Saturday, April 2, 2011

உஷ்..............! தொந்தரவு செய்யாதீர்கள்

உஷ் ..........!  தொந்தரவு செய்யாதீர்கள். 
--------------------------------------------------
 இலவசங்கள் எல்லோருக்கும் எப்போதும் கிடைப்பதில்லை. 
 எல்லாமே இலவசமும் இல்லையே, அதை வைத்தே 
 வாழ்க்கை வாழ முடியுமா, வாழ்வை ஓட்ட முடியுமா,?
 அடிப்படைத் தேவைக்கு உழைத்தே ஆக வேண்டுமல்லவா. ?
 ஓடியாடி, உழைத்துக் களைத்துஉறங்குகிறான் இவன் 
 ஓட்டு கேட்டு,  உஷ்...........!   தொந்தரவு செய்யாதீர்கள். 
        
            ஆலை சங்கின் ஓலத்துக்குக் கட்டுப்பட்டவன்,
             காலை முதல் மாலை வரை உழைக்க வேண்டியவன் ,
             கனவுத் தொழிற்சாலை கதாநாயகன் அல்ல இவன், 
            ஒரே பாட்டில் உழைத்து முன்னேறி லட்சங்கள் சேர்க்க 
             உழைப்பதாக பாவனை காட்ட முடியாது. 
             கதாநாயகன் கன்னியின் கைப் பிடிக்க .
             சுவை எல்லாம் கூடி விடும் திரைக் கதையில், 
             சுமை எல்லாம் முடிந்து விடும் அவன் வாழ்வில்.   
             அதற்குப் பிறகுதான் வாழ்வே துவங்கும் 
             சாமானியன் வாழ்க்கைப் பயணத்தில். 
             கனவுகளில் மகிழ்ந்து முறுவல் செய்யும் இவனை, 
             ஓட்டு கேட்டு  உஷ்.......! தொந்தரவு செய்யாதீர்கள். 

கண்மூடித் துயிலும் போதாவது இவனை 
அண்டி நிற்கும் அவலங்கள் சற்றே மறையட்டுமே, 
 நனவில் இயலாத எத்தனையோ ஆசைகள்
கனவுலகில் நடத்தியும் கண்டும் களிக்கின்றான்
வானில் பறக்கின்றான், வெள்ளியினைத் தொடுகின்றான்,
கூடவே காதலியின் கண் பார்த்து மகிழ்கின்றான்.
எண்ணாமலேயே துணிய முடிந்த கனவுலகில்
நன்றாகவே இவன் மிதக்கின்றான் -இவனை
ஓட்டு கேட்டு உஷ் .........! தொந்தரவு செய்யாதீர்கள்.

             தந்தையாகவும் தனயனாகவும் தான்படும் துயர் தீர்க்க
             வாழ்க்கைத் தேரின் அச்சாணி இவன் யாராரோ
             ஏவியதெல்லாம் செய்தாக வேண்டும் வாழ்வில்.
             அர்த்த மண்டபத்தில் அழகாகக் கொலுவிருக்கிறான்;
             ஆரங்கே ,மாதம் மும்மாரி மழை பொழிகிறதா,
             என்றே முழங்குகிறான். கைகட்டி, வாய் பொத்தி (?),
             பதிலளிக்கப் பலபேர் சூழ அழகாக
             ஆட்சி செய்து மகிழ்கிறான் கனவில் -இவனை
             ஓட்டு கேட்டு  உஷ் .........! தொந்தரவு செய்யாதீர்கள்.

ஓட்டு கேட்டு வரும் உங்களுக்கு,
இன்று மட்டும் இவனே ராஜா, இவனே மந்திரி,
இதனாலென்ன லாபம்... யாரையுமே என்றுமே,
எதற்கும் ஏவ இயலாதவன்தானேபாவம் -இவனை
ஓட்டு கேட்டு உஷ்.........! தொந்தரவு செய்யாதீர்கள்
==============================================.      






   

6 comments:

  1. நல்ல கவிதை ஐயா.

    ReplyDelete
  2. நல்லதொரு கற்பனையில் உதித்த நல்லதொரு கவிதை.

    ReplyDelete
  3. அயர்ந்து தூங்குகிறார்,
    உய‌ர்ந்த‌ க‌ன‌வுக‌ளோடு,
    அதில் அர‌சராய் ஆனாலும்
    ஆணையிட்டு அத‌ட்டாத‌வ‌ர்.

    ம‌க்க‌ளாட்சி ம‌ன்ன‌ரின் க‌ன‌வு வாக்கால் தான்
    சேவ‌க‌ர்க‌ளாய் தேர்வாகி அர‌ச‌ர்க‌ளாகி விடுகிறார்க‌ள்.
    தூங்கிய‌து போதும், விழித்து வாக்கிட்டு
    ஒழித்துக் க‌ட்டுவோம் ப‌ர‌ம்ப‌ரை ஆட்சியை.

    ReplyDelete
  4. இவை காலத்துக்கேற்ற வரிகள். மிக நன்கு அமைந்துள்ளது.
    கவிஞர்; கவிதாயினி என்று போட்டுக் கொள்பவர்களிலும்; உங்களுக்கு இயல்பாக வருகிறது.
    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete