வியாழன், 28 செப்டம்பர், 2017

நவராத்திரி விழா


                                                     நவராத்திரி விழா
                                                     ----------------------------
நவராத்திரி விழா களை கட்டிக் கொண்டிருக்கிறது தேவியின்  உருவமாக நாளுக்கு ஒரு பெயருடன் அன்னையை வணங்குகிறர்கள் பலரது பதிவுகளைப் படிக்கும்  போது இன்ன நாளுக்கு இன்ன பெயர் கொண்டவள் தேவி  , அவளை வணங்கும் முறைகளும்  கூறு கிறார்கள் ஆனால் எனக்கு அது எல்லாம்  உடன் பாடு இல்லை. இருந்தாலும் ஆண்டாண்டுகாலமாக  வண்ங்கி வருபவர்களின் மனம்  புண்படாதவாறு அதே சமயம்  கடவுளை  எந்த பெயரில் அழைத்தாலும்  அன்னையின்  சொரூபமாக  வணங்குவதே சரியாகும்   என்று தோன்றியதால் நானும்  விழாக்காலத்துக்கு  ஏற்பஒரு துதி பாடலை எழுதி இருக்கிறேன் ஒவ்வொரு ஆண்டும்  வீட்டில் கொலு வைப்பது என்மனைவியின்  வழக்கம்  ஆனால் அவளுக்கும் வயதாகி வருகிறதல்லவா சென்ற இரு ஆண்டுகளாககொலு வைப்பது நின்று விட்டாலும்   தினமும்  தவறாது  லலிதா சஹஸ்ர நாமத்துடன்  பூஜை செய்வது தொடர்கிறது

அணு அண்டம் பேரண்டம் அனைத்தையும்
இயக்கும் சக்தியே உன்னை நான் வணங்குகிறேன்.
உருவமும் பெயரும் ஏதுமில்லா உன்னை என்ன சொல்லி
போற்றுவேன் .மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வென்பேனா-
புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை- ஜெய மடந்தை என்பேனா-
சர்வசக்தி பொருந்திய  சர்வாங்க சுந்தரி என்பேனா--நான்
அவலத்தில் அழுந்தும்போது என் நாவினில் வந்தமரும்
முருகனும் நீயே,- கண்ணனும் நீயே- ஏனையோர் துதிக்கும்
எல்லா நாமங்களும் கொண்டவளும் நீயல்லவா- நீ என்
அப்பனல்லவா, அம்மையல்லவா, கண் துஞ்சாது எனைக்
காக்கும் தாரமல்லவா.- யாதுமாகி நிற்கும் தேவியே
கலை மகளே, அலை மகளே, மலைமகளே
உயிருள்ள,உயிரற்ற, அனைத்திலும் இருப்பவளே,
எனை ஈன்ற தாயின் தாயே- எல்லாம் நீயே
உனை நான் வணங்குகிறேன் –.! காத்தருள்வாய் சக்தியே


முன்பு வைத்த கொலுவின்  ஒரு படம்


 இந்தப் பாடலின் வரிகளை சுப்புத்தாத்தாவின்   குரலில் கேட்கலாமே 



ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

சொல்லற சும்மா இரு


                 சொல்லற சும்மா இரு
                -----------------------------------


  
அருணகிரி நாதருக்கு முருகன் உபதேசித்ததாகச் சொல்லப்படுவதே பதிவின்  தலைப்பு. இருந்தாலும்  சில அடிப்படை குணங்களை ஏன்  களைய வேண்டும்  என்றும்  தோன்றுகிறது  விஜய் டிவியில்  முருகன் தமிழ்க் கடவுள் என்னும் தொடர் வரப் போகிறதாம் கடவுளில் தமிழ்க் கடவுள் இங்கிலீஷ் கடவுள் என்றெல்லாம்  உண்டா  என்ன. பதிவு  அதைப் பற்றியதும் அல்ல. முருகனை எனக்கும் பிடிக்கும்  சிலகுணங்களாக சொல்லப்படுவதும்  பிடிக்கும் எனக்கும் முருகனுக்கும்  இருப்பதாக நான்  நினைக்கும் சில சமன்பாடுகளைக் குறித்து எழுதியும்  இருக்கிறேன்  பார்க்க

