Thursday, March 10, 2011

அதீத அன்பு......

அதீத அன்பு .......
-----------------
             இளையவன் வேலை மாற்றம் காரணம் அவனது 
             சென்னை வாசமும் மாற்றம் ஆகும். 
             சேதி கேட்டு சென்னை செல்ல விருப்பம் என்றேன்
            கூடவே என்றும் போல் என் மனைவியும்.

பயணச்சீட்டு வாங்காதீர்,
தபாலில் அனுப்புகிறேன் என்றே
தொலை பேசியில் தகவல் வந்தது. 

           நான் சாதாரணமானவன் ;பயணிப்பதும்
           விரும்புவதும் இரண்டாம் வகுப்பே. 
          என் மகனுக்கு அது ஒவ்வாது 
          பட்டது இதுவரை போதும் - இனி 
          பயணம் குளிர் வசதி வகுப்பில் -சதாப்தி 
          எக்ஸ்ப்ரஸில் என்றேஇட்டான் கட்டளை.
அழைத்துச்செல்ல வந்த மகனிடம் 
காரில் பயணிக்கையில் கூறிவிட்டேன் 
சென்னையில் செல்ல விரும்பும் இடங்கள்
இது இது என ஓர் பட்டியல்
 சரி சரி என்றே அவனும் தலையாட்டினான். 

            அவனுக்கென்று கிடைப்பது ஓய்வுக்காக
            வாரம் ஒரு நாள் விடுமுறை.
            அன்றவனை அலைக்கழிக்க விருப்பமில்லை
            நானே செல்லலாம் என்றால் முடியாது
            கூடவே வருவாள் என் துணைவி .           

காருக்கும் கால் டாக்சிக்கும் செலவு 
செய்ய என் மனம் ஒவ்வாது.  
என் காலே எனக்குதவி -அதற்கு
மேல் இருக்கிறது பேரூந்து வசதி
மேலும் செலவழித்தல் என் சக்திக்கு மிகுதி. 

            கூடவே கூடாது கூடிய வரை
            நான் கூட்டிப் போகிறேன் என்றே
           மகனும் உறுதி படக் கூறிவிட்டான்.
           நாளெல்லாம் பணி செய்து துவண்டு வரும் 
           மகன் முகம் கண்டால் எங்கும் 
           அழைத்துச் செல்ல கேட்காது மனசு .
          மனைவிக்கு போதும் ஆலயங்கள் தரிசனம்
          ஆங்கவளைக் கூட்டிச் செல்ல கூடவே
          நானும் வருதல் அவசியம்.
          அவள் பெரும் புண்ணியத்தில்
          எனக்கும் ஒரு பங்கு வேண்டாமா...

காருடன் ,வாகன ஓட்டுனருடன்
ஓரிரண்டு நாட்கள் உறவுகளைக்
காண ஒதுக்கப் பட்டது.

          நண்பர்களுக்கு என் வரவு அறிவிக்க
          வந்து காண அழைப்பு மேல் அழைப்பு வர
         கண்டிப்பாகக் கூறிவிட்டேன் -கைபேசி
         தொடர்பு போதாதென்றால் எனைக்காண
         அவர்கள்தான் வர வேண்டும் என்றேன். 

அன்பின் நெருக்கம் அவர்களை அழைத்துவர
அவர்களுடன் பயணித்தேன் என்னிலும்
மூத்த நண்பனைக் காண.

          ஈரைந்து நாட்கள் சென்னையில் வாசம்,
          பேரன் பேத்தியுடன் ஒரே உல்லாசம்.,
          மற்றபடி அது ஒரு ஜெயில் வாசம். 
    
நல்ல வேளை அங்கே இருந்தது ஒரு கணினி    
என்னிஷ்டம் போல் இயக்கவும் அனுமதி. 
வந்த நண்பர்க்கு காட்டினேன்
என் வலைப்பூ தரிசனம்
எனக்கு கொஞ்சம் எழுதவும் வரும்
என்றே அறிந்ததில் காட்டினர் ஆச்சரியம்
எழுதுவது நான்தானா இல்லை என்னுள்
இயங்கும் ஏதோ ஒரு குறளியா
என்றே காட்டினர் ஐயம். 

            எண்பத்தியேழு வயதிலும் ஓடியாடி
            வளைய வரும் அச்சுதானந்தன்
            கேரள முதல்வர்.
            குருவாயூர் அம்பலம் குழந்தைபோல்
            சுற்றி வந்த கருணாகரன் வயதோ
            தொண்ணூறு சொச்சம்.

எழுபத்திமூன்று வயதில் இளைஞன் என
உணரும் நான் காண்பவர் கண்ணுக்கு
தள்ளாத கிழவனாகத் தெரிகிறேன்.
எனக்கொரு வியாதியுமில்லை -உடல்
நலத்தில் ஒரு கேடும் இல்லை.
இருந்தாலும் என்னிஷ்டம்போல்
செயல்பட எனக்கு உரிமையில்லை.
வேகம் குறைந்தது ஒன்றே என் குறை.

          பூங்காவில் நடை பயின்று வர
          தாமதித்தால் கைபேசி அலறும்;
          இன்னும் சற்று தாமதமானால்
          ஆஜராயிருப்பான் அங்கே என் பேரன் 
          வீடு வந்தவுடன் பற்ற வைப்பான்
          தாத்தா நடக்கவில்லை ஓடுகிறார் என்று.
          குளிக்கையில் குழாய் நீர் கொட்டல் நின்று
          சில நொடித்துளிகள் ஆனதும்
          குளியலறைக் கதவு தட தடக்கும்.
          கனாக்கண்டு திடுக்கிட்டு விழித்தால்
          மூக்கருகே மனைவியின் கையோ என்று மயக்கம்

அதீத அன்பும் அக்கறையும்
சில நேரங்களில் திக்கு முக்காட்டுகிறது.   
சில நேரங்களில் எரிச்சலூட்டுகிறது. 

