Sunday, March 17, 2013

மன சாட்சி ( நாடகம் )-3






                                 மன சாட்சி ( நாடகம்.)
            ----------------------
காட்சி-4 இடம்:-ஷீலா வீடு.
பாத்திரங்கள்:-ரவி, ஷீலா, சபாபதி, கனகசபை, நவகோடி.
ஷீலா:- இவ்வளவு நேரமா என்னைப் பத்தி உங்களுக்குச் சொல்லிட்டேன்.நான் ஒரு விதத்தில அனாதை. தாய் தந்தையின் அரவணைப்பும் அன்பும் ஆதரவும் தெரியாம வளர்ந்திட்டேன். இருந்தாலும் வாழ்க்கையின் கஷ்டங்களும் தெரியாமத்தான் வளர்ந்திட்டேன். தட்டிக் கேட்க ஆளில்லை. என் தலைவிதியையும் நானேதான் நிர்ணயிக்க வேண்டும். நான் மேஜரானதும் என் சொத்துக்கள் எல்லாம் என் கைக்கு வரவேண்டும்.எனக்கும் 18-/ வயது முடிந்துவிட்டது. என்னென்னவோ சொல்லிட்டுப் போகிறேன் பார்த்திர்ர்களா.? எனக்கு உங்களைப் பார்த்தவுடன் றெக்கை கட்டிக்கொண்டு பறக்கிற மாதிரி இருக்கு. சொல்ல வந்ததைக் கோர்வையாச் சொல்லவும் முடியலெ.என் மனசு தடுமாறுது ரவி.

ரவி.:_ ஷீலா... என்ன இது... control yourself.பெண்களுக்கு முக்கியமா உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியணும். உன்னைப் பற்றியெல்லாம் சொல்லிட்டெ . என்னைப் பற்றி நான் உனக்குச் சொல்லித் தெரியறதைவிட சொல்லாமலேயே புரிய வேண்டியது அதிகம்., முக்கியம்....புதிர் மாதிரி இருக்கு இல்லையா. என் வாழ்க்கையே புதிராயிடுமோன்னு எவ்வளவு முறை சஞ்சலப் படறேன் தெரியுமா.?
ஷீலா.:- ரவி.. உள்ளத்து உணர்ச்சிகள் வார்த்தையால் வடிவம் கொடுத்து வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் காய்ந்து போன சருகு மாதிரி மனமும் உள்ளப் புயலில் அல்லல்படும் ரவி...மாற்றங்கள் மாறி மாறி வரும் நிகழ்ச்சி நிரலின் மறு பெயர்தான் வாழ்க்கை என்றாலும் அடிப்படை எப்போதுமே ஏமாற்றமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன. ?Please cheer up..!
ரவி.:-ஆமா ஷீலா...நீ சொல்றதிலயும் உண்மை இருக்கு. எனக்கு ஆதரவு காட்டவும் உலகத்திலெ ஒருத்தி இருக்கான்னு எண்ணும்போது கொஞ்சம் தெம்பாத்தான் இருக்கு.
ஷீலா.:- தெம்பாத்தான் இருக்குன்னு வார்த்தையிலெ சொல்றீங்களே தவிர முகத்திலெ தெளிவைக் காணோமே. .ஹூம்,.! அது சரி ரவி, நம் திருமணத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க. ....?
ரவி.:- ஹாங்......! திருமணமா..? நம்ம திருமணமா ,,,, ஹாங்... ஷீலா  வந்து.....நாம் திருமணம்செய்து கொண்டு ஆக வேண்டியதுதான் என்ன திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன.( கனகசபை, சபாபதி வருகை )
கனக.:- யார் சொன்னது..? ஆண்டவனின் அருளாலே இஷ்ட மித்ர பந்துக்களாலும் , பெரியவங்க ஆசிர்வாதத்தினாலையும் அல்லவா திருமணங்கள் நிச்சயிக்கப் படுது.
நவகோடி.:- ( வந்துகொண்டே )அந்தப் பெரியவங்க இடத்திலெ நானும்  இருந்தாத்தானே பூர்த்தியடையும்.
கனக.:_( சபாபதியிடம் )பார்த்தியா.... மனுஷனுக்கு மூக்கிலெ வேர்க்குது.மோப்பம் பிடிச்சு வந்துட்டான்.
ஷீலா.:- நீங்க யாரும் எதுக்கு வந்தாலும் சரி, நானே உங்களைப் பார்க்ணும்னுதான் இருந்தேன். . உயிலைப் பத்திய எல்லா விஷயங்களும் எனக்குத் தெரிஞ்சாகணும்.
சபாபதி.:- உயில்....!அது உங்கப்பா சாகறப்போ எழுதியது.அது கைக்கு வரதுக்கு முன்னாலெ எங்கப்பா பாரதம் படிப்பாரு. நவகோடி அவர்கள் பகவத் கீதா படிப்பாரு. உயில் கைக்கு வந்ததிலிருந்துரெண்டு பேரும் உயில் பாராயணம் பண்றாங்க
நவகோடி.:- இல்லேன்னா இவ்வளவு நாளா இவ்வளவு சீரா நிர்வகிக்க முடியுமா.?

