புதன், 8 ஜனவரி, 2014

தேவன் மகா தேவன்...

                                           தேவன் மகா தேவன் ( சிறு கதை)
                     ( dash board-ல் தெரியாததால் மீண்டும் )

VINGHIP   POTTIYA  HIRUTHAYAMUMAI   ஆங்கில  எழுத்துக்களில் எழுதப்பட்ட மலையாள  கடிதத்தின்  ஆரம்பம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது
.
பழைய கடிதங்களைப் பாதுகாத்து அதைப் படித்து அந்தக் கடிதங்களின் பின்னணிகளை நினைத்து , அந்தப் பழைய வாழ்க்கையில் சில மணி நேரம் வாழ்வது வாசுவின் பொழுது  போக்கு .இந்தக் கடிதத்தை எழுதிய  தேவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது  வாசுவுக்கு.  தேவனும் வாசுவும் பழகிய நாட்கள்  என்னவோ கொஞ்சம்தான்.இரண்டு  மாதத்துக்கும் சற்று ஏறத்தாழத்தான் இருக்கும். இருந்தாலும் அந்த நாட்கள் .....ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இரண்டு மாத நட்பை ஞாபகப்படுத்திப் பார்க்க முடியுமா.. ?ஏன்  முடியாமல் ..? பழைய கடிதங்களைப   பாதுகாத்து  வைத்திருக்கிறானே ... ஆனால் தேவனோ  ...?
பெங்களூரில்  வேலைக்குச் சேர்ந்த  அந்தக் காலத்தில் தங்க நேர்ந்த அந்த லாட்ஜில் "த்ரீ மஸ்கிடீர்ஸ் "என்று தங்களைத் தாங்களே கூறிக்கொண்டனர்  வாசுவும் தேவனும் சந்துருவும் , இதில் சந்துரு எல்லோரையும் விட மூத்தவன். ஏதோ ஒரு கம்பனியில்  குமாஸ்தாவாக  இருந்தான். தேவன் வேலை தேடி  கேரளத்திலிருந்து  வந்தவன். வாசு  அப்போதுதான்  ஒரு தொழிலகத்தில்  பயிற்சியாளனாகச சேர்ந்திருந்தான் . மற்றவரை விட  இளையவன்.

”’இப்போது தேவன் என்ன செய்து கொண்டிருப்பான்..? எப்படி இருப்பான்..பார்க்க வேண்டும்   போல் தோன்றுகிறதே..! " எண்ணியதை  சொல்லில் கூறி செயலில் காட்டாவிட்டால்  வாசுவுக்கு  தலை  வெடித்துவிடும்போல்  தோன்றியது.
"
இந்த பழைய குப்பைகளையெல்லாம்  மாய்ந்து  மாய்ந்து படிப்பதில் அப்படி என்னசுகமோ"--வாசுவின்மனைவி  தங்கம் அவன் நினைவுகளைக் கலைத்தாள்

"
இந்தக் கடிதத்தைப்  படித்துப்  பாரேன் தங்கம் .முடிகிறதா  புரிகிறதா  சொல். "
"
உங்களுக்குத்தான்  வேறு வேலை இல்லை என்றால் .. சரி  சரி ..காட்டுங்கள்   VINGHIP   POTTIYA  ...ஐயே .என்ன இது..?இங்கிலீஷில்  இங்கிலீஷுமல்லாமல்  எனக்குமுடியலைப்பா...... "
"
இங்கே  கொண்டா .நான் படித்துக்காட்டுகிரேன்-----விங்கிப  பொட்டிய ஹிருதயமுமாய்  நிங்களை  விட்டுப் போரேண்டி  வன்னதில் எனிக்கி  கூடுதல்  விஷமிச்சு====.தேவனுக்குத  தமிழ்  தெரியாது.எனிக்கி மலையாளம்  கொறச்சு  அறியும்.அதனால்தான் இந்த முறை                       

தேவனைப்  பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது தங்கம். அவன் இந்த விலாசத்தில் இருப்பானா.. ? போய்ப்  பார்க்கலாம்... நீயும் வாயேன் ".

"
அவ்வளவு  தூரம்  பணம்  செலவு  செய்து  போய  அவர்  அங்கே  இல்லாவிட்டால்  எல்லாம்  விரயமாகும்."

" ஏன்  விரயமாக  வேண்டும் .? நமக்கும் பொழுது  சற்று  மாறுதலாகப்  போகும். ஏற்பாடு செய்கிறேன்.ரெடியாக இரு. "
பெருங்கோட்டுகா வழி திருச்சூர்  என்று  விலாசமிருக்கிறது. எப்படியும் திருச்சூர்  போய  அங்கிருந்து  விசாரித்துப்  போய்க்  கொள்ளலாம். திருச்சூருக்கு  டிக்கெட் புக்  செய்ய வேண்டும்  என்று  எண்ணியவாறே   வாசு  ரெயில்வே   ஸ்டேஷனுக்குப  புறப்பட்டுச் சென்றான்.

