சனி, 1 ஏப்ரல், 2023

அது நீங்களில்லையா


 


                                          அது நீங்களில்லையா..........?
                                          ----------------------------------------------

நான் அம்பர்நாத் பயிற்சிப் பள்ளியில்  பொறி இயல் பயிற்சி பெற்றவன் என்று எனது முந்தைய பதிவுகள் சிலவற்றில் பகிர்ந்துள்ளேன்  அங்கு பயிற்சி பெற்றவர்கள் ATS AMBARNATH ALUMNI MEET என்று ஆண்டு தோறும் கூடுகிறார்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும்  இதற்கான சாப்டர்கள் துவங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சாப்டரில் கூடுகிறார்கள்

 நான் சென்னை சாப்டரில் 2010-ம் ஆண்டு கலந்து கொண்டேன்  இந்தமாதிரி கூடும் போது ஆகும் செலவுக்கு ரெஜிஸ்திரேஷன்  என்று ஒரு தொகை வருபவர்களிடம் இருந்து வசூலிக்கப் படுகிறது 2010-ம் ஆண்டு ரூ. தலைக்கு ரூ 600-/ என்று வசூலித்தார்கள் . மேலும் அந்த சாப்டரின் கமிட்டி மெம்பர்கள்  கூடுவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறார்கள் ஒரு சூவநீரும் பதிவிடுகிறார்கள் 2016-ம் ஆண்டு ஃபெப்ருவரி மாதக் கடைசியில் பெங்களூரு சாப்டர்  துவங்கி கூடுதலுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அம்பர்நாத் பயிற்சிப் பள்ளியின் மாணவர்கள் அகில இந்தியாவிலிருந்தும் வருபவர்கள்
நாங்கள் எச் ஏ எல்  லிலிருந்து பயிற்சிக்கு அனுப்பப் பட்டவர்கள் மொத்தமாக சுமார் 200 பேர்கள் எச் ஏ எல் லிலிருந்து பயிற்சி அளிக்கப் பட்டனர். நான் முதலாம் பாட்சைச் சேர்ந்தவன் சில ஆண்டுகள் கழிந்ததும் அந்த மாதிரி பயிற்சி நடத்துவது நின்று விட்டது பயிற்சி பெற்றவர்கள் உலகின் எல்லாக் கோடிகளிலும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்
2016-ம் ஆண்டுக்கான ஆலும்னி மீட்டில் சுமார் 200 பேர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கிறார்கள் தனி நபருக்கு ரூ1500-/ ம் மனைவியுடன் வந்தால்  ரூ2500-/ம்  கட்ட வேண்டும் இரண்டு நாள்  நிகழ்ச்சி . முதல் நாள் சந்திப்பும் கூடுதலும் இரண்டாம் நாள் பெங்களூரைச் சுற்றி உலாவும்  இருக்கும்  சூவநீரும் தயாராகிக் கொண்டிருக்கிறது


எனக்கு இந்த மாதிரி கூடுதலில் பெரிய அளவு நம்பிக்கை இல்லை.  நான்  1957-லிருந்து 1959 வரை பயிற்சியில் இருந்தேன் அந்த நாளைய நண்பர்கள் வெகு சிலரிடமே தொடர்பு உள்ளது.  மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற வருவோர்  பெரும்பாலானோர் எனக்குப் பரிச்சயப் படாதவர்களே. பதிவர் சந்திப்பிலாவது என் எழுத்துக்களைப் படிப்பவர்க்கு நான் யாரென்று தெரிந்திருக்கலாம் ஆனால் ஒரே பயிற்சிப்பள்ளியில் பயின்றவர்கள் என்பது தவிர வருவோரைப் பிணைக்கும்  சக்தி ஏதாவது இருக்கிறதா தெரியவில்லை.

