புதன், 10 செப்டம்பர், 2014

பாரதியின் நினைவுகளில்.....


                                     பாரதியின் நினைவுகளில்........
                                     -----------------------------------


“ஆசை முகம் மறந்து போச்சே- இதை யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம்-எனில் நினைவு முகம் மறக்கலாமோ”
“வெண்ணிலவு நீ எனக்கு, மேவுகடல் நானுனக்கு
பண்ணின் சுதி நீஎனக்கு, பாட்டினிமை நானுனக்கு”
என் காதலியும் நானும் பாடிக்கொண்டிருந்தோம் (கனவில்தான்) ஒரு புகை மண்டலம் எழுந்தது. அதில் நிழல் போல் ஒரு உருவத்தின் பிரதி பலிப்பு தெரிந்தது. பாரதி போல் தெரிகிறதே.
“ வாரும் ஐயா, முண்டாசுக் கவிஞரே. . இன்று உன் நினைவு நாள். எங்களை அறியாமல் உம் பாட்டை முணு முணுத்துக் கொண்டிருந்தோம், உம்மிடம் சற்று உரையாட வேண்டும் . சௌகரியப்படுமா.?”
”என் பாட்டைப் பாடியே என்னை வரவழைத்து விட்டு சௌகரியப் படுமா என்று கேட்பதே சரியில்லையே.”
”உம் பாட்டைப் பாடினால் நீர் வந்து விடுவீரோ.?”
“ ஸ்ரீராமனின் நாம ஜெபம் நடக்கும் இடத்தில் எல்லாம் அனுமன் வந்திருப்பானாம். அது போல் என் பாட்டை ரசித்துப் பாடும் இடத்தில் நான் பிரத்தியட்சமாகி விடுவேன். இதை எல்லோரிடமும் கூறி விடாதே. பிறகு அவனவன் பாடத்துவங்கி விட்டால் என்னால் எல்லா இடத்துக்கும் போக முடியாது”
”கவிஞரே, உம்மிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் பதில் சொல்வீர்களா.?”
“அது நீ கேட்கும் கேள்வியைப் பொறுத்தது”
“ஐயா நீர் மறைந்தது 1921-ஆம் ஆண்டு. நாம அரசியல் சுதந்திரம் அடைந்தது 1947-ல். ஆனால் அதற்கும் முன்பே உன் வாழ் நாளிலேயே ’ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்று பாடினீர்களே அது எப்படி.”
“நான் மனசளவில் அப்போதே சுதந்திரம் பெற்று விட்டதாகக் கருதினேன்”
”மன்னிக்க வேண்டும் ஐயா. நீர் பெற்ற சுதந்திரத்தில் ‘பார்ப்பானை ஐயரென்ற காலம் போயிருக்கலாம் . வெள்ளைப் பரங்கியரை துரை என்ற காலமும் போயிருக்கலாம் ஆனால் பிற கருத்துக்கள் எல்லாமே வெறும் கருத்தாகவே கனவாகவே இருக்கிறதே.காலத்தை வென்றவன் கவிதை கதையாகிப் போய்விட்டதே. உம் நெஞ்சு பொறுக்கவில்லையா”
“ஏன் .. சுதந்திர நாளில் எங்கும் சுதந்திரம் என்று பேசவில்லையா.? எல்லோரும் சமம் என்று சொல்லவில்லையா.? நாமிருக்கும் நாடு நமதென்று அறிய வில்லையா? அது நமக்கே உரிமை என்று கூறவில்லையா?”
“கவிஞரே உணர்ச்சி வசப்படாமல் கேளுங்கள். மேலோட்டமாக சரிபோல் தோன்றினாலும் உண்மை நிலை வேறு என்று உங்களுக்கே தெரியும். எல்லோரும் ஒன்றென்னுங் காலம் வந்ததா, எல்லோரும் சமம் என்னும் நினைப்பு வந்ததா.?நல்லோர் பெரியோர் எனும் காலம் வந்ததா, , நயவஞ்சகக் காரருக்கு நாசம் வந்ததா.? பாரதியே உம்மை சங்கடப் படுத்த அல்ல இந்தக் கேள்விகள். உமது எண்ணங்களின் வெளிப்பாடே அக்கவிதைகள் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் சொல்வது என் ஆற்றாமையின் வெளிப்பாடு என்று உங்களுக்கும் தெரிய வேண்டும்.

விடுதலைப் பாட்டு பாடினீர்கள் பறையருக்கும் இங்கு தீய புலையருக்கும் விடுதலை என்றீர்கள். திறமை கொண்ட தீமை அற்ற  தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ்வமிந்த நாட்டிலே. எவ்வளவு அருமையான  சிந்தனையின் வெளிப்பாடு. கவிஞரே இதெல்லாமே இன்னும் வெறும் கனவாகத்தானே இருக்கிறது.பெயரளவில் நடந்து விட்டது போலும் நடந்து கொண்டிருப்பது போலும் தோன்றும் கானல் அல்லவா உண்மை நிலை.”
“நல்ல எழுச்சி மிக்க வரிகள் மக்களை உசுப்பேற்றி நல்ல வழிவகைக்கு அடிகோலும் என்று கண்ட கனவு வரிகள் அல்லவா அவை”
”முற்றிலும் உண்மை ஐயா..இருந்தாலும் நீங்கள் பாடிய பல வரிகள் பலவற்றில் நான் மிகவும் ரசித்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்”
“நீ ரசித்ததென்றால் ஏதேனும் சாரம் இருக்குமே. சொல். தெரிந்து கொள்ள விழைகிறேன்”
“ மரணத்தை வெல்லும் வழி என்னும் பாடலில் ‘முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுளென்றார். முடிவாக அவ்வுரையை நான் மேற்கொண்டேன்;அன்னோர்க
ளுரைத்த தன்றிச் செய்கையில்லை.அத்வைத நிலை கண்டால் மரணமுண்டோ?