கனக.:- முடியாது... போகட்டும் .அந்தப் பொறுப்பு கஷ்டம் எல்லாம் உனக்கு மெதுவா தெரியட்டும். இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்.
ஷீலா.:- எனக்கு வயசு பதினெட்டு ஆச்சு. அது முடிஞ்சுஒரு வாரம் ஆச்சு மாமா..... உங்களைத்தான் மாமா.........!
கனக.:- ஹாங்....... என்னையா ஷீலா மாமான்னு கூப்பிட்டே.... டேய்...சபாபதி...ஷீலா என்னை மாமான்னு கூப்பிடுதுடா.....!
சபாபதி.:- கவனிச்சேன்...கவனிச்சேன்.....
நவகோடி.:- வயசில பெரியவங்களெ மாமான்னு கூப்பிடறது சகஜந்தானே....
கனக.:- அப்படீன்னா உன்னை ஏன்யா கூப்பிடலை.?
நவகோடி.:- ஐய்ய.... உங்க வீட்டு மருமகளா வரப் போறோமேன்னு உன்னை மாமான்னு கூப்பிடுது....!
சபாபதி.:-அமைதி....அமைதி..... பிள்ளையும் பெண்ணும் நாங்க இருக்கும்போது எங்கள் கல்யாணத்தைப் பற்றி நீங்க ஏன் சண்டை போடறீங்க.....ஹூம்..?என்ன ஷீலா... எப்படிப் போட்டேன் ஒரு போடு பார்த்தியா.....

ஷிலா.:- கல்யாணம் .. கல்யாணம்...எப்போக் கல்யாணம் பண்ணிக்கணும் யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்குத் தெரியும்.நான் மேஜராயிட்டேன். சொத்து என் கைக்கு வந்தாகணும். நல்லதுகெட்டது எல்லாம் எனக்கு நல்லாத் தெரியும். ....
நவகோடி.:- ஷீலா... நீச்சல் தெரிஞசவங்களைக் கூட வெள்ளம் அடிச்சிட்டுப் போயிடும். உதாரணமா என்னையே கட் பண்ணி டௌன் பண்ணப் பாக்கறாங்களே.
ஷீலா.:- என் சொத்தை யாரும் அடிச்சிட்டுப் போக முடியாதுன்னு நான் சொல்றேன்.
சபாபதி.:- உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை அவருதுன்னு அப்பா நெனைக்கிறார்.
கனக.:- சொத்தை, உன் கலியாண்ம் ஆகி , மாப்பிள்ளைகிட்ட ஒப்படைக்கணும்னு.நான் நெனைக்கிறேன்.
ஷீலா.:- நான் கல்யாணமே செய்துக்கலைன்னா..

கனக.:- அப்ப நான் நெனைச்சாலும் உன் சொத்தை உங்கிட்ட ஒப்படைக்க முடியாது.....
ஷீலா.:- But  why….?ஏன்...?
சபாபதி.:- உனக்கு கல்யாணம் ஆனப் புறம்தான் சொத்துன்னு உங்கப்பா உயில் எழுதி இருக்காரே... அட.... சொல்லுங்கப்பா........
கனக.:- உங்கப்பா என்ன சாமானியமா.? அவர் திரிகாலமுணர்ந்த ஞானி..! அவருக்கு தலையிலெ மட்டுமா மூளை.? உடம்பெல்லாம் மூளை....! இல்லேன்னா இப்படி ஒரு உயிலை எழுதுவாரா...
ஷீலா.:-பாத்தீங்களா ரவி... பாத்தீங்களா.... என்னை என்னென்னவோ சொல்லிக் குழப்பப் பார்க்கறாங்களே.
நவகோடி.:- ஏம்மா பதர்றே... ஒரு நல்ல பையனாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ... எல்லோரையும் நல்லவங்கன்னு நெனச்சு ஏமாறாதே. அதுதான் நான் சொல்லுவேன்.... நான் வரேன்.( போகிறார்.)
கனக.:-ஷீலா......! யோசிக்காதே...எல்லாம் நல்லதுக்குத்தான்.
சபாபதி.:- நானிருக்கப் தயக்கமேன் ஷீலா.

