புதன், 11 மார்ச், 2015

மீண்டும் தரம்.


                                     மீண்டும் தரம்
                                     ---------------------


தரம் பற்றிய ஒரு பரிசோதனை என்று ஒரு பதிவு சில நாட்களுக்கு முன் எழுதி இருந்தேன். பின்னூட்டங்களைப் பார்த்தபோது தரம் பற்றிய சரியான புரிதலுக்குப் பதிலாக அது நான் வாசகர்களை சோதிக்க எழுதியது என்றே பலரும் எண்ணியதாகத் தெரிந்தது.. பின்னூட்டங்களையும் அதற்காக நான் கொடுக்கும் மறு மொழிகளையும் பின்னூட்டமுட்டவர்கள் வாசிக்கிறார்களா தெரியவில்லை. திரு.திண்டுக்கல் தனபாலன் தரம் என்பது ISOவில் வேறு என்று எழுதி இருந்தார். எனக்குத் தெரிந்தவரை தரம் என்பது எல்லா இடங்களிலும் ஒன்றே, முதலில் தரம் என்பது என்ன என்னும் புரிதல் அவசியம் அதை ஓரளவுக்கு விளக்குகிறேன்
தினசரி  வாழ்வில்  சில விஷயங்களைப் பற்றி நிறையவே பேசுகிறோம்; கேள்விப்படுகிறோம். ஆனால் அந்த விஷயம் பற்றிய தெளிவு நமக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே. அப்படிப்பட்ட  ஒரு விஷயம் குவாலிடி  என்று  சொல்லப்படும்  தரம். உற்பத்தியாளர்களிடம்  தரம் பற்றிக்  கேட்டால்  கொடுக்கப்பட்டுள்ள   வரைமுறைக்குள்  இருப்பதே (Specification  limits ) தரம் என்பார்கள். வெகுஜனங்களிடம்  இது பற்றிக் கேட்டால் குறிப்பிட்டு  எந்த  பதிலும்  சரிவரக்  கிடைக்காது. பெரும்பாலோர்  தரம் பற்றிகருத்துக்  கூறுவது  ஏதோ  ஒரு யூகத்தின்  அடிப்படையிலேதான் .பலரும்  விளம்பரத்தின்  அடிப்படையிலேயே  தரம் பற்றிய எண்ணங்களைக்  கொள்கிறார்கள் .  

  
ஒரு  பொருளோ சேவையோ   தரமாகஇருக்கிறதா  யில்லையா  என்பதை  நிர்ணயம் செய்யும் நமக்கு அந்தப் பொருளைப்  பற்றிய விஷய  ஞானமோ  சேயல்திறனோ  முழுவதுமாக இருப்பதில்லை. அதை  ஓரளவு  விளக்கவே  இந்தக்  கட்டுரை.

தரம் அல்லது குவாலிடி என்றால் என்ன.? உபயோகிப்பவரின் தேவையைப பூர்த்தி செய்யும் திறன்  அந்தப் பொருளுக்கோ சேவைக்கோ இருநதால் அது  தரமாக உள்ளது என்று   கொள்ளலாமா.? தேவையைப்  பூர்த்தி செய்வதே  தரம் என்றால், அரிசி  உளுந்து    அரைத்து ஆவியில்  எடுக்கும் இட்லிசெய்யும் பணிஒன்றுதான்.  பசியாற்றும்,.  பின்  எதற்காக  அதன்  விலை வெவ்வேறு   இடங்களில்  வித்தியாசமாய் இருக்கிறது.? கையேந்திபவனில்  கிடைப்பதும் இட்லிதான் , ஸ்டார் ஹோட்டலில்  கிடைப்பதும் இட்லிதான். அதே அரிசி மாவு உளுந்து  மாவு, ஆவியில் வேக வைத்ததுதான். இட்லி உண்பவருக்கு  பசியாற்றல் , வயிறு நிறைத்தல்  மட்டுமின்றி  வேறு  எதிர்பார்ப்புகளும்  உண்டு.  
ஒரு தொலைக்காட்சிப் பெட்டி  வாங்குகிறோம். அதில் செய்திகள், சினிமா, பாடல்கள்  பார்க்க  முடிகிறது. நம்மில்  பெரும்பாலோருக்கு  டி வி  எப்படி செய்யப்படுகிறது என்றோ எப்படி வேலை  செய்கிறது என்றோ தெரியாது. இருந்தாலும்  அந்தப் பெட்டியைவிட  இது நல்லது, இது மோசம், என்று எதை  வைத்துக் கூறுகிறோம். தொலைக்காட்சிப்   பெட்டியில்  படம்  பார்ப்பதைத்  தவிர  நமக்கு வேறு எதிர்பார்ப்புகளும்   உண்டு. இதே  போல்  ஒவ்வொரு  பொருளுக்கும்  அது செய்யும் பணியை விட, உபயோகிப்பவருக்கு  வேறு  எதிர்பார்ப்புகள் உண்டு என்று தெரிகிறது.