"
நீளமாய கழுத்துள்ளபெண்கள் சந்தமாய் இருக்கும்....அறியோ  வாசு. ?"தேவனின்  குரல் இப்போதும்கேட்கிறது.

"
வேலை  தேடி  ஊர்  விட்டு  ஊர் வந்து  பெண்களின்  கழுத்தைப்  பற்றி ஆராய்ச்சி  செய்யாதே.முதலில் வேலை."

 "
ஆமாம், இவன்  பேசற  பாஷை  யாருக்கும்  புரியாது. இவனுக்கெல்லாம்  எவன்  வேலை  கொடுப்பான் ", சந்துருவுக்கு  தேவன் சொல்வது   புரியாததால்  வரும் கோபத்தில் சபிப்பான்.

"
அது  எந்தா.. ஆரும்   பணி  தரில்லே..இன்னால்   வேண்டா. ..சந்துரு  எனிக்கி  வேண்டி  ஒன்னும் செய்யண்டா.  ஞான   எங்கனே  எங்கிலும்   ஜீவிக்கும் ".
எப்படியாவதுபிழைத்துக்கொள்வேன் என்று சொன்னதேவனுக்கு  அதை நிரூபிக்க   வேண்டிய நிர்பந்தம்கூடிய  சீக்கிரத்திலேயே  ஏற்பட்டது. ஊரிலிருந்து  செலவுக்குப்  பணம்  வரவில்லை.லாட்ஜில்  நெருக்கினார்கள். இல்லை என்றால்  காலி  செய்யச்  சொன்னார்கள்.
தேவனும்  வேறு  வழி இல்லாமல்  அவனுடையப்  பெட்டியை  வாசுவிடம்   கொடுத்து   பத்திரமாக  வைத்துக்கொள்ளும்படியும் , பணம்  கிடைத்ததும்  அதைத்  திரும்பப் பெற்றுக்கொண்டு போவதாகவும் கூறினான்.

"
தேவா, உனக்கு  நன்றாகத்தெரியும், எங்களுடைய நிலை. சந்துருவின்  பின்னால்  அவன் சம்பாதிப்பதைக் கொண்டு  வாழ   ஒரு பட்டாளமே   இருக்கிறது. எனக்கோ  பயிற்சி  நேரத்தில் ரூபாய்  முப்பதுதான்  ஒரு  மாதத்துக்குக்  கிடைப்பது. ..இதில் என்னதான் செய்ய முடியும்..?"

"
ஏய்ய் வாசுவிஷமிக்கண்டா.. எனிக்கி  அறியும். .என்டே  சமயம்  இங்கனேயுண்டு .எந்து செய்யாம்..?"

அடுத்தநாள்   தேவனின் பெட்டியைப்  பறிமுதல்  செய்ய , லாட்ஜ்  முதலாளி  முயன்றதும் வாசு  அதைக்  கொடுக்காமல்  தகராறு  எழுந்து, போலீஸ்  ஸ்டேஷன்  வரை  தகராறு  போனதும் வேறு கதை.

ரயிலில்  இடம்  பிடித்து   அமர்ந்து, பயணம்  செய்யும்போது அந்த  வாலிப   நாட்களே  வந்தது  போலவும்  நிகழ்ச்சிகள்  எல்லாம்  நேற்று   நடந்தது  போலவும்   வாசுவுக்குத் தோன்றியது.

"
தங்கம் , உன்னைக்  காதலித்துக்  கலியாணம்  செய்து   கொள்ளும்   முன்பே   எனக்கு   ஒரு    காதலி   இருந்தாள்   தெரியுமா  உனக்கு,?"

"நீங்கள்   ஆயிரம்   பெண்களைப்   பார்த்திருப்பீர்கள் எல்லோரையும்   மனசால்   காதலிக்கவும்  செய்திருப்பீர்கள். ஆனால்  யாராவது  உங்களை  காதலித்து  இருக்கிறார்களா.?"

 "
என்னைக்  காதலிக்க  எந்தப்  பெண்ணுக்குத்தான்  கசக்கும்.? ஆனால்  நான்  சொல்லும் இந்தக்காதல் தேவனால் தடம் புரண்டு  விட்டது..நாங்கள்  தங்கியிருந்த   லாட்ஜுக்கு  அருகே  ஒரு பால்  கடை   இருந்தது. அங்கு  பால்  வாங்க  ஒரு பெண்   தினமும்  வருவாள். நாங்கள்  இரவு   உண்ட  பிறகு  சில நாட்களில்  பால்  அருந்த அங்குசெல்வோம். அவளை அங்கு   அடிக்கடி   பார்ப்போம் .ஹூம் .!  பார்த்தால்   எனக்கு உடம்பு  ஒரு  மாதிரியாய்  படபடக்கும் , நாக்கு  வறண்டு   பேச்சு  சரியாக  வராது. இதெல்லாம்   காதலின்   வெளிப்பாடுகள்   என்று தேவன்   விளக்கம் சொல்லுவான்நானும் அதை  நம்ப   ஆரம்பித்தேன். ஆனால்   அவளிடம்   எப்படிப்   பேசுவது, எங்கு   பேசுவதுஅவள்  பேசுவாளா   ஒன்றும்  புரியவில்லை. தேவன்   இதற்கு  ஒரு  வழி  செய்வதாகக்   கூறி   அபயமளித்தான்.

