Thursday, January 20, 2011

ITHU LANJAMAA . ?

இது  லஞ்சமா .?
=============
பாடறியேன்  படிப்பறியேன்  பள்ளிக்கூடம்  நானறியேன்  ஏடறியேன்  எழுத்தறியேன்  என்ற  நிலைதான்  எனக்கு  என்னுடைய  ஏழு  வயது  வரை. ப்ரீகேஜி ,எல்கேஜி, யுகேஜி , போன்ற  ஜீக்கள்  எல்லாம் அப்போது  கிடையாது. ஐந்து  வயதில்  பள்ளியில்  முதலாம்  வகுப்பில்  சேர்ப்பார்கள். எல்லாமே  அப்போதுதான்  ஆரம்பமாகும். என்  தந்தையின்  வேலை  நிமித்தமாகவும், என் தாயார்  இறந்திருந்த சமயத்திலும்  பள்ளியும்  படிப்பும்  ஏழு  வயது  வரை  எனக்குக்  கிடைக்கவில்லை. ஏழாம்  வயதில்  முதன்முதலில் சேரும்போதே  மூன்றாம்  வகுப்பில்  சேர்க்கப்பட்டேன். அரக்கோணம்  டவுன்  ஹால்  பள்ளி  என்று  நினைவு. ஐந்தாம்  வகுப்பு  வரை  ஒழுங்காகச்  சென்றுகொண்டிருந்த  என்  படிப்பு  ஆறாம்  வகுப்பில்  அதாவது  முதல் பாரம்  படிக்கும்போது  தடைபட்டது. டைபாய்ட்  ஜுரம், மற்றும்  தந்தைக்கு  பூனா  மாற்றம்  என்ற  களேபரத்தில் படிப்பு  தடைப் ப ட்டதோடு, பாலக்காட்டில்  பாட்டியுடன்  வாசம்  துவங்கியது. அங்கும்  ஓராண்டு  வீணாயிற்று. மறுபடியும்  என் தந்தைக்கு கோவைக்கு  மாற்றலாகி  என்னையும்  என்  தம்பியையும்  பள்ளியில்  சேர்க்க  முயற்சிகள்  நடந்தன. தடைபடாமல்  படிப்பு  தொடர்ந்திருந்தால்  நான் தேர்ட்  பாரம் படித்துக்  கொண்டிருக்கவேண்டும். அதனால்  அதே  வகுப்பில்  சேர்க்க வேண்டி  எங்களுக்கு  பாடங்கள்  சொல்லிக்  கொடுக்கப்பட்டது. ஆங்கிலத்தில்  C..A..T. CAT, R..A..T..  RAT  என்பது 
 போன்ற  புலமைக்கும், கணக்கில்  கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்  போன்றவற்றில்  திறமைக்கும் வழி  வகுக்கும் பொறுப்பு  எங்கள்  அண்ணாவிடம்  கொடுக்கப்பட்டது.  என்னைவிட சுமார்  ஐந்து  வயது  மூத்தவர். அவர் சொல்லச்சொல்ல  நாங்கள் அவற்றை  மறுபடியும்  கூறவேண்டும். பிறகு  கேள்விகள்  கேட்கப்பட்டு  பதில் தரப்பட  வேண்டும். அவர் முன்  சம்மணமிட்டு உட்கார்ந்திருப்போம். பதில்  தவறாக  வந்தால்  பளீர்  என  அடி  தொடையில்  விழும். துடைத்துகொண்டு  கண்ணீரும்  கம்பலையுமாக ( கம்பலை என்றால்  என்ன. ?) நாங்கள்  படிப்போம். பள்ளிக்கூடத்தில்  எங்களை  சேர்க்க  நாங்கள்  தயார்  படுத்தப்பட்டு  விட்டோம்  என்று  நம்பி, எங்களைப்  பள்ளிக்கு  அழைத்துச்  சென்றார்  எங்கள்  தந்தை. சென்ற  இடம்  கோவை  ராமநாதபுரம்  முனிசிபல் ஹைஸ்கூல். ஏற்கனவே  பள்ளி  திறக்கப்பட்டு  வகுப்புகள்  நடந்து  கொண்டிருந்தது. என்னை தேர்ட்  பார்மிலும்  என் தம்பியை  பர்ஸ்ட் பார்மிலும்  சேர்க்க  சோதனைத்  தேர்வு  நடத்தினார்கள். ஒரு  இலக்க மதிப்பெண்ணைத் தாண்டாத  எங்களை  பள்ளியில்  சேர்த்துக்கொள்ள  மறுத்து  விட்டார்கள்.

            மறுத்துவிட்டால்  எப்படி. ? நாங்கள்  படிக்கவேண்டுமே. அதே  பள்ளியில்  பாடம்  புகட்டிக்  கொண்டிருந்த  ஒரு  ஆசிரியரை  அணுகி, எங்கள்  தந்தையார்  எங்களைப்  பள்ளியில்  சேர்க்க  மார்க்கம்  கேட்டார். எங்களை  எப்படியாவது  பள்ளியில்  சேர்க்க  வேண்டும் என்று எங்கள்  தந்தையார்  குறியாக  இருப்பதை  உணர்ந்த  அந்த  ஆசிரியர்  எங்களைப்  பள்ளியில்  சேர்க்கும்  பொறுப்பை  ஏற்றார். எங்களைத்  தயார் செய்து ஒரு  மாதத்தில்  பள்ளியில்  சேர்க்க வேண்டும். அதற்கு  விலையாக  ரூபாய் 25- பேசப்பட்டது.
1950  ஆம்  வருடம்  இருபத்தைந்து  ரூபாய்  கொஞ்சம்  பெரிய  தொகைதான். இருந்தாலும்  வேறு  வழி  இல்லாமல்  அந்த  ஆசிரியரிடம்  நாங்கள்  ஒப்படைக்கப்பட்டோம். அவரும்  கர்ம  சிரத்தையுடன் எங்கள்  வீட்டுக்கு  தினம்  வந்து  பாடம்  சொல்லிக்  கொடுத்தார். ஒரு மாத  காலம்  கழிந்தது. மறுமுறை  தேர்வுக்கு  நாங்கள்  தயார் என்று  ஆசிரியர்  அறிவித்து  விட்டார். நாளைய  தேர்வுக்கு  கேட்கப்பட  இருக்கும்  கேள்விகளையும், அதற்கான  பதில்களையும்  அவரே  தயாரித்து  எங்களை  அவற்றை  மனப்பாடம் செய்ய  வேண்டினார். நாங்களும்  சரியென்று  தலையாட்டி, பலி  ஆடு  போல் தேர்வுக்குச்  சென்று, பரீட்சை  எழுதிப்  பாசும்  செய்துவிட்டோம்.

            காலாண்டு  தேர்வு  நெருங்கிக்  கொண்டிருந்த  நேரத்தில்  பள்ளியில்  சேர்க்கப்  பட்டோம். அந்த  வருட  இறுதிப்  பரீட்சையில்  மிக நல்ல  மார்க்குகள்  பெற்று  தேர்வடைந்தேன்  என்பது  கொசுறு  செய்தி. ( மூக்கில்லா  ராச்சியத்தில்  அரை  மூக்கன்  ராஜா  என்று  யாரோ  முணுமுணுப்பது  கேட்கிறது.) இவ்வளவு  விலாவாரியாக  நான்  இதை  எழுதக்  காரணமே,  எங்களைப்  பள்ளியில்  சேர்க்கப்  பேசப்பட்ட  பணம்  ரூபாய் 25-
என்றாலும், அதற்காக  அந்த  ஆசிரியர்  ஒரு  மாதம்  உழைத்திருக்கிறார்., வெறுமே  லஞ்சமாக  வாங்க  வில்லை  என்ற செய்திக்காகத்தான். லஞ்சத்திலும்  ஒரு நியாயம்  இருந்தது. இப்போது அப்படி  நடக்குமா. ? 
------------------------------------------------------------
     


 
 
    

17 comments:

 1. வெறுமே லஞ்சமாக வாங்க வில்லை என்ற செய்திக்காகத்தான். லஞ்சத்திலும் ஒரு நியாயம் இருந்தது. இப்போது அப்படி நடக்குமா. ?


  ......N - O = A BIG NO

  ReplyDelete
 2. சபாஷ் பாலு சார்.

  சுவாரஸ்யமான நினவுதிரும்பல்.

  //துடைத்துகொண்டு கண்ணீரும் கம்பலையுமாக (கம்பலை என்றால் என்ன?//

  நல்ல ஹ்யூமர் சென்ஸ் உங்களுக்கு.

  கம்பலை என்றால் ஆராவாரம்,சத்தம். சத்தமிட்டு அல்லது வாய்விடுடழுவதுதான் கம்பலை.

  திருஞானசம்பந்தரின் பாடலில் கம்பலை வரும்.

  //கொம்ப லைத்தழ கெய்திய நுண்ணிடைக் கோல வாள்மதி போலமு கத்திரண்
  டம்ப லைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்
  கம்ப லைத்தெழு காமுறு காளையர் காத லால்கழற் சேவடி கைதொழ
  அம்ப லத்துறை வான்அடி யார்க்கடை"சம்பந்தர், தேவராம்.

  என்ன சரிதானே ஹரணி?உங்க க்ளாஸ்ல நான் புகுந்துட்டேன்.அர்த்தத்தை நீங்க சொல்லிடுங்க என்னை விடவும் அழகாய்.