          மீண்டும் மீண்டும் உணர்கிறேன்
          செய்யாத குற்றத்துக்கு என் வயோதிகம்
          என்னவெல்லாம் அனுபவிக்குமோ....
=====================================

15 comments:

  1. அதீத அன்பும் அக்கறையும்
    சில நேரங்களில் திக்கு முக்காட்டுகிறது.
    சில நேரங்களில் எரிச்சலூட்டுகிறது.

    மீண்டும் மீண்டும் உணர்கிறேன்
    செய்யாத குற்றத்துக்கு என் வயோதிகம்
    என்னவெல்லாம் அனுபவிக்குமோ....


    .......very touching..... I hope that you focus only on the positive side of this.
    very nice write-up!

    ReplyDelete
  2. .......very touching..... I hope that you focus only on the positive side of this.
    தங்கை சித்ரா கூறியுள்ளதை வழிமொழிகிறேன்.
    எனக்குப் பிடித்தமானதும் அந்த பாஸிடிவ் பக்கமே..

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    நிறைய நடைமுறை சிரமங்கள்.

    ReplyDelete
  4. தன்னம்பிக்கை உள்ள வயதால் முதியவர்களைப்
    புரிந்துகொள்ள தங்கள் பதிவு நிச்சயம் உதவும்
    மிகச் சிறந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. // என் பேரன் வீடு வந்தவுடன் பற்ற வைப்பான் தாத்தா நடக்கவில்லை ஓடுகிறார் //

    உங்களின் இந்த உற்சாகமான உடற்பயிற்சிகள் 73 லிருந்து 103 க்கு மேல் இளமையுடன் ஓடவைக்கும்.

    வணக்கங்கள் பல உங்கள் வயதிற்கு!
    வாழ்த்துகள் பல உங்கள் ஊஞ்சலாடும் இளமைக்கு!

    தங்கள் மேல் அதீத அன்புடன் vgk

    ReplyDelete
  6. நிழலாய்ப் பின் தொடரும் அன்பை என்ன பெயர் சொல்லி அழைப்பது? அதுதான் நீங்களே சொல்லிவிட்டீர்களே அதீதம் என்று.

    யாரும் பயணிக்காத தடங்களில் சுவடு பதிப்பதுதான் உங்களின் ஸ்பெஷாலிடி பாலு சார்.

    ReplyDelete
  7. //வீடு வந்தவுடன் பற்ற வைப்பான்
    தாத்தா நடக்கவில்லை ஓடுகிறார் என்று.//

    //மீண்டும் மீண்டும் உணர்கிறேன்
    செய்யாத குற்றத்துக்கு என் வயோதிகம்
    என்னவெல்லாம் அனுபவிக்குமோ....//

    முதுமை இரண்டாம் குழந்தைப் பருவம்..
    அன்பு அதீதம் ஆனால் என்ன?
    இருந்துவிட்டுத் தான் போகட்டுமே...

    ReplyDelete
  8. வயதான காலத்தில் எல்லோராலும் கொண்டாடப்படுவது நான் செய்த பாக்கியம் நான் எல்லாவற்றையும் நேர்மறையாகவே அணுகுவேன்.சொல்ல வந்ததை கொஞசம் வித்தியாசமாக கூற முயன்றேன். அவ்வளவுதான். முதுமையின் பிரச்சனைகளை “பாசிடிவாகத்தான் ‘ எதிர்கொள்கிறேன். என் பால் அன்பு கொண்டு கருத்துகளை பகிர்ந்து கொண்ட சித்ரா, செல்வகுமார்,ரத்னவேல், ரமணி, வை.கோபாலகிருஷ்ணன், சுந்தர்ஜி, நாகசுப்பிரமணியம் அனைவருக்கும் என் நன்றி.

    ReplyDelete
  9. பொறாமையா இருக்குதுங்க.
    உங்கள் மகனையும் பேரப் பிள்ளைகளையும் நினைத்து

    ReplyDelete
  10. பேரன் பேத்தியுடன் ஒரே உல்லாசம்.,
    மற்றபடி அது ஒரு ஜெயில் வாசம். //
    உல்லாசச்சிறை?? அன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அன்பு சிவகுமாரா, ஆனால் நான் உன்னைப்பார்த்து பொறாமைப் படுகிறேன் பொறாமை என்று சொல்வதை விட பெருமை என்பதே சரியாக இருக்கும்.வாழ்க நீ வளமுடன். இராஜைராஜேஸ்வரி அம்மாவுக்கு வாழ்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  12. I will miss Prasad a lot, a nice bloke very similar to your blog......

    ReplyDelete
  13. சென்னை வாசமே கொஞ்சம் போரடிக்கும் தான். அதுவும் பங்களூரில் இருந்துட்டு சென்னை வெப்பமாய் வேறே இருக்கும்.

    அதீத அன்பு இருக்கத் தான் வேணும். ஒவ்வொருத்தரைக் கவனிக்கக் கூட ஆளில்லாமல் ஏங்கறாங்களே! இங்கே நம்மை என்னனு கேட்க ஆளிருக்கிறதைக் குறித்து சந்தோஷப் படணும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. பேரன் பேத்தியுடன் ஒரே உல்லாசம்.,
    மற்றபடி அது ஒரு ஜெயில் வாசம். //

    அன்பு சிறையில் அகப்பட்டு கொண்டீர்கள்.
    முதுமையை போற்றும் சுற்றம் கிடைத்தமைக்கு கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும்.
    நீங்கள் எழுதி இருப்பது அனைத்தும் உண்மை.

    ReplyDelete