ஷீலா.:- ஊம்ம்ம்ம்.....!( கனகசபை சபாபதி போகிறார்கள்) ரவி... ரவி.... இங்கே நடந்த இவ்வளவையும் பார்த்திட்டு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மௌனமாக இருக்கிறீர்களே. எனக்குத் தெரியும் யூ டோண்ட் லவ் மீ..!நீங்கள் என்னைக் காதலிக்கலை... விரும்பலை...இல்லேன்னா இப்பவே ஷீலாவக் கல்யாணம் பண்ணிக்க நான் இருக்கேன்னு சொல்லி இருப்பீங்க இல்லை.....!.
ரவி.:- ஓ...நோ....ஷீலா.! நீ தவறாக நினைக்கிறெ. கல்யாணம் என்பது உனக்கு சொத்தை அடைய மட்டும்தானா...? வாழ்க்கைப் பிரச்சனை அல்லவா.? இதில் நம் இருவர் கருத்தும் ஒன்றாக இணைய வேண்டாமா.?
ஷீலா.:- நீங்க சொல்றத கொஞ்சம் விளக்கமாச் சொல்லக் கூடாதா. ?

ரவி.:- நாம் எதற்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.? களங்கமில்லாத நட்போடு உள்ளத்தாலொன்றுபட முடியாதா.? நான் சொல்றேன் ஷீலா.... திருமணம் என்பது ஒரு லைசென்ஸ். கேவலம் மனிதர்களது அப்பட்டமான மிருக வெறியை , உடற்பசியைத் தணித்துக் கொள்ள ஊருலகம் வழங்கும் ஒரு பெர்மிட். அது இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காகவே மனித நிலையிலிருந்து மாறுகிறோம். நாம் பாபிகளாகிறோம். அது இல்லாமலேயே நாம் அன்பில் இணைய முடியாதா.?
ஷீலா.:- ஆண்களுக்கு அது சரியாகத் தோன்றலாம். ரவி..!ஆனால் கண்ணிறைந்த புருஷனுடன்நீங்கள் கூறுகின்ற திருமண லைசென்ஸ் பெற்று கருத்தொருமித்து வாழ்வதுதான் பெண்களுக்கு அணிகலன். அதைப் பாவச்செயலின் வித்து என்று குதர்க்கமாகக் கூறுவது வாழ்க்கையின் அடிப்படை தத்துவத்துக்கே விரோதமான பேச்சு.

ரவி.:- ஷீலா...ஷீலா... புரிஞ்சுக்கவே மாட்டேங்கறியே..திருமணம் செய்யற முக்கிய நோக்கமே இருவருக்கும் உள்ள பரஸ்பர அன்பை, ஊருலகத்துக்குத் தெரியப் படுத்தணுங்கறதுக்கு மட்டும்தானா....
ஷீலா.:- ஆண்டவா.... இதைப் புரிஞ்சுக்க இவ்வளவு நேரமா உங்களுக்கு. சரியான ட்யூப் லைட்தான்.
ரவி.:- தமாஷ் பண்ற காரியமில்லை இது ஷீலா. திருமணங்கறது ஆயிரங் காலத்துப் பயிர். அதைப் பத்தி எத்தனையோபேர் என்னவெல்லாமோ வியாக்கியானம் பண்ணி இருக்காங்க. ஆனா.....என்னைப் பொறுத்தவரைக்கும் நான்...சற்று வித்தியாசமானவன். முழுக்க முழுக்க கல்யாணம் என்பதே பரஸ்பர அன்புக்காகன்னு இருந்தால் மட்டும்தான் என்னால் இதுலெ ஒரு முடிவுக்கு வரமுடியும் பிற்காலத்துலே ஏமாற்றத்துக்கு ஆளாகி சஞ்சலப் படக்கூடாது. அவசரப் பட்டு எந்த முடிவுக்கும் வரக் கூடாது. பின்னால் வருந்தக் கூடாது. ..
 ஷீலா.:- இருந்தாலும் உங்களை மாதிரி ஒரு பெஸ்ஸிமிஸ்டை என் வாழ்க்கையில் சந்திச்சதே இல்லை. ரவி, உங்களுக்கு என் மேல அன்பிருக்கு இல்லையா.?
ரவி.:- இருக்கு...
ஷீலா.:- என் காதல்ல உங்களுக்கு நம்பிக்கை இருக்கு இல்லை.?
ரவி.:- இருக்கு ஷீலா.... இருந்தாலும்.....
ஷீலா.:- Then the matter is settled. அன்பிற்காகவே நடக்கும் திருமணம் இது. என் சொத்தை அடையறதுக்கு மட்டும்னு தயவு செய்து நினைக்காதீங்க,. உயில்ல இருக்கிற சொத்தை அடையறதுக்கு மட்டும்னா அந்தக் காலி சபாபதிக்கே கழுத்தை நீட்ட மாட்டேனா......! என் அன்பிலே இன்னுமா சந்தேகம் ரவி.
ரவி.:- இல்லை ஷீலா.....!எதுக்கும் பின்னாலே நீ வருத்தப் படக் கூடாதேன்னுதான் அவ்வளவு எச்சரிக்கையாய் இருக்கேன். கொஞ்சம் முன்னாலெ சொன்னியே , உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தையால் வடிவம் கொடுக்கணும், இல்லேன்னா உணர்ச்சிகள் வாடி வதங்கி சருகாயிடும்னு அந்த மாதிரி எல்லா உணர்ச்சிகளுக்கும் என்னால் உருவம் கொடுக்க முடிஞ்சா......... ஹூம்.....! That is just not possible. ..! ஷீலா.. என் வாழ்க்கையிலும் ஒரு பெண், அதுவும் உன்னை மாதிரி அழகான அறிவுள்ள
பெண் குறுக்கிட முடியும்னு நான் கனவு கூடக் கண்டிருக்க முடியாது. (ஷீலா ரவியைக் கிள்ளுகிறாள்.) ஆஅவ்வ்... என்ன ஷீலா இது..?
ஷீலா.: -நீங்க காணறது கனவல்ல நினைவுதான். கிள்ளினா வலிக்குதில்லெ. உங்களை மாதிரி ஒரு கண்ணியமானவரைக் காதலிக்கவும் கலியாணத்தில் கை பிடிக்கவும் நான் கொடுத்து வெச்சிருக்கணும். ரவி.... நம்ம கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்.?
ரவி.:- That which can not be cured must be endured. முடிவு எடுத்த பிறகு தள்ளிப் போடறதுல அர்த்தமேயில்லை. I am ready at any time.
  .                                                      ( திரை )                                                         ( தொடரும் )
 
...
....
 
 
 

                       
                       
                    


7 comments:

  1. ஷீலா ரவி திருமணமா அடுத்து பகுதி?
    ரவி முதலில் மறுத்து பின் ஒத்துக் கொள்வதற்கு காரணம் ஏதோ இருக்கு என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. /// ஆனா.....என்னைப் பொறுத்தவரைக்கும் நான்...சற்று வித்தியாசமானவன். முழுக்க முழுக்க கல்யாணம் என்பதே பரஸ்பர அன்புக்காகன்னு இருந்தால் மட்டும்தான் என்னால் இதுலெ ஒரு முடிவுக்கு வரமுடியும் பிற்காலத்துலே ஏமாற்றத்துக்கு ஆளாகி சஞ்சலப் படக்கூடாது. ///

    ரவி இன்னும் முடிவிற்கு வரவில்லை என்று நினைக்கிறேன்... இப்படி சொல்பவர்கள் தான் ஏமாற்றுவார்கள், ஏமாறுவார்கள் என்றும் நினைக்கிறேன்...

    ReplyDelete

  3. @ திண்டுக்கல் தனபாலன்
    @ கோமதிஅரசு,
    உடன் வருகைக்கு என் நன்றி.
    ஒரு சிக்கலான கருத்து. கத்திமேல் நடப்பது போல் கவனமாகக் கையாளப் பட வேண்டியது. தொடர்ந்து வாருங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  4. உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தியால் வடிவம் கொடுக்கணும்.. வசனம் எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கு.

    கதை சுவாரசியமான திருப்பத்துக்கு வந்திருப்பது போல தோன்றுகிறது.

    ReplyDelete

  5. @ அப்பாதுரை.
    நீங்கள் என் வலைப் பூவைப் பிரிக்கும்போதே கண்ணில் படும் வரிகளின் ஒரு பகுதிதானே அது...!தொடர்ந்து வாருங்கள். ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  6. -நீங்க காணறது கனவல்ல நினைவுதான். கிள்ளினா வலிக்குதில்லெ. உங்களை மாதிரி ஒரு கண்ணியமானவரைக் காதலிக்கவும் கலியாணத்தில் கை பிடிக்கவும் நான் கொடுத்து வெச்சிருக்கணும்.///

    ரசிக்கவைத்த வரிகள்..பாராட்டுக்கள்.

    ReplyDelete