செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

வேதாளமும் நானும்


                                                             


வேதாள்மும் நானும்
-------------------


“ நீ விக்கிரமாதித்யன் கதைகள் படித்திருக்கிறாயா.? அதில் வரும் வேதாளம் தெரியுமா உனக்கு.?உன் கண்ணால் காணமுடியாது, ஆனால் உன்னால் உணர முடிகிறது .இல்லையா.

அதிகாலையில் எழுந்திருக்கும்போதே என் முதுகில் ஏதோ கனமாக உணர்ந்தேன், இது ஏதடா புதிய வலி என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான், காதருகே கேட்டது குரல்
.
ஆஹா..இது என்ன புதிய அனுபவம்.?பதில் கூற வேண்டுமென்றாலும் யாரிடம் கூறுவது. நான் நினைப்பதைப் புரிந்து கொண்டு மீண்டும் அந்தக் குரல்

அதே வேதாளம்தான் . நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன். முடிவில் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்

“ பதில் தெரியாமல் , சொல்லாவிட்டால்...?

“ அதை அப்போது பார்ப்போம். ஆனால் பதில் தெரிந்து சொல்லாமல் மட்டும் இருக்கக் கூடாது. பின் விளைவுகள் விபரீதமாயிருக்கும்

“ விளைவுகள் உன் கதையையும் கேள்வியையும் பொறுத்தது.என்றேன்

வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது.
“ஒரு ஊரில் ஒருவன் இருந்தான்

“ ஊரில் ஒருவன் மட்டும்தானா இருந்தான்.?
குறுக்கே பேசக் கூடாது

“ அது எப்படி.? நீதான் கடைசியில் கேள்வி கேட்பாயே. சரியாக விளங்கிக்கொள்ள வேண்டாமா.?என்றேன்
.
“அதி புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொள்ளாமல் சொல்வதைக் கேள் “ என்று சொல்லித் தொடர்ந்தது வேதாள்ம்.

“ஒரு ஊரில் ஒருவன் இருந்தானாம்.... அவனுக்குக் காது கொஞ்சம் மந்தம். சிறுவயதிலேயே அவனது குறை அறிந்து அவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அந்த மருத்துவர் காது மூக்கு, தொண்டை நிபுணரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்றார். அவனது பெற்றோரும் அவனை நிபுணரிடம் அழைத்துச் சென்றனர்.அவர் ஒரு கருவியை சிறிது தட்டி அவன் காதருகே வைத்து சப்தம் கேட்கிறதா என்று கேட்டார். இவன் சற்று நேரம் யோசித்துவிட்டு  சப்தம் அடுத்த காதில் கேட்கிறது என்றான் டாக்டர் அதே கருவியைத் தட்டி மறு காதருகே வைத்து ‘சப்தம் கேட்கிறதாஎன்றார். இவனோ மறு காதில் கேட்கிறதுஎன்றான். டாக்டருக்குக் குழப்பமாகிவிட்டது. அவர் அதே பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்ய , இவனும் கருவி இருக்கும் காதுக்கு மறு பக்கம் உள்ள காதில் கேட்கிறது என்றே சொல்லிக் கொண்டு வந்தான். டாக்டருக்கு கோபம் வந்து விட்டது. இவனது பெற்றோர்களிடம் ‘இவனை முதலில் ஒரு மனோ வைத்தியரிடம் அழைத்துச் செல்லுங்கள்என்றார்.இவனிடம் இந்தக் காதில் ஒலிக்கும் ஒலி எப்படி மறுகாதில் கேட்கிறது என்றாய் என்று கேட்டபோது அது அப்படித்தானே. இந்தக் காதில் வைத்தால் அதே காதில் எப்படி ஒலிக்கும் ‘என்று தர்க்கம்செய்தானாம்

இப்படியாக இவன் காதின் குறைபாடு குறையாமலேயே வளர்ந்து வந்தான். பள்ளியில் படிக்கப் போனால் அங்கு ஆசிரியர் சொல்வது ஏதும் கேட்காது. கண் இமைக்காமல் அவரது உதடுகளையே பார்த்துக் கொண்டிருப்பான். அவர் இன்னதுதான் சொல்லி இருப்பார் என்று இவனாகவே கற்பனை செய்து கொள்வான். தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களையே பெற்று வந்து பெற்றோரிடம் அடி வாங்குவான்..புத்தி வளரவில்லை என்றாலும் உடல் வளர்ந்தது.பதினைந்து பதினாறு வயதிலேயே நன்றாக வளர்ந்திருந்தான். ஒரு முறை கட்டிடம் கட்டும் இடத்தில் சித்தாள்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் என்ற புகார் வந்தது. இவனை அவர்களிடம் அடி வாங்காமல் மீட்டு வருவதற்குள் போடும் போதும் என்றாகி விட்டது

மாற்றுத் திறனாளி ( handicapped)  என்ற தகுதியில் ITI  பயிற்சி பெற்றான். சில நாட்களில் எப்படியோ அரசின் கழிவு நீர் வாரியத்தில் ஒரு வேலையும் கிடைத்தது. பிறகென்ன. ? திருமணமும் நடந்தது. பெண்ணும் ஏதோ கார்மெண்ட் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றாள். நல்ல வேளை. இவனுக்குக் குழந்தைகள் ஏதும் பிறக்கவில்லை. இவனுக்கு யாரைப் பார்த்தாலும் அவர்கள் தன்னைப் பற்றியே பேசுகிறார்கள் என்னும் நினைப்பு வரும். இது இப்படியே தொடர்ந்து இவனுக்கு வயது 50-ம் நிறைந்து விட்டது.
இவனுடைய எண்ணங்கள் யாருடனும் பகிர முடியாது. ஒரு வித தனி உலகில் வாழ ஆரம்பித்தான். வேலைக்குச் செல்லவும் பிடிக்கவில்லை. இருந்தாலும் பணத்தேவையால் போகாமலும் இருக்க முடியவில்லை. திடீரென்று ஒரு ஞானோதயம் இவனுக்கா இல்லை இவன் மனைவிக்கா தெரியவில்லை. வேலைக்கே போகாமல் பாதி சம்பளம் கிடைக்கும் வழி கண்டு பிடித்தார்கள்.. இவன் வேலைக்குப் போவதுபோல் போய் கையெழுத்துப் போட்டு வருவான். இவனது வேலைகளை இன்னொருவன் செய்து முடிப்பான். அவனுக்கு இவன் பாதி சம்பளம் கொடுப்பான். இன்னும் வயதான பிறகு பென்ஷன் முழுவதும் இவனுக்குத்தானே.

இப்போது கதையின் முக்கிய பகுதிக்கு வருகிறேன். இவன் மனசில் என்ன என்னவோ எண்ணங்கள் ஓடும். அழகான பெண்களைப் பார்த்தால் மனம் தறிகெட்டு ஓடும் ஆனல் எதையும் செய்ய பயம் இடம் கொடுக்காது. வக்கிர எண்ணங்களுக்கு வடிகால் தேட ஒரு வழி கண்டு பிடித்தான். நெருங்கிய
உறவில் இருந்த ஒரு பெண்ணின் தொலைபேசி எண் கிடைத்தது. பப்ளிக் டெலிபோன் பூத்திலிருந்து அவள் எண்ணுக்கு ஃபோன் செய்வான். எடுத்ததும் கீழ்த்தரமான கொச்சை ஆசைகளை வெளிப்படுத்துவான், பாவம் அந்தப் பெண்பரிதவித்துப் போகும்மெல்லவும் முடியாமல் சொல்லவும் கூச்சப் பட்டு உழன்றது அந்தப் பெண். பொது தொலை பேசி இடங்களில் இருந்தௌ கால் வந்ததால் ஆளைப் பிடிப்பது கஷ்டமாயிருந்தது. ஒருமுறை இந்த மாதிரி தொடர்பு வந்தபோது அவள் போனை அருகில் இருந்த அவள் உறவினரிடம் கொடுத்தாள். நாராசமான கொச்சை வார்த்தைகளின் ஊடே அவனது குரல் மூலம் இன்னாரோ என்ற சந்தேகம் வந்தது.. காவல் துறைக்குச் சொல்லி அசிங்கப்படுவதை விட இதை வேறு மாதிரி கையாளலாம் என்று எண்ணினர். சந்தேகம் ஏற்பட்ட பிறகு ஓரிரு முறை டெலிபோன் வந்ததும் மாறி மாறி உறவினர்கள் கேட்டு குரலை ஊர்ஜிதம் செய்து கொண்டனர்.

இவன் வீட்டுக்கு ஒரு நண்பனை மஃப்டி போலிஸ் என்று சொல்லச் சொல்லி அனுப்பினர். போனவன் ஆஜானுபாகு. போலீசை விட போலீஸ் மாதிரி நடித்து  அவன் வீட்டுக்குச் சென்று “ இந்த மாதிரி செய்வது நீதான் என்று காவல் துறைக்குப் புகார் வந்திருக்கிறது. உன்னை கட்டி இழுத்துப் போய் முட்டிக்கு முட்டி தட்டவா?என்று பயமுறுத்தவே அவன் மிரண்டு போய்  தவறை ஒப்புக் கொண்டான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் உத்தரவாதம் அளித்ததன் பேரில் அவனை தற்சமயம் மன்னிப்பதாகக் கூறி இனி இது தொடர்ந்தால் காவல்தான் தண்டனைதான் என்று மிரட்டி விட்டு வந்தார்.

சரி. கதையை நன்றாகக் கேட்டாயா.? இதோ என் கேள்வி.இவன் இம்மாதிரி நடந்து கொள்ளக் காரணங்கள் என்ன.?பதில் தெரிந்தும் சொல்லாமல் இருந்தால் ......

விளைவு என்ன. ? என்று கேட்டு . “ எதையும் யூகிக்க விரும்பவில்லை. என் பதிவில் எழுதுகிறேன். வாசிப்பவர்கள் என்னைவிட புத்திசாலிகள். அவர்களிடமிருந்து சரியான பதில்கள் வரும். அதுவரைப் பொறுத்துக்கொள் “ என்றேன்.

வேதாளம் எனக்கு இரண்டு நாள் சிறிது அவகாசம் கொடுத்திருக்கிறது. உங்கள் பதில் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.பதில் சொல்லாவிட்டால்...........? வேதாளம் என் முதுகில் இருந்து இறங்க பதில் சொல்லுங்களேன் ......! எனக்குக் கஷ்டம் என்றால் நீங்கள் தாங்கிக் கொள்வீர்களா.?.
---------------------------------------------------------     
 


ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

இவனும் அவனும் ஏதும் தெரியாதவரா.. எல்லாமறிந்தவரா

  
இவன் பேரன்


 
இவன் மகன்
                                                                                                   

        இவனும் அவனும் ஏதும் தெரியாதவரா எல்லாம் அறிந்தவரா.....
        --------------------------------------------------------------------------


ப. பிரகாஷ் என்பவர்  முதன் முதலாக என் கடைசிப் பதிவுக்கு வருகை தந்து பின்னூட்டமிட்டிருக்கிறார். அவரைப் பற்றி அறிய “ முகம் எனும் அவரது வலைத் தளத்துக்குச் சென்றேன்.அவரது கடந்த மூன்று பதிவுகளும் குழந்தைகள் பற்றியும் அவர்களது சில செயல்கள் குறித்தும் இருந்தது.

ஒரே ஊரில் இருந்தும் தவிர்க்க முடியாத காரணங்களால் என் பேரன் வருகை தந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டது. பிரகாஷின் பதிவுகள் என்னை என் பேரனையும் நினைக்க வைத்தது. ஏற்கனவே அவனைப் பற்றி எழுதி இருக்கிறேன்.



இப்போதும் அவனை நினைக்க வைக்கும் சில நிகழ்வுகள்.மூன்று வருடங்களுக்கு முன் (அவனுக்கு ஐந்து வயது). ஒரு முறை அவனை அழைத்துக் கொண்டு என் மனைவி அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்றாள். போகும் வழியில் ஒரு கோழிக்கடை இருக்கிறது. அதைப் பார்த்ததும் இவன் “ ஹை...! பாட்டி... சிக்கன் கடை. ! எனக்கு சிக்கன் வாங்கி  பிரியாணி  சமைத்துப் போடு “ என்றான். என் மனைவி என்னிடம் இப்போது காசு இல்லை. பிறகு பார்க்கலாம் “என்று கூறிவிட்டாள் இவனும் அடம் பிடிக்காமல் சமர்த்தாகக் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டான். அர்ச்சகர் தட்டில் என் மனைவி காசு போடுவதைப் பார்த்த என் பேரன், “ காசு வைத்துக் கொண்டே ஏன் இல்லை என்று சொன்னாய் பாட்டி “ என்று அவளை ஒரு பிடி பிடித்துவிட்டான். இவர்கள் என் வீட்டுக்கு வந்ததும் என் மனைவியின் தம்பி வந்திருந்தான். அவனிடம் என் பேரன் முறையிட்டான். என் மச்சினன் அவனை சமாதானப் படுத்தி “ நான் சிக்கன் வாங்கி உனக்கு சமைத்துத் தருகிறேன் “ என்றான். சொன்னபடியே அவனுடன் கடைக்குச் சென்று சிக்கன் வாங்கி வந்து பிரியாணியும் செய்து கொடுத்தான்.  அதை உண்ட பிறகு என் பேரன் சொன்ன வார்த்தைகள் என் மனதில் இன்னும் ரீங்கரித்துக் கொண்டு இருக்கிறதுஹைய்யா. நௌ மை டம்மி இஸ் ஹாப்பி

இந்த நினைவுகளைத் தொடர்ந்து இன்னுமொரு நிகழ்வும் மனசில் தோன்றுகிறது. இது என் மூத்த மகனுக்கு மூன்று வயதாய் இருக்கும்போது நடந்தது.அப்போது  திருச்சியில் பி.எச்.இ.எல் குடியிருப்பில் இருந்தோம்.அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. உணவு அருந்தி நான் மதியம் உறங்கிக் கொண்டிருந்தேன். ஓடி விளையாடி கொண்டிருந்த என் மகன் ஒரு ஸ்டீல் டேபிளின் ஓரத்தில் தலை மோதிக் காயம் ஏற்பட்டது. என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று என் மச்சினன் ( எங்களுடன் தங்கிப் படித்துக் கொண்டிருந்தவன் )பி.எச்இ.எல் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று டாக்டரிடம் காண்பித்திருக்கிறான். அவர்கள் குழந்தையைக் கண்காணிப்பில் வைத்திருக்கச் சொல்லி அவன் வாந்தி எடுத்தால் உடனே கூட்டி வரச் சொல்லி அனுப்பினார்கள்.
நான் உறக்கம் விழித்தவுடன் நடந்ததைச் சொன்னார்கள். நான் அப்போது அதிகம் கவலைப் படவில்லை. மாலை சுமார் ஆறு மணிக்கு என் மகன் சிறிது வாந்தி எடுத்தான். டாக்டர்கள் ஏதோ மருந்து கொடுத்திருக்கிறார்கள், அதனால் வாந்தி வரலாம் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள், என்று நினைத்துக் கொண்டு நானே மருத்துவ மனைக்குச் சென்றேன். சிரித்துக் கொண்டே “ டாக்டர், நீங்கள் எதிர்பார்த்தபடியே இவன் வாந்தி எடுத்திருக்கிறான்என்றேன் டாக்டர் என்னைக் கடுமையாகப் பார்த்து “IT IS NO LAUGHING MATTER. IT IS SERIOUS “ என்றார்.எனக்குக் கையும் ஒட்டவில்லை காலும் ஓடவில்லை. அதிர்ந்து போய்விட்டேன். அப்போதே அவனை மருத்துவ மனையில் அட்மிட் செய்தார்கள். 24 மணி நேரம் அப்செர்வேஷனில் இருக்க வேண்டும் என்றார்கள். என் மனைவிக்குத் தகவல் அனுப்பி நான் என் மகன் கூடவே இருந்தேன். இரவு முழுவதும் அவனையே பார்த்துக் கொண்டு கண்மூடாமல் விழித்துக் கொண்டிருந்தேன். நடு இரவில் என் மகன் கண்விழித்து என்னைப் பார்த்து.சாரி அப்பா... என்னால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்என்றான். மூன்றே வயதான அக்குழந்தை அதைச் சொன்னபோது மனசு மிகவும் கனத்துப் போய் விட்டது.

எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன. குழந்தைகள் பற்றிய பிரகாஷின் பதிவு என் நினைவலைகளை இயக்கிவிட்டது.
       



     
         
 

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

நானும் என் ஆரம்பகாலப் பதிவுகளும்


                               என் பதிவுகளும் வரவேற்பும்
                                --------------------------------------



திரு. தமிழ் இளங்கோ அவர்கள் முதல் பதிவின் சந்தோஷம் எனும் தலைப்பில் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். ஏற்கனவே என் கணினி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இப்போது முதல் பதிவின் சந்தோஷம் என்று எழுதுவதைவிட என் பதிவுகளும் வரவேற்பும் என்ற தலைப்பில் எழுதுகிறேன்