முன்னோர்களுரைத்த பல சித்தரெல்லாம் முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்.
பொந்திலேயுள்ளாராம், வனத்திலெங்கோ புதர்களிலே இருப்பாராம், பொதியை மீதே சந்திலே, சவுத்தியிலே நிழலைப் போலே சற்றே யங்கங்கே தென் படுகின்றாராம்.. நொந்த புண்ணைக் குத்துவதில் பயனொன்றில்லை..நோவாலே மடிந்திட்டான் புத்தன்; கண்டீர் அந்தணனாம்  சங்கராச்சாரியன் மாண்டான்;அதற்கடுத்த இராமானுஜனும் போனான்;சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்; தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;பலர் புகழும் ராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;பார் மீது நான் சாகாதிருப்பேன் , காண்பீர்.! மலிவு கண்டீரிவ்வுண்மை, பொய் கூறேன் யான், மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே,நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர், நாணத்தைக் கவலையினை சினத்தைப் பொய்யை அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவுமங்கே அழிந்து போகும் “
“ஆம், ஆம், நான் எழுதியது தான்”

” ஒரு சந்தேகம் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குணாதிசயங்களை அழித்தவரா நீங்கள் , இந்த கால கட்டத்தில் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. வேடிக்கை மனிதர் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று கேட்ட நீங்களும் வீழ்ந்து பட்டாலும் உங்கள் கவிதை வரிகளால் சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்று உங்கள் உடலம் வீழ்ந்து பட்ட நாள். இருப்பினும் உங்கள் பாடல் வரிகளால் நிறைந்து எங்கும் இருக்கிறீர்கள். மன்னித்துக் கொள்ளுங்கள் . நாங்கள் பாடலைத் தொடர விரும்புகிறோம்
 ’கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுதில்லை, நண்ணுமுக வடிவு காணில் அந்த நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்’.....  “ 
(பாரதியின் நினைவுகள் அலை மோதுகின்றன. எழுதிக் கொண்டே போகலாம்.பதிவின் நீளம் கருதி  சிலவற்றையே பகிர்ந்திருக்கிறேன்)                





 
 
 

திங்கள், 8 செப்டம்பர், 2014

கீதைப் பதிவு -அத்தியாயம் -5


                           கீதைப்பதிவு  அத்தியாயம்--5
                            --------------------------------------
கீதோபதேசம்- கொண்டபள்ளி பொம்மை




ஸந்யாஸ யோகம்
அர்ஜுனன் சொன்னது
கிருஷ்ணா, கர்மத்தைத் துறக்கவும், பின்பு அதைக் கையாளவும் சொல்கின்றீர்.இவ்விரண்டிலும் சிறந்தது எது என்று நிச்சயிக்கப் பட்டதை எனக்கு சொல்லுங்கள்(1)
ஸ்ரீ பகவான் சொன்னது
கர்ம ஸந்யாஸம் , கர்ம யோகம், ஆகிய இரண்டும் சிறப்பைத் தருமெனினும் கர்ம ஸன்யாஸத்தைவிட கர்ம யோகம் மேலானது.(2)
பெருந்தோளுடையோய், வெறுப்பும் விருப்பும் இல்லாதவன் நித்திய ஸந்யாஸி எனப்படுகிறான். ஏனெனில் இருமைகள் அற்றவன் எளிதில் பந்தத்தில் இருந்து விடுபடுகிறான்(3)
சாங்க்யமும் யோகமும் வெவ்வேறு என்று பலரும் பகர்வர்.பண்டிதர் அங்ஙனம் பேசார்..இவற்றுள் ஒன்றை உறுதியாய் அனுஷ்டிப்பவன் இரண்டின் பலனையும் பெறுகிறான்(4)
சாங்க்யர் அடையும் பேற்றை யோகியரும் அடைகின்றனர்.சாங்க்யத்தையும் யோகத்தையும் ஒன்றாகக் காண்போன் உண்மை காண்கின்றான்.(5)
பெருந்தோள் படைத்தவா, கர்மயோகம் செய்யாது, கர்ம ஸந்யாஸம் பெறுதல் எளிதல்ல. கர்ம யோகம் செய்யும் முனிவனோ விரைவில் பிரம்மத்தை அடைகிறான்(6)
கர்மயோக நிஷ்டன், மனந்தெளிந்தவன்,உடலை வென்றவன், இந்திரியங்களை அடக்கியவன், தனது ஆத்மாவே உயிரனைத்துக்கும் ஆத்மாவெனக் காண்கிறவன் கர்மம் செயினும் கட்டுண்பதில்லை( அதில் ஒட்டுவதில்லை) (7)
தத்துவம் தெரிந்த யோகி, பார்க்கினும் கேட்பினும், தீண்டினும், மோப்பினும், அருந்தினும், நடக்கினும் , உறங்கினும், சுவாசிக்கினும், பேசினும்,கழிக்கினும், பிடிக்கினும், கண் திறக்கினும்,கண் மூடினும், பொறிகள் புலன்களில் போகின்றன என்று உறுதி கொண்டு “நான் ஒன்றையும் செய்கிறேன் இல்லை” என்று நினைப்பான்.(8,9)
பிரம்மத்தைச் சார்ந்து, பற்றுதலைத் துறந்து கர்மங்களை செய்பவன் நீரில் தாமரை இலை போன்று பாபத்தில் பந்தப் படுவதில்லை.(10)
யோகிகள் பற்றைத் துறந்து. சித்த சுத்திகாக வெறும் காயத்தாலும் ,மனதாலும், புத்தியினாலும் இந்திரியங்களாலுமே கர்மம் செய்கிறார்கள்.(11)
யோகி வினைப்பயனில் பற்றற்று, நிஷ்டையில் இருந்து உதிக்கும் சாந்தியை அடைகிறான். யோகம் செய்யாதவன், ஆசைக்கு வசப்பட்டு, பயனில் பற்று வைத்து பந்தப் படுகிறான்.(12)
தன்னை வசப்படுத்திய தேகியானவன் கர்மங்களையெல்லாம் விவேகத்தால் விலக்கி விட்டுஒன்றும் செய்யாதும், செய்விக்காதும் நவ வாயில் நக்ரில் (ஒன்பது துவாரங்களை உடைய உடலில்) இன்புற்றிருக்கிறான்.(13)
வினைத் தலைமை, வினை, வினைப்பயனைப் பெறுதல், ஆகியவைகளை இறைவன் உண்டு பண்ணவில்லை. இயற்கையே இங்ஙனம் செய்கிறது.(14)
யாருடைய பாப புண்யத்தையும் பரமாத்மா பொருட்படுத்துவது இல்லை. ஞானம் அக்ஞானத்தால் மூடப்பட்டிருக்கிறது.ஆதலால் உயிர்கள் மயக்கமடைகின்றன(15)
யாருடைய அக்ஞானம் ஆத்ம ஞானத்தால் அழிக்கப் படுகிறதோ, அவர்களுக்கு அந்த ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம் பொருளை விளக்குகிறது.(16)
பிரம்மத்தில் புத்தியை வைப்பவர், அதுவே தாமாயிருப்பவர், அதிலேயே உறுதியாய் இருப்பவர்,அதையே புகலிடம் ஆக்குபவர், ஞானத்தால் பாபங்களைப் போக்கடிப்பவர் பின்பு பிறப்பதில்லை.(17)
கல்வியடக்கமுடைய  பிராம்மண னிடத்தும், பசுவினிடத்தும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் கீழோனிடத்தும் ஞானிகள் சம திருஷ்டியே வைக்கின்றனர்.(18)
மனதை சம நிலையில் உறுதிப் படுத்தியவர்களால் இம்மையிலேயே இயற்கை வெல்லப் படுகிறது. பிரம்மம் சமநிலையுடையது, தோஷமற்றது,ஆகையால் அவர்கள் பிரம்மத்தில் நிலைத்து இருக்கிறார்கள்.(19)

பிரம்மத்தை அறிந்தவன், பிரம்மத்தில் நிலை பெற்றவன், உறுதியான அறிவை உடையவன் மனக் குழப்பம் அடையாதவன்.பிரியமானதைப் பெற்று இன்பமடைவதும் இல்லை, பிரியமில்லாததைப் பெற்றுத் துன்பமடைவதும் இல்லை.(20)
புறப் பொருட்களில் மனம் பற்றாதவன் ஆத்மாவில் இன்பம் எய்துகிறான். பிரம்ம சமாதியில் மனதை உடைய அம்மனிதன் அழியாத சுகத்தை அடைகிறான்.(21)
இந்திரிய விஷயங்களில் தோன்றிய போகங்களே துன்பத்துக்கு ஏது வானவை ஆகின்றன. குந்தியின் மகனே, ஆதி அந்தமுடைய அவைகளில் ஞானிகள் இன்பமுறுவதில்லை.(22)
இம்மையில் சரீரத்தை விடுவதற்கு முன்பு காமம், குரோதம், இவைகளின் வேகத்தைப் பொறுக்க வல்லவனே யோகி. அவனே இன்பம் துய்ப்பவன்(23)
ஆத்மாவில் இன்பம் துய்த்து, ஆத்மாவில் கிரீடித்து(விளையாடி), இன்னும் ஆத்மாவில் உள்ளொளி காணும் யோகி தானே பிரம்மமாகி பிரம்ம நிர்வாணத்தை அடைகிறான்(24)
தீவினைகளைக் களைந்து, ஐயங்களை அகற்றி, இந்திரியங்களை அடக்கி, எல்லா உயிர்களின் நன்மையில் மகிழ்வுறும் ரிஷிகள் பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.(25)
விருப்பு வெறுப்பினின்று விடுபட்டு, மனதை அடக்கி, ஆத்மஞானம் அடையப் பெற்ற ஸந்யாஸிகளுக்கு  யாண்டும் மோக்ஷம் உள்ளது.(26)
வெளி விஷயங்களை வெளியே வைத்து, கண்களைப் புருவங்களுக்கு இடையில் நிறுத்தி, மூக்கில் இயங்கும் பிராண அபான வாயுக்களைச் சமப் படுத்தி, இந்திரியம், மனம், புத்தி, இவைகளை அடக்கி, மோக்ஷத்தை நாடி, ஆசை , அச்சம், சினம், இவைகளை விட்டு முனியாயிருப்பவன் முக்தனே.(27,28)
யக்ஞம் தபசு இவைகளை அனுபவிப்பவனும் உலகனைத்துக்கும் ஈசனும், உயிர்களுக்கெல்லாம் நண்பனும் நான் என்று அறிபவன் சாந்தி அடைகிறான்,(29)
                     ஸந்யாஸ யோகம் நிறைவு.    .
                          
 

சனி, 6 செப்டம்பர், 2014

திருவோணம் நல் வாழ்த்துக்கள்.


                                        திருவோணம் நல் வாழ்த்துக்கள்
                                         -----------------------------------------------


ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப் படும் போது இந்த வேளையில்முதலில் அனைவருக்கும் “ ஓணாஷம்ஷகள்”
கடவுளின் தேசம் என்று கொண்டாடப்படும் கேரளத்தில் , முன்பு அங்கு சுபிட்சமாக ஆட்சிநடத்திய மகாபலிச் சக்கரவர்த்தி இந்த நாளில் மக்களைக் காண வருவதாக ஐதீகம் இந்த நாளை மக்கள் மகிழ்ச்சியுடன் ஒன்று சேர்ந்து மன்னனை சந்தோஷப்படுத்த கொண்டாடுவதாகவும் ஐதீகம்  
 இந்த மகாபலிச்சக்கரவர்த்தி யானவரை பகவான் வாமன ரூபம் எடுத்து வந்து கர்வம் அடக்கினார் என்பது கதை..மலையாளத் தொலைக் காட்சிகளில் மகாபலியின் வேடமணிந்து பலரும் வருவதாக நிகழ்ச்சிகள் காண்பிக்கப் படுகின்றன. அவர்களில் பலரும் நகைச் சுவை நாயகர்களாக ஏதேதோ சொல்லிப் போகிறார்கள். மகாபலியை கேலிக் கூத்தாக்குகிறார்கள் ஏன் என்று தெரியவில்லை. சுபிட்சமாக ஆண்ட ஒரு சக்கரவர்த்தியை நினைவு கூறும்போது கேலிச் சுவை ஏன்? அப்படி சுபிட்சமாக ஆட்சி புரிந்த அரசனின் அகந்தையை அடக்க மஹாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தாராம் இதோ அந்தக் கதை( முன்பு கடவுளின் அவதாரங்களை “அவதாரக் கதைகள்” என்னும் தலைப்பில் எழுதி வந்தேன் அதில் வாமனாவதாரக் கதை) 
.அவதாரக் கதை...பாகம்.....5.....வாமனனாக.

