Saturday, November 19, 2011

விபரீத உறவுகள்...

                            விபரீத உறவுகள் ( ஒரு சிறு கதை )
                            -------------------------------------------------    
                                             
( பதிவுலகில் ஒருவர் படம் எடுக்கப் போவதாகவும்,அதற்கு கதை தேர்வு செய்ய, 
  கதாசிரியர்களிடம் மனுப் போடும்படிக் கேட்டிருப்பதாகவும், செய்தி வந்தது. 
  கதைக்கான பாத்திரங்களும் நிகழ்வுகளும் கண் முன்னே விரிய கதை சொல்ல 
  நான் தயாராகிறேன் )


          ஆசுபத்திரியில் அவர் படுத்திருக்கிறார். தற்கொலை முயற்சி
இத்தனைக்கும் அவர் ஒரு மருத்துவர். ஏதோ வீரியம் இல்லாத
மருந்தைக் குடித்து வாந்தி எடுத்துக் கீழே விழ அவரைப் பார்க்க
வந்த அவருடைய நோயாளி வாடிக்கையாளர் யாரோ அவரை
அந்த ஆசுபத்திரியில் சேர்த்ததாகத் தெரிகிறது.

ஒரு ஃப்ளாஷ்பேக்:-  

          மருத்துவரும் அவருடைய தமக்கை என்று சொல்பவரும்
அவரது ஒரு மகன் மகளுடன் குடியிருக்கவும், மருத்துவம்
ப்ராக்டிஸ் செய்யவும், இடம் தேடிவர, “வீடு வாடகைக்கு “என்ற
போர்ட் போட்டிருந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்துகிறார்
கள்.கதவு திறந்தவுடன், ‘ நமஸ்காரம். மாடிவீடு காலியாக இருப்
பதாகச் சொன்னார்கள்.அதான் பார்க்கலாம் என்று.....” என்று
இழுத்தார்.

          வீட்டு சொந்தக்காரர் அவர்களைஒரு முறை பார்த்துவிட்டு,
“ உள்ளே வாருங்கள். நீங்கள் யார்.?உங்களைப் பற்றிய விவரங்கள்
சொல்லுங்கள். எங்களுக்குத் திருப்தியாக இருந்தால் வீட்டைக்
காட்டுகிறோம்”,என்றார்.

           “நான் ஒரு டாக்டர். நல்ல இடம் கிடைத்து நான் தொழில்
செய்தால் என்னால் பலரும் பயனடைவார்கள்”

           “இப்போது எங்கு ப்ராக்டிஸ் செய்கிறீர்கள்.?”

          ”தற்சமயம் மங்களூர் பக்கம் இருக்கிறேன்.இது என் அக்கா.
கண்வனை இழந்தவர். இரண்டு வளர்ந்த பிள்ளைகள்.இங்குதான்
பக்கத்தில் இருக்கிறார். நான் இங்கு வந்து மருத்துவம் ப்ராக்டிஸ்
செய்தால்,அவர்களுக்கும் உதவியாக இருக்கும். “

          “ஐயா, எனக்குத் தெரியாத ஊரிலிருந்து வருகிறீர்கள்.யார்
என்றும் தெரியாது. எப்படி சீடு கொடுக்க முடியும்.?”

          “இதே ஊரில் ஒரு தொழில் நிறுவனம் நடத்தும் ஒருவர்
எங்களுக்குப் பரிச்சயம். அவருடன் வருகிறோம். அவர் எங்களுக்கு
உத்தரவாதம் தருவார். அவருடன் நாளை வருகிறோம்.”என்று
சொல்லி அவர்கள் அனைவரும் கிளம்பினர்.

           சொன்னபடியேஅடுத்த நாள் அந்த தொழில் அதிபருடன்
அவர்கள் வந்தனர். அந்தத் தொழில் அதிபரையும் வீட்டுச் சொந்தக்
காரருக்குத் தெரியவில்லை.அவரும் அவரைப் பற்றிக் கூறிவிட்டு
அவருடைய விசிடிங் கார்ட் ஒன்றையும் கொடுத்தார். வந்தவர்கள்
நல்லவர்கள் என்றும் ,தவறாது வாடகை தருவார்கள் என்றும்
அதற்கு அவர் உத்தரவாதம் என்றும் கூறினார்.

         சிலருக்கு முகராசி என்று ஒன்று உண்டு. ஏதோ ஒரு
விதத்தில் மற்றவர்களை ஈர்க்கும் சக்தி உண்டு. இந்த மருத்துவர்
(இனி இவரை வைத்தியர் என்றேஅழைப்போம்.)ஆயுர்வேத
சிகிச்சையில் நிபுணராம். மசாஜிங் ,உழிச்சல் என்று ஏதேதோகூறி
வீட்டு சொந்தக்காரரை வீடு வாடகைக்கு விட சம்மதிக்க
வைத்தார்.

         நல்ல வாட்டசாட்டமான தேகம். மாநிறத்துக்கும் சற்றே
கூடுதல் நிறம். எப்பொழுதும் சிரிப்பு தவழும் முகம். மொத்தத்தில்
வீட்டுக்கு குடி வந்த சில நாட்களிலேயே சுற்று வட்டாரத்தில்
பிரபலமானார். ஏன், தூரத்து இடங்களிலிருந்தும் அவரைத் தேடி
வந்து சிகிச்சை பெற்றனர். வைத்தியருடைய சிகிச்சை கொஞ்சம்
காஸ்ட்லி விஷயம்தான். சாதாரணமாக மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் போலல்லாமல், நடக்க முடியாதவர்கள் , கொஞ்சம்
கைகால் விளங்காதவர்கள் ,ஏன் ஓரளவு மனநிலை பாதிக்கப்
பட்டவர்கள்கூட இருந்தனர். சில நோயாளிகளை வீட்டிலேயே
தங்க வைத்து ஒரு வாரம் பத்து நாட்கள் என்று சிகிச்சை அளிப்பார்.
மற்றபடி வந்து போகிறவர்கள்தான் அதிகம். அவருடைய தமக்கை,
அவர் பெண் வைத்தியருக்குக்கூடமாட ஒத்தாசைசெய்தனர் ஓரிரு
மாதங்களில் வைத்தியரின் வாழ்க்கை நிலையே மாறிவிட்டது.
வைத்தியர் எங்கும் நடந்து செல்ல மாட்டார். நோயாளிகளின்
உறவினர்கள் அவருக்கு ஆட்டோ ரிக்‌ஷாவோ, டாக்சியோ ஏற்பாடு
செய்து விடுவார்கள்.
     
          வீட்டு சொந்தக்காரருக்கு பல சந்தேகங்கள்.வைத்தியம்
பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமில்லாவிட்டாலும்
செலவு செய்ய வைக்கும் வைத்தியமே தொழிலாயிருந்தது.
இருந்தாலும் வைத்தியர் வீட்டில் வாஷிங் மெஷின், டிவீ,ஃப்ரிட்ஜ்,
உயர்ரக சோஃபா செட்கள், கட்டில்கள் எல்லாம் ஒன்றன்பின்
ஒன்றாய் வர ஆரம்பித்தது. வைத்தியரிடம் கேட்டே விட்டார்.

         “உங்கள் வருமானம் தொழிலிலிருந்து கிடைப்பது மட்டும்
தானா..இல்லை வேறு ஏதாவது சட்ட விரோதமாகச் செய்கிறீர்
களா. ? ஏனென்றால் பிற்பாடு எனக்குப் பிரச்சனையாகக் கூடாது
அல்லவா..அதனால்தான் கேட்கிறேன்.”

         “ஒவ்வொரு பைசாவும் தொழில் செய்து கிடைப்பதுதான்.
என்னிடம் மருத்துவம் செய்வது செலவு பிடிக்கக் கூடியது.
வேண்டுமானால் டீவி விளம்பரங்களில் வருகிறதே சில டாக்டர்
களுடைய மருத்துவம் பற்றி. விசாரித்துப் பாருங்களேன் “என்று
பதில் கூறிவிட்டார்.

