மன சாட்சி ( நாடகம்.)
--------------------
காட்சி- 6.
இடம்.:- ஷீலா வீடு.
பாத்திரங்கள்.:-ஷீலா, ரவி, கனகசபை, நவகோடி, சபாபதி,
வேலைக்காரன்.
(திரை உயரும்போது, ரவி சோர்வுடன் வீடு
திரும்புகிறான். அங்கிருந்த சோஃபாவில் சாய்கிறான். அப்போது அங்கு உற்சாகமாக ஷீலா
வருகிறாள். )
ஷீலா.:- அட.... அத்தான்..இன்னிக்கி சீக்கிரமாவே
வந்திட்டீங்களே. நான் க்ளப்புக்குப் போயிருந்தேன். என் ஃப்ரென்ட்ஸுக்கு எல்லாம்
எம்மேல ஒரே பொறாமை. பிடிச்சாலும் பிடிச்சே சரியான புளியங்கொம்பாப்
பிடிச்சிருக்கேன்னுஎல்லோரும் சொல்றாங்க. அவங்க அப்படிப்பேசும்போது எவ்வளவு
பெருமையா இருக்கு எனக்கு..ஆனா அவர்கள் உங்க அழகைப் புகழும்போது எனக்குக் கோபம்
வருது. என் கணவரைப் பற்றிப் பேச ................என்ன அத்தான்.. நான் பாட்டுக்கு
என்னவோ பேசிட்டுப் போறேன். நீங்க என்னடான்னா சுரத்தே இல்லாம
இருக்கீங்களே......உடம்புக்கு ஒண்ணும் இல்லியே... ( அவன் நெற்றியில் கை வைத்துப்
பார்க்கிறாள். அவன் சற்றே ஒதுங்குகிறான்.)தலைவலியா......? கணபதி...கணபதீ.....ஐயாவுக்கு
சூடா காஃபி கொண்டுவா... அப்படியே
வரும்போது அமிர்தாஞ்சனமும் கொண்டு வா. ..காஃபி சாப்பிடுங்க... தைலம்
தடவிநெற்றியை நீவி விடறேன். தலைவலி சிட்டாப் பறந்துபோகும். ( வேலையாள் காஃபியும்
தைலமும் கொண்டு வருகிறான். ரவி காஃபியை எடுத்து நிதானமாகப் பருகுகிறான். ஷீலா
தைலம் தடவ வருகிறாள். அவளை விலக்கி )
ரவி.:- என்ன ஷீலா இது.... என்னைத் தொந்தரவு செய்யாம கொஞ்சம்
ஃப்ரீயா இருக்கவிடு.
ஷீலா.:- நல்லாச் சொன்னீங்க.....தலைவலிக்குத் தைலம் தடவறது
தொந்தரவா....?( பிடிவாதமாகத் தேய்க்கிறாள்.)
ரவி.:- நீ இப்படி எங்கிட்ட அதீதமா அன்பு காட்டறது எனக்கு
சஞ்சலமா இருக்கு தெரியுமா.?சொன்னாலும் தெரிய மாட்டேங்குது...ஹூம்......!
ஷீலா.:- ஊருலகம் தெரியாம செஞ்சுகிட்ட கல்யாணம் குற்ற
உணர்ச்சியா மாறி மனசைக் குத்துதா.....இன்னும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக்குங்க
எல்லோருக்கும் தெரிவிக்கலாம்.நானும்தான் பார்த்துண்டே வரேன்...கலியாணம் ஆகிறதுக்கு
முந்தி இருந்த களை இப்ப வரவரக் குறைஞ்சிட்டே வருது. ஏண்டா இவளைக் கல்யாணம்
பண்ணிட்டோமேன்னு இருக்கா.......?
ரவி.:- ஆமா.....ஹாங்.... இல்லை..... வந்து.....என்ன ஷீலா
இது. எப்படிப் பேசினா எனக்கு மனக் கஷ்டமா இருக்குமோ அப்படியே பேசறியே..
...
...
ஷீலா.:- நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேங்க. உங்களுக்கு
முக்கியமா வேண்டியது ஒரு சேஞ்ஜ்....ஆமா....ஒரு மூணு மாசம் லீவு எடுத்துண்டு ஒரு
டூர். இங்கிலாந்து, அமெரிக்கா ....இப்படி ஒரு ஹனிமூன் ட்ரிப்......!ஏங்க... நம்ப
கல்யாணம் ஆனப்போ கூட கொஞ்ச நாள் லீவு எடுத்துண்டு ஜாலியா இருக்கணும்னா.....லீவு
கிடைக்கலை, வேலை ஜாஸ்தின்னும் சொன்னீங்க. இப்ப
why not make a honeymoon trip…..?
ரவி.:- என்னது..... ஹனிமூனா....ஷீலா கொஞ்ச நாளைக்காவது
........ஓ...ஓ...ஓ....
( கனகசபை ,நவகோடி, சபாபதி வருகிறார்கள் ரவி வெளியேறுகிறான்.
)
சபாபதி.:- ( முணுமுணுக்கிறான்.)நாம எப்ப வந்தாலும் இந்த ஆள்
இங்கேயே இருக்கானே.....காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் தூக்கிட்டுப்
போயிடுவானோ..?
கனகசபை.:- துப்புகெட்ட பய மகனே....பார்ரா... பார். நவகோடி
நம்ம கணக்கு எல்லாம் தப்பாயிடுமோன்னு மனசு அடிச்சுக்கிதையா.
...
...
நவகோடி.:- என்னைக்குமே தப்புக் கணக்குப் போடறதுதானே உன்
வழக்கம்.
( அறையின் ஓரத்தில் கண்ணாடியின் முன் முகப் பூச்சை சரி
பார்த்துக்கொண்டு இருக்கிறாள் ஷீலா. அவளைக் கண்ட சபாபதி அருகில் போய்.)
சபாபதி.:-ஆஹா... ஆஹா... ஷீலா இன்னிக்கி நீ எவ்வளவு அழகா
இருக்கே தெரியுமா...அப்பாவும் நவகோடிசாரும் வந்திட்டிருக்காங்க.அதுக்குள்ள உன்
அழகை உயிரெழுத்து ‘அ’ ல தொடங்கி ’ஔ’ ல முடியற மாதிரி ஒரு சின்னக் கவிதை எழுதி இருக்கேன்.
கேளே.ன்
அன்ன நடையழகி
ஆடிவந்தென் முன் நின்று
இன்பம் சேர்த்திடவே
ஈட்டியாம் கருவிழியால்
உள்ளங் கவர்ந்திடவே
ஊன்றி என்னை நோக்கி நின்றாள்.
என்னையே மறந்து விட்டேன்.
ஏந்திழையின் எழிலினிலே
ஐயம் தீர்ந்திடவே
ஒரு வார்த்தை அத்தானென்று
ஓதினால் போதுமடி.
ஔவை கண்ட பெண்ணே....!
ஷீலா.:- என்ன இது...?ரொம்பத்தான் ஓவராயிருக்கு....!
சபாபதி.:-உன்னழகுதானே........
ஷீலா.:- என் அழகை எடுத்துக்காட்ட எவ்வளவு கண்ணாடிகள்
இருக்கு தெரியுமா.......இருக்கிற அழகை உள்ளபடி காட்டும். கூட்டவோ குறைக்கவோ
செய்யாது.
சபாபதி.:- உன் கன்னமே ஒரு கண்ணாடி.அதில் தெரியற என் முகமும்
அழகாத்தான் இருக்கு. ....ஆனா... அதுல பாரு ஷீலா....எங்க வீட்லயும் ஒரு கண்ணாடி
இருக்கு. அதுல என்ன கோளாறோ தெரியல. பார்த்தா பூதம் மாதிரி தெரியுது..ரசம் பூசினவன்
கைராசி அப்படி....! ஹும்... நாம் என்ன செய்ய முடியும்...?