வாசு  கதைபோல்  விவரிக்க   தங்கத்துக்கும்    சற்றே   உற்சாகம்  பற்றிக்கொண்டது.
"
ஆமாம்.அப்போது உங்களுக்கு என்ன வயசிருக்கும்,?"

"
பதினேழு பதினெட்டு இருக்கலாம்"

"
அடப்பாவி.!பிஞ்சிலேயே  பழுத்த  கேசா.?"

"
இல்லை தங்கம்,.உலகத்தையே   புதிசாகப்   பார்க்கும்   வயசு.  எல்லாவற்றையும்   சோதனை செய்து பார்க்கும் வயசு.யாரையும்உடனே நம்பும்  வயசு. சந்தர்பபங்கள்   அமைந்திருந்தால் , யார்  கண்டது, ..ஒரு சமயம்  பிஞ்சிலேயே  பழுத்திருக்கலாம்"

"அதுசரி.அந்தப்பெண்ணுக்குஎவ்வளவு வயசிருக்கும் என்ன பேர் ஏதாவது   தெரியுமா”?

"
அவளுக்கு  பதினெட்டு  இருபது வயசிருக்கலாம். பெயர்  தெரியாது..ஆனால்  என்   மனசுக்குள்   நான்  அவளுக்கு   வைத்த பெயர்   அகிலா. எனக்கு  எல்லாமே  இந்த   அகிலமேஅவள்தான் என்று  தோன்றும்
. "
"
சீ..! நீங்கள் இப்படிப்பட்டவர் என்று தெரிந்திருந்தால்....."

"ஏன்என்னைக் காதலித்து இருக்கமாட்டாயா?கலியாணம் செய்து இருக்க  மாட்டாயா”?

இப்போது அதைப்பற்றி நினைப்பது டூ  லேட்தவிர்க்க முடியாததை   அனுபவிக்கதானேவேண்டும்இருந்தாலும் இப்போது நோ ரிக்ரேட்ஸ் .வருத்தமேதும் இல்லை.
 "
"
எனக்கு  அதுவும்  தெரியும். தேவனைப்  பற்றி  சொல்லிக்கொண்டிருந்தேன் . எப்படயாவது  அந்தப்  பெண்ணைப்  பற்றிய  செய்திகளை  சேகரிக்கப போவதாகக்  கூறினான். வேலை  இல்லாதவனுக்கு  நல்ல வேலை  என்று சந்துரு  கிண்டல்  பேசினான். அடுத்த  நாள் பயிற்சி  முடிந்து  அறைக்குத்  திரும்பும்போது  தேவன்  அங்கு  பொறுமையில்லாமல்    எனக்காகக்   காத்திருப்பது   தெரிந்தது.வாசு ..ஆ  பெண்ணின்டே  ஸ்தலம் அறிஞ்சு என்று  கூவினான். பிறகு  அந்த  வீட்டையும்  காட்டினான். வீடு  தெரிந்தவுடன் அந்தப்  பெண்ணைப்  பார்க்காவிட்டால்  தலை  தெறித்து விடும்  போல்  தோன்றும்.அந்த  வீட்டின்  முன்பாக அங்குமிங்கும்  அடிக்கடி  நடப்பேன்வீட்டு  முன்னால்  ஷூவுக்கு  லேஸ்  கட்டும்  சாக்கில்  உள்ளே  ஆராய்ந்து  பார்ப்பேன்.ஆனால்என்  கண்ணில்  மட்டும்  அவள் தென்பட  மாட்டாள். தேவன்என்னைத் தமாஷ் செய்கிறான் என்று அவனிடம்  கோபித்துக்  கொண்டேன். தேவன் சொன்னான் நான்அங்குபோகும்  நேரத்தில்  அவள்  எங்கோ  தட்டெழுத்துப்  பயிலச்செல்கிறாளோஎன்னவோஎன்று. அதன் பிறகு  அடுத்துள்ள  தட்டெழுத்துப்  பயில்விக்கும்  இடங்களுக்கு  முன்பு  நின்று  நோட்டம்  விட   ரம்பித்தேன். அவள் என்கண்களில்படவேஇல்லை. பிறகுதான் அது  நடந்தது."என்றஒரு  சஸ்பென்ஸ்  கொடுத்து  நிறுத்தினான்  வாசு.
"என்ன  பெரிய சஸ்பென்ஸ்...ஒரு நாள் அவளைப்  பார்த்தீர்கள் , பல்  இளித்தீர்கள்   அவள்  உங்களைக் கண்டு   கொள்ளவே இல்லை .பிறகு  சேச்சே ...இந்தப் பழம்  புளிக்கும் என்று வந்து விட்டீர்கள்..அவ்வளவுதானே "  என்று கிண்டல் செய்தாள்   தங்கம்.

