Thursday, November 3, 2011

ஏறி வந்த ஏணி.....

                              ஏறி வந்த ஏணி.....( ஒரு சிறு கதை )
                             ------------------------------------------------
  ஹாலில் நான் சேரில் அமர்ந்திருந்தேன்,பேருக்காக
பேப்பரை புரட்டியபடி.வாசல் பக்கம் யாரோ வந்தமாதிரி
இருந்தது.சடாரென்று எழுந்துபோய்ப் பார்த்தால் அங்கே,


அங்கிள், உங்களைத் தேடிக்கொண்டு ஒருத்தர் எங்கள்
வீட்டுக்கு வந்திருக்கிறார்.கீழே வரச் சொன்னாலும் வர
மாட்டேன் என்கிறார்.என்ன செய்ய...”என்று கூறிக்கொண்டு
உள்ளே வந்தாள் மாடிவீட்டுச் சிறுமி.

என் மனைவி அந்தப் பெண்ணுடன் சென்றாள். சிறிது நேரத்த்தில்
நண்பன் சேகரனுடன் கீழே இறங்கி வந்தாள்.வந்த சேகரன்
“தொப்”பென்று அங்கிருந்த சோஃபாவில் சாய்ந்தான். பிறகு ஒரு
அசட்டுச் சிரிப்புடன்,  “ தெரியாமல் மேல் வீட்டுக்குப் போய்
விட்டேன். நீங்கள் யாராவது வந்து கூட்டிக் கொண்டு வருவீர்கள்
என்று தெரியும் . அதனால்தான்....”என்று கூறினான். அவன்
பேச்சும் நடவடிக்கையும் அவன் குடித்திருக்கிறானோ என்று
சந்தேகப் பட வைத்தது. சைகையால் என் மனைவியிடம்
கேட்டேன். இல்லை என்று தலையாட்டினாள்.

சேகரன் களைப்புடன் காணப்பட்டான். “ நான் கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்துக் கொள்கிறேன்.பிறகு பேசலாம் “ என்று சோஃபாவில்
இன்னும் சாய்ந்துகொண்டு கண்களை மூடிக் கொண்டான்.

“ காஃபி டி ஏதாவது குடிக்கிறாயா, இல்லை நேராகவே சாப்பிட
லாமா “என்று கேட்டேன்

“சே ..சே.. ஒண்ணும் வேண்டாம்..இப்போதுதான் சாப்பிட்டு
வந்தேன் “..அவன் சொல்லும்போதே அது பொய் என்று
தெரிந்தது.

என் மனைவி எதுவும் கேட்டுக் கொண்டிருக்காமல் அவனுக்கு
சாப்பாடு எடுத்து வந்து , முன்னால் ஒரு ஸ்டூலில் வைத்துச்
சாப்பிடச் சொன்னாள். அவனும் கொஞ்ச தயக்கத்துக்குப்
பிறகு வேக வெகமாகச் சாப்பிடத் தொடங்கினான்.

சேகரன் ஒரு தனியார் தொழிற்சாலையில் ஃபோர்மேனாகப்
பணியாற்றி வந்தான்.சில மாதங்களுக்கு முன்பு அந்த
வேலையை விட்டுவிட்டு தனியாக ஏதோ தொழில் தொடங்கி
இருப்பதாகக் கூறியிருந்தான். தன் மனைவி, மகன் மகளுட்ன்
நன்றாகவே இருப்பதாகவும், ஒரு வீடு கட்டிக் கொண்டு
இருப்பதாகவும் கூறியிருந்தான். என்ன ஏது என்று துருவிக்
கேட்கும் பழக்கம் இல்லாதிருந்ததால் , மேற்கொண்டு எதுவும்
எனக்குத் தெரிய வில்லை. மகன் பெரியவன் டிகிரி முடித்து
வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும், பெண்
அப்போதுதான் படிப்பு முடித்திருந்ததாகவும் கேள்விப்பட்டேன்
என்னதான் வேண்டப் பட்டவர்களாக இருந்தாலும் சில கால
கட்டங்களில் அன்னியர்கள் போலத்தான் வாழ வேண்டி
உள்ளது.எது எப்படியிருந்தாலும் ஏதோ நல்ல படியாக இருக்
கிறார்கள் என்னும் சேதியே எல்லோரும் கேட்க விரும்புவது.

நான் சென்னைக்கு வரும்போது இரண்டு மூன்று நாட்கள் என்
மகனுடன் தங்குவேன். குறிப்பாகச் சொல்லப் போனால் ,
அத்தியாவசியமல்லாமல் எங்கும் போக மாட்டேன். கம்ப்ளீட்
ரெஸ்ட் தான்.

உணவு உட்கொண்டதும் சற்றே தெம்புடன் எங்களைப் பார்த்து
நலம் விசாரிக்க ஆரம்பித்தான். அவன் எங்களைப் பார்த்துப்
பேசிய விதத்தில் முகத்தில் ஏதோ வித்தியாசம் தெரிய என்ன
என்று கேட்டேன்.

“ எனக்கு ஒரு கண் சரியாகத் தெரிவதில்லை.சக்கரை வியாதி
என்று சொல்லுகிறார்கள் “

”டாக்டரிடம் காட்டிகண்ணுக்குக் கண்ணாடி வாங்கிக் கொண்
டிருக்கலாமே “,என்றேன்

“ இப்போது அது ஒன்றுதான் குறைச்சல் “,என்று முணு
முணுத்தான்.

” என்னையா, என்னாச்சு,?ஏதாவது ப்ராப்ளமா.?தொழில் எல்லாம்
சரியாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது ? “.

“ தொழில் என்று ஏதாவது இருந்தால்தானே சரியாகப் போக.”

“என்ன சொல்றெ நீ.?சொந்தத் தொழில் செய்வதாகத்தானே
சொல்லிக் கொண்டிருந்தாய்.வேலை என்னாயிற்று.?”

“ பின் என்னங்க..வேலை இல்லை சும்மா இருக்கிறேன் என்றா
சொல்லிக் கொள்ள முடியும்.”

“ வேலையிலிருந்து VRS வாங்கிக் கொண்டு தொழில் செய்வதாக
சொல்லிக் கொண்டிருந்தாயே”

“அதெல்லாம் சும்மா. VRS-ம் வாங்கலை, தொழிலும் செய்யலை.
என்னை அனுப்பி விட்டார்கள் “

“ அடடா...15/-வருஷத்துக்கு மேலா வேலையில் இருக்கும்
உன்னை எப்படி அவர்கள் அனுப்ப முடியும்.?”

“நான் வேலையிலிருந்தது ஒரு தனியார் தொழிற்சாலை-ன்னு
உங்களுக்குத் தெரியும்.அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால்
அனுப்பிவிடலாம். ஒன்றும் கேட்க முடியாது.”என்று சொல்லிக்
கொண்டு வந்தவன் கூறியதிலிருந்து,

மெக்கானிக்காகச் சேர்ந்தவன் ஃபோர்மனாகப் பதவி உயர்வு
பெற்று நன்றாகவே இருந்தான். ஒரு முறை வாடிக்கையாளர்
களுடனான ஒரு மீட்டிங்கில் இவனும் கலந்து கொண்டிருந்த
போது, வந்தவர்களுக்கு தண்ணீரும் காஃபியும் கொடுக்க
இவனுடைய அதிகாரி இவனிடம்கூறியிருக்கிறார். “நான்
என்ன ப்யூனா.. ஆஃபீஸ் பாயா...நனொரு ஃபோர்மன் என்னால்
முடியாது “ என்று இவன் கூறியிருக்கிறான். வந்தவர்கள்
முன்னால் எதிர்த்து வாயாடிய இவனுக்கு கல்தா கொடுத்து
விட்டார்கள்.இதை சொல்லவும் முடியாமல் மெல்லவும்
முடியாமல் எல்லோரிடமும் வீ.ஆர். எஸ் -ல்வந்து விட்டதாக
கூறி வந்திருக்கிறான்.

தன்னிலை உணர்ந்து கொள்ள முடியாதபடி ஈகோவும் அகம்
பாவமும் அவனை அலைக் கழித்துக் கஷ்டப்பட வைத்து
விட்டது. போதாக் குறைக்கு தொழிற்சாலையில் கிடைத்த
பணத்தில்வீடு கட்டத் துவங்கி முடிக்க முடியாமல் திண்டாடிக்
கொண்டிருந்தான். அங்கும் இங்கும் கடன் வாங்கி வட்டியும்
கட்டமுடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவன் நான்
சென்னை வந்தது எப்படியோ தெரிந்து , விலாசம் வாங்கி
என்னை காண வந்திருக்கிறான்.

