சனி, 24 நவம்பர், 2012

பதிவுகளும் வாசகர்களும்.


                    பதிவுகளும் வாசகர்களும்
                    ------------------------------------


வலைப்பூவொன்று தயார் செய்து எழுதத் துவங்கின போது, ஏற்கெனவே என் ஆத்ம திருப்திக்காக எழுதி வைத்திருந்த சில கதைகள் ,கவிதைகள்( ? ) கட்டுரைகள் என்று பதிவிடத் துவங்கினேன். நினைக்கும் கருத்துக்களை வெளியிட ஒரு வடிகால் போல் இருந்தது வலைப்பூ. ஆரம்ப காலத்தில் என் பதிவுகளை படித்தவர்கள் மிகவும் குறைவு. முதலில் நான் ஒருவன் பதிவிடுகிறேன் என்பதைப் பலருக்கும் அறிவிக்க வேண்டி தமிழ் மணத்தில் இணைத்தேன். நானே பலரது பதிவுகளைப் படித்து என் கருத்துகளைக் கூறத் தொடங்கினபோது சிலர் ரெசிப்ரொகேட் செய்தனர். அப்போது நான் படித்த சில பதிவுகள் காழ்ப்புணர்ச்சியில் மிதந்தது கண்டு என் பதிவு ஒன்றில் பதிவுகள் எப்படி இருக்கலாம் என்று எழுதினேன்.

ஆரம்பத்தில் என் திருப்திக்காக எழுதியிருந்தேன். பிற்பாடு என் எண்ணங்களைக் கடத்த் என் வலையை உபயோகிக்கத் துவங்கினேன். நான் என் பதிவுகளில் கூறும் கருத்துக்கள் விமரிசிக்கப் பட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் பதிவுலகில் மாற்றுக் கருத்துக்கள் கூறுவது தவிர்க்கப் பட்டே வருகிறது. எந்த சாரமும் இல்லாத பதிவுகளுக்கெல்லாம் புகழாரங்கள் இருப்பது பார்த்தேன். நான் கருத்து கூறும்போது என் மனதில் பட்டதை மனம் நோகாமல் தெரிவித்து வருகிறேன். அது அப்படி உணரப் பட்டும் வந்திருப்பது தெரிய வருகிறது. ஒரு முறை ஒரு நண்பர் என் பதிவுகளுக்கு பதில் இடுவது , : வீட்டில் லுங்கியுடன் இருந்து விருந்தாளிகளை வரவேற்பதுபோல் எந்தக் க்லக்கமும் இல்லாமல் சொல்ல முடிகிறது என்ற பொருளில் எழுதி இருந்தார். படித்தபோது நிறைவாக இருந்தது. எந்த போலித்தனத்தையும் நான் விரும்புவதில்லை என்று அவர் புரிந்து கொண்டது சரியே. புகழ்ச்சிக்கு மயங்காதவர் இல்லை. நானும் உண்மையான புகழ்ச்சி என்று தோன்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிறையவே மாறுபட்ட கருத்துக்கள் பல எழுதி இருக்கிறேன். சடங்குகள், சம்பிரதாயங்கள், மனிதரிடையே ஏற்ற தாழ்வுகள் , அதற்கான காரணங்களாக நான் நினைக்கும் வர்ணாசிரம நியதிகள், , அதில் குளிர் காயும் பல ரக மனிதர்கள் என்று எழுதி இருக்கிறேன். ஒரு வேளை என் வயதை கருதியோ என்னவோ என்னுடன் கருத்து மோதல்களை பலரும் தவிர்க்கின்றனர்.

நான் நமது இறை இலக்கியங்கள் குறித்தும் எழுதி இருக்கிறேன். அவதாரங்களை கதைகள் என்று நான் குறிப்பிட்டது சிலர் அவ்வளவாக விரும்பவில்லை. அது என் கருத்து. நான் யாருடைய நம்பிக்கையையும் கேள்வி கேட்பதில்லை. கேள்வி கேட்டு தெரிந்த பின் நம்பிக்கைகள் பலப்படுத்தப் படவேண்டும் நம்பிக்கை என்னும் பெயரில் புற்றுக்குப் பால் ஊற்றுவதையும் எந்தக் கேள்வி கேட்டாலும் நம்பிக்கையை குறை கூறுகிறேன் என்று நினைப்பதையும் நான் விரும்புபதில்லை. .

ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. கருத்துக்கள் கூறாவிட்டாலும் பலரும் என் பதிவுகளைப் படிக்கிறார்கள். எந்த விதமான பதிவுகள் அதிகம் படிக்கப் படுகின்றன, என்று பார்த்தால் கொஞ்சம் சென்சேஷனலாக இருந்தால் .( அதுவும் தலைப்பில் தெரிய வேண்டும்) , படிக்கிறார்கள். இப்போதும் என் பழைய பதிவுகள் தேடிப்பிடித்து படிக்கப் படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது நான் பலரும் படிக்கிறார்கள் என்று அவர்கள் விருப்பமறிந்து  எழுத வேண்டுமா. இல்லை எனக்கு திருப்தி தருவதை எழுத வேண்டுமா. A MIX OF BOTH SHOULD BE THERE.  அப்போதுதான் என்னைப் புரிந்த வாசகர்கள் தொடர்வார்கள் என்று நம்புகிறேன்.என் பதிவுகள் இன்னும் பல திரட்டிகளில் இணைக்கப் பட வேண்டும் வலையகத்தில் இணைக்க நான் எடுத்த முயற்சிகள் வெற்றி அடைந்த மாதிரி தெரியவில்லை. பதிவுலக வாசக நண்பர்கள் உதவினால் எனக்காக பல்வேறு திரட்டிகளில் இணைத்தால் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

கடைசியாக, கிட்டத்தட்ட ஆயிரம் வாசகர்கள் படித்தும் ஒரு பின்னூட்டம் கூட இல்லாத பதிவும் கண்டு என்ன நினைப்பது புரியவில்லை.           
.





13 கருத்துகள்:

  1. கருத்துக்கு கருத்து சொல்வது என்பது எனக்கு உடன்பாடில்லை... மற்றவர் கருத்தை படிப்பதும் இல்லை... (சில பெரியவர்களின் / அன்பர்களின் கருத்தை தவிர)

    முன்பு என் பதிவுகளில் ஒவ்வொரு கருத்துக்கும் "வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி" இப்படி ஏதோ ஒரு வகையில் reply comment செய்து கொண்டு இருந்தேன்... (அது சரி... அதை யார் பார்க்கப் போகிறார்...?) கிட்டத்தட்ட பல பதிவுகளில் உள்ளதை நீக்கி விட்டேன்... நேரம் கிடைக்கும் போது மற்றவற்றையும் நீக்க வேண்டும்...சரி இதை ஏன் செய்தேன்...? அதுவும் வலைத்தளங்களை விரும்பி படிக்கும், கருத்துக்கள் இவ்வளவு உள்ளதே என்று பார்த்த ஒரு நண்பரின் ஏமாற்றத்தால்... (அதைப் பற்றி இன்னொரு தளத்தில் கூறுகிறேன்...)

    உங்களுக்கு எந்தெந்த திரட்டிகளில் வேண்டும் என்று சொல்லுங்கள்... இணைத்து தருகிறேன்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. தங்களின் மெயிலை பார்க்கவும்... எனது தளத்தில் உள்ளது போல் பல திரட்டிகளின் HTML Code-களை அனுப்பி உள்ளேன்... விருப்பப்பட்டதை சேர்க்கவும்... அதற்கு முன் அந்தந்த திரட்டிகளுக்கு சென்று Register செய்து கொள்ளவும்...

    நன்றி...

    dindiguldhanabalan@yahoo.com

    பதிலளிநீக்கு

  3. @ திண்டுக்கல் தனபாலன்,
    உடன் வரவுக்கு நன்றி. /கருத்துக்கு கருத்து சொல்வது என்பது எனக்கு உடன்பாடில்லை... மற்றவர் கருத்தை படிப்பதும் இல்லை... (சில பெரியவர்களின் / அன்பர்களின் கருத்தை தவிர)/ அப்படியும் ஒரு கருத்து இருக்கிறதா.? உங்களுக்கு நல்ல திரட்டி என்று தோன்றுவதில் இணையுங்கள். வெறும் சினிமா, அல்லது அரசியல் என்றிருப்பவை வேண்டாம்/ நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஐயா, இப்போதுதான் உங்களுடைய கருத்தை எனது வலைதளத்தில் பார்த்தேன், அங்கு நீங்க சொல்லிருந்திங்க இந்த தலைப்பில் ஒரு பதிவை இப்போதுதான் எழுதிவிட்டு வந்தேன் என்று, அதைப் படிக்கத்தான் ஆவலோடு ஓடி வந்தேன். நிறைய அனுபவத்தை சொல்லி இருக்கிறீர்கள். இந்த பதிவின்மூலம் நானும் சில கருத்துகளை தெரிந்துக்கொண்டேன்.

    உங்களுக்கு பிடித்ததை எழுதுங்கள் என்பதே என்னுடைய கருத்து, வாசகர்களுக்காக எழுதப்போனால் நமது 'ஸ்டைல்' மாறிவிடும், அதிக காலம் பதிவிட முடியாது, யாரையோ பார்த்து காப்பி அடிப்பதைப்போல் தோன்றும், வாசகர்களின் வருகையும் குறையும்.

    வயதுக்கு மீறிய அறிவுரைகள் என்று நினைக்கிறேன், தவறிருந்தால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  5. "போற்றுவார் போற்ற புழுதி வாரித்துற்றுவார் தூற்ற என் கடன் பதிவு எழுதுவதே" என்று கருதி எழுதிக்கொண்டிருங்கள்.

    இந்தப் பின்னூட்டங்களினால் மட்டும் நம் பதிவின் தரம் மாறாது.நாம் நம் திருப்திக்காக எழுதுவோம். பிடித்தவர்கள் பாராட்டட்டும்.

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு வரியும் ஆழ்ந்து வாசித்தேன் சார்....

    உங்களைப்போன்றோரின் அனுபவங்கள், அறிவுரைகள் இன்றைய இளைய தலைமுறைக்கு மட்டுமல்லாது எல்லோருக்குமே வழிக்காட்டக்கூடியது...

    உங்க பகிர்வுகள் ரசிக்க வைத்திருக்கிறது.. சிந்திக்கவைக்கிறது....

    எனக்கு நேரம் இருப்பதில்லை, உடல்நலம் அடிக்கடி முடியாமல் போய்விடுவதால் பதிவுகள் படிக்கும்போதே உடனே என்ன உடம்பு முடியவில்லை என்றாலும் எழுதிவிடுவேன். ஒரு பதிவு படித்துவிட்டு கருத்து எழுதாமல் கண்டிப்பாக செல்லவே மாட்டேன் சார்....

    எத்தனை அழகா ஒரு குழந்தை மனதுடன் சீரிய சிந்தனையுடன் நீங்க எழுதுறீங்கன்னு உங்க பகிர்வு வந்து படித்தபோதே அறிந்து சந்தோஷப்பட்டேன்...

    யூ ஆர் 75 இயர்ஸ் யங் சார்... இந்த வரிகள் நீங்க தான் எழுதி இருக்கீங்க... இந்த வரி தான் உங்க வலைப்பூவை முழுமையாக பார்க்கவைத்தது.. படிக்கவைத்தது.. ரசிக்கவும் வைத்தது... ரசித்தால் கருத்திடாமல் இருப்பேனா?

    திரட்டிகள் நீக்குவதும் இணைப்பதும் பற்றி எழுதி இருந்தீங்க. எனக்கு இதில் உண்மையாவே ஞானம் அதிகம் இல்லை சார்...

    ஆனால் உடனே ஆபத்பாந்தவனாக ஓடிவந்து உதவிய தனபாலனுக்கு என் மனம் நிறைந்த அன்புநன்றிகள்...

    அன்பின் பாலு சார்... நாம் இருக்கும் வரை, நம் எழுத்துகள் இருக்கும். நம் காலத்திற்கு பிறகும் நம் எழுத்துகள் மற்றவருக்கு பாடமாக, அனுபவமாக, அறிவுரையாக, நல்வழி காட்டிக்கொண்டே இருக்கும்...

    யார் படிக்கிறார்கள் இல்லை என்று பார்க்காமல் நீங்க எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே என் பணிவான வேண்டுகோள்....

    மனதில் இருப்பவை எல்லாம் அப்படியே கருத்தில் போட்டுவிடுவேன்.. ஆனால் யார் மனதையும் புண்படுத்தும்படியான வார்த்தைகள் கண்டிப்பாக என் எழுத்திலும் இருக்காது...

    இதே உத்வேகத்துடன் உற்சாகத்துடன் உங்கள் எழுத்துகள் தொடர என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுடன் கூடிய வேண்டுகோள் பாலு சார்...

