Monday, September 8, 2014

கீதைப் பதிவு -அத்தியாயம் -5


                           கீதைப்பதிவு  அத்தியாயம்--5
                            --------------------------------------
கீதோபதேசம்- கொண்டபள்ளி பொம்மை
ஸந்யாஸ யோகம்
அர்ஜுனன் சொன்னது
கிருஷ்ணா, கர்மத்தைத் துறக்கவும், பின்பு அதைக் கையாளவும் சொல்கின்றீர்.இவ்விரண்டிலும் சிறந்தது எது என்று நிச்சயிக்கப் பட்டதை எனக்கு சொல்லுங்கள்(1)
ஸ்ரீ பகவான் சொன்னது
கர்ம ஸந்யாஸம் , கர்ம யோகம், ஆகிய இரண்டும் சிறப்பைத் தருமெனினும் கர்ம ஸன்யாஸத்தைவிட கர்ம யோகம் மேலானது.(2)
பெருந்தோளுடையோய், வெறுப்பும் விருப்பும் இல்லாதவன் நித்திய ஸந்யாஸி எனப்படுகிறான். ஏனெனில் இருமைகள் அற்றவன் எளிதில் பந்தத்தில் இருந்து விடுபடுகிறான்(3)
சாங்க்யமும் யோகமும் வெவ்வேறு என்று பலரும் பகர்வர்.பண்டிதர் அங்ஙனம் பேசார்..இவற்றுள் ஒன்றை உறுதியாய் அனுஷ்டிப்பவன் இரண்டின் பலனையும் பெறுகிறான்(4)
சாங்க்யர் அடையும் பேற்றை யோகியரும் அடைகின்றனர்.சாங்க்யத்தையும் யோகத்தையும் ஒன்றாகக் காண்போன் உண்மை காண்கின்றான்.(5)
பெருந்தோள் படைத்தவா, கர்மயோகம் செய்யாது, கர்ம ஸந்யாஸம் பெறுதல் எளிதல்ல. கர்ம யோகம் செய்யும் முனிவனோ விரைவில் பிரம்மத்தை அடைகிறான்(6)
கர்மயோக நிஷ்டன், மனந்தெளிந்தவன்,உடலை வென்றவன், இந்திரியங்களை அடக்கியவன், தனது ஆத்மாவே உயிரனைத்துக்கும் ஆத்மாவெனக் காண்கிறவன் கர்மம் செயினும் கட்டுண்பதில்லை( அதில் ஒட்டுவதில்லை) (7)
தத்துவம் தெரிந்த யோகி, பார்க்கினும் கேட்பினும், தீண்டினும், மோப்பினும், அருந்தினும், நடக்கினும் , உறங்கினும், சுவாசிக்கினும், பேசினும்,கழிக்கினும், பிடிக்கினும், கண் திறக்கினும்,கண் மூடினும், பொறிகள் புலன்களில் போகின்றன என்று உறுதி கொண்டு “நான் ஒன்றையும் செய்கிறேன் இல்லைஎன்று நினைப்பான்.(8,9)
பிரம்மத்தைச் சார்ந்து, பற்றுதலைத் துறந்து கர்மங்களை செய்பவன் நீரில் தாமரை இலை போன்று பாபத்தில் பந்தப் படுவதில்லை.(10)
யோகிகள் பற்றைத் துறந்து. சித்த சுத்திகாக வெறும் காயத்தாலும் ,மனதாலும், புத்தியினாலும் இந்திரியங்களாலுமே கர்மம் செய்கிறார்கள்.(11)
யோகி வினைப்பயனில் பற்றற்று, நிஷ்டையில் இருந்து உதிக்கும் சாந்தியை அடைகிறான். யோகம் செய்யாதவன், ஆசைக்கு வசப்பட்டு, பயனில் பற்று வைத்து பந்தப் படுகிறான்.(12)
தன்னை வசப்படுத்திய தேகியானவன் கர்மங்களையெல்லாம் விவேகத்தால் விலக்கி விட்டுஒன்றும் செய்யாதும், செய்விக்காதும் நவ வாயில் நக்ரில் (ஒன்பது துவாரங்களை உடைய உடலில்) இன்புற்றிருக்கிறான்.(13)
வினைத் தலைமை, வினை, வினைப்பயனைப் பெறுதல், ஆகியவைகளை இறைவன் உண்டு பண்ணவில்லை. இயற்கையே இங்ஙனம் செய்கிறது.(14)
யாருடைய பாப புண்யத்தையும் பரமாத்மா பொருட்படுத்துவது இல்லை. ஞானம் அக்ஞானத்தால் மூடப்பட்டிருக்கிறது.ஆதலால் உயிர்கள் மயக்கமடைகின்றன(15)
யாருடைய அக்ஞானம் ஆத்ம ஞானத்தால் அழிக்கப் படுகிறதோ, அவர்களுக்கு அந்த ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம் பொருளை விளக்குகிறது.(16)
பிரம்மத்தில் புத்தியை வைப்பவர், அதுவே தாமாயிருப்பவர், அதிலேயே உறுதியாய் இருப்பவர்,அதையே புகலிடம் ஆக்குபவர், ஞானத்தால் பாபங்களைப் போக்கடிப்பவர் பின்பு பிறப்பதில்லை.(17)
கல்வியடக்கமுடைய  பிராம்மண னிடத்தும், பசுவினிடத்தும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் கீழோனிடத்தும் ஞானிகள் சம திருஷ்டியே வைக்கின்றனர்.(18)
மனதை சம நிலையில் உறுதிப் படுத்தியவர்களால் இம்மையிலேயே இயற்கை வெல்லப் படுகிறது. பிரம்மம் சமநிலையுடையது, தோஷமற்றது,ஆகையால் அவர்கள் பிரம்மத்தில் நிலைத்து இருக்கிறார்கள்.(19)

பிரம்மத்தை அறிந்தவன், பிரம்மத்தில் நிலை பெற்றவன், உறுதியான அறிவை உடையவன் மனக் குழப்பம் அடையாதவன்.பிரியமானதைப் பெற்று இன்பமடைவதும் இல்லை, பிரியமில்லாததைப் பெற்றுத் துன்பமடைவதும் இல்லை.(20)
புறப் பொருட்களில் மனம் பற்றாதவன் ஆத்மாவில் இன்பம் எய்துகிறான். பிரம்ம சமாதியில் மனதை உடைய அம்மனிதன் அழியாத சுகத்தை அடைகிறான்.(21)
இந்திரிய விஷயங்களில் தோன்றிய போகங்களே துன்பத்துக்கு ஏது வானவை ஆகின்றன. குந்தியின் மகனே, ஆதி அந்தமுடைய அவைகளில் ஞானிகள் இன்பமுறுவதில்லை.(22)
இம்மையில் சரீரத்தை விடுவதற்கு முன்பு காமம், குரோதம், இவைகளின் வேகத்தைப் பொறுக்க வல்லவனே யோகி. அவனே இன்பம் துய்ப்பவன்(23)
ஆத்மாவில் இன்பம் துய்த்து, ஆத்மாவில் கிரீடித்து(விளையாடி), இன்னும் ஆத்மாவில் உள்ளொளி காணும் யோகி தானே பிரம்மமாகி பிரம்ம நிர்வாணத்தை அடைகிறான்(24)
தீவினைகளைக் களைந்து, ஐயங்களை அகற்றி, இந்திரியங்களை அடக்கி, எல்லா உயிர்களின் நன்மையில் மகிழ்வுறும் ரிஷிகள் பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.(25)
விருப்பு வெறுப்பினின்று விடுபட்டு, மனதை அடக்கி, ஆத்மஞானம் அடையப் பெற்ற ஸந்யாஸிகளுக்கு  யாண்டும் மோக்ஷம் உள்ளது.(26)
வெளி விஷயங்களை வெளியே வைத்து, கண்களைப் புருவங்களுக்கு இடையில் நிறுத்தி, மூக்கில் இயங்கும் பிராண அபான வாயுக்களைச் சமப் படுத்தி, இந்திரியம், மனம், புத்தி, இவைகளை அடக்கி, மோக்ஷத்தை நாடி, ஆசை , அச்சம், சினம், இவைகளை விட்டு முனியாயிருப்பவன் முக்தனே.(27,28)
யக்ஞம் தபசு இவைகளை அனுபவிப்பவனும் உலகனைத்துக்கும் ஈசனும், உயிர்களுக்கெல்லாம் நண்பனும் நான் என்று அறிபவன் சாந்தி அடைகிறான்,(29)
                     ஸந்யாஸ யோகம் நிறைவு.    .
                          
 

13 comments:

 1. பிரம்மத்தில் புத்தியை வைப்பவர், அதுவே தாமாயிருப்பவர், அதிலேயே உறுதியாய் இருப்பவர்,அதையே புகலிடம் ஆக்குபவர், ஞானத்தால் பாபங்களைப் போக்கடிப்பவர் பின்பு பிறப்பதில்லை.

  அருமையான விளக்கம்.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. நல்ல ஆன்மீக விளக்கங்ங்கள். புரிந்து அனுசரிக்க ஆயுள் முழுவதும் முயற்சிக்கவேண்டும்.

  ReplyDelete
 3. கீதையை வாசிக்க - மனம் மௌனமாகின்றது.

  ReplyDelete
 4. தொடர்ந்து படித்துவருகிறேன். பதிவிற்கான படமும், பதிவைப் போலவே மனதில் நிற்கிறது.

  ReplyDelete
 5. தாமதமாய்த் தொடர்கிறேன்.

  ReplyDelete

 6. @ இராஜராஜேஸ்வரி
  பதிவைப் படிக்கும் நீங்கள் அதில் உமக்குபிடித்த சுலோகத்தை குறிப்பிட்டு எழுதுவது சிறப்பு. வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 7. @ டாக்டர் கந்தசாமி
  பதிவை எழுதத் துவங்கும் முன் நான் என் கருத்துக்களை குறிப்பிட்டு எழுதுவதில்லை என்று உறுதி யிட்டுக் கொண்டிருக்கிறேன். நல்ல விஷயங்களென்று தெரிந்தால் அதைப் பின் பற்ற எப்போது வேண்டுமானாலும் முயற்சிக்கலாம். வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 8. @ ஸ்ரீராம்
  @ வெங்கட் நாகராஜ்
  @ கரந்தை ஜெயக்குமார்
  @ துரை செல்வராஜு
  @ டாக்டர் ஜம்புலிங்கம்
  @ வே.நடனசபாபதி
  @ கீதா சாம்பசிவம்
  தொடர்ந்து வருகை தருவதற்கு நன்றிகள்.

  ReplyDelete
 9. பிரம்மம் சமநிலையுடையது, தோஷமற்றது,ஆகையால் அவர்கள் பிரம்மத்தில் நிலைத்து இருக்கிறார்கள்.//
  அருமை.

  கீதோபதேசம் பொம்மை அழகு.

  ReplyDelete