-----------------------------------------------------------

         ஆதிசிவனால் மூவுலகாள  வரம் பெற்ற, 
         திரி தூண்டி விளக்கணையாது காத்த கோயில் எலி,
         இரணியன் மகன், பிரஹலாதன் மகன், விரோசனன் 
         மகன் மகா பலியாகப் பிறந்தான்.( தது )

பெற்றவரம்  பலிக்க, வானவரையும் ஏனையவரையும் 
வென்று, மூவுலகாளும் பலி சக்கரவர்த்தி ஆனான். 

          வானவர்களின் தாய் அதிதி, அது கண்டு
          தன் மக்கள் நிலை கண்டு வருந்தி, 
          கச்சியப்ப  முனிவரிடம்  முறையீடு செய்ய,
          அவர் நோன்பு நோற்று, திருமாலை வழிபடு, 
          வழி ஒன்று பிறக்கும் என்றார்.அவளும் வழிபட,

திருநீலகண்டன்  அருள் பெற்று, மூவுலகாளும் பலி,
ஆணவத்தில் திளைக்கும்போது, அவனை நான்
அடக்குவேன், அதற்கென நாள் வரும்போதுன்
வயிற்றில் நான் வந்துதிப்பேன், என்றுரைத்த திருமால்,
அதிதி மகனாக வாமனாவதாரம் எடுத்தார்.

           வரம் மூலம் பெற்ற ஆட்சி நிலைக்க,
           அசுவமேத  யாகம் நடத்தி, யார்
           எதைக் கேட்பினும் நான் அதனைத் தருவேன்,
           என்று கூறி ,அதனைச் செய்தும் வந்தான்  பலி.

தக்க தருணம் வேண்டி நின்ற வாமனரூப
மகாவிஷ்ணு மகாபலியின் யாகசாலை வர,
வணங்கி வரவேற்கப்பட்டு , வேண்டியது
கேட்டுப்பெற, , வேண்டிக்கொள்ளப் பட்டான்.

           தான் ஒரு பிரம்மசாரிப்  பார்ப்பனன்,
           அவன் வாழ மூன்றடி நிலம் தந்தால்
           அதுவே போதும் நலமாயிருக்க என்ற,
           வாமனனுக்கு அது அளிக்க வேண்டாம்
           வந்திருப்பவன் பெருமாள் , அவனுன்னை
           அழிப்பான் என்று அறிவுரை  வழங்கினார்
           குல குரு சுக்கிராச்சாரியார்.

சொன்ன சொல் தவறேன், திருமாலுக்கே என்
தானம் என்றால் எனக்கது பெருமை, என்
குலம் தழைக்கும் என்றே  கூறிய  மகாபலி,
தானம் தர, நீர் வார்த்துத் தர  தயாராக
கிண்டி நீரை எடுக்க, வண்டாக மாறி,
அதன் துவார மறைத்தார், சுக்கிராச்சாரி .

            கிண்டி அடைப்பை நீக்க, எல்லாம்
            அறிந்த மாலும் தருப்பையால்  அதன்
            துவாரம் குத்த ,கண்ணொன்று  குருடாகி
            அலறியடித்து வெளியே வந்தது வண்டு.

மூன்றடி நிலம் பெற,
வரம் பெற்ற வாமனன்
நெடிதுயர்ந்து  ஓரடியாய்
வான மளந்து ,மறு அடியாய்
பூமி அளந்து ,மூன்றாம் அடிக்குக்,
கால் எங்கே வைக்க என்று
மகாபலியிடம்  வினவினான்.

           கைகூப்பித் தலை வணங்கி
           சொன்ன சொல் தவற மாட்டேன்
           தங்கள் மூன்றாம் அடி  என் தலை மேல்
           வைக்க , யான் பெருமை கொள்வேன்
           என்று கூறிய பலிச்சக்கரவர்த்தி
           பாதாளம் ஆள வரம் ஈந்து அவன்
          தலை மேல் கால் வைத்தான் பெருமான்.
        
   =================================
   ( அங்கும் இங்கும் கேட்டதையும், படித்ததையும் பகிரும் வண்ணம் 
        அவதாரக் கதைகள் எழுதுகிறேன். எழுதும்போது யாராவது  ஏதாவது 
      கேட்டால் என்னால் பதில் கூற இயலாது. என்பதையும் உணர்ந்து 
       இருக்கிறேன். எனக்கே உள்ள சந்தேகம் :--ஜெயன், விஜயன் இருவரும், 
       இரணியாட்சகன், இரணியன் என்ற இரட்டைப் பிறவிகளாக, கச்சியப்ப 
       முனிவருக்குப  பிறந்தனர். இரணியகசிபுவின் மகன் பிரகலாதன் 
       பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. வானவர்களின் தாயான 
       அதிதியின் கணவர் கச்சியப்ப முனிவர். இந்த அதிதியின் மகனாக 
       பிறந்தவர் வாமனர். சிந்தித்துப் பார்த்தால் தலைமுறை  சார்ந்த 
       உறவுகள் நெருடலாகத்  தெரிகிறது. 
       இதற்கு  விளக்கம்  கிடைத்தால் கடமை பட்டிருப்பேன். ) .          
  

     .              