“ சரி.. விஷயத்துக்கு வா ,”என்றேன்.

“என் பையனின் பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டும். இரண்டு
நாள்தான் இருக்கிறது. வீடு கட்ட வாங்கிய கடனுக்கு வட்டி
வேறு கட்ட வேண்டும்”

“பையன் டிகிரி முடித்து விட்டான் என்றல்லவா சொல்லி
இருந்தாய்.”

“எங்கே முடித்தான்...அரியர்ஸ் இருக்கிறது “

“எவ்வளவு பணம் தேவைப்படும்.?”

” இப்போதைக்கு ஒரு மூவாயிரம் தேவைப் படும்.”

”  இந்த மூவாயிரத்தால் உன் கஷ்டங்கள் தீர்ந்து விடுமா.?”

“கஷ்டம் எங்கே தீரும்...இப்போதைக்கு சமாளிக்கலாம்.
அவ்வளவுதான் “

“ நான் ஊர் விட்டு ஊர் வந்திருக்கிறேன். என்னிடம் அவ்வளவு
பண்ம் இல்லை.ஊருக்குப் போன பிறகு வேண்டுமானால்
முயற்சிக்கலாம். ஆனால் அது உன் பிரச்சனைக்குத் தீர்வு
ஆகாது. ‘என்று நான் சொன்னதும் அவன் முகம் வாடி விட்டது.

“ நம்பிக்கையோடு வந்தேன் “ என்றான்.

“ நீ எங்கிருக்கிறாய்.?உன் விலாசம் சொல்லு. நான் உன் வீடு
வந்து உன் மனைவியையும் மக்களையும் பார்க்க வேண்டும் “
என்றேன்.விலாசம் கொடுத்தான். திருவொற்றியூரிலிருந்து
வந்திருந்தான்.

“ நீ எப்படி வந்தாய்.. உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது”
என்று கேட்டேன்.

”எப்படி எப்படியோ வந்தேன் “என்று சொல்லி ஒரு ஐந்து ரூபாய்
நாணயத்தைக் காண்பித்தான்.

ஒரு பஸ்ஸில் ஏற வேண்டியது.அது போகாத இடத்துக்கு
டிக்கெட் கேட்பது, கண்டக்டரிடம் திட்டு வாங்கி அடுத்த
நிறுத்தத்தில் இறங்கி விடுவது இப்படியே இவ்வளவு தூரம்
வந்து விட்டதாகச் சொல்லி சிரித்தான்.எனக்குப் பாவமாக
இருந்தது. என்னிடம் அப்போது இருந்த ரூ.500/- ஐ அவனிடம்
கொடுத்து, அவனை வீட்டில் பார்ப்பதாகக் கூறி அனுப்பி
வைத்தேன்.

அடுத்த நாள் அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். அவன் அங்கே
இருக்கவில்லை. அவன் மகன் ஸீக்ஸ்பாக் உடம்புடன் இருந்தான்
போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு முயற்சிப்பதாகக்
கூறினான். அவனுக்கு எந்தக்கவலையும் இருப்பதாகத் தெரிய
வில்லை.அப்பாவுக்கு சக்கரை வியாதியால் கண் பாதிக்கப்பட்டு
இருப்பது தெரியுமா என்று கேட்டபோது, அவருக்கு வயசாகி
விட்டது என்று விட்டேத்தியாக பதில் கூறினான். அவனது
மனைவியோ வீட்டில் இருந்த நாய்க்கு உணவு ஊட்டிக்கொண்டு
இருந்தாள். சற்று நேரத்தில் பெண் வந்தாள்.சூட்டிகையான பெண்
போல் காணப்பட்டாள் வேலைக்கு முயற்சி செய்வதாய்க்
கூறினாள்.பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட மீன்
பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே மேல் என்று தோன்றியது.
நிலையான வருமானம் இல்லாதவனுக்குப் பணம் கொடுப்பதை
விட நிலையான வருமானத்துக்கு வழி செய்வது சிறந்தது எனத்
தோன்றியது. அப்போது அங்கு வந்த சேகரன் என்னைப் பார்த்து
மகிழ்ச்சியடைந்தான்..எனக்கு அவனைப்பார்க்கப் பாவமாக
இருந்தது. நன்றாக இருந்த காலத்தில் யாரையும் மதிக்காமல்
இருந்துவிட்டு, இல்லாதபோது யாரும் கவனிப்பதில்லையே
என்று கவலை கொள்வதில் எந்த பலனும் இல்லை.

