ஒன்றில் இரண்டு
------------------------
ஜீவாத்மாவும் பரமாத்மாவும்...சில அத்வைதக் கருத்துக்களும்
----------------------------------------
----------------------------------------
கனவுக்கு நேரக் கணக்கு
ஏதும் கிடையாது .அதிகாலையில் எழுந்திருக்கிறேன். என்ன ஆச்சரியம் .! நான் கட்டிலில்
உறங்கிக் கொண்டிருக்கிறேன். என்னால் என்னையும் என் அருகில் படுத்திருந்த
மனைவியையும் நன்றாகப் பார்க்க முடிந்தது. உருவமில்லாமல் நான் உயரே சஞ்சரிக்கிறேன்.
என்னை ஒரு குரல் கூப்பிடுகிறது. எனக்கு ஒரு முறை கனவில் கடவுளிடம் உரையாடிய
அனுபவம் இருந்தது.
“ யார் என்னைக் கூப்பிடுவது.?கடவுளாயிருந்தால் முன்பு வந்தது போலென்
முன்னே வா “ என்றேன்.
“ எங்கும் வியாபித்திருக்கும் நான் உன்
முன்னே வந்தேனா.?
என்ன
உளறுகிறாய்.? ஏதாவது கனவு கண்டிருப்பாய்.
“
“ அதுபோல் இது கனவில்லையா.? குரல் மட்டும் கேட்கிறதே.”
“ குரல் என்பது உனது பிரமை. உண்மையை
உணர்ந்து கொள்ளாமல் நீயே என்னவோ நினைத்துக் கொள்கிறாய். உருவமே இல்லாத எனக்கு
ஆயிரம் உருவங்களும் பெயர்களும் கொடுத்து உண்மை என்று நம்பும் கற்பனைத் திறன்தான்
உங்களுக்கெல்லாம் இருக்கிறதே. “
“ சரி. உண்மைதான் என்ன.? “
“ உன் ஆழ்மனதில் , ஜீவாத்மா பரமாத்மாவிடம் ஐக்கியமாகத்
துடிக்கிறது.உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மனம் விழைகிறது.”
ஜீவாத்மா பரமாத்மா என்று
ஏதோ புரியாமல் சொன்னால் எப்படி.? ”
“ பரமாத்மா என்பது எங்கும்
வியாபித்திருக்கும் பிராண வாயு.ஜீவாத்மா என்பது ஒருவனை இயக்கும் பிராணவாயு..அது
அவனை விட்டு வந்தால் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடும்.”
“ அனாதி காலம் முதல் தேடிவரும்
கேள்விக்கு மிக எளிதாகப் பதிலாக ஏதோ கூறுகிறாயே.”
“ மக்கள் மத்தியில் ஒரு கதை உலாவுவது
தெரியுமா.? ‘ அமாவாசை இரவில் ,விளக்கில்லா அறையில், கருப்புப் பூனையைத் தேடும் குருடன் போல
‘என்று. அதுபோல்தான் அவரவர்
கற்பனைக்கு
ஏற்றபடி
கதைகள் புனைகிறார்கள். “
“ கொஞ்சம் விளக்கமாகத் தெரியப்
படுத்தலாமே.”
“ ஒருவன் உயிரோடு இருக்கிறான் என்று
எப்போது கூறுகிறாய்.? “
“ அவன் மூச்சு விட்டுக்
கொண்டிருக்கும்போது.”
“ அவன் மூச்சுவிட மறந்தால்....
தவறினால்... ?”
“ இறந்தவனாகக் கருதப் படுவான்.”
“ மூச்சு என்பது என்ன.?”
“ சுவாசம். ஒருவன் காற்றை உள்ளிழுத்து
வெளிவிடுவது சுவாசம். “
“ எந்தக் காற்றையும் உள்ளிழுத்து வெளி
விட்டால் சுவாசிப்பதாகுமா.?”
“ இல்லை. ஆகாது. காற்றில் இருக்கும்
பிராணவாயுவைத்தான் சுவாசிக்கிறான். அது இல்லாத நச்சுக் காற்றை சுவாசித்து ஆயிரக்
கணக்கானவர்கள் போபாலில் இறந்திருக்கிறார்களே.”
