Monday, March 11, 2013

காலம் மாறிவிட்டதா.?


                                         காலம் மாறிவிட்டதா.?
                                          -----------------------------பழைய நோட்டுப் புத்தகங்களையும் டைரிப் பக்கங்களையும் புரட்டிக் கொண்டிருந்தபோது, அவற்றில் கண்ட சில விலைப் பட்டியல்கள் “அந்த நாளும் வந்திடாதோ ,என்று எண்ண வைத்தது. கூடவே ஒரு பாட்டும் நினைவுக்கு வந்தது அஞ்சு ரூபா நோட்டக் கொஞ்ச முன்னெ மாத்தி மிச்சமில்லெ, காசு மிச்சமில்லெ. ... கத்திரிக்கா வில கூட கட்டவில்லையாச்சுக் காலம் கெட்டுப் போச்சு எப்படிப் பிழைப்பதிந்த நாட்டிலே..... “ என்று போகும் அப்பாட்டு. எழுபதுகளின் தொடக்கம் என்று நினைக்கிறேன். ஆறு பேர் கொண்ட எங்கள் குடும்பத்துக்கு வாங்கிய சாமான்கள்  மாதம் ஒன்றுக்கு அரிசி ரூ.55-/ பால் ரூ.75-/ மளிகை ரூ.68-/மின்சார பில் ரூ.10-/எரிவாயு ரூ.25-/ என்று எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால் அப்போதைய மாத வருமானமும் மிகக் குறைவே.One thing is clear. Income and inflation have not increased relatively. 


 இதை எழுதுவது ஒரு சாம்பிள் ஒப்பீடலுக்கே. அதே சமயத்தில் நாங்கள் BHEL குடியிருப்பில் இருந்தோம். தொலைக் காட்சிகள் வந்திருக்கவில்லை. ரேடியோ தான் பொழுது போக்கு சாதனம். மதியம் ஆல் இந்தியா ரேடியோ , திருச்சியில் பூவையர் பூங்கா என்று ஒரு நிகழ்ச்சி நடக்கும். என் மனைவி அதில் நிறையவே பங்கேற்றிருக்கிறாள். ஒரு முறை வரதட்சிணை பற்றிப் பேச கேட்டிருந்தனர். அதற்காக அடியேன் எழுதிக் கொடுத்திருந்த குறிப்புகள் இந்தப் பழைய பேப்பர்களில் கண்டெடுத்தேன். அதை இங்கு மீண்டும் பதிவாக்குகிறேன்.