எழுதுவது என்பது என்னைப் பொறுத்தவரை வெறும் பொழுதைப் போக்குவதற்கு மட்டுமல்ல. என்னை மனசளவில் மிகவும் பாதிக்கும் ஒரு விஷயம் நம் மக்களிடையே நிலவும் ஏற்ற தாழ்வுகள்தான். எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும் இது குறித்து எவ்வளவு தீவிரமாகச் சிந்திக்கிறார்களென்பது புரியாத ஒன்று.. நான் எழுதுவதன் மூலம் என் எண்ணங்களைப் பதிவிடுவதன் மூலம் அது குறித்த பிறரின் சிந்தனைகளை அறியவும்., முடிந்தால் ஒரு ஆரோக்கியமான சர்ச்சைக்கு வழிவகுக்கவும் உதவும் என்று எண்ணினேன்.என் பதிவுகளை வெறுமே பிறர் பாராட்ட வேண்டும் என்று மட்டும் நினைத்ததில்லை.அவர்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிடவும், அதை எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் ஏற்கவும் தயாராயிருந்தேன்.. ஆனால் என் அனுபவத்தில் பதிவுகளை வாசிப்பவர்கள் மிகவும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். மாறுபட்டக் கருத்துக்களைக் கூறத் தயங்குகிறார்கள்.அதுவே கூறப்பட்ட கருத்துக்களுடன் உடன் படுகிறார்கள் என்று புரிதலும் தவறு. ஒவ்வாத கருத்துக்களைக் கண்டால் அதனைத் தாண்டி கருத்தெதுவும் சொல்லாமல் போகிறார்களென்பதே நிதர்சனம் எழுதும் பொருளுக்கு ஏற்றபடி கருத்துக்கள் இடப்படுவதில்லையே எனும் ஆதங்கம் எனக்குண்டு.அதை சில நேரங்களில் பகிர்ந்தும் இருக்கிறேன் .இதுவே பின்னூட்டங்களுக்கு நான் ஏங்குகிறேன் என்ற ஒரு தவறான கருத்துக்கும் வழி வகுத்து இருக்கிறது


ஆகஸ்ட் மாதம் 2010-ம் ஆண்டு எழுத ஆரம்பித்தேன். மூன்றாண்டுகாலம் ஆகிறது. 380 பதிவுகளுக்கு மேல் எழுதிவிட்டேன். ஆரம்பத்தில் ஓரிரு பதிவுகள் ஆங்கிலத்தில் எழுதினேன். தமிழ் மணத்திலிருந்து தமிழில் எழுத வேண்டினார்கள்.MUSINGS எனும் பதிவு எழுதினேன். பதிவுலகில் சற்றும் அறியப்படாதவன். இருந்தும் ஏறத்தாழ 70 பேர் படித்திருந்தனர். ஒருவராவது கருத்துப் பதிவு செய்யவில்லை அதன் பின் போராட்டங்கள் ஒரு கண்ணோட்டம் என்று தமிழில் எழுதினேன். அதுவும் சுமார் நூறு பேர்களால் வாசிக்கப் பட்டது. அதற்கும் யாரும் கருத்துப்பதிவு செய்யவில்லை. போகட்டும் நமது குணாதிசயத்தைப் பற்றி எழுதுவோம் என்று மறதி போற்றுவோம் என்று எழுதினேன். இதற்கும் எந்தக் கருத்தும் பதிவாகவில்லை. அதன் பின் வலைப்பூவில் பதிவுகள் ஒரு விமரிசனம் என்று எழுதி இருந்தேன்.அதற்கு சில கருத்துக்கள் கிடைத்தன. திரு காளிதாஸ் ( இவர் இப்போது முகநூல் பக்கம் போய்விட்டார்) திரு அப்பாதுரை. திரு சுந்தர்ஜி போன்றோரின் பின்னூட்டங்கள் சற்றே தெம்பைக் கொடுத்தது.
அதுவரை அந்தக் காலத்தில் எழுதிய சில காதல் கவிதைகளையும் இடுகையாக இட்டுக்கொண்டிருந்தேன். ஒரு மாறுதல் தோன்றி செய்யாத குற்றம் என்ற ஒரு பதிவு எழுதினேன். . உண்மையைச் சொன்னால் அந்தப் பதிவுக்கு கிடைத்த பின்னூட்டங்கள் நான் எழுதுவதை வாசித்து ரசிக்கவும் பதிவர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணம் எனக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது.அந்தக் காலத்தில் வாசிக்காதவர்கள் இப்போது வாசித்தால் எந்த மாதிரிப் பின்னூட்டங்கள் வரும் என்று அறிய, அதையே ஒரு பதிவின் லிங்க்காகக் கொடுத்திருந்தேன். பல பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது அது.
அதற்கு அடுத்த பதிவாக என் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இயலாமை என்று ஒரு பதிவு எழுதினேன். அது குறித்த விமரிசனமாக பிற்காலத்தில் ஒரு பின்னூட்டம் வந்ததைக் குறிப்பிடலாம்
எழுத் எழுத வாசகர் வட்டம் சற்றே அதிகரிக்க பின்னூட்டங்களும் வர ஆரம்பித்தன. RANDOM THOUGHTS IN EIGHT HOURS  என்ற ஆங்கிலப் பதிவை தமிழாக்கி எண்ணத் தறியில் எட்டு மணி நேரம் என்று எழுதினேன்.