தரம் என்பதன் முதல் அர்த்தம் அது உபயோகிகப்படக் கூடியதாய் இருக்க வேண்டும்.It should be fit for use. ஆனால் அது மாத்திரம்  போதாது. கையேந்தி பவனில், நின்று   கொண்டு, இலையோ தட்டோ, கையில்  பிடித்துக்கொண்டு  உண்ண  வேண்டும். அது   பசியைப்  போக்கும் பணியைச் செய்துவிடும். அந்தத் தேவை மட்டும் போதுமென்று  வருபவர்கள் கையேந்திபவனில்  உண்பார்கள். அதற்கு  அவர்கள்  கொடுக்கும் விலையும் குறைவு. அதே இட்லி, ஸ்டார் ஹோட்டல்களில் , குளிர்சாதன  அறையில் நல்ல  இருக்கைகளில்  அமர்ந்தவுடன் , உங்களைப்  பெரிய  மனிதராகப்  பாவித்து,  உங்களுக்குச்  சேவை  செய்ய, சீருடை  அணிந்த வெயிட்டர்கள், மெனு  கார்டை  உங்களிடம்  கொடுத்து, கையில் பேனா  புத்தகத்துடன்  உங்கள்  ஆர்டரைப்  பதிவு  செய்து , சிறந்த  தட்டு , ஸ்பூன் , போர்க் , போன்ற  கருவிகளுடன்  இட்லியை  அதற்கு   துணையாகச  சட்டினி  மிளகாய்ப்பொடி, இத்யாதி  வகைகளையும்  வைக்கும்போது , உங்களைப்பற்றிய  உங்கள்  கணிப்பு , உங்கள் மதிப்பு  உயருகிறது . இங்கு  இட்லி பசி  போக்கும் பணியுடன்  உங்கள்  மதிப்பை  உயர்த்தும்  பணியையும்  கூடவே  செய்கிறது.அதற்கு  ஏற்றாற்போல்  நீங்கள் செலவு செய்யும்  தொகையும்  அதிகம். அப்படி  செலவு  செய்யும் மக்களும்  நிறையவே இருக்கிறார்கள். கையேந்திபவன்  இட்லிக்கும்  ஸ்டார்  ஹோட்டல்  இட்லிக்கும் இட்லியைப்  பொறுத்தவரை  பெரிய வித்தியாசங்கள்துவும் இல்லை. கையேந்திபவனில் இட்லி  உண்பவரின்  தேவையும்  ஸ்டார் ஹோட்டலில்  இட்லி உண்பவரின் தேவையும் வித்தியாசப்படுகின்றன. ஆகவே, வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்வதே தரத்தின்  முக்கிய நோக்கம். தேவைக்குத்  தக்கபடி  விலையும் வித்தியாசப்படும்
.
வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை  பூர்த்தி செய்வதே   தரம்  என்று கொள்ளலாமா. ?எதிர்பார்ப்புகள்தான்  என்னவாக  இருக்கலாம்.? முக்கியமாக  நிர்ணயிக்கப்பட்ட  பணி நிறைவேற  வேண்டும். அதன் பிறகு  அதன் தோற்றம் , அது கொடுக்கப்படும்  விதம்    சேவை , அதன் விலை, (appearance, packing, service, reliability, price,) நம்பகத்தன்மை  போன்ற விஷயங்கள்  ஒரு பொருளின் தரத்தை  நிர்ணயம் செய்யும். இவை  எல்லாம் இருந்தாலும்  நமக்கு  தேவைப்பட்ட  நேரத்தில்  அந்தப் பொருள்  கிடைக்கா விடடால் பிரயோசனப்படாது. நிறைய  இடங்களில் வாங்கப்படும்  பொருள் பற்றிய விஷய   ஞானமே  இல்லாமல்  தரத்தைப் பற்றி நாம்  பேசுகிறோம். வாங்கும்  பொருளைப்  பற்றிய  நமது  தேர்வே  இறுதியானது. சந்தையில்  நமக்கு தேர்வு செய்ய சாய்ஸ்  நிறைய  இருநதால் அது வாங்குபவர்  சந்தையாகும். தேர்வு செய்ய வசதி  இல்லாமல் இருநதால் அது விற்பனையாளரின்  சந்தையாகிறது.  விற்கப்படும்  பொருளைப்பற்றியவிளம்பரம்வியாபாரத்தின் முக்கியஉத்தியாகும். ஆனால்வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகள்  திருப்தி அளிக்கப்படாவிட்டால்  எந்த விளம்பர  தந்திரமும்  நிலைக்காது.
ஐம்பது  பைசாவுக்கும்  சாக்கலேட்  கிடைக்கும், பத்து ரூபாய்க்கும்  சாக்கலேட் கிடைக்கும். எதிர்பார்ப்புகள்தான் வித்தியாசம். தினசரி வாழ்வில்  ஒரே பணியை செய்யக்கூடிய  சாதனங்கள் , பொருட்கள், சேவைகள்  நிறையவே வந்து  விட்டன அவை எந்த அளவுக்கு வாடிக்கையாளரை  திருப்தி  செய்கிறது.?அதிக விலை கொடுத்து  வாங்குவதுதான்  பொருளின் தரத்துக்கு  உத்தரவாதம்என்ற வாதம்சரியல்ல. தரம் என்பது  உற்பத்தி  செய்பவரால்  மட்டும் நிர்ணயிக்கப்  படுவதல்ல வாடிக்கை யாளரை  திருப்திப்  படுத்துவதே  தரத்தின்  முக்கிய பணி.
                  