“ பெண்ணைப் பெற்றவர் பிள்ளையை விலைக்கு வாங்கும் கொடுமைக்குக் கௌரவமான பெயர் வரதட்சிணை. வரும் வரனுக்கு தட்சிணை என்று அர்த்தமும் செய்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் பிள்ளை பெண்வீட்டுக்கு வருவதில்லை. பெண்தான் பிள்ளையின் வீட்டைப் புகுந்த வீடாக ஏற்றுப் போகிறாள். பெண்ணையும் கொடுத்துக் கூடவே பொருளையும் இழக்க வேண்டிய ஒரு இழிவான நிலையில்நம் சமுதாயத்தில் எத்தனைக் குடும்பங்கள்தான் அல்லல் பட்டிருக்கின்றன. ஆண்டவனின் படைப்பில் மனித குலம் தழைக்க சம பங்கேற்கும் பெண்ணினம் பிறப்பதையே அஞ்சி நடுங்கும் நடுத்தரக் குடும்பங்கள் எத்தனை எத்தனை.இதற்கெல்லாம் அடிப்படைக் காரணங்கள் எதுவாயிருந்தாலும் அவை எல்லாம் காலப்போக்கிலும் வளர்ந்து வரும் சமுதாயக் கண்ணோட்டத்திலும் மாற வேண்டாமா.?ஆதியிலே நம் நாட்டில் வர்ணபேத அடிப்படையில் சமூகம் இயங்கியது. இன்று தகர்த்தெறிய்ப்பட்டுக் கொண்டு இருக்கவில்லையா. வர்ண பேதங்களினால் சமூகத்தில் ஒரு பகுதியினர் அடக்கி ஒடுக்கப் பட்டு இருந்தனர். அவர்களே அதை உணர்ந்து போராடி ஜாதிமத பேதமற்ற சமுதாயத்தை                
சிருஷ்டிக்கும்  போது  இது என்ன மட்டமான போலி சம்பிரதாயம். ஆணுக்குப் பெண்.அடிமையா. இதற்கு முடிவு கட்ட வேண்டாமா.?நாமெல்லாம் இங்கு கூடி கருத்துப் பறிமாறுகிறோம். வாய் கிழியப் பேசுவோம். அவ்வளவுதானா.?இதுவரையில் இந்த அளவில்தான் நடந்திருக்கிறது. இனிமேல் இதற்கு ஒரு மாற்றம் தேவை. நம் எண்ணத்திலும் பேச்சிலும் தூய்மை உண்டென்று நாம் உண்மையில் நம்பினால் அதைச் செயலில் காட்டத் தயக்கம் ஏன்.?பெண்ணினத்தவராகிய நாம் வரதட்சிணை கொடுக்கக் கூடாது. என்று முழங்கும்போது, ஒன்றைமட்டும் மறந்து விடக்கூடாது. வரதட்சிணை கேட்கவும் கூடாது. இந்தப் போலி சம்பிரதாயமும் வறட்டுக் கௌரமும் தொடர்ந்து நீடிக்க நாம்தான் காரணம். ஏனென்றால் நம் பிள்ளைகளுக்கு நாம்தானே சீர்வரிசையும் வரதட்சிணையையும் எதிர் பார்க்கிறோம். பெண்பிறந்தது என்றால் சுணக்கமும் பிள்ளை பிறந்தது என்றால் மகிழ்ச்சியும் அடைவதும் நாம்தான். இந்த ஒரு உணர்ச்சி நம் ரத்தத்தில் ஊறி ஆணுக்குப் பெண் தாழ்ந்தவள் என்ற ஒரு திடமான ஆனால் தவறான மனப்பான்மையை வளர்த்துவிட்டது. ஆணும் பெண்ணும் சமம் என்று நாம் உண்மையிலேயே நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையில் உள்ளத் தெளிவு காண வேண்டும். ஆணைப் போல் பெண்ணையும் வளர்க்க வேண்டும். பெண்குழந்தைகளுக்கு வீண் பயத்தையும் போலி அடக்கத்தையும் புகட்டாமல் பாரதி சொன்னபடி,நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ‘கொண்டவர்களாக வளர்க்க வேண்டும். வாழ்க்கைப் பொறுப்பைத் தேடிக்கொள்ள சம உரிமை அளிக்க வேண்டும். அதற்கு முக்கியமாக வேண்டியது நெஞ்சுரமும் தன் நம்பிக்கையும். இவை வளர உலகப் பொது அறிவு வளர வேண்டும். அதற்கு கல்வி அவசியம். அந்தக் கல்வி வளர்ச்சியும் பகுத்தறிவும் வளர்ந்தால் நம் பெண்களுக்கு  தேவைப்பட்டால் வாழ்க்கையில் தனித்தியங்கும் நம்பிக்கையும் துணிவும் வளரும். வரதட்சிணை என்னும் கட்டாயக் கொடுமைக்கு ஆட்பட்டு அல்லல் படுவதைவிட இம்மாதிரி தனித்தியங்குவதையே பெண்கள் விரும்புவார்கள் என்ற நிலை வந்து விட்டால்வரதட்சிணை கேட்பவர்கள் இருக்க மாட்டார்கள். பிறருக்குப் பாரமாக இல்லாமல் ஒரு பெண் அவளுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கல்வியும், பக்குவப்பட்ட மன முதிர்ச்சிக்கு வயதும் முக்கியம். பெண்கள் கட்டாயமாகக் கல்வி கற்க வேண்டும். அவர்களாக அவர்கள் வாழ்க்கையை அமைக்கும்வரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஒரு ஆண் படித்து முடித்ததும் மணம் செய்து கொள்வதில்லை. ஒரு வேலையில் அமர்ந்துநிரந்தர வருவாய் உண்டுஎன்று நிச்சயப்பட்ட பின்புதான் மணவினை பற்றிச் சிந்திக்கிறான். இது ஒரு பெண்ணுக்கும் பொருந்த வேண்டும்.
பெண்கள் இருபது இருபத்திரண்டு வயதுக்கு மேல்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு மனப் பக்குவம் அப்போதுதான் இருக்கும். கல்வி கற்றவர்கள் அவர்களது சொந்தக் கால்களில் நிற்கத் துணிவு பெற வேண்டும்.
பெண்களை பாரமாக நினைக்காமல் ஆணும் பெண்ணும் உண்மையில் சமம் என்று நம்பி , வரதட்சிணை வாங்கவும் கூடாது. கொடுக்கவும் கூடாது. என்று நாமே ஒரு நல்ல முடிவு எடுத்துக் கொண்டு முயல்வோமேயானால்நம் சமூகத்திலிருந்து, வரதட்சிணை என்னும் காட்டுமிராண்டித்தனமான
உளுத்துப்போன கொடிய பழக்கம்நிச்சயம் ஒழியும். அதை ஒழிக்க வேண்டியது நம் எல்லோருடையக் கடமையும் ஆகும்.இந்த நேரத்தில் ஏன் நாம் அதைஒரு பிரதிக்ஞையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.?
(1970-களின் முற்பகுதியில் எழுதியது இது. சுமார் நாற்பது வருடங்களுக்குப் பின்னும் நிலைமை மாறி இருக்கிறதா.? எனக்கென்னவோ மாற்றங்கள் இருந்தாலும் போதிய அளவு இல்லை என்றே தோன்றுகிறது. பூவையர்கள் என்ன நினைக்கிறார்கள்.?)
------------------------------------------------------------------------------------------

