ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

நினைவலைகள் அனுபவங்கள்.....


         நினைவலைகள் அனுபவங்கள்......
        ----------------------------------------------



      .வயது ஏற ஏற, வேலையற்ற நேரங்கள் அதிகமாக அதிகமாக, வாழ்ந்து வந்த பாதைகளை நினைத்தும் கிடைத்த அனுபவங்களை அசை போட்டுப் பார்ப்பதிலும் நேரம் செலவாகிறது. அத்தகைய அனுபவங்களைப் பதிவு செய்து வைத்தால் அது ஒரு நல்ல கதைபோல ( என் பார்வையில் ) இருக்கும். மேலும் ஒரு சாதாரணமானவன் வாழ்க்கையின் மேடு பள்ளங்களைக் கடந்து வந்ததைத் தன் சந்ததையினருக்கு (அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ) தெரியப்படுத்தி வைப்பதால் குறை ஒன்றும் இருக்கப் போவதில்லை. தெரியப் படுத்தாவிட்டாலும் குறை ஒன்றும் உணரப் படப் போவதில்லை. பின் ஏன் இந்த முயற்சி.?என் நேரத்தை நான் இப்படி செலவிட்டுக் கொள்ளப் போகிறேன். அவ்வளவுதான்

      நினைவுகள் எப்போதும் கோர்வையாக வருவதில்லை. ஒவ்வொரு சம்பவமும் அனுபவுமுமே எண்ணங்களாகத் தோன்றும். அப்படித் தோன்றும் எண்ணங்களையும் அனுபவங்களையும் கோர்வையாகக் கொண்டு வருவதே இந்த முயற்சி. இதை எங்கிருந்து தொடங்குவது.? எப்படித் தொடங்குவது.?


      இதை எழுதத் துவங்குகையில் மிக முக்கியமாக ஒரு கேள்வி எழுகிறது. நான் யார்.? நான் யாரென்று தேடி சரியான விடை கிடைத்து விட்டால் ஆன்மீக வழிப்படி சரியான பாதையில்தான் நான் சென்று கொண்டிருக்கவேண்டும். ஆனால் நான் கடந்து வந்த வாழ்க்கையும் பாதையும் வாழ்ந்த முறையும் அந்தத் தேடலின் விளைவா.? இன்னொரு முறைஇந்த வாழ்க்கையை மறுபடியும் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் இதே முறையில்தான் மறுபடியும் வாழ்வேனா.? இல்லை, நிறைய மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வேறு ஒரு வாழ்க்கையை வாழ்வேனா.? கடினமான கேள்வி. நிச்சயமாக சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். ஆனால் பெரிய மாற்றங்கள் நிச்சயம் இருக்காது. வாழ்வின் அனுபவங்கள் கற்றுத்தந்த பாடம் சில இடங்களில் சில செய்கைகளை மெருகேற்ற உதவியிருக்கலாம். ஆனால் வாழ்ந்த வாழ்க்கையிலும் கொண்ட கொள்கைகளிலும் பெரிய மாற்றங்கள் இருக்காது. என் சுபாவங்களைக் கொஞ்சம் மாற்றியிருக்கலாம். என் கோப தாபங்களையும் உணர்ச்சிகளையும் சற்றே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி இருந்திருக்கலாம். நான் நானாக இருப்பதற்கும் இருந்ததற்கும் நானேதான் காரணம். இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையில் அதிகமாகக் குறைபட்டுக் கொண்டதில்லை. இன்னும் உயர்வாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் சில சமயம் தோன்றக்கூடும். இன்னும் உயர்வாக என்றால் என்ன அர்த்தம். ? பணவசதி ,வாழ்க்கை முறை இவற்றிலா.? இவற்றைப் பற்றி எப்போதுமே நான் அதிகக் கவலைப் பட்டதில்லை. இருப்பதைக் கொண்டு திருப்தியுடனும் ,சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இதுவரை வாழ்ந்தாகி விட்டது. இன்னும் உயர்வாக இருந்திருக்கலாம் என்றால் பிறருக்கும் சமூகத்துக்கும் இன்னும் உபயோகமாக வாழ்ந்திருக்கலாம் ஆனால் சூழ்நிலைகளும் நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறையும் என்னை இப்படித்தான் இருக்கச் செய்திருக்கிறது. ”குறையொன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா.!” காதலித்துக் கைபிடித்த அருமையான மனைவி அன்பான இரு புதல்வர்கள், பண்பான மருமகள்கள் என் பேர்சொல்ல வந்த பேரக் குழந்தைகள் மூவர். வேறென்ன வேண்டும்.? இனி இருக்கப்போகும் நாட்களை  நோயின்றி நிறைவாக வாழ்ந்து யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் என் வாழ்வு முடியுமானால் அதுவே என் பேறு. இனி இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைச் சற்றே அசை போடுவேன்.
( இந்தத் தொடரைத் தொடர்வேனா இல்லையா என்பது ஒரு பெரிய கேள்வி.பதிவிட தலைப்பும் பொருளும் கிடைப்பது அரிதானால் ஒரு வேளை அவ்வப்போது தொடரலாம் )


