புதன், 16 ஏப்ரல், 2014

பயணம் அனுபவம் எண்ணங்கள் தொடர்ச்சி.


                             பயணம் அனுபவம் எண்ணங்கள் தொடர்ச்சி.
                            ------------------------------------------------------------------


மறுநாள்  என் மனைவியின் தகப்பனார் இடம் வெள்ளிநாழியில் நேர்த்திச் சடங்கு. அதிகாலையில் எழிந்து குளித்து புறப்பட்டோம். அங்கு சென்றுதான் காலை ஆகாரம் என்றார்கள். போகும் வழியில் மனைவியின் தந்தையாரின் குலக் கோவிலான மாங்கோட்டுக் காவுக்குச் சென்றோம் அந்தக் கோவிலில் பூரம் திருவிழாவுக்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. யானையை அலங்கரித்துப் பட்டம் கட்டி ஊரில் வலம் வருவார்கள். அப்போது பக்தர்கள் காணிக்கை பணமாகவோ பொருளாகவோ தருவார்கள், என் உறவினரும் பூரத் திருவிழாவுக்கு அவர்களால் முடிந்த காணிக்கை செலுத்தினார்கள்.
எங்களுக்கு வந்த அழைப்பில் அங்கு ”பானை” எனும் வேண்டுதல் சடங்கு நடை பெறும் என்றார்கள். இந்தச் சடங்கில் முதலில் பானைப் பந்தல் என்று நிறுவுகிறார்கள். ஆறடிக்கு ஆறடி பந்தல் பெரும்பாலும் வாழை மட்டையில் தென்னை இள ஓலைகளைச் செருகி அலங்கரிக்கிறார்கள். அந்தப் பந்தலில் பகவதியைபிரதிஷ்டை செய்கிறார்கள்.மாஙோட்டுப் பகவதி க்ஷேத்திரத்தில் இருந்து வாள் ஒன்று கொண்டு வரப்பட்டு பகவதியுடன் ஆராதிக்கப் படுகிறது பந்தலைச் சுற்றிலும் வாழை இலையில் அரிசி மேல் தேங்காய் வைக்கப் பட்டிருக்கிறது. திசைக்கு நான்கு வீதம் பனிரெண்டு இலைகள். முதலில் கணபதி பூஜை. செய்விப்பவர் பூசாரியோ புரோகிதரோ அல்ல. இம்மாதிரி பூஜைகள் நடத்துவதில் பயிற்சி பெற்றவர் போலத் தெரிகிறதுஎந்த வித மந்திர உச்சாடனமும் இல்லை. எல்லாம் கையால் சைகைகள்தான் பஞ்ச வாத்தியங்களுடன் ஜெண்டை முழங்க பூஜை செய்கிறார். அருகே தோட்டத்தில் இருந்த பாலை மரக் கிளையை கொம்போடு வெட்டி எடுத்து வருகிறார்கள். இந்த சடங்குக்கு பெண்கள் கையில் தாலமேந்தி (தட்டில் விளக்கு ) செல்கிறார்கள் தாள வாத்தியத்துடன் அந்த மரக் கிளையை கொண்டு வந்து பந்த்லுக்குள் நடுகிறார்கள் அதன் பின் பூஜை செய்பவர் விஸ்தாரமாக திசைக்கு நான்கு இலைகளில் உள்ள தேங்காய் முன் நின்று தூப தீபம் காட்டுகிறார். ஒவ்வொரு இலையின் முன் நின்று செய்வது நிறையவே நேரம் எடுக்கிறது மொத்தம் 16 இலைகள் ஒவ்வொன்றின் முன்னும் மூன்று முறை அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று தெரியாமல் நமக்கு அவஸ்தை. ஒவ்வொரு முறையும் தூபமோ தீபமோ காட்டும் போது அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஏதோ நாட்டிய ஸ்டெப் போல இருக்கும் இது முடிந்து பந்தலைச் சுற்றி ஒன்பது முறை வலம் வருகிறார். ஒவ்வொரு திசை முன்பும் இந்த நாட்டிய ஸ்டெப்புடன்.... நிறையவே பொறுமை சோதிக்கப் படுகிறது. இது முடிந்தபின் குருதி பூஜை. ஒரு உருளியில் குங்குமம் மஞ்சள் கலந்த நீர் சிவப்பு நிறத்தில். இந்த நாட்டிய நடையுடன் மேள தாளங்கள் அதிரடி அடிக்க அவர் குருதியைக் குடிப்பதுபோல் பாவனை செய்கிறார். ஒவ்வொரு சுற்று முடியும் போதும் குருதியைக் கலைத்துக் குடிப்பது போல் பாவனை. ஒரு வேளையில் குருதி எல்லாம் கீழே சிந்தி ஜெண்டை முழக்கம் ஒரு crescendo  நிலையில் எல்லோரும் கட்டிப்போட்டு விட்டது போல் இருக்கிறார்கள். இவருடைய முறை முடிந்ததும் பந்தலைச் சுற்றி நாட்டிய பாவனையில் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் தீப்பந்தங்களுடன் ஆடியாடி சுற்றி வருகிறார்கள். ஒரு சமயம் பந்தலைச் சுற்றி ஆடி வருபவர் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது. சிறு பிள்ளைகளும் கலந்து கொள்கிறார்கள் , இந்த சடங்கு முடியும் தருவாயில் கேரளத்துக்கே உரிய “ வெளிச்சப்பாடு” வருகிறார்  அவர் குளித்து முடித்து தலை விரி கோலமாய் சிவப்பு உடையில் கயில் ஒரு பெரிய வாளுடன் முதலில் பூஜௌ செய்ய வருகிறார். அவரது சடங்கு தொடங்கும் முன்னே இந்தப் பானை பந்தல் பிரிக்கப் பட்டு விடுகிறது அவரும் பந்தலைச் சுற்றி வருகிறார். அதே நாட்டிய ஸ்டெப்புடன் . பிறகு தாள வாத்தியங்களின் துரித கதிக்கேற்ப ஓடுகிறார். பிறகு இந்த சடங்குக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் முன் வந்து அருள் வாக்கு சொல்கிறார். பெரும்பாலும் பகவதிக்கு மகிழ்ச்சி என்றே கூறு கிறார்கள், இபடியாக ஒரு வழியாகப் பானை நடந்து முடிந்தது.