நாம் நமக்கு அடுத்தவரை வாடிக்கையாளராக கருதத் தொடங்கினால் நம்முடைய
வாழ்க்கை  தரமுள்ளதாக  அமையும்.என்பது சொல்லாமலேயே விளங்கும்

இனி தரம் பற்றிய திரு. மர்ஃபியின் கருத்துக்களைப் பகிர்கிறேன்

1.உற்பத்தியில் ஏதாவது தவறு விளைவதாயிருந்தால்அது விளைந்தே தீரும்....!
2ஒரு உற்பத்திக் குவியலில் இருக்கும் தரமற்ற பொருள் சிறந்த வாடிக்கையாளருக்குப் போகும்.
3. தரமற்ற பொருள் என்று கண்டுபிடிக்கப் பட்டால் அதற்கான விலைஅதை விற்றவருக்கு ஏற்கனவே போயிருக்கும்
4. உற்பத்தியாகும் பொருளின் தரக் குறைவு அதைக் கண்டுபிடிக்கும் முந்தைய ஸ்டேஜில் நடந்திருக்கும்.
5.தரம் பற்றிய புரிதல் மிகக் குறைவாய் உள்ளவர்கள் அதை நிர்ணயிக்கும் விற்பனைப் பிரிவினரும் R&D பிரிவினருமாய் இருப்பார்கள்.
6.தரம் பற்றி அதிகம் குறைபட்டுக் கொள்கிற மேலாளரும் அதிகாரிகளும் அது பற்றிய புரிதல் சிறிதும் இல்லாதவர்களே.
7. ஒரு விலை உயர்ந்த பொருள் அதில் இருக்கும் விலை மிகக் குறைந்த சிறு பாகத்தால் பாதிப்படைந்து பழுதாகும்.
8. தரம் பற்றிய வகுப்புக்கு வர வேண்டியவர்கள் அப்போதுதான் தரக் குறைவான பொருளுக்காக  வேறெங்காவது மும்முரமாய்  fire fighting  செய்து கொண்டிருப்பார்கள்..
9.எந்த விற்பனையாளன் வாடிக்கை யாளரைக் குளிர்விக்க அதிகமாக ட்ரீட் செய்கிறானோ. அந்த விற்பனையாளனுக்கு தரம் பற்றிய அறிவே குறைவாய் இருக்கும்.
10. இந்த அதிக விலை மதிப்புள்ள டெக்னாலொஜி. காலத்தில் ஏதாவது தவறு நேர்ந்திருக்க வேண்டுமானால் அது ஏற்கனவே நிகழ்ந்ததாயிருக்கும்
11.தவறு நேர்வது இயற்கை, அதற்கு வருந்துவது டிவைன், தொடர்ந்து தவறு செய்வது  devilish.
மேலே சொல்லப் பட்டிருக்கும் கருத்துக்கள் தமாஷாக உரைக்கப் பட்டிருக்கும் அசல் உண்மைகள்.
முந்தைய பதிவில் திரு துளசிதரன் ISI மற்றும் ISO பற்றிக்கேட்டிருந்தார். அவற்றை பிறிதொரு சமயம் பதிவிடுகிறேன். ஆனால் அதற்கு முன் தரம் என்றால் என்ன என்று தெளிவிக்கவே இந்தப் பதிவு.