நல்ல வேளை ..அப்போதே எனக்குத் தெரிந்த நண்பனுக்குப்
ஃபோன் போட்டு, ( அவன் ஒரு எம்ப்ளாய்மெண்ட் கன்சல்டன்சி
வைத்திருந்தான்.) சேகரனின் மகளுக்கு வேலைக்கு ஏற்பாடு
செய்ய முடியுமா என்று கேட்டேன். அதிர்ஷ்டவசமாக,மறுநாளே
வந்தால் ஒரு வேலையில் சேரலாம் என்றான்.இந்த
மகிழ்ச்சியான சேதியை அவர்களிடம் கூறி விடை பெற்றேன்.

சேகரன் இறந்து பத்து வருடங்கள் ஓடி விட்டன. அன்றைக்கு
வழி காட்டப்பட்ட பெண் நன்றாக இருக்கிறாள்.மகனும் ஏதோ
வேலையில் இருக்கிறான்.இருவருக்கும் மணமாகி விட்டது.
அவனது மனைவி இன்றைக்கும் நாய்க்கு உணவு ஊட்டிக்
கொண்டிருக்கிறாள்.யாருக்காவது சேகரனைப் பற்றிய
நினைவோ,ஏறி வந்த ஏணிபற்றிய எண்ணமோ இருப்பதாகத்
தெரியவில்லை.
------------------------------------------------------------------------------------.


14 comments:

 1. நல்லகதை. நல்லா சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 2. இந்த உண்மைக்கதை மிகவும் அருமையாக உள்ளது சார். தாங்கள் அந்தப்பெண்ணுக்கு ஒரு உத்யோகம் வாங்கிக்கொடுத்து உதவியது மிகவும் நல்ல காலத்திற்கு ஏற்ற உதவி.

  ஏறி வந்த ஏணியை மறப்பவர்களே அதிகமாக உள்ளனர் என்பது தான் உண்மை.

  அருமையான அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள். vgk

  ReplyDelete
 3. கோபு சார், நீங்கள் கதையின் முதல் பாராவைக் கவனித்துப் பாருங்கள். இப்படித் துவங்கி எழுத ஜீவி முயற்சி செய்யச் சொன்னார். இது ஒன்றும் உண்மைக் கதை அல்ல. கற்பனையே. உண்மைக் கதைபோல் இருந்தால் அது என் வெற்றி என்று எடுத்துக் கொள்கிறேன். நன்றி

  ReplyDelete
 4. ஹாலில் தான் சேரில் அமர்ந்திருந்தேன்.. என்று அந்த 'ஐந்தும் இரண்டும்' கதையை ஆரம்பித்து எழுதலாம் என்றால், ஒரு புதுக்கதையையே பிரமாதமாக எழுதிவிட்டீர்களே!

  முதலில் சேகரனின் பிரவேசம், அடுத்து யார் அவர் என்கிற அறிமுகம், அடுத்து அவன் எப்படிப்பட்ட கேரக்டர் என்பதின் படப்பிடிப்பு, எதார்த்த எளிமையான கான்வர்சேஷனில் கதை நகர்வு, அடுத்து அவர் திருவொற்றியூர் வீட்டிற்குப் போகும் நேரேஷன்,
  அங்கைய சூழ்நிலை சொல்லி சொல்ல வந்த விஷயத்தை சொல்லி கதை முடிதல். அபாரம்.

  வாழ்த்துக்கள்.

  பத்து வருடங்களுக்குப் பின் வேறு ஒரு வேலையாக திருவொற்றியூர் போகையில் சேகரனின் நினைவு வந்து அவன் விட்டிற்குப் போவதாக..

  சிறுகதைகளுக்கு எதார்த்த சூழ்ல்களின் படப்பிடிப்பு வெல்லக்கட்டி. பட்டும் படாமலும் திருவொற்றியூர் பற்றி ஓரிரண்டு வரிகள் அல்லது தெருக் குறிப்பு,
  அவர்கள் வீட்டாருடன் மறுபடியும் உரையாடலில் கதையை நகர்த்தி அவர்களுடனான உரையாடலிலேயே சொல்ல வந்த விஷயம் வாசிப்பவர் புரிந்து கொள்கிற மாதிரிச் சொல்லி கதையை முடித்திருக்க வேண்டும் என்று அபிப்ராயம்.