"
அதுதான்  இல்லை. அவளுடைய  பெயரை  அறிந்து   வருகிறேன்  என்று  சொன்ன  தேவன் , அவர்கள்  வீட்டின்  அருகே  விளையாடிக்  கொண்டிருந்த  ஒரு   சிறுவனைக்  கூப்பிட்டு ,நிறைய  மிட்டாய்களைக்  கொடுத்து   அந்தச் சேச்சியின்  பெயரைக்கேட்டுவா--என்று  அனுப்பி   இருக்கிறான். அந்தப்  பையன்  வீட்டிற்குள்  சென்றசற்று நேரத்தில்  அந்தப்  பெண்  வெளியே  வந்திருக்கிறாள் .அந்தப்  பையன்  தூரத்தில்  இருந்த  தேவனைக்  காட்டி  ஏதோ சொல்ல , அந்தப் பெண்  உள்ளே சென்று  மறுபடியும்  வெளியே  வந்தபோது, பெரிய  மீசை  வைத்த  இரண்டு  ஆட்களும்  கூட  இருந்தனர். தூரத்தில்   நின்று  பார்த்துக்  கொண்டிருந்த  தேவன்   மெல்லநழுவப்பார்க்க  ஓடி வந்து அவனைபிடித்து
நன்றாக தர்ம அடி கொடுத்து அனுப்பிஇருக்கிறார்கள்பாவம்,தேவன்.......  முகமெல்லாம்  வீங்கி  உதடு  காயப்பட்டு  ரத்தம்  தெரிய  வந்ததை  நிறையப்  பேர்   பார்த்திருக்கிறார்கள்அவமானமாக இருந்தது,என்று சொல்லிச்சொல்லி   மாய்ந்தான்  பாவம், என் காதலுக்காக  அடி  வாங்கினான் " --என்று  பெருமூச்சுடன்  கூறி நிறுத்தினான்
  வாசு.
 "
அவர்  உங்களைக்  காட்டிக்  கொடுத்து , உங்களையும்  அவர்கள் புடைக்கவில்லையா .?'

"அந்தமட்டில் தேவனுக்குநன்றி சொல்லவேண்டும்
 "
திருச்சூர்  சென்று  அங்கு  ஒரு  ஹோட்டலில்  தங்கி , ஒரு நாள் இருந்து  பிறகு ,
பெருங்கோட்டுக்கா  என்ற இடம்  எங்கு  இருக்கிறது  என்று  விசாரித்து  அங்கு  சென்றால்..... வாசுவிற்கு  முதலில்  ஒன்றுமே  புரிய வில்லை. அந்த  இடத்தில் ஒரே  கூட்டமாக  இருந்தது. அது  ஒரு ஆசிரமாம். அதன்  தலைவர்  பிரம்ம  தேவ  சுவாமிகள்  அன்று  காலையில்தான்  இந்த பூத  உடலை விட்டு உயிர்  நீத்தாராம்.  அவருக்குமரியாதைசெய்ய கூட்டம் கூட்டமாக மக்கள்  சென்று  கொண்டிருந்தனர்.  வாசுவுக்கு   சற்றே  ஏமாற்றமாக  இருந்தது.  சரி  வந்ததுதான்  வந்தோம்  அந்த ச்வாமிகளையாவது  வணங்கி செல்லலாம்  என்று  அருகே  சென்றால்......
 
வயதான  தேவன்தான்  பிரம்மதேவ  சுவாமிகள்.  அருகில்  இருந்தது  யார்..? வயதான  தோற்றத்தில்  அகிலாவா..?   வாசுவின்  அகிலாவா...?!






திங்கள், 6 ஜனவரி, 2014

A MARRIAGE WITH A DIFFERENCE...!


