நினைவுகள் அனுபவங்கள் கற்றவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் அனுபவங்கள் கற்றவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

நினைவலைகள் அனுபவங்கள்.....


         நினைவலைகள் அனுபவங்கள்......
        ----------------------------------------------



      .வயது ஏற ஏற, வேலையற்ற நேரங்கள் அதிகமாக அதிகமாக, வாழ்ந்து வந்த பாதைகளை நினைத்தும் கிடைத்த அனுபவங்களை அசை போட்டுப் பார்ப்பதிலும் நேரம் செலவாகிறது. அத்தகைய அனுபவங்களைப் பதிவு செய்து வைத்தால் அது ஒரு நல்ல கதைபோல ( என் பார்வையில் ) இருக்கும். மேலும் ஒரு சாதாரணமானவன் வாழ்க்கையின் மேடு பள்ளங்களைக் கடந்து வந்ததைத் தன் சந்ததையினருக்கு (அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ) தெரியப்படுத்தி வைப்பதால் குறை ஒன்றும் இருக்கப் போவதில்லை. தெரியப் படுத்தாவிட்டாலும் குறை ஒன்றும் உணரப் படப் போவதில்லை. பின் ஏன் இந்த முயற்சி.?என் நேரத்தை நான் இப்படி செலவிட்டுக் கொள்ளப் போகிறேன். அவ்வளவுதான்

      நினைவுகள் எப்போதும் கோர்வையாக வருவதில்லை. ஒவ்வொரு சம்பவமும் அனுபவுமுமே எண்ணங்களாகத் தோன்றும். அப்படித் தோன்றும் எண்ணங்களையும் அனுபவங்களையும் கோர்வையாகக் கொண்டு வருவதே இந்த முயற்சி. இதை எங்கிருந்து தொடங்குவது.? எப்படித் தொடங்குவது.?


      இதை எழுதத் துவங்குகையில் மிக முக்கியமாக ஒரு கேள்வி எழுகிறது. நான் யார்.? நான் யாரென்று தேடி சரியான விடை கிடைத்து விட்டால் ஆன்மீக வழிப்படி சரியான பாதையில்தான் நான் சென்று கொண்டிருக்கவேண்டும். ஆனால் நான் கடந்து வந்த வாழ்க்கையும் பாதையும் வாழ்ந்த முறையும் அந்தத் தேடலின் விளைவா.? இன்னொரு முறைஇந்த வாழ்க்கையை மறுபடியும் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் இதே முறையில்தான் மறுபடியும் வாழ்வேனா.? இல்லை, நிறைய மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வேறு ஒரு வாழ்க்கையை வாழ்வேனா.? கடினமான கேள்வி. நிச்சயமாக சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். ஆனால் பெரிய மாற்றங்கள் நிச்சயம் இருக்காது. வாழ்வின் அனுபவங்கள் கற்றுத்தந்த பாடம் சில இடங்களில் சில செய்கைகளை மெருகேற்ற உதவியிருக்கலாம். ஆனால் வாழ்ந்த வாழ்க்கையிலும் கொண்ட கொள்கைகளிலும் பெரிய மாற்றங்கள் இருக்காது. என் சுபாவங்களைக் கொஞ்சம் மாற்றியிருக்கலாம். என் கோப தாபங்களையும் உணர்ச்சிகளையும் சற்றே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி இருந்திருக்கலாம். நான் நானாக இருப்பதற்கும் இருந்ததற்கும் நானேதான் காரணம். இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையில் அதிகமாகக் குறைபட்டுக் கொண்டதில்லை. இன்னும் உயர்வாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் சில சமயம் தோன்றக்கூடும். இன்னும் உயர்வாக என்றால் என்ன அர்த்தம். ? பணவசதி ,வாழ்க்கை முறை இவற்றிலா.? இவற்றைப் பற்றி எப்போதுமே நான் அதிகக் கவலைப் பட்டதில்லை. இருப்பதைக் கொண்டு திருப்தியுடனும் ,சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இதுவரை வாழ்ந்தாகி விட்டது. இன்னும் உயர்வாக இருந்திருக்கலாம் என்றால் பிறருக்கும் சமூகத்துக்கும் இன்னும் உபயோகமாக வாழ்ந்திருக்கலாம் ஆனால் சூழ்நிலைகளும் நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறையும் என்னை இப்படித்தான் இருக்கச் செய்திருக்கிறது. ”குறையொன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா.!” காதலித்துக் கைபிடித்த அருமையான மனைவி அன்பான இரு புதல்வர்கள், பண்பான மருமகள்கள் என் பேர்சொல்ல வந்த பேரக் குழந்தைகள் மூவர். வேறென்ன வேண்டும்.? இனி இருக்கப்போகும் நாட்களை  நோயின்றி நிறைவாக வாழ்ந்து யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் என் வாழ்வு முடியுமானால் அதுவே என் பேறு. இனி இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைச் சற்றே அசை போடுவேன்.
( இந்தத் தொடரைத் தொடர்வேனா இல்லையா என்பது ஒரு பெரிய கேள்வி.பதிவிட தலைப்பும் பொருளும் கிடைப்பது அரிதானால் ஒரு வேளை அவ்வப்போது தொடரலாம் )