  ReplyDelete
 5. நான் இதுவரை எடை போட்டவரை ஜீவி அவர்கள், ஒரு மிகச்சிறந்த மனிதர். அவர் எது சொன்னாலும் அது நம்மை மேலும், சிறப்பாகச் செதுக்கிக்கொள்ள உதவக்கூடியதாகவே இருக்கும்.

  சிறுகதை என்று மேலே எழுதியுள்ளீர்கள். உண்மைக்கதையாக இருக்குமோ என நான் நினைத்து அவ்வாறு எழுதினேன்.

  வாழ்க்கையில் நடந்த ஒரு சில உண்மைச் சம்பவங்களை, நான் என் கதைகளில் ஆங்காங்கே கொண்டு வருவதுண்டு.

  அந்த உயிர்துடிப்புள்ள பகுதிகள் தான் உண்மையிலேயே பலராலும் மிகவும் பாராட்டக்கூடியதாக, இதுவரை நான் பலமுறை உணர்ந்ததும் உண்டு.

  தங்களுக்கு பல நல்ல கற்பனை வளங்கள் உள்ளதென இதன் மூலம் தெரிவதால், ஜீவி அவர்களின் வழிகாட்டுதலுடன், மேலும் பல சிறுகதைகள் தாருங்கள். அவை நிச்சயம் வெற்றி பெறும்.

  அன்பான வாழ்த்துக்கள். vgk

  ReplyDelete
 6. கோபு சாரும் சரி, ஜி.எம்.பி. ஐயாவும் சரி தங்கள் பதிவுகளில் 'moderation' வசதியை வைத்துக் கொண்டால் அது பல செளகரியங்களுக்கு வழிகோலும் என்று என் எண்ணம்.

  எழுதும் கருத்தை விட எழுதும் முறை என்னை பல சமயங்களில் மயக்குவது உண்டு. எனது பதிவில் 'எழுத்தாளர்கள்' பகுதியில் பழம் பெரும் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்களின் சிறப்புகள் பற்றி மனத்தில் பட்டதைப் பகிர்ந்து கொண்டிருக்கிறென். இதை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தன் பதிவொன்றில் பாராட்டி பிறருக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார்.

  இணையத்தில் எழுதுவது நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு. பத்திரிகைகளில் எழுதுவதை விட பல கூடுதல் சிறப்புகள் இதற்கு உண்டு.
  அதனால் சிலரது சிறப்பான முயற்சிகளைப் படிக்கும் பொழுது,
  அவர்களுக்கு ஊக்கமளிக்க நிறையச் சொல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டதுண்டு.

  கதை சொல்லல் வேறு; அதே கதையை எழுத்தில் வடித்து வாசிக்கச் சொல்வது வேறு. அதனால் கதை எழுதும் கலை பற்றி எனக்குப் பட்டதை பொதுவாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் தெரிவிக்க விரும்பும் பொழுது, இதைப் பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டே தெரிவிப்பேன்.
  கதையின் கருத்தைப் பற்றி எதுவும் சொன்னதில்லை. இதை வை.கோ.சாரும் அறிவார்.

  'ஜீவி சாரின் வழிகாட்டுதலுடன்' என்கிற வார்த்தைத் தொடர் வேறு விதத்தில் அர்த்தப்படுத்திக் கொண்டு விடக்கூடாது என்பதற்காக இதை எழுத வேண்டியதாயிற்று.

  ஜிஎம்பி ஐயாவும், வை.கோ.சாரும்
  நிறைய எழுதுவதை விட, எழுதும் முறையில் நிறைய புதுப்புது சோதனைகள் செய்கிற மாதிரி எழுதி அவற்றைத் தமிழ்த்தாய்க்கு அணிகலங்களாக அணிவிக்க வேண்டுமென்பதே என் ஆசை.

  இருவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  மிக்க அன்புடன்,
  ஜீவி

  ReplyDelete
 7. அபாரமான கதை பாலு சார்.மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்த அந்தப் பெரியவரை எததனை வாழ்த்தினாலும் தகும்.

  ReplyDelete
 8. தன்னிலை உணர்ந்து கொள்ள முடியாதபடி ஈகோவும் அகம்
  பாவமும் அவனை அலைக் கழித்துக் கஷ்டப்பட வைத்து
  விட்டது./

  இறுதிவரை அந்த மேகங்கள் கலையவிலையே.

  ReplyDelete
 9. ஏறி வந்த ஏணி....."
  காலத்தில் செய்த உஅதவியை மறந்தார்களே..மனித இயல்போ!

  ReplyDelete
 10. ஐயா...

  சிறுகதை என்று தனித்து இல்லை. அது வாழ்வின் அவலங்களையும் ஆச்சர்யங்களையும் அனுபவங்களையும்தான் உள்வாங்கி படைப்பாளியை உருவாக்குகிறது. இந்த கதை மனதைத் தொட்டுவிட்டது. இதன் முடிவை நான் தொடக்கத்திலேயே ஊகித்துவிட்டாலும் இது சரியான முடிவுதான். வெகு எதார்த்தமான வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கதை. எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் ஒரு குடும்பத்திற்கு மீன்பிடிக்கக் கற்றுத்தரும் கதை. உங்களின் பதிவுகளில் உங்களின் வாழ்வியலை நான் ஊகம் செய்கிறேன். உங்களின் வாழ்வில் நீங்கள் இதுபோன்று பல உதவிகளை செய்திருக்கக்கூடும். உங்களின் எல்லாப் பதிவுகளிலும் ஒரு உண்மையான மனிதனின் உயர்வான எண்ணங்களைப் பார்க்கிறேன். எப்படியாயினும் கதையாக இருந்தாலும் இது அனுபவித்த உணர்வைப் பிரதிபலிப்பதாகவே நான் உணர்கிறேன். அருமை.

  ReplyDelete
 11. அருமையான கதை
  ஏணிக்கு ஏற்றிவிடுவதும் தோணிக்கு கரையேற்றிவிடுவதும்தான்
  அதனதன் இயல்பான குணம்
  அவைகள் புகழுரைகளையோ பாராட்டுக்களையோ
  எதிபார்ப்பதும் இல்லை என்பதே நிஜம்
  அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
  அருமையான பழமொழியை கருவாக வைத்துப் படைத்த
  கதை அருமையிலும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. சில நேரங்களில் மனதில் தோன்றும் எண்ணங்களை கதை வடிவில் கொண்டு வருவதுதான் என் பாணி. தோன்றும் எண்ணங்களுக்கு வாழ்க்கையில் காணும் மனிதர்களும் சில நேரங்களில் காரணமாயிருக்கலாம். கதை என்பது வாழ்வின் பிரதி பலிப்புதானே. அப்பட்டமான கற்பனை என்பது அரிதாகும். ஆனால் எழுதுவது எந்த ஒரு மனிதரையும் முழுமையாக பிரதிபலித்தால் அது கற்பனையாகாது. உண்மைக்கு நகாசு வேலைகள் செய்வதுதான் கற்பனை. இதை நான் எழுதுவதே பின்னூட்டங்களில் வந்த கருத்துக்களுக்குப் பதிலாக அமையும் என்று எண்ணுகிறேன் . எழுதும்போது சில கருத்துக்கள் சிலருக்குஒவ்வாமல் போகலாம். இதை இப்படி எழுதலாமே என்றும் தோன்றலாம். என் மனதில் தோன்றுவதைத்தானே நான் எழுத முடியும். கதையின் நீளம் கருதியும், சில விஷயங்கள் சிலரால் யூகிக்கவைக்கவும் சொல்லப் படாமல் போகலாம். கதையின் கருத்தும் எழுதும் முறையும் அவரவர் பின் புலம் சார்ந்தது. விமரிசனங்கள் வாசகர்களின் ரசிகத் தன்மையை அறிய உதவும் என்பதே என் கணிப்பு. என் எழுத்துக்களை யாரும் விமரிசிக்கலாம். என்னை விமரிசிகாதவரை எல்லாம் ஏற்புடையதே. அதனால்தான் நான் மாடரேஷன் வைத்துக் கொள்ள வில்லை. ( அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியாத விஷயம் என்பது வேறு .!)

  ReplyDelete
 13. உங்கள் சிறப்பே எளிமையாய் கதை சொல்லிப் போகும் விதம் தான். உரையாடல்களும் சம்பவங்களும் நிஜம் போல ஒரு தோற்றம் தந்து கதையோடு ஒன்றச் செய்து விடுகின்றது.
  எனது மன்ப் பூர்வமான வாழ்த்துகள்.

  ReplyDelete