வெள்ளி, 5 செப்டம்பர், 2014

கனமான பதிவுகளுக்கிடையே

                                        கனமான பதிவுகளுக்கு இடையே

                                             ஒரு காணொளிப் பதிவு.
                                            -----------------------------------
அண்மையில் எனக்கு பல காணொளிகள் வந்திருந்தன. நேரம் இன்மையாலும் எதைப் பதிவிடுவது எதை விடுவது என்று தெரியாமலுமிருந்தது. இருந்தாலும் ஒரு சிலக் காணொளிகள் என்னை பகிர் என்னைப் பகிர் என்று சொல்வது போல் இருந்தது. ஆகவே ஒரு சில வீடியோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.ஒரே ஒரு வேண்டுகோள். இவற்றை உங்கள் ரசனைக்கு ஏற்ப வரிசைப் படுத்தினால் இனி வரும் காலங்களில் எதைப் பகிரலாம் என்னும் ஒரு ஐடியா கிடைக்கும்( எல்லா வீடியோக்களையும் அவசியம் பாருங்கள் ரசிப்பீர்கள்)

        லேட்டா வந்தாலும் லேட்டெஸ்டாக வருவேன்  விநாயகன்

                            இதோ ஒரு நேர் காணல்-எப்பூடி இருக்கு.?

                             எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை
    தாயின் வயிற்றில் மிதந்த குழந்தைகள் , அதே நினைவிலா



இதோ ஒரு ஹோவர் கார். நம் சாலைகளுக்கு அவசியம் தேவை...!









வியாழன், 4 செப்டம்பர், 2014

கீதைப் பதிவு- அத்தியாயம் 4


                                  கீதைப் பதிவு -அத்தியாயம் 4.
                                  ---------------------------------------