திங்கள், 9 மார்ச், 2015

எண்ணங்கள் எனது மட்டுமல்ல


                     எண்ணங்கள் எனது மட்டுமல்ல
                   ------------------------------------------------------


சில நாட்களுக்கு முன் தாய்மொழி எது என்று கேட்டு எழுதி இருந்தேன். தமிழில் எழுதும் என் வீட்டில் என்னோடு தமிழும் போகும் போலிருக்கிறது என்று அங்கலாய்த்திருந்தேன்.நான் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை மணந்தாலும் , என் மலையாளம் விட அவள் தமிழ் நன்றாக இருந்ததால் வீட்டில் தமிழே கோலோச்சியது.என் மகன்கள் இருவரும் மலையாளம் தாய்மொழியாகக் கொண்டு இருப்பவர்களையே மணந்தாலும் என் பேரக் குழந்தைகள் இரு மொழிகளிலும் பேச முடிந்தவர்களே. ஆனால் என் இரண்டாம் பேரன் வீட்டில் அவன் தாயுடன் மலையாளத்திலும் தந்தையுடன் ஆங்கிலத்திலும் பேசுகிறான். என் இளைய மகனும் அவன் தமிழில் பேச வேண்டும் என்று கட்டாயப் படுத்துவதில்லை. ஆனால் என் இளைய மகன் வீட்டுக்குப் போகும் போது நான் தமிழிலேயே பேசினாலும் அவனால் புரிந்து கொண்டு பதிலை ஆங்கிலத்திலேயே கூறுவான் இது இவ்வாறிருக்க ஒரு குறும்படம் என் கவனத்துக்கு வந்தது. அதில் சொல்லப் பட்ட விஷயங்கள் குறித்து வாசகர்களே அபிப்பிராயம் கூறலாம், கூறவும் வேண்டுகிறேன் நான் என்னைப் பொறுத்தவரை தமிழில் ஆர்வம் உடையவன் ஆனாலும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறேன் ஊமை விழிகளின் பதிவாசிரியர் சங்க காலப் பாடல்களுக்குப் பொருள் காணும் வழியைக் காட்டுகிறார். ஆனால் எனக்கோ தமிழில் உற்றாரைப் பேச வைப்பதே சவாலாக இருக்கிறது.
என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஒரு காணொளி கண்டு உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

மொழி பற்றிய இன்னொரு காணொளி. இதையும் ரசியுங்கள்



                                                --

சனி, 7 மார்ச், 2015

மகளிர் தின எண்ண ஓட்டங்கள்


                        மகளிர் தின எண்ண ஓட்டங்கள்
                       -----------------------------------------------
    
மகளிர் தினம்
எதேச்சையாக மகளிர் தினம்08-03-2015) நினைவுக்கு வந்தது. எந்த உந்துதலும் இல்லாத பொழுதே காதலர் தினம் நினைவுக்கு வருகிறது காதலர் பற்றி சிந்திப்பது அளவு மகளிர்தினம் பற்றி சிந்திப்பதில்லை. அப்படியே மகளிர் தின நினைவாக எழுதலாம் என்றால் பொதுவாக சாதனைகள் புரிந்த பெண்களைப் பற்றியோ வயிற்றைக் க்ழுவவே பாடுபடும் பெண்களைப் பற்றியோ எழுதுவதைக் கண்டிருக்கிறேன் நான் எழுதப் போவது சாதாரண இந்தியப் பெண்களைப் பற்றி. நீ எழுதுவதற்கு என்ன இருக்கிறது அதுதான் நாடே பேசும் INDIA’S DAUGHTER பற்றித்தான் எங்கும் செய்திகளாக இருக்கிறதே. அதைப் பற்றி நீ என்ன சொல்லப் போகிறாய் என்னும் முணுமுணுப்பு காதில் விழுகிறது
எனக்குள்ள பெண்க்ளை பற்றிய எண்ணங்களை நகைச்சுவையாகப் பல பதிவுகள் எழுதிவிட்டேன்
நம் நாட்டில் பெண் குழந்தைகளை விரும்புபவர் குறைவு என்று செய்திகள் சொல்கின்றன. ஆண்பெண் விகிதாச்சாரம் எடுத்துக்காட்டாகக் காட்டப் படுகிறதுஆனால் நான் அறிந்தவரை மத்தியதர வர்க்க வீடுகளில் பெண்களின் கையே ஓங்கி இருக்கிறது. பெண்களுக்காகத் தனிச் சலுகைகளை அரசும் அவ்வப்போது கொடுக்கிறது. ரயிலில் மகளிர்க்காகத் தனிப் பெட்டி. பேரூந்துகளில் தனி இருக்கைகள். இந்தச் சலுகைகள் ஏன் வழங்கப் படுகின்றன என்றால் மகளிரை ஆண்களுக்குச் சமமாக நினைக்க முடிவதில்லை. மகளிரை வீக்கர் செக்ஸ் என்று குறிப்பிட்டேபழகி விட்டோம். ஒரேவித வேலையில் மகளிருக்குக் கொடுக்கப் படும் சம்பளமும் பல இடங்களில் குறைவே இம்மாதிரியான எண்ணங்கள் காலங்காலமாகவே இருக்கிறது . நான் நம் நாட்டைப் பற்றிப் பேசுகிறேன். அதாவது ஒரு வித ஆணாதிக்க மனப் பான்மை நம் ரத்தத்தில் ஊறி விட்டது.
நம் நாட்டில் மிகப்பெரிதாகக் கருதும் ஆன்மீக நூலான பகவத் கீதையிலேயே பெண்களை தாழ்வாக நினைக்க வைக்கும் பகுதிகள் உள்ளன. உதாரணத்துக்கு
கீதைப் பதிவு அத்தியாயம் ஒன்பது சுலோகம் 32—”பார்த்தா, கீழான பிறவியர்களாகிய பெண்பாலர் வைசியர் சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்திருந்து நிச்சயமாகப் பரகதி அடைகின்றனர்.”
ஆண்டவன் என்று கருதப்பட்டு வந்த பரமாத்மா கிருஷ்ணனின் கூற்று இது நிலைமை இப்படி இருக்கும்போது பெண்ணியம் பெண்சுதந்திரம் என்று கூறுவோரில் பலரும் இந்த மனப்பான்மை யுடையவரை அலட்சியம் செய்கின்றனர் என்று பரவலாக நினைக்கப் படுவதில் ஆச்சரியமில்லை. இருந்தாலும் பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளுக்கு இவை காரணம் என்று சொல்லித் தப்பிக்க முடியாது
இயற்கையின் படைப்பில் ஆணும் பெண்ணும் சமமாகவே படைக்கப் பட்டிருக்கின்றனர். இயற்கையை ஒட்டியே அவர்கள் உடல் வாகு அமைந்திருக்கிறது. ஆணும் பெண்ணும் புணரும் போது  குழந்தைகள் உருவாகின்றன. ஆனால் அதுவே பெண்ணின் சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாது ஆணும் பெண்ணும் புணரும்போது அதன் பாதிப்புகள் பெண்களுக்கே அதிகம் . ஆகவே அவர்களை வீக்கர் செக்ஸ் என்று கருதக் கூடாது இந்த நினைப்பே பெண்களைப் போகப் பொருளாக எண்ண வைக்கிறது. நடப்பு நிகழ்வுகளை மனதில் கொண்டு பெண்களும்  தங்களைத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும்.  டெல்லியில் நடந்த ஒரு பெண்ணின் சீரழிப்பு இந்த நாட்டையே கொந்தளிக்க வைத்தது. சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் BBCயைச் சார்ந்த ஒருவர் ஒரு டாகுமெண்டரி படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதை இப்போது அரசும் தடை செய்து விட்டது. தண்டனையில் இருக்கும் ஒரு குற்றவாளி சொல்லி இருக்கும் கருத்துக்களே இவ்வளவு களேபரத்துக்கும் காரணம். எங்காவது ஏதாவது நிகழ்வு நடக்கக் காரணங்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன. ஒரு ரயில் விபத்து நடந்தாலும் காரணங்கள் அலசப் படுகின்றன. அவ்வாறிருக்க தண்டனையிலிருக்கும் குற்றவாளி ஒருவன் கூறுவது சர்ச்சைகளைக் கிளப்புகிறது. இதுவே சன்னியாசி என்று கருத படுபவராலும் தலைவர்கள் என்று கருதப் படுபவர்களாலும் சொல்லப் பட்டிருக்கின்றன. இம்மாதிரிக் கருத்துக்கள் எழக் காரணமே பெண்கள் தாழ்ந்தவர்கள் என்னும் எண்ணமே. பெண்களைப் போகப் பொருளாக நினைப்பவர்கள் குடிக்கு அடிமையாய் தன் வசம் இழந்து இருக்கும்போது செய்யும் குற்றங்களே வெளிச்சத்துக்கு வருகின்றன.நம்மைச் சுற்றி நடப்பது என்ன, நம்மைப் பற்றிய எண்ணங்களுக்கான காரணங்கள் என்னென்ன என்பதை மகளிர் அவசியம் அறிய வேண்டும்