    பதிலளிநீக்கு
  7. தங்கள் பதிவுகளைப் படிக்கத் துவங்கிய
    நாட்களிலிருந்து தொடர்ந்து படித்து வருகிறேன்
    உங்கள் நம்பிக்கைகளை மற்றும் அனுபவங்களை
    சமரசம் செய்து கொள்ளாது எழுதுவது எனக்குப் பிடிக்கும்
    உடன்பாடானவைகளுக்கு பின்னூட்டம் இடுவேன்
    உடன் பாடு இல்லாத பதிவுகளை படித்துவிட்டு
    பின்னூட்டம் இடாது விட்டுவிடுவேன்

    (ஏனெனில் தங்களுக்கு உள்ளதைப் போலவே
    எனக்கும் எல்லா விஷயங்களிலும் முடிவான கருத்து உண்டு)

    என்னைப் பொருத்தவரை தாங்கள் உங்கள் பாணியில்
    தொடர்வதுதான் சரி என நினைக்கிறேன்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. ''..பதிவுலகில் மாற்றுக் கருத்துக்கள் கூறுவது தவிர்க்கப் பட்டே வருகிறது. எந்த சாரமும் இல்லாத பதிவுகளுக்கெல்லாம் புகழாரங்கள் இருப்பது பார்த்தேன்...''
    இதை நானும் உணர்ந்துள்ளேன் ஐயா!
    3 வரிக் கவிதையை எழுதி 30 பேரை மெனக்கெட வைப்பவர்களை என்ன சொல்வது. 30 கருத்தும் ஆகா ஓகோ என்று இருக்கும் மனதுள் சிரித்தபடி திரும்புவேன்.
    தமிழ் மணத்தில் கண்டு வந்தேன் ஐயா. நன்றி கருத்திற்கு .
    இறையாசி நிறையட்டும்
    வேதா. இலங்காதிலகம்..

    பதிலளிநீக்கு
  9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு

  10. @ திண்டுக்கல் தனபாலன் மூன்று நான்கு தினங்களுக்குப் பிற்கு உங்கள் அறிவிப்பு, அறிந்து வலைச்சரம் சென்று வந்தேன். .எனது மெயிலில் நீங்கள் அனுப்புவதாகச் சொன்ன எந்த தகவலும் இல்லை. தொடர்ந்து வருகை தருவதற்கு நன்றி.

    @ செம்மலை ஆகாஷ்
    @ டாக்டர் கந்தசாமி பிடித்ததை எழுத ஊக்கமூட்டும் உங்களுக்கு என் நன்றி.
    @ மஞ்சுபாஷிணி.நான் நினைப்பதில் அசாத்திய நம்பிக்கை இருப்பதே நான் தொடர்ந்து சில கருத்துக்களை வலியுறுத்தி எழுதுவதன் காரணம். மனதில் தெம்பு வயதின் அயர்ச்சியை சட்டை செய்வதில்லை. தொடர்ந்து படித்து மனதில் பட்டதைக் கருத்திடுங்கள். கருத்து வேறுபட்டு சண்டைக்கு வந்தாலும் தவறாக எண்ணமாட்டேன்.
    @ ரமணி. பின்னூட்டம் இல்லை என்றால் கருத்துடன் உடன்பாடு இல்லை என்று அர்த்தமா ரமணி சார்.?
    அப்படி என்றால் நூற்றுக்கணக்கானவர்கள் ”நம்மிடம்” மாறுபடுகிறார்கள் என்று நினைக்க முடியுமா சார்.?
    @ கோவைக்கவி வெகு நாட்களுக்குப்பின் உங்கள் பின்னூட்டம். மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. நம் மனதில் உள்ளதை எழுதத் தான் நமக்கே நமக்கு என்று கிடைத்து இருக்கும் வரபிரசாதம் இந்த வலைத்தளம்.

    நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். யார் படிக்கிறார்கள், படிக்க வில்லை என்று கவலை படாதீர்கள். எப்படியும் மற்றவ்ர்களிடம் உங்கள் கருத்துக்கள் போய் சேரும். உங்கள் அனுபவங்கள் தேவை படுவோருக்கு அவை நன்மை பயக்கும். வாழ்த்துக்கள். ஊரிலிருந்து திங்கள் கிழமை வந்தேன், மறுபடியும் திருசெந்தூர் செல்ல வேண்டும். நேரம் கிடைக்கும் போது வந்து உங்கள் விட்டு போன் பதிவுகளை படிப்பேன் சார்.

    பதிலளிநீக்கு
  12. கடைசியாச் சொன்னீங்களே அது எல்லார் மனதிலும் ஓடும் என்று சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  13. ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. கருத்துக்கள் கூறாவிட்டாலும் பலரும் நம் பதிவுகளைப் படிக்கிறார்கள்.

    , கிட்டத்தட்ட ஆயிரம் வாசகர்கள் படித்தும் ஒரு பின்னூட்டம் கூட இல்லாத பதிவும் கண்டு எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை ஐயா..

    எழுதிப் பகிர்வது பிடித்திருக்கிறது.. அது போதும் என்பது எம் எண்ணம் ...

    பதிலளிநீக்கு