        ஒரு நாள் வைத்தியரிடம் அவருக்குக் கல்யாணம் ஆயிற்றா
என்று கேட்டபோது, “எனக்கு வயது நாற்பது;கல்யாணமாகி இரு
குழந்தைகள் இருக்கிறார்கள். என் மனைவி என்னைவிட நன்கு
படித்தவர். பணக்காரி;என்னுடன் வாழப் பிடிக்காமல் பிள்ளை
களுடன் ஊரில் தனியே இருக்கிறார் “ என்றார்.

        “விவாகரத்து செய்து மறுமணம் செய்து கொள்ளலாமே ..
யோசிக்கவில்லையா.”

        “யோசனை இருக்கிறது. எனக்கு இங்கிருக்கும் என் அக்கா
மகளிடம் ஒரு ஆசை. அவளுக்கும் என்னிடம் விருப்பம்தான்.
எப்படி செயல்படுத்துவது என்று தெரியவில்லை :எனக் கூறினார்.

        அதற்கு வீட்டுக்காரர், “நான் வேண்டுமானால் உங்கள் அக்கா
விடம் பேசட்டுமா ?”என்று கேட்டார்.

         “வேண்டாம் ,வேண்டாம் அதற்கு நேரம் இன்னும்
வரவில்லை ”என்று தடுத்து விட்டார்.

         இருந்தாலும் வீட்டுக்காரர் சும்மாயிருக்கவில்லை. ஒருநாள்
அந்த அக்காளின் மகனிடம் ( இவன் பெரியவன் )அவன் தங்கைக்
கல்யாணம் பற்றி யோசிக்கவில்லையா என்று கேட்டார். அவனும்
அதற்கு”நேரம் காலம் கூடி வந்தால் செய்துவிட வேண்டியதுதான்”
என்றான்.

         ”ஏன் உன் மாமாவுக்கே உன் தங்கையைக் கலியாணம் செய்து
கொடுக்கலாம் இல்லையா.?”என்று வீட்டுக்காரர் எடுத்துக்
கொடுத்தார்.

         ”செய்து கொடுக்கலாம்தான் ஆனால் அம்மா இதற்கு சம்மதம்
தருவார்கள் என்று நம்பிக்கையில்லை “என்று பதில் கொடுத்தான்
அதற்கு மேலும் அவர்கள் சொந்த விஷயங்களில் தலையிடுவது
சரியாகாது என்று அந்தப் பேச்சை வீட்டுக்காரர் அத்துடன் விட்டு
விட்டார்.

            ஒரு நாள் வைத்தியரைத் தேடி ஒரு பெண்மணி வந்தாள்.
வைத்தியர் மணப்பெண் கேட்டு விளம்பரம் செய்ததாகவும் அவரை
பார்த்துப் பேசிவிட்டுப் போகலாம் என்று வந்ததாகவும் அந்தப்
பெண்மணி கூறினாள்.முப்பது முப்பத்தைந்து வயதுக்குள்
இருக்கலாம். குட்டை முடியுடன் பௌடர்,லிப்ஸ்டிக், எல்லாமும்
சேர்ந்த நவநாகரீக மங்கையாகத் தோன்றினார். அவள்
வைத்தியரைப் பார்க்கச்சென்ற சில நிமிடங்களிலேயே
அவசரமாகத் திரும்பிச் சென்று விட்டார்.

           அன்றிரவு பத்து மணியளவில் வைத்தியர் வீட்டிலிருந்து
“ஐயோ..ஐயோ.”என்ற சப்தம் கேட்டு வீட்டுச் சொந்தக்காரர் மேலே
ஓடிப்போய்ப் பார்த்தார். வைத்தியர் அக்காளின் மகனை மிதித்துக்
கொண்டிருந்தார்.அவரை விலக்கி விட்டு சற்றுக் கோபமாகவே
“இந்த மாதிரித் தொடர்ந்தால் உங்களை வீட்டைக் காலி செய்யச்
சொல்ல வேண்டி வரும் “ என்று எச்சரித்துவிட்டு வந்தார்.