இணையத்தில் இந்த சடங்கு குறித்துத் தேடினேன். சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. அங்கு வந்திருந்த பலரிடம் கேட்டதில் இது ஒரு நேர்த்திச் சடங்கு என்றே தெரிகிறது.எனக்கு கிராம தேவதைகளுக்குப் படையல் செய்வது பற்றி எதுவும் தெரியாது. இந்த வழிபாடு பிரத்தியேகமாக நாயர் ஜாதியில் காணப் படுவதாகத் தெரிகிறது மந்திரங்கள் ஏதும் இல்லை இருந்தாலும் பகவதிக்குப் ப்ரீதி செய்ய ஒரு அணுகு முறை என்றே தோன்றுகிறது அன்னை என்பவளை உக்கிரம் கொண்டவளாகப் பாவித்து அவளது அனுக்கிரகம் பெற குருதி பூஜை செய்கிறார்களென்றே தோன்றுகிறது முன் காலத்தில் விலங்குகளை பலியாகக் கொடுக்கும் வழக்கம் மறைந்து குருதியை நிவேதனம் செய்வதாக ஒரு பாவனை பிற்காலத்தில் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது எது எப்படி இருந்தாலும் இந்தக் கலாச்சார வழிபாடுகள் மூலம் நம் பாரம்பரியக் கலைகள் முற்றிலும் அழிந்து விடாமல் இன்னும் இருக்கிறது என்று தோன்று கிறது. “ யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம” என்று எண்ணும் எனக்கு அன்னையைக் கொடூரமானவளாகவும் ரத்த வாடை கொண்டவளுமாக நினைக்க முடியவில்லை. இம்மாதிரி வழிபாடுகள் primitive ஆகத் தோன்றுகிறது.
இந்த வழிபாடுகள் ஊடே வயிற்றுப் பாடும் கவனிக்கப் பட்டது. இந்தச்சடங்குகளை நான் என் விடியோ காமிராவில் பதிவு செய்திருக்கிறேன் இது முடிந்து மஹாராஜாவின் கொட்டாரம் செல்லும் முன் செருப்புளச்சேரி என்னுமிடத்தில் ஒரு ஐயப்பன் கோவில் காண  விரும்பினார்கள். அந்தக் கோவிலின் விசேஷமே அங்கிருக்கும் ஐயப்பன் நின்ற கோலத்தில் இருப்பதுதான். ஆனால் பேண்ட் அணிந்திருந்த எனக்கு அனுமதி இல்லை என்றார்கள். தூரதிலிருந்தே சேவித்துக் கொண்டிருந்த என்னையும் என் மச்சினன் ஒருவனையும் பார்த்த அந்தக் கோவிலில் பொறுப்புள்ள ஒருவர் நாங்கள் உள்ளே சென்று தரிசிக்க அனுமதி கொடுத்தார்
ஒரு வழியாய் அறைக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் என் மாமியார் வீட்டுக்குலக் கோவிலுக்கு மீண்டும் சென்றோம் . இம்முறை என் கடைசி மச்சினியின் பிரார்த்தனை நிறைவேற்ற. அவளுக்கு ஒரு சாலை விபத்தில் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் என்னும் நிலையில் ஒரு காலில் சிதைவு ஏற்பட்டு நிறையவே காஸ்மெடிக் சர்ஜெரி செய்து ஓரளவு நடமாடுகிறாள். அவளுக்குக் காலில் “ஆணி“ என்னும் தொல்லை வந்து குணமாக பரியாம்பட்தக் காவில் நேர்த்திக்கடன் கோவிலில் எண்ணையும் அப்பளமும் வாங்கிக் கொடுக்க அவர்கள் அவற்றைப் பொரித்துத் தருகிறார்கள் அந்த பொரித்த அப்பளங்களை பகவதியின் சன்னதி முன்னால் ஒரு வாழை இலையில் வைக்கிறார்கள். இவள் “ஆணியுள்ள  காலாஇ அதை மிதித்து நொறுக்க வேண்டும்  பிறகு அங்கிருந்த ஒரு ஓட்டலில் காலை ஆகாரம் நாங்கள் பத்து பேர் ( ட்ரைவர் உட்பட ) காலை உணவு வயிறார உண்டதற்கு ரூ. நானூறுக்குள்தான் ஆயிற்று. இதையே நாங்கள் இருந்த கொட்டாரத்தில் உண்பதாயிருந்தால் ரூபாய் ஆயிரத்தைநூறுக்கு குறையாமல் ஆகி இருக்கும். காலை பதினொன்றரை மணிக்கு பாலக் காட்டில் ரயில் ஏறினோம். பகல் வேளைப் பயணம் வெயிலின் தாக்கம் அதிகமாகவே தெரிந்தது. இரவு எட்டு மணி அளவில் வீடு சேர்ந்தோம் 
 இனி சில புகைப் படங்கள்.
பானை பந்தல் தயாராகிறது