கீதாச்சாரியன்



ஞானகர்மஸந்யாஸ யோகம்
ஸ்ரீ பகவான் சொன்னது.
அழிவற்ற இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்குப் (சூரியனுக்கு) பகர்ந்தேன். விவஸ்வான் மனுவுக்கு மொழிந்தான். மனு இஷ்வாகுவுக்கு உரைத்தான்(1)
இவ்வாறு பரம்பரையாக வந்துள்ள இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தார்கள்.பரந்தப, காலக்கிரமத்தில் அந்த யோகம் இவ்வுலகில் நஷ்டமடைந்தது.(2)
என் பக்தனாகவும் தோழனாகவும் இருக்கிறாய் ஆதலால், இப்பழைய அதே யோகமானது இன்று என்னால் உனக்கு இயம்பப் பட்டது.(3)
அர்ஜுனன் சொன்னது
உன் பிறப்புப் பிந்தியது விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. தாம் அன்று அவருக்குப் பகர்ந்தீர் என்பதை யான் அறிவது எங்ஙனம்?(4)
ஸ்ரீபகவான் சொன்னது
எனக்கும் உனக்கும் அர்ஜுனா,பிறவிகள் பல கழிந்து போயின.பரந்தபா அவற்றையெல்லாம் நான் அறிகிறேன்; நீ அறிய மாட்டாய்.(5)
நான் பிறப்பற்றவன் அழிவற்றவன், உயிர்களுக்கு எல்லாம் ஈசன் எனினும் என் பிரகிருதியை வசப்படுத்தி ஆத்ம மாயையினால் அவதரிக்கிறேன்.(6)
பாரதா, எப்பொழுதெல்லாம் அறம் அழிந்து போய் மறம் மேலெழுகிறதோ,அப்பொழுதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்(7)
நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிகிறேன்(8)
அர்ஜுனா, இஙஙனம் எனது திவ்வியப் பிறப்பையும் செயலையும் உள்ளபடி அறிபவன் உடலை நீத்து மறு பிறப்பு எய்துவதில்லை. என்னையே அடைகிறான்(9)
ஆசை, அச்சம் சினம் நீங்கியவர்களாய், என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து ஞான தபசால் புனிதர்களாய்ப் பலர் என் இயல்பை எய்தினர்(10)
யார் என்னை எப்படி வழிபடுகிறாரோ அவருக்கு நான் அப்படியே அருள் புரிகிறேன். பார்த்தா,மக்கள் யாண்டும் என் வழியையே பின் பற்றுகின்றனர்.(!!)
வினைப்பயனை விரும்புபவர்கள் இம்மையில் தேவதைகளைத் தொழுகின்றனர்.ஏனென்றால் வையகத்தில் வினைப்பயன் விரைவில் வாய்க்கிறது.(12)
குணத்துக்கும் கர்மத்துக்கும் ஏற்ப நான்கு வருணங்களை நான் படைத்தேன். அதற்கு கர்த்தா எனினும் என்னை நிர்விகாரி  என்றும் கர்த்தா அல்லாதவனாகவும்  என்றும் அறிக(!3)
கர்மங்கள் என்னைத் தீண்டா.எனக்குக் கர்ம பலனில் ஆசையில்லை இஙஙனம் என்னை அறிபவன் கர்மங்களில் கட்டுண்டு இருக்க மாட்டான்14)
முன்னாளைய முமுக்ஷுக்களும் (முக்தியை நாடியவர்கள்) இங்ஙனம் அறிந்து கர்மம் செய்தனர்.ஆகையால் நீயும் முன்னாளில் முன்னோர் செய்தபடி வினை ஆற்றுவாயாக. (15)
கர்மம் எது, அகர்மம் எது என்பதில் ஞானிகளே தடுமாற்றம் அடைகின்றனர்.எதைக் கர்மம் என்று அறிந்து ,கேட்டினின்று விடுபடுவாயோ அதை உனக்குப் பகர்வேன்(16)
கர்மத்தின் போக்கைத் தெரிய வேண்டும்.விலக்கப் பட்ட கர்மம் எது என்பது தெரிய வேண்டும்.கர்மத்தைக் கடந்த நிலையையும் தெரிய வேண்டும். கர்மத்தின் போக்கு அறிதற்கு அரியது.(17)
கர்மத்தில் அகர்மத்தையும் , அகர்மத்தில் கர்மத்தையும் காண்போன் மக்களுள் மேதாவி.அவனே யோகி, அவனே எல்லாம் செய்து முடித்தவன்(18)
எவனது கர்மங்கள் எல்லாம் ஆசையும் சங்கற்பமும் அற்றனவோ, எவனது கர்மங்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவோ.அவனைப் பண்டிதன் என்று ஞானிகள் பகர்கிறார்கள்.(19)
வினைப்பயனில் பற்றற்றவனாய், நித்திய திருப்தனாய். எதையும் சாராதவனாய் இருப்பவன் கர்மத்தில் ஈடுபட்டாலும்  அவன் கர்மம் செய்கிறவன் அல்லன்.(20)
ஆசையற்றவன், மனதையும், உடலையும்  அடக்கினவன், உடைமைகளைத் துறந்தவன், வெறும் உடலால் வினையாற்றுபவன் பாபத்தை அடைவதில்லை.(21)
தற்செயலாய்க் கிடைப்பதில் திருப்தி அடைபவன், இருமைகளைக் கடந்தவன், பொறாமை இல்லாதவன், வெற்றியிலும் தோல்வியிலும் நடுவு நிற்பவன் கர்மம் செய்தாலும் கட்டுப்படுவதில்லை (22)
பற்றிலனாய், முக்தனாய், ஞானத்தில் மனதை உறுதிப் படுத்தினவனாய் கடமையை யக்ஞமாகச் செய்பவனுடைய கர்மம் முழுதும் கரைந்து போகிறது.(23)
அர்ப்பணம் செய்தல் பிரம்மம்:;நெய் முதலிய ஹவிஸும் பிரம்மம்; பிரம்மமாகிய அக்னியில் பிரம்மத்தால் கொடுக்கப் படுகிறது. பிரம்மமாகிய கர்மத்தில் மனம் குவிந்து உள்ளவனால் பிரம்மமே அடையப் படுகிறது.(24)
சில யோகிகள் தேவதைகளுக்கு யாகம் செய்கிறார்கள்,இன்னும் சிலர் பிரம்மம் ஆகிய அக்னியில் ஆத்மாவைக் கொண்டு ஆத்மாவை ஹோமம் செய்கின்றனர்.(25)
அடக்குதல் என்ற அக்னியில் சிலர் செவி முதலிய இந்திரியங்களை ஹோமம் செய்கிறார்கள். மற்றும் சிலர் சப்தம் முதலிய விஷயங்களை இந்திரியங்கள் என்ற அக்னியில் ஹோமம் செய்கிறார்கள்(26)
இன்னும் சிலர் இந்திரிய கர்மங்களையும் , பிராண கர்மங்களையும். மனதை, ஆத்மாவின் கண் அடக்குதல் என்ற ஞான ஒளி வீசும்  யோகத் தீயில் ஆகுதியாகக் கொடுக்கின்றனர்.(27)
திரவிய யக்ஞம், தபோ யக்ஞம், யோக யக்ஞம் செய்வர் சிலர். தன்னடக்கமும்  உறுதியான விரதமும் உடைய மற்றவர் கற்றல் அறிதல் ஆகியவைகளை யாகமாகச் செய்வர்.(28)
அபான வாயுவில் பிராணனையும், பிராண வாயுவில் அபானனையும் (நாசியில்உட்கொள்ளும் வாயு அபானன் வெளிப்படுத்தும் வாயு பிராணன்) ஆகுதி செய்யும் சிலர், பிராண அபான வாயுக்களின் போக்கைத் தடுத்து பிராணா யாமத்தில் ஈடுபடுகின்றனர்.(29)
முறையாக உண்பவர் சிலர் பிராணனில் பிராணனைப் படைக்கின்றனர் .யாகத்தை அறிந்த இவர்கள் எல்லோரும் யாகத்தால் பாபத்தைப் போக்கியவர்களாம்.(30)
குருகுல சிரேஷ்டா, யக்ஞத்து எஞ்சும் அமுது உண்போர் அழியாப் பொருளாகிய பிரம்மத்தை அடைகிறார்கள். யக்ஞம் செய்யாதவருக்கு இவ்வுலகே இல்லையென்றால் அவ்வுலகேது.?(31)
இப்படி வேதத்தில் பல வித யாகங்கள் விவரிக்கப் பட்டிருக்கின்றன.அவை யாவும் கர்மத்தில் உண்டானவைள் என்று அறிந்து விடுதலை அடைவாயாக.(32)
பரந்தபா,(எதிரிகளை வாட்டுபவன்)பொருளைக் கொண்டு செய்யும் யக்ஞத்தை விட. ஞானயக்ஞம் மேலானது. பார்த்தா, கர்மம் முழுவதும் ஞானத்தில் முற்றுப் பெறுகிறது..(33)
பணிந்தும் கேட்டும் பணிவிடை செய்தும் நீ அதை அறிக. உண்மையை உணர்ந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள்.(34)
பாண்டவா, அந்த ஞானத்தைப் பெற்ற பின் நீ இப்படி மயக்கமடைய மாட்டாய். அந்த ஞானத்தால் எல்லா உயிர்களையும் உன்னிடத்தும் என்னிடத்தும் காண்பாய்.(35)
பாபிகளில் எல்லாம் நீ பெரும்பாபியாய் இருப்பினும், பாபங்களை எல்லாம் ஞானத் தெப்பத்தால் நீ கடந்து செல்வாய்.(36)
சுடர் விட்டெரியும் தீயானது விறகுகளைச் சாம்பல் ஆக்குவது போன்று, அர்ஜுனா,ஞானக் கனல் கர்மங்களை எல்லாம் சாம்பலாக்குகிறது.(37)
ஞானத்துக்கு ஒப்பானது, தூய்மை தரும் பாங்குடையது இவ்வுலகில் ஏதுமில்லை. யோக சித்தன் நாளடைவில் தன்னகத்தே இந்த ஞானத்தை பெறுகிறான்.(38)
சிரத்தை உடையவன் ,பரத்தைச் சார்ந்திருப்பவன்,புலன்களை வென்றவன், ஞானத்தைப் பெறுகிறான்.ஞானத்தைப் பெற்று விரைவில் மேலாம் சாந்தி அடைகிறான்.(39)
அறிவிலி, சிரத்தை இல்லாதவன் ஐயமுறுபவன் அழிவடைகிறான் .ஐயமுறுபவனுக்கு இவ்வுலகும் இல்லை, அவ்வுலகும் இன்பமும் இல்லை.(40)