           மறுநாள் காலை வைத்தியர் “இது மாதிரி இனி நடக்காது.
நான் உத்தரவாதம். சின்னப் பையன் பெரிய வார்த்தைகளால்
என்னைச் சீண்டினான்.அதுதான் நான் அப்படி நடக்க நேர்ந்தது.
மன்னித்துக் கொள்ளுங்கள்”என்று கேட்டுக் கொண்டார்.

           எல்லாக் குடும்பங்களிலும் மனஸ்தாபங்களும் சண்டை
சச்சரவுகளும் அவ்வப்போது நடப்பதுதானே என்று வீட்டுசொந்தக்
காரரும் சமாதானப் பட்டுக் கொண்டார்

          அன்று மாலை அந்த அக்காளின் மகளைக் காணவில்லை.
வைத்தியரும் அந்தப் பையனும் எங்கெல்லாமோதேடினர்.பெண்
கிடைக்கவில்லை. அதற்கு அடுத்த நாள் வைத்தியருக்கு சிபாரிசு
செய்த தொழில் அதிபரின் வீட்டில் அந்தப் பெண் இருப்பதாகத்
தகவல் வந்தது. அந்த அம்மாளிடம் பெண் வீட்டை விட்டுப் போன
தற்குக் காரணம் கேட்டபோது,அவர்கள் வீட்டுச் சொந்தக்காரர்
வீட்டுக்குள் வந்து ஏதோ சொல்ல ஆரம்பித்தார். அதைப் பார்த்த
வைத்தியர் ஓடிவந்து அவருடைய அக்காளைத் தரதரவென
இழுத்துக் கொண்டு போய் விட்டார். சற்று நேரத்தில் அந்த
அக்காளின் அலரல் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்
வீதிக்கு வந்து சத்தம் போட ஆரம்பித்து விட்டார். அழுது அலறி
சத்தம் போட்டது பெரிதில்லை. ஆனால் அவர் கூறிய
வார்த்தைகள் யாருமே எதிர் பார்க்காதது.

          “என்னை வைத்துக் கொண்டு ,காப்பாற்றுகிறேன் என்று
கூட்டிக் கொண்டு வந்து , இப்போது என் மகளையே மணம் பேசக்
கேட்கிறாயே,உனக்கு அம்மா போதாததற்கு மகளும் வேண்டுமா”
என்ற ரீதியில் ஊரைக் கூட்டி சத்தம் போட்டுக் கொண்டேயிருந்
தார். அவருடைய பேச்சும் அதன் முழு அர்த்தமும் விளங்குவ
தற்கே அங்கிருந்தவர்களுக்கு நேரம் தேவைப் பட்டது. அந்த
அம்மாள் அன்று வீட்டுக்கு வரவில்லை.

            இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வைத்தியருக்கு
அவமானம் அதிகமாயிற்று. போதாததற்கு வீட்டுச் சொந்தக்காரர்
இனி அந்த வீட்டில் அவருடைய அக்காள் என்று சொல்லிக்
கொண்டவருக்கு இடமில்லை என்றும் , கூடிய சீக்கிரத்தில்
வைத்தியரும் வீட்டைக் காலி செய்ய வேண்டுமென்றும்
கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

          வைத்தியரின் அக்காவை பல நாட்களுக்கு யாரும் பார்க்க
வில்லை. வைத்தியரும் வீட்டைக் காலி செய்து அதே தெருவில்
சற்றுத் தொலைவில் இன்னொரு வீட்டுக்குக் குடி போய் விட்டார்.