பகவதி பிரதிஷ்டை வாளுடன் 
தூப தீப வழிபாடு 

பால மரக் கிளை பந்தலில் 



.
கேரளா ஸ்டைல்....!
      .  
 .
பரியாம் பத்தக் காவு முன் நாங்கள்,
.        

வெளிச்சப் பாடு வந்தாயிற்று .......!


   

 




திங்கள், 14 ஏப்ரல், 2014

பயணம் - அனுபவங்கள் எண்ணங்கள்.


                பயணம் - அனுபவங்கள் எண்ணங்கள்.
                ------------------------------------------------------


என் மனைவி( வலமிருந்து இரண்டாமவர்)  தன் உடன் பிறப்புகளுடன்
பயணம் செய்வது எனக்குப் பிடிக்கும் . அதுவும் என் சிந்தனைக்கு தீனி போடுவது என்றால் இன்னும் பிடிக்கும். தாய் மொழி எது என்று கேட்டு ஒரு பதிவு எழுதி நான் குழம்பியதல்லாமல் மற்ற வர்களையும் ( ? ) குழம்பவைத்த எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் வந்தது. குலதெய்வம் குடும்பக் கோவில் என்கிறோமே அது எது.” எனக்கு என் தந்தையின்  குடும்பக் கோவிலாக பாலக் காட்டில் இருக்கும் மணப் புளிக் காவு என்பார்கள்.எனக்கும் அதுதான் குலக் கோவில் என்று அங்கு என் மனைவி மக்களுடன் சென்று வழிபட்டும் வந்திருக்கிறேன் என் மனைவியின் குலக் கோவில் பரியாம்பத்தக் காவு என்று சொல்லி இருந்தாள். அங்கும் என் பரிவாரங்களுடன் சென்று வந்திருக்கிறேன் இது வரை சரி. இந்த முறை அவள் தந்தையின் குலக் கோவிலுக்கும் அவருடைய தரவாட்டு ( குடும்ப ) வீட்டுக்கும் கோவிலுக்கும் செல்லவிரும்பினாள் . அவளது தந்தையின் இடத்தில் தற்போது வசிக்கும் உறவினர்கள் ( உரிமை இல்லாமலேயே வசிக்கும் ) ஒரு வழிபாடு செய்யப் போவதாகவும் நாமும் அதில் கலந்து கொள்ளஅழைப்பு இருப்பதாகச் சொன்னாள். அவளது உடன் பிறப்புக்ள் அனைவரும் கலந்து கொள்வதாகவும் கூறினாள். உடன் பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கும் ஒரு வழிபாட்டைக் காண எனக்கும் ஆவல் பிறந்தது. அங்கு போனபோது மாங்காட்டுப் பகவதி அவளது தந்தையின் குலதெய்வம் என்றாள், அதுதான் என் சந்தேகத்துக்கு இன்னொரு வித்திட்ட்து. இப்போது குலதெய்வம் குலக் கோவில் என்று எதைக் கூறுவது. எங்கும் நிறைந்த ஆண்டவன் இருக்குமிடமெல்லாம் குலக் கோவில் என்று பதில் சொல்லித் தப்பிக்க என்னால் முடிவதில்லை. நாளைக்கு என் மக்கள் அவர்களது குலக் கோவில் எது என்று கேட்டால் நான் எதைச் சொல்ல.?என் மூதாதையரின் மணப் புளிக்காவையா, என் மனைவியின் தாய் வீட்டு பரியாம்பத்த பகவதி கோவிலையா.  அவளது தந்தை வீட்டு மாங்காட்டு பகவதி கோவிலையா?  இம்மாதிஎரி குலதெய்வக் கோவில்களை எப்படி நிர்ணயம் செய்வது. இந்த சந்தேகமே என் மாதிரியான காஸ்மோபாலிடன் குடும்பத்தில் எழாமல் இருக்க என்ன செய்யவேண்டும் ? பட்டும் படாமல் பதில் சொல்வதைத் தவிர்த்து உங்களுக்குத் தோன்றுவதைக் கூற வேண்டுகிறேன்.
எங்கள் குலக் கோவில் மணப்புளிக்காவில் மனைவி ,பேரன் பேத்தி, மருமகளுடன்
பரியாம்பத்தக் காவு க்ஷேத்திரம்
மாங்கோட்டு பகவதி கோவில்

பரியாம்பத்தக் காவு இன்னொரு கோணம்
மாங்கோட்டு பகவதி கோவில் யானை

இந்தப் பயணமும் ஊரில் நடைபெற்ற வழிபாட்டுச் சடங்குகளும்  அது குறித்த என் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். இனி ஆரம்பமுதல். , இந்தச் சடங்கில் கலந்து க்ள்ள அழைப்பு என்றதுமே என்ன் இப்போது இந்தச் சடங்கு என்னும் கேள்வியும் எழுந்தது. என் மனைவியின்  தந்தையின் குடும்பவீட்டில் அவரது சகோதரிகளின் வாரிசுகள் வசிக்கிறார்கள். அது பற்றி யாரும் கருத்துக் கூறவுமில்லை, உரிமை கொண்டாடவும் இல்லை. ஆனால் என் மனைவியின் தாயார் அவரது கணவரின் இருக்கும் நிலபுலன்களை விற்கவோ பங்கு போடவோ கூடாதென்பதில் உறுதியாய் இருந்தார். அந்த இடத்தை அனுபவிக்கும் உரிமையில் அவர்கள் “ பானை ” என்று கூறும் வழிபாட்டுச் சடங்கு செய்வதாய் வேண்டிக் கொண்டிருந்தனர். அதற்கே என் மனைவி மற்றும் உடன் பிறப்புகளுக்கு அழைப்பு. முன்பொரு முறை இந்த மாதிரிஒரு சடங்கைக் கண்டதுண்டு. இதைப் பற்றி கூகிளில் தேடினேன் . எனக்கு எதிர்பார்த்த விஷயங்கள் கிடைக்கவில்லை. ஆகவே இது பற்றிய ஒரு பதிவினைப் பகிர்ந்து கொள்கிறேன்
 நாங்கள் ஒன்பது பேர் பத்தாம் தேதி காலை எர்ணாகுளம்  இண்டெர்சிடி எக்ஸ்ப்ரெசில் பயணம் செய்ய முன் பதிவு செய்யப் பட்டிருந்தது. சடங்கு நடை பெற இருந்த இடம் “ வெள்ளிநாழி “ எனப் பட்டது. அங்கு தங்கும் வசதிகள் குறைவு என்பதால் ஒத்தப் பாலத்தில் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஒத்தப் பாலத்தில் நாங்கள் பயணித்த ரயில் நிற்காதாகையால் பாலக்காடு வரை சென்று அங்கிருந்து எங்களை அழைத்துச் செல்லவும் நாங்கள் எங்கும் போக்வரவும் 12 இருக்கை கொண்ட வான் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இத்தப் பாலத்தில் எங்களுக்கு தங்க “மஹாராஜாஸ் கொட்டாரம்” எனப் பட்ட
ஹோட்டலில் அறைகள் முன் பதிவு செய்யப் பட்டிருந்தது. மதியம் மூன்றரை மணி அளவில் ஹோட்டல் அடைந்தோம். சற்று சிரமப் பரிகாரம் செய்து விட்டு என் மனைவியின் தாயாரின் குலக் கோவிலுக்குச் சென்றோம். எங்களுக்கு எப்பொழுதும் ஒரு ராசி. நாங்கள் பயணிக்கத் துவங்கும் போது மழை வரும் அதேபோல் நாங்கள் சென்றடைந்த இடத்திலும் மழை வரும். நாங்கள் இரு முறை சென்னை சென்றிருந்தபோதும் மழை பெய்து பதிவர்கள் என்னை சந்திப்பதற்கு இடையூறு விளைத்தது. இப்போதும் நாங்கள் பெங்களூரை விடவும் மழை தொடங்கிற்று. மாலை பரியாம்பத்தக் காவு எனப் படும் தேவி க்ஷேத்திரத்துக்குச் சென்றபோதும் மழை பெய்தது. இந்தமழை எங்கள் தொழுகை முடிந்து புறப்படும் நேரத்தில் அடித்துக் கொட்டி வெப்பத்தின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்தது. அன்றிரவு கொட்டாரத்துக்கு (மாளிகை.?) வந்து உணவுண்டு உறங்கினோம்.

