணம்.

    சபாபதி.:- இதுல மட்டும் கொறச்சலில்லை...ஏன் ஆணாப் பொறந்தாக் கல்யாணம் செய்துக்கறது லட்சணமில்லையா..?
    கனகசபை.:- அதெல்லாம் லட்சணமானவங்களுக்கடா.... //

    -- நாடகங்களுக்காகவே அமையப் பெற்ற உரையாடல் போக்குகள். இப்படியெல்லாம் எழுதுவது எனக்கும் பிடிக்கும். ஒரு பாத்திரம் இன்னொரு பாத்திரத்தை மடக்குவதற்காகவும், கான்வர்சேஷனின் தொடர்ச்சிக்காகவும் ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டே பன்னிப்பன்னி விளையாடுதல். இந்த இடத்தில் 'லட்சணம்' என்று கிடைத்த வார்த்தையை வைத்துக் கொண்டு விளையாடியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு

  6. @ ஜீவி
    நாடக வசனங்களை பாராட்டுவதற்கு நன்றி. ஒன்று சொல்லட்டுமா ஜீவி சார். இப்போதெல்லாம் என்னால் அப்படி எழுத முடியுமா என்று தெரியவில்லை. ரொம்பவே சீரியஸ் பேர்வழி ஆகிவிட்டேன் போல் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  7. நகைச்சுவையான நாடகம். இன்றைய டிவிக்கும் ஒத்துவரும்.

    பதிலளிநீக்கு
  8. நகைச்சுவையான நாடகம். இன்றைய டிவிக்கும் ஒத்துவரும்.

    பதிலளிநீக்கு
  9. மூன்று நான்காம் பாகங்களைப் படித்தேன். பின்னால் நிகழவிருப்பவற்றைப் பற்றி இன்னும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. மிகவும் நேர்த்தியாக கவனமாக கதையை நகர்த்துகிறீர்கள். சபாபதி என்ற பெயரையும் அந்தப் பாத்திரத்தின் குணாதிசயத்தையும் பார்க்க பழைய சபாபதி திரைப்பட நாயகனே நினைவுக்கு வருகிறார்.

    நேரம் அமையும்போது மற்றப் பகுதிகளையும் வாசித்துக் கருத்திடுவேன்.

    பதிலளிநீக்கு