16 கருத்துகள்:

  1. நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது சொர்க்கம்... பிறருக்கும் சமூகத்துக்கும் இன்னும் உபயோகமாக வாழ்ந்திருக்கலாம் என்னும் எண்ணம் உயர்ந்தது... இருப்பதற்கும் இருந்ததற்கும் நானேதான் காரணம் என்பது மற்றவர்களுக்கு ஒரு பாடம்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் அனுபவங்களே மற்றவர்க்கு வழிகாட்டும்

    பதிலளிநீக்கு
  3. //அருமையான மனைவி அன்பான இரு புதல்வர்கள், பண்பான மருமகள்கள் என் பேர்சொல்ல வந்த பேரக் குழந்தைகள் மூவர். வேறென்ன வேண்டும்.? இனி இருக்கப்போகும் நாட்களை நோயின்றி நிறைவாக வாழ்ந்து யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் என் வாழ்வு முடியுமானால் அதுவே என் பேறு.//

    நிறைவானதோர் வாழ்க்கை தான்.

    இதுபோல எல்லோருக்கும் அமையும் என்றும் சொல்லமுடியாது.

    வாழ்த்துகள், ஐயா.

    பதிலளிநீக்கு
  4. //இன்னொரு முறைஇந்த வாழ்க்கையை மறுபடியும் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் இதே முறையில்தான் மறுபடியும் வாழ்வேனா.? இல்லை, நிறைய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வேறு ஒரு வாழ்க்கையை வாழ்வேனா.? கடினமான கேள்வி. //

    சுலபமான பதில் உண்டு.

    வாழ்க்கை என்பது முன்னாலேயே ப்ரோகிராம் பண்ணின ஒரு நிகழ்ச்சி நிரல் இல்லை. சூழ்நிலைகளும் சந்தர்பங்கங்களும் மனிதனை உருவாக்குகின்றன. சரியாகச் சொல்லப் போனால், அவ்வாறான சூழ்நிலைகளை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பதைப் பொறுத்து அமைவது வாழ்க்கை.

    சரி. சூழ்நிலைகளை எப்படி நாம் கையாளுகிறோம்? பெற்ற அறிவின் வழிகாட்டலின் படி. அறிவு எப்படிப் பெறப்படுகிறது?.. பெறும் அனுபவங்களின் அடிப்படையில்.
    எப்படித் தான் சுற்றிச் சுற்றிப் பார்த்தாலும் கடைசியில் இந்த 'பெறும் அனுபவம்' என்பது தான் உங்கள் வாழ்க்கை அமைந்த போக்கில் தலையாய பங்கு வகிக்கும்.

    சிலருக்கு சில அனுபவங்கள் கிடைக்கப் பெறாமையால் அவை தொடர்பான விஷயங்கள் தெரியாமலேயே இருந்திருக்கும். சிலருக்கு சில அனுபவங்கள் கிடைக்கப் பெற்றும் அவற்றை சரியான
    முறையில் பயன்படுத்தத் தெரியாமையால் அதற்கான பலனைக் கோட்டை விட்டிருப்பார்கள். ஆனால் எல்லோருக்கும் வெவ்வேறான அனுபவங்களை தினப்படி வாழ்க்கையில் எதிர்கொண்டு தான் இருக்கிறோம் என்பது நிதர்சன உண்மை. இந்த அனுபவம் தான் வாழ்க்கை நமக்கு அளித்திருக்கிற பேறு. சொல்லப்போனால் நம் வாழ்க்கையே இவ்வாறு பெற்ற அனுபவங்களின் திரட்சி தான்.

    அதனால் ஒவ்வொரு நேரத்தும் கிடைத்த அனுபவங்களில் நீங்கள் எப்படி செயல்பட்டிருக்கிறீர்கள் என்று வரிசைபடுத்திப் பார்த்தால், அந்த அனுபவங்கள் எப்படி நம்மில் செயல்பட்டு செயல்களாகியிருக்கிறது என்பது தெளிவாகும். ஒரே அனுபவம் வெவ்வேறு நேரத்தில் வாய்க்கும் பொழுதும் எப்படி செயல்பட்டிருக்கி றோம் அல்லது எப்படி அந்த அனுபவத்தை 'பெறும் அறிவாக' ஆக்காமல் இருந்திருக்கிறோம் என்பது புரியும்.

