Thursday, December 29, 2022

நெஞ்சு பொறுக்குதில்லையே

 


        நெஞ்சு பொறுக்குதில்லையே...
             -------------------------- 

  
தினமும் காலையில் நடை பயில அருகிலிருக்கும் பூங்காவுக்குச் செல்வது வழக்கம். முன்பே ஒரு முறை எழுதிய நினைவு. அங்கு ஒரு எறும்புப் புற்றிருக்கிறது. சில நாட்களில் அருகில் வசிப்போர் சிலர் அந்தப் புற்றுக்குப்  பாம்புப் புற்றென நினைத்துப் பால் ஊற்றுவது கண்டு நெஞ்சம் புழுங்கும் ஆயிரக்கணக்கில் அரை வயிற்றுக் கஞ்சிக்கு வழியின்றி ஏங்குவது தெரிந்தும்  இல்லாத பாம்புக்குப் பால் வார்க்கிறொம் என்று கூறி மண்ணில் பாலை விரயம் செய்வது எவ்வளவு அறியாமை-. மன்னிக்கவும் அறியாமை அல்ல நம்பிக்கையின் விளைவு- அது என்று பலரும் கூறலாம். இந்த மாதிரி நம்பிக்கையைத் தவறு என்று கூறப் போனால் நம்மை முட்டாள் என்று நினைப்பவரே அதிகம். அண்மைக் காலத்தில் அந்த புற்று இருக்கும் இடத்தில் ஒரு நாகரின் சிலை பிரதிஷ்டை ஆயிற்று, பாம்புக்குப் பால் ஊற்றுவோர் எண்ணிக்கை கூடியது. பாலுடன் பழவகைகளுடனும்  நைவேதனப் பிரசாதங்களுடனும் பூஜை களை கட்டத் துவங்கியது.  பின் பார்த்தால் ஒரு நாகர் சிலை இருந்த இடத்தில் ஒரு கல் தளம் நிறுவி அதன் வகைகளுடனும்  நைவேதனப் பிரசாதங்களுடனும் பூஜை களை கட்டத் துவங்கியது. இரண்டு நாட்களுக்கு மேல் நான்கு சிலைகள் பிரதிஷ்டை ஆகி இருக்கின்றன. என்ன சிலைகள் என்று இன்னும் அருகில் சென்று பார்க்கவில்லை, இது நாகர் , இது தேவி, இது பெருமாள் , இது அடியார் என்று சொன்னால் கேள்வியா கேட்கப் போகிறோம். அப்படியே ஏதாவது கேட்கப் போய் பிறருக்கு கேடு விளைக்காத எந்த நம்பிக்கையுமே நேர்மறை சிந்தனையின் வெளிப்பாடுதான் என்று அறிவுறுத்தப் படுவோம். யார் எந்தப் பாம்புக்குப் பால் ஊற்றினால் என்ன யார் யாரை எப்படி வழிபட்டுப் புளகாங்கிதம் அடைந்தால் என்ன.... நமக்கு ஏதும் பாதிப்பு இல்லை என்று ஒதுங்குவதே மேல் என்று தோன்றினாலும் இந்தப் பாழும் மனம் கேட்பதில்லை.ஒரு வேளை நக்கீரன் பரம்பரை என்ற நினைப்போ.?யார் என்ன சொன்னாலும் மனசுக்குப் பட்டதைச் சொல்லியே இத்துணை ஆண்டுகள் வாழ்ந்தாகி விட்டது. இனி இருக்கப் போகும் நாளில் என்னை ஏன் மாற்ற வேண்டும்....?
கோயில்கள் எங்ஙனம்  உருவாகிறது  என்று பூங்கா புற்று வழிபாடு தெரிவிக்கிறது.  இன்னும் சில வருடங்கள் கழிந்து அங்கே ஒரு கோயில் உருவாகி அதன் ஸ்தல புராணம் கூறப்படும்போது  யாருடைய கனவிலோ பாம்பணை மீது பள்ளி கொண்ட திருமால் வந்து அவனுக்கு ஒரு கோயில் எழுப்பப் பணித்திட்டதாகவும் வேண்டுவது கிடைக்க வைக்கும் அருளுடைய மூர்த்தம் அது என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.

நாகர் சிலை
 

பாட்டுக்கொரு புலவன் பாரதியின் நினைவு வந்து அவன் பாணியில் ஒரு பாட்டு



            
       பாரதி மன்னிப்பாராக
       -------------------

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்

மந்திரம் வேதம் என்பார் சொன்ன
மாத்திரம் பலன் தரும் என்பார்-தீதில்லை
தாரீர் விளக்கமென்றால்  துச்சமெனவே
மதித்திடுவார் வீண்கேள்வி ஏனோ என்பார்  ( நெஞ்சு )

கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு
கோடியென்றால் அது பெரிதாமோ
காரணங் கேட்டே விளங்கியதிங்கு
யாவரும் உணர்ந்திட மறுத்திடுவார்   ( நெஞ்சு )

கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன்
காரணங்கள் யாதெனும் அறிவுமிலார்
துடி துடித்து துஞ்சி மடிவோர் துயர்
தீர்க்கக் கிஞ்சித்தேனும் சிந்தையிலார்   ( நெஞ்சு )