          வைத்தியரைத் தேடி நிறைய பேர் வரத் தொடங்கினார்கள்.
நிறையப் பேரிடம் கடன் வாங்கி இருந்திருக்கிறார். வீட்டு
வாடகைப் பத்திரத்தைக் காட்டி, (PROOF OF ADDRESS) நிறைய
வங்கிகளிலும் கடன் வாங்கி இருக்கிறார். அவர் வாங்கிய
( மருமகனுக்கு )மோட்டார் சைக்கிளுக்கு தவணை கட்டாததால்
அதனை மீட்க இரண்டு மூன்று அடியாட்கள் அவரைத் தேடிக்
கொண்டிருந்தனர். க்ரெடிட் கார்டுக்குப் பணம் கட்ட ஏகப்பட்ட
கடிதங்கள் வர ஆரம்பித்தன.

          இதன் நடுவே வீட்டு சொந்தக்காரர் சில நாட்கள் வெளியூர்
செல்ல வேண்டி இருந்தது திரும்பி வந்தபோது கேட்டசேதிதான்
முதல் பாராவில்கண்டது. சரி ,அவரைப் பார்க்கலாம் என்று
ஆசுபத்திரிக்குப் போனால் வைத்தியர் யாரிடமும் சொல்லிக்
கொள்ளாமல் எஸ் ஆகியிருந்தார்.
---------------------------------------------------------------------------


.
  
.

   

16 comments:

 1. இது தொடர்கதையா? பாதில நிக்குதே. கண்டின்யூபண்ணுங்க சார்.

  ReplyDelete
 2. நல்லா இருக்கு சார்... உண்மை கதையோ என்று நினைக்கும் அளவுக்கு நல்லா வந்திருக்கு... நான் வேறு எதுவோ நினைத்தேன்.. நல்ல வேளை அந்த அளவுக்கு போகவில்லை

  ReplyDelete
 3. கதை சுவாரஸ்யமாகப் போகுது
  அந்த டாக்டரைத் தொடர்ந்தே போனால்
  ஒரு நல்ல படிப்பினை ஊட்டும் நாவல்
  கிடைப்பதற்கான சாத்தியக் கூறு
  இருப்பதாகப் படுகிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. செம விறுவிறுப்பாகப் போகுது ஐயா, தொடர்ந்து எழுதுங்கள்....

  ReplyDelete
 5. விபரீத உறவுகள்..."
  சுவாரஸ்ய கதை!!

  ReplyDelete
 6. விபரீத உறவுகள்..."
  சுவாரஸ்ய கதை!!

  ReplyDelete
 7. இது கதையல்ல. நிஜ செய்தி. தினந்தோறும் நாளிதழ்களில் வெளி வருகின்றது.

  ReplyDelete
 8. @லக்ஷ்மி/
  இது தொடர்கதையல்ல சிறுகதைதான். ஆனால் இதில் வரும் நிகழ்வுகள் ஆங்காங்கே தொடருகின்றன. வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 9. @சூர்யஜீவா/
  இந்த அளவே பலரும் கருத்திடதயங்கக் காரணமோ என்று எண்ணுகிறேன். உண்மைக் கதை அல்ல. ஆனால் சில நிகழ்வுகள் நிஜம் .வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 10. @ரமணி/
  டாக்டரைத் தொடரக் கூடாதென்றுதான் ஒரு வேளை “எஸ் “ஆகிவிட்டாரோ.இதிலேயே நாவலுக்கான கரு இருப்பதாக நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 11. @உமேஷ்ஸ்ரீனிவாசன்/
  இதையே தொடர்ந்து எழுதுவதா.?இது ஒரு சிறுகதைதானே.நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 12. @இராஜைராஜேஸ்வரி/
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 13. @டாக்டர் கந்தசாமி/
  தினந்தோறும் நாளிதழ்களில் வருகிற செய்தியா. ?நான் ஏதோ எப்போதோ நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு கற்பனை கலந்து கதையாக்கி இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறேன். வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 14. தினத்தந்தி போன்ற பத்திகைகளில் அடிக்கடி வரும் சம்பவங்கள் தான் இவை. சுவைபட சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 15. ஒழுக்கச் சிக்கல்கள் இல்லையென்றால் வாழ்வில் ருசியில்லை.

  ReplyDelete