திங்கள், 20 ஏப்ரல், 2015

போராட்டங்கள் ஒரு அலசல்


                              THE ANATOMY OF BANDH AND HARTAL
                              ---------------------------------------------------
-

வலை நண்பர் திரு. வே/ நடன சபாபதி அவர்கள் கடவுளின் நாடும் கடையடைப்பும் என்னும் பதிவு ஒன்று எழுதி இருந்தார். ஒவ்வொரு செயலுக்கும் சில குறிப்பிட்ட காரணங்கள் இருக்கும் கட்சித் தலைவர்களோ அல்லது யாராவது முக்கியஸ்தர்களோ கடை அடைப்புக்கு அறைகூவல் விடுக்கின்றனர் என்றால் அதை முடித்துக் கொடுக்க ஒரு கூட்டம் இருக்கிறதே. இந்தக் கூட்டத்தின் அடிப்படைக் குணங்களை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம் இந்த மக்கள் ஜனநாயக நாட்டில் எந்த இரு தலைவருமே கொள்கைகளில் ஒத்துப் போவதில்லை. ஆனால் ஒவ்வொரு தலைவனுக்கும் ஒரு கூட்டம் இருக்கும் வேலை இல்லாதவர்களும் பொறுப்பு என்பது ஏதும் இல்லாதவர்களுமே இந்தக் கூட்டத்தில் அங்கத்தினர்கள் இவர்களில் பெரும்பாலோனோர்  கூலிக்கு மாரடிப்பவர்களே ஒரு அரசியல் தலைவன் பேசுகிறான் என்றால் அதற்குக்கூட்டம் சேர்ப்பது முதல் கோஷம் போடுவதுவரை ஏற்பாடு செய்ய அல்லக் கைகள் இருக்கிறார்கள் மீறி இவர்களின் அறைகூவலுக்கு செவி சாய்க்காவிட்டால் அங்கு வன் முறை வெடிக்கும் பெரும்பாலும் இம்மாதிரி வன்முறைகளுக்குப்பயந்தே முழுநேர அடைப்புகள் நடக்கின்றன இவர்கள் நாடுவது அல்லது குறி வைப்பது யாரை மற்றும் எப்படி என்பதை யோசித்துப் பார்த்ததில் எழுந்த எண்ணங்களே இந்தப் பதிவின் சாராம்சம்
                         
காலையில்  எழுந்ததும்   பத்திரிகைகளைப்  பார்த்ததும்  தெரிவது , தொலைக்காட்சியை  இயக்கினால்  செய்திகளில்  தெரிவது , எங்கோ  எதற்கோ  யாரோ  போராட்டம்  நடத்துவதுதான் . இத்தகைய  போராட்டங்கள்  நடக்க   பல்வேறு   காரணங்கள்   இருக்கலாம். இப்போது  அந்த   காரண  காரியங்களை   ஆராய்வது அல்ல   இந்தப்  பதிவின்  நோக்கம் . போராட்டம் என்றாலே  ஏதோ   மனக்கசப்பை ,  திருப்தியின்மையை , கையாலாகாத்தனத்தை   வெளிப்படுத்த  ஒரு   உத்தியாகும் . அது சரியா இல்லையா  என்று  ஆராய்வதும்   நம் நோக்கம்  அல்ல .
                    
வாழ்க்கையில்   உண்ண   உணவு , உடுக்க உடை , இருக்க  இடம்   என்று   மட்டும்   கிடைத்தால்   போதவில்லை . நம் வாழ்க்கையின்   நிலை    மற்றவரைவிட கீழான   நிலையில்   இருந்தால் , ஒப்பிட்டு  நோக்கி  அதிருப்தி  ஏற்படுகிறது .மற்றவர்  நிலையை விட   தாழ்ந்து   இருப்பதற்கான   காரண காரியங்கள்   ஆராயப்படுகின்றன .
ஏற்ற  தாழ்வுகள்  கண்முன்னே   காரணங்களாக  விரிகின்றன .
                    "
நானும்  இந்த  நாட்டுக்  குடிமகன் . எனக்கும்  அவனுக்கும்  ஒரே  வயது .என்ன   வித்தியாசம்  ? நான் ஏழை , வசதியற்றவன் --அவன் பணக்காரன் ,வசதி  மிகுந்தவன் . கல்வியில்   நான்  முன்னேற  வாய்ப்புகள்   குறைவு --அவனுக்கு  அதிகம் .--நான் கிராமத்து   இளைஞன் , அவன் பட்டணத்து வசதிகளுடன்  வாழ்பவன் ---- நான் வாழ்க்கையில்   முன்னேற  தாண்ட வேண்டிய   தடங்கல்கள்   அதிகம் . அவனுக்குக் குறைவு ---எனக்கு   இரண்டு  வேளை  உணவு   கிடைப்பதே  மிகவும்   கஷ்டம் .அவன்  எல்லா வித   போஷாக்கு களுடன்  கூடிய  உணவு வகைகளில்  மிதக்கிறான் ----பசி  என்பது எனக்கு  சாதாரணமாக  நிகழ்வது . பசி என்னவென்றே  அறியாதவன்  அவன் ---- மானத்தை  மறைக்க   உடை உடுத்துவதே  எனக்கு   சாதனை    படாடோப உடை வகைகளில்  பலவற்றை   வைத்திருப்பவன்  அவன் "
                இந்த  மாதிரி  மனசின்  அடிப்பகுதியில்   ஒருவனுக்குத் தெரியாமலேயே   ஏற்ற  தாழ்வுகள் பாதிப்பை  ஏற்ப்படுத்துகின்றன .வாழ்க்கையின்  மேல்நிலையில்  இருப்பவன் வசதிகளைப் பெருக்கிக்கொள்கிறான். பணக்காரன் மேலும் பெரிய  பணக்காரனாகிறான் .வாழ்க்கையின்  கீழ்நிலையில்  இருப்பவன் முன்னேறத்  துடிக்கிறான் ,.இந்த ஏற்ற தாழ்வுகளுக்கு  காரணம்  என்ன ?
                
ஒருவன்  ஏழையாகப்  பிறப்பது  அவன் தவறா ? வாழ்க்கையில்  உயர  வாய்ப்புகள்  சமமாக  இருக்கிறதா ? கீழே  உள்ளவன்  அடக்கப்பட்டு   இருப்பவனாகவும்  மேலே  உள்ளவன் அடக்குபவனாகவும்  இருப்பது சமூக  நிலையா  ?
               
காந்தி   பெரியார்   அம்பேத்கர்  போன்றவர்கள் தாழ்த்தப்  பட்டவர்களுக்கும்   ஒடுக்கப் பட்டவர்களுக்கும்  குரல்  கொடுத்து ஓரளவு விழிப்புணர்வை  ஏற்ப்படுத்தினார்கள் . விழிப்புணர்வின் அடிப்படையில்   வாய்ப்புகள்  வேண்டி போராட  வேண்டும்  என்ற நிலை  உருவானது .இத்தகைய  போராட்டங்களை  நடத்தி செல்ல வேண்டியவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களா  என்ற கேள்வி  எழும்போது   பதில் வல்லவர்களாக  இருக்கிறார்கள்  என்பதுதான் நிதர்சனம் . தலைவர்கள்  வசதிகளுடனும்   வாய்ப்புகளுடனும்  முன்னேறுகிறார்கள்
              
தலைவர்களுக்கு  தெரியும்  எங்கே  தட்டினால் பலன்  கிடைக்கும் , எந்த நிலை  நீடித்தால்  தாங்கள்  மேலும் முன்னேறலாம்  என்று ..இனம் மொழி மதம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் அவலங்களை வெளிச்சம்   போட்டுக் காட்டி  அதன்  மூலம் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு  வழி வகுத்துக்கொள்கிறார்கள் .இதனால் ஏற்பட்டிருக்கும்  ஏற்ற தாழ்வுகள்  குறைவதில்  அவர்களுக்கு  லாபம்  இல்லை .STATUS  QUO  தொடர வேண்டும் .ஆனால் , மக்களுக்காக அவர்கள் சேவை  செய்வது போன்ற மாயத் தோற்றம்  தொடரவேண்டும் .
            
சாதி  அடிப்படையில்  ஒதுக்கீடு  கேட்டுப் போராடுபவர்கள் , சாதிகள் மறைய என்ன செய்கிறார்கள் ? சாதிகள் மேலும் மேலும் வலுவடைந்து அவை சமூகத்தின் மறையாத அங்கங்களாக மாறிவிடும் அபாயம்தான்  தோன்றுகிறது .
            
கல்வியறிவும்   வாழ்க்கையின்  தரமும்  உயரும்போது சாதிகள் தானாகவே  மறையும் .ஏதோ ஒரு அடிப்படையில் வாழ்க்கையில் சலுகைகளைப் பெற்றவன்  மேலும் மேலும் அதே அடிப்படையில் மேலும் சலுகைகள் பெறுவது தடுக்கப்படவேண்டும் வாழ்க்கையில் ஓரளவு உயர்ந்தவர்கள் மற்றவர்களுக்கு  ஒதுங்கி வழி விட வேண்டும் .ஆனால் நடை முறையோ வேறு விதமாக உள்ளது .
             
வாழ்க்கைச் சக்கரம்  உருண்டு கொண்டுதான் இருக்கிறது .ஆதி  காலத்தில் சமூகத்தை  நான்கு  வர்ணங்களாகப் பிரித்து  அவரவர்களுக்கு  இன்ன  வேலை என்று
பகுத்தளிக்கப்பட்டு  இருதது.----- க்ஷத்ரியர்கள்  பிராமணர்கள்  வைசியர்கள்  சூத்திரர்கள் ---மனித குணம்  எப்போதுமே மற்றவனை  அடககியாளத்துடிக்கும்.. இந்த நிலையில் முதலில்  க்ஷத்ரியர்கள் (அரசர்கள் ) எல்லோரைவிடவும்   சக்தி  உள்ளவர்களாகவும் மற்றோரை அடக்கி ஆள்பவர்களாகவும்  இருந்தனர் .காலப்போக்கில் பிராமணர்கள் ( மதகுருக்கள் ) அரசர்களுக்கே  அறிவுரை சொல்லி அதன் மூலம் மிகுந்த சக்தி பெற்று விளங்கினர் . பிற்காலத்தில் வைசியர்கள் எனப்படும் வணிகர்கள் (CAPITALISTS)
கை  ஓங்கி எல்லா சக்தியும் வல்லமையும் கொண்டு வாழ்ந்தார்கள் இன்னும்  வாழ்ந்துகொண்டும்  இருக்கிறார்கள் .வாழ்க்கையின்  சுழற்சியில்  எஞ்சி நிற்பவன் சூத்திரனே ..அவனுக்குள்ள  வாய்ப்பும் கிடைக்கத்தானே  வேண்டும் ! ஒடுக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்  சாதியின் அடிப்படையில்  மட்டுமல்ல  வாய்ப்பின் அடிப்படையிலும் சூத்திரர்களே . வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சியில்  அவர்கள் மேலே வரும்  காலம்தான்  நிகழப்போவது ,
              
போராட்டங்களின்  முடிவு  ஒரு நல்ல தீர்வுக்கு  மக்களை  கொண்டுபோகுமானால்  அது வரவேற்கத்தக்கதே . போராடுபவர்கள்  எதற்கு  போராடுகிறோம்   யாருக்காகப் போராடுகிறோம் என்று அறிந்து    மந்தை குணம் நீக்கி   சிந்திக்க  தொடங்குவார்கள்  என்று நம்புவோம் 
.கர்நாடகாவில் 18-04-2015 அன்று மேகதாத்து அணை அமைக்க வலியுறுத்தி ஒரு முழு கடை அடைப்பு நடந்தது. நாளை இந்த அணைக்கட்டு வரக்கூடாது என்று தமிழகத்தில் ஒரு முழு அடைப்பு நேரலாம் பொது மக்களில் எத்தனை பேருக்கு இந்த முழு அடைப்பின் காரண காரியங்கள் தெரியும் .அடிப்படை விளைவுகளுக்கான காரண்ங்களை நான் அறிந்தவரை கூறி இருக்கிறேன்  
                                              ------------------------------------------ --------------             






வெள்ளி, 17 ஏப்ரல், 2015

சில எண்ணங்கள் எழுத்தில்


                                    சில எண்ணங்கள் எழுத்தில்
                                     ---------------------------------------
வலை நண்பருடன் ஒரு நாள் என்னும் பதிவு எழுதியபின்  இந்தமாதிரி பதிவு எதிர்பார்க்கப்பட்டிராது திருமதி.தேனம்மை லக்ஷ்மணன் பதிவர் ஒற்றுமை ஓங்குக என்று பல பின்னூட்டங்களில் எழுதி இருப்பதைப்பார்த்தபின்னும் இந்த மாதிரி பதிவு எதிர்பார்க்கப் பட்டிராது

ஒரு சில நிகழ்வுகளை உடனே பகிர்ந்து கொள்ள மனம் துடிக்கும். ஆனால் ஏதோ சில காரணங்கள் அதைத் தள்ளிப் போடவைக்கும் வலையுலக நட்புகள் பற்றிப் பலருக்கும் பல அபிப்பிராயங்கள் இருக்கும் . நம்மைப் பின்னிப் பிணைக்கும் காரணம் ஒன்றே இருக்கமுடியும் நம் எண்ணங்களுக்கு வடிகாலாய் நாம் எழுதுவதைப் பலர் படிக்கிறார்கள் அதில் ஒரு சிலர் நம்மை மகிழ்விக்க ஊக்கமளிக்கும் கருத்துக்கள் இடுகிறார்கள் சிலர் உண்மைக் கருத்துக்களை வெளியிடத் தயங்கி நம் பதிவைத் தாண்டிப் போகலாம் சிலர் காட்டமாக நிர்தாட்சண்யமாகக் கருத்துக் கூறத் தயங்கலாம். தனிமனிதரைத் தாக்காதவரை கருத்து சுதந்திரம் எடுத்துக் கொண்டு மனதில் பட்டதை எழுத ஏன் தயங்கவேண்டும். நாம் எழுத்தைத் தான் விமரிசிக்கிறோம் எழுத்தாளனை அல்லவே. எனக்கு  இந்த வலையுலகில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக எழுதி வந்தாலும் புரியாத ஒன்று பதிவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள். பலரும் கடைவாய்ப் பல்லில் கடித்து முன் வாயில் புன்சிரிப்பைத் தவழ விடுபவர்களே அதிகம் ஒரு முறை அப்பாதுரை  “பிறர் நினைப்பது உங்களுக்கு எப்படித்தெரியும்?”.என்று கேட்டு எழுதி இருந்தார். ஏறத்தாழ 77 ஆண்டுகளாக மனிதர்களை சந்திக்கிறேன் பழகுகிறேன் இதை அனுமானிக்க முடியும் என்று நம்புகிறேன் ஆங்காங்கே அவர்கள் இடும்பின்னூட்டங்களையும் படிக்கிறேனே நான் எழுதுவதைப் பலரும் புரிந்து கொள்வார்கள் என்றும் தெரியும் பதிவுலகில் நமக்குச் சிலரைப்பிடிக்கலாம். சிலரைப் பிடிக்காமல் போகலாம் சிலரது கருத்துக்கள் ஊக்கமளிக்கலாம் சிலர் வந்து படித்தால் நமக்குக் கௌரவமாகத் தெரியலாம் சிலருக்கு நம் பதிவு வெளியாவதே தெரியாமல் இருக்கலாம்.  இப்படிப் பலரையும் மனதில் கொண்டு என் பதிவுகள் வெளியாகும் போது நான் அவர்களுக்கு அஞ்சல் அனுப்புவதுண்டு. அப்படி நான் அனுப்புவதைப் பிடிக்காமல் யாராவது இருந்தால் அவர்கள் அதை எனக்குத் தாராளமாகத் தெரிவிக்கலாம்  என் பதிவுகளைத் தொடருபவர்கள் ப்லாக்கர் படி 151 பேர். இவர்கள் என் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கிறார்கள் என்றாலோ. அதில் சுமார் 20 சதம் வாசகர்கள் பின்னூட்டமிடுகிறார்கள் என்றாலோ என் பதிவு ஒவ்வொன்றுக்கும் சுமார் 30 பின்னூட்டங்களாவது வரவேண்டும். ஆனால் தொடராதவர்களுக்கும் மின் அஞ்சல் அனுப்பியும் பின்னூட்டங்கள் எழுதுவோர் குறைந்த எண்ணிக்கையினரே
.
இதை எல்லாம் பார்க்கும் போது நான் யாருக்காக  எழுதுகிறேன் இதனால் எனக்கு என்ன பயன் என்னும் எண்ணங்கள் தோன்றுகின்றன. நான் பொழுது போக்குக்காக எழுதுவதும் என் எண்ணங்களைக் கடத்த வேண்டும் என்பதற்காகவும் தான் என் எண்ணங்களும் சிந்தனைகளும் பெருவாரியான வாசகர்களுக்கு உடன்பாடாக இல்லாமல் இருக்கலாம். இருக்கட்டுமே. அதை தெரிவிப்பதில் யாருக்கு என்ன நஷ்டம்?. நானும் பலரது பதிவுகளைப் படிக்கிறேன். படித்ததும் என் மனதில் தோன்றுவதைப் பின்னூட்டமாக எழுதுகிறேன் அவர்கள் எழுதிய பகுதியை அப்படியே குறிப்பிட்டு அருமை அட்டகாசம் போன்ற வரிகளை உபயோகிப்பதில்லை. இது பல பதிவர்களுக்கும் தெரியும் உள்ளதை உணர்ந்தபடி நான் எழுதும் பின்னூட்டங்களுக்கும் வரவேற்பு இருப்பதும் தெரியும் I DON'T SAY YES WHEN I MEAN NO....!
பொதுவாகவே என் எழுத்துக்கள் சற்றே சீரியசானவை. நகைச் சுவையாக எழுத எனக்குத் திறமை போதாது. பதிவுகள் மொக்கையாக இருந்தால் பின்னூட்டம் இடுபவர்களுக்கு சங்கடம் இல்லை. ரசிப்பதை எழுத்தில் கூறுவதும் எளிது.கனமான தலைப்புகளில் எழுதும்போதோ பிறரது நம்பிக்கைகளை( அவை பகுத்தறிவுக்கு ஒவ்வாததுஎன்று நான் நினைத்து) எழுதும் போதோ மாற்றுக் கருத்துக்கள் வரலாம்.  நிலவிவரும் ஏற்றதாழ்வுகளுக்குக் காரணம் நம் சமூகப் பின்னணியே என்று எனக்குத் தோன்றுகிறது. அதை நான் பதிவிடும் போது யார் மனமும் தனிப்பட்ட முறையில் புண்படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன் மேலும் என் பதிவுகளில் காணும் விஷயங்கள் ஒரு முன்னேற்றப் பாதைக்கான கலந்தாடல்களை ஏற்படுத்த வேண்டும் என்பதும் என் எண்ணம் ஆனால் கலந்துரையாடல் என்னும் பெயரில் சிலர் என் வாயைப் பிடுங்கி வார்த்தை விளையாட்டில் இறங்க முற்படும் போது மனசு வலிக்கிறது.கருத்துக்களைத் தெரிவிக்கும் போது யார் சரி யார் தவறு என்று எண்ணுவது சரியல்ல என்றே நினைக்கிறேன் மாறுபட்ட கருத்துக்கள் எதாவது இருந்தால் பதிவில் பின்னூட்டமாகத் தெரிவிக்கலாம். பலரும் படித்து அவரவர் முடிவை நிர்ணயித்துக் கொள்வார்கள்
நான் என் பதிவுகளில் அவ்வப்போது எழுதிவருவது பிறரது கருத்துக்களைப்  படிக்கும் போது முதலில் We have to unlearn  what we have already learnt என்று கூறுவது வழக்கம். இல்லாவிட்டால் நம் சிந்தனைகள் நம்மை விருப்பு வெறுப்பின்றி அணுக விடாது. நான் எப்போதும் கனமான பொருளில் எழுதுவதை குறைத்துக்கொண்டு வருகிறேன் நான் அறிந்தவரை மொக்கையாகப் பதிவுகள் எழுதினால் வாசகர்கள் துன்பப் படுவதில்லை. எதையும் யோசித்துக் கருத்திடும் தேவை குறையும்
எனக்குப் புரியாத  விஷயங்களில் ஏன் பல பதிவர்கள் தங்கள் சுயத்தை வெளிப்படுத்தத் தயங்குகிறார்கள் என்பதும் ஒன்று. உண்மைப் பெயரை மறைத்து புனைப் பெயரிலும் புகைப்படங்களை வெளியிடத் தயங்குவதிலும் என்ன பலன் கிடைக்கிறது புரிவதில்லை. மேலும் சக பதிவர்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக்கும் அஞ்சல் முகவரியும் இருப்பதில்லை தொடர்பைத் தவிர்க்கிறார்களோ என்று சந்தேகம் எழுகிறது.இப்படி இருக்கும் போது வலையுலக நட்பு பற்றி பேசுவது சரியாய்த் தோன்றவில்லை.வலையுலகில் நட்புகள் மிகக் குறைவே அறிமுகங்கள் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்
 இன்னொரு விஷயம் பின்னூட்டங்களை பிரசுரிப்பதில் அவர்களுக்கு இருக்கும் மட்டறுத்தல் என்பதாகும். பெயரில்லாமலோ. தனிப்பட்ட முறையிலோ தாக்கும் பின்னூட்டங்களைத் தவிர்ப்பதில் நியாயம் இருக்கலாம் ஆனால் சில பின்னூட்டங்கள் காரணம் தெரிவிக்கப் படாமல் இருட்டடிப்பது எனக்கு விளங்காத ஒன்று.
நான் இன்னும் சில விஷயங்களைக் கவனிக்கிறேன் பதிவுக்குப் பின்னூட்டம் இடும்போது அது பதிவில் கண்டிருந்த விஷயங்கள் தவிர சில சமயம் அவரவர் மேதா விலாசத்தைப் பறை சாற்றுவதாகவும் படுகிறது பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு மறு மொழி எழுதுவது பின்னூட்டம் எப்படி ஏற்கப் பட்டிருக்கிறதுஎன்பதைத் தெரியப் படுத்தும் 

பெங்களூருவில் இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு பதிவர் சங்கமம்  திருமதி ஷைலஜாவின் முயற்சியால் நடை பெற்றது. நானும் சென்றிருந்தேன் சுமார் எட்டோ ஒன்பதோ பேர் வந்திருந்தனர். சந்திப்பு காணொளியாகவும் படமெடுக்கப்பட்டது. அதற்கு பின் எந்தப் பதிவருடனும் தொடர்புஇல்லை. ராமலக்ஷ்மி அவ்வப் போது பதிவுக்கு வருவார். நானாக எந்தசந்திப்புக்கும் ஏற்பாடு செய்யமுடியாத உடல் நிலை. அஞ்சலிலொ பதிவிலோ தொடர்பிலாவது இருக்கலாமே. என் பதிவுகள் சிலவற்றை அனுப்பியும் எந்த தொடர்பும் இல்லை. 
என்னவோ மனசில் பட்டது அநேகமாகப் பதிவாகி விட்டது இப்படித்தான் எதையோ எழுதத் துவங்கி எதையோ எழுதுவதும் சில நேரங்களில் என்னால் தவிர்க்க முடியாததாகி விட்டது 
வலையுலகில் அறிமுகங்கள் அதிகம் நட்பு மிகவும் குறைவு என்பதே என் எண்ணம்.உங்கள் கருத்துக்களையும் பகிரலாமே 
இப்போதுதான் வெங்கட் நாகராஜின் பதிவில் படித்தேன் மனிதரில் இருக்கும் நல்ல விஷயங்களை விட்டு குறைகளையே ஏன் சிந்திக்க வேண்டும் என்று. இருந்தாலும் விருப்போ வெறுப்போ இல்லாமல் மனதில் பட்டதை எழுதி விட்டேன் கருத்துக்களில் மாற்றம் ஏதுமில்லை. 


        .
      

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

சரஸ்வதி ஹோமம்


                                   சரஸ்வதி ஹோமம்
                                   ------------------------------


நினைத்துப் பார்க்கிறேன், அப்படி என்ன charisma  என்னிடத்தில் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் அருகே இருந்த பள்ளி சிறார்களுக்குப் பரிசுகள் வழங்க அந்த நண்பர் அழைத்திருந்தார் ஒன்பதாம் தேதி பள்ளியில்சரஸ்வதி ஹோமம் நடைபெற இருப்பதாகவும் அதில் நாங்கள் கண்டிப்பாகக் கல்ந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்து எங்களைக் கூட்டிப்போக வண்டியும் அனுப்பி இருந்தார்வலைப் பதிவர்களுக்குத் தெரியும் நான் அப்படி ஒன்றும் பூஜை புனஸ்காரங்களில் ஈடு பாடு கொண்டுள்ள பக்திமான் ஒன்றும் அல்ல என்று. என் மனைவிக்கு ஈடுபாடு உண்டு. அவளது சுதந்திரத்தில் நான் தடையாக இருப்பது இல்லை. ஒரு வேளை அவள் பின்னிருக்கும் பிரபை எனக்கும் பின்னிருக்கிறதோ என்னவோ. அன்புடன் விடுத்த அழைப்பைத் தட்ட முடியவில்லை. பூஜை வளாகம் சென்ற போது ஏற்பாடுகள் பலமாக இருப்பது கண்டோம். என் மனைவி இந்த வெய்யில் எனக்கு ஒத்து வருமோ என்னும் ஐயப்பாடைத் தெரிவித்தாள். வெய்யில் தாங்க முடியவில்லை என்றால் அறையில் ஃபான் கீழ் அமர்ந்து கொண்டு ஓய்வு எடுக்கலாம் என்றும் தெரிவித்தார். நல்ல வேளை பிரச்சனை ஏதும் இல்லாமல் ஹோமம் பார்க்க முடிந்தது,.பூஜையை நடத்த ஆறு புரோகிதர்கள் வந்திருந்தனர். சம்ஸ்கிருத மந்திரங்கள் சொல்லியபடி ஹோம குண்டத்தில் பல பொருட்களை ஆஹுதி செய்தனர். அது ஒரு பெரிய ஹோமகுண்டம் எனக்கு சிறு பிள்ளைகளுக்கு வரும் fantasy  போல திடீரென ஹோம குண்டத்தில் இருந்து ஏதாவது பகவான் தோன்றுவாரோ என்னும் எதிர்பார்ப்பு......! இத்தனை பேரை வரவழைத்து இவ்வளவு பணம் செலவு செய்து இந்த மாதிரி பூஜை செய்வது அவர்களின் நம்பிக்கையின் வலிமையைக் காட்டுகிறது/ AS USUAL நான் ஸ்கெப்டிகலாக பூஜையை கவனித்துக் கொண்டிருந்தேன்
ஹோம குண்டத்தில் ஏதேதோ மந்திரங்களைச்சொல்லிப் பல விதமான பொருட்களை ஸ்வாஹா என்று சொல்லிப் படைக்கிறார்கள் முடியும் தருவாயில் நெய் யை ஒரு பலகையின் வழியே நெருப்பில் ஊற்றுகிறார்கள் அது முடிந்த பின் பூர்ணாஹுதி என்று தீப ஆராதனை காட்டுகிறார்கள் அதன் பிறகு சுமங்கலிப் பெண்ண்டிருக்குப் பாத பூஜை செய்து வெற்றிலை பாக்கு தேங்காயுடன் ஒரு முறத்தில் அரிசி வெல்லம் கண் மை குங்குமம் போன்றவற்றுடன்  புடவை ஜாக்கெட் வைத்துக் கொடுக்கிறார்கள். என் மனைவிக்கு அந்த பாக்கியம் கிடைத்தது அதன் பிறகு வந்திருந்தவர்களுக்கு எல்லாம் விருந்து படைத்தார்கள் இதெல்லாம் முடிந்தபோது நாங்கள்சென்று வருகிறோம் என்று சொன்னபோது என்னைஅழைத்து புரொகிதர்கள்
"சதமானம் பவதி சதாயுஷ் புருஷ
சதஸ்தேந்த்ரிய ஆயுஷ் வேதேந்திரியே, ப்ரதி திஷ்டதி"
என்னும் ஆசிர்வாத மந்திரங்களுடன் எனக்கு ஒரு அங்கவஸ்திரம் போர்த்தினார்கள் எங்களை எங்கள் வீட்டில் கொண்டுவந்து விட காரும் ஏற்பாடு செய்தார்கள் ஞாயிறு அன்று நவ சண்டி ஹோமம் இருப்பதாகவும் நாங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப் பட்டது
ஒரு சில புகைப் படங்களைப் பகிர்கிறேன்

ஹோமப் பிரசாதங்கள்
ஹோம குண்டத்தில் நெய் ஊற்றப்படுகிறது
ஹோமகுண்டத்தில் நெய் ஊற்றப் படுகிறது, இன்னொரு கோணம்


ஹோமகுண்டத்தை வலம் வருதல்



ஸ்ரீசரஸ்வதி தேவி படம்



ஸ்ரீசரஸ்வதி பூஜை



ஆசிர்வாதப் பொருட்கள்
இந்தப் பதிவை எழுதி முடித்தவுடன் எனக்கு வந்த ஒரு படத்தை இங்கே பகிர்கிறேன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ஹோம குண்டத்தின் நெருப்பில் ஸ்ரீகிருஷ்ணனின் வடிவம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?பகவானின் அருள் என்பதா.?கிடைத்த சந்தர்ப்பத்தில் சமயோசிதமாகப் புகைப் படம் எடுத்தவரின் சாமர்த்தியம் என்பதா.?சிலநேரங்களில்  வானில் காணும் மேகத்தின் வடிவம் நாம் நினைப்பது போல் இருக்கும் . அது போன்றதா? எழுதுங்களேன் பதிவில் என் fantasy பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறேன் அது தெரிந்துதானோ என்னவோ எனக்கு வந்த இந்தப் படம்

ஜுவாலையில் ஸ்ரீகிருஷ்ண ரூபம்

குருவாயூரில் ஹோமம் நடத்தும்போது அக்னியில் தெரிந்த கிருஷ்ணரூபம் என்று மலையாளத்தில் எழுதி இருந்தது.

   

சனி, 11 ஏப்ரல், 2015

ஸ்ரீநிவாசக் கல்யாண வைபோகமே...


                             ஸ்ரீநிவாசக் கல்யாண வைபொகமே....
                           --------------------------------------------------------


நிகழ்வுகளைப் பதிவிடுகிறேன் கூடவே அடைப்புக் குறிக்குள் இருக்கும் எழுத்துக்கள் என் எண்ணங்கள் என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன்( நண்பரின் பதிவு ஒன்றுக்குப் பின்னூட்டமாக நான் எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறதுநம்மைப் படைத்த் கடவுள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நாம் படைத்த கடவுளுக்கு நாம் நமக்கு எடுக்கும் விழாக்களை எடுத்துக் கொண்டாடுகிறோம் )
திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் கிளை ஒன்று பெங்களூரு வயாலிக்காவில் இருக்கிறது மூலவர் சிலை ஏறத்தாழ திருமலையில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேசரின் அளவில் இருக்கிறது. கடந்த பல மாதங்களாகவே என் மனைவிக்கு திருமலை சென்று வெங்கடேசரைத் தரிசனம் செய்ய வேண்டும் என்னும் ஆசை நிறைவேறுவதில் பல தடைகள் சங்கடங்கள். இப்படி இருக்கும் போது வயாலிக்காவில் இருக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரருக்கு நடக்கும் கல்யாண மகோத்ஸ்வம் திருமலையில்  நடப்பது போலவே இருக்கும் - காண விருப்பமா என்று நண்பர் ஒருவர் கேட்டார். என் மனைவியும் சரியென்று சொல்லிவிட்டாள். வாரத்தில் மூன்று முறை இந்தக் கல்யாணம் நடைபெறுவதாகவும் எந்த நாளுக்கு அனுமதி சீட்டு வாங்கட்டும் என்று நண்பர் கேட்டிருந்தார்( வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்பது சொல் வழக்குஒரு முறை கல்யாணம் செய்ததே போதும் என்றிருக்கும் போது வாரம் மூன்று முறையா?). வாரத்தில் சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று தினங்களில் கல்யாண மகோஹ்ஸ்வம் நடக்கும் என்றும் கூறி இருந்தார். சனி ஞாயிறு நாட்களில் கூட்டம் கூட இருக்கலாம். ஆகவே ஏப்ரல் ஆறாம் தேதி திங்களன்று நடக்க விருக்கும் திருமணத்துக்கு டிக்கெட் எடுக்கும் படி கூறி இருந்தாள் ( கோவில்களில் பாராயணமாக நடக்கும் பல சுலோக நிகழ்வுகளுக்குத் தனியே செல்லும் என் மனைவி ஆண்டவனின் திருக்  கல்யாண வைபவத்துக்கு தம்பதி சமேதராய்ப் போக வேண்டும் என்று கூறியதால் அடியேனும் கூடச் சென்றேன் )
டிக்கெட்டில் காலை ஒன்பதரை மணிக்கு அங்கே இருக்கவேண்டும் என்று எழுதி இருந்தது. நண்பர் காலை ஒன்பது மணிக்கே அங்கிருந்தால் முதலில் உட்காரும் இடம் சௌகரியமாக இருக்கும் என்று கூறி இருந்தார். நாங்கள் ஒன்பதேகால் மணி அளவில் அங்கிருந்தோம் ஆனால் திருக்கல்யாண வைபவம் பத்து மணிக்குத் தான் துவங்கும் என்றார்கள்கல்யாண உற்சவத்துக்குப் போகும் போதுமேல்சட்டை கூடாதென்றும் வேட்டியில்தான் இருக்க வேண்டுமென்றும் நண்பர் முன்பே எச்சரித்திருந்தார். ( எனக்கு வீட்டில் வேட்டிகைலி கட்டிப் பழக்கமே தவிர வெளியே போகும் போது வேட்டி கட்டிப் பழக்கமில்லை. இருந்தாலும் வேட்டி கட்டி அதன்மேல் இறுக்கமாக ஒரு பெல்டும் அணிந்தேன் , வண்டியில்தானே போகிறோம்.  அதிகம் நடக்க வேண்டாமே ஐந்தாம் தேதி பெங்களூருவில் வெப்பம் 37 டிகிரி என்றிருந்தது . பெங்களூரு சீதோஷ்ணத்துக்கு 37 டிகிரி கூடுதலே , காற்றில் ஈரப்பதம் குறைவானதால் சீக்கிரமே சோர்வு ஏற்பட்டு விடும் முன்பு போல் வெப்பம் தாங்க முடிவதில்லை)
கல்யாண உற்சவத்துக்கு ஒரு டிக்கெட் ரூ. 500/- இருவர் போகலாம் நாங்கள் உள்ளே போனபோது முதலில் திருமாலைத் தரிசனம் செய்தோம் பெருமாளுக்கு வலது புறம் பத்மாவதி  தாயாரும்  இடப்புறத்தில் கோதா தேவியும் தனிப் பிரதிஷ்டையில் இருக்கிறார்கள்( பெருமாளுக்கு பூதேவி ஸ்ரீ தேவி இருவர் மனைவியர் என்று படித்தது நினைவுக்கு வந்தது பத்மாவதித் தாயார் பெயரும் கேள்விப்பட்டதாக நினைவு. இந்தக் கோதாதேவி யார் ?யாருக்கு இந்தப் பெயர் .இதைக் கோவிலில் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம் என்றால் என் மனைவி தடா போட்டுவிட்டாள் கோதை என்னும் ஆண்டாள்தான் கோதா தேவியோ?) தரிசனம் செய்த பின் திருக்கல்யாணம் நடை பெற இருந்த இடத்துக்கு வந்தோம் ஒரு முழு நீள வெல்வெட் திரைதொங்கிக் கொண்டிருந்தது. அதில் நடுவே நாமமும் அதை இருபக்கங்களிலும் சங்கும் சக்கரமும் இரு ஓரங்களில் பெரிய திருவடி மற்றும் ஆஞ்ச்நேயரும் அலங்காரமாக வரையப் பட்டு இருந்தது டிக்கெட் வைத்திருந்தவர்களுக்கு சங்கல்பம் செய்து வைக்கப் பட்டது ( என் மனைவி வீட்டில் இருக்கும் அனைவரின் பெயர் நட்சத்திரங்களோடு சங்கல்பம் வேண்டினார்) அதில் ஒவ்வொருவர் பெயரைக்கூறும்போது அர்ச்சகர் பாலசுப்பிரமணியம் நாமஸ்ய  கமலா நாமஸ்ய என்று திருப்பிக் கூறி கையில் சிறிது அட்சதையும் பூவும் கொடுத்து ஸகுடும்பநாம் க்ஷேம ஸ்தைர்ய-தைர்ய –வீர்ய –விஜய-ஆயுர் ஆரோக்கிய –ஷ்வர்யாபி=வ்ருத்தியர்த்தம்(இதெல்லாம் புத்தகம் பார்த்து எழுதியது) என்ற வாறு ஏதோ கூறி அட்சதையும் பூவும் தட்டில் போடச் சொன்னார். திரை விலக பெருமாளுக்கு தீப ஆராதனை காண்பிக்கப் பட்டது. பளிச்சென்ற பொன் முகம் வெள்ளிக் கவசம் வெள்ளிக் கிரீடம் ( வேறு ஏதோ நிறத்துடன் கிரீடத்தில் புரியவில்லை)பெருமாளுக்கு
 வலது மேடையில் இரு தாயார்கள்.( ஒரே நேரத்தில் இருவரையும் மணக்கப் போகிறாரா)
மேடையில் நான்கு புரோகிதர்கள் அதில் ஒருவர் என்னைமிகவும் கவர்ந்தார். ஏறத்தாழ ஆறடி உயரம் நல்ல ஆகிருதி என்னைக் கவர்ந்த விஷயம் என்னவென்றால் அவரது சிகை அலங்காரம் நவீன பெண்கள் இவரைப் பார்த்தால் இவரை ஒரு ட்ரெண்ட் செட்டெர் ஆக்கி விடுவார்கள். வர்ணனையைக் கவனியுங்கள். வார்த்தைகளால் சொல்ல முயற்சிக்கிறேன் .முதலில் சொல்ல வேண்டியது அவருக்கு நல்ல கூந்தல் ஒரு சொல் வழக்கு உண்டு”கூந்தல் இருக்கும் மகராசி அள்ளி முடிந்தால் என்ன கொண்டை போட்டால் என்ன” என்று.அந்த மாதிரியான முடி. தலையில் முன்பக்கத்திலிருந்து இரண்டு அங்குலம் தள்ளி அதே கோட்டில் தலையில் ஒரு வட்டமாக வகிடு. வகிட்டுக்குப் பின் இருக்கும் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டை போட்டிருந்தார். வகிட்டுக்கு இந்தப் பக்கம் இருக்கும் முடியை சுருளாக்கி ஒரு சுருள் சுற்று வைத்திருந்தார். முன் பக்கம் இருந்த பார்த்தால் கொண்டை தெரியாது. பக்கவாட்டில் இருந்து பார்த்தால் ஒரு புது மோஸ்தரில் முடியை காட்டும் அழகு
ஸ்ரீநிவாச கல்யாணம் பற்றிக் கூற வந்தவன் புரோகிதரின் முடி பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்பெருமாள் கையிலும் தாயார்கள் கையிலும் ---காப்பு என்று நினைக்கிறேன்—சரடு கட்டினார்கள் திருமணத்துக்கு போயிருந்த எங்கள் கையிலும் கட்ட சரடு கொடுத்தார்கள். திருமணம் காணச்செல்பவர்கள்  கையில் சரடு கட்டும் பழக்கம் நான் காணாதது புரோகிதர்களைப்பற்றிக் கூறி வந்தபோது மூவர் வைஷ்ணவர்களாகத் தெரிந்தார்கள் ஒருவர் சைவச் சின்னம் அணிந்திருந்தார். அதற்கு விளக்கம் கேட்கக் கூடாது என்று மனைவியின் உத்தரவு திருமணச்சடங்கு நிகழும் போது ஒருவர் வந்தார். அவரை உட்காரவைத்து சங்கல்பம் செய்வித்தார்கள் அவர் அந்தக் கோவில் நிர்வாகி என்று பிறகு தெரிந்தது( அதனால்தானோ பிரத்யேக கவனிப்பு )
அவ்வப்போது திரையை மூடி என்னவோ செய்கிறார்கள் ஒவ்வொரு முறையும் தீபாராதனையுடன் திரை விலக்கப் படுகிறது. எல்லா வைதீகமுறைகளையும் அனுஷ்டிக்கிறார்கள் எனக்குத்தான் எது எது என்று தெரியவில்லை. மாங்கல்ய தாரணம் செய்யும் முன் தாலியை சபைக்குக் காண்பிக்கிறார்கள் கெட்டி மேளத்துடன் மாங்கல்யம் அணிவிக்கப் படுகிறது (  ஒரே நேரத்தில் இருவருக்கும் தாலி கட்டுகிறார், நமக்குத்தான் இருதார மணம் சட்ட விரோதம்) புது பட்டுப் பீதாம்பரமும் புடவைகளும் கொடுக்கப் படுகின்றன திரை விழ மறுமுறை திரை விலகும் போது பிராட்டியர்கள் இருவரும் பெருமாள் அருகே   .! நாதஸ்வர இசை கூடவே இருப்பதால் சடங்குகளை  அனுமானிக்க  முடிகிறது மாலை மாற்றல் ஊஞ்சல் எல்லாம் நிகழ்வது நாதஸ்வர இசை மூலம் தெரிகிறது
 ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் கல்யாண மகோற்சவம் நடை பெறுகிறது அத்தனை நேரமும் தரையில் சம்மணமிட்டு நான் உட்கார்ந்திருந்தது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது ஹோம குண்டத்திலிருந்து புகை அதிகம் இருக்கவில்லை  ( வாரம் மூன்று முறை சடங்குகளை நிகழ்த்திப் பழக்கப் பட்டவர்கள் ஹோம குண்டத்தில் புகை வராமல் பார்த்துக் கொள்வதிலும் தேர்ந்திருக்கவேண்டும் ) குடியிருப்பில் இருந்தபோது சீதா கல்யாணம் ருக்மிணி கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளைப் பெண்கள் நடத்துவது பார்த்திருக்கிறேன் கோவிலில் மூர்த்திக்குத் திருமணம் நடத்துவதை முதன் முதலாகப் பார்த்தேன்
திருமணம் முடிந்ததும் எங்களுக்கும்  மரியாதை செய்யப் பட்டது . எனக்கு ஒரு அங்க வஸ்திரமும் மனைவிக்கு ஒரு ஜாக்கெட் துண்டும் கல்யாணப் பலகாரங்களாக லட்டுவும் அடையும் சர்க்கரைப் பொங்கலும் தரப் பட்டது கோவிலில் புகைப் படம் எடுக்கத் தடை. சில படங்கள் இணையத்திலிருந்து எடுத்தது கீழே பதிவிடுகிறேன்       

 
வயாலிக்காவல்  பெருமாள் கோவில் நான் எடுத்த புகைப்படம்
 
ஸ்ரீநிவாச கல்யாணம்  இணையத்திலிருந்து
 
வயாலிக்காவில் பெருமாள் கோவில்  இணையத்திலிருந்து
 
கல்யாணப் பிரசாதங்கள்


புதன், 8 ஏப்ரல், 2015

நேர் காணல்


                           நேர்காணல்
                            -----------------


பதிவுகள் எழுதத் தலைப்புகள் எதையாவது யோசித்து எழுதலாம் என்றால் அந்தத் தலைப்பில் நான் ஏற்கனவே எழுதி இருப்பது தெரிகிறதுஅதனால்தானோ என்னவோ என் அண்மையப் பதிவுகள் பலதும் மொக்கையாய் இருக்கிறதுஎன்னை பாதிக்கும் விஷயங்களை நான் எழுதும் போது அதனால் சிலருக்காவது புதிய சிந்தனைகள் தோன்றவேண்டும் . என் அனுபவங்கள் சிலருக்குப் பாடமாக இருக்கலாம் நான் முன்பே எழுதி இருந்தாலும் இன்னுமொரு முறை படிப்பதால் நஷ்டமோ சுவை குறைவோ ஏற்படப் போவதில்லை.
நம்மில் பலரும் இப்போது இருக்கும் பதவிக்கு ஏதாவது நேர்காணல் மூலம் தேர்வாயிருக்கலாம். இன்னும் பதவி உயர்வு பெற இன்னும் சில நேர்காணல்களை சந்திக்க நேரலாம் இந்த எண்ணம் தோன்றியவுடன் எழுத ஆரம்பித்த போது என் பழைய பதிவொன்றே இன்னும் புதியதாகத் தோன்றவே அதையே எழுதுகிறேன் எத்தனையோ ஆன்மீகக் கதைகளை மீண்டும் மீண்டும் கேட்பது இல்லையா, வாசிப்பது இல்லையா?ஆனால் அதைவிடப் பயன் தரும் பதிவைப்படிப்பதில் குறை ஒன்றும் இருக்காது
 நேர்காணல்

சில பிரபலங்களை சந்திக்கும்போது பேட்டிக்காக காணும் நேர்காணல் பற்றியது அல்ல இப்பதிவு. வேலை வேண்டி மனு செய்திருந்து அவர்களிடம் இருந்து அழைப்பு வந்து அவர்கள் மனுதாரரிடம் அவரை தேர்வு செய்யவா வேண்டாமா என்று சோதித்து அறிய நடத்தும் நேர்காணல் பற்றிய சில அனுபவ டிப்ஸ்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

மனு செய்யும் விதமே இப்போது முற்றிலும் மாறியிருக்கிறது. அந்தக் காலத்தில் மனு செய்பவர் தங்கள் குடும்ப சூழ்நிலையை விளக்கி, இவர் வேண்டும் அந்த வேலை எவ்வளவு முக்கியமானது என்று கண்ணீர் வருத்தாத குறையாக எழுதி கடைசியில் “ I WILL TRY MY LEVEL BEST TO SATISFY MY SUPERIORS AND REMAIN FAITHFUL FOR EVER “ என்று முடிப்பார்கள். இப்போதெல்லாம் அவரவர் தகுதிகளைக் கூறி RESUME என்ற பெயரில் ஒரு அல்லது சில தாள்களை அனுப்புகிறார்கள் அல்லது மின் அஞ்சல் செய்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் தேர்வு செய்பவர் ஒரு நேர்காண்ல் அல்லது க்ரூப் டிஸ்கஷன் மூலமே தேர்வு செய்கிறார்கள். நேர்காணலுக்குச் செல்லும்போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து நிறையவே கைடன்ஸ் புத்தகங்கள் அல்லது குறிப்புகள் வந்திருக்கின்றன

நேர்காணலுக்குச் செல்பவர்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். முதன் முதலில் வேலை தேடி செல்பவர் தன் இப்போதிருக்கும் நிலையை மேம்படுத்திக் கொள்ள செல்பவர் முதன் முதலில் வேலை தேடிச் செல்பவர் அதிகம் நெர்வஸாக இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம். நேர்காணலில் தங்கள் அறிவை சோதனை செய்கிறார்கள் என்று மட்டும் எண்ணக் கூடாது. கால்மணி முதல் அரை மணிக்குள் ஒருவரது அறிவை சோதித்து தெரிந்து கொள்ள முடியாது. அவர்கள் நோக்கமும் அதுவல்ல. உங்கள் அறிவை தெரியப் படுத்தும் சான்றிதழ்கள் அவர்களிடம் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் ஆட்டிட்யூட்  மற்றும் பிறரை எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்பதை அறிய அவர்களது முயற்சியே. நேர்காணல். எந்த நிறுவனத்துக்கு வேலைக்கு மனு செய்திருக்கிறீர்களோ அந்த நிறுவனம் பற்றி சில விவரங்களாவது தெரிய வேண்டும். நான் முதன் முதலில் என் பதினேழாவது வயதில் பள்ளி இறுதி முடித்து HAL-ல் மெகானிக் பணிக்கான பயிற்சிக்குத் தேர்வு செய்ய நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்தேன். நான் இருந்தது வெல்லிங்டனில். நேர்காணல் மதராசில். திரும்பி வருவதற்கான பணம் மட்டும்தான் என்னிடம் இருந்தது. ஆனால் உலகை வெல்லும் தைரியம் நிறையவே இருந்தது. நான் பட்ட பாடுகள் பற்றிக் கூறப் போவதில்லை. நேர்காணலுக்கு வந்திருந்தவர்களில் காலில் செருப்புடன் டை அணிந்து வந்தவன் நான் மட்டுமே. தமிழ்வழிக் கல்வியே படித்திருந்தாலும் ஆங்கிலத்தில் ஓரளவு சரளமாக என்னால் பேச முடிந்தது. என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் கேட்டவர்கள் நான் காம்பொசிட் மாத்ஸ் படித்தவன் என்று தெரிந்து என் அறிவை சோதிக்க பித்தாகோரஸ் தீரம் பற்றிக் கேட்டார்கள். நான் தமிழ் வழிக்கல்வியில் படித்ததால் தமிழிலேயே பித்தாகோரஸ் தேற்றம் கூறினேன்.தமிழ்வழிக் கல்வி படித்தும் ஆங்கிலத்தில் என்னால் உரையாட முடிவது கண்டு அவர்கள் அதே தீரத்தை ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா என்று கேட்டார்கள். நான் ஒரு தாள் கேட்டு வாங்கி முடிந்தவரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன். அவர்கள் அப்போதே கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். இதை எதற்கு கூறுகிறேன் என்றால் நாம் படிப்பது தேர்வில் பாஸ்செய்ய மட்டுமல்ல. படிப்பதைப் புரிந்து கொண்டால் அதை விளக்கவும் முடியும். என்ன.. என்னால் அது முடியும் என்ற நம்பிக்கை வேண்டும் அந்த நேர்காணலில் நான் தேர்வு பெற்றேன் என்று கூறவும் வேண்டுமா. ?
தேர்வுக்குச் செல்பவர்களுக்கு முக்கிய தேவை, நம்மால் முடியும் என்ற நம்பிக்கை. அதுவே ஓவர் கான்ஃபிடன்ஸாக மாறி விட்டால் சொதப்பலாகி விடும். அதற்கு என்னிடமிருந்தே ஒரு உதாரணம் கூறுகிறேன். நான் HAL-ல் வேலையிலிருக்கும்போது  மதராஸ் ப்ரேக்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு எஞ்சினீரிங் இன்ஸ்டரக்டர்ஸ் என்ற பணிக்காக வந்த விளம்பரம் கண்டு மனு செய்தேன். என் மனுவில் நான் பயிற்சியின்போது சென்ற இடங்களிலெல்லாம் தேர்ச்சி உள்ளவன் போல் எழுதி இருந்தேன். என்னை நேர்காணல் செய்ய வந்தவர் ஒரு ஆங்கிலேயர். என் மனுவைப் படித்த அவர் எனக்கு டூல் டிசைன் செய்ய வருமா என்று கேட்டார். இரண்டே வாரம் அங்கு பயிற்சியில் இருந்தவன் நான். டூல் டிசைன் என்றால் என்ன செய்கிறார்கள் என்று தெரியும் அவர் கார் எஞ்சினின் ஒரு பாகத்தைக் காட்டி அதற்கு என்னால் டூல் டிசைன் செய்ய முடியுமா என்று கேட்டார். நேர்காணல் நடக்கும் நேரத்தில் எந்தக் கொம்பனாலும் டூல் டிசைன் செய்ய முடியாது என்று எனக்குத் தெரியும். என்னை டிசைன் செய்யச் சொல்ல மாட்டார்கள் என்றும் தெரியும். ஆகவே வீராப்பாக என்னால் முடியும் என்றேன். எவ்வளவு நேரமாகும் என்றார்கள் நான் குத்து மதிப்பாக பதினாறு மணி நேரம் ஆகும் என்றேன். அந்த ஆங்கிலேயருக்கு நான் புருடா விடுகிறேன் என்று
நன்றாகத் தெரிந்து விட்டது. ஒரு வாரம் எடுத்துக் கொண்டாலும் என்னால் முடியாது என்று கூறியவர் முகம் சிவக்க எனக்கு எந்த பணியும் தர முடியாது என்று கூறினார். முகத்தில் அடித்தாற்போல் எந்த வேலையும் கிடையாது என்று சொன்னது எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது. நானும் என் பங்குக்கு எந்தப் பணியாவது கேட்டு நான் வரவில்லை, எஞ்சினீரிங்.இன்ஸ்ட்ரக்டர்  பதவிக்கு மட்டுமே மனு செய்திருந்தேன். அது மட்டும் இல்லை என்றுதான் அவர்கள் கூறலாம் என்று கோபமாகக் கூறி வெளியே வந்து விட்டேன். நேர்காணலில் தவறான அணுகு முறைக்கு இது ஒரு சாம்பிள்
. மைகோ MICO நிறுவனத்துக்கு ஒரு நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். மிகவும் மரியாதையுடன் வரவேற்றார்கள். ஒரு நாள் முழுவதும் தேர்வு. காலையில் ஒரு வினாத்தாளைக் கொடுத்து பதில் எழுதச் சொன்னார்கள். கொஞ்சம் டெக்னிகல் விஷயங்கள் பின் நிறையவே முதலாளி தொழிலாளி உறவு பற்றிய கேஸ் ஸ்டடீஸ். உதாரணத்துக்கு ஒன்று. ஒரு நிறுவனத்தில் இருக்கும் மேலாளர் வீட்டில் வேலை செய்யும் தோட்டக் காரனை அவர் தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்துகிறார். மேலாளருக்கு வேண்டப் பட்டவன் என்ற காரணத்தால் ஒரு பகுதியின் மேற்பார்வையாளர் அந்த தோட்டக் காரனை தன் கீழ் பணியில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் அதே காரணத்துக்காக இன்னொரு மேற்பார்வையாளர் அந்த தோட்டக் காரனை தன் கீழ் பணியில் அமர்த்தியதோடு மட்டுமல்லாமல் அவனுக்கு நிறையவே சலுகைகள் கொடுத்து ப்ரொமோஷனும் கொடுக்க ஏற்பாடு செய்கிறார். இந்த கால கட்டத்தில் மேலாளர்  ஓய்வு பெறுகிறார்.அதற்குப் பிறகு அந்த தோட்டக்காரனுக்கு எந்த சலுகையும் வழங்கப் படவில்லை. இரண்டாம் பதவி உயர்வும் தடுக்கப் படுகிறதுஅவன் இதை யூனியனிடம் முறையிட அந்தக் கேஸ் விசாரிக்க உங்களிடம் வருகிறது . நீங்கள் எப்படி பிரச்சனையைத் தீர்ப்பீர்கள்.?

மதியம் நேர்காணலில் கேள்வி பதில்களை அலசுகிறார்கள் கேள்வித்தாளில் இல்லாத கேள்வி ஒன்று. உன் பகுதியில் வேலை செய்யும் தொழிலாளி அரை நாள் லீவ் கேட்கிறான். நிலைமை உங்களால் லீவ் கொடுக்க முடியாத சூழ்நிலை.அந்தக் கோபத்தில் நீங்கள் ஒரு திருப்பத்தில் வரும் போது அந்த தொழிலாளி உங்களுக்குத் தெரியாமல் உங்களைத் தாக்குகிறான் நீங்கள் என்ன செய்வீர்கள்.?

எனக்கு ஒன்றும் புரியவில்லை. தாக்குதலுக்கு உள்ளான பிறகு  நான் என்ன செய்ய
 முடியும்.? நான் அவர்களிடம் சொன்னேன். எனக்கு இந்த மாதிரி பணி வேண்டாம். அடியும் உதையும் பெற எதிர்பார்க்கும் அந்த நிறுவனத்தை நான் நிராகரிக்கிறேன் என்று கூறி வந்து விட்டேன். ( அந்த காலகட்டத்தில் தொழிலாளர் பிரச்சனை உச்ச கட்டத்தில் இருந்து நாளொரு கலவரமும் கதவடைப்பும் நிகழ்ந்து கொண்டிருந்தது.)

விளம்பரங்கள் மூலம் தெரிய வந்து மனு செய்யும் காலம் மாறிக்கொண்டிருக்கிறதோ என்னும் சந்தேகம் எனக்கு வருகிறது. எந்தக் காலத்திலும் நேர்காணலுக்குச் செல்பவர் தன்னிடம் கேள்விகள் கேட்பவர் தன்னை சோதிக்க அல்ல, அவருக்கே தெரிந்து கொள்ள என்னும் எண்ணத்துடன் அணுகினால் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். முன்பிருந்த மாதிரி ஒரே நிறுவனத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு பணி புரியும் காலம் மலை ஏறிவிட்டது. வேலைக்கு எடுத்துக் கொள்பவர்களும் வேலை தெரிந்தவர்களையே அதிகம் விரும்புகிறார்கள். இல்லையென்றால் அவர் வேலை கற்றுக் கொண்டுவிட்டுப் பிறகு வேறு நிறுவனத்துக்குப் பறந்து விடுகிறார். இண்டக்‌ஷன் லெவலில் சேர்ந்தால் வேலைகற்றும் கொள்ளலாம். நேரம் வரும்போது மாற்று வேலைக்கும் செல்லலாம்
.
என்ன நண்பர்களே இதே பதிவை ஏற்கனவே படித்து நினைவில் இருத்திக் கொண்டிருப்பவர்களுக்கு  ஒர் ஓ போடலாமா    ,                            


   .   


ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

வலை நண்பருடன் ஒரு நாள்


                                   வலை நண்பருடன் ஒரு நாள்
                                   --------------------------------------------


கடந்தமாதம் 16-ம்தேதி. திரு இராய,செல்லப்பா யக்ஞசாமிக்கு ஒரு அஞ்சல் அனுப்பி இருந்தேன். என் பதிவுகளுக்கு அவர் வருகை தராததாலும், அவருக்கு கால்முட்டி அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது நான் அறிந்திருந்ததாலும்  அவர் நலம் விசாரித்து எழுதி இருந்தேன். அவரும் என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்ததாகவும்  20-21 தேதிகளில் பெங்களூரு வர ஒரு வேலை இருப்பதாகவும்  நான் இருப்பேனா என்றும் கேட்டு பதில் வந்தது. உடனே நான் பதில் போட்டேன். பெங்களூரு வரும்போது என் வீட்டில் தங்கலாம் என்று எழுதி இருந்தேன். அவரும் ஒப்புக்கொண்டு 20-ம் தேதி காலை என் விட்டுக்கு வந்தார். எனக்கும் என் மனைவிக்கும் அதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. காலை உணவு ..மதிய உணவுக்குப் பின் அவரது நண்பர் ஒருவர் காரில் வந்திருந்தார் செல்லப்பாவுக்கு என் வீட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் இருந்த நெலமங்கலாவில் இடம் இருப்பதாகவும் அதைப் போய் பார்க்கவேண்டும் என்றும் கூறினார். என் மனைவி அவருடன் நானும் போக அனுமதி கொடுத்தார். நான் எங்கும் தனியாகப்போக அனுமதி இல்லை.
அவரது இன்னொரு நண்பரும் எங்களுடன் வந்தார். எம்.எஸ். ஸ்ரீநிவாஸ் என்று பெயர் SMART SERVICES NETWORK -ன் MD&CEO. மாலை சுமார் ஐந்தரை மணிக்கு நெலமங்கலவை விட்டோம். அவரது நண்பர் எங்களை அவரது ஆஃபீசுக்கு வர வேண்டினார். நாங்களும் போனோம்  மறு நாள் உகாதிப் பண்டிகையை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் பூஜை நடந்து கொண்டிருந்தது. பூஜை முடியும் நேரம் பிரசாதத்துக்கு நாங்களும் இருந்தோம் பிரசாதங்களைக் கொடுக்க வந்த ஒரு பெண் வேப்பிலையுடன் சிறிது வெல்லத்தைய்யும் கொடுக்க வந்தார். நான் இனிப்பை மட்டும் எடுத்துக் கொண்டு வேப்பிலை வேண்டாம் என்று கூறி விட்டேன் வருட ஆரம்பத்தில் கசப்பும் இனிப்பும் உணரவேப்பிலையும் வெல்லமும் என்றார். நான் என் வாழ்வில் நிறையவே பார்த்து விட்டேன் கசப்புஇனி வேண்டாம்  இனிப்பே போதும் என்று வெல்லம் சிறிது எடுத்துக் கொண்டேன். யாரும் எதிர்பார்க்காதபதில் அது. செல்லப்பாவின் நண்பர் ஸ்ரீநிவாசனுடன் இரவு சுமார் எட்டரை மணிக்கு வீடு சேர்ந்தோம். இதன் நடுவே இரண்டு மூன்று முறை என் மனைவி என்னுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து விட்டாள் திரு ஸ்ரீநிவாசனுக்கு என் சிறுகதைத் தொகுப்பு வாழ்வின் விளிம்பில் ஒரு பிரதி கொடுத்தேன் அவருக்கு அரசு லைப்ரரியில் சிலரைத் தெரியும் என்றும் இப்புத்தகத்துக்கு அவர்கள் மூலம் ஆர்டர் கிடைக்க வழி செய்வதாகவும் கூறினார் அவர் சென்ற பின் இரவு உணவு முடித்தோம். மறுநாள்  திரு செல்லப்பா இன்னும் சில நண்பர்களைக் காண இருப்பதாகவும் மதிய உணவு முடிந்ததும் சென்றார். வலை உலக நண்பர் ஒருவர் எங்களுடன் தங்கியது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது என்று சொல்ல வேண்டியதில்லை. நினைவுக்காக சில புகைப் படங்கள் கீழே.

ஸ்ரீநிவாசன் செல்லப்பா

ஸ்ரீநிவாசன் செல்லப்பா நான்
 .   
நான் செல்லப்பா


என்னுடன் செல்லப்பா
1.        .
.

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

சில காணொளிப் பதிவுகள்


                                      சில காணொளிப் பதிவுகள்
                                      ---------------------------------------
அவசியம் பாருங்க. ..மிஸ் பண்ணிடாதீங்க. . அப்புறம் வருத்தப் படுவீங்க.
ஆத்திகப் பெருமக்களுக்காக




இது கிரிக்கட் ரசிகர்களுக்கு.
கிரிக்கட் விளையாட்டில் பிட்சின் நடுவே இரு பாட்ஸ்மென்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் அது ஒரு திட்டமிடலாகவும் இருக்கலாம் காணொளியைப் பாருங்கள்
கருத்துக்களைக் கூறுங்கள்.



திட்டம்     இங்கே சொடுக்குங்கள் ஒரு வேளை காணொளி திறக்காவிட்டால் to make doubly sure