 

11 comments:

 1. மாற்றங்கள் இருந்தாலும் போதிய அளவு இல்லை என்பதுதான்
  என் அனுபவமும் ..

  மகன்களுக்கு வரதட்சினை வேண்டாம் என்று வெற்றிகரமாக் நடைமுறைப்படுத்த முடிந்த எங்களால்

  பெண்ணுக்கு கொடுக்கமாட்டோம் என்று சொல்ல மனம் வ்ரவில்லையே..!

  ReplyDelete
 2. கண்டிப்பாக மாறி உள்ளது... சில ஊர்களில் பெண்கள் கிடைப்பது அரிதாகி விட்டது... நிலைமை தலைகீழ் ஆனாலும் வியப்படைய தேவையில்லை...

  ReplyDelete
 3. காலம் முழுமையாக மாறிவிட்டது என்று சொல்ல மாட்டேன். ஆனால் மாறிக் கொண்டு தான் இருக்கிறது.
  இன்று ஆண் பெண் விகிதாச்சாரம்
  வரதட்சனை கொடுமைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த விகிதாச்சாரப் பிரச்சினையே பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் (வரதட்சனை காரணம் ) கருக்கலைப்பு செய்ததால் வந்த வினை. நல்ல வேலை அரசாங்கம் விழித்துக் கொண்டது. குழந்தை ஆனா, பெண்ணா என்று கண்டறிந்து சொல்வது குற்றம் ஆனது. இல்லையென்றால் பெண் இனமே இந்தியாவில் பூண்டோடு அழிந்து விட்டிருக்குமோ என்னமோ?

  ஆண் பெண் விகிதாச்சாரம் திரும்பவும் மாறினால் இவரதட்சனை மீண்டும் தலை தூக்கும் அபாயம் அதிகம்.