யோகத்தால் கர்மத்தை விட்டு, ஞானத்தால் சம்சயத்தை அகற்றி, ஆத்ம சொரூபத்தில் திளைத்திருப்பவனை கர்மங்கள் தளைக்க மாட்டா(தளும்ப விடாது) தனஞ்செயா.(41)
ஆகையால், அக்ஞானத்தில் உதித்த  உள்ளத்திலுள்ளா ஆத்மாவைப் பற்றிய ஐயத்தை ஞான வாளால் வெட்டி, யோகத்தைக் கைக்கொண்டு பாரதா எழுந்திரு.(42)
                ஞான கர்ம ஸந்யாஸ யோகம் நிறைவு             
 

 
   

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

கீதைப் பதிவு -அத்தியாயம் -3


                                    கீதைப் பதிவு அத்தியாயம் -3
                                   ---------------------------------------


கர்ம யோகம் அத்தியாயம் -3
அர்ஜுனன் சொன்னது
ஜனார்தனா, கர்மத்தினும் ஞானம் சிறந்தது என்பது தம் கருத்தாயின். என்னை ஏன் கேசவா, கொடுவினையில் ஈடுபடுத்துகிறீர்.?(1)
முரண்படுவன போன்ற மொழிகளில் என் அறிவைக் குழப்புகிறீர் போலும் நான் நலம் பெறுவதற்கான ஒன்றை உறுதியாக இயம்பும்(2)
ஸ்ரீபகவான் சொன்னது
பாபமற்றவனே,நல்ல விசாரம் செய்கிறவர்களுக்கு ஞான யோகம் என்றும் அதை அனுஷ்டிக்கிறவர்களுக்கு கர்ம யோகமென்றும் இரண்டு நன்னெறிகள் முன்பே என்னால் இயம்பப் பட்டிருக்கின்றன. (3)
புருஷன் கர்மங்களை அனுஷ்டிக்காமையினால் கர்மாதீதத்தை அடைவதில்லை.வெறும் சன்னியாசத்தால் அவன் நிறை நிலையைப் பெறுவதுமில்லை.(4)
யாரும் ஒரு கணப் பொழுதேனும் செயலாற்றாதிருப்பதில்லை. ஏனென்றால் பிரகிருதியினின்று உதித்த குணங்களால் ஒவ்வொரு உயிரும் தன் வயமின்றி கர்மம் செய்விக்கப் படுகிறது(5)
கர்மேந்திரியங்களை அடக்கி , இந்திரிய விஷயங்களை மனதால் எண்ணிக் கொண்டிருக்கும் மூடன் பொய் ஒழுக்கமுடையவன் என்று பகரப் படுகிறான்(6)
அர்ஜுனா ஆனால் இந்திரியங்களை மனதால் அடக்கிப் பற்றற்று கர்மேந்திரியங்களைக் கொண்டு கர்மயோகம் செய்பவன் மேலானவனே(7)
நித்திய கர்மத்தை நீ செய். செயல் இன்மையைவிடச் செயல் சிறந்தது செயல் இலானுக்கு உடலைப் பேணுதல் கூட இயலாது.(8)
யக்ஞ கர்மம் தவிர மற்ற கர்மத்தால் இவ்வுலகம் கட்டுண்கிறது. குந்தியின் மைந்தா, யக்ஞத்துக்கான கர்மத்தைப் பற்றற்று நன்கியற்று.(9)
சிருஷ்டித் துவக்கத்தில் பிரம்மதேவன் யக்ஞத்தோடே பிரஜைகளைப் படைத்து “இதனால் விருத்தியடையுங்கள், இது உங்களுக்குக் காமதேனுவாகட்டும்” என்றார்(10)
இதனால் தேவர்ளைப் பேணுங்கள்.தேவர்கள் உங்களைப் பேணட்டும் பரஸ்பரம் பேணி பெருநன்மை எய்துவீர்.(11)
“யாகத்தால் பேணப்பெற்ற தேவர்கள் உங்களுக்கு நாடிய போகங்களை நல்குவார்கள” அங்ஙனம் அவர்களால் கொடுக்கப் பெற்று அவர்களுக்குக் கைம்மாறு அளிக்காது நுகர்பவன் திருடன்.(12)
யாகத்தில் மிஞ்சியதை உண்ணும் நல்லோர் எல்லாப் பாபங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.ஆனால் தங்கள் பொருட்டே சமைக்கும் பாபிகள் பாபத்தை உண்கின்றனர்(13)
உணவினின்று உயிர்கள் உண்டாகின்றன.மழையினின்று உணவு உருப்படுகிறது.யக்ஞத்திலிருந்து மழை வருகிறது.யக்ஞத்துக்குப் பிறப்பிடம் கர்மம்(14)
கர்மம் வேதத்தினின்று உதித்ததென அறிக.வேதம் பரமாத்மாவிடமிருந்து வந்தது. ஆகையால் எங்கும் நிறைந்துள்ள வேதம் யாண்டும் யக்ஞத்தில் நிலைபெற்றுள்ளது.(15)
இகத்தில் இங்ஙனம் இயக்கப்பெற்றுள்ள சக்கரத்தைப் பின் பற்றாதவன்,ஓ பார்த்தா,பாபவாழ்க்கை உடையோனாய், புலன்களில் பொருந்தினவனாய், வீணே  வாழ்கிறான்.(16)
ஆனால் ஆத்மாவில் இன்புற்று, ஆத்மாவில் திருப்தியடைந்து, ஆத்மாவில் மகிழ்ந்திருப்பவனுக்கு வினையாற்றும் கடமையில்லை.(17)
அவனுக்குக் கர்மம்செய்து ஒன்றைப் பெறுதலும், செய்யாது எதையாவது இழத்தலும் இல்லை.ஏதாவது பொருளைநாடி உயிர்களைச் சார்ந்திருப்பதும் அவனுக்கு இல்லை.(18)
ஆகையால் யாண்டும் பற்றற்றுப் பண்புடன் பெருவினையாற்றுக. ஏனென்றால் பற்றற்றுத் தொழில் புரியும் புருஷனே பெரு நிலையைப் பெறுகிறான்.(19)
ஜனகர் முதலானவர்கள் கர்மத்தாலேயே முக்தி அடைந்தார்கள்.உலகத்தை நல் வழியில் நடத்துதலை நன்குணர்ந்தாவது கர்மஞ் செய்யக் கடமைப் பட்டிரு.(20)
மேலோன் எதைச் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின் பற்றுகின்றனர்.அவன் எதைப் பிரமாணமாக்குகிறானோ அதையே உலகம் அனுசரிக்கிறது.(21)
பார்த்தா, மூவுலகிலும் எனக்குக் கடமையேதும் கிடையாது. அடையாத ஒன்றை இனி அடைந்தாக வேண்டும் என்பதும் இல்லவே இல்லை.ஆயினும் நான் கர்மம் செய்து கொண்டே இருக்கிறேன்.(22)
அர்ஜுனா, நான் அயர்வின்றி எப்பொழுதும் கர்மத்தில் ஈடுபடாவிடில் மனிதர்களென் வழியையே யாண்டும் பின்பற்றுவர்.(23)
நான் கர்மம் செய்யாவிட்டால் இவ்வுலகங்கள் அழிந்துபோம். ஜாதிக்கலப்புக்கும் நானே கர்த்தாவாய் மக்களைக் கெடுத்தவன் ஆவேன்.(24)
பார்த்தா, பற்றுள்ளவராய்ப் பாமரர் கர்மம் செய்வதுபோல பண்டிதர் பற்றில்லாதாராய்ப் பாரினில்  பெருநெறி புகட்டுதற் பொருட்டுக் கர்மம் செய்ய வேண்டும்.(25)
ஞானியானவன் கர்மப் பற்றுள்ள அக்ஞானிகளிடத்து மனக்கலக்கத்தை உண்டு பண்ணலாகாது.எல்லா கர்மங்களிலும் தானே ஈடுபட்டுக் கொண்டு மற்றவர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.(26)
பிரகிருதியின் குணங்களால் யாண்டும் கர்மங்கள் செய்யப் படுகின்றன.அகங்காரத்தால் மோகமடைந்தவன்  ”நான் கர்த்தா” என்று நினைக்கிறான்.(27)
ஆனால் பெருந்தோளுடையோய், குண கர்மத்தின் தத்துவ ஞானியோ, குணங்கள் குணங்களில் பிரவ்ர்த்திக்கின்றன என்று பற்று வைப்பதில்லை.(28)
பிரகிருதியின் குணங்களால் மோகமடைந்து குணங்களின் தொழில்களில் பற்று வைக்கின்ற மந்த புத்தியினரைத் தெளிந்த அறிவுடையோர் கலங்கும்படி செய்யலாகாது(29)
கர்மங்களை எல்லாம் எனக்கர்ப்பணித்து, சித்தத்தை சைதன்யத்தில் வைத்து,ஆசையையும் மமகாரத்தையும் அகற்றி, மனக் கொதிப்பின்றிப் போர் புரிவாயாக.(30)
எனது இக்கோட்பாட்டை எம்மனிதர் சிரத்தையுடனும் பொறாமைப் படாமலும் பின் பற்றுகிறார்களோ அவர்கள் கூட வினையினின்று விடுபடுகிறார்கள்(31)
எனது இக்கொள்கையை மற்று யார் இகழ்ந்து பின் பற்றுவதில்லையோ, எவ்வித ஞானமும் விவேகமும் இல்லாத அம்மூடர்களைக் கெட்டுப் போனவர்களென்று அறிக.(32)
ஞானியும் தன் இயல்புக்கு ஏற்றபடி நடக்கிறான்.உயிர்கள் அவ்வவற்றின் குணங்களைப்   பின்பற்றுகின்றன.தடை செய்வதால் ஆவதென்ன.?(33)
இந்திரியங்களுக்கு விஷயங்களில் விருப்பு வெறுப்பு உண்டு.அவைகளுக்கு வசப்படலாகாது. அவைகளே அவனுக்குச் சத்துருக்கள்.(34)
நன்கு இயற்றப்படும் பரதர்மத்தைவிட, குணமில்லாத் தன் தர்மம் மேலானது. ஸ்வதர்மத்தில் இறப்பது மேல்.பிறர் தர்மம் பயம் தருவதாம்.(35)
அர்ஜுனன் சொன்னது
விருஷ்ணி குலத்தோய் இப்புருஷன் இச்சிக்காதிருந்தும் பலவந்தமாய் ஏவப்பட்டவனாய், எதனால் தள்ளுண்டு பாபம் செய்கிறான்.?(36)
ஸ்ரீபகவான் சொன்னது.
ரஜோ குணத்து உதித்த, இக்காமம்தான், இக்குரோதம்தான் எதையும் உண்ணவல்லது.;பெரும் பாபமுடையது; ஈண்டு இதை எதிரியென அறிக.(37)
நெருப்பானது புகையினாலும் கண்ணாடி அழுக்கினாலும் , சிசு கருப்பையினாலும் மூடப்பட்டிருப்பது போன்று ஞானம் ஆசையினால் மூடப் பட்டிருக்கிறது(38)
குந்தியின் மைந்தா,ஞானியின் நித்திய சத்துருவும், காம வடிவெடுத்ததும் ,நிரப்ப முடியாததும், போதும் எனாததும் ஆகிய இந்த ஆசையினால் மூடப்பட்டிருக்கிறது,(39)
இந்திரியங்களும் மனதும், புத்தியும் அதற்கு இருப்பிடம் என்று சொல்லப் படுகிறது.இவைகளால் இது ஞானத்தை மறைத்து மனிதனை மயக்குகிறது.(40)
ஆகையால் பரதவீர ,நீ முதலில் இந்திரியங்களை அடக்கி ஞான விக்ஞானத்தை அழிக்கின்ற பாப வடிவமான ஆசையை அறவே ஒழித்துவிடு.(41)
இந்திரியங்கள் (உடலினும்) பெரிதாம். அவற்றினும் மேலானது மனம். புத்தியோ மனத்தைவிடப் பெரியது.புத்திக்கும் உயர்ந்தது ஆத்மா.(42)

மஹாபாகுவே, இங்ஙனம் புத்தியிலும் மேலான ஆத்மாவால் ஆத்மாவை அடக்கி. வெல்ல முடியாததும் ஆசை வடிவு உடையதுமாகிய சத்துருவை அழைத்து விடுவாயாக.(43)
                   கர்ம யோகம் நிறைவு.