  நன்றி பாலு சார்.

  ReplyDelete
 3. நியாயம் தான் நீங்க கேட்ட கேள்வி.
  ஆனா , எனக்கு அது லஞ்சமா படல. tuition fee னு ஏத்துக்கலாம். இருந்தாலும் 25 ரூபா கொஞ்சம் அதிகம் தான்.

  ReplyDelete
 4. ஆராவாரம் இல்லை.ஆரவாரம்.

  வாய்விட்டழுவது வாய்விடுடழுவதாகிவிட்டது.

  ராத்திரி ஒம்பதரைக்கே கொட்டாவி வந்துடுச்சா.தப்பும் வந்துடுச்சு.

  திருத்திக்கோங்க ப்ளீஸ்.

  ReplyDelete
 5. Thank you so much chithra , nagasubramaniam, and sundarji for visiting my blog and comments.A special thanks to Sundarji for enlightening me with Thaevaaram, to explain the meaning of the word " kampalai"

  ReplyDelete
 6. நல்லதொரு நினைவாற்றால்.
  லஞ்சம்கூட லஞ்சமில்லாமல்...
  அருமை..

  ( மூக்கில்லா ராச்சியத்தில் அரை மூக்கன் ராஜா என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது.) நான் முணுமுணுக்கவேயில்லைமா..

  ReplyDelete
 7. இது ட்யூஷன் ஃபீஸ். லஞ்சம் இல்லைன்னு வச்சுக்கலாம்.

  நானும் சில குடும்ப நிலவரங்களால் எட்டாவது படிக்கும்போது அரைப்பரிட்சை எழுதுனதோடு பாக்கி நாட்கள் பள்ளிக்குப்போகலை. டிசி வாங்குனப்ப பழைய மதிப்பெண்களை வச்சு எட்டு பாஸ்ன்னு இருந்துச்சு.

  மறுபடி வேற ஊரில் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்த ரெண்டு மாசத்தில் பள்ளிக்கூடம் போக முடியலை. அந்த வருசம் மற்றொரு முக்கிய பணியில் இருந்து அடுத்தவருசம் ஒன்பது சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தேன். நல்லவேளை முந்தின வருசப் புத்தகங்களேதான் அந்த வருசத்துக்கும் என்பது கூடுதலான மகிழ்ச்சி வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு.

  ReplyDelete
 8. காசு வாங்கினாலும், அதற்காக உழைச்சிருக்காங்கன்னா நிச்சயமா அது ட்யூஷன் ஃபீஸ்தானே :-)

  ReplyDelete
 9. I don't think Rs.25/- is a bribe when it was agreed that you will be prepared to secure a seat.
  Your progress should have created an uncertainty with respect to your passing the entrance test. So to ensure result, the question was leaked out. That was anxiety reaction.

  Bribe can be defined as some thing that is demanded to do a service that is free or to supress certain facts or to divulge some confidential information.

  In this case the teacher had taught you and the money is a tution fee only.

  His service was a timely help and you should be thankful to him for ever.

  ReplyDelete
 10. ஒரு மாத உழைப்புக்கு 25 ரூபாய் ஆச்சர்யம்தான் ஐயா

  ReplyDelete

 11. @ கில்லர் ஜி
  சுட்டி பிடித்து வந்ததற்கு நன்றி ஜி

  ReplyDelete
 12. //லஞ்சத்திலும் ஒரு நியாயம் இருந்தது//

  //கம்பலை என்றால் என்ன ?//

  ரசித்த வரிகள் ஐயா.

  ReplyDelete
 13. "கம்பலை" என்றால் விசும்புதல் அல்லது குரல் எழுப்பி அழுதல் என்று பொருள் . "குரல் கம்முதல்" என்றால் குரலின் ஒலி குறைதல் என்று பொருள். குரல் எழுப்பாமல் அமைதியாக இரு என்பதற்கு கம்முன்னு கிட என்கிறோம் அல்லவா. ... குரல் கம்மவில்லை (கம்பலை)என்றால் அமைதியாக இல்லை. குரல் எழுப்பி அழுதகிறான் என்று பொருள் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete
  Replies
  1. வேறு ஒரு பதிவர் தெளிவாக்கி இருந்தார்

   Delete
 14. அந்த 25 ரூபாய் லஞ்சம் அல்ல சம்பளம் ... பாவம் அவருக்கு எப்படிப்பட்ட குடும்ப கஷ்டமோ? ... 5 வது வகுப்பிலிருந்து 8வது வகுப்பிற்கு ஸ்ட்ரைட்டா ஏணிவச்சு ஏத்தி விட்டாரே வாத்தி ... மகராசன் நல்லா இருக்கட்டும். >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete
  Replies
  1. அந்தக்காலத்த்ல் ரூஉ25 பெரிய தொகை

   Delete