                       A MARRIAGE WITH A DIFFERENCE.
                       -------------------------------------------



வெகுநாட்களாகவே திருமணம் வேண்டாம் என்று சொல்லி வந்த பெண்,- நண்பரின் உறவினர்- கல்யாணத்துக்கு அழைப்பு இருந்தது. டிசம்பர் 26-ம் நாள் காலை 11 மணிக்கு மைசூர் செல்லும் சதாப்தியில் பயணம். மதியம் ஒரு மணிக்கு மைசூர் சேர்ந்தோம். ரயில் நிலையத்துக்கே வந்து எங்களை அழைத்துச் சென்றார்கள். நேரே டைனிங் ஹால்-விருந்து- முடிந்ததும் எங்களுக்காக புக் செய்யப்பட்டிருந்த ஹோட்டல் ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். திருமண சம்பந்த நிகழ்ச்சிகள் மாலை ஆறு மணி அளவில் துவங்கும் என்றும் அதுவரை ஓய்வெடுக்கலாம் என்றும் கூறினார்கள்.சற்று ஓய்வுக்குப் பிறகு என் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தபடி தத்தாத்த்ரேயர் கோவிலுக்குச் சென்று வந்தோம்.
திருமணத்துக்கு வந்திருந்தவர்களை நோட்டம் விட்ட போது , இந்தத் திருமணம் –it is going to be different –என்று தோன்றியது. பூர்வீகம் கேரளாவிலிருந்து மைசூர் வந்து செட்டில் ஆன தமிழ்க் குடும்பம். கல்யாணப் பத்திரிக்கையே ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் இருந்தது. பத்திரிக்கை பழைய மோஸ்தரில் மஞ்சள் ரோஜா வண்ணத்தில் சமயத் தலைவர்களின் ஆசியுடன் என்று இருந்தது..
மாப்பிள்ளை அழைப்பு , ஜானவாசம் போன்றவை இல்லாமல் அவர்களின் முன்னோர் காலத்தில் இருந்தபடி திருமணத்துக்கு முதல் நாள் மாலையில், 20 .30. வேதவிற்பன்னர்களின் வேத கோஷங்களுடன் தொடங்கியது. சுமார் ஒன்றரை மணிநெரம் நான்கு வேதங்களையும் கோஷித்தார்கள். சற்றே வித்தியாசமான ஒலியுடன் கூடியதை சாமவேதம் என்று அடையாளப் படுத்த முடிந்தது. வேத கோஷங்களொலித்துக் கொண்டிருந்த போது தத்தாத்ரேயர் கோவில் தரிசனம் முடித்து நாங்கள் வந்து சேர்ந்தோம். அதன் பிறகு பிராம்மண சமூக வழக்கப் படி நிச்சயதார்த்தம் ( என்று நினைக்கிறேன் ) நடந்தது.அதன் பின் விருந்து.
மறுநாள் காலை முஹூர்த்தம். காசியாத்திரை , மாலை மாற்றல், ஊஞ்சல் எல்லாம் கிரமப்படி(?) நடந்தது, மணப்பெண்ணையும் மணமகனையும் தோளில் சுமந்து மாலை மாற்றச் செய்தார்கள்...! ஊஞ்சலின் போது கல்யாண வைபோகமே என்று பாட்டெல்லாம் பாடினார்கள். திருஷ்டி சுற்றும்போது எல்லாதிசைகளிலும் போடும் அன்ன உருண்டைகள் சுற்றி இருப்பவர்களைக் கவனிக்காமல் போடப் பட்டன. நல்ல வேளை யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்தத் திருமணத்தின் போது சில நல்ல விஷயங்கள் அனுஷ்டிக்கப் பட்டன. மணமெடையில் நெருங்கிய உறவினர்களே இருந்தனர். மேடை சற்று உயரமாக இருந்தது. வந்திருந்தவர்கள் அமர நாற்காலிகள் போடப் பட்டிருந்தது. மண நிகழ்ச்சிகளை இருந்த இடத்திலிருந்தே காண்முடிந்தது. திருமாங்கல்யம் வந்திருந்தோரின் ஆசிர்வாதத்துக்காக சுற்று வரப்பட்டபோதே ஆசிர்வாத அட்சதைகளும் வினியோகிக்கப் பட்டது. மாங்கல்யதாரணம் நடக்கும் போது அட்சதையை வீசித் தூவாமல் இருக்கும் படி கேட்டுக் கொண்டார்கள். மணமக்களை வாழ்த்தி கொடுக்கப் பட்ட அட்சதையைப் பெற்றுக் கொள்ள வேறு சிலர் வந்தனர். இந்த அட்சதைகளை யாரும் மேடைக்கருகே வராமலேயே மணமக்கள் மேல் தூவ ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மேடையில் நின்று ஒருவர் நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்டுக் கொண்டிருந்தார். மணமகனுக்கு அவரது வருங்கால மாமனார் பாத பூசை செய்ததை ஆங்கிலத்தில் விளக்கியவர், வயதில் பெரியவர் ஒரு இளைஞனுக்கு பாத பூசை செய்வது சரியா என்று தோன்றலாம். திருமண விரதம் இருக்கும் வரனும் வதுவும் பரமேஸ்வரன் பார்வதிக்குச் சமம் “ என்றொரு விளக்கம் கொடுத்தார்,! அதே போல் மாங்கல்யதாரணம் முடிந்த உடனே வாழ்த்துச் சொல்ல மேடைக்கு வர வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்தார். சப்தபதி சடங்கு முடிந்தபிறகே வாழ்த்துச் சொல்லவும் கை கொடுக்கவும் அனுமதி என்றார்.  ஆக சாதாரணமாகக் காணப்படும் தல்லுமுல்லுகள் தவிர்க்கப் பட்டன,. திருமணம் இனிதே முடிந்தது.
இதில் பதிவிட என்ன இருக்கிறது என்று கேட்கத் தோன்றலாம் இந்தத் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்களில் பலரும் inter-caste inter-religion, inter-state   inter-language  மற்றும் inter-national  திருமணங்கள் செய்து கொண்டவர்கள்போல் தோன்றிையது.ஊஞ்சலின் போது திருஷ்டி சுற்றி அன்ன உருண்டைகள் போட்டவரில் அயல் நாட்டினரும் இருந்தது  added  a colour  to the ceremony. நான் சென்றிருக்கும் திருமணங்களில் ஹிந்து ஆங்கிலேயத் திருமணம் ஆர்ய சமாஜ் நடத்திவைக்கக் கண்டிருக்கிறேன். சாதி மாறிய திருமணங்களும் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரே குடும்பத்தில் இத்தனை வேறுபாடுகளையும் உள்ளடக்கிய உறவினர்கள் கலந்து கொண்ட திருமணம் பார்ப்பது இதுவே முதல் தடவை.  அதுவும் சம்பிரதாயங்கள் அதிகம் மாற்றப்படாமல் நடந்த திருமணம் என்று நினைக்கிறேன் A MARRIAGE WITH A DIFFERENCE.!
திருமணம் முடிந்த கையோடு வெற்றிலை பாக்கு தேங்காய் முதலியவற்றை காகிதப் பைகளில் போட்டுக் கொடுத்தனர். இந்தக் காகிதப் பைகள் ASSOCIATION FOR THE WELFARE OF THE MENTALLY DISABLED ( AWMD )  மூலம் செய்விக்கப் பட்டவை. இந்த சமூக அக்கறை போற்றத்தக்கது. இதல்லாமல் சிறிய கைவினைப் பொருட்களும் வினியோகிக்கப்பட்டது.
முதல் பந்தியில் உணவு உட்கொண்டு மதியம் மைசூரில் இருந்து புறப்படும் சதாப்தி ரயிலில் பெங்களூர் வந்தோம்.

வெள்ளி, 3 ஜனவரி, 2014

சுவாமிகளும் கோவில்களும்


                             சுவாமிகளும் கோவில்களும்
                              ---------------------------------------


காரிய சித்தி ஆஞசனேயர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?அண்மையில் சென்னை சென்றிருந்தபோது என் மகன் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிமீ. தூரத்தில் வேளச்சேரியில் ஒரு ஆஞ்சனேயர் கோவிலுக்கு என் மனைவியும் மச்சினனும் சென்றிருந்தார்கள். மனதில் ஏதாவது குறை இருந்தால் அந்த ஆஞ்சனேயரை வேண்டிக்கொண்டு ஒரு மட்டையுடன்கூடிய தேங்காயை அர்ச்சித்து அதை கோவில் பிரகாரத்தில் கட்ட வேண்டுமாம். அதற்கு ஒரு அடையாளச் சீட்டும் கொடுக்கிறார்கள். குறை நீங்கியபின் மறுபடியும் கோவிலுக்கு வந்து அதே தேங்காயைஅர்ச்சித்து கொண்டு வரலாம். என் மச்சினனின் குறை நீங்கியதால் என் மனைவியுடன் அந்தக் கோவிலுக்குச் சென்று வந்தார்கள். இந்தக் கோவிலை நிறுவியவர் ஸ்ரீ சச்சிதானந்த கணபதி ஸ்வாமிகள் ஆவார்.
டிசம்பர் மாதம் 26-ம் தேதி மைசூருக்குச் சென்றோம் எங்களுடன் என் 47 வருட நண்பன் ( இப்போது அமெரிக்க வாசி) கூட வந்தார். அங்கு ஸ்ரீசச்சிதானந்த கணபதி ஸ்வாமிகள் ஆசிரமம் பார்க்கலாம் என்றார். இந்த ஸ்வாமி அமெரிக்காவில் பிரசித்தமானவராம் அப்போது எனக்குள் ஒரு பொறிதட்டியது, இந்த சுவாமிகளின் சென்னை ஆசிரமத்தில்தானே அந்தக் காரியசித்தி ஆஞ்சனேயர் கோவில் இருக்கிறது.. மேலும் இந்த மைசூர் ஆசிரமத்தில் தத்தாத்ரேயர்கோவிலும் ,  70 அடி உயர ஒரே கல்லால் ஆன ஆஞ்சனேயரும் பிரதிஷ்டை செய்திருப்பதாகவும் கூறினார். எனக்கு எப்போதும் புதிய இடங்களைப் பார்ப்பதில் விருப்பம் அதிகம். இதே 26-ம் தேதி சென்ற வருடத்தில்தான் ஆஞ்சனேயர் சிலை பிரதிஷ்டை ஆகி இருந்தது.
நாங்கள் அன்று மதியம்தான் மைசூர் சென்றதாலும் அடுத்த நாள் ஒரு திருமணத்துக்குச் செல்ல வேண்டி இருந்ததாலும் அன்று மாலையே ஆசிரமம் சென்றோம். ஆசிரமம் ஒரு பெரிய வளாகத்தில் அமைந்திருக்கிறது. ரம்மியமான சூழ்நிலை நேரம் இருட்டத் துவங்கிவிட்டதால் முழு அழகையும் ரசித்துப் பார்க்க முடியவில்லை. அங்கும் ஒரு காரியசித்தி ஆஞ்சனேயர் இருக்கிறார். மட்டைத் தேங்காய் வைத்து வேண்டினால் நினைத்த காரியங்கள் நிறைவேறுமாம். நினைத்தது நடக்க ஒரு மட்டைத்தேங்காய் போதுமென்று நினைப்பவர்களைக் குறை கூறமாட்டேன். எல்லாம் அவரவர் நம்பிக்கை.இந்த நம்பிக்கை இப்போது மேலை நாடுகளிலும் பரவி வருகிறதுபோல் தெரிகிறது. இந்த சுவாமியின் ஆசிரமத்துக்கு அநேக வெளிநாட்டினர் வருகை தருகின்றனர். பணத்துக்குப் பஞ்சமில்லை. அழகான தத்தாத்ரேயரின் கோவில் சுற்றிலும் பொன்சாய் தோட்டம். கருங்கல்லில் செதுக்கிய தூண்கள் சுற்றிலும் வைக்கப் பட்டிருக்கிறது. நாளுக்கு ஒன்று என்று 365 தூண்கள் இருப்பதாகக் கேள்வி. சிற்பங்கள் செதுக்கவும் கற்றுக் கொடுக்கிறார்கள் என்றும் கேள்வி.
அங்கிருக்கும் காரிய சித்தி ஆஞ்சனேயர் கோவிலுக்கு மேல் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் எழுபது அடி உயர ஆஞ்சனேயர் சிலையும் அங்கே உருவானதாம் இருட்டிய பிறகு சென்றதால் படங்கள் எடுக்க முடியவில்லை,இருந்தாலும் என் கைபேசியில் படம் பிடித்தேன். மேலும் வலையிலிருந்து சுட்ட படமும் இங்கே

கைபேசியில் எடுத்த ஆஞ்சனேயர் சிலை
.
காரியசித்தி ஹனுமான் தத்தபீடம் மைசூர்



வலையில் இருந்து எடுத்த 70 அடி ஆஞ்சனேயர்



கோவில் பற்றிச் சொல்வதானால் கூடவே ஒரு கதையும் இருக்கும்தானே, அப்போதுதானே சுவைக்கும். அத்ரி முனிவர்-அனுசூயா தம்பதியினருக்கு அந்த பிரம்மா விஷ்ணு மகேசனே குழந்தைகளாய்ப் பிறக்க வேண்டும் என்று வேண்டி நின்றனர். அந்த மும்மூர்த்திகளும்
அவர்களது பக்தியைச் சோதிக்க முடிவெடுத்தனர். துறவிகள் போல் வடிவெடுத்து, அத்திரியின் குடில் முன் வந்தனர். அத்திரி அப்போது வீட்டில் இல்லை. அவர் மனைவி அனுசூயா தர்மபத்தினி. கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்த பின்பே பணிகளைத் துவங்குவாள். அந்த தீர்த்தம் எப்போதும் வீட்டில் இருக்கும்.அனுசூயா வந்தவர்களை வரவேற்றாள்.அவர்கள் தங்களுக்குப் பசி என்றதும் உணவு எடுக்கச் சென்றவரிடம் உணவு கொடுப்பவர் நிர்வாண நிலையிலேயே அதைப் பறிமாறவேண்டும் என்று கேட்டனர். இந்த அசாதாரண கோரிக்கை ஏதோ தெய்வ சங்கல்பம் என்று நினைத்த அனுசூயா அவ்விதமே பறிமாறுவதாகக் கூறினாள்.ஆண்டவனே நான் உண்மையான பதிவிரதை. எனக்கு இப்படி ஒரு சோதனையா “ என்று நினைத்து, , கணவருக்குப் பாதபூஜை செய்த நீரை வந்த மூவரின் மேல் தெளித்து  அவர்கள் குழந்தைகளாக மாற வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அதன் படியே பிரம்மா விஷ்ணு மகேசன் மூவரும் குழந்தைகளாக மாற  அவர்களுக்கு பாலூட்டிப் பசி தீர்த்தாள். சற்று நேரத்தில் அத்திரி முனிவரும் வந்து நடந்ததைக் கேட்டுத் தெரிந்து கொண்டார், வந்தவர்கள் மும்மூர்த்திகளேஎன்று தன் ஞான திருஷ்டியால் அறிந்த முனிவர் அம்மூன்று குழந்தைகளையும் ஒரு சேர அணைத்தார். அந்த மூன்று குழந்தைகளும் ஓருடல் மூன்று முகம் ஆறு கைக்கள் கொண்டதாக மாறின. நாரதர் மூலம் நடந்ததை அறிந்த முத்தேவியரும் தங்களது கணவர்களைத் திருப்பித் தர வேண்டி நின்றனர். தேவியரே இந்தக் குழந்தை எங்களிடம் வளர வேண்டும் என்பது எங்கள் விருப்பம் அதை நிறைவேற்றிவைத்தால் உங்கள் கணவர்கள் உங்களுக்குத் திருப்பிக் கிடைப்பார்கள் “ என்றனர், அதற்கு அவர்களொப்புதல் அளிக்கவே அனுசூயா மும்மூர்த்திகளை வேண்டி நின்றாள். மும்மூர்த்திகளும் காட்சியளித்து தங்கள் சக்தியாக அக்குழந்தை விளங்கும் என்றும் அதற்கு  தத்தாத்ரேயன் என்று பெயர் சூட்டி ஆசியளித்தனர். தத்தாத்ரேயன் என்றால் மும்மூர்த்திகளுக்கும் சமமானவர் என்று பொருள்.
மும்மூர்த்திகளும் மகனாகப் பிறந்தமையால் த்(3)த்தஎன்று பெயர் வந்ததாகவும் கூறுவர். அத்திரி முனிவருக்குப் பிறந்ததால் ஆத்ரேயர் என்ற பெயரும் சேர்ந்து தத்த*ஆத்ரேயர் = தத்தாத்தரேயர் என்று வந்ததாகவும் கூறுவர். தத்தாத்ரேயரின் கோவிலுக்கு சென்றபோது இந்தக் கதையும் மனதில் விரிந்தது, ஏன் என்றால் அந்தக் கோவிலில் பிரதிஷ்டையாகி இருக்கும் தெய்வம் தத்தாத்ரேய வெங்கடேஷ்வரர். மும்மூர்த்திகளும் சேர்ந்த ஒரு தெய்வம் அதில் ஒருவரான விஷ்ணுவின் கோவிலாக இருப்பது ஏன் என்னும் கேள்வி என்னை வலையில் காரணம் கிடைக்குமா என்று தேட வைத்தது.  இந்த தத்த பீடம் ஸ்ரீ சச்சிதாநந்த கணபதி ஸ்வாமிகளால் நிறுவப் பட்டது.தகவல்கள் தேடும்போது கிடைத்ததைப் பகிர்கிறேன், 