சிற்றெறும்பு சேர்ந்தே கட்டிய புற்றதற்கு
வினை தீர்க்கும் பாம்புயிர்ப்பிடம் கூறியே
பால் வார்ப்பார்ஆறுதல் வேண்டி-மலர் தூவி
மணி அடித்துத் தீபம் காட்டுவார்             ( நெஞ்சு )

சாத்திரங்களொன்றுங் காணார்-பொய்ச்
சாத்திரப்பேய்கள் சொல்லும் வார்த்தையிலே
கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்   ( நெஞ்சு )

தோத்திரங்கள் சொல்லியவர்தாம்-தமைச்
சூதுசெயும் நீசர்களைப் பணிந்திடுவார்
ஆத்திரங்கொண்டதை வினவினால் அது
முன் ஜென்மப் பாவ பலன் என்பார்             ( நெஞ்சு )  


எண்ணங்களில் எண்ணிலா நோயுடையார்
இவர் ஏது கூறினும் பொருளறியார்-இவர்
சிந்தையில் உரைக்க இவர் வணங்கும்
தெய்வமே வந்தால்தான் ஒருக்கால் சீர்படுமோ.?  ( நெஞ்சு )






10 comments:

  1. பொதுவாக நாம் செய்பவை எல்லாமே சரியானதாகவும் பிறர் செய்பவை மூட நம்பிக்கைகள் என்றும் தோன்றும். இது இயல்பானதுதான்.

    ReplyDelete
    Replies
    1. கடவுள் படத்துக்கு விளக்கேற்றுவதற்குப் பதிலாக அந்த எண்ணெயை ஏதாவது ஏழையின் வீட்டில் விளக்கெரிப்பதற்குப் பயன்படுத்தலாமே, பூவை, ஏழைப்பெண் குழந்தைக்குக் கொடுக்கலாமே, நாம் கேக் செய்து சாப்பிடுவதற்குப் பதிலாக மோர் சாதம் சாப்பிட்டு, அந்தக் கேக் செய்யும் பணத்தை ஏழைக்குத் தானம் செய்யலாமே, வகைக்கொரு கடவுள் படங்களை மாட்டுவதற்குப் பதிலாக, அந்தப் பணத்தை.......குருவாயூர் அல்லது மற்ற கோயில்களுக்குப் போய் வழிபாடு செய்வதற்குப் பதிலாக அந்தப் பணத்தை ஏழையின் கல்விக்குக் கொடுக்கலாமே என்று பெரிய பெரிய லிஸ்டே தயார் செய்யலாம். நாம் செய்யும்போது நியாயமானதாகவும் பிறர் செய்யும்போது மூடநம்பிக்கையாகவும் தோன்றுவது இயல்புதான்

      Delete
    2. நானிக்கருத்தினுக்கு மாறு படுகிறேன்

      Delete
    3. ஹா..  ஹா...  ஹா..  நெல்லையின் கருத்தில் உடன்படுகிறேன்.  அதற்கு நீங்கள் மாறுபடாமல் இருந்திருந்தால் ஆச்சர்யப்பட்டிருப்பேன்!

      Delete
  2. வணக்கம் ஐயா
    ஒவ்வொரு கோயிலின் தோன்றலுக்கும் பின்னால் தாங்கள் சொன்ன கட்டுக்கதைகள்தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கட்டுக்கதைஎன்றால் சிலருக்கு கோபம் வரும்

      Delete
  3. உழைக்காமல் வாழும் திருடர்கள்...

    ReplyDelete
  4. எல்லோராலும்முடியாது

    ReplyDelete
  5. நான் முன்பு இருந்த இடத்தின் அருகில் இருக்கும் ஏரியைச் சுற்றியுள்ள பூங்காவிலும் புற்றுகள் இருந்தன. முதலில் புற்றாக இருந்தன சில நாட்களில் குங்குமம் சந்தனம் பூசப்பட்டது அப்புறம் சாமி படங்கள் வைக்கப்பட்டன. அப்புறம் ஊதுபத்தி பூசை, சுற்றிப் பூ கட்டுதல் என்று விரிவடைந்தது. கோயில் ஆகலாம் தான்...ஆனால்

    இதிலும் ஒரு நல்ல விஷயம் உண்டு சார். யாரும் அங்கு குப்பை போடமாட்டார்கள்!!!! உச்சா அடிக்க மாட்டார்கள். குழந்தைகளைக் கூட தாய்மார்கள் உச்சா அடிக்க விடமாட்டார்கள். நல்ல விஷயம் என்று என் மனதில் படும். அப்படியேனும் குப்பை இல்லா நகரம் ஆகட்டுமே...ஆனால் பூக்குப்பைகள் போடாமல் இருக்க வேண்டும்.

    கீதா

    ReplyDelete
  6. எறும்புப் புற்றுகள் எல்லாம் கோவில்களாவதற்கு மனிதர்களின் மனங்கள்தான் காரணம் என நினைக்கிறேன். நிம்மதியை தேடி அலைகிறான் மனிதன் என்று கூறலாம். எத்தனை கோவில்கள் தோன்றினாலும் மனிதனுக்கு நிம்மதி உண்டா என்றால் பதில் இல்லை என்பதுதான்.

    ReplyDelete