    அதனால் பெற்ற அனுபவங்கள், அவை செயலான விதங்கள் என்று வரிசைப் படுத்திக்கொண்டால், அதுவே பெரும் அனுபவப் பாடமாக அமையும். வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமாகவும் அமைந்து போகும்.

    பதிலளிநீக்கு
  5. திரு ஜீவி ஐயா அவர்களின் பின்னூட்டம் மிக அருமையாக உள்ளது.

    அதிலும் கீழ்க்கண்ட வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளன. உண்மை, உண்மை.

    //சிலருக்கு சில அனுபவங்கள் கிடைக்கப் பெறாமையால் அவை தொடர்பான விஷயங்கள் தெரியாமலேயே இருந்திருக்கும். சிலருக்கு சில அனுபவங்கள் கிடைக்கப் பெற்றும் அவற்றை சரியான
    முறையில் பயன்படுத்தத் தெரியாமையால் அதற்கான பலனைக் கோட்டை விட்டிருப்பார்கள். ஆனால் எல்லோருக்கும் வெவ்வேறான அனுபவங்களை தினப்படி வாழ்க்கையில் எதிர்கொண்டு தான் இருக்கிறோம் என்பது நிதர்சன உண்மை. இந்த அனுபவம் தான் வாழ்க்கை நமக்கு அளித்திருக்கிற பேறு. சொல்லப்போனால் நம் வாழ்க்கையே இவ்வாறு பெற்ற அனுபவங்களின் திரட்சி தான்.//

    திரு ஜீவி ஐயாவுக்கு என் அன்பான பாராட்டுகள் + மனம் நிறைந்த வாழ்த்துகள். அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  6. பிறருக்கு இன்னும் உபயோகமாக வாழ்ந்திருக்கலாம் என்னும் எண்ணம் உயர்ந்தது.. எனவே என்றென்றும் ’’குறையொன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா!’’. எதுவாக இருந்தாலும் அனுபவம் செம்மையானது.

    பதிலளிநீக்கு
  7. ”குறையொன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா.!”//

    வயதான காலத்தில் அது சரியில்லை, இது சரியில்லை என்று குறை சொல்லிக் கொண்டு இருக்காமல். எல்லாவற்றிலும்
    நிறைவை காணும் மனபாங்கு கிடைத்து இருப்பது பெரிய வரபிரசாதம்.
    உங்கள் அனுபவங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும்.
    ஜீவி சார் பின்னூட்டம் மிக நன்றாக இருக்கிறது.
    வாழக்கையே ஒரு அனுபவம் தான். நாள்தோறும் அது கற்றுக் கொடுக்கும் பாடங்கள் ஏராளம் தான்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    வாழக வளமுடன்.
    வாழக நலமுடன்.

    பதிலளிநீக்கு
  8. //வேறு ஒரு வாழ்க்கையை வாழ்வேனா.? கடினமான கேள்வி. நிச்சயமாக சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். ஆனால் பெரிய மாற்றங்கள் நிச்சயம் இருக்காது. //

    Looks like you have lived your life with full of passion, with whatever you are doing. And when you turn back, you have no guilt. What else one can expect? In my view, if one had no guilt when he looks back, then he is having a wonderful life. Please, keep writing or do whatever make you happy.

    பதிலளிநீக்கு
  9. பிறருக்கு இன்னும் உபயோகமாக வாழ்ந்திருக்கலாம் என்னும் எண்ணம் உயர்ந்தது.. எனவே என்றென்றும் ’’குறையொன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா!’’.

    பதிலளிநீக்கு
  10. வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுத்து கொண்டிருக்கும் பாடங்கள் ஏராளமோ
    ஏராளம்.
    அந்த அனுபவங்கள் கண்டிப்பாக அடுத்த தலைமுறைக்கு உதவும்.

    வாழ்த்துக்கள்....
    தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
  11. ... என் பேர்சொல்ல வந்த பேரக் குழந்தைகள் மூவர். வேறென்ன வேண்டும்.? //

    ஆஹா... இது போதுமே சார்... இதையெல்லாம் பாக்கறதுக்கு குடுத்து வச்சிருக்கறதே பெரிய பாக்கியம்தானே. பணம் கூட அளவோட இருந்தாத்தான் அத அனுபவிக்க முடியும். அத விட முக்கியம் பிள்ளைச் செல்வம்... அதையும் விட மகிழ்ச்சி அளிப்பது பேரக் குழந்தைகள். இது எல்லாமும் இருந்துட்டா அதுவே போறும்னு தோனும்.

