கோவிலும் கோவிலைச் சார்ந்தும். .....
--------------------------------------------------
வலைப் பக்கம் வந்து சில நாட்கள் ஆகிவிட்டது. இடைவெளிக்குப் பின் எழுதும்
போது கடவுள் பற்றியும் கோவில் பற்றியும் எழுதினால் பலரும் படிப்பார்கள் என்று
தோன்றுகிறது. நாங்கள் வசிக்கும் பகுதி ஏறத்தாழ ஒரு மினி கேரளா என்று சொல்லலாம்.மலையாளிகளுக்கு
பகவதிக்கு அடுத்தது ஐயப்பன் வழிபாடு பிரதானம் நாங்கள் வசிக்கும் பகுதியில் ஒரு
ஐயப்பன் கோவில் உண்டு.பெங்களூரில் சற்று பிரசித்தியானது. ஜலஹள்ளி ஸ்ரீஐயப்பன்
கோவில் என்று பெயர். வழக்கம் போல் இந்த வருடமும் கார்த்திகை மாதம் முதல் ஐயப்ப
சீசன் களை கட்டி விட்டது. ஏராளமான ஐயப்ப பக்தர்களின் கூட்டம் எப்பொழுதும் கோவிலில்
– மாலை போடுவதும் இருமுடி
கட்டுவதும் சபரிமலைக்குப் பயணம் செய்வதுமாக இவற்றையெல்லாம் பார்க்கும் போது என்
குதர்க்க புத்தி மீண்டும் எனக்குள் கேள்விகள் கேட்கிறது.
பொதுவாக சபரிமலைக்குப் போகிறவர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியிலிருந்து
ஒரு மண்டல காலம் விரதம் இருந்து
இருமுடிகட்டி சபரிமலைக்கு பயணம் செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த
ஒரு மண்டல கால விரதம் அவர்களை மனசும் உடலும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க
வைக்க உதவும் உடல் தூய்மை, மனக் கட்டுப்பாடு. இந்திரியங்களை கட்டுக்குள் வைத்தல்
ஆண்டவன் நாமஸ்மரணம் போன்றவை அனுஷ்டிக்கப் பட்டால் மற்ற காலங்களிலும் அது நம்மை
நாமே அடக்கியாள உதவும் என்பது பொதுவாக அறிந்து கொண்டது. மலைப் பயணம் கடினமாக
இருக்கும் என்பதால் காலணி இன்றியும், மிதமாக உணவருந்தியும் , மற்றவர்களுக்கு இந்த
மாதிரி விரதம் இருப்பவர் என்பதைத் தெரியப்
படுத்தவும் வேண்டி கருப்பு உடை அணிந்து
முக ஷவரம் செய்யாமல் இருப்பது என்ற கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால்
தற்காலத்தில் மாலை அணிந்து மறுநாளே மலைக்குப் பயணிக்கிறார்கள். சபரிமலை ஐயப்ப
தரிசனம் என்பது ஒரு சீசனல் டூர் ஆகிவிட்டது.
விரதமிருப்பது என்பது போயே போச். ஒரு மண்டல விரதம் என்றால் கார்த்திகை
முதல் நாள் தொடங்கினால் மார்கழி மாதம் பத்தாம் தேதிவாக்கில்தான் முடிவடையும் பயணம் மேற்கொள்ள முடியும். சபரி மலை ஐயப்பதரிசனத்தில் practically , everything is compromised. எது எப்படியோ இருக்கட்டும் , இதனால்
சபரிமலைக்குப் போவோர் எண்ணிக்கை அபரிமிதமாகக் கூடிவிட்டது. பக்தர்கள் எண்ணிக்கை
அதிகம் ஆனால் பலன் பலருக்கும் போய்ச் சேருகிறதே. அது போதாதா. ?