முருகனின் சொற்படி ஏதும் பேசாமல் சமாதி நிலையில் ஆழ்ந்திருந்த அருணகிரிநாதரை முருகன் ”நம் புகழ் பாடுக “எனவும் ஏதுமறியாதவன் என்ன பாடுவேன், எப்படிப் பாடுவேன் என்று கேட்க “முத்தைத் தரு “ என்று அடியெடுத்துக் கொடுக்க எழுந்த முதல் பாடலே
நாக்கைப் புரட்டும்   முத்தித் தரு பத்தித் திருநகை  எனத் துவங்கும் பாடல் முருகனின்  இப்பாடல் பொருள் தெரிந்தோ தெரியாமலோ மிகவும்  ரசித்துப் பாடப் படுகிறது இதன்  பொருள் எனக்குத் தெரியவில்லை வழக்கம்  போல இணையத்தின்  துணை நாடி பொருள் அறிந்தேன்   யான்  பெற்ற இன்பம்  இப்பதிவுலகும் பெறட்டுமே என்பதே நோக்கம்  முருகன்  சொன்ன படி சொல்லற சும்மா இரு என்றபடி இருக்க முடியவில்லை பதிவும் தேற வேண்டுமே  அதுவும் உபயோகமாக இருந்தால் நல்லதுதானே முதன் முதலில் முருகனடியெடுத்துக் கொடுக்க அருண கிரியார் எப்படி நாக்கைப் புரட்டும் இம்மாதிரிப் பாடலைப்பாட முடிந்தது என்னும் சந்தேகமும்  கூடவே வருகிறது
பாடலின்  வரிகளும் அதன்  பொருளும்
முத்தைத் தரு பத்தித் திரு நகை
அத்திக்கிறை சத்திச் சரவண்
முத்திக்கொரு வித்துக் குருபர                      எனவோதும்

முக்கட் பரமற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமு வர்க்கத்தமரரும்.........................அடிபேண

பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு, 
பட்டப்பகல் வட்டத் திகிரியில்...........................இரவாக

பத்தற்கிர தத்தைக் கடவிய

பச்சைப்புயல் மெச்சத் தருபொருள் 
பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் .........................ஒரு நாளே

 தித்தித்தெய ஒத்தப் பரிபுர, 
நிர்த்தப் பதம் வைத்துப் பயிரவி
திக்கொடகந டிக்கக் கழுகொடு.............................கழுதாட

திக்குப் பரி அட்டப் பயிரவர்

தொக்குத்தொகு தொக்குத்தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் த்ரிகடக........................................எனவோத

கொத்துப்பறை கொட்டக் களமிசை

குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென..............................முது கூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை

வெட்டிப் பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல.................................பெருமாளே

எனக்கு இப்பாடலைப் படிக்கவே சிரமமாய் இருக்கிறது சொலவதில் வெட்கம்  ஏதும் இல்லை பொருள் தெரிந்து படித்தால் மகிழ்ச்சியும் கூடுமல்லவா  முதலில் சில அருஞ்சொற்கள்

அத்திக்கிறை = தெய்வயானை அம்மைக்குத் தலைவர்
சுருதி = வேதம்;
ஒற்றைக்கிரி = ஒப்பற்ற மந்தரமலை. ;
திகிரி = சக்கரம்;
பச்சைப் புயல் = பச்சை மாமலை போல் மேனி கொண்ட திருமால்.
பரிபுர = சிலம்புகள் அணிந்த
கழுது = பேய்கள்;
சித்ரப் பவுரி= அழகிய கூத்து;
கொத்துப் பறை = கூட்டமாகப் பல பறை வாத்தியங்கள்;
முது கூகை = கிழக் கோட்டான்.;
கொட்பு = சுழலுதல்;
அவுணர் = அரக்கர்;
குலகிரி =கிரௌஞ்ச மலை
பொரவல = போர் செய்ய வல்ல
பெருமாளே = பெருமை மிகுந்தவரே.

பதவுரை

முத்தினைப் போல் ஒளிர்விடும் சிரிப்பினை உடைய தெய்வயானை அம்மையின் தலைவரே, அன்னை உமையவள் ஈன்றிட்ட சக்திவேல் ஏந்தும் சரவணபவ எனும் ஆறுமுக, முத்தி எனும் வீடு பெற வித்தாய் இருப்பவனே, தகப்பனுக்கே உபசரித்த குருவான பெருங் கடவுளே,/-

 என்றெல்லாம் உனை துதிக்கும் முக்கண்ணன் சிவபெருமானுக்கும் முந்தைய வேதத்தின்  முழுப் பொருளும் அடங்கும் ஓம் எனும் மந்திரத்தை உபதேசித்து, திருமால் பிரமன் முதலான முப்பத்து  முக்கோடி தேவரும் அடிபணிய ,/


- திக்குக்கு ஒரு தலை என்று பத்துத் தலை சிதற அம்பெய்தி அரக்கரை அழித்து, மந்தர மலை கொண்டு பாற்கடல் கடைந்து , சக்கரத்தால் சிலகணம் சூரியனை மறைத்து இரவாக்கி (ஜயத்திரனைக் கொல்ல வழிவகுத்த )/-


 பக்தனுக்குத் தேரோட்டிய,மரகதம் எனும் பச்சை மணி ஒத்திட்ட , அன்பர்க்குப் புயல்வேகத்தில் வந்தருளும் பச்சை மாமணி வண்ணனும் மெச்சுகின்ற பரம்பொருளே எனைப் பரிவுடனே ரட்சித்து அருள் புரியும் நாளும் உண்டோ என இறைஞ்சுகிறேனே. 

தித்தித்தெய் எனும் தாளத்துக்கு ஒப்ப சிலம்பொலி எழும்ப நர்த்தனம் செய்யும் பத்ரகாளி எல்லாதிக்கும் சுழன்றாட பிணங்கொத்தக் காத்திருக்கும் கழுகுகளுடன் பிணந்தின்னிப் பேய்களும் ஆட /-

 எட்டுத் திக்கிலிருந்தும் இவ்வுலகைக் காத்திடும் அட்ட பயிரவர் எனும் எண்மரும் இவ்வாட்டத்துக்கு ஏற்ப  த்ரிகடக என தாளமிடக்/


- கூடவே தாரை தமுக்கு எனும் பல வகை தாள வாத்தியங்களும் அதேகதியில் முழங்கிடவும், பலகாலம் வாழ்ந்திருந்த கிழக் கோட்டான்களும் குக்குக்குகு குக்குக்குகுகுகு ,குத்திப் புதை புக்குப் பிடி என்று குழறி வட்டமிட்டு எழ,/


-சிவனாரின் வரம் பெற்றவன் எனும் இணக்கத்தை மறந்து அசுரர்களை வெட்டிக் குவித்து அவுண குலத்துக்கு இசைவாய் நின்ற குலகிரி ( க்ரௌஞ்ச மலை.)யையும் வேலாலே குத்திப் பொடி செய்து அறவழியில் நின்றன்று போர் செய்த பெருமைக்கு உரியவரே

என்ன நண்பர்களே பதிவு நன்றா? பிடித்திருந்ததா. மனதில் பட்டதை எழுதுங்கள் .