Sri Nrusimha Saraswati Incarnation

Lord Dattatreya is incarnation of Lord Vishnu, Lord Shiva and Lord Brahma (The Trio or Trimurthi). Swami Dattatreya is one among the Immortals (‘Chiranjeevi’) – there is no end to this Incarnation. Depending on the state of the world from time to time Lord Dattatreya incarnates himself in various forms for the well being of human beings and for establishing Sanatana Dharma. This is the distinguishing aspect of this Incarnation. During 15th Century A.D. – which was the era of the Incarnation of Lord Dattatreya as Sri Nrusimha Saraswati -India was evolving with rapid changes in social and political fabric of the society. Recognizing this – Sri Nrusimha Saraswati decided to give up his form and advised his disciples that he will very soon continue his journey in ‘new form’. In presence of thousands of disciples and devotees – he disappeared in banks of River Krishna near Sri Sailam.

Sri Ganapathi Sachchidananda Incarnation

After nearly five centuries, In 1942 he re-incarnated as Sri Sri Sri Ganapathi Sachchidananda Swamiji with Datta Peetham, Mysore as the main centre, started to give new lease of life to Sanatana Dharma following modern methodology in line with the global evolution and modern era. To prove this to his new disciples – In 1966 when Sri Ganapathi Sachchidananda Swamiji visited Koti Lingala Ghat in Sri Sailam, the previous incarnation Sri Nrusimha Saraswati gave darshan and Initiated Sri Ganapathi Sachchidananda Swamiji into Avadhoota lineage (‘Shona Vastra Deeksha’).




கோவிலைப் பற்றி சொல்லிவரும்போது ஆரம்பித்த கதை எங்கெங்கோ இழுத்து வந்துவிட்டது.சநாதன தர்மத்துக்கு புத்துயிர் அளிக்க நவீன வசதிகளைப் பயன் படுத்தி உலகளாவச் செய்ய ஒரு ஸ்வாமி வந்துவிட்டார். இவர் ஒரு ஹனுமான் பக்தர். ஆகவே தத்த பீடத்தோடு காரியசித்தி ஆஞ்சனேயரையும் உலகெலாம் பிரதிஷ்டை செய்து வருகிறார் இந்த ஹைடெக் ஸ்வாமிஜி. விட்டில் பூச்சிகளென அயல்நாட்டினரும் இவரை மொய்க்கின்றனர்.
மைசூரில் இவரது தத்தபீடம் வெகு நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டு இருக்கிறது. டெரக்கோட்டாவால் ஆன ஒரு பெரிய மூலிகேஷ்வரரும் உண்டு நாங்கள் சென்றபோது நன்கு இருட்டிவிட்டதாலும் முக்கியமாகச் செல்ல வேண்டிய திருமண் நிகழ்ச்சிகளைக் காண வேண்டி இருந்ததாலும் எல்லாம் பார்த்த திருப்தி இருக்கவில்லை. அடுத்தமுறை , அப்படி என்று ஒன்று இருந்தால் இன்னும் ஆழ்ந்த நோக்குடன் விஜயம் செய்ய வேண்டும்.தத்த வெங்கடேஷ்வரா படம் வலைத்தளத்தில் இருந்து எடுத்தது கீழே.


அடுத்தபதிவு ஒரு திருமணம் பற்றியது.