ஜலஹள்ளி ஐயப்பன் கோவில் விழாவுக்கு வருவோம். டிசம்பர் மாதம் பதினாறாம் நாள்
எங்கள் ஏரியா பூஜையுடன் கொடி ஏற்றப்பட்டது.அருகில் இருக்கும் கருமாரியம்மன்
கோவிலிலிருந்து ஊர்வலம். வாணவேடிக்கைகள் சூழ கேரளத்தின் பாரம்பரிய கலைகள் , காட்சிகளுடன் பஞ்ச வாத்தியங்களுடன் கொட்டு மேளம்
முழங்க பெண்குழந்தைகள் தாலத்தில் விளக்கு வைத்து ஏந்திவர ஸ்ரீஅயப்பன்
தேரிலும் யானை மீதும் வருவதைப் பார்க்கும்
போது ஒருபுறம் இப்படியாவது பாரம்பரியக் கலைகள் பாதுகாக்கப் படுவது மனசுக்கு
இதமளிக்கிறது. , நகரங்களில் வசிக்கும் இளைய தலைமுறையினர் கண்டு உணர ஒரு வாய்ப்பு,
என் கைபேசியில் எடுத்த சிலகாணொளிகளை இத்துடன் வெளியிடுகிறேன். தரமாக இல்லை
என்றாலும் ஒரு ஐடியா கிடைக்கும். முதலில் ஏரியா பூஜை முடிந்து கொடி யெற்றம் . அதன்
பிறகு தினமும் சுற்றுவட்டார மக்களின் பூஜைகள் தினமும் நடக்கும். 16-ம் தேதி
துவங்கிய விழா 22-ம் தேதி பள்ளிவேட்டை,
23-ம் தேதி ஆராட்டு என்று நடந்து 26-ம் தேதி மண்டல விளக்கு பூஜையுடன் நிறைவு
பெற்றது.
இப்பொழுதெல்லாம் கோவிலில் மதியம் தினமும் அன்னதானம் நடக்கிறது, விழாக்காலங்களில்
தினமும் விருந்தே படைக்கின்றனர்.
மலைக்கு போவோர் வசதிக்காக கோவிலிலேயே எல்லாவிதப் பொருட்களும் கிடைக்கும்
படியாக ஒரு கடையும் இயங்குகிறது. சபரிமலைக்குப் போவோர் வசதி கருதி கட்டு
நிறைத்தலுக்காகவும் வசதிகள் இருக்கின்றன. கோவில் ட்ரஸ்டின் மேற்பார்வையில் சகல
வசதிகளுடன் கூடிய பள்ளி இறுதிவரை படிக்க வசதியாக கல்விக்கூடங்களும் இருக்கிறது.
ஒரு திருமண மண்டபம் ஒரு மருத்துவமனை எல்லாம் இருக்கிறது. இப்போது கோவிலை
விஸ்தரிக்க ஒரு அடி நிலம் அளிக்க வேண்டியும் கோரிக்கை இருக்கிறது. கோவிலை
அடுத்துள்ள இடத்தை வாங்கும் முயற்சியே இது. ஒரு அடி நிலம் ரூ.7000-/ ஆகிறது
முன் காலத்தில் கோவிலைச் சுற்றியே எல்லா வளர்ச்சிகளும் இருந்ததாக
அறிகிறோம் அதேபோல் இங்கும் கோவிலை மைய்யமாகக்
கொண்டு பல நல்ல விஷயங்கள் நிறைவேறுவது மனசுக்கு இதமாய் இருக்கிறது. தனிப்பட்ட மனிதர்கள்
எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். சில நல்ல காரியங்கள் கோவிலின் அடிப்படையில்
நிகழ்வது நிறைவாய் இருக்கிறது.
.
(மேற்கண்ட காணொளிகள் 2010-ம் ஆண்டைய விழாவின் போது எடுத்த்து இந்த ஆண்டு யானை வரவில்லை. ஆனால் இன்னும் சிறப்பான ஊர்வலம் நடந்தது.)