  

புதன், 20 செப்டம்பர், 2017

எதிரும் புதிரும் கணவன் மனைவி


                        எதிரும்  புதிரும்   கணவன்  மனைவி
                       ----------------------------------------------------------
கணவன் – இந்த தீபாவளிக்கு உனக்குப் பட்டுப்புடவை
மனைவி-  எதை வெச்சு சொல்றீங்க
கணவ  - உன்  வளையலை வெச்சுத்தான் சொல்றேன்
                        =========
மனைவி- ஏங்க நம்ம பெண்ணுக்கு வயசாகிகிட்டே போகுதே.அவளுக்கு சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா
கணவன்  அழகா லட்சணமா  மாப்பிள்ளை கிடைக்கும்  வரை காத்திருக்கட்டும்டி
மனைவி- எங்கப்பா அப்படியா காத்திருந்தார்
                          ==========
கணவன் –என்ன இது மிக்சி க்ரைண்டர் புடவைன்னு  ஏகப்பட்ட  சாமான்களோட  வேன்ல வந்து இறங்கறெ
மனைவி- நீங்கதானே  சொன்னீங்க பேங்ல இருக்கற நம்ம ஜாயிண்ட் அக்கௌண்டை   க்லோஸ் செய்யணும்னு அதைத்தான்  செய்திட்டு வரேன்
                             =========
கணவன்  -ஏன் நான் உள்ளார வந்தவுடன்  கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கறெ
மனைவி- டாக்டர்தானே சொல்லி இருக்கார். தலைவலி வந்தவுடன் கண்ணாடி போட்டுக்கணும்னு
                             ===========                   
கணவன் = உங்கப்பா  பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம் அதுக்காக தங்க நகைகளுக்குப் பதில் வெண்கல நகைகளை செய்து போட்டால் என்ன அர்த்தம்
மனைவி – நீங்க எனக்கு மூன்றாவதா வந்த புருஷன்னு அர்த்தம்
                             ==========
மனைவி- நேத்து ராத்திரி கனவுலஎனக்கு நீங்க நிறைய நகை வாங்கித்தந்தீங்க தெரியுமா
கணவன் – ஓ தெரியுமே உங்கப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே
                             ==========
கணவன் –ஏண்டி எப்பப் பார்த்தாலும்  எரிஞ்சு  விழரே
மனைவி நீங்கதானே சொன்னீங்க  கோபப்படும்போது நான் அழகா இருக்கேன்னு
                              =========
மனைவி – நமக்குக் கல்யாணமாகி 10 வருஷங்கள் ஆச்சு
கணவன்  -எனக்கு மறந்து போச்சு
மனைவி- இது கூடவா
கணவன்  நல்லவிஷயங்கள் மட்டும்தான்  எனக்கு நினைவில் இருக்கு 
                            ==========
கணவன்  -ஏன்  இந்த மாசம் போன் பில் அதிகமா வந்திருக்கு
மனைவி – உங்கம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா தினமும்  எஸ்டி டி போட்டு சண்டை போட வேண்டியதா இருக்கு
                              ================                                                             
கணவன் – உனக்குத்தான்  ரெண்டு கண்ணும்  ஒழுங்கா இருக்கெ ஒழுங்கா அரிசில கல்லப் பொறுக்க மாட்டியா
மனைவி =உங்களுடைய 32 பல்லும் ஒழுங்காத்தானே இருக்கு  ரெண்டு மூணு கல்லைக் கடிச்சு சாப்ப்ட முடியாதா
                              ==============
மனைவி- என்ன பார்த்துகிட்டு இருக்கீங்க
கணவன் –ஒண்ணுமில்ல
மனைவி –ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மாரேஜ் சர்ட்டிஃபிகேட்ட பார்த்துட்டு இருக்கீங்க
கணவன் – எங்கேயாவது எக்ஸ்பைரி  டேட் போட்டிருக்கான்னு பார்க்கிறேன்
                          ============================= 

(எதுவும் என் கற்பனையல்ல)  
இந்தக் காணொளி பார்த்து ரசிக்கவும்  பொறாமை படவும்