இருந்தாலும் இந்தச் சந்திப்புக் கமிட்டி என் முகவரி தெரிந்து என்னைத் தொடர்பு கொண்டு அழைப்பிதழும் ரெஜிஸ்திரேஷன் படிவமும்  அனுப்பி இருக்கிறார்கள்.  பெங்களூரிலேயே சந்திப்பு என்பதால் நானும் என்  துணைவியாருடன் பங்கு கொள்ளப் போகிறேன்  இதில் இன்னொரு சுவாரசியமானத் தகவல் என்ன வென்றால்  பங்கு பெறுவோர் அனைவரும் அவர்களது எழுபதுகளில் இருக்கும்  இளைஞர்கள். சந்திப்புக் கமிட்டியின் காரியதரிசி என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வந்திருந்தார் அது பற்றி ஒரு பதிவும் எழுதி இருந்தேன் “ வெக்கலாமா பெட் “ எனக்கு இந்தக் குழுவிலிருந்து வரும் செய்திகளில்  முக்கியமானது யாராவது ஒருவரது மறைவுச் செய்தியைத் தாங்கி இருக்கும்  ஒரு மாதத்தில் குறைந்தது நான்கு மறைவுச் செய்திகளாவது இருக்கும்

இருந்தாலும் பங்கு பெறப் போவோரின் ஆர்வம் ஆச்சரியமளிக்கிறது இந்தியாவிலிருந்தும்  உலகின்  பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருவோர் நன்கு முன் கூட்டியே திட்டமிட வேண்டும் விமான முன் பதிவு, ரயில் முன் பதிவு. தங்குமிடம் பற்றிய முன் பதிவுக்கான விவரங்களுடன் குழுவுடன் தகவல் பரிமாற்றம்  சந்திப்பு எல்லாம் திட்டமிடப்பட்டு நடக்க வேண்டும் இதன்  அகில இந்தியக் குழுவின் தலைவர் தற்போது  அமெரிக்காவில் இருக்கிறார். அவரது பேரன் அமெரிக்க ஜனாதிபதியின் கையால்  டென்னிஸ் விளையாட்டில் பரிசு வாங்கினார் என்று பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்ஹாக்கி விளையாட்டில் தேர்ச்சி பெற்றிருந்தார் இப்போதெல்லாம் நேர்முக வர்ணனைகளில்  ஈடுபடுகிறார்
எனக்கு பரிச்சயமானவர்கள் வெகு சிலரே என்னுடன் பயிற்சி பெற்ற என் பாட்ச் மேட் பல ஆண்டுகளுக்குப் பின் அதே ஏ டி எஸ் பயிற்சிப்பள்ளியில் வைஸ் ப்ரின்சிபாலாக இருந்தவர் அண்மையில் காலமானார்
நாட்களை எண்ணிக் கொண்டிருப்போர் ஆனாலும் இருக்கும்  போது வாழ்க்கையை அனுபவித்து விட வேண்டும் என்று நினைப்பவரே இந்த மாதிரி சந்திப்பில் பங்கு கொள்ள நினைப்பார்கள் என்று நம்புகிறேன்  ஆகவேதான் நானும்  பங்கு பெற எண்ணுகிறேன் 
 ஒரு கொசுறுச் செய்தி
நான் காலையில் நடைப் பயிற்சியில் இருக்கும் போது ஒருவர் அறிமுகமில்லாதவர்  என்னை நிறுத்தி என் வீட்டருகே அண்மையில் ஏதாவது இறப்பு நிகழ்ந்ததா என்று கேட்டார். நான் முதலில் இல்லை என்று சொல்லி சற்று நேரம் கழிந்து என் வீட்டு மாடியில் குடி யிருப்பவர் ஒருவர் அண்மையில்  தவறி விட்டார் என்றேன் “ ஓ அதுதானே பார்த்தேன் அது நீங்களில்லையா.? சந்தேகமாய் இருந்தது...” என்றாரே பார்க்கலாம்..........!






6 கருத்துகள்: