Sunday, August 11, 2013

இவனும் அவனும் ஏதும் தெரியாதவரா.. எல்லாமறிந்தவரா

  
இவன் பேரன்


 
இவன் மகன்
                                                                                                   

        இவனும் அவனும் ஏதும் தெரியாதவரா எல்லாம் அறிந்தவரா.....
        --------------------------------------------------------------------------


ப. பிரகாஷ் என்பவர்  முதன் முதலாக என் கடைசிப் பதிவுக்கு வருகை தந்து பின்னூட்டமிட்டிருக்கிறார். அவரைப் பற்றி அறிய “ முகம் எனும் அவரது வலைத் தளத்துக்குச் சென்றேன்.அவரது கடந்த மூன்று பதிவுகளும் குழந்தைகள் பற்றியும் அவர்களது சில செயல்கள் குறித்தும் இருந்தது.

ஒரே ஊரில் இருந்தும் தவிர்க்க முடியாத காரணங்களால் என் பேரன் வருகை தந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டது. பிரகாஷின் பதிவுகள் என்னை என் பேரனையும் நினைக்க வைத்தது. ஏற்கனவே அவனைப் பற்றி எழுதி இருக்கிறேன்.இப்போதும் அவனை நினைக்க வைக்கும் சில நிகழ்வுகள்.மூன்று வருடங்களுக்கு முன் (அவனுக்கு ஐந்து வயது). ஒரு முறை அவனை அழைத்துக் கொண்டு என் மனைவி அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்றாள். போகும் வழியில் ஒரு கோழிக்கடை இருக்கிறது. அதைப் பார்த்ததும் இவன் “ ஹை...! பாட்டி... சிக்கன் கடை. ! எனக்கு சிக்கன் வாங்கி  பிரியாணி  சமைத்துப் போடு “ என்றான். என் மனைவி என்னிடம் இப்போது காசு இல்லை. பிறகு பார்க்கலாம் “என்று கூறிவிட்டாள் இவனும் அடம் பிடிக்காமல் சமர்த்தாகக் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டான். அர்ச்சகர் தட்டில் என் மனைவி காசு போடுவதைப் பார்த்த என் பேரன், “ காசு வைத்துக் கொண்டே ஏன் இல்லை என்று சொன்னாய் பாட்டி “ என்று அவளை ஒரு பிடி பிடித்துவிட்டான். இவர்கள் என் வீட்டுக்கு வந்ததும் என் மனைவியின் தம்பி வந்திருந்தான். அவனிடம் என் பேரன் முறையிட்டான். என் மச்சினன் அவனை சமாதானப் படுத்தி “ நான் சிக்கன் வாங்கி உனக்கு சமைத்துத் தருகிறேன் “ என்றான். சொன்னபடியே அவனுடன் கடைக்குச் சென்று சிக்கன் வாங்கி வந்து பிரியாணியும் செய்து கொடுத்தான்.  அதை உண்ட பிறகு என் பேரன் சொன்ன வார்த்தைகள் என் மனதில் இன்னும் ரீங்கரித்துக் கொண்டு இருக்கிறதுஹைய்யா. நௌ மை டம்மி இஸ் ஹாப்பி

இந்த நினைவுகளைத் தொடர்ந்து இன்னுமொரு நிகழ்வும் மனசில் தோன்றுகிறது. இது என் மூத்த மகனுக்கு மூன்று வயதாய் இருக்கும்போது நடந்தது.அப்போது  திருச்சியில் பி.எச்.இ.எல் குடியிருப்பில் இருந்தோம்.அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. உணவு அருந்தி நான் மதியம் உறங்கிக் கொண்டிருந்தேன். ஓடி விளையாடி கொண்டிருந்த என் மகன் ஒரு ஸ்டீல் டேபிளின் ஓரத்தில் தலை மோதிக் காயம் ஏற்பட்டது. என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று என் மச்சினன் ( எங்களுடன் தங்கிப் படித்துக் கொண்டிருந்தவன் )பி.எச்இ.எல் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று டாக்டரிடம் காண்பித்திருக்கிறான். அவர்கள் குழந்தையைக் கண்காணிப்பில் வைத்திருக்கச் சொல்லி அவன் வாந்தி எடுத்தால் உடனே கூட்டி வரச் சொல்லி அனுப்பினார்கள்.
நான் உறக்கம் விழித்தவுடன் நடந்ததைச் சொன்னார்கள். நான் அப்போது அதிகம் கவலைப் படவில்லை. மாலை சுமார் ஆறு மணிக்கு என் மகன் சிறிது வாந்தி எடுத்தான். டாக்டர்கள் ஏதோ மருந்து கொடுத்திருக்கிறார்கள், அதனால் வாந்தி வரலாம் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள், என்று நினைத்துக் கொண்டு நானே மருத்துவ மனைக்குச் சென்றேன். சிரித்துக் கொண்டே “ டாக்டர், நீங்கள் எதிர்பார்த்தபடியே இவன் வாந்தி எடுத்திருக்கிறான்என்றேன் டாக்டர் என்னைக் கடுமையாகப் பார்த்து “IT IS NO LAUGHING MATTER. IT IS SERIOUS “ என்றார்.எனக்குக் கையும் ஒட்டவில்லை காலும் ஓடவில்லை. அதிர்ந்து போய்விட்டேன். அப்போதே அவனை மருத்துவ மனையில் அட்மிட் செய்தார்கள். 24 மணி நேரம் அப்செர்வேஷனில் இருக்க வேண்டும் என்றார்கள். என் மனைவிக்குத் தகவல் அனுப்பி நான் என் மகன் கூடவே இருந்தேன். இரவு முழுவதும் அவனையே பார்த்துக் கொண்டு கண்மூடாமல் விழித்துக் கொண்டிருந்தேன். நடு இரவில் என் மகன் கண்விழித்து என்னைப் பார்த்து.சாரி அப்பா... என்னால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்என்றான். மூன்றே வயதான அக்குழந்தை அதைச் சொன்னபோது மனசு மிகவும் கனத்துப் போய் விட்டது.

எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன. குழந்தைகள் பற்றிய பிரகாஷின் பதிவு என் நினைவலைகளை இயக்கிவிட்டது.
            
         
 

13 comments:

 1. நினைவுகள்......

  மூன்று வயதிலேயே உங்கள் மகனுக்கு இருந்த மனது.... உங்களை கஷ்டப்படுத்திவிட்டோமே என கவலைப்பட்டது...... நிச்சயம் உங்களால் மறக்க முடியாது.....

  குழந்தைகளிடம் பொய் சொல்லி தப்பிக்க முடிவதில்லை.....

  Tummy is happy! :)

  ReplyDelete
 2. தனித்தன்மையுடன் குழந்தைகள் பிரகாசிக்கின்றனர். அதற்கு இது ஒரு நல்ல உதாரணம்!..

  ReplyDelete
 3. பேரன், மகன் இருவரும் சிறு வயதில் பேசிய
  பேச்சுக்கள் அருமை.
  மகன் அன்பு கலந்த பேச்சு நம்மை என்றும் மகிழ வைக்கும்.

  ReplyDelete
 4. உருக்கமான பதிவு.

  ReplyDelete
 5. உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான் மனது கனத்துப் போய்விட்டது.

  ReplyDelete
 6. குழந்தைகளுக்கு எல்லாமே தெரியுமோ? அதை வெளிக் காட்டுவதில்லையா அல்லது வெளிக்காட்டத்தெரியாமல் இருக்கிறார்களா? அதனால் தான் சில சமயங்களில் மட்டும் அவர்களின் முதிர்ச்சி நிலை தெரிகிறதோ என்று நினைப்பேன்!

  ReplyDelete
 7. ரொம்பவே டச்சிங்கா சொல்லியிருக்கிறீர்கள் சார். இப்படியான நிகழ்வுகள் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய எல்லா பெற்றோர்களுக்கும் ஏற்படுவதுதான். ஆனால் அதை பிறரைச் சென்று அடையும் விதத்தில் எழுதுவதில்தான் சிறப்பு உள்ளது. அதை உங்களுடைய எழுத்து மிக நன்றாகவே செய்துள்ளது. வயது முதிர்ந்த காலத்தில் இத்தகைய நெகிழ்வான தருணங்களை அசைபோடுவதே ஒரு ஆனந்தமான விஷயம்தான்.

  ReplyDelete

 8. @ வெங்கட் நாகராஜ்
  @ துரை செல்வராஜ்
  @ கோமதி அரசு
  @ டாக்டர் கந்தசாமி
  @ கரந்தை ஜெயக்குமார்
  @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
  @ டிபிஆர். ஜோசப்.
  அனைவரது பின்னூட்டங்களுக்கு நன்றி. என் பேரனைப் பற்றி சில பதிவுகள் எழுதி இருக்கிறேன். ஒன்று தோன்றுகிறது. பேரக் குழந்தைகளின் செயல்களை ரசித்த மாதிரி நம் பிள்ளைகளின் செயல்களை அடையாளம் கண்டு கொள்ளத் தவறி விட்டேனோ என்று, பிள்ளைகளின் கெறும்புத்தனங்களை விட நெகிழ்வான செயல்களே நினைவில் இருக்கிறது. மீண்டும் நன்றி.

  ReplyDelete
 9. குறும்புத்தனம் கெறும்புத்தனமாக மாறிவிட்டது. பிழைக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 10. பேரன் சுட்டிப் பையன். மகன் கெட்டிப் பையன்.

  குழலினி தியாழினி தென்பதம் மக்கண்
  மழலைச்சொற் கேளா தவர். (திருக்குறள் 66)

  ReplyDelete
 11. அபியும், மனோவும் பண்ணிய சேட்டைகள் ரசிக்க/நெகிழ வைத்தன. பிரசாத் பண்ணிய குறும்புகளைப் பட்டியலிடுங்களேன் ஐயா....

  ReplyDelete
 12. சாரி அப்பா... என்னால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்” என்றான். மூன்றே வயதான அக்குழந்தை அதைச் சொன்னபோது மனசு மிகவும் கனத்துப் போய் விட்டது.

  மூன்று வயதுக்குழந்தையின் பேச்சு ஆச்சரியம் தான் ..!

  ReplyDelete
 13. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கூறி
  சிறப்பித்ததற்கு மனம் நிறைந்த
  இனிய அன்பு நன்றிகள் ஐயா..

  ReplyDelete