“ ஆக இந்தப் பிராணவாயுதான்
உடலின் எல்லா பாகங்களையும் இயங்கச் செய்கிறது. உடலின் இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
அது உடலின் எல்லா பகுதிகளுக்கும் பாய்ந்து இயக்குகிறது. உடலில் ஏதாவது பாகம்
ரத்தம் இல்லாமலிருக்கிறதா. ? இருப்பது
நகமோ முடியோ ஆக இருக்கலாம்.
சுத்திகரிக்கப் பட்ட ரத்தம் மூளைக்குச் சேரவில்லையானால் அவனை இறந்தவன் என்றே
கூறுகிறார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் பிராணவாயு இருக்கிறது.”
“ ஜீவாத்மா பரமாத்மா பற்றி விளக்கம்
கேட்டால் உடற்கூறு பற்றி விளக்கம் தேவையா.? “
“ அடிப்படை அறிவை கோட்டை விடுவதால் நேராக
மூக்கை பிடிக்காமல் தலையைச் சுற்றி அதை அணுகுகிறீர்கள் என்றுகூற வந்தேன்.”
” பிராண வாயு இல்லாமல் இயக்கம் இல்லை என்பது நிச்சயமா.?”
“ சந்தேகமில்லாமல். வேற்று கிரகங்களில்
உயிரினங்கள் இல்லை என்றால் அதற்குக் காரணம் அங்கு பிராணவாயு இல்லை என்பதால்தான்.
சந்திரனில் நீர் இருக்கிறதா, செவ்வாயில்
நீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சிகள் அதைத்தானே கூறு கின்றன. “
“ உலகில் உயிரினங்களை இயக்க பிராணவாயு
இருப்பதுபோல வேற்று கிரகங்களை இயக்குவது எது..?
“ வேற்று கிரகங்கள் எங்கே இயங்குகிறது.? அவை இருக்கின்றன அவ்வளவுதான்.”
இந்த பேரண்டத்தையே
இயக்குபவன் கடவுள் என்கிறார்களே. அதெல்லாம் பொய்யா.?”
“ தெரியாதவற்றைப் பொய் என்று
கூறமுடியாது. அனுமானங்கள் என்று வேண்டுமானால் கூறலாம். “
“ குழந்தை பிறக்கும் போதே சுவாசித்துக்
கொண்டே பிறக்கிறதே . அது எப்படி.? “
“ உயிருடன் இருக்கும் ஆணின்
விந்து உயிருள்ளது. பெண்ணின் கரு முட்டை உயிருள்ளது ( மூன்றோ நான்கோ நாட்கள்
)இரண்டும் இணையும்போது உயிர்
இருக்கிறது . பின்
வளரும்போது தாயின் உடலுடன் தொப்புள் கொடி பிணைப்பால் உயிருடன் இருக்கிறது.
வெளிவரும்போது ஒரு ஜீவாத்மாவாகிறது. இறக்கும்போது பரமாத்மாவுடன் இணைகிறது.”
“ நான் இப்போது ஜீவாத்மாவாகவும் அல்லாமல்
பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்தில் இருக்கிறேனே . இதை என்ன சொல்ல. ? “
” ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும்போது மனிதன் ஒரு மாத்திரையோ, குருவோ (உபயம் சுந்தர்ஜி )
இறக்கிறான். பின் உயிர்க்கிறான்.இந்த மாத்திரையோ குருவோ போதும், கனவு காண. நேரம் கணக்கு எல்லாம் கடந்து
நிற்கும். உன் ஜீவாத்மா அனாந்திரத்தில் நிற்காமல் உன் கூட்டுக்குள் செல்லட்டும்..
சிறிது தாமதித்தாலும் உன்னைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள். பரமாத்மாவுடன்
இணையாமல் அனாந்திரத்திலேயே இருக்க வேண்டியதுதான் “
திடுக்கிட்டு விழித்தேன்.
வியர்த்துக் கொட்டியது. நான் இன்னும் இறக்கவில்லை. பரமாத்மாவுடன் இணையவில்லை
இதுவும் கனவா.? கனவில் கற்ற பாடமா.?
ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் என்று ஒரு வித்தியாசமான
விளக்கம் கொடுத்து எழுதியதைப் படித்தவுடன் எனக்கு நானே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொண்டேன்.
அத்துவைதக் கருத்துக்களுக்கு அது வேறு ஒரு வியாக்கியானமாகத் தோன்றியது. இம்மாதிரி
சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் என்ன காரணமிருக்கும் என்று யோசித்தேன். தெரியாத
ஒன்றைத் தெரிந்து கொள்ள நினைக்கும் மனமே காரணம் என்று புரிந்தது. இந்தக் கேள்வியும்
தேடலும் ஒன்றும் புதிதல்ல. பலருக்கும் பதில் கிடைத்து விட்டது போலவும் அதை
புரிந்துகொண்டு அனுஷ்டிக்கத் தெரியாததாலோ, முடியாததாலோதான் மீண்டும் மீண்டும் இக்கேள்வி எழுகிறது போலவும்
தோற்றமும் இருக்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கினால் கீழ்ப்பாக்கம்
போன்ற இடத்துக்குத்தான் போக வேண்டும் என்றும் ஒரு அபிப்பிராயம் இருக்கிறது.
முதலில் நான் என்பது யார்.?கண்ணும் , காதும் , மூக்கும் இன்ன பிற உறுப்புகளும் கொண்ட
உடலா.? அப்படியானால் இறந்தவுடன்
பேரென்ற ஒன்று இருந்ததையெ மறந்து பிணம் என்று அழைப்பார்களா.?நான் இருக்கிறேன் இல்லை
இறந்துவிட்டேன் என்று தெரியப் படுத்துவதேநான் விடும் மூச்சுக் காற்றுதான் அல்லவா?அதையே நான் ஜீவாத்மா என்றும்
இறந்தபிறகு அது பரமாத்மாவுடன் கலக்கிறது என்றும் வியாக்கியானித்தேன். அண்மையில்
சங்கராச்சாரியாரின் தெய்வக் குரல் எனும் நூலை படித்துக் கொண்டிருந்தேன்
.ஜீவனும் பிரம்மமும்
ஒன்றுதான் என்கிறார் சங்கரர். அதாவது நாம்தான் கடவுள் என்கிறார். ’ தன்னைத் தவிர வேறு கடவுளே கிடையாது’ என்ற ஹிரண்யகசிபு அகங்காரத்தில் சொன்னான்.ஆனால் கடவுள் தவிர
வேறெதுவும் கிடையாது என்பதால் நாமும் கடவுளே என்கிறார். ஜீவன் ஆனது “ நான் “ என்னும் எண்ணத்தைவிட்டுவிட்டு பிரம்மத்துடன் கலந்தால்
அதுவும் பிரம்மமாகிவிடும் என்கிறார். ”நாம் இப்போது உத்தரணி
ஜலத்தைப் போல் கொஞ்சம் சக்தியுடன் இருக்கிறோம். ஆண்டவன் அகண்ட சக்தியுடன்
சமுத்திரம்போல் இருக்கிறார்.அந்த சமுத்திரத்திலிருந்துதான் இந்த உத்தரணி ஜலம்
வந்தது. இந்த உத்தரணிஜலம் தான் தனி என்னும் அகங்காரம் நீக்கிசமுத்திரத்துடன்
கலந்து சமுத்திரமே ஆகிவிட வேண்டும்” என்கிறார்.( கவனிக்கவும்:
நான் மூச்சுக் காற்று என்றேன், அவர்
உத்தரணிஜலம் என்றார். நான் அகண்டவெளிக் காற்று என்றேன். அவர் சமுத்திரம் என்றார்.
நான் ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலந்துவிடும் என்றேன். அவர் சமுத்திரமாக மாற வேண்டும்
என்கிறார்.) இப்படி எழுதுவதன் மூலம் நான் என்னை அவருடன் ஒப்பிடுகிறேன் என்று தயவு
செய்து எண்ண வேண்டாம். There was a
striking similarity which prompted me to compare
நாம் ஸ்வாமியாக இல்லாவிட்டால், ஸ்வாமியைத்
தவிர வேறான ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறெனில் பரமாத்மாவுக்கு வேறான வஸ்துக்களும் உண்டு என்றாகிவிடும். அதாவது, பல வஸ்துக்களில் பரமாத்மாவும் ஒன்று என்றாகி விடும். அவருடைய
சம்பந்தமில்லாமல் அந்தப் பல வஸ்துக்கள் உண்டாகி இருக்கின்றன என்றாகும். இப்படி
இருப்பின் அவர் பரமாத்மா, ஸ்வாமி என்பதே பொருந்தாதே
எல்லாமாக ஆன ஒரே சக்தியாக இருக்கிற மட்டும்தானே அவர் ஸ்வாமி எல்லாம் அவர்
என்னும்போது நாம் மட்டும் வேறாக இருக்க முடியுமா? எனவே, 'ஸ்வாமியே நாம்' என்று வெளிப்பார்வைக்கு அகங்காரமாகப்பேசுகிற அத்வைதிகள், ஸ்வாமியின் மகிமையைக் குறைக்கவில்லை. மாறாக, 'ஜீவன் ஸ்வாமி அல்ல: இவன் அல்பன், அவர் மகா
பெரிய வஸ்து: இவன் வேறு: அவர் வேறு' என்று
அடக்கமாகச் சொல்கிறவர்கள்தான், தாங்கள் அறியாமலே அவரைப்
பல சாமான்களில் ஒன்றாக்கி அவருடைய மகிமையைக் குறைத்து விடுகிறார்கள். அவரே சகலமும் என்றால் நாமும்
அவராகத்தான் இருந்தாக வேண்டும்.
அவர் எல்லாப் பொருட்களிலும் இருந்தாலும் மனிதனாக இருக்கும்போது மனம் என்ற ஒன்றைக் கொடுத்து அதை பாப புண்ணியங்களில் ஈடுபடுத்தி பலனை அனுபவிக்கச் செய்கிறார்.
கடவுள் என்னும்
தத்துவத்துக்கு எல்லா சக்திகளும் உண்டென்று எண்ணி பாப புண்ணியங்கள் அதன் பலன்கள்
கொடுப்பவர் என்று நம்பினால் அவர் ஏன் நம்மில் இருந்து கொண்டே அந்தத் தவறுகளைச்
செய்ய வேண்டும்.?கடவுளுக்கு நிர்க்குணன் என்றொரு
பெயருண்டு, எந்த குணமும் இல்லாதவன் என்று பொருள்.
ஒரு நிர்க்குணன் மனிதரில் ஏன் பலரையும் சற்குண , துர்குணராகப்
படைக்க வேண்டும் அல்லது இயக்க வேண்டும்?இதற்குப் பதிலாக கர்ம
வினைகள் என்று காரணம் கூறுவொருமுண்டு.,
ஜீவன் என்பது பரம்
பொருளின் ஒரு பாகமே என்றால் இவ்வுலகில் ஏற்ற தாழ்வுகள் ஏன்.? மனிதனின் ஆதிக்கக் குணமே இம்மாதிரியான ஏற்ற தாழ்வுகளுக்குக்
காரணம். இகமும் பரமும் ஒன்றானால் அப்படி இருக்கக் கூடாதே, ஆக நம்மைக் கடவுள் இப்படி இப்படிப் படைத்தார் என்றெல்லாம்
கூறும் நாமே கடவுளைப் படைத்து விட்டோம் என்றே தோன்றுகிறது.
நம் மனம்தான் நாம் படைத்த
கடவுளிடம் சேர்க்கிறது, இல்லாவிட்டால்
பிரிக்கிறது. அழிந்து போகப் போகும் உடலே சாசுவதம் என்பதுபோல் எண்ணுகிறோம்.
வாழ்க்கையின் மதிப்பீடுகளைத் தொலைத்துக் கொண்டு வருகிறோம். எல்லா நிகழ்வுகளுக்கும்
காரணம் இருக்க வேண்டும் அதுவும் சமமாகவும் நேர் எதிராகவும் இருக்க வேண்டும்
என்பதுதானே விஞ்ஞானவிதி..அப்படி என்றால் எல்லோர் உள்ளும் இருக்கும்
கடவுளுக்குள்ளும் ஏற்ற தாழ்வு இருக்கக் காரணம் என்ன..
நான் முன்பெ எழுதி
இருந்தேன். கடவுளும் கதைகளும் ஏதோ ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட
புனைவுகளே.ஆதியிலிருந்தே மனிதன் தன்னைக் காத்துக் கொள்ளவும் தன் செயல்களுக்கு
காரணங்கள் கூறவும் விளைவுகளுக்கு பொறுப்பைத் தட்டிக் கழிக்கவும் கடவுளைப் படைத்து
அவனே எல்லாவற்றுக்கும் காரணம் என்று கூறவும் கண்டுபிடித்த வழிதான் இம்மாதியான
புனைவுகள்
என்னுடைய எண்ணங்களும், கேள்விகளும்,
ஏற்ற
தாழ்வில்லா சமுதாயம் மலர்ந்து, அதற்கான விளக்கங்களும்
காரணங்களும் கிடைக்கப் பெறும்போதுதான் முற்றுப்பெறும்
என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை அபத்தமானதுஎன்பதும்
எனக்குத் தெரியும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவிடை
இல்லாமல் மயக்கத்தில் இருக்கும் வாழ்க்கை நியதிகளுக்கு
விடை காண இயலுமா. ? “ பரித்ராணாய ஸாதூனாம்
விநாசாய ச துஷ்க்ருதாம்.....தர்ம-ஸம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே “ சாதுக்களை காத்தற்கும் துஷ்டர்களை
அழித்தற்கும் தருமத்தை நிலை நாட்டுதற்கும் யுகந்தோறும்
வந்துதிப்பேன்” என்று மக்களுக்கு நம்பிக்கை நிலைநாட்ட
பகவான் கூறியது உண்மையாக்க அந்த ஆண்டவனுக்கு
நேரம் இன்னும் வரவில்லையா.?இந்த யுகம் முடியும்
தருவாயில் கல்கி அவதாரமாக வந்து காத்தருள்வார் என்று நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டுமா. ?
தாழ்வில்லா சமுதாயம் மலர்ந்து, அதற்கான விளக்கங்களும்
காரணங்களும் கிடைக்கப் பெறும்போதுதான் முற்றுப்பெறும்
என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை அபத்தமானதுஎன்பதும்
எனக்குத் தெரியும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவிடை
இல்லாமல் மயக்கத்தில் இருக்கும் வாழ்க்கை நியதிகளுக்கு
விடை காண இயலுமா. ? “ பரித்ராணாய ஸாதூனாம்
விநாசாய ச துஷ்க்ருதாம்.....தர்ம-ஸம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே “ சாதுக்களை காத்தற்கும் துஷ்டர்களை
அழித்தற்கும் தருமத்தை நிலை நாட்டுதற்கும் யுகந்தோறும்
வந்துதிப்பேன்” என்று மக்களுக்கு நம்பிக்கை நிலைநாட்ட
பகவான் கூறியது உண்மையாக்க அந்த ஆண்டவனுக்கு
நேரம் இன்னும் வரவில்லையா.?இந்த யுகம் முடியும்
தருவாயில் கல்கி அவதாரமாக வந்து காத்தருள்வார் என்று நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டுமா. ?
மனதில் தோன்றும் எண்ணங்கள் பகிரப் படுகின்றன. இவை யாருடைய
நம்பிக்கையையும் கேள்வி கேட்க அல்ல. ஒரு அறிவு பூர்வமான விவாதத்துக்கு
வழிவகுக்கலாம் என்னும் நம்பிக்கையே காரணம்.