நாம் என்னதான் வேண்டினாலும் ஒரு அழகான பெண் ஆணைக் கவருகிறார் என்பது தான் உண்மை. பல ஆண்களும் நல்லவர்கள் போல் இருப்பதற்குக் காரணம் அவர்களுக்குச் சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை என்பதுதான் பல பெண்களுக்கும் இது நன்றாகவே தெரியும் இருந்தாலும் பலரும் ஆண்களைக் கவரும் முயற்சி தங்களுக்குப் பாதகம் என்பதையும் உணர வேண்டும். சில பல சுதந்திரங்கள் அதற்கான விலையையும் பெறக்கூடும் நாட்டு நடப்புகளை அறியவும் அதைச் சமாளிப்பதற்கான மனத் திண்மையைப் பெறவும் பெண்கள் அறியவேண்டும் வருமுன் காத்தலே புத்திசாலித்தனம் வந்த பிறகு என்னதான் கூப்பாடு போட்டாலும் பாதிப்படைபவர்கள் பெண்களே.. இந்தப் பெண்கள் தினத்தில் இவற்றை முக்கியமாய் அறிய வேண்டியவர்கள் பெண்களே. அந்த விழிப்புணர்ச்சியை வலைப் பதிவுகளில் வளைய வரும் பெண்கள் அவசியம் வழங்கவேண்டும்.இதுவரை கொஞ்சம் சீரியசாகவே எழுதி விட்டேன்.
நடுத்தரக் குடும்பங்களில் ஆண்களின் கை மேலோங்கி இருப்பது போல் இருக்கும். ஆனால் உண்மையில் கீழே படித்துப்பாருங்களேன்

 கணவன்:- இன்றைக்கு நண்பர்கள் இருவரை டின்னருக்கு   அழைத்திருக்கிறேன் .என்ன சமையல் செய்கிறாய் ?
மனைவி:- நீங்கள் சொன்னபடி செய்தால் போச்சு .

கணவன்:-  அடை  அவியல்  செய்துவிடு
மனைவி:- அவியலுக்கான  காய் கறிகள்  இல்லையே.

கண்வன்:-அப்போது  வெஜிடபிள் புலாவ்  செய்கிறாயா?
மனைவி:- அவியலுக்கே  காய்கறிகள்  இல்லை  என்கிறேன்,வெஜிடபுள்  புலாவ்
எப்படி?

கணவன்:-  வெங்காய  சாம்பாரும்  உருளைக் கிழங்கு  பொடிமாசும்  செய்கிறாயா?
 மனைவி:- இரவு உணவில்  உருளைக் கிழங்கு  வாயு  உபத்திரவம்  தரும்.


கணவன்:-சோளே  பட்டுரா  செய்தால் நன்றாக  இருக்கும் இல்லையா?
மனைவி:- சோளே  பட்டுரா ரொம்ப ஹெவியாகி விடும்.

கணவன்:-அப்படியானால்  மாகி  நூடுல்ஸ் செய்கிறாயா?
மனைவி:- சேச்சே ! டின்னருக்கு  கூப்பிடுகிறீர்கள் . வயிறு நிறைய  வேண்டாமா.?

கணவன்:-சரி. இட்லி  சாம்பார்  செய்து விடு
மனைவி:-அதற்கு  முன்பே ப்ளான்  செய்திருக்க  வேண்டும் .இட்லிக்கு
 மாவு அரைக்க  வேண்டாமா?

கணவன்:-அப்போ   ஓட்டலிலிருந்து  ஏதாவது  தருவிக்கலாமா.?
மனைவி:- வீட்டுக்கு வரச்சொல்லிக்  கூப்பிட்டு  ஓட்டலில் இருந்து தருவிப்பதா?


கணவன்:-பின் என்னதான் செய்யப் போகிறாய்
மனைவி:- நீங்கள் சொன்னபடி செய்தால் போச்சு........!