    பதிலளிநீக்கு

  12. @ திண்டுக்கல் தனபாலன்
    @ sparkkarthi karthikeyan
    @ கோபு சார்
    வாழ்த்துக்களுக்கு நன்றி.
    @ ஜீவி
    / சுலபமான பதில் உண்டு/
    ஜீவி சாருக்கு வணக்கம். நான் என்னையே கேட்டுக் கொண்ட கேள்வி, எல்லா அனுபவங்களும் நான் பெற்றுக் கொண்டபடி வாழ்ந்த பிறகு ஒரு ஹைபோதெடிகல் கேள்வியாகும். வாழத் தொடங்குமுன் இந்த அனுபவங்கள் பற்றி ஏதும் தெரியாது. ஒரு வேளை யூகிக்க் முடிந்திருந்தால் எப்படி வாழ நினைத்திருப்பேன் என்பதே அந்தக் கடினமான கேள்வி. ON HINDSIGHT இது சுலபமாகத் தோன்றலாம். மற்றபடி நீங்கள் விலாவாரியாக எழுதி இருப்பவை அனுபவத்தின் பேரில் கிடைத்த அறிவுரைகள்.நான் என்னை ஒரு திறந்த புத்தகமாகத்தான் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதுவே என் பலமும் , பலவீனமும். எனக்கு அப்ஸ்ட்ராக்டாக சொல்லத் தெரியாது.அனுபவங்கள் என்று நான் கூறுவது வாழ்வில் நிகழ்ந்த பல வீழ்ச்சிகளும் அதிலிருந்து மீண்டெழுந்த எழுச்சிகளுமே ஆகும். உங்கள் அனுபவ ஞானத்தை நீண்ட பின்னூட்டமாக வெளியிட்டதற்கு மனமார்ந்த நன்றிகள்.

    @ கோபு சார்
    திரு ஜீவியின் அனுபவ அறிவின் வெளிப்பாட்டுக்கு நானும் ரசிகன்தான்மீண்டும் வந்து கருத்துப் பதிவு செய்தமைக்கு நன்றி.
    @ துரை செல்வராஜ்
    குறை ஒன்றும் இல்லைதான் ஐயா. நன்றி
    @ கோமதி அரசு
    வருகைக்கும் நேர்த்தியான பின்னூட்டத்துடனான வாழ்த்துக்களுக்கும் நன்றி.
    @ பக்கிரிசாமி. N
    வாழ்க்கையை வாழ்வதில் தவறு இழைத்து விட்டோமோ எனும் குற்ற உணர்ச்சி எனக்கு ஏதுமில்லை. அதனால்தான் இன்னொரு முறை வாழ வாய்ப்பு கிடைத்தால் பெரிய மாற்றங்கள் ஏதுமிருக்காது என்றேன். சரியான புரிதலுடனான கருத்துரைக்கு நன்றி.
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    வாழ்த்துக்களுக்கு நன்றி.
    @ டிபிஆர். ஜோசப்
    பிள்ளைகள் பேரக் குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு வளம் சேர்க்கிறார்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா,

    பதிலளிநீக்கு
  13. நல்ல மனைவி,நல்ல பிள்ளை,நல்ல குடும்பம் : தெய்வீகம்.

    பதிலளிநீக்கு
  14. சராசரித்தனத்தை மீறிய நிகழ்வுகள் வாழ்வில் நிகழ்வதும்
    நிகழ்வுகளை அனுபவங்களாய் எடுத்துக் கொள்வதுவும்
    அதனிடமிருந்து பாடம் கற்பதுவும்
    கற்பதை சுவைபட சொல்லத் தெரிவதுவும்
    அதற்கான பரந்த மேடை கிடைப்பதும்
    அனைவருக்கும் வாய்த்துவிடுவதில்லை

    கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துதல்
    நமக்கு மட்டுமல்ல அடுத்த தலைமுறைக்கும்
    அதிக நிச்சயம் அதிக பலன்தரும்
    அதற்காகத்தானே எழுதுகிறோம்
    தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்த்து
    அன்புடன்....

    பதிலளிநீக்கு

  15. @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம் என்று நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்கிறேன். நன்றி.
    @ ரமணி
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கு நன்றிகள் ஐயா,

    பதிலளிநீக்கு
  16. நிறைவான வாழ்க்கை.

    அனுபவங்களைத் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு