வெள்ளி, 17 ஏப்ரல், 2015

சில எண்ணங்கள் எழுத்தில்


                                    சில எண்ணங்கள் எழுத்தில்
                                     ---------------------------------------
வலை நண்பருடன் ஒரு நாள் என்னும் பதிவு எழுதியபின்  இந்தமாதிரி பதிவு எதிர்பார்க்கப்பட்டிராது திருமதி.தேனம்மை லக்ஷ்மணன் பதிவர் ஒற்றுமை ஓங்குக என்று பல பின்னூட்டங்களில் எழுதி இருப்பதைப்பார்த்தபின்னும் இந்த மாதிரி பதிவு எதிர்பார்க்கப் பட்டிராது

ஒரு சில நிகழ்வுகளை உடனே பகிர்ந்து கொள்ள மனம் துடிக்கும். ஆனால் ஏதோ சில காரணங்கள் அதைத் தள்ளிப் போடவைக்கும் வலையுலக நட்புகள் பற்றிப் பலருக்கும் பல அபிப்பிராயங்கள் இருக்கும் . நம்மைப் பின்னிப் பிணைக்கும் காரணம் ஒன்றே இருக்கமுடியும் நம் எண்ணங்களுக்கு வடிகாலாய் நாம் எழுதுவதைப் பலர் படிக்கிறார்கள் அதில் ஒரு சிலர் நம்மை மகிழ்விக்க ஊக்கமளிக்கும் கருத்துக்கள் இடுகிறார்கள் சிலர் உண்மைக் கருத்துக்களை வெளியிடத் தயங்கி நம் பதிவைத் தாண்டிப் போகலாம் சிலர் காட்டமாக நிர்தாட்சண்யமாகக் கருத்துக் கூறத் தயங்கலாம். தனிமனிதரைத் தாக்காதவரை கருத்து சுதந்திரம் எடுத்துக் கொண்டு மனதில் பட்டதை எழுத ஏன் தயங்கவேண்டும். நாம் எழுத்தைத் தான் விமரிசிக்கிறோம் எழுத்தாளனை அல்லவே. எனக்கு  இந்த வலையுலகில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக எழுதி வந்தாலும் புரியாத ஒன்று பதிவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள். பலரும் கடைவாய்ப் பல்லில் கடித்து முன் வாயில் புன்சிரிப்பைத் தவழ விடுபவர்களே அதிகம் ஒரு முறை அப்பாதுரை  “பிறர் நினைப்பது உங்களுக்கு எப்படித்தெரியும்?.என்று கேட்டு எழுதி இருந்தார். ஏறத்தாழ 77 ஆண்டுகளாக மனிதர்களை சந்திக்கிறேன் பழகுகிறேன் இதை அனுமானிக்க முடியும் என்று நம்புகிறேன் ஆங்காங்கே அவர்கள் இடும்பின்னூட்டங்களையும் படிக்கிறேனே நான் எழுதுவதைப் பலரும் புரிந்து கொள்வார்கள் என்றும் தெரியும் பதிவுலகில் நமக்குச் சிலரைப்பிடிக்கலாம். சிலரைப் பிடிக்காமல் போகலாம் சிலரது கருத்துக்கள் ஊக்கமளிக்கலாம் சிலர் வந்து படித்தால் நமக்குக் கௌரவமாகத் தெரியலாம் சிலருக்கு நம் பதிவு வெளியாவதே தெரியாமல் இருக்கலாம்.  இப்படிப் பலரையும் மனதில் கொண்டு என் பதிவுகள் வெளியாகும் போது நான் அவர்களுக்கு அஞ்சல் அனுப்புவதுண்டு. அப்படி நான் அனுப்புவதைப் பிடிக்காமல் யாராவது இருந்தால் அவர்கள் அதை எனக்குத் தாராளமாகத் தெரிவிக்கலாம்  என் பதிவுகளைத் தொடருபவர்கள் ப்லாக்கர் படி 151 பேர். இவர்கள் என் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கிறார்கள் என்றாலோ. அதில் சுமார் 20 சதம் வாசகர்கள் பின்னூட்டமிடுகிறார்கள் என்றாலோ என் பதிவு ஒவ்வொன்றுக்கும் சுமார் 30 பின்னூட்டங்களாவது வரவேண்டும். ஆனால் தொடராதவர்களுக்கும் மின் அஞ்சல் அனுப்பியும் பின்னூட்டங்கள் எழுதுவோர் குறைந்த எண்ணிக்கையினரே
.
இதை எல்லாம் பார்க்கும் போது நான் யாருக்காக  எழுதுகிறேன் இதனால் எனக்கு என்ன பயன் என்னும் எண்ணங்கள் தோன்றுகின்றன. நான் பொழுது போக்குக்காக எழுதுவதும் என் எண்ணங்களைக் கடத்த வேண்டும் என்பதற்காகவும் தான் என் எண்ணங்களும் சிந்தனைகளும் பெருவாரியான வாசகர்களுக்கு உடன்பாடாக இல்லாமல் இருக்கலாம். இருக்கட்டுமே. அதை தெரிவிப்பதில் யாருக்கு என்ன நஷ்டம்?. நானும் பலரது பதிவுகளைப் படிக்கிறேன். படித்ததும் என் மனதில் தோன்றுவதைப் பின்னூட்டமாக எழுதுகிறேன் அவர்கள் எழுதிய பகுதியை அப்படியே குறிப்பிட்டு அருமை அட்டகாசம் போன்ற வரிகளை உபயோகிப்பதில்லை. இது பல பதிவர்களுக்கும் தெரியும் உள்ளதை உணர்ந்தபடி நான் எழுதும் பின்னூட்டங்களுக்கும் வரவேற்பு இருப்பதும் தெரியும் I DON'T SAY YES WHEN I MEAN NO....!
பொதுவாகவே என் எழுத்துக்கள் சற்றே சீரியசானவை. நகைச் சுவையாக எழுத எனக்குத் திறமை போதாது. பதிவுகள் மொக்கையாக இருந்தால் பின்னூட்டம் இடுபவர்களுக்கு சங்கடம் இல்லை. ரசிப்பதை எழுத்தில் கூறுவதும் எளிது.கனமான தலைப்புகளில் எழுதும்போதோ பிறரது நம்பிக்கைகளை( அவை பகுத்தறிவுக்கு ஒவ்வாததுஎன்று நான் நினைத்து) எழுதும் போதோ மாற்றுக் கருத்துக்கள் வரலாம்.  நிலவிவரும் ஏற்றதாழ்வுகளுக்குக் காரணம் நம் சமூகப் பின்னணியே என்று எனக்குத் தோன்றுகிறது. அதை நான் பதிவிடும் போது யார் மனமும் தனிப்பட்ட முறையில் புண்படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன் மேலும் என் பதிவுகளில் காணும் விஷயங்கள் ஒரு முன்னேற்றப் பாதைக்கான கலந்தாடல்களை ஏற்படுத்த வேண்டும் என்பதும் என் எண்ணம் ஆனால் கலந்துரையாடல் என்னும் பெயரில் சிலர் என் வாயைப் பிடுங்கி வார்த்தை விளையாட்டில் இறங்க முற்படும் போது மனசு வலிக்கிறது.கருத்துக்களைத் தெரிவிக்கும் போது யார் சரி யார் தவறு என்று எண்ணுவது சரியல்ல என்றே நினைக்கிறேன் மாறுபட்ட கருத்துக்கள் எதாவது இருந்தால் பதிவில் பின்னூட்டமாகத் தெரிவிக்கலாம். பலரும் படித்து அவரவர் முடிவை நிர்ணயித்துக் கொள்வார்கள்
நான் என் பதிவுகளில் அவ்வப்போது எழுதிவருவது பிறரது கருத்துக்களைப்  படிக்கும் போது முதலில் We have to unlearn  what we have already learnt என்று கூறுவது வழக்கம். இல்லாவிட்டால் நம் சிந்தனைகள் நம்மை விருப்பு வெறுப்பின்றி அணுக விடாது. நான் எப்போதும் கனமான பொருளில் எழுதுவதை குறைத்துக்கொண்டு வருகிறேன் நான் அறிந்தவரை மொக்கையாகப் பதிவுகள் எழுதினால் வாசகர்கள் துன்பப் படுவதில்லை. எதையும் யோசித்துக் கருத்திடும் தேவை குறையும்
எனக்குப் புரியாத  விஷயங்களில் ஏன் பல பதிவர்கள் தங்கள் சுயத்தை வெளிப்படுத்தத் தயங்குகிறார்கள் என்பதும் ஒன்று. உண்மைப் பெயரை மறைத்து புனைப் பெயரிலும் புகைப்படங்களை வெளியிடத் தயங்குவதிலும் என்ன பலன் கிடைக்கிறது புரிவதில்லை. மேலும் சக பதிவர்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக்கும் அஞ்சல் முகவரியும் இருப்பதில்லை தொடர்பைத் தவிர்க்கிறார்களோ என்று சந்தேகம் எழுகிறது.இப்படி இருக்கும் போது வலையுலக நட்பு பற்றி பேசுவது சரியாய்த் தோன்றவில்லை.வலையுலகில் நட்புகள் மிகக் குறைவே அறிமுகங்கள் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்
 இன்னொரு விஷயம் பின்னூட்டங்களை பிரசுரிப்பதில் அவர்களுக்கு இருக்கும் மட்டறுத்தல் என்பதாகும். பெயரில்லாமலோ. தனிப்பட்ட முறையிலோ தாக்கும் பின்னூட்டங்களைத் தவிர்ப்பதில் நியாயம் இருக்கலாம் ஆனால் சில பின்னூட்டங்கள் காரணம் தெரிவிக்கப் படாமல் இருட்டடிப்பது எனக்கு விளங்காத ஒன்று.
நான் இன்னும் சில விஷயங்களைக் கவனிக்கிறேன் பதிவுக்குப் பின்னூட்டம் இடும்போது அது பதிவில் கண்டிருந்த விஷயங்கள் தவிர சில சமயம் அவரவர் மேதா விலாசத்தைப் பறை சாற்றுவதாகவும் படுகிறது பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு மறு மொழி எழுதுவது பின்னூட்டம் எப்படி ஏற்கப் பட்டிருக்கிறதுஎன்பதைத் தெரியப் படுத்தும் 

பெங்களூருவில் இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு பதிவர் சங்கமம்  திருமதி ஷைலஜாவின் முயற்சியால் நடை பெற்றது. நானும் சென்றிருந்தேன் சுமார் எட்டோ ஒன்பதோ பேர் வந்திருந்தனர். சந்திப்பு காணொளியாகவும் படமெடுக்கப்பட்டது. அதற்கு பின் எந்தப் பதிவருடனும் தொடர்புஇல்லை. ராமலக்ஷ்மி அவ்வப் போது பதிவுக்கு வருவார். நானாக எந்தசந்திப்புக்கும் ஏற்பாடு செய்யமுடியாத உடல் நிலை. அஞ்சலிலொ பதிவிலோ தொடர்பிலாவது இருக்கலாமே. என் பதிவுகள் சிலவற்றை அனுப்பியும் எந்த தொடர்பும் இல்லை. 
என்னவோ மனசில் பட்டது அநேகமாகப் பதிவாகி விட்டது இப்படித்தான் எதையோ எழுதத் துவங்கி எதையோ எழுதுவதும் சில நேரங்களில் என்னால் தவிர்க்க முடியாததாகி விட்டது 
வலையுலகில் அறிமுகங்கள் அதிகம் நட்பு மிகவும் குறைவு என்பதே என் எண்ணம்.உங்கள் கருத்துக்களையும் பகிரலாமே 
இப்போதுதான் வெங்கட் நாகராஜின் பதிவில் படித்தேன் மனிதரில் இருக்கும் நல்ல விஷயங்களை விட்டு குறைகளையே ஏன் சிந்திக்க வேண்டும் என்று. இருந்தாலும் விருப்போ வெறுப்போ இல்லாமல் மனதில் பட்டதை எழுதி விட்டேன் கருத்துக்களில் மாற்றம் ஏதுமில்லை. 


        .
      

59 கருத்துகள்:

  1. அவரவருக்கு வேலைகள் நிறைய இருக்கலாம். இப்போதெல்லாம் நான் பதிவு எழுதுவதும் சரி, மற்றப்பதிவுகளுக்குப் போவதும் சரி குறைந்திருக்கிறது. முக்கியமாக விருந்தினர் வருகை தொடர்ந்து இருந்து வருகிறது. இப்போது தான் சில உறவினர்களை அனுப்பி வைத்தேன். அடுத்த வாரம் சிலர் வருகின்றனர். அப்போதெல்லாம் இணையத்தில் இருக்க இயலாது. இணையம் வந்தால் பழைய மடல்கள், தேங்கின பதிவுகள், வந்திருக்கும் பின்னூட்டங்களுக்கு பதில் போடுதல், குழும மடல்கள் பார்த்தல் என நேரம் போதாமல் போய் விடும். அப்படியும் நிறையப் பார்க்கவோ, படிக்கவோ முடியாமல் போகும். ஆகவே குறிப்பிட்ட காரணம் எவருக்கும் இருக்கும் சாத்தியம் இல்லை. அவரவர் வசதியைப் பொறுத்துத் தான் வருகின்றனர் என்பது என் தீர்மானமான முடிவு. என்னைப் பொறுத்தவரையிலும் பின்னூட்டங்களே இல்லைனாலும் கவலைப்படுவதில்லை. எப்போதும் வரும் சிலர் வரலை என்றாலும் ஓரிரு நாள் பார்ப்பேன்.பின்னரே அவர்களுக்கு ஏதோ வரமுடியா நிலை எனப் புரிந்து கொண்டு மடல் கொடுத்துக் கேட்பேன்.

    பதிலளிநீக்கு
  2. பொதுவாகப் பலரும் இணையத்தில் இருக்கும் நேரத்தில் முகநூலிலேயே அதிக நேரம் செலவு செய்கின்றனர். அப்படி அதில் ஈர்க்கும் விஷயம் ஏதும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. அய்யா! மனிதர்களை குறிப்பாக வலைப்பதிவர்களைப் பற்றி நன்றாகவே எடை போட்டு இருக்கிறீர்கள்.

    // எனக்குப் புரியாத விஷயங்களில் ஏன் பல பதிவர்கள் தங்கள் சுயத்தை வெளிப்படுத்தத் தயங்குகிறார்கள் என்பதும் ஒன்று. உண்மைப் பெயரை மறைத்து புனைப் பெயரிலும் புகைப்படங்களை வெளியிடத் தயங்குவதிலும் என்ன பலன் கிடைக்கிறது புரிவதில்லை. //

    எனக்கும் இதுதான் அய்யா சந்தேகம். நன்றாகவே எழுதுகிறார்கள். பின்னூட்டங்கள் தருகிறார்கள். ஆனால் அவர்கள் தளத்தில் சென்று பார்த்தோமானால் அவர்களைப் பற்றிய விவரம் எதுவும் இருப்பதில்லை. புரியாத புதிர். இதனாலேயே தன்விவரம் (PROFILE) முழுமையாக இல்லாதவர்களுடைய வலைத்தளத்தில் உறுப்பினராக யோசனை செய்ய வேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. நம் தளத்திற்கு வருகை தரும் நண்பர்களின் எண்ணிக்கைக்கும், கருத்துரைக்கும் பதிவர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் பெரியது ஐயா. ஐந்து சதவீதத்திற்கும் குறையான பதிவர்களே கருத்திடுகிறார்கள். மற்றவர் படிப்பதோடு சரி.
    சிலருடைய பதிவுகளில் நாம் எத்தனை முறை கருத்துக்களைப் பதிவு செய்தாலும், அவர்கள் நம் வலையின் பக்கம் வரவே மாட்டார்கள் .
    இப்படியும் பல பதிவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஒரு வேளை நாம் எழுதும் எழுத்தின் கருத்திற்கு , மாற்று கருத்து கொண்டவர்களாக கூட இருக்கலாம்.

    தாங்கள் சொல்வது போல் வலையில் அறிமுகம் அதிகம், நட்பு குறைவு என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துதான் ஐயா.
    வலையில் இருந்த பிரபலங்கள் பலரும் முக நூல் பக்கம் சென்று விட்டதும் உண்மை.
    நம் வலையினைத் தேடி வரும் அன்பர்களுக்காக, நாம் எழுதுவோம். நம் மன திருப்திக்காக நாம் எழுதுவோம்.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  5. ஒரு ஆறு வருடங்கள் முன்னால நான் ஒரு பதிவு எழுதினேன்..

    ***யாருக்காக எழுதுறீங்க? ஊருக்காகவா? உங்களுக்காகவா?***



    நமக்கு பேச்சு சுதந்திரம் கிடைத்துவிட்டது!

    எழுத்துச்சுதந்திரம் கிடைத்துவிட்டது!

    நாமும் ஒரு வலைபூ ஆரம்பித்து எழுதுறோம்.

    தமிழ்மணத்தில் இணைந்தாகிவிட்டது!



    இனிமேல் நம் இதயத்திலிருந்து வரும் உணவுப்பூர்வமான கருத்துக்களை சொல்ல ஒண்ணும் தெரியாத, அரசியல் செய்யும் மட்டறுத்துனர்களை ஜால்ரா அடிக்க வேண்டியதில்லை! நம்ம கருத்தை நாகரீகமாகச் சொல்ல இன்னொருவர் கால் பிடிக்க வேண்டியதில்லை! இதுவல்லவா எழுத்துச்சுதந்திரம்! இதுவல்லவா சுதந்திரம்!

    சரி, பதிவுலகில் நம் கருத்துக்களை சொல்கிறோம், விவாதிக்கிறோம், வாதிடுகிறோம், சில சமயம் உளறுகிறோம்! நேரில்சொல்ல முடியாத, சரியாப்புரியாத விவகாரமான விசயங்களை, கற்பனை கதைகள் மூலம் பல பாத்திரங்கள் மூலமும் சொல்கிறோம். நம் உணர்வுகளை கருத்துக்களை கற்பனைபாத்திரங்களாக வந்து சொல்கிறோம் அல்லது சொல்ல முயற்சிக்கிறோம்.

    பிடிக்காத கருத்தைப்பார்த்து நம் எரிச்சலை பின்னூட்டங்களில் காட்டுகிறோம், நல்லவைகளையும் ரசித்ததையும் பாராட்டுகிறோம், சண்டை போடுகிறோம், ஊருக்கு உபதேசம் செய்கிறோம்!
    ஒவ்வொரு நேரம் தவறான கருத்தை சரி என்று நினைத்துக்கொண்டு சொல்கிறோம், பிறகு நம்மை சரி செய்து கொள்கிறோம். கற்றுக்கொள்கிறோம்!

    வதந்திகளை பரப்புகிறோம், விஞ்ஞானத்தை ஒழுங்காக புகட்ட முயற்சிக்கிறோம், மதத்தை, கடவுளைப் பற்றி பேசுகிறோம்.

    கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை, ஒரு நடிகரை தெய்வம்போல பூஜிக்கும் ரசிகர்களை புண்படுத்துகிறோம். பொய் சொல்லுபவர்களை, ஜாதி வெறியர்களை,ஊரை ஏமாற்றும் வேஷதாரிகளை பார்த்து எரிச்சலடைந்து நம் பதிவுகளில் திட்டுகிறோம்.

    ஒவ்வொரு நடிகரையும், அரசியல் வாதிகளையும் கேலி செய்வதே தொழிலாகக் கொண்ட விமர்சகர்களை விமர்சிக்கிறோம். கலாச்சாரத்தை சீரழிக்கும் சில அரைவேக்காடுகளை விமர்சிக்கிறோம்!

    இதெல்லாம் செய்யும்போது பல எதிரிகளை சம்பாதிக்கிறோம், நம் எழுத்தைபார்த்தாலே -ve மார்க் கொடுக்க ஒரு சிலரை தூண்டுகிறோம். பல எழுத்துழக அரசியல்வாதிகளை பார்க்கிறோம்.

    இதெல்லாம் யாருக்காக செய்கிறோம்?

    உனக்காகவா இல்லை ஊருக்காகவா, வருண்? என்ற கேள்வி என்னையே நான் கேட்பதுண்டு.

    அதற்கு பதில் என்னவருமென்றால், நான் எழுதுவது முதலில் எனக்காகத்தான்! என் மன ஆறுதலுக்கு! என் ஆதங்கத்தை தெரிவிக்க! என் அறியாமையைப் போக்க!///

    This is what I wrote, Sir! :)

    பதிலளிநீக்கு
  6. தளத்தைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கைக்கும் பின்னூட்டக் கணக்குக்கும் சம்பந்தமிருக்காது. அனைவரும் நம் பதிவைப் படிப்பார்கள் என்பதும் நிச்சயமில்லை.

    வெளி உலகில் முகம் காட்டி பழகுபவர்களிலேயே உண்மையும் உண்டு, பொய்யும் உண்டு. முகமறியா, உண்மையான குணங்களை அறிய முடியாத, எழுத்துகளால் மட்டுமே அறிந்த நட்புகளில் எதையும் எதிர்பார்க்காமல் பழகுவதே நல்லது. பிராப்தம் இருந்தால் ஆயிரம் அறிமுகங்களில் ஐந்து நெருங்கிய நட்பு உருவாகலாம்.

    முகம் காட்டாமல் எழுதுபவர்களைக் குற்றம் கண்டு பயனென்ன? எழுத்துகளோ கருத்துகளோ தவறாயிருந்தால் சொல்லலாம். நமக்குப் பிடிக்காமல் விட்டால் சத்தமில்லாமல் படிக்காமலும் இருந்து விடலாம்.

    :))))))

    பதிலளிநீக்கு
  7. தளத்தைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கைக்கும் பின்னூட்டக் கணக்குக்கும் சம்பந்தமிருக்காது. அனைவரும் நம் பதிவைப் படிப்பார்கள் என்பதும் நிச்சயமில்லை.

    வெளி உலகில் முகம் காட்டி பழகுபவர்களிலேயே உண்மையும் உண்டு, பொய்யும் உண்டு. முகமறியா, உண்மையான குணங்களை அறிய முடியாத, எழுத்துகளால் மட்டுமே அறிந்த நட்புகளில் எதையும் எதிர்பார்க்காமல் பழகுவதே நல்லது. பிராப்தம் இருந்தால் ஆயிரம் அறிமுகங்களில் ஐந்து நெருங்கிய நட்பு உருவாகலாம்.

    முகம் காட்டாமல் எழுதுபவர்களைக் குற்றம் கண்டு பயனென்ன? எழுத்துகளோ கருத்துகளோ தவறாயிருந்தால் சொல்லலாம். நமக்குப் பிடிக்காமல் விட்டால் சத்தமில்லாமல் படிக்காமலும் இருந்து விடலாம்.

    :))))))

    பதிலளிநீக்கு
  8. நானும் உங்களைப் போலத்தான் ...பதிவுகள் அனைத்தையும் ,அருமை ,பெருமை என்று ஒற்றைச் சொல்லிலோ ,என் மறுமொழியில் 'நன்றி 'ஒரே சொல்லிலோ சொல்வதில்லை:)

    பதிலளிநீக்கு
  9. அன்பின் பாலா சார்

    நானும் தொடர்ந்து எந்தப் பதிவையும் படிப்பதில்லை. எங்கள் ப்லாக் பக்கம் போனால் நிறைய ப்லாகுகளைப் பார்க்கலாம் என்று போவேன்.

    நேரமின்மையே முழுமையாகப் படிக்கவும், பின்னூட்டமிடவும் முடியாமைக்குக் காரணம்

    மேலோட்டமாகப் படித்து அருமை சிறப்பு என்று சொல்லிச் செல்வதே எனது பணியும் ஆகிவிட்டது. அதுவும் வாரம் ஒரு முறை.

    பொதுவா காண்ட்ரவர்ஷியல் கருத்துகள் எந்த வலைப்பதிவிலும் ஏற்பட்டதில்லை.

    உங்களுக்குப் பின்னூட்டமிட்டிருக்கும் அனைவரும் எனக்கும் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள். நான் அவர்கள் வலைத்தளத்துக்கு எப்போதோ போவதுண்டு. அது தவறுதான். ஹ்ம்ம் என்ன செய்வது.

    சில நேரம் மூட் அவுட். சில நேரம் பொங்கும் உற்சாகம்,முகநூல் அரட்டை, ஊருக்குப் போதல், உறவினர் வருகை, 5 ப்லாகுகளில் போஸ்ட் போட்டு அதன் பின்னூட்டங்களுக்கு வலைப்பதிவர் ஒற்றுமையைப் போடுவது என்று போய்க்கொண்டிருக்கிறது.

    கரந்தை ஜெயகுமார், ஸ்ரீராம், கீதா, வருண், சொல்லி இருப்பதுதான் என் கருத்தும். மேலும் கணவர் இருக்கும் சமயம் ப்லாகிலோ ஃபேஸ்புக்கிலோ இருக்க முடியாது. ஜி மெயிலே பார்க்க நேரம் கிடைகாது. அப்படி உக்கார்ந்தாலும் அவரும் என் தந்தை தாய்வழி, மாமியார் வழி உறவுக்கூட்டமெல்லாம் இதேதான் எனக்கு வேலை என்பது போல் கோபமாகிறார்கள். அதிலிருந்தும் தப்பி நான் ப்லாக் போஸ்டுகளைப் போட்டுக்கொண்டே இருக்கிறேன்.

    முடியும்வரை ப்லாக் போஸ்ட் போடுவதைத்தான் கவனத்தில் வைக்கிறேன். எனக்கு வரும் பின்னூட்டங்களையோ நான் போடும் பின்னூட்டங்களையோ எதிர்பார்க்கும்/யோசிக்கும் நிலைமையில் இல்லை.

    பதிலளிநீக்கு
  10. மிகவும் மோசமாக இருந்தால் ஒழிய நான் கமெண்ட்ஸ் மாடரேஷன் செய்வதில்லை.

    பதிலளிநீக்கு

  11. ஐயா, மனதில் உள்ள அனைத்தையும் மடைதிறந்த வெள்ளம் போல் கொட்டி விட்டீர்கள் பலரும் நமது பதிவை மற்றவர்கள் படிக்க வேண்டும் கருத்துரை இடவேண்டுமென நினைக்கிறார்கள் அதே நேரம் நாமலும் அவரது பதிவுகளை படித்து கருத்துரை இடவேண்டும் என்ற சிந்தை பலருக்கும் வருவதில்லை இது ஒரு வகையான கர்வம் என்றே எனக்கு படுகிறது இதைத்தான் என்குரலில் சொல்லி இருந்தேன்

    //முன் கை நீண்டால் முழங்கை நீளும்// இது எல்லோருக்கும் தெரிகிறது ஆனால் இதன் அர்த்தம் எல்லோருக்குமே விளக்குகிறதா ? 80 சந்தேகமே என்று... வருவோர் வரட்டும். வராதவர் அவர் போக்கில் போகட்டும் என் பணி எழுதிக்கிடப்பதே என்று நானும் எழுதுகிறேன் ஐயா நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அன்பு தந்தைக்கு வணக்கம். நீங்கள் போனில் தொடர்பு கொள்ளலாம். இன்று சோசியல் மீடியாக்கள் பல வந்துவிட்டன. மேலும் எழுதி வந்தவர்கள் பலரும் எழுத்தாளர்களாகி விட்டார்கள். ஆகவே, பார்வையிட்டாலும் கமண்டு போடுவதற்கு நேரமில்லாமல் இருக்கலாம். உங்களை முதன்முதலில் சந்தித்த நிகழ்வு இன்னும் அப்படியே மனதில் பதிந்து இருக்கின்றது. விரைவில் பெங்களூரில் சந்திக்கின்றேன். போனில் தொடர்பு கொள்வோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அன்பு தந்தைக்கு வணக்கம். நீங்கள் போனில் தொடர்பு கொள்ளலாம். இன்று சோசியல் மீடியாக்கள் பல வந்துவிட்டன. மேலும் எழுதி வந்தவர்கள் பலரும் எழுத்தாளர்களாகி விட்டார்கள். ஆகவே, பார்வையிட்டாலும் கமண்டு போடுவதற்கு நேரமில்லாமல் இருக்கலாம். உங்களை முதன்முதலில் சந்தித்த நிகழ்வு இன்னும் அப்படியே மனதில் பதிந்து இருக்கின்றது. விரைவில் பெங்களூரில் சந்திக்கின்றேன். போனில் தொடர்பு கொள்வோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. Dear GMB,

    My computer is under service. I will come later and give an analysis. Your ideas are very true.

    P.Kandaswamy

    பதிலளிநீக்கு
  15. உங்களின் அனுபவத்தால் கண்டிப்பாக அனுமானிக்க முடியும் ஐயா... அதில் சந்தேகமே இல்லை...

    சமீபத்திய எனது பதிவின் உங்களது பின்னூட்டத்தை ரசித்தேன் என்பதை விட, நீங்கள் சொன்னது தான் சரி... அதை காட்சி வடிவில் தர முடியாது என்பதால் அவ்வாறு செய்தேன்...

    மின்னஞ்சல் + கைபேசி எண் உட்பட சுயத்தை (Profile) ஏன் மறைக்கிறார்கள் என்று புரியவில்லை... தன் மேலேயே பயம்...?

    பதிலளிநீக்கு

  16. @ கீதா சாம்பசிவம்
    பின்னூட்டங்களின் எண்ணிக்கைக் குறைவுக்கு நீங்கள் கூறும் காரணங்களை ஏற்கிறேன் ஆனால் என் பதிவுக்குப்பின்னூட்டம் நீ எழுதினால் நான் உன் பதிவுக்கு என்று கூறாமலே விளங்குகிறது என்பதும் சொல்ல வேண்டும்

    பதிலளிநீக்கு

  17. @ கீதா சாம்பசிவம்
    முக நூலில் ஈர்க்கும் விஷயம் எனக்கும் புரியவில்லை வருகைக்கு நன்றி மேடம்

    பதிலளிநீக்கு

  18. @ தி தமிழ் இளங்கோ
    எந்த சுய விவரமும் தராமல் மறைப்பவர்கள் சீரியஸ் எழுத்தாளர்களாக இருக்கமுடியாது என்றே நினைக்கிறேன் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்

    பதிலளிநீக்கு

  19. @ கரந்தை ஜெயக் குமார்
    ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் சில பிரபலங்கள் நாம் அவர்கள் தளத்துக்குச் சென்று பின்னூட்டமிட வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களை நாம் வருந்தி அழைத்தாலும் திரும்பியும் பார்க்க மாட்டேன் என்கிறார்கள் இதை அகந்தை என்றே நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  20. //ஆனால் என் பதிவுக்குப்பின்னூட்டம் நீ எழுதினால் நான் உன் பதிவுக்கு என்று கூறாமலே விளங்குகிறது என்பதும் சொல்ல வேண்டும்//

    இந்த மாதிரி எண்ணிக் கொண்டு நான் எந்தப் பதிவுக்கும் செல்வதில்லை. பார்க்கப் போனால் என்பதிவுக்குத் தவறாமல் வருகை தருபவர்களில் டிடி என்னும் திண்டுக்கல் தனபாலனும், ஶ்ரீராமும் இருக்கின்றனர். டிடியோட பதிவுக்கு நான் எப்போதாவது தான் போவேன். அதற்காக அவர் வராமலே இருந்ததில்லை. தவிர்க்க முடியாமல் போனால் தான் வர மாட்டார். ஶ்ரீராமும் அப்படியே. "எங்கள்" பதிவுக்கு நான் போனாலும் போகாட்டியும் அவர் கட்டாயமாய் வந்துடுவார். என் பதிவுக்குத் தவறாமல் வரும் கோமதி அரசுவின் பதிவுக்கும் எப்போதாவது தான் போவேன். அதே போல் தான் எந்தப்பதிவுக்கும் எனக்கு நேரம் இருக்கையில் தான் செல்கிறேன். பலரோட பதிவுக்கும் நான் போயும் அவர்கள் என் பதிவுக்கு வராமல் இருந்ததும் உண்டு. அது அவர்கள் சௌகரியத்தைப் பொறுத்தது என எண்ணுவேன். அவ்வளவு தான். இந்தப் பண்டமாற்று வேலை எனக்கு என்னமோ எப்போவுமே பிடிக்கிறதில்லை. :))))

    பதிலளிநீக்கு
  21. எனக்குத் தனிமடலில் அழைப்பவர்கள் பதிவுக்கும் எப்போதாவது தான் போக முடிகிறது. தவிர்க்க முடியாமல் தாமதம் ஏற்படும். ஆனால் என்னோட டாஷ்போர்டில் பார்வையாளர்கள் எண்ணிக்கை என்னமோ அதிகமா இருக்கும். ஆனால் அத்தனை பேரும் வந்து கருத்துச் சொல்வதில்லை. :)

    பதிலளிநீக்கு

  22. @ வருண்
    /அதற்கு பதில் என்னவருமென்றால், நான் எழுதுவது முதலில் எனக்காகத்தான்! என் மன ஆறுதலுக்கு! என் ஆதங்கத்தை தெரிவிக்க! என் அறியாமையைப் போக்க!///நாம் எழுதுவ்து நமக்காகத்தான் என்றாலும் நம் ஆதங்கத்தையும் தெரிவிக்க விரும்புகிறோம் யாரிடம் வருண்? நம்மைப் போல் எழுதுபவரிடம் தானே. அதில் பலன் கிடைக்க வில்லை என்றால் ஆதங்கம் கூடுமல்லவா. எழுதுவதற்குப் பின்னூட்டம் ஒரு தேவை அதுவே ஒரு டானிக் போல. எழுதுவதில் உடன்பாடு இல்லைஎன்றால் தெரிவிக்க வேண்டும் அது ஒரு feed back வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  23. @ ஸ்ரீராம்
    நாம் பதிவுகளுக்குத் தொடர்பாளராக இருப்பது பதிவுகள் வெளியிட்டால் தெரியும் என்பதே முதல் காரணம் பின்னூட்டமிடுபவர்கள் மட்டுமல்ல பதிவை வாசிப்பவர்களும் கூட தெரியவரும் அல்லவா. நான் தொடரும் பதிவுகளுக்கெல்லாம் பின்னூட்ட மிடுவதில்லை ஆனால் வாசித்து விடுவேன் எனக்குத் தெரியாத செய்திகள் இருந்தால் தெரிந்து கொள்வேன் ஒரே மாதிரிப் பதிவானால் பின்னூட்டமெழுத எதுவும் இருக்காது. சிலர் மிகவும் abstract ஆக எழுதுகிறார்கள் அதைச் சொல்லப் போய் வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவமும் உண்டு. இன்னொன்றும் சொல்ல வேண்டும் நான் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன் என்னைப் பற்றி இன்னொருவர் பதிவில் சம்பந்தம் இல்லாதபின்னூட்டமாக குறை (பெயர் குறிப்பிடாமல்) சொல்லப் பட்டதும் தெரியும் அது என்னைப் பற்றித்தான் என்று தெரிந்தாலும் அதை சட்டை செய்ததில்லை. நீதான் அது என்று உனக்கெப்படித் தெரியும் என்று கேட்கலாம் தெரிகிறது அவ்வளவே வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு

  24. @ பகவான் ஜி
    ஆனால் பகவான் ஜி உங்கள் நகைச்சுவைகளுக்கு அநேக தடவை ஒரே சொல்லில்பாராட்டத்தான் முடிகிறது.அதற்கு மறுமொழியும் அப்படித்தான் இருக்க முடியும் வருகைக்கு நன்றி ஜீ

    பதிலளிநீக்கு
  25. யா நாம் பதிவில் எழுதுவது நமது திருப்திக்காகவே என நினைப்பவன் நான். நமது பதிவுகளை படிப்பவர்கள் அனைவரும் பின்னூட்டம் இடாமல் கூட போகலாம். பின்னூட்டம் இடுபவர்கள் புகழ்ந்தும் எழுதலாம்.சில சமயம் தாக்கியும் எழுதலாம். எனவே அதைப்பற்றி கவலைப்படாமல் நம்மால் முடியும்போது பதிவிடுவோம்.

    என்னைப் பொறுத்தவரை பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து எழுதும்போது,
    மூளையில் உள்ள திசுக்கள் சுறுசுறுப்பூட்ட(Activate) படுவதால்அவைகள் அழிவது தடுக்கப்படுகிறது என்பதும் அதனால் முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு தடுக்கப்படுகிறது என்பதால் எழுதுகிறேன் என்று நினைத்துப் பார்ப்பது ஏன்?
    என்ற தலைப்பில் எழுதிய பதிவில் சொல்லியிருந்தேன்.

    பதிலளிநீக்கு

  26. @ தேனம்மை லக்ஷ்மணன்
    மேடம் உங்கள் நிலையே வேறு. பத்திரிக்கைப்பிரபலம் நீங்கள் காசுகொடுத்து வாங்கி உங்கள் எழுத்துக்கள் படிக்கப்படுகின்றன, எல்லோர் நிலையும் அதுவல்லவே. நான் வலைப் பதிவில் எழுத இரண்டு காரணங்கள். என் ஆதங்கங்களையும் எண்ணங்களையும் கடத்தவும் பொழுதை ஒரு உபயோககரமாகப் போக்கவும்தான் அது ஒரு நிறைவைத் தருகிறது. இருந்தாலும் இது போன்ற எண்ணங்க்ங்களும் எழுகின்றன, அவையும் கடத்தப்படுகின்றன.வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  27. @ தேனம்மை லக்ஷ்மணன்
    கமெண்ட் மாடரேஷன் செய்யப்படுவதால் மாறுபட்டக் கருத்துக்களை பொதுவாக யாரும் சொல்வதில்லை. மீண்டும் நன்றி

    பதிலளிநீக்கு

  28. @ கில்லர்ஜி
    யாருடைய தளத்தைத் தொடர நினைக்கிறேனோ அவர்கள் தளத்துக்கு என்னை தொடர்பாளனாக ஆக்கிவிடுவேன் பெரும்பாலும் அவர்கள் பதிவுகளுக்கெல்லாம் நான் சென்று வாசித்துக் கருத்திடுவதும் உண்டு. வருகைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு

  29. @ மதுரை சரவணன்
    என் பதிவில் வலை நட்புகள் வெறும் அறிமுகங்களே என்று எழுதி இருக்கும் போது என்னை தந்தை என்னும் உறவுடன் அழைத்தது நெகிழ வைக்கிறது சரவணன் எனக்கும் பெங்களூருவில் உங்களைச் சந்தித்து என் வீட்டுக்குக் கூட்டி வந்தது எல்லாம் பசுமையாக இருக்கிறதுஅவசியம் பெங்களூரு வாருங்கள் என் வீட்டிலேயே தங்கலாம் நாள் குறித்து மின் அஞ்சல் அனுப்பவும் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  30. @ டாக்டர் கந்தசாமி
    கணினியின் பழுது நீக்கி வாருங்கள் ஐயா. இந்த நிலையிலும் பின்னூட்டமிட்டதற்கு நன்றி

    பதிலளிநீக்கு

  31. @ திண்டுக்கல் தனபாலன்
    என் பின்னூட்டம் குறித்து எழுதியதற்கு நன்றி டிடி. என் எழுத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை என்று பலருக்கும் தெரியும்

    பதிலளிநீக்கு

  32. @ கீதா சாம்பசிவம்
    நான் யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை மேடம் இத்தனை நெருக்கடியிலும் நீங்கள் தொடர்ந்து எழுதியும் பின்னூட்டமிட்டும் வருவதை நான் சிலாகிக்கிறேன் பின் தொடர்பவர் எண்ணிக்கையும் வாசகர்களின் எண்ணிக்கையும் மாட்ச் ஆகிறதில்லை என் டாஷ் போர்டில்

    பதிலளிநீக்கு
  33. சில பெண் பதிவர்கள் இங்கு தெரிவித்துள்ளதுபோல, வீட்டின் சூழ்நிலையே எவ்வளவுநேரம் நம்மால் வலைப்பதிவுகளுக்குச் செலவழிக்க முடியும் என்பதை நிர்ணயிக்கிறது. அலுவலகம் சென்று பணியாற்றுபவர்களுக்கு சில வசதிகள் உண்டு. மேசை மீதே கணினி இருக்கும், வேலைகளுக்கு இடையிடையே பதிவுகளுக்கும் நேரம் செலவிடலாம். ஆனால், வீட்டில், ஒய்வுபெற்றோ, பெறாமலோ, இருக்கின்றவர்கள், பதிவுகளுக்கென்று நேரம் கண்டுபிடிப்பது கடினமாகவே உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை சரியில்லை என்றால் இன்னும் கடினமான சூழ்நிலை. குழந்தைகள் இருந்தால் அவர்களுடனும் ஒரே கணினியைத் தானே பங்குபோட்டாகவேண்டும்! அதனால், பதிவுகளைப் படிக்க நேரம் இருந்தாலும், அது பற்றி சிந்தித்து, கனமான பின்னூட்டம் இடுவது பல நேரங்களில் தேவையற்ற ஒன்றாகவே தோன்றுகிறது. முதிர்ச்சியுற்ற பதிவர்கள் இதைப் புரிந்துகொள்வார்கள். அதே சமயம், சிறப்பான தலைப்புகளிலோ அல்லது ஒருதலைப் பட்சமாக எழுதப்பட்டிருந்தாலோ, நிச்சயமாக நான் பின்னூட்டம் இடுவதைக் கைவிடுவதில்லை. இன்னொரு விஷயம், அடிக்கடி கூகுளே தொழில்நுட்ப பிரச்னைகலை உண்டக்கிவிடுவதாலும் பின்னூட்டம் இடமுடியாமல் போகிறது.

    Moral of the story: எழுதுவது மட்டுமே நம் கடமை. பின்னூட்டத்தை எதிர்பார்க்கவேண்டியதில்லை!

    பதிலளிநீக்கு

  34. @ செல்லப்பா யக்ஞசாமி
    /அதனால், பதிவுகளைப் படிக்க நேரம் இருந்தாலும், அது பற்றி சிந்தித்து, கனமான பின்னூட்டம் இடுவது பல நேரங்களில் தேவையற்ற ஒன்றாகவே தோன்றுகிறது. முதிர்ச்சியுற்ற பதிவர்கள் இதைப் புரிந்து கொள்வார்கள்/ என்னசெய்வது என்னைப்போல் முதிர்ச்சி அற்ற பதிவர்களும் இருக்கிறார்களே. கூகிளாரின் தொழில் நுட்பப் பிரச்சனையையும் மீறி கருத்திட்டதற்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  35. எனது தளத்திற்கு வந்து கருத்துரை கூறுபவர்களின் பதிவுகளில் - எனது கருத்தைப் பதிவு செய்ய (99%) மறப்பதேயில்லை..

    படைப்பாளியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே எனது ஆவல்..

    நேரில் ஒரு படைப்பாளியை அன்புடன் அழைத்தேன் - என் தளத்திற்கு வருக.. என்று!..

    பிறகு தான் புரிந்து கொண்டேன் மாற்றுக் கருத்து உடையவர்கள் - என்பது..

    நான் கொண்ட கருத்து - மாற்றாக இருக்கலாம்..

    கை கொண்ட எழுத்து மாற்றாக இருக்குமோ!..

    உபாசனையில் விடை கிடைக்கின்றது..

    நானே வருகின்றேன்.. அதற்குப் பிறகு என்ன வேண்டும்!..

    பதிலளிநீக்கு
  36. பல சமயங்களில் பதிவுகள் படிக்க முடிவதில்லை. கிடைக்கும் நேரத்தில் சில பதிவுகளைப் படித்து அதற்கு கருத்திடாமல் செல்வதும் நேர்கிறது.

    வலையுலகத்தில் நீங்கள் சொல்வது போல அறிமுகங்கள் தான் அதிகம்.... அந்த அறிமுகங்களில் சிலர் நட்பாக மாறிவிடுவதும் நடக்கிறது.

    முடிந்த வரை எழுதிக்கொண்டே இருப்போம்.

    எனது பதிவு பற்றியும் இங்கே சொல்லி இருப்பதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  37. @ துரை செல்வராஜு
    ஒத்த கருத்துக்களைக்கேட்பதில் இருக்கும் த்ரில்லைவிட மனம் புண்படுத்தாத மாற்றுக் கருத்துக்கள் வெளியிடுவதில் தவறேதும் இருப்பதாகத் தோன்றவில்லை. என் பதிவுக்கு வந்தால் உன் பதிவுக்கு என்பது பண்டமாற்றம் போல் இல்லையாவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  38. @ சில வலையுலக அறிமுகங்கள் நட்பாக மாறி உறவு முறையில் அழைக்கப் படுவதையும் இப்பதிவின் பின்னூட்டத்தில் கண்டேன் இதில் நான் எழுதி இருப்பது என் உரத்த சிந்தனைகளே வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  39. தாமதமாக வந்துவிட்டேன் போலிருக்குதே?

    இப்பவும் அதே கேள்விதான் சார். அடுத்தவங்க மனதில் இருப்பது நமக்கு எப்படித் தெரியும்?

    அனுமானமெல்லாம் ஓரளவுக்குத் தான்.

    judgmentalஆக இருக்கக் கூடாது என்று எண்ணுபவன் நான். எனக்கே நீங்கள் கொஞ்சம் over react செய்கிறீர்களோ என்று தோன்றுகிறது :-)

    இது வெறும் பதிவு தானே சார்? ஒரு சோர்வைப் போக்கிக் கொள்ள இன்னொரு சோர்வை எதற்கு உருவாக்கிக் கொள்ள வேண்டும்?

    எழுதுவது நம் கருத்தை முன் வைக்க அவ்வளவுதான். அது இன்ன வாசகர்களை இன்ன விதத்தில் சென்றடையும் அல்லது சென்றடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் சிக்கல். அதற்குப் பிறகு குழி தோண்டிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  40. சமீபத்தில் பெங்களூர் வந்தும் யாரையும் சந்திக்க முடியாமல் போனது சார் :-) தினம் அந்தக் கூட்டத்திலும் நெரிசலிலும் ஓட்டத்திலும் சிக்கித் தவிக்கும் பதிவர்களுக்கு பதிவு எழுத நேரம் கிடைக்கிறதே என்று ஆச்சரியப்படாதே நாளே இல்லை. இதில் ஒருவரை ஒருவர் எப்படிச் சந்திப்பது? whitfieldல் ஒரு கிலோமீட்டர் பயணிக்க ஒரு மணி நேரம் ஆகிறது. இதில் எங்கே யாரைச் சந்தித்து என்ன பேசுவது? செல் போன் கூட சதி செய்கிறது. டாடா டோகோமோ போல ஒரு கொடுமையான கேரியர் கிடையாது. ஒரு கால் கூட சரியாகப் போகவில்லை. இந்தியாவில் இத்தனை சிக்கல்களுக்கு இடையே மாதம் ஒன்றிரண்டு பதிவுகள் எழுதும் அத்தனை பேரையும் வணங்கவே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  41. ஒரு experiment.
    பின்னூட்ட வசதியை எடுத்துவிட்டு ஒரு மாதம் பதிவெழுதிப் பாருங்களேன்?

    பதிலளிநீக்கு
  42. பதிவுலக நட்பு மற்றும் பின்னூட்டங்கள் பற்றிய தங்கள் கருத்தும் தொடர்ந்ந்து பின்னூட்டங்களாய் வந்த கருத்துகளும் வாசித்தேன்.

    எனக்கு என்னைப் பொறுத்தவரை பின்னூட்டங்கள் பற்றிய சிந்தனை இல்லாமல்தான் எழுதுகிறேன். அருமை பாராட்டுகள் போன்ற டெம்ப்ளேட் கமெண்ட்டுகளை விடவும் பதிவை விமர்சித்து வெளிப்படும் ஒன்றிரண்டு வரிகள் எழுத்தின் தரத்தை மேம்படுத்திக்கொள்ள உதவுகின்றன என்பது உண்மைதான் என்றாலும் நமக்கு வரும் அத்தனைப் பின்னூட்டங்களும் நம்முடைய பதிவுக்கு உதவும் வகையில் குறை நிறைகள் பற்றிய ஒளிவுமறைவற்ற விமர்சனங்களாக வாரா என்பதுதான் யதார்த்தம்

    சொந்த வாழ்க்கையிலேயே ஒருவரை ஒருவர் அவரவர் குணங்களுக்கேற்ப அனுசரித்துப் போனால்தான் சுமுகமான உறவைப் பேணமுடியும் என்ற நிலையில் கண்காணாத முகம்பார்த்திராத வெறும் எழுத்துகளின் மூலம் மட்டுமே அறிந்த பதிவர்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்து பிறர் மனம் புண்படாத வகையில் தங்கள் கருத்துகளைக் கூறுவதில் தவறொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

    சில பதிவர்களுடைய கருத்துகளோ பதிவுகளோ எனக்குப் பிடிக்கவில்லையெனில் நான் அதை வாசித்துவிட்டு அமைதியாகச் சென்றுவிடுவேன். விமர்சிப்பதால் விவாதங்கள் நீளலாம். அந்த விவாதத்துக்கு என் நேரம் சரிப்பட்டுவருமா என்பதையும் அந்த விவாதத்தால் எனக்கென்ன பயன் என்றும் என்னைப் போலவே யோசிக்கும் பலரும் அப்படி ஒதுங்கிப்போவது வழக்கமென்றே நினைக்கிறேன். சிலருடைய ஆழ்மனத்தில் இருக்கும் நம்பிக்கைகளை எப்படிப்பட விவாதமும் கலைத்துவிடமுடியாது. அப்படியான சூழலில் ஏற்படும் மனக்கசப்புகளையும் தர்மசங்கடங்களையும் தவிர்ப்பதுதான் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது.

    என் பதிவுக்குப் பின்னூட்டமிடாவிட்டாலும் அப்பதிவை வாசிக்கும் பலருக்கும் அதன் சாராம்சம் போய்ச்சேருகிறது என்றால் அதுவே எனக்கு நிறைவும் நிம்மதியும். அப்படியொரு கண்ணோட்டத்துடன்தான் பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுவரை யாருக்கும் மொய் வைப்பதுபோல் பதிலுக்குப் பதில் பின்னூட்டங்கள் இட்டதில்லை. என் பதிவுக்கு தொடர்ந்து வரும பலருக்கும் கூட நான் எப்போதாவதுதான் பின்னூட்டமிடுகிறேன். சிலர் என் பதிவுக்கு வராவிட்டாலும் அவர்களுடைய நல்ல பதிவுகளை வாசிக்கநேர்ந்தால் பின்னூட்டமிடுகிறேன்.

    வலையைத் திறக்கும் நேரம் முன்னிற்கும் பதிவுகளுக்கு உடனடியாக பின்னூட்டம் கிடைத்துவிடும். சில நல்ல பதிவுகளை வாசித்துவிட்டு நேரமின்மையால் பிறகு பின்னூட்டம் போடலாம் என்று நினைத்து மறந்துபோயுமிருக்கிறேன். என் பதிவுகளுக்குப் பின்னூட்டங்களே வராவிட்டாலும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன் என்றே எனக்குத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

  43. @ அப்பாதுரை
    ஆடிக்கு ஒரு முறை வரும்போது லேட் ஆனால்தான் என்ன.? நான் ஜட்ஜ்மெண்டலாக எதுவும் எழுதவில்லை. இது ஒரு உரத்த சிந்தனைதான் இருந்தாலும் நம் பதிவை பலரும் படிக்க வேண்டும் என்று நினைப்பது தவறாகப் படவில்லை. எல்லாப் அதிவர்களுக்கும் இருக்கும் ஆசைதான் இல்லை என்று சொன்னால் அது உண்மையை மறைப்பது போலாகும்வாசகர்களை ஈர்ப்பதற்காக நான் எந்த யுத்தியும்கையாள்வதில்லை. வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  44. @ அப்பாதுரை
    பெங்களூரு வந்திருந்த செய்தி தெரிந்திருந்தால் நானாவது எப்படியாவது சந்த்தித்து இருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது வந்தும் சந்திக்க முடியாமல் போனது சற்று வருத்தமே அட் லீஸ்ட் வந்திருந்ததை தெரிவிக்கவாவது செய்தீர்களே நன்றி

    பதிலளிநீக்கு

  45. @ அப்பாதுரை
    பின்னூட்ட வசதியை எடுத்துவிட்டு மீண்டும் அதை வைத்துக்கொண்ட பதிவரையும் தெரியும் என்ன ஆனாலும் நான் எழுதுவது தொடரும் வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  46. @ கீத மஞ்சரி
    பின்னூட்டம் பற்றிய சிந்தனையே இல்லாமல்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னாலும் புகழாரமாக வரும் பின்னூட்டங்களை ரசிக்கவில்லை என்று சொல்ல முடியாது/ எந்த எதிர்மறைக் கருத்தையும் எழுதுபவரைத் தாக்காமல் எழுத்தை மனம் புண்படாதபடி விமரிசனம் செய்வது தவறாகாது அதைத்தான் சொன்னேன் எதிர்மறைக் கருத்துக்கே வழியில்லாமல் பதிவிடலும் ஒரு சாமர்த்தியமே. அதையே மொக்கை என்கிறேன் எழுதுபவருக்கும் வாசிப்பவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. பின்னூட்டங்களின் எண்ணிக்கையும் கூடும் குறையாது மனம் திறந்த கருத்துக்களை வெளியிட்டதற்கு நன்றி மேடம்

    பதிலளிநீக்கு
  47. நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் நடித்துக்கொண்டுதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். உள்ளும் புறமும் ஒன்றாக வாழ யாரால் முடியும் என்று சொல்ல முடியவில்லை.

    இதைப்பற்றி அதிகம் சிந்திப்பதால் இதன் அடிப்படைத் தேவையைப் புரிந்துகொண்டு நம் சிந்தனையைத் தெளிவு படுத்திக்கொள்ளலாம்.

    வாழ்க்கையில் சிந்தனைத் தெளிவு மிகவும் முக்கியம். தெளிவு இல்லாமல் சிந்தித்துக்கொண்டே போனால் வாழ்க்கை வீணாகிப் போய்விடும்.

    பதிலளிநீக்கு

  48. @ டாக்டர் கந்தசாமி
    வருகைக்கும் மேலான கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.கருத்துப்பகிர்வில் ஜாடை ஏதும்போடவில்லையே?

    பதிலளிநீக்கு
  49. ப்ரிய GMB சார்!

    மனதில் பட்டதை பட்டவர்த்தனமாய் சொல்பவர் நீங்கள். இந்தப்பதிவை நீங்கள் எழுதியிருப்பதே இதற்கு சான்று..பதிவர் பலர் மனதிலும் இந்த எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். அதை எழுதும் சிரத்தை உங்களுக்கு இருக்கிறது. என் பாராட்டுக்கள்.

    இந்த வலையுலக தொடர்புகள் வெறும் அறிமுகங்களே என்பதை நான் ஏற்கமாட்டேன். இந்த ஐந்து வருடங்களில் என்மீது அன்பு பாராட்டும் பல பதிவுலக நண்பர்களை ப் பெற்றது என் பாக்கியம் என்றே சொல்வேன். வலைப்பூவை விட்டுச் சென்ற சிலரும் அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் தொடர்பில் தான் இருக்கிறார்கள்.எனக்கு குறை ஏதும் இல்லை ஐயா! ஜூன் மாதம் நான் பெங்களூர் வரும் வாய்ப்பிருக்கிறது. உங்களை சந்திப்பதும் என் நிரலில் உண்டு.

    ஒரு ஆச்சர்யமான விஷயம் இங்கு பின்னூட்டமிட்ட அத்தனைப் பதிவர்களும் வெளியிட்ட முதிர்ச்சி தான். நான் புரிந்து கொண்டது:
    "எல்லாம் அப்படித்தான் இருக்கும்"

    நான் இட்ட பதிவுகளைவிட, பின்னூட்டங்களிலேதான் அதிகம் விவாதிருக்கிறேன். பல பொதுவேலைகளை இழுத்துபோட்டுக் கொள்ளும் போதும், மத்திம வயதுகாரர்ளுக்குரிய குடும்ப பொறுப்புகளுக்கும் ஒதுக்கின நேரம் போக வலைப்பதிவுகளுக்கு மிகக் குறைந்த நேரமே கிடைக்கிறது.

    நானும் அவ்வப்போது வலையில் காணாமல் போய் விட்டாலும், காதைத் திருகி அழைக்க ஒரு சிறு குழு உண்டு. அது அன்பினால் தானே? நட்பால்தானே?

    முன்பெல்லாம் பின்னூட்டங்கள் நூறைக் கடந்தால் தான் அடுத்தப் பதிவைப் போடுவேன் என்று என்னை கிண்டல் செய்யும் நண்பர்களும் உண்டு.. அதைத் தக்க வைத்துக் கொள்வது எளிதல்ல. நம் எழுத்தில் ஒரு ஈர்ப்பு உள்ளவர்கள் வருவார்கள் தானே?

    முகநூல் பல நல்ல பதிவர்களை விழுங்கி விட்டது. நீங்கள் குறையாய்ச் சொன்ன,"எனக்கு நீ போட்டால் உனக்கு நான் போடுவேன்" என்பது முகநூலுக்கே பொருந்தும். நாளெல்லாம் லைக் பண்ணி, வந்த லைக்குகளுக்கு கணக்கு போடும் நண்பர்களைப் பார்த்து சிரிப்புதான் வருகிறது. முக நூலில் சிலகாலம் இருந்தேன். பதிவுகள் ஏதும் அங்கு இடவில்லை. எது என் இடம் அல்ல என்று தெளிந்து, "வந்தால் வலை, இல்லையேல் இலை" என்று ஒதுங்கி விட்டேன்.

    வலைப்பூ நமக்காக... வலை சொந்தங்கள் நமக்காக. தேனம்மை அனுப்பிய மின்னஞ்சலுக்கு என் நன்றி. நாமே இதை போஷிக்கா விட்டால் வேறு யார் செய்வார்கள் ?
    கருத்துக்கள் பதிவின் வெளிப்பாட்டைப் பொறுத்தே இருக்கும். நல்ல எழுத்து காலம் கடந்தும் படிக்கப் படும்.

    உங்கள் மீது உள்ள அன்பினால் சொல்கிறேன்... எழுதிகிட்டே இருங்க.. அந்த எழுத்து பிறரை மேன்மைப் படுத்தட்டும்.. அது நம்மையும் மெருகேற்றுகிறது என்பது ஒரு கூடுதல் சௌகர்யம் தானே?

    'வந்ததே லேட்டு.. அதுல வளவளன்னு கருத்து வேறயா'ன்னு நினைக்காதீங்க. சொந்த வீட்டுலதான் இந்த உரிமை எடுத்துக் கொள்ள முடியும்..

    நல்ல தெளிவான கருத்துகள் இட்ட சகபதிவர்களுக்கு என் அன்பு.

    பதிலளிநீக்கு

  50. @ மோகன் ஜி
    லேட்டா வந்தாலும் லேட்டெஸ்டாக வந்திருக்கிறீர்கள் நன்றி. வலையுலக நட்புகள் அறிமுகங்களே என்னும் என் கருத்து மாறவில்லை. என் அனுபவம் அப்படிநான் வலையில் எழுதத் தொடங்கி ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் ஆகிறது . என் அடுத்த பதிவு அறு நூறாவதாக இருக்கும்வலையில் பின்னூட்டம் என்பது எழுதுபவனுக்கு டானிக் போல. என் ஆதங்கங்களை பதிவில் கூறி இருக்கிறேன் பதிவில் எதிர்மறைக் கருத்துக்களுக்கு இடமளிக்காத பதிவுகள் யாருக்கும் தொல்லைதராத பின்னூட்டங்களைப் பெற்றுத்தரும் பதிவுலகில் பல விதமான சிந்தனைகள் கொண்ட பதிவர்கள் இருக்கிறார்கள் எல்லோருக்கும் திருப்தி தரும் பதிவுகள் எழுதுவது சிரமம் மாறுபட்ட கருத்துக்கள் எழுதினால் ஒரு பின்னூட்டம் கன்ஸ்ட்ரக்டிவ் க்ரிடிசிசமாக இருக்கலாமே என்பதே என் கருத்து. ஒதுங்கிப் போதல் சரியாகத் தோன்றவில்லை. பல காரணங்களால் பதிவுப் பக்கமே வர முடியவில்லை என்பது வேறு விஷயம் பதிவைவிட பின்னூட்ட மறு மொழி நீளம் அதிகரிக்கிறது. வருகைக்கும் மேலான கருத்துப்பகிர்வுக்கும் நன்றி. ஜூன் மாதம் பெங்களூரு வரும் போது என்னுடன் ஒரு நாள் பொழுதாவது செலவு செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  51. அன்பிற்கு நன்றி சார் !

    அரை சதம் அடித்ததிற்கு வாழ்த்துகள். சந்திப்போம்

    பதிலளிநீக்கு
  52. அன்பிற்கு நன்றி சார் !

    அரை சதம் அடித்ததிற்கு வாழ்த்துகள். சந்திப்போம்

    பதிலளிநீக்கு
  53. //அரை சதம் அடித்ததிற்கு வாழ்த்துகள்.//
    அரை நூறு இல்லை. ஆறு நூறு! அறுநூறு பதிவுகள்! :)

    பதிலளிநீக்கு

  54. @ மோகன் ஜி
    வாழ்த்துக்கு நன்றி.மேடம் கீதாவின் பின்னூட்டம் பார்க்க வேண்டுகிறேன் அறுநூறு என்றுதானே எழுதி இருக்கிறேன்

    பதிலளிநீக்கு

  55. @ கீதா சாம்பசிவம்
    நன்றி மேடம் பதிவில் அறுநூறாவது என்று கூறினால் பின்னூட்டங்கள் எழுதியதை விட்டு விட்டு வாழ்த்து சொல்வதாகவே இருக்கும் அதனால்தான் இந்த மறுமொழியில் கூறிவிட்டேன் அதுவும் inadvertent ஆக.

    பதிலளிநீக்கு
  56. இந்த எண்ணம் பொதுவாக எல்லோருக்குமே எதாவது ஒருசமயம் வருவதுதான். அதிலும் நம்ம கோபாலொரு பின்னூட்டப்ரேமி. பின்னூட்டம் வரலைன்னா அவர் துடிச்சுப்போயிருவார்:-) யாருமே உன் பதிவைப் படிக்கலைன்னு வேற புலம்புவார்:-)

    பின்னூட்ட எண்ணிக்கைக்கும் பதிவர் வருகைக்கும் சம்பந்தமே இல்லைன்னு சொல்லிச்சொல்லி எனக்கு வாய்வலிதான் மிச்சம்.

    எழுத்து எனக்குத் தொழில் என்ற எண்ணம் வந்து பல வருசங்களாச்சு. நம்ம மன திருப்திக்கு எழுதறோம். அதிலுள்ள தகவல்கள் யாருக்காவது எப்பவாவது பயனாகும் என்ற நம்பிக்கை உண்டு. அது போதும் எனக்கு.

    பதிலளிநீக்கு

  57. @ துளசி கோபால்
    பின்னூட்ட எண்ணிக்கைக்கும் பதிவர் வருகைக்கும் நேரடி சம்பந்தமில்லாமல் இருக்கலாம் பதிவைத் திறந்தாலே பதிவர் வருகையாகக் கருதப்படும் வருகிறவர் வாசிக்கிறார் என்பதைப் பின்னூட்டம்காண்பிக்கும் ஒரு விஷயம் பகிர விரும்புகிறேன் என் ஒரு பதிவு படிக்க மூன்று நிமிடங்கள் என்று வைத்துக் கொண்டாலும் என் பதிவை வெளியிட்ட இரண்டாவது நிமிடமே வாழ்த்தியோ பாராட்டியோ பின்னூட்டம் வருவதையும் பார்த்திருக்கிறேன் நாம் எழுதுவது படிக்கப் படவில்லை என்றால் பதிவிடுவதின் நோக்கமே தவறி விடும். வருகைக்கு நன்றிமேடம்

    பதிலளிநீக்கு
  58. //என் ஒரு பதிவு படிக்க மூன்று நிமிடங்கள் என்று வைத்துக் கொண்டாலும் என் பதிவை வெளியிட்ட இரண்டாவது நிமிடமே வாழ்த்தியோ பாராட்டியோ பின்னூட்டம் வருவதையும் பார்த்திருக்கிறேன்//

    படிக்கும் வேகம் ஆளுக்கு ஆள் மாறுபடும் ஐயா. உங்களுக்கு மூன்று நிமிடம் ஆகும் ஒரு பதிவு மற்றவருக்கு ஒரு நிமிடத்திலேயே படிக்க முடியலாம். அதை வைத்துச் சொல்ல முடியாது. அதுவும் நான் ஆன்லைனில் இருக்கையில் என்னுடைய ஜிமெயில் இன்பாக்ஸில் சோஷியல் பகுதியில் உங்களுடைய மடல் வந்தவுடனே எத்தனையோ முறை படித்துப் பின்னூட்டம் கொடுக்க முடிந்திருக்கிறது. இப்போதும் அப்படித் தான் செய்தேன். ஆகவே ஆன்லைனிலே இருந்தால், உங்கள் பதிவு வெளியானது தெரிந்தால் இது சாத்தியமே. :))))

    பதிலளிநீக்கு

  59. @ கீதா சாம்பசிவம்
    எனக்கும் அது தெரிகிறது மேடம் இரண்டு மூன்று நிமிடங்கள் என்பது ஒரு குறியீடே. சொல்ல வந்தது பதிவிட்டவுடனே பின்னூட்டம் என்பது பதிவைப் படிக்காமல் பார்த்தவுடன் என்றே தோன்றுகிறது. நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால் அது நீங்களல்ல குறிப்பிட்டுச்சொன்னால் வெறும் மனஸ்தாபமே இருக்கும் ஆதங்கத்தைவெளியிட்டேனே அல்லாமல் குறை சொல்ல அல்ல. வருகைக்கு நன்றி மேடம்

    பதிலளிநீக்கு