பின் என்ன ? சாதாரணன் ராமாயணம் என்னும் பதிவில் ஆறு காண்ட ராமாயணத்தை ஒரே வாக்கியத்தில் ஒரு அசாத்திய உந்துதலோடு எழுதினேன். பலரது பாராட்டுக்களைப் பெற்ற அதை நானா எழுதினேன் என்று சிலரைக் கேட்கவும் வைத்தது. இப்போது அதைப் படித்துப்பார்க்கும்போது எனக்கே அந்த சந்தேகமெழுகிறது....!இந்த நேரத்தில் ஆரம்ப காலத்தில் எனக்கு உற்சாகமும் ஊக்கமும் கொடுத்து எழுத வைத்தவர்களில் முக்கியமானவர்கள் சிலரைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். திரு. ஹரணி, திரு சுந்தர்ஜி, திருமதி.சக்தி பிரபா, டாக்டர் பழனி கந்தசாமி . அப்பாதுரை திரு ஜீவி ஆகியோருக்கு நிச்சயம் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். அண்மைக் காலமாக திரு, திண்டுக்கல் தனபாலனை குறிப்பிட வேண்டும். எங்கோ ஓய்வு பெற்று இருக்கும் எனக்கு இப்போது உலகளாவிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணமே ஒரு ஊக்கமளிக்கும் டானிக் .!  

( சில பழைய பதிவுகளின் லிங்க் கொடுத்திருக்கிறேன்.படித்துப் பார்க்கலாமே. MUSINGS, மறதி போற்றுவோம், இயலாமை, எண்ணத் தறியில் எட்டுமணிநேரம் )    .     
       




     
         
 

 


 




திங்கள், 5 ஆகஸ்ட், 2013

நினைவுகள் எண்ணங்கள் ஒரு ஆய்வு.?




நினைவுகள் எண்ணங்கள் ஒரு ஆய்வு?
--------------------------------------


நினைவுகள் சுவையானவை ஏனென்றால்
அவை நடந்து முடிந்தவற்றின் எச்சங்கள்
நல்லன அசைபோடலாம்
அல்லன எழும் முன்னே போக்கலாம்
நினைவுகள் நம் கட்டுப் பாட்டில் இருப்பவை..

எண்ணத்  தறியில்  எழில்  நினைவுப் பின்னிப்
பிணைந்திழையோட  இழையோட
கன்னக்குழியில்   வண்ணக்குமிழ்  கொப்பளிக்க
பைந்தமிழ்   மொழிபேசி   மொழிபேசி
மின்னலிடையில்   மனந்திளைத்த  எனைப்
புன்னகை    ஒளிவீசி   ஒளிவீசி
இன்னலிடை  யின்றவள்   மீட்டாள்
காதல்   பண்பாடி  பண்பாடி  |




   
கொஞ்சும்  விழிகள்  வேல்போல்  தாக்க
எஞ்சிய  உறுதியும்  காற்றில்  பறக்க
தஞ்சமேனப்புகு   என  மனமும்  நினைக்க
மிஞ்சியதென்னில்  அவள்  திருஉருவம்  |


அன்ன நடையழகி ஆடிஎன்முன்  நிற்க
பின்னிய  கருங்குழல்  அவள்   முன்னாட
என்ன  நினைததனோ  அறியேன்   அறிவேன்
பின்னர்  நிகழ்ந்தது   அதனைக்  கூறுவன்  கேளீர்  |


இருமன   மொன்றாய்  இணைய _அதனால்
இறுகிப் பதித்த   இதழ்கள்  கரும்பினுமினிக்க
இன்சுவை  உணர   ஊறி  கிடந்தேன்
இறுதியில்  உணர்ந்தேன்  கனவெனக்  கண்டது


கண்ட  கனவு  நனவாக  இன்று
காரிகையே   அழைக்கின்றேன் ; அன்புக்
கயிற்றால்   பிணைக்கின்றேன்கண்ணே
கட்டும்  பிணைப்பும்  பிரியாது  உறுதி  |     



என்றோ எழுதியது நினைவில்
ஆடுகையில் அனுபவிப்பது சுகமே

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்

சொல்லிப் போனான் பாரதி  

அவனுக்கென்ன சொல்லிவிட்டான்
நல்லவே எண்ணல் வேண்டும்
ஒரு வேளை அவனுக்குத் தெரியவில்லையோ
எண்ணங்கள் கட்டுக்குள் அடங்காதவை
எது எண்ணக் கூடாதோ அதுவே முன்னே சதிராடும்
மருந்து அருந்துகையில் குரங்கின் எண்ணம்
வரக்கூடாது என்றாலும் அதுதானே முன் நிற்கும்


எண்ணம், சொல், செயல்களெல்லாம் ஒன்றுக்கொன்று
இணைந்துள்ள தன்மையதைக் காணும்போது
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும்
இன்பதுன்பம், விருப்பு வெறுப்பு, உயர்வு தாழ்வு,
எண்ணத்தின் நாடகமே;பிரபஞ்சத்தின்
ரகசியங்கள் அனைத்துக்கும் ஈதே பெட்டி;
எண்ணமே இல்லையெனில் ஏதுமில்லை
எண்ணத்துக்கப்பாலும் ஒன்றுமில்லை

மனவளக் கலை போதிக்கும் வேதாத்திரியார் வாக்கு


பிறந்தவன் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்
எண்ணத்தில் வாராமலேயே அது நிகழ்தல் வேண்டும்
உற்றவரின் இழப்பு நமக்கும் அதுதானே விதி
என்று எண்ண வைத்தாலும் அது எப்போதென்று
எண்ணாமல் இருக்க முடியவில்லை.
மூப்பினால் ஏற்படும் விளைவோ  என்னவோ
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும் என்பவர்
அதைக் கட்டுக்குள் வைக்க என்னென்னவோ சொல்கிறார்
நமக்கது இப்போது தோதாகும் என்று தோன்றவில்லை


நினைவுகள் அதுவும் சுகமான நினைவுகள் கொண்டு
வேண்டா எண்ணங்களைத் துரத்த முயல்கிறேன்
எத்தனையோ போராட்டங்கள் பார்த்தாயிற்று நான்
வெல்லவில்லையா.?நானில்லாவிடினும் ஏதும் மாறாது
எதுவும் கடந்து போகும், இதுவும் கடந்து போகும்.

( பதிவிட தலைப்பு ஏதும் சிக்கவில்லை. நினைவுகளும் , எண்ணங்களும் எழுத வைத்து விட்டன.)    .     
       
.

 



 





 

 




சனி, 3 ஆகஸ்ட், 2013

ஒரு இழப்பும், சில அதிர்வுகளும்





ஒரு இழப்பும் சில அதிர்வுகளும்.
--------------------------------

“ நானு இவங்கப்பாவக் கல்யாணம் கட்டி வந்த போது எனுக்குப் பதினாலு வயசு. வாழ்க்கைல எல்லாத்தையும் பாத்தாச்சும்மா.ஹூம்”- வயதானவர்கள்  சுபாவப்படி, அடிக்கடி பழைய நினைவுகளில் மூழ்கி விடுவார்.பொறுமை இருந்தால் பல சுவாரசியமான செய்திகளைக் கேட்கலாம்.இப்போதுதான் ஒரு இடத்தில் எங்கும் போகாமல் நினைவுகளிலேயே காலங்கழிக்கிறார், காலில் சக்கரம் கட்டாத குறைதான். ‘ உம்என்று நினைப்பதற்குமுன் அங்கே ஆஜராகிவிடுவார். இப்படித்தான் ஒரு முறை மகளுக்கு திடீரென்று அப்பெண்டிக்ஸ் ஆப்பரேஷன் என்று இரவு செய்தி கிடைத்தவுடன் இரவோடிரவாக பஸ்ஸைப் பிடித்து அதிகாலையிலேயே அங்கு போய் விட்டார். அவருடைய வரவே பாதி கவலையை போக்கிவிட்டது.

தன் சிறுவயதில் தங்களுக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தார் தற்சமயம் கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு ஊருக்குப் போய் துணிமணிகளுடன்  பணமும் கொடுத்து உதவியதோடு நில்லாமல் , சிறு வயதில் உதவியதைக் கூறி நன்றியும் தெரிவித்திருக்கிறார். அவர்கள் இருந்த இடத்தில் அவர்களை அறியாதோரே இல்லை எனலாம். வாழ்க்கையை முழுவதும் வாழ்ந்து அனுபவித்த அவர் சிரித்துக் கொண்டே உயிர் விட்டது மறக்க முடியாதது.

காலையில் பாத் ரூமுக்குப் போக எழுந்தவர் ( பிறர் உதவி இல்லாமல் எழுவது கடினம் ) சற்றே நிலை தவறி சாய்ந்திருக்கிறார். சாய்ந்தவர் தலையில் சிறிது காயம் ஏற்பட்டு இரத்தம் வழியவே அடுத்து இருந்த மருத்துவர் ( லேடி டாக்டர் ) வரவழைக்கப் பட்டார். அவர் வந்து காயத்துக்குக் கட்டுப் போட்டு ஒரு இஞ்செக்‌ஷனும் போட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் தலைக் காயத்தைக் காண்பிக்கச் சொன்னார். இது நேர்ந்ததும் மூத்தமகன் அன்று காலையில் ரயிலில் வர இருந்தவனுக்கு செய்தி போயிற்று. தொலைபேசியில் பிரச்சனை ஏதும் இல்லை, வீட்டுக்குப் போய் நிதானமாக வந்தால் போதும் என்றிருக்கிறார். இரண்டாம் மகனிடமும் சிறிய காயம்தான் கவலை வேண்டாம் என்றிருக்கிறார். ரயில் தாமதமானாலும் மூத்தமகன் வந்தபோது சிரித்துக் கொண்டே , ‘எனக்கேதும் இல்லை கவலை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். பேசிக் கொண்டே இருந்தவர் “ என்னவோ செய்கிறது என்று சொல்லவும் மகன் அவரைத் தன் காரில் எடுத்துக் கொண்டு மருத்துவ மனைக்குப் போயிருக்கிறார். அவரை பரிசோதித்த டாக்டர் தன் குறிப்பில் brought dead என்று குறிப்பிட்டு கூடவே head injury என்று எழுதி ஒரு கேள்விக்குறியும் இட்டிருக்கிறார்,இந்தப் பதிவே அதிலிருந்துதான் தொடங்குகிறது.

உடலை வீட்டுக்குக் கொண்டுவந்து ஆக வேண்டிய காரியங்களைக் கவனிக்கலாமென்றால், உடலைப் பெற காவல்துறை அனுமதி வேண்டும் என்றார்கள். காவல்துறையினரோ தலையில் காயம் என்பதால் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உடலைப் பெறலாம் என்றார்கள். 85 வயது நிரம்பியவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தவர்களை பிரேதப் அரிசோதனைக்கு உட்படுத்தல் நியாயமில்லை என்று எவ்வளவோ வாதாடியும் அவர்கள் தலையில் காயம் என்பது சந்தேகத்துக்குரியது. என்று கூறி உடலைத் தர மறுத்துவிட்டார்கள். பின் என்ன.? காவல்துறையினருக்குக் கப்பம் மருத்துவரை கவனிக்க என்றுஅவரவர் கையில் பணம் வைத்து சமாளித்து பிரேதப் பரிசோதனை செய்ததாக மருத்துவச் சான்று வாங்கி உடலை சேதமில்லாமல் பெறுவதற்குள் மாலை மணி ஆறாகிவிட்டது. அந்திமக் கிரியைகள் அடுத்த நாள்தான் சாத்தியமாயிற்று.. இந்த நிலைமை வசதியற்ற ஏழைகளுக்கு நேர்ந்திருந்தால்..? ஒருவரது இழப்பிலும் பணம் பார்க்க நினைக்கும் காவல்துறையினருக்கும் மருத்துவருக்கும் மனசாட்சியே கிடையாதா.?பணத்தின் முன் சட்டம் வளைந்து கொடுப்பதை இம்மாதிரி நிகழ்ச்சிகள் மூலம்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா.?

மனம் கனக்கிறது. பொறுக்க முடியாமல் இதை எழுதுகிறேன். உற்றவரின் இழப்பு ஒரு புறம் என்றால் அதன் அதிர்வுகள் வேறு வகையில். நாம் எங்கே போகிறோம்.?
       


   "