ஷீலா.:-சேச்சே....உன் முகராசி அப்படி. ( கனகசபை நவகோடி
வருகை.)
கனகசபை.:- ( வந்துகொண்டே.)அவங்கம்மா கூட அப்படித்தான்
சொல்லுது. சபாபதி முகராசிக்கு ஷீலா என்ன
யார் வேணும்னாலும் எங்க வீட்டுக்கு மருமகளா வரும்னு....இல்லே நவகோடி...?
நவகோடி.:- ஹாங்...... ஆமா
ஆமா..
ஷீலா.:-
அப்படீன்னா.... உனக்குக் கல்யாணம் ஆனாத்தான் சொத்துன்னு நீங்க ஏன்
சொன்னீங்கன்னு இப்ப இல்ல தெரியுது.. சபாபதிக்கு என்னைக் கல்யாணம் செய்து
கொடுத்திட்டா சொத்து பூராவும் உங்களுக்குத் தானே.
....
....
சபாபதி.:- அப்படியேதான்.......அப்படியேதான்.... எப்படி ஐடியா...?
ஷீலா.:- நவகோடி சார்.. இதுல உங்களுக்கு எவ்வளவு கமிஷன்....?
நவகோடி.:- என்னம்மா.... என்னம்மா இது...
.
.
ஷீலா.:- இது மட்டும் எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா.....
சபாபதி.:-இப்ப வந்திட்டுப் போனானே அவனை முன்னாடியே ;கட்’ பண்ணி இருப்பெ இல்லெ. அதனால என்ன
இப்ப.... மனுஷன் சொன்னா சொன்னபடி நடக்கிறதுக்கு பாண்டா..... பத்திரமா....
ப்ராமிசரி நோட்டா என்ன இருக்கு....?
ஷீலா.:- நோ...நோ... நோ..........பாண்டும் இல்ல பத்திரமும்
இல்லெ ப்ராமிசரி நோட்டும் இல்லே..... வெறும்
மேரேஜ் சர்டிஃபிகேட்டுதான்.
..
..
மூவரும்.:- என்னது.....?
ஷீலா.- எனக்கும் மிஸ்டர் ரவிக்கும் கலியாணம் ஆனதைக்
காட்டும் மேரேஜ் சர்டிஃபிகேட்டுதான்....நல்லாப் பாருங்க......பார்த்தீங்க
இல்லே....இனிமேயாவது என் சொத்தை என் கிட்ட ஒப்படைக்கிறதுக்கான ஏற்பாட்டைச்
செய்யுங்க.
.....
.....
சபாபதி.:- ஆஹா... ..! அந்த வில்லன் மட்டும் இப்ப இல்லாம
போயிட்டானே.
ஷீலா.:-இருந்தா மட்டும் அவரை என்ன செய்வியாம்....?
ஷீலா.:-இருந்தா மட்டும் அவரை என்ன செய்வியாம்....?
சபாபதி.:-என்ன செய்வேனா....? ஆமா நான் என்ன செய்யணும்.....!
ஆஆ... ஊம்.....! நான் ஒரு சீர்திருத்தவாதி. முதல்ல உன்னை விதவை ஆக்கிட்டு பிறகு
விதவா விவாஹம் செய்துப்பேன்....என்ன நவகோடிசார்.
பயப்படாதீங்க....உங்க மக நவநீதத்தைக் கைவிட மாட்டேன்
கனகசபை.:-அடச்சட்.....! கொஞ்சம் சும்மா இருடா...ஏதோ இவ
சொத்தை நாம கபளீகரம் செய்ய இருந்த மாதிரியும் ஏதோ இவளை ஒண்ணுமே தெரியாத பப்பான்னு
நெனக்கிறமாதிரியும் இல்ல பேசறா.
சபாபதி.:- அதுல என்னப்பா தப்பு. அதானே நம்ம ஒரிஜினல்
ப்ளான்.
....
....
நவகோடி.:- நீ சும்மா இருய்யா.... இந்தாம்மா.... இந்த சொத்தை
இவ்வளவு நாள் பொறுப்பா இருந்து கட்டிக் காத்ததுக்கு எங்களுக்கு இதுவும் வேணும்,
இன்னமும் வேணும்.......
ஷீலா.:- பின்ன என்னங்க.....நான் மேஜராயிட்டேன். என் சொத்தை
ஒப்படைக்க வேண்டியதுதானே....கல்யாணம் ஆகணும்னு சொன்னீங்க ...ஆனதற்கு அத்தாட்சியும்
காட்டியாச்சு. .இன்னும் உயிலக் கண்ணுல காட்டினது கூடக் கிடையாது
கனகசபை.:- காட்டாம என்ன பூட்டியா வெச்சுக்கப்
போறோம்.....இதொ படிக்கிறேன் கேளு.”பதினெட்டு வயதுக்குப்பின் ஷீலாதிருமணம் செய்து
கொண்டு,கணவனுடன் குடித்தனம் நடத்திஒரு குழந்தையையும் பெற்றுக் கொண்ட பிறகு சொத்தை
சுயாதீனம் செய்து கொள்ள வேண்டியது.” ஒப்பம் சண்முக சுந்தரம்.
...
...
சபாபதி.:- உங்க அப்பா.
....
....
ஷீலா.:- என்னது..?
கல்யாணம் செய்து கொண்டு ,குடித்தனம் நடத்திகுழந்தையும் பெற்றுக் கொண்ட
பிறகுதான் சொத்தை சுயாதீனம் செய்ய முடியும்னா சொல்றீங்க.....!
நவகோடி.:- நாங்களா சொன்னோம்......உயில்ல இருக்கே..
..
..
சபாபதி..:- அதானே... இவங்களா சொன்னாங்க.... உங்கப்பா எழுதி
வெச்ச உயில் பேசுதம்மா......உயில் பேசுது....!
கனகசபை.:- எங்களுக்கு ஏன் வீண் பொல்லாப்பெல்லாம். அவர்
உசிரை விடும்போ எழுதின உயில் இப்ப எங்க உசிரை இல்ல வாங்குது......யாரிட்டயும்
சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டே அதே மாதிரி யாருட்டயும் சொல்லாம ஒரு குழந்தையும்
பெத்துக்கிட்டு வந்துசொத்தைக் கேள்.... ஒப்படைக்கிறோம். வாய்யா.. போகலாம்...(
போகிறார்கள். அவர்கள் போனதும் ஷீலா பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்திருக்கிறாள்.
நேரம் செல்கிறதுவெயில் மறைந்து மாலை மயங்கி இரவு நேரமாகிறது. ரவி. திரும்பி
வருகிறான். ஏதும் பேசாமல் ஷூவைக் கழற்றுகிறான். .ஷீலா ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவள்
ரவியின் அருகே சென்று)
ஷீலா.:-அத்தான்.....!சரியான சிவ பூஜையில் கரடி
நுழைந்தமாதிரிஎன்னவோ நாம பேசிட்டு இருந்தப்போ வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டுப்
போயிட்டாங்க. கோபமா.....அத்தான்.....வந்து...நமக்குத் திருமணமான சமாச்சாரத்தை
அவங்ககிட்ட சொன்னேன். சொத்தெல்லாம் கிடைகக ஏற்பாடு செய்யுங்கன்னு கேட்டா இன்னுமொரு
கண்டிஷன் இருக்குங்கறாங்க. ....!அத்தான்.... எனக்கு.....வந்து..... நமக்கு ஒரு
குழந்தை வேண்டாமா.....அத்தான்...
ரவி.:-( திடுக்கிட்டு ) குழந்தையா.... எதுக்கு.....?
ஷீலா.:- என்னத்தான் இது....?எதுக்கு
குழந்தைன்னா.....குழந்தை பிறந்த பிறகுதான் சொத்துன்னு உயில்ல வேற எழுதி இருக்காம்.
....
ரவி.:-( கோபமாக ,ஆத்திரத்துடன் )ஷீலா.......கலியாணமாறதுக்கு
முந்தியே நான் கலியாணங்கறதுஒரு ஆணும் பெண்ணும் ஒருத்தர் மேல் ஒருத்தர் பிரியமா
இருக்காங்க என்கிறதை உலகத்துக்குக் காட்ட
மட்டும்தான்னு சொல்லி யிருக்கேன். இல்லையா...?உடற்பசியைத் தணிக்கிறதுக்கு ஊருலகம்
வழங்கும் லைசென்ஸ் என்னும் முறையில் இருக்கக் கூடாதுன்னு சொன்னேனா இல்லையா...?இப்பவும்
சொல்றேன் ஷீலா கேட்டுக்க. ...உனக்குக் குழந்தை வேணுங்கறதுக்காகவோ சொத்து கிடைக்கணுங்கறதுக்காகவோநான் என்
கொள்கையிலிருந்து மாறுபட விரும்பலை. மனுஷனை மிருகமாக்கும் வெறி உணர்ச்சியைத்
தூண்டற உடலுறவை நான் வெறுக்கிறேன். I HATE IT…I HATE IT….( ஷீலா
விம்முகிறாள்.)
( திரை ) ( தொடரும் ) . . .
.
யாரிட்டயும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டே அதே மாதிரி யாருட்டயும் சொல்லாம ஒரு குழந்தையும் பெத்துக்கிட்டு வந்துசொத்தைக் கேள்.... ஒப்படைக்கிறோம். ///இதுபோல் இருப்பது ஆபத்தான உதாரணம் என்று நினைக்கிறன்
பதிலளிநீக்குசில வார்த்தைகளை பொதுவில் நாடகம் போன்று நிறையப் பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் உபயோகப்படுத்த முடியாது. நாசூக்காக நினைப்பதைச் சொல்ல அதற்காகவே நிறைய வார்த்தைகள் இருக்கின்றன. நீங்களும் அந்த வழியில் முயற்சிக்கலாமே?
பதிலளிநீக்குசில வரிகள் 18+
பதிலளிநீக்குகவிதை அசத்தல் ஐயா...
பதிலளிநீக்கு@ கவியாழி கண்ணதாசன்
நாடகத்தை ஊன்றி கவனித்து வந்தீர்களானால் கதாபாத்திரங்கள் தங்களின் ஆத்திரத்தை காட்டும் வரிகளாகவே படும். உதாரணமாக எங்கும் கூறவில்லை என்பது புரியும்.
பதிலளிநீக்கு@ ஜீவி
எந்த இடத்திலும் அநாகரிகமான வார்த்தைகள் உபயோகப் படுத்தவில்லை. கதையின் கரு சற்று சிக்கலானது. கதைபோலவோ கட்டுரைபோலவோ மறுபடி படித்துப் புரிந்து கொள்ள முடியாதது. கூடியவரை நாசூக்காகத்தான் கூறி இருக்கிறேன். அதற்கு மேல் ............நாசுக்கு எது , எது இல்லை என்பதற்கு அளவுகோல் இருப்பதாகத் தெரியவில்லை. உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
கதையின் கரு சிக்கலானதுதான்
பதிலளிநீக்குரவியின் செய்கைகளும் எண்ணங்களும் சந்தேகத்துக்கிடமாகவே இதுவரை தென்படுகின்றன. அவன் ஷீலாவைத் திருமணம் செய்துகொண்டபின்னும் முறையான இல்லறவாழ்வைத் தவிர்ப்பதன் பின்னணி என்னவாக இருக்கும்? அடுத்துவரும் பகுதிகள் தெளிவுபடுத்தும் என்று எண்ணுகிறேன்.
பதிலளிநீக்கு