புதன், 20 ஆகஸ்ட், 2014

சித்தம் கொள்ளாததேனோ .......!


                                        சித்தம் கொள்ளாததேனோ........
                                        -------------------------------------


யாதுமறியாப் பருவத்தே என்னை ஈன்றெடுத்து
உனதன்பை நானும் உணரும் முன்பே சென்றுவிட்டாய்.
அன்னையே என் உயிர் ஈந்து உடல் தந்த அமுதமே
அம்மணியே உனைக் கண்டுன் அன்பில் திளைக்க
எனக்கேன் தரவில்லை வரமே.

இருந்தாலென்ன...இல்லாத ஒன்றை எண்ணி ஏங்கி ஏங்கி
அனவரதம் அழுது புரண்டு மருளுவதிலும் ஏது பயன்
ஈன்றெடுத்த உன்னிலும் மேலாக
நாளெல்லாம் பரிவுடன் பாங்குடன்
ஏழையெனை ஏற்றுக்கொண்ட ஏந்திழையும்
தாயுள்ளம் கொண்டவளே அறிவேன் நானும் 

இருக்கின்ற ஒரு மருந்தை உணராமல்
இன்னலுற்று ஏன் இடர்படவேண்டும்
யாதுமாகி நின்ற உன்னைக் காண விழைந்து
தாரமாக வந்தவளை என் தாயுமாகக் கண்டு
என் சஞ்ச்லங்கள் நீக்க முயலும் சேய் நான்
உனைக் காண வருகையில்-

பிள்ளையாய்ப் பிறந்து பாலனாய் வளர்ந்து
காளையாய்க் காமுற்று எனதவளைக் கைப்பிடித்து
இளமை ஒழிந்து மூப்புறும் நிலையில்
எல்லாம் செத்து நாளை எண்ணுகையில்
எனக்கு நானே அழாதிருக்க 

காக்கின்ற கண்களால் கருணை வெள்ளம்
கரை புரள  பூக்கின்ற புன்னகையால்
ஆறாத மனப்புண்ணின்  அசைவலைகள்
அடங்கவே அளித்தருளி அன்னையே
எனை ஆட்கொள்ள இம்முறை சித்தம்
கொள்ளாததேனோ எனை யாளும் சமயபுரத்தாளே,..

சமயபுரம்  மாரியம்மன் ( நான் தீட்டிய தஞ்சாவூர் ஓவியம்)

             



                   

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

கோகுலாஷ்டமி.....கண்ணன் கதை


                       கோகுலாஷ்டமி ...... கண்ணன் கதை
                        ---------------------------------------------------

நான் அவதாரக் கதைகள் என்னும் தலைப்பில் எல்லா அவதாரங்களைப் பற்றியும் எழுதி வந்தேன்

நாளுக்கேற்ற பதிவாக கோகுலாஷ்டமி அன்று கண்ணனின் கதை  பதிவிட விரும்பினேன் . அப்போது   நான் “கிருஷ்ணாயணம்” எழுதி இருந்தது வந்தது  நினைவுக்கு வந்தது. ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு முன் எழுதியது. இருந்தால் என்ன. ?நூற்றாண்டுகளாகக் கேட்டு வரும் கண்ணன் கதை என்றும் புதியதுதானே. மேலும் அன்று படிக்காதவர்கள் இப்போது படித்து பக்தியில் திளைக்கலாமே. இதோ.........”இதை சொடுக்கவும்

சனி, 16 ஆகஸ்ட், 2014

சுதந்திர தினச் சிந்தனைகள்


                                   சுதந்திர தினச் சிந்தனைகள்
                                  ---------------------------------------


சுதந்திரம் அடைந்து விட்டோம் 67 ஆண்டுகள் கழிந்து விட்டன. இந்தியா அரசியல் சுதந்திரம் பெறுமுன்னே பாடினான் பாரதி
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு  நாம் எல்லோரும் சமம் என்று உறுதியாச்சு “ என்று .
எல்லாக் கொண்டாட்டங்களுக்கும் நடுவில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் நாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்து விட்டோமா.?அரசியல் சுதந்திரம் , ஆட்சி அமைக்கச் சுதந்திரம் என்பதுதான் சுதந்திரமா.?சுதந்திரத்துக்கு எதிர்ப்பதம் அடிமைத்தனம் என்றால்அரசியலை நீக்கி நாம் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறோம், வாழ்கிறோம் நாம் பல விஷயங்களைக் கற்கிறோம் படிக்கிறோம் அறிகிறோம் ஆனால் உண்மையான சுதந்திரம் என்னவென்று நினைத்துப் பார்த்தோமா. இதை எழுதும் போது நம் வலையுலகப் பிரசித்தி பெற்ற திரு அப்பாதுரை அவர்களின் எழுத்துக்களை உபயோகிக்காமல் இருக்க முடியவில்லை. சுதந்திரத்தின் எதிர்ப்பதம் அடிமைத்தனம் என்று சொல்லி எது அடிமைத்தனம் என்னும் கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டால் அதன் எதிர்மறைகள் சுதந்திரம் என்று பொருள் கொள்ளலாம் இந்திய சுதந்திரம் கிடைத்த நாளில் திரு .ஜவஹர்லால் நேரு நிகழ்த்திய உரை பிரசித்திப் பெற்றது அதன் ஆரம்ப வரிகளைக் கொடுக்கிறேன்
Long years ago we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. A moment comes, which comes but rarely in history, when we step out from the old to the new, when an age ends, and when the soul of a nation, long suppressed, finds utterance.
Alas..Has that happenned  after so many years .?
அரசியல் சுதந்திரம் அடைந்து விட்டோம். .The soul of the nation , long suppressed. Has that found the utterance.?
திரு அப்பாதுரை அவர்கள் பள்ளிச் சிறுவர்களிடம் அடிமைத்தனம் பற்றிக் கேட்க அவர்கள் சொன்ன பதில்கள் சிந்திக்க வைக்கின்றன.
"அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.."

"
எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"

"
ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"

"
ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"

"
விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."

"
தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."

"
பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"

"
மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."

"
அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."
நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று கூறுகிறோமே நம் எண்ணம் செயல்கள் சுதந்திரமாக வெளிப்படுகிறதா.? ஆண்டை அடிமை என்று நிலவி வந்த நிலையை வெள்ளையன் அவனுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நம்மில் சுதந்திர எண்ணம் தோன்ற முடியாதபடி செய்து விட்டான் அடக்கி ஒடுக்கப் பட்டவர்கள் தலை நிமிர்ந்து எண்ணவோ செய்யவோ அதற்கான சூழலோ உருவாகி இருக்கிறதா.?அன்று அரசியலில் ஆங்கிலேயனுக்கு அடிமையா நின்றோம். இன்றும் அடிமைத்தனத்துக்கான காரணங்கள் தவிர்க்கப்படவில்லை. இன்றும் சுதந்திர எண்ணமோ செயலோ இல்லாமல் நம் வாழ்க்கையை நடத்துகிறோம் இன்று நம் நாட்டில் எல்லோரும் சமம் என்னும் நிலை உருவாகி இருக்கிறதா?.
அண்மையில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். கேள்விகள் கேட்கக் கூடாது. ஏனென்றால் அவற்றுக்குப் பதில்கள் கிடைக்காது. இருந்தாலும் பிறவிக் குணம் விடுவதில்லை. நண்பர்களே சொல்லுங்கள் நாம் சுதந்திரம் பெற்று விட்டோமா.?     .              
(திரு அப்பாதுரையின் பதிவுகளில் இருந்து வரிகளை அவரிடம் அனுமதி கோராமலே எடுத்தாண்டிருக்கிறேன். அவரது சிந்தனைகளும் பலராலும் விரும்பிப் படிக்கப் பட்டால்  அவரும் விரும்புவார் என்பது என் எண்ணம் )


                   

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....


                         நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.....
                        ----------------------------------------------------


அதுதான் பலநேரங்களில் நடப்பதில்லையே நாங்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ஆலய விஜயங்கள் இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் நிகழவில்லை.ஆண்டுதோறும் ஜூன் மாதக் கடைசியிலோ ஜூலை மாத ஆரம்பத்திலோ பயணம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு என் இரு பிள்ளைகளும் உடன் வந்து காரிலேயே அழைத்துச் செல்கிறோம் என்றனர்,. இருவருக்கும் தங்களைப் பணியில் இருந்து விடுவித்துக் கொள்ள இயலாத நிலையில் எங்கள் பயணமும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஒரு சமயம் நாங்களே தனித்துச் செல்ல அனுமதித்தனர். ஆக பயணச் சீட்டு தங்குமிடம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினோம். சாதாரணமாகத் திருச்சி சென்று அங்கிருந்து கும்பகோணம வைத்தீஸ்வரன் கோவில் சிதம்பரம் என்று பயணிப்பது வழக்கம் . இந்த முறை ஒரு மாற்றத்துக்காக மயிலாடுத்துறை சென்று அங்கு தங்கி ஆலய தரிசனங்களை முடித்துவிட்டு கடைசியில் திருச்சி வந்து பிறகு பெங்களூர் வரத் திட்டமிட்டோம். எனக்கு மயிலாடுதுறையில் பதிவர் கோமதி அரசு இருப்பது நினைவுக்கு வந்து அவருக்கு மெயில் அனுப்பினேன். மயிலாடுத்துறையில் தங்குமிடங்கள் குறித்துத் தகவல்கள் தருமாறும் கேட்டேன். ஐந்தாறு தங்குமிட முகவரியுடன் தொலைபேசி எண்களும் தந்தார்கள். எத்தனை சிரமம் கொடுக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். என் பயண திட்டத்தை திருச்சிப் பதிவர்கள்திரு. வை. கோபாலகிருஷ்ணன், திரு ரிஷபன் . திரு ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி திரு தமிழ் இளங்கோ போன்றோர்களுக்குத் தெரியப் படுத்தினேன் . திருமதி கீதா சாம்பசிவம் மும்பையில் இருப்பதாகத் தெரிந்ததால் அவர்களுக்குத் தகவல் கொடுக்கவில்லை. இவர்கள் என்னை திருச்சியில் சந்திப்பதாகக் கூறினார்கள்
 ஒன்பதாம் தேதி காலை மயிலாடுதுறையைச் சமீபிக்கும் போது திருமதி கோமதி அரசுவிடம் இருந்து தொலைபேசியில் அவர்கள் ரயில் நிலையத்தில் எங்களுக்காக காத்திருப்பதாகத் தகவல் வந்தது. நாங்கள் மிகவும் நெகிழ்ந்து விட்டோம். திருமதி. கோமதியும் அவர்கள் கணவர் திரு திருநாவுக்கரசும் எங்களை அவர்கள் காரிலேற்றி நாங்கள் தங்க முன் பதிவாயிருந்த ஹோட்டல் பாம்ஸில் கொண்டு சேர்த்தனர். நாங்கள் திருக்கடையூர் மற்றும் திருவிடைக்கழி முருகன் ஆலயம் சென்றுவர டாக்சியும் ஏற்பாடு செய்து தந்தனர். மாலை மயிலாடுத்துறையில் இருக்கும் பரிமள ரங்கநாதர் ஆலயத்துக்கும் அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோவிலுக்கும் எங்களை அவர்கள் காரிலேயே கூட்டிப் போவதாகவும் கூறினர்.
காலையில் குளித்து உணவருந்தி திருக்கடையூர் திருவிடைக்கழி நோக்கிப் பயணித்தோம் திருக்கடையூருக்கு முன்பே வந்திருக்கிறோம். என்னுடைய அறுபதாம் ஆண்டு விழா அங்குதான் நடந்தது. திருவிடைக்கழி ஆலயம் முதல்தடவை யாகச் சென்றோம். ஒவ்வொரு ஆண்டும் ஆலய தரிசனம் செல்லும் போது அதுவரைக் கண்டிராத ஒரு கோவில் செல்வது வழக்கம் இம்முறை இந்த முருகன் கோவில். பழமையான சிறிய ஆலயம் . இருக்குமிடம் தெரியாமல் தொலைவில் எந்தக் களேபரமும் இல்லாமல் அமைதியாகக் காட்சி அளிக்கிறது.முருகன் சன்னதியில் ஒரு சிவ லிங்கமும் இருக்கிறது. எந்த திட்டமும் இல்லாமல் போனதால்கோவில் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்கவில்லை. எல்லாக் கோவில்களுக்கும் இருக்கும் சில கதைகள் இக்கோவிலுக்கும் உண்டு என்று பிறகு அறிந்தேன். .  திருக்கடையூரில்.... அப்பப்பா....... அப்படி ஒரு கூட்டம் நெரிசல். வெயிலும் அதிகம். திருமண ஆண்டு விழாக்கள் எங்கு பார்த்தாலும் நடந்து கொண்டிருக்க அமைதியாக தரிசனம் என்பது இயலாத காரியம் முக்கிய சன்னதிகளான  அமிர்தகடேசர் கால சம்ஹார மூர்த்தி, கள்ளப் பிள்ளையார் அன்னை அபிராமி சென்று வழிபட்டோம். என் அறுபதாம் ஆண்டு விழா நினைவுக்கு வந்தது. என் பேரக்குழந்தைகள் தாத்தா பாட்டிக் கல்யாணம் என்று கூறி மகிழ்ந்தது நினைவிலாடியது. அந்த வெயிலில் மிகவும் களைப்பாக உணர்ந்தேன். பிறகு கோவில் அலுவலகம் சென்று எங்கள் நட்சத்திரத்துக்கு மாதம் ஒரு முறை பூஜை செய்து பிரசாதம் அனுப்பக்கேட்டுக் கொண்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்தினோம். அந்தநாளையநினைவுகள் பழையபுகைப்படங்களைத் தேடி எடுத்து அவற்றையே காமிராவில் பிடித்து இத்துடன் வெளியிடுகிறேன்.
அமிர்தகடேசர் சன்னதி முன் பேரன்வலது ஓரத்தில் பேத்தி மனைவியின் அருகே.

திருமாங்கல்யத்துக்குப் பூஜை..?

 இரண்டாம் முறையாக தாலி கட்டல்

நெற்றியில் திலகமிடல்

இரண்டாம் மகன் மருமகள் பேத்தியுடன்


மூத்தமகன் மருமகள் பேரனுடன்

மச்சினன் , அவன் மனைவி மகளுடன்( இந்தப் பெண்தான்  இங்கிலாந்தில் sky dive செய்தவள்

அன்று விழாவில் பங்கெடுத்தசுற்றமும் நட்புகளும்

இந்த சஷ்டியப்த பூர்த்தி நடந்த்ததே பல உறவுகளுக்கும் தெரியாது......!  


மதியம் அறைக்கு வந்து உண்டு களைப்பாறினோம் மாலை சுமார் ஐந்து மணி அளவில் அரசு தம்பதியினர் எங்கள் அறைக்கு வந்தனர். நான் சற்றும் எதிர்பாரா நிலையில் எனக்கு ஒரு சால்வையைப் போர்த்தினார்கள். என் மனைவிக்கு ஒரு கல்கத்தா காளி உருவத்தை பரிசாகக் கொடுத்தனர்.ஒரு டப்பாவில் போளிகளும் பழங்களும் கொடுத்து எங்களை திக்கு முக்காடச் செய்தனர். பிறகு அவர்கள் காரிலேயே திரு பரிமள ரங்கநாதர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர் சற்றே பெரிய கோவில். ரங்கநாதர் பின்னணியில் பாதி மறைக்கப் பட்டு இருக்கிறார்.( எண்ணைக்காப்புபோல )108 திருப்பதிகளுள் ஒன்று. ஐந்து நிலை ராஜ கோபுரம் பெருமாளின் தலைப்பகுதியில் காவிரியும் கால் பகுதியில் கங்கையும் சேவிக்கிறார்கள்.இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி சந்திரன் தன் சாபம் நீங்கப் பெற்றான் என்றும் கதை உண்டு. வீர சயனத்தில் கிழக்குப் பார்த்து அருள் பாலிக்கும் பெருமாள் தீபாராதனைபோது முகமும் காலும் காட்டப் படுகிறது ஓரிரு புகைப்படங்கள் எடுத்தேன்
அதன் பிறகு அபயாம்பிகை சமேத மயூர நாதர் கோவில் சென்றோம். முதலில் சிவன் கோவில் என்று தெரியவில்லை. முருகனின் ஆலயம் என்று நினைத்திருந்தோம். இந்தக் கோவிலில் திருமதி. கோமதியின் கணவர் திரு. திருநாவுக்கரசு நாயன்மார்கள் பற்றிய உபன்யாசம் செய்திருப்பதாக பேச்சு வாக்கில் அறிந்தோம் திருநாவுக்கரசு அவர்கள் தமிழ் அறிஞர். முனைவர் பட்டம் பெற்றவர். திருமுறைகள் பற்றிய நூலை எழுதியவருள் இவரும் ஒருவர். பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகக் காட்சி தருகிறார். கோவில் கோபுர உச்சியில் மோக்க்ஷ தீபம் ஏற்றுவதாகப் பிரார்த்திப்பவர்களும் உண்டாம் அப்படி ஏற்றப்பட்ட மோக்ஷ தீபத்தைப் புகைப் படமாக எடுத்திருக்கிறேன் கோவில் தரிசனம் முடிந்தபின் திருமதி .கோமதி அரசுவின் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார்கள். மல்லீப்பூ போன்ற இட்லிகளும் தோசைகளும் கொடுத்தார்கள்.கூடவே செவிக்குணவாக பல விஷயங்களையும் கேட்டுத்தெரிந்து கொண்டோம் கடவுளர் பற்றிய விஷயங்களில் முதலில் நம்பிக்கையே முக்கியம் என்பது திரு அரசுவின் வாதம். கேள்வி கேட்டுபுரிந்து கொள்ள முயல்வது என் குணம். பல கேள்விகளுக்கு விடை கிடைக்காது என்று ஒப்புக் கொண்டோம் முகமறியா வலை நண்பர் ஒருவர் பல நாட்கள் பழகியது போல் நடந்து கொண்டது மனசுக்கு மகிழ்ச்சி அளித்தது. அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு தங்கும் அறைக்குத் திரும்பினோம்.     .     .       
மயூரநாதர் கோவில் கோபுரம் மேல் “மோக்‌க்ஷ தீபம்”
 திருமதி கோமதிஅரசு, திருநாவுக்கரசு , நான்
திருமதி.கோமதி அரசு என் மனைவிக்குக் கொடுத்தபடம்
என் சிறுகதைத் தொகுப்பு”வாழ்வின் விளிம்பில்” என் பரிசாக.
அருள்மிகு பரிமள ரங்கநாதர் ஆலயம் முன்
மயூரநாதர் கோவிலில்  அன்னை மயிலாக ஈசனைப் பூசிக்கும்  சிற்பம்
அரசு தம்பதியினர் அவர்கள் இல்லத்தில்


மறுநாள் பத்தாம் தேதி வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் புறப்படும் முன் கோவில் குருக்களிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு. பிரதி வருடமும் ஜூலை மாதம் வருகை தருவோர் இதுவரை வரவில்லையே என்று கேட்டார். நாங்கள் இன்னும் அரைமணியில் வருவதாக்ச் சொன்னோம். வழக்கம் போல் பூஜைக்கான பொருட்களுடன் குருக்களை சந்தித்து வைத்தீஸ்வரன் தையல்நாயகி, முத்துக் குமாரஸ்வாமி, அங்காரகன் என்று அனைவரையும் சேவித்துவிட்டு குருக்களிடம் வழக்கம்போல் வருடாந்திர அர்ச்சனைகளுக்கும் பணம் கொடுத்துவிட்டு சிதம்பரம் நோக்கிப் பயணிக்க வெளியில் வந்து கொண்டிருந்தோம். திடீரென எனக்கு இருமல் வந்தது. என் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு இருமினதுதான் தெரியும். நான் மயங்கி கீழே விழுந்துவிட்டேன். என்மனைவி எப்படிப் பதறிப் போய் இருப்பாள் என்று இப்போது எண்ணிப் பார்க்கிறேன் அருகில் இருந்தவர்கள் எனக்கு வலிப்பு வந்து விட்டது என்று கருது இரும்புச் சாவி கொடுக்க முற்பட்டார்கள். இதற்குள் நான் மயக்கம் தெளிந்து எழுந்து விட்டேன் அது ஒரு மாதிரி இருமல்..சிலசமயம் இந்த மாதிரி syncopi யில் கொண்டுவிடும் மிகவும் சோர்வாக இருந்தது. சிதம்பரம் கோவில் மிகப் பெரியது அங்கு சென்று தரிசனம் செய்ய அப்போது உடலில் தெம்பு இருக்கவில்லை. ஆண்டு தோறும் எங்களைக் கூட்டிச் சென்று தரிசனம் செய்விக்கும் தீக்‌ஷிதர் வீட்டில் நானிருக்க என் மனைவி ஆடலரசனைக் கண்டு சேவித்து வந்தாள். அந்த தீக்‌ஷிதரின் பெண்ணுக்குத் திருமணம் நடந்திருந்தது. எங்களால் போக முடியவில்லை. அவர்கள் வீட்டில் அப்பெண்ணை வாழ்த்திவிட்டு தில்லை காளியம்மன் கோவில் வாசலில் நான் காரில் இருக்க என் மனைவி தரிசித்து வந்தாள். என் நிலைமையில் திருச்சிக்குப் போக என் மனைவிக்கு துணிவு இருக்கவில்லை. எனக்கும் இந்த வெயில் ஒத்துக் கொள்ள வில்லை. நேரே பெங்களூர் திரும்ப முடிவெடுத்தோம். என் மகன்களுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டு மயிலாடுதுறையிலிருந்து  தத்கலில் டிக்கெட் பதிவு செய்யப் பட்டது. 11-ம் தேதி பகல் நேரம் முழுவதும் அறையிலேயே இருந்தோம். எதுவும் உண்ணவோ அருந்தவோ பிடிக்கவில்லை. ஹோட்டலில் ஒரே ஒரு தயிர் சாதம் பாக் செய்து கொண்டு மாலை கிளம்பினோம் திருச்சியில் சந்திப்பதாக இருந்த அனைவருக்கும் தகவல் தெரிவித்தோம். ரயிலில் ஏறியதும் ஏதாவது சாப்பிடக் கிடைத்தால் தேவலாம் என்றிருந்தது. எங்கள் துரதிர்ஷ்டம் கும்பகோணத்திலோ தஞ்சையிலோ எதுவும் வாங்க முடியவில்லை. மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது டெல்லியில் இருந்த என் மூத்த மகனுக்கு தொலை பேசியில் விஷயங்களைச் சொன்னோம் அவன் திருச்சியில் இருந்த நண்பர் ஒருவரிடம் எங்களுக்கு இரவு உணவு ரயில் நிலையத்தில் கொண்டு வந்து கொடுக்கச் சொன்னார். திருச்சி ரயில் நிலையத்தில் அந்த நண்பர் சூடான இட்லி தோசையுடன் காத்திருந்தார் இன்றைய வேக வாழ்க்கையில் இது சாத்தியமாயிற்று. ஒரு மணி நேரத்தில் தகவல்களும் அதன்படி செயல் களும் நடந்து முடிந்தன. நண்பருக்கு நன்றி சொன்னோம். 12-ம் தேதிகாலை ஐந்தரை மணிக்கு எங்கள் இளைய மகன் ரயில் நிலையம் வந்து எங்களை வீட்டுக்குக் கூட்டி வந்தான்
சொல்ல நினைத்ததை சொல்லும்போது சற்றே நீண்ட பதிவாகி விட்டது.



     .              




     .              



                   




 .     .       




புதன், 6 ஆகஸ்ட், 2014

இது என் AREA அல்ல.


                                        இது என் AREA அல்ல.( பட்டினத்தார்)
                                        -----------------------------


அவர் பிச்சை பெற்று வந்ததை கல் தரையின் மீது வைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரிடமே வந்து ஒருவன் பிச்சை கேட்டான். அவர் சிரித்து கொண்டே ‘நான் ஒரு சன்னியாசி ஒன்றுமில்லாத ஆண்டி. என்னிடத்தில் உனக்குக் கொடுக்க ஏதுமில்லை. அதோ மேலைக் கோபுர வாசலில் இருக்கிறான் என் சீடன்.சம்சாரி. சோற்றுச் சட்டி மட்டுமல்லாமல் கூடவே ஒரு நாயையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அவனிடம் போய்க் கேளுங்கள்என்று கை காட்டி விடுகிறார்.
இதைக் கேட்ட அவர் சீடன் ஓடிவந்து ‘சுவாமி, என்னைப் போய் சம்சாரி என்கிறீர்களேஎனக்கேட்டார். ‘உனக்கென ஒரு திருவோடும் நாயும் உடைமைகளாக உள்ளது.எனக்கென என்ன உள்ளது .?என்று வினவ அந்த சீடர் ‘குடும்ப வாழ்க்கையை வெறுத்து அரசையும் இன்ன பிறவற்றையும் துறந்து விட்டபின்னும் இந்தத் திருவோடும் நாயுமல்லவா என்னை சம்சாரியாக்கி விட்டதுஎன வருந்தி தன் கையிலிருந்த திருவோட்டைத் தூக்கி எறிய அது நாயின் மேல் பட்டுத் தெறிக்க திருவோடும் உடைந்தது நாயும் மடிந்தது.
இதில் முதல் ஆண்டி பட்டினத்தார் என்று அறியப் படுபவர். அவரது சீடன் எனப்படுபவர் பத்ருகிரி என்று பெயர் பெற்ற அரசன். உஜ்ஜயினியை ஆண்டு வந்தவர். லௌகீகம்,நீதி மற்றும் ஆன்மீக விஷயங்களில் கூர்மையான ஞானம் உள்ளவராக இருந்தார்.
மன்னனின் மாளிகையில் பொன்னும் மணியும் ரத்தினமும் மலிந்திருந்தன. கள்வர்கள் சிலர் இந்த அரண்மனைச் செல்வங்களைக் கொள்ளையிடதிட்டமிட்டனர். களவுப் பணிக்குச் செல்லும் முன் காட்டுப் பிள்ளையாரை வணங்கி விட்டுத் தம் களவுப்பணியினைச் செய்வர்.அவ்வாறாக அரண்மனைப் பொக்கிஷத்தில் கொள்ளையடித்த பொன் பொருளையெல்லாம் எடுத்துத் திரும்பும் வழியில் நள்ளிரவு நேரத்தில் அக்கள்வர் ஒரு முத்து மாலையை காணிக்கையாகக் காட்டுப் பிள்ளையாரை நோக்கி எறிந்து சென்றனர். அந்த முத்து மாலை குறி தவறி அங்கு தியானத்தில் ஆழ்ந்திருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. தம்மை மறந்த மோன நிலையில் இருந்த பட்டினத்தார் இதை உணரவில்லை. பிறகென்ன.? களவு போன பொருட்களைத் தேடிவந்த காவலர்கள் பட்டினத்தாரின் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கண்டு அவரது தியானத்தைக் கலைத்து முத்துமாலை பற்றிக் கேள்விகள் கேட்க ஏதும் கூற முடியாமல் தவித்த பட்டினத்தாரே கள்வரின் தலைவர் என்று அரசனிடம் அழைத்துச் சென்றனர். பட்டினத்தாரின் மௌனம் அரசனை அவரே கள்வன் எனத் தீர்மானம் செய்ய வைத்தது. அவரைக் கழுவிலேற்ற ஆணையும் பிறப்பித்தார்.
பட்டினத்தாரை விடிந்தால் கழுவிலேற்றப் போகும் விபரத்தைத் தன் பட்டத்து ராணியிடம் தெரிவிக்கச் சென்றவர் ராணியைக் காணாததால் ஏதோ ஒரு உந்துதலால் குதிரைலாயத்தின் பக்கம் சென்ற மன்னரின் பார்வை அங்கு அசுவபாலன் என்னும் குதிரைக்காரன் மடியில் ராணி படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.மேலும் ராணி குதிரைக்காரனிடம்தான் அவனுக்குக் கொடுத்த கனியை உண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவன் தான் உண்ணவில்லை என்றும் அதை அவன் ஆசை நாயகிக்குக் கொடுத்துச்சாப்பிடச் சொன்னதாகவும் கூறுகிறான். அந்தப் பெண் அந்தப்புர நாயகி என்ற முறையில் அதை அரசனுக்குக் கொடுதிருந்தாள். அக்கனியை முனிவர் ஒருவர் தனக்குக் கொடுத்து அதனை உண்டவர் நீண்டகாலம் இளமையுடன் இருப்பார் என்று தெரிவித்ததும், அதை அவர் ராணிக்குக் கொடுத்திருந்ததும் நினைவுக்கு வந்தது

பட்டத்து ராணியின் வஞ்சகச்செயல் மன்னரை வெகுவாக பாதித்தது. மேலும் பட்டினத்தாரை கழுவேற்ற அவர் போட்டிருந்த உத்தரவும் அவரை உறங்க விடாமல் செய்தது.
விடிந்தது.கழுமரம் தயாராய் இருந்தது. பட்டினத்தாரைக் கழுவில் ஏற்றினார்கள். உலக சிந்தனை துறந்து சதா சிவ சிந்தனையில் இருக்கும் பட்டினத்தார் மனமுருகி சிவனை நினைத்து

‘என் செயலாவது யாதொன்றுமில்லை இனித் தெய்வமே
உன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே

எனத் தொடங்கும் பாடலைப் பாட கழுமரம் தீப்பற்றி எரிந்தது. அரசன் பட்டினத்த்தாரிடம் மன்னிப்புக் கேட்டான்.பட்டினத்தடிகளுக்கு பத்ருகிரியார் ஞான வழியில் பக்குவமடைந்து இருப்பது மற்றும் அவர் குறிப்புணர்ந்த பட்டினத்தடிகள் மன்னரின் பட்டத்து ராணி அவரை ஏமாற்றி வருவது தெரிந்தது.
வாரிசில்லாத உஜ்ஜயினி ஆட்சியை மந்திரியிடம் ஒப்படைத்து விட்டு ‘எல்லாம் துறந்தேன் இனி நான் உங்கள் சீடன்என்று கூறி அவரைத் தொடர்ந்தார்.
அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தபோது பட்டத்து ராணியின் சடலம் ஒருகுதிரை மேல் வந்து கொண்டிருந்தது. ராஜத் துரோகமிழைத்த குற்றத்துக்காக மக்கள் ராணியைக் கல்லால் அடித்துக் கொன்று விட்டார்கள். பத்ருகிரியின் அருகில் வரும்போது அச்சடலம் அவர் காலடியில் விழுந்தது. அதை விட்டு விலகி அவர் பட்டினத்தாருடன் நிர்விகல்பமாக சென்று கொண்டிருந்தார். இருவரும் நடந்து செல்கையில் இரவு உஜ்ஜயினி காளி கோவிலை அடைந்தனர். அங்கு தங்கி இருந்த போது நாய்க்குட்டியின் சப்தம் கேட்கவே இருவரும் போய்ப் பார்த்தனர். பத்ருகிரியார் அந்த நாய்க்குட்டியைப் பார்த்ததும்  சுவாமி, இதை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்றார். தன் ஞானசக்தியால் அது பட்டத்து ராணியின் மறுபிறவியே என்று தெரிந்து கொண்ட பட்டினத்தடிகள் அதைத் தன் கையில் எடுக்கவே அது இறந்து போனது. ஞானியின் கைபட்டவுடன் பாவப் பட்ட ஜன்மம் புனிதமடைந்து விடுகிறது. குட்டியை இழந்த தாய் நாய் மட்டும் அவர்களைப்பின் தொடர்ந்து வந்தது.
கதைகள் கதைகள் கதைகள்...........! .ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிக்கும்போது அவர் குறித்த கதைகள் முன் வந்து நிற்கின்றன. பட்டினத்தாரின் துறவு பற்றிக்கேள்விப்பட்டு அதை பற்றிய விவரங்களை அணுகினால் அவர் குபேரனின் பிறப்பு என்றும் சிவபெருமான் வெள்ளிப்பனிமலை மீது உமாதேவியுடன் இருந்த திருக்கோலத்தை குபேரனுக்கு பல இடங்களில் காட்சிதந்து வரும்போது குபேரன் திருவெண்காட்டுக்கு அருகில் காவிரிப் பூம்பட்டினத்துக்கு வந்தபோது அதன் செழிப்பில் மதி மயங்கிக் கிடப்பதை பார்த்ததும் சிவபெருமான் ‘நீ மானுடப் பிறவி எடுத்து திருவெண்காட்டில் உறையும் எம்மை வணங்கி வேதியர் ஒருவரிடம் தீட்சை பெற்று உரிய நேரத்தில் முக்தி அடைவாயாக என்று ஆணையிட்டார்.
‘பூவுலக மாந்தர்தம்  மையலில் சிக்குண்டு அழியா வண்ணம் அடியேனைத் தடுத்தாட்கொள்ள வேண்டும் ‘ என்று குபேரன் வேண்ட். இறைவனும்
‘மோகத்தீயில் நீ சிக்குற மாட்டாய். பூவுலகிலும் குபேரனைப் போலவே வாழ்ந்து, அனைத்தையும் துறந்து ஞானம் பெற்று எம்மை அடைவாய்என்று கூறி மறைந்தார்.
பட்டினத்து அடிகளின் பாடல்களை ஆராய்ந்தவர்கள் பத்தாம் நூற்றாண்டிலும் பதினேழாம் நூற்றாண்டிலும் இரு வேறு பட்டினத்தடிகள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். இது இப்படி இருக்க பன்னிரு திருமுறை வரிசையில் பதினோறாம் திருமுறையில் வைத்துப் போற்றப்படும் படைப்புகளின் நற்சிந்தனைக்காக அறியப் படுவதே நலம் என்று கருதி வாசிக்க முற்பட்டால் , மேலே சொன்ன கதைகள் சிந்தனையை இடருகின்றன.
ஆக பட்டினத்தாரின் வாழ்க்கையை அறிய முற்படுவதை விட அவர் எழுதிச் சென்ற பாடல்களை ரசிப்போம். அதில் இருந்து கிடைக்கும் சாரங்களை ருசிப்போம்.
பட்டினத்தாரைப் பற்றி படிக்கத் துவங்கும் முன் அவர் துறவு மேற்கொள்ளக் காரணமான ஒரு ஓலை நறுக்கில் கண்ட வாசகமே முன் நிறுத்தப் படுகிறது. “காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கேஎன்ற இந்த வார்த்தைகளே அதிகம் கூறப்படுகின்றன. இன்றைய சிறார்களும் அறிந்து கொண்டிருப்பதே இறக்கும் போது எதையும் கொண்டு செல்ல முடியாது என்று. இருந்தாலும் சில வார்த்தைகள் சிந்தனைகள் ஒருவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போடும் அளவுக்குச் சக்தி பெறுகின்றன என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அன்னை இறந்தபோது எல்லா உறவுகளையும் துறந்த பட்டினத்தடிகளால் தாயின் உறவைத் தள்ள முடியவில்லை. பாசத்தால் ஆற்றமாட்டாமல் அனைவரும் தேம்பி அழும்படி பத்து பாடல்களை பாடினார். அதில் இலக்கியச் சுவையும் விஞ்சி நிற்கிறது அவையாவன:
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு

முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்

வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

இங்கும் ஒரு கதை. பட்டினத்தடிகள் இந்தப்பத்து பாடல்களில் யானுமிட்ட தீ மூள்க மூள்கவே எனப் பாடியதும் தீ மூண்டதாம் அப்படியே இருந்தாலும் அந்நேரத்தில் பாடிய பாடல்களை படியெடுத்து வைத்துக் கொண்டது யார். ? கடைசிப் பாடலில் பால் தெளிக்க எல்லோரும் வாருங்கள் என்கிறார். வழக்கப்படி வெந்து நீறானவளுக்கு பால் தெளிப்பது மறு நாள்தானே. ( பாடல்களைப் படிக்கும்போது இம்மாதிரியான நெருடல்கள் என்னுள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.)
ஆன்ம சுகம் பெற ஒருவன் எதையெல்லாம் தவிர்க்க வேண்டுமெனப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் பட்டினத்தார்.

ஓடாமல் பாழுக்கு உழையாமல் ஓரம் உரைப்பவர்பால்
கூடாமல் நல்லவர் கூட்டம் விடாமல் வெங்கோப நெஞ்சில்
நாடாமல்நன்மை வழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
தேடாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே..

பாராமல் ஏற்பவர்க்கு இல்லையென்னாமல் பழுது சொல்லி
வாராமல் பாவங்கள் வந்து அணுகாமல் மனம் அயர்ந்து
பேராமல் சேவை பிரியாமல் அன்பு பெறாதவரைச்
சேராமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே.

கொல்லாமல் கொன்றதைத் தின்னாமல் குத்திரம் கோள் களவு
கல்லாமல் கைதவரோடு இணங்காமல் கனவிலும் பொய்
சொல்லாமல் சொற்களைக் கேளாமல் தோகையர் மாயையிலே
செல்லாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே.

அவரது பாடல்கள்நேரான ஓட்டம் கொண்டவை. கற்பவர் மனசை வசப்படுத்தும். எளிமையும் தெளிவும் உடையவை. பட்டினத்தார் ஈசனிடம் சிந்தையை வைத்திருந்தாலும் இல்லற வாழ்க்கையையும் வாழ்ந்தவர்தான்
கடைசியாக அவர் பற்றிய ஒரு குறிப்பினையும் தருகிறேன். ஒரு முறை அவர் வயலொன்றின் வரப்பில் தலை வைத்துப் படுத்திருந்தாராம் வரப்பில் நடந்து சென்ற இரு பெண்களில் ஒருத்தி ‘யாரோ மகான், களைப்போடு படுத்திருக்கிறார் ‘என்று கூறி வணங்கிச் சென்றாளாம். கூடவே வந்த இன்னொருத்தி ‘ இவர் பெரிய மகானா.?தலையணை வைத்துத் தூங்கும் சுகம் வேண்டி வரப்பைத் தலையணையாக வைத்திருப்பவரையா மகான் என்கிறாய்என்று கூறினாளாம்.  அவர்கள் சென்றதும் வரப்பிலிருந்து தலையை கீழே வைத்துப் படுத்துகொண்டாராம். சிறிது நேரத்தில் அதே வழியில் திரும்பி வந்த அவ்விரு பெண்களுள் முதலானவள் ‘பார் வரப்பை விட்டுக் கீழே படுத்திருக்கிறார் ‘என்றாள். அதற்கு இரண்டாமள் “ தன்னைப் பற்றி யார் என்னவெல்லாம் பேசுகிறார்களென்று தெரிந்து கொள்வதில் பற்று வைத்திருக்கிறாரேஎன்று கூறினாள் ஞான விளக்கம் பெற இன்னும் நிறைய இருக்கிறது என்று பட்டினத்தார் தெரிந்து கொள்ள இச்சம்பவமும் எடுத்துக்காட்டாகக் கூறப் படுகிறது.
ஒருமுறை பட்டினத்தடிகள் துறவு பூண்டதை அறிந்த அரசன் அவரை அணுகி “ நீர் துறவறம் பூண்டதால் அடைந்த பயன் யாது .?என வினவ இவர் “ நீர் நிற்கவும் யாம்  இருக்கவும் பெற்ற தன்மையே அது        
        என்றாராம்....!(நிறையவே பாடல்கள் கண்டேன் நீளம் கருதி என் மனம் கவர்ந்தவற்றை மட்டும் பகிர்ந்திருக்கிறேன் )





      

.

சனி, 2 ஆகஸ்ட், 2014

படங்களில் பதிவு


                                         படங்களில் பதிவு.
                                         ------------------------
தலையைப் பிய்த்து கொண்டு ஏதேதோ சிந்தித்து எழுதுவது சரியாகப் புரிந்து கொள்ளப் படுகிறதா என்று புரியாமல் தவிப்பதை விட  சில படங்களின் மூலம் நிறையவே சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் எண்ணங்களைச் சித்தரிக்கும் படங்கள் கிடைப்பது அரிது. இள வயது நினைவுகளைப் பகிரும்போது அன்றிருந்த . நாம் அறிந்த இடங்கள் காணாமல்போய் மனம் வருத்தத்தில் ஆழ்கிறது. என் வயதுக்கும் முந்தைய சில இடங்களின் கோலங்கள் மாற்றம் ஒன்றே மாறாதது என்று தெளிவுபடுத்துகிறது. வாருங்கள் நண்பர்களே அன்றைய சில இடங்கள் எப்படி இருந்திருக்கின்றன என்று பாருங்கள். கூடவே எண்ணங்களையும் பகிருங்கள்(அந்த நாள் அல்ல , அதற்கும் முந்தைய நாள் ஞாபகம் வருகிறதா.?)

 

COIMBATORE JUNCTION -NOW
 திருவனந்தபுரம் பத்மனாபஸ்வாமி கோவில் பற்றியும் அங்கு கிடைக்கப் பெற்ற புதையல் பற்றியும் அநேகமாக எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம் . அது பற்றிய ஒரு காணொளித் தொகுப்பு  அண்மையில் எனக்கு வந்தது. வலைப் பூ நேயர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்