  நீங்கள் சொல்லியிருப்பது போல் பெண் கல்வி ஒரு முக்கிய காரணம் மாற்றம் நிகழ

  ஆனால் இந்தப் பிரச்சினையின் தீர்வு பெண்கள் கையில் தான் உள்ளது.தன் பிள்ளைக்கு சீர், வரதட்சனை வாங்க மாட்டேன் என்று பெண்கள் உறுதி பூண்டால் அந்த மாற்றத்தை தடுக்க யாராலும் முடியாது.

  அப்படி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
 4. மாற்றங்கள் இன்னமும் நடுத்தர வர்க்கத்திடம் இல்லையென்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
 5. இராரா சொல்வது thought provoking.
  அஞ்சு ரூவாப் பாட்டு கேட்டதேயில்லை சார்.

  ReplyDelete
 6. இப்போ சம்பளம் அதிகமா விலைவாசி அதிகமா?

  ReplyDelete
 7. காலம் ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை

  ReplyDelete
 8. 70 களில் என்னுடைய ஒரு பிறந்த நாளுக்கு அப்பா கொடுத்த 1 ரூபாயில் இட்லி, தோசை சாப்பிட்டு, என் தங்கைக்கும் பார்சல் வாங்கி வந்த நினைவு இருக்கிறது. மிச்ச காசும்!

  வரதட்சணை நிலை இப்போது பெருமளவு மாறியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம். பெண்கள் தங்கள் காலில் நிற்கப் பழகி விட்டார்கள். சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த நீயா நானாவில் ஓவியா அவர்கள் 'பெண்கள் தங்களுக்குச் சமமாக வேலைக்குப் போவதைப் பெரும்பான்மை ஆண்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அது கூட பாலியல் வன்முறைக்கு ஒரு காரணம்' என்று சொன்னார்.

  வக்கீல் சுமதி மிகவும் படித்த, நன்றாக சம்பாதிக்கும் ஒரு பெண் தன குடிகாரக் கணவன் தன்னை அடித்து உதித்ததைப் பல வருடங்கள் பொறுத்துக் கொண்டதைப் பற்றிக் கூறினார்.

  மாற்றமும் இருக்கிறது!

  ராரா மேடம் சொல்வது அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதற்கும் பொருந்தும்!! :))

  ReplyDelete

 9. பதிவைப் படித்துக் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. காலம் தலைகீழாக மாறவில்லை என்றாலும் மாற்றத்தின் அறிகுறிகள் தெரிகிறது என்று கொள்ளலாமா...? வரதட்சிணை கொடுமை என்று பெண்கள் புகார் கொடுக்கும் அளவுக்கு தேறிவிட்டனர். (சில சமயம் பழி வாங்கவும்...!)

  ReplyDelete
 10. மாற்றங்கள் முழுதாய் வரவில்லை! இன்னும் ஐம்பது நூறு சவரன்கள் நகை போட்டு பெண் கொடுக்கிறார்கள்! படித்தவர்களிடம்தான் இது அதிகமாகவும் இருக்கிறது! நல்ல பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 11. பெண்களை படிக்க வைத்து ந்ல்ல இடத்தில் திருமணம் செய்யும் பெற்றோர்கள் வீட்டுக்கு வேண்டிய அனைத்து சாமான்களும் வாங்கி கொடுத்து மாப்பிள்ளைக்கும் கையில் கொடுப்பது இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

  மாற்றங்கள் செய்ய முன் வரும் மாப்பிள்ளைகளை பெண் வீட்டார் உடலில் ஏதாவது கோளாறு இருக்கோ அது தான் வரதட்சிணை வாங்கவில்லையோ என்று சந்தேகப் பட்டால் என்ன செய்வது என்று எனக்கு தெரிந்த மாப்பிள்ளை வீட்டார் வாங்கிய் வரதட்சணை பணத்தை பெண் பேரில் டெபாசிட் செய்து விட்டார்கள்.

  ReplyDelete