கொட்டார முகப்பில்
கொட்டாரத்தின் முன்னால்
        .  
 . .     மீண்டும் வந்து தொடர்கிறேன் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.  



   

 





செவ்வாய், 8 ஏப்ரல், 2014

தேர்தலில் வாக்களிக்கும் முன் சிந்திக்க.


                                 தேர்தலில் வாக்களிக்கும் முன் சிந்திக்க
                                 ----------------------------------------------------------



தேர்தல் நெருங்குகிறது .நாட்டு மக்கள் அவரவர் வாக்குகளை அளித்து ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டியவராகிறோம் நம்முடைய இந்த வாக்கு நம்மை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மத்தியில் இருந்து நம்மை ஆள்பவரைத் தீர்மானிக்கும்.  நம்மை ஆளப் போவது தனி மனிதரா இல்லை கொள்கை கோட்பாடுகள் கொண்ட கட்சியா? . இந்தப் பெரிய பொறுப்பு தனிமனிதரால் முடியாது. ஆகவே சுயேட்சையாக எந்த தனி மனிதர் ( அவர் எவ்வளவோ நல்ல மனிதராயிருந்தாலும் )   தேர்தலுக்கு நின்றாலும் கண்ணை மூடிக் கொண்டு தவிர்த்துவிட வேண்டும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுய ஆட்சி என்று முழங்கி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மத்தியக் கூட்டாட்சியில் அவரவர் நலங்கருதி எந்த உருப்படியான செயலையும் செய்ய விடாமல் தடுக்கிறார்கள் இம்மாதிரி பல மாநிலக் கட்சிகள் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் போது பொதுவாக சில குறைந்த பட்ச நற்காரியங்களுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் அது என்ன என்று தேர்தலுக்கு முன் கூட்டியே ஒப்பந்தம் செய்து கொண்டு தேர்தலில் இறங்க வேண்டும் . இம்மாதிரி குறைந்த பட்ச பொது செயல்பாடுகள் நடக்க இவர்களுக்குள் ஒத்த policies  இருக்க வேண்டும் இம்மாதிரி ஒருமித்த கருத்து மக்கள் நலத் திட்டங்களுக்காக இருக்க வேண்டும் மக்கள் நலத் திட்டங்கள் என்று எதைக் கூறலாம் பொதுவாக மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் வாழ்க்கைத்தரம் உய்ர அவர்களுக்கு நிலையான ஊதியம் தரும் தொழிலோ பணியோ இருக்க வேண்டும் திட்டங்கள் இவற்றை அடைய என்னென்ன வழிமுறைகள் இருக்கிறது அதை எப்படி செயல் படுத்துவது என்பதில் ஒத்தகருத்துக்கள் இருக்கவேண்டும் அடிப்படைக் கல்வி சுகாதாரம் இவற்றில் நிலவிவரும் குறைகள் அறியப் பட்டு அவற்றைச் சீர்செய்யும் வழிமுறைகள் கண்டறியப் படவேண்டும்
கடந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது அவற்றின் செயல்பாடுகளில் சில குறைகள் இருக்கலாம் முக்கியமாக வருடத்தில் நூறு நாட்களுக்கு ஊதியம் தரும்  திட்டம் , தகவல் அறியும் சட்டம் . ஏழைகளுக்கு நல்ல கல்விதர விழையும் 25% ஒதுக்கீடு சட்டம் அனைவருக்கும் உணவுக்கு வழிவகை செய்யும் திட்டம் பிற்படுத்தப் பட்டோருக்கு ஒதுக்கீடு தரும் சட்டம்  என்று பலதும் சொல்லிக் கொண்டே போகலாம் நம் மக்களின் வாழ்க்கைத்தரம் நிச்சயம் உயர்ந்திருக்கிறது ஆனால் இவையெல்லாம் இன்னும் மேம்பட்டுச் செயல் படுத்தி இருக்கலாம் திட்டங்களை நிறைவேற்ற சட்டங்கள் அவசியம் ஆனால் சட்டம் இயற்றப் பட வேண்டிய நாடாளு மன்றத்தையே சிலரால் செயலிழக்கச் செய்ய முடிகிறது என்றால் மத்தியில் அறுதிப் பெரும்பானமை கொண்ட அரசு இல்லாததுதான் என்பது தெளிவாகிறது ஆகவே இந்தத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் கட்சி பெரும்பான்மை பலம் பெற்று விளங்க வேண்டும் என்பது கண்கூடு. ஆனால் இந்த சாத்தியக் கூறு நடக்க வழி இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பான்மை பலம் தேவை என்பது அரசியல் கட்சிகளுக்கும் தெரியும் இதற்காக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவர்களது சாயத்தைக் காட்டுகிறது மக்கள் நலம் ஒன்றுதான் கட்சிகளின் கொள்கை என்று இருந்தால் அதை நிறைவேற்ற எடுக்கப்படும் வழிமுறைகளும் முக்கியம் THE MEANS TO ACHIEVE THE PARTY;S ENDS ARE ALSO IMPORTANT.  ஊழல் குற்றச் சாட்டுகளில் மூழ்கி இருக்கும் சிலரை அவர்களது இனம் சாதி சார்ந்த பலத்துக்காக கட்சியில் பல ஆண்டுகளாக விசுவாசிகளாக இருந்த பலரைப் புறக் கணித்து தேர்தலில் நிற்க வைப்பவர்களுக்கு கொள்கை என்பதே இருக்க வாய்ப்பில்லை.
கட்சியின் கொள்கைகள் ஓரளவுக்கு நமக்கு நல்லது என்று படும்படியாக இருந்தால் தேவலை. இந்த நாட்டில் ஏறத்தாழ 20 சதவீதம் பேர் சிறுபான்மை யினோர். அவர்களை ஒதுக்கி பெரும்பான்மையினரின் நலம் என்று கருதி கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அதrகேற்ப மாற்றுவது ஜனநாயகத்துக்கு ஒவ்வாதது,

நான் பதிவில் எழுதி இருப்பது மக்கள் நம்மை ஆள்பவரைத் தேர்ந்தெடுக்க சிந்திக்க வேண்டிய சில விஷயங்களே. பதினெட்டு வயதானாலேயே வாக்குப் பதிவு செய்யும் உரிமையைப் பெற்றோர் சிந்தித்து செயல்படவேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம் என் அனுபவப் படி அரசியலும் கட்சிகளும் சுய லாபத்துக்காக செயல் படுகின்றன, எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அதில் எந்த மட்டை சிறந்தது என்று தேர்வு செய்வது கடினம் இருந்தாலும் நம் வாழ்க்கையில் சில நெறிமுறைகளும் மதிப்பீடுகளும் சிறந்தது என்று புகட்டி வளர்க்கப் பட்டிருப்போம்  அதோடு ஓரளவுக்காவது ஒத்துவரும் கட்சியைத் தேர்வு செய்வோம்

       

சனி, 5 ஏப்ரல், 2014

தாய் மொழி சில சந்தேகங்கள்


                                         தாய்மொழிசில சந்தேகங்கள்
                                          ----------------------------------------



சென்றபதிவில் என் பதிவிற்காக என் ஒன்பது வயது பேரன் எழுதிக் கொடுத்த ஒரு ஆங்கில சிறுகதை பதிவிட்டேன். அதற்கு பின்னூட்டமிட்ட சிலர் அவனுக்குத் தமிழ்போதிக்கும்படியும் கூறினர். தாய்மொழி ஒருவனுக்கு அவசியம் தெரிந்திருக்கவேண்டும் என்பதில் எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் ... ஒரு பெரிய்ய்ய்ய்ய ஆனால்...... எது தாய்மொழி என்பதுதான் சிக்கல் விலாவரியாகக் கூறினால்தான் சிக்கல் புலப்படும். என் பேரப் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது அவர்களது தாய்மொழி மலையாளம் என்று கொடுத்தனர். என் மகன்களிடம் கேட்ட போது அவர்களது தாயின் மொழி மலையாளம்தானே என்று கூறினர். அதாவது தாய் பேசும் மொழி என்னும் பொருள் கொண்டிருந்தனர். சந்தேகத்துக்கு இடமில்லாமல் என் தாய்மொழி தமிழ். நான் ஒரு மலையாளப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாலும் வீட்டில் பேசும் மொழி தமிழே இருந்தது. என் மகன்கள் வளர்ந்து திருமணம் செய்து கொண்டது மலையாளப் பெண்களையே. ஆனால் இவர்கள் தமிழிலும் அவர்கள் மலையாளத்திலும் பேசுவார்கள் அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்ததும் வீட்டில் இரு மொழி புழக்கம் இருந்தது. பேரக் குழந்தைகள் தந்தையிடம் தமிழிலும் தாயிடம் மலையாளத்திலும் பேசுவது பார்ப்போருக்குப் புதிதாய் இருந்தது. என் பிள்ளைகள் துவக்கத்தில் தமிழ் படித்து வந்தனர். ஆனால் என் பணி மாற்றம் காரணமாக விஜயவாடாவில் ஹிந்தி பயிலத் தொடங்கினர். ஆக தமிழில் கஷ்டப் பட்டுப் படிக்க முடிந்தாலும் தேர்ச்சி பெற முடியவில்லை. என் பேரக் குழந்தைகள் இரு மொழியிலும் நன்கு பேசக் கற்றாலும் எழுதப் படிக்க என்பது ஆங்கிலம் ஆகி விட்டது  நான் பேரக் குழந்தைகள் கட்டாயம் தமிழ் எழுதப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. அப்படிச்செய்தால் ஒரு வேளை மொழி வெறியன் என்னும் பெயர் வரலாம் என் மகன்கள் தமிழ் ஆங்கிலம் மலையாளம் ஹிந்தி கன்னடம் தெலுங்கு என்று பல மொழிகளில் சரளமாகப் பேசுவார்கள். என் பிள்ளைகளாவது தமிழைப் படிக்கவும் பேசவும் கற்றிருக்கிறார்கள். ஆனால் என் பேரப் பிள்ளைகள் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மொழிகளையே கற்கிறார்கள். எனக்குப் பல முறை சந்தேகம் வருவதுண்டு. தாய்மொழி என்பது வ்ளரும்போது பழகும் மொழி என்றால் என் பேரக் குழந்தைகளின் தாய் மொழி ஏது. நிச்சயம் தாய் பேசும் மொழி என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. இணையத்திலும் அகராதியிலும் அப்படிச் சொல்லவில்லை

இம்மாதிரிக் குழந்தைகள் எந்த மொழி பேச வேண்டும் என்பது சூழ்நிலைகளைப் பொறுத்தே இருக்கிறது என் சின்ன பேரன் அவன் தாயிடம் அதிக நேரம் செலவு செய்வதால் ஓரளவு மலையாளம் பேசுகிறான். தந்தையை விடுமுறை நாட்களில் பார்ப்பதோடு சரி. அவரோடு பேச ஆங்கிலம் இருக்கிறது. தமிழில்தான் பேசவேண்டும் என்று கட்டாயப் படுத்துவது சரியல்ல என்றே நினைக்கிறேன் மற்ற இரு பேரக் குழந்தைகளும்  மும்மொழிகளிலும் உரைடாடுவதில் வல்லவர்கள்.

காலத்தின் கட்டாயத்துக்காக ஆங்கிலக் கல்வி பெறுகிறார்கள். நம் மொழியைப் பயிலும் வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் என்னுடனே இருந்தால் நான் அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க முயன்றிருக்கலாம் . //  

( சென்ற பதிவில் ஒரு ஆங்கிலக்கவிதை பதிவிட்டு அதத் தமிழில் மொழி பெயர்க்கவோ மொழியாக்கம் செய்யவோ பதிவர்களிடம் வேண்டி இருந்தேன் ஆங்கிலத்தில் பட்டப் படிப்பும் முதுகலைப் படிப்பும் படித்தவ்ர்கள் என் தளத்துக்கு வருகை தருவதை நான் அறிவேன் நிச்சயம் மொழி வல்லுனர்கள் இருக்கிறார்கள். ஏன் தயங்குகிறார்கள் தெரியவில்லை.இதன் மூலம் மீண்டும் என் அழைப்பைப் புதுப்பிக்கிறேன்)





       
 

புதன், 2 ஏப்ரல், 2014

\ஒரு ருசியான பதிவு

ஒரு ருசியான பதிவு
(A SPICEY POSTING )

சில நாட்களாகப் பதிவேதும் எழுதவில்ல. கற்பனைக்கு கடிவாளம் இடப் பட்டதோ என்று எழுதி சில காணொளிகளைப் பதிவு செய்திருந்தேன். உண்மையில் சிந்தித்து எழுதுவதற்கு நேரமில்லை. என் இரண்டாம் மகனின் மகன் . என் இரண்டாம் பேரன் என்னுடன் சில நாட்கள் கழிக்க வந்திருக்கிறான். அவ்வப்போது நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போய் வந்தாலும் விடுமுறை நாட்களில் அவன் மட்டும் இங்கு எங்களுடன் தங்க வந்தது இதுவே முதல் தடவை. இவனைப் பற்றி பல பதிவுகள் எழுதி இருக்கிறேன் நான் பதிவு ஏதும் எழுதிவலைத்தளத்தில் பதிவு செய்ய இயலவில்லை என்று குறை பட்டுக்கொண்டிருந்தபோது “ நான் எழுதித் தருகிறேன் என்று சொல்லி ஒரு கதை எழுதிக் கொடுத்தான் இவனுக்கு இப்போதுதான் வயது ஒன்பது முடிந்திருக்கிறது. “ எழுதிக் கொடு பதிவிடுகிறேன்” என்று சொன்னேன். அவன் எழுதிக்கொடுத்த கதை கீழே. இவனுக்குத் தமிழ் படிக்கவோ பேசவோ வருவதில்லை. ஆங்கிலம்தான் ஆகவே கதையும் ஆங்கிலத்தில்தான்.

THIS IS A STORY OF AKBAR AND BIRBAL
Once when Birbal went to Akbar’s court, Birbal teased Akbar for becoming fat.Akbar explained”It is when I see food  I eat it all.”Birbal said,” No Maharaj ;it is because you don’t have any tension”Akbar  didn’t believe it . He said ,”Prove it “Then Birbal said “OK” Birbal went and bought a goat from the market. And fed it well daily. When the king came for inspection he found the goat same and it did not gain or lose any weight.He was surprised…! He asked Birbal ,”How did you do it.?”Birbal said “Every night I tied it to a cage of a hungry lion” Akbar was proud of Birbal;s wit.

என்ன நண்பர்களே கதையைப் படித்தீர்களா.? பலரும் கேட்ட கதையாய் இருந்தாலும் ஒரு கதை சொல்லியின் உத்தி தெரிகிறது இல்லையா.?எழுதிவிட்டேன். இனி பதிவிடத்தான் வேண்டும் என்றுஅவனிடம் சொன்னதும் WHAT ARE YOU GOING TO WRITE ABOUT THE AUTHOR ? என்று கேட்கிறான்.......!

கதாசிரியன்

இவனே அவன் இரு ஆண்டுகளுக்கு முன் 
                                ******************
பேரனின்  கதை ஆங்கிலத்தில் இருந்ததால் இந்தப் பதிவில் ஒரு ஆங்கிலக் கவிதை தருகிறேன். அதை தமிழ்படுத்த வாசகர்கள் முன் வரலாம்  முதலில் ஒரு போட்டியாக அறிவிக்கலாம் என்றிருந்தேன் நல்ல மொழி பெயர்ப்பு அல்லது மொழியாக்கம் எழுதுபவர்களுக்கு ஒரு பட்டப் பெயர் அறிவிக்கப் படும் வாசகர்களுக்கு உதவ கவிதையின் தலைப்பையும் தருகிறேன் எங்கே பார்க்கலாம் எத்தனை பேர் இரு மொழி வல்லுனர்கள் என்று

DRONA

THY flaunted virgin phalanx cleft a two

By but a stripling, thine own pupil's son
Whose bow abash'd his sire's preceptor! You,
In pain of tortur'd vanity, let run
Thine ire to blind thee to the blackest deed
Besmirch'd the scroll of Aryan Chivalry!
The while thy master's ghoulish hate did feed
And fatten on thy victor's butchery,
 
Thy father's heart had it bore some pity
For Partha in his dire calamity,
Dread Nemesis had spar'd thine aged brain
The searing, killing agony accrued
Of death of thine own son. Thou didst but drain
The bitter gall thy vanity had brewed!
                 ********************************
ஹிரண்யகசிபுவின் மனைவியின் கர்ப்பத்தில் ப்ரஹலாதன் இருந்தபோது நாரதரின் நாராயண மந்திர உபதேசங்களைக் கேட்ட ப்ரஹலாதன் தன் சிறு வயதிலேயே அசைக்க முடியாத நாராயண பக்தனாக விளங்கினான் என்னும் கதையை நம்பும் நம்மில் பலரும் இந்த சாத்தியக் கூற்றையும் நம்பத்தான் வேண்டும் . இதோ பார்த்து ரசியுங்கள்.  





திங்கள், 31 மார்ச், 2014

என் பதிவேதுமில்லை ,ப்கிர்வே


                     என் பதிவேதுமில்லை.... பகிர்வா
                      ---------------------------------------------
எழுதுவது என்பது நினைத்த மாத்திரத்தில் முடிவதில்லை. நான் விரும்பும் தலைப்பும் அதை நான் எழுதினால் சிலராவது ரசிப்பார்கள் என்றநம்பிக்கையும் வேண்டும். , கற்பனைக்கு எங்கோ கடிவாளம் இட்டுவிட்டது போல் இருக்கிறது. இருந்தாலும் பதிவுலகில்  நான் எழுதுவதையோ இல்லை வேறு ஏதாவது பதிவிடுவதையோ சிலராவது எதிர்பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் ஆகவே இப்பதிவு எனக்கு வந்த சில படங்கள், காணொளிகள் இவற்றின் பதிவே.ரசிப்பீர்கள் என்று தெரியும்  கீழே ஒரு படம். அந்தப் படத்தை சாதாரணமாகப் பார்த்தால் தெரியாததுகவனித்துப் பார்த்தால் தெரியும் எங்கே பார்த்துச் சொல்லுங்கள்



சாது மிரண்டால் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் இங்கு ஆடு மிரண்டால்.....என்ன நடக்கிறது பாருங்கள்


நடனம் ஆடுவது கண்டிருக்கிறோம் உடலின் பல பாகங்கள் ஒருங்கிணைந்து அழகு பாவத்துடன் அசைப்பது ( தாளத்துக்கு ஏற்ப )என்று புரிதல் ஆனால் முகத்திலேயே , முகத்தாலேயே ஆடும் நடனமிதோ .பார்த்து ரசியுங்கள்.

மீன் வகைகளில் டால்ஃபின்கள் புத்தி கூர்மை உள்ளவை. நான் துபாய் சென்றிருந்தபோது ஒரு ஷோவுக்குப் போயிருந்தேன் டால்ஃபிகள் என்னவெல்லாம் செய்கின்றன காணீர்.



என்ன நண்பர்களே ரசித்தீர்களா. இன்னும் சில காணொளிகள் பிறிதொரு பதிவில்.
   

வெள்ளி, 28 மார்ச், 2014

கன்னட கவி சர்வக்ஞா


                                    கன்னட கவி சர்வக்ஞா
                                    --------------------------------
( மயிலின் தோகை விரிப்போடு வணக்கம் கூறி வரவேற்கிறேன்)




திருவள்ளுவர் யார் என்று தமிழ் படித்தவர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தமிழ் படித்தவர்கள் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளிலிருந்து ஓரிரு குறள்களையாவது சொல்வார்கள் என்றுநம்புகிறேன். இன்னும் சிலருக்கு திருக்குறள் மூன்று பிரிவுகளில் ( அறப்பால் ,பொருட்பால், காமத்துப்பால்) மொத்தம் 133 தலைப்புகளில் தலைப்புக்குப் பத்தாக 1330 ஈரடிச் செய்யுட்கள் கொண்டது என்றும் தெரிந்திருக்கலாம்
சரி சர்வக்ஞா யார் என்று தெரியுமா? தமிழர்கள் அநேகமாகக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். சிலருக்கு வேண்டுமானால். திருவள்ளுவர் சிலை பெங்களூரில் திறக்கப்பட வேண்டுமானால் சென்னையில் கன்னட கவி சர்வக்ஞாவின் சிலையும் திறக்கப் படவேண்டும் என்ற கன்னடியர்களின் கோரிக்கை நினைவுக்கு வரலாம். அதாவது தமிழர்களுக்கு திருவள்ளுவர் போல கன்னடியர்களுக்கு சர்வக்ஞா
“கைகள் அள்ளிய நீர்” பதிவர் திரு சுந்தர்ஜி அவர்கள் சுபாஷிதம் என்னும் தலைப்பில்  இம்மாதிரி பல அறிஞர்களின் வாக்குகளை எழுதிக் கொண்டிருந்தார் அவர் சர்வக்ஞாவின் செய்யுட்கள் transliteration  translation  -உள்ள  புத்தகம் கிடைக்குமா என்று கேட்டிருந்தார். நானும் பல்வேறு கன்னடநண்பர்களிடமும்  பதிப்பகங்களிலும் விசாரித்து ஏதும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தேன். என் இயலாமையை அவரிடமும் தெரிவித்தேன்  

இருந்தாலும் இப்படிப்பட்ட சர்வக்ஞா பற்றியும் அவரது  செய்யுட்கள் பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆவலோடுமுனைந்தேன். ஒருசில தகவல்களும் செய்யுட்களும் இணையத்தின் மூலம் கிடைத்தது. இணையத்தில் தேடும்போது கன்னட மொழியில் வேண்டுமானால் அவரது செய்யுட்கள் கிடைக்கலாம் ஆனால் எனக்குக் கன்னடம் தெரியாது ஆகவே எனக்குக் கிடைத்த தகவல்கள் உங்களிடம் பகிர்கிறேன் இணையத்தில் தேடும்போது ஒரு சில செய்யுட்களின் transliteration , translation  கிடைத்தது. அவற்றை எழுதியவருடனும் தொடர்பு கொண்டேன் அவர் ஒரு தமிழர். அவரும் முழுவதும் எழுத முயல்வதாகக் கூறி இருக்கிறார் இது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. திரு சுந்தர்ஜி இப்பொழுதெல்லாம் வலைப் பக்கம் வருவதில்லை. முகநூலில் மும்முரமாகி விட்டார். அதில் அவர் சர்வக்ஞாவின் சில செய்யுட்களை பதிவிட்டுப் பகிர்ந்திருக்கிறார்.
புஷ்பதத்தர் என்னும் இயற்பெயர் கொண்ட சர்வக்ஞாவின் காலம் சரியாகக் கணிக்கப் படவில்லை பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவராக எண்ணப் படுகிறது. ஒரு சைவப் பிராம்மணத் தந்தைக்கும் , ஒரு சூத்திரவிதவைப் பெண்ணான தாய்க்கும் பிறந்தவர் என்று சொல்லப் படுகிறது ஆயிரத்துக்கும் மேற்பட்ட த்ரிபாதி(TRIPADIS) எனும் மூன்றடிச் செய்யுட்களை இவர் இயற்றி இருப்பதாகச் சொல்லப் படுகிறது மதம் ஒழுக்கம் வழக்கம் ஜோதிடம் பருவங்கள் புதிர்கள் என்று பல தலைப்புகளில் இவர் எழுதி இருப்பதாகக் கூறப் படுகிறது அறிஞர்கள் இவரது செய்யுட்களிருந்து மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால் இவர் எழுதியதாக கருதப்படும் எந்த இரு புத்தகமும் ஒருப்போல இருப்பதில்லையாம்.  ஒருவேளை இவர் இயற்றியதாகச் சொல்லப் படும் பல செய்யுட்கள் பல நகல் எழுத்தாளர்களின் இடைச் செருகலாக இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. இனி இவர் எழுதிய சில( ”VACHANAGALU”)   செய்யுட்கள் சிலவற்றைக் காண்போம்


 1) சர்வக்ஞ எம்பவனு (G)கர்வதி-இந்த –ஆதவனே
சர்வரொல்லு ஒந்து ஒந்து நுடி கலிது
வித்யேய பர்வதவே ஆதா சர்வக்ஞா..!

சர்வக்ஞா என்பவ்ன் கர்வம் கொண்டவனே
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றாகக் கற்று
அறிவில் மலைபோல் விளங்கினான்

விளக்கம்:-சர்வக்ஞா என்பவன் உன்னைப் போல் ஒருவனே என்றாலும் 
ஒவ்வொருவனின் வார்த்தையிலும் ஞானம் பெற்று மலை போல் விளங்கினான் ( சர்வக்ஞா = எல்லாம் அறிந்தவன் )

( எனக்குத் தெரிந்த சில கன்னட நண்பர்கள் சர்வக்ஞாவின் இந்த மூன்றடிகளைச் சொல்கிறார்கள் நாம் திருக்குறளில் “அகர முதல....”சொல்வதைப்போல)

2) ஏளு கோடியே கோடி ஏளு லக்‌ஷ்வே
ஏளு சாவரித எப்பத்து வசனகள
ஹேளித்தானு  கேள  சர்வக்ஞ
..
ஏழு கோடியே ஏழு லக்ஷத்து
ஏழாயிரத்து எழுபது வசனங்கள்
சர்வக்ஞனால் கூறப் பட்டது அறிவீர் நண்பர்களே

விளக்கம் சர்வக்ஞர் கூறுகிறார். அவரால் பயனுள்ளதாஉ உலகோருக்குக் கூறப்பட்ட வாக்குகள்  ஏழு கோடியே ஏழு லட்சத்து ஏழாயிரத்து எழுபதுஎன்று. (ஆனால் 2000—2500 வசனங்களே கிடைத்திருக்கின்றன)

3) கெலவம் (B)பல்லவரிந்த கலது
கெலவம் மல்பவரிந்த கண்டு மத்தே
ஹலவம்தானே ஸ்வதஹா மாடி தில்லி எந்தா சர்வக்ஞா

சில அறிந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்
சில பிறர் செய்வதைக் கண்டு அறிந்து கொள்
மற்றவை தானே அறிந்து செய்யச் சொல்கிறார் சர்வக்ஞா

விளக்கம் :- உலகில் எல்லாம் நமக்குத் தெரியாது. சர்வக்ஞா கூற்றுப்படி சில விஷயங்கள் பிறர் சொல்வதைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் இன்னும் சிலவை பிறர் செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் மற்றவை அவரவர் அனுபவத்தில் கற்றுத் தெரிய வேண்டும்

4)மூர்கநிகே புத்தியனு நூர்க்கால பேளிதறு 
கோர்க்கல்ல மேல் மள கரெதரே 
ஆ கல்லு நீரு குடிவுதே சர்வஞ்யா

அறிவிலிக்கு  நூறாண்டு புத்திமதி சொலவது
பெருமழை கல்லில் வீழ்வதற்கொப்பாகும்
கல் ஒருக்காலும் நீரைப் பருகாது

விளக்கம் :- ஒரு முட்டாளுக்கு அறிவுரை கூறுவது கல்லின் மேல் பொழியும் மழைக்கொப்பாகும் அறிவிலி புத்திமதிகளை ஏற்கமாட்டான்  கல் நீரை  உறிய முடியாததுபோல

5) சித்தவுஇல்லதே (g)குடிய சுத்திதோடெஃபலவேனு
எத்து (g)கான்னவனு ஹொத்துத
நித்யதல்லி சுத்தி(b)பந்தந்தே சர்வக்ஞ

மனம் எங்கோ அலைய கோவிலைச் சுற்றுவதில் என்னபலன்
செக்கிழுக்கும் எருதின் சுற்றலுக்கு அது ஒப்பாகும்

 விளக்கம்ள்- கவுளிடம் மனம் லயிக்காமல் கோவிலைச் சுற்றுவதில் பலனேதுமில்லை. அச்செயல் செக்கிழுக்கும் மாடு போல் செயல் படுவதற்கு ஒப்பாகும்

6) சாலவனு கொம்பாக ஹாலோகருண்டந்தே 
சாலிகரு பண்டு எலெவாக 
கிப்பதிய கீலு முரிதந்தே சர்வஞ்யா

கடன் வாங்கும்போது தேனினும் இனிக்கும் பணம்
திருப்பிக் கொடுக்கக் கேட்கப் படும்போது
முதுகெலும்பை முறிபது போல் இருக்கிறது

விளக்கம்:- கடன் வாங்குவது வரமல்ல  சாபம் என்று உணர வேண்டும் கடன் பெறுகையில் இனிக்கும் பணம் திருப்பிக் கேட்கும் போது முதுகெலும்பை முறிப்பது போல் இருக்கும் கடன் முதுகெலும்பை முறிக்கிறதோ இல்லையோ அன்பை முறிக்கும்

7) அன்னவனு இக்குவுது நன்னியனு நுடியுவுது
தானந்தே பரார (b)பாகெடொடெ
கைலாச (b)பின்ன அனவக்கு  சர்வக்ஞ 

பசித்தோர்க்கு அன்னமிடல் உணமை உரைத்தல்
தன்னைப் போல் பிறரை பாவிப்பது
வானுலகத்துக்கு உயர்த்தும்

விளக்கம்:- சொர்க்கத்துக்குப் போக அனைவரும் விரும்புவர். பசித்து வருவோர்க்கு உணவிடுதல் என்றும் உண்மைபேஅல் தன் உயிர் போல் அனைத்தையும் எண்ணுவது இவையெல்லாம் வானுலகேக வழிவகுக்கும் 

( சென்றிடுவீர் எட்டு திசையிலும்  கொணர்ந்திங்கு சேர்ப்பீர்  கலைச் செல்வத்தை என்ற பாரதிக்கு நன்றி )