செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

தொடர் பயணம் இராமேஸ்வரம் -3


                           தொடர் பயணம் இராமேஸ்வரம் -3
                            ----------------------------------------------------
 இராமேஸ்வரத்தில் மூன்றாம் நாள் வெகுவாக ஒரு சுற்றுலாவாகவே இருந்தது காலையிலேயே கிளம்பி இராமநாதபுரத்தில் இருந்ததேவிப்பட்டினம் திருப்புல்லாணி உத்தரகோச மங்கை ஆகிய இடங்களுக்குச் செல்லத் திட்டம் இட்டிருந்தோம்
 போகும் வழியே இந்திராகாந்தி பாலம் மேல் என்பதாலும் அதன் ஊடாகவே தெரியும் பாம்பன் பாலத்தையும் காண  வண்டி நிறுத்தப்பட்டது     
பாம்பன் பாலம் 

இந்திராகாந்தி பாலத்தில் இருந்து பாம்பன் பாலம் ஒரு பார்வை

பம்பன் பாலத்தூண்களில் அமர்ந்து மீன் பிடிப்பவர்கள்
பாலத்தைக் கடந்தபின் காலை உணவுக்காக ஒரு ஹோட்டலில் இறங்கினோம் சுவையான காலை உணவாகவே இருந்தது அங்கு சுவற்றில் ஒரு அறிவிப்பு கண்டேன் சுலை மானி என்று ஏதோ எழுதி இருந்தது. அப்படி என்றால் என்ன என்று கேட்டபோது அங்கு வளைகுடா நாடுகளில் இருந்து பலரும் வருவார்கள் என்றும் அது கறுப்புத் தேனீரைக் குறிக்கும் அரபிச் சொல் என்று சொன்னார்கள் கில்லர்ஜி கவனிக்க. மேலும் நம்மூர் சுக்குக் காஃபியும்  இருந்தது எங்களில் பலர் அதைச் சுவைத்தனர்  அதன் சுவையை எங்களுள் ஒருத்தி ருசிப்பது காணொளியில்  காணலாம்                             
காலை உணவு


சுக்குக்காப்பியின் சுவை காணொளியில்  தெரிகிறதா.?
அங்கிருந்து நேராக தேவிப்பட்டினம் போனோம்அங்கு ராமர் பிரதிஷ்டை செய்த நவபாஷாண  நவக் கிரகங்கள் நீரில் இருக்கின்றன. கடந்தமுறை நாங்கள் வந்திருந்தபோது படகில் கடலுக்குள் சென்று கடல் தர்ப்பை கொண்டு வந்து  பூசை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் இம்முறை கடல் தர்ப்பை பற்றிய பேச்சே காணோம் இம்முறை நவபாஷாண நவக்கிரகங்களில் சில  நீரில் மூழ்கி இருந்தன.
நவபாஷாணக் கோவில் பற்றிய அறிவிப்பு

நவ பாஷாணக் கோவில்  காணொளி



நவபாஷாணக் குளம் 


 அங்கிருந்து உத்தரகோசமங்கையில் இருக்கும் மரகத நடராஜர் கோவிலுக்குச் சென்றோம்  இதை ஆதிசிதம்பரத்தோடு ஒப்பிடுகிறார்கள் ஐந்தரை அடி உயர மரகதச் சிலைநடராஜர் ஆடும் இடம் இரத்தினசபை எனப்படுகிறது மார்கழி மாதம்  திருவாதிரையின் போது மட்டும்  மேனி எங்கும் பூசியுள்ள சந்தணக்காப்பு  அகற்றப்பட்டு அபிஷேகம் நடை பெறும் இறைவன் பெயர் மங்களேசுவரன்அம்பிகை மங்களேசுவரி சிவாலயங்களில் உபயோகப்படுத்தப் படாத பகிஷ்கரிக்கப்படும்  தாழம்பூ இங்கு இறைவனுக்கு அணிவிக்கப் படுகிறது தாழம்பூ பெற்ற சாபமிங்கு நிவர்த்தி யானதாகக் கதைஇறைவன் பார்வதி தேவிக்கு வேதாகமங்களின் ரகசியத்தை உபதேசித்ததால் இப்பெயர் பெற்றது என்கிறார்கள் உத்தரம் என்றால் உபதேசம் கோசம் என்றால் ரகசியம்  மங்கை தேவி பார்வதியைக் குறிக்கும்.

உத்தரகோசமங்கை திருக் கோபுரம்
கோவில் பற்றிய அறிவிப்புப் பலகைகள்
தரிசனம்  முடித்தபின் திருப்புல்லாணிக்குப் புறப்பட்டோம்அங்கு ஆதிஜகன்னாத பெருமாளைக் காணச் சென்றோம் இராமேசுவர வழிபாட்டுக்குப் பின்   யாத்திரிகர்கள் திருப்புல்லாணி அல்லது தர்ப்பசயனத்துக்கு (ஆதிசேது) போகவேண்டும் என்பது ஐதீகம்இது ஆழ்வார்களால் மங்களாசாசனம்  செய்யப்பட்ட திவ்ய தேசங்களுள் ஒன்று. இந்த இடத்தில் இராமபிரான் தர்ப்பைப்புல் மேல் சயனித்திருந்ததாகவும்  கடலரசன் வர தாமதித்ததால் அவன் மேல் கோபம் கொண்டு  அவன் கர்வத்தை அடக்கி பிறகு அவன் உதவியுடன் சேது அணையைக் கட்டினார் என்று கதை உண்டு.
ஆதிஜெகன்னாதர் ஆலயம்  திருப்புல்லாணி
. அங்கிருந்து வில்லூண்டி தீர்த்தம் என்னும்  இடத்துக்குப் போனோம்  இதுவரை நான் போகாத இடம் இது. சீதையின் தாகத்தைத் தீர்க்க இராமபிரான் கடலின் ஓரத்தில் தன் வில்லை ஊன்றி நீர் வரவழைத்ததால் இப்பெயர் என்கிறது அங்குள்ள அறிவிப்புப் பலகை. கடலின் ஆழத்தில் இருந்து வரும் நீர் குடிக்க ஏதுவாக உப்புக்கரிப்பு இல்லாமல் இருக்கிறது
கடலோரம் வில்லுண்டி தீர்த்தம்
 
வில்லூண்டி தீர்த்தம் பற்றிய அறிவிப்புப் பலகை.

 
வில்லூண்டி தீர்த்த நீர்

.

இராமேசுவரம் திரும்பும் வழியில் திரு அப்துல் கலாமுக்கான சமாதி இடத்துக்கும் போனோம் 
திரு அப்துல் கலாம் சமாதிவேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன
சமாதி அருகே நிறுவப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு 
 இவ்வாறு இராமேஸ்வரத்தில் மூன்று  நாட்கள் கழிந்தோடின. அடுத்த நாள் நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டோம் மாலையில் நாகர் கோவிலுக்கு ரயில் டிக்கெட் முன் பதிவாகி இருந்தது. நாகர் கோவிலில் அதிகாலை மூன்று மணி அளவில் ரயில் போய்ச் சேரும் என்றும் ரயில் நிலையத்திலேயே ஆறுமணிவரை இருந்து பின் தங்கும் இடத்துக்குப் போவோம் என்று மச்சினன் கூறினான்  ( தொடரும் )        





















ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

ஒரு முகநூல் ஸ்டேடஸும் விரிவான விளக்கமும்


                   ஒரு முகநூல் ஸ்டேடஸும் விரிவான விளக்கமும்
                   -------------------------------------------------------------------------
அண்மையில் இராமேஸ்வரம் சென்றிருந்தோம் அன்று கும்பாபி ஷேகம் கும்பாபிஷேக விசேஷ மலராக மாலை முரசு வெளியிட்டிருந்த எட்டு பக்கங்களைப் பார்த்த போது மனம் வலித்தது அம்மாவின் ஆணைக்கிணங்க கும்பாபிஷேகம் நடை பெற்றதாகச் செய்திகள் இருந்தனஅதே நாள் ஸ்ரீவில்லிப்புத்தூரிலும்  கும்பாபிஷேகம் நடை பெற்றது அதே நாளில் தமிழகத்தில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடை பெற்றதாக அறிகிறேன் இதெல்லாம் அம்மாவின் ஆணைக்கிணங்க என்று அ்றியும்போது நாம் இன்னும் அரசியலுக்கு அடிமைகள் என்று நினைக்கத் தோன்றுகிறது இம்மாதிரி கும்பாபிஷேகம் நடந்தால் அது அம்மாவுக்கு நல்லது என்று சோதிடர்கள் சொன்னதாகக் கேள்வி. என்று ஸ்டேடஸ் போட்டிருந்தேன்  

 அதற்கு கமெண்ட் எழுதிய நண்பர் ஒருவர்
அப்படி இல்லை பாலு . ஜெ ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் ,பக்தி மார்க்கம் ,செழிக்க நிறைய ,நடவடிக்கைகள் நடப்பதுண்டு .இது இப்போது என்று இல்லை .எப்போதெல்லாம் ,ஜெ ஆட்சியில் இருந்தாலும் நடந்து வருகிறது .அவளையும் ,கடவுளை வெறுப்பவர்களின் ,எதிர் மறை பிரச்சாரமும் மீடீயா மூலம் ஒரளவுக்கு எடுபடத்தான் செய்கிறது .
இதிலே இன்னோர் ஆதாயமும் உள்ளது .MGR வந்த பிறகு ,கீழே உள்ள ஜாதிகளை ,மேலே உள்ள ஜாதிகளை அச்சுறுத்த ,கொச்சைப்பட ,பயப்பாகிறார்கள் .இதை 52-54 பீரீயட் ,மற்றும் ,காமராஜர் காலம் ,கருணாநிதி காலம் ,இவற்றுடன் ஒப்பிட்டால் தான் தெரியும் .ஜெ ,கும்பாபிஷேகம் ,கோயில் அன்னதானம் ,போன்றவற்றில் ,கவனம்செலுத்துவதால் ,ஒரளவுக்கு கருணாவும் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார் ./ எனறு எழுதி இருந்தார்

 முதலில் அடிமைத்தனம் என்று எதை நான் கூறுகிறேன் என்பதைப்பார்ப்போம்

"அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.." 

"
எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"

"
ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம்கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"

"
ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"

"
விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."

"
தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."

"பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"

"
மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாதமுறைக்குட்பட்டு நடப்பது.."

"அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."

 இனம் மொழி மதம் போன்றவை சென்சிடிவான விஷயங்கள்.இப்போது இந்தவகையில் அரசியலும் சேர்ந்து விட்டது என்னைப் பொறுத்தவரை இவைகளே தனி மனிதனை அடிமைப்படுத்த அதிகம் உபயோகப்படுத்திய ஆயுதங்கள் பக்தி மார்க்கம் செழிக்க ஜெ பல நடவடிக்கைகள் எடுப்பதாக நண்பர் கூறுகிறார். ஆதிகாலம் முதலே இந்தபக்தி மார்க்கமும்  அதன் விளைவான இறை நம்பிக்கையும்தான்  மனிதனை தானாக சிந்திக்க விடாமல் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது அடிமைத்தனம் என்பது என்ன என்று மேலே கூறி இருக்கிறேன்
 மேலும் இங்கு உலவும்  ஏற்றதாழ்வுகளின் மூல காரணமே இந்த மத நம்பிக்கைதான் ஜாதி என்றும் மதம் என்றும் இனம் என்றும் பல வகையாகக் கூறி மனிதனை உசுப்பேற்றிவிடும் விஷயங்களே நடக்கின்றன.கர்நாடகாவில் ஏறத்தாழ எல்லாக் கோவில்களிலுமே தினம் அன்னதானம் நடைபெறுகிறது. இவை பெரும்பாலும் கோவில் நிர்வாகத்தாலேயே செய்யப்படுகிறதுதமிழ் நாட்டில் அன்னதானம் செய்யப்படுவது ஜெயின் சொந்தப்பணத்திலா அதற்கான க்ரெடிட்டை அவர் பெறுவது என்ன நியாயம் அரசாங்கமே குடி விற்பனையில் முன் நின்று உழைப்பவனின் பணத்தை உறிஞ்சி அதன்  மூலம் கிடைக்கும் வருமானத்தில் இலவசப் பொருட்களை விலையில்லாதவை என்று கூறி வருவது மிகவும் தவறு அவற்றின் விலை உழைப்பவனின் வியர்வையே
சமூகத் தளங்கள் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்த வேண்டும்  ஆனால் அவை இருபக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தி. பல நல்ல விளைவுகளுக்கு உறு துணையாக இருந்தவை  அதே நேரம் தவறான செயல்களுக்கும் விளக்கம் கொடுத்து வருபவை. பொதுவாக நான் இம்மாதிரியான விஷயங்களில் இருந்து ஒதுங்கியே இருப்பவன்  இருந்தாலும்  ஒரு பத்திரிக்கை அரசு செய்யும் முதல்வருக்கு இவ்வளவு கேவலமாக அடிவருடுவது என்னை அந்த ஸ்டேடஸ் போட வைத்தது



/



வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

தொடர்பயணம் இராமேஸ்வரம் -2


                          தொடர்பயணம் இராமேஸ்வரம் -2
                          ------------------------------------------------------
இரண்டாம் நாள் அதிகாலையிலேயே ஸ்படிகலிங்க தரிசனம் ஆளுக்கு ரூ.50/- டிக்கெட் என்று கூறி இருந்தான் மச்சினன் இராமநாதஸ்வாமியைத் திரை போட்டு மறைத்து அதன் முன்னே ஒரு ஸ்படிக லிங்கத்தை வைத்திருந்தார்கள் அதைக்காண என்று கூட்டமோ கூட்டம் சிதம்பரத்தில் தினமும் பக்தர்கள் முன்னிலையில் ஸ்படிக லிங்க அபிஷேகமே நடைபெறுகிறது தனியே பணம் ஏதும் வசூலிப்பதில்லை இராமேஸ்வரத்தில் ஸ்படிகலிங்கத்தை காணவே வசூல்  எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்ததுஎன் கணக்குப் படி சுமார் மூவாயிரத்துக்கும் மேலானவர் கட்டணம் செலுத்தி ஸ்படிக லிங்க தரிசனம் செய்திருப்பர். கோவிலுக்கு வருமானத்துக்கு இதுவும் ஒரு வழியோ.?
அன்று அக்னிதீர்த்தம் என்னும் கடலில் நீராடி கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களிலிருந்தும் வாளி வாளியாக நீராட்டப்பட்டோம் அதற்குப் பின் அறைக்குச் சென்று குளித்தோம்  அவர்கள் சொல்படி இவ்வாறு நீராடியதால் எங்களுக்கு எல்லா வளமும் சம்பவிக்க வேண்டும்  காலை உணவு உண்டு சுற்றுலா கிளம்பினோம்
இதற்கு முன்பே இரு முறை இராமேஸ்வரம் வந்திருக்கிறேன்சென்ற முறைகளில் தனுஷ்கோடி வரை செல்ல முடியவில்லை. ஆகவே இந்த முறையாவது தனுஷ் கோடி வரை சென்று அழிந்து போன சின்னங்களின் மிச்சத்தையாவது காண வேண்டும் என்றிருந்தது.
 தனுஷ்கோடி வழி போகும் போது கெந்தமான பர்வதம் என்று அழைக்கப்படும் இடத்தில் இருக்கும் ராமர் பாதங்களை தரிசிக்கக் கூட்டிச் சென்றார் ஓட்டுனர் ஒரு சிறிய குன்றின் மீது இரு கருங்கல் பாதங்களைக் காண்பித்து ராமர் பாதம் என்கிறார்கள் இதை எல்லாம் பார்க்கும் போது என்னுள் இருக்கும் ரிபெல்  வெளிப்படுகிறான் சிறிய குன்றின் மீதேறி அங்கிருந்து காண முடியும் காட்சிகளை ரசித்தேன் வெயிலுக்கு இதமாக தர்பூஸ் துண்டங்களை விற்கிறார்கள் நாவுக்கும் தொண்டைக்கும் இதமாய் இருந்தது தனுஷ் கோடி வரை செல்ல தார் பாதை போட்டிருந்தும் அதில் பயணிக்க அது அதிகார பூர்வமாகத் திறக்கப்படாததால் அனுமதி இருக்கவில்லை. கடலோரம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினோம் .அங்கு பயணிக்க சில வான்கள் இருக்கின்றன. ஆனால் அதில் செல்வது உசிதமல்ல என்றும் மேலும் ரூபாய் இரண்டாயிரத்துக்கும் மேல் கேட்கிறார்கள் இன்னுமொரு வாய்ப்பு இருந்தால் தனுஷ் கோடி செல்லலாம்  என்று காற்று போன பல்லூன்  போல் திரும்பினேன்

இந்தமுறை சென்றபோது அங்கும் ஒரு பாபா கோவில் வந்து பிரபலமாகி வருவது தெரிந்தது. 2012-ம் ஆண்டு கட்டப்பட்ட பாற்கடலைக் கடையும் சிற்பங்கள் கொண்ட முகப்புடன் கூடிய ஒரு கிருஷ்ணன் கோவில் புதுமையாக நன்றாக இருக்கிறது சென்று மகிழ்ந்தோம் கண்ணாடி கூண்டுக்குள் அசையும் மற்றும் அசையாத சிற்பங்கள் எல்லாமே குகையைக் குடைந்து கட்டியதுபோல் இருக்கிறது (கடந்த பதிவுகளில்  நான் எடுத்திருந்த காணொளிகள் சில திறக்காததால் காணொளிகளை முதலில் யூ ட்யூபில் இணைத்து பின் இங்கு பதிவிடுகிறேன்  அந்தப் பிரச்சனை இருக்காது என்று நம்புகிறேன் )
ராமர் பாதத்திலிருந்து ஒரு காட்சி
   
ராமர் பாதம் இருக்கும் குன்று
பிரசித்தி பெற்றுக் கொண்டிருக்கும் சாய்பாபா கோவில் 
கிருஷ்ணன் கோவில் முகப்பு 
கோவர்த்தன கிரிதாரி 
ராமர் லிங்கம் வடிக்கிறார் 
பசுவின் மடியிலிருந்து நேராக.....!
காளிங்க நர்த்தனன் 
கண்ணனின் விளையாட்டு
கிருஷ்ண பிரேமிகள்.... !
கண்ணனும் குசேலனும் 









அதன் பின் பஞ்சமுக ஆஞ்சிநேயர் கோவிலில்  மிதக்கும்  கற்கள் ராமர் பாலம் கட்ட உபயோகப்பட்டவை என்று கூறி கற்களைக் காட்டி அவற்றைப் பூசை அறையில் வைத்து வழிபடச் சொல்லி விற்கிறார்கள் பலரும் வாங்கியும் போகிறார்கள் இராமேஸ்வரத்துக்கு வட இந்திய யாத்திரிகர்களின் வரவே அதிகமாகி இருக்கிறது நம்மைவிட பக்தி மிகுந்தவர்கள் போல் தென்படுகின்றனர். அங்கிருந்து லக்க்ஷ்மணதீர்த்தம் ராமர் தீர்த்தம் என்று இரண்டு தடாகங்களைக் காட்டுகிறார்கள்  செய்த பாப விமோசனத்துக்காக நீராடிய/ நீராடப்படவேண்டிய  தீர்த்தங்கள் என்கிறார்கள்
மாலையில் நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் சன் ரைஸ் வியூவின் மேல்தளம் சென்று இராமேஸ்வரத்தின் பல பகுதிகளையும் கண்டு ரசித்தோம் அதன் பின் 
 அப்துல் கலாமின் குடும்பத்தோடு சம்பந்தப்படுத்தப்பட்டு  பேசப்படும் க்யூரியோஸ் கடையில்  ஷாப்பிங் செய்யப்பட்டது. இப்படியாக இராமேஸ்வரத்தில் இரண்டாம் நாளும் சென்றது 


ஹோட்டலின் மேல் தளத்தில்
  
ஹோட்டலின் மேல் தளத்தில் இருந்து ஒரு காட்சி 
எங்களை வேடிக்கை பார்க்கும் ஒரு காகம் 
சுற்றுப்புறத்தைக் கவர் செய்து எடுத்த காணொளி இதை முதலில் யூ ட்யூபில் ஏற்றிப்பிறகு பதிவில் ஏற்றி யிருக்கிறேன்  இல்லாவிட்டால் காணொளி திறப்பதில்லை  ஏன் என்று வித்தகர்கள் கூறலாமே 


     ( தொடரும்  )










புதன், 3 பிப்ரவரி, 2016

தொடர்பயணம் இராமேஸ்வரம் 1


                               தொடர்பயணம் இராமேஸ்வரம் -1
 நான் முதலிலேயே கூறி இருந்தேன் முதலில் பத்து பெண்மணிகள் வருவதாக இருந்ததும்  பின்னர் ஒருவர் சேர்ந்ததும் 13 பேர் கொண்ட குழுவாக இருந்தது இருவர் வர இயலாத காரணத்தால் 11 பேர் கொண்ட குழுவாக மாறி இருந்தது இதில்நான்கு பேர் 60 வயதுக்கும் குறைந்தவர்கள் இப்படி இருக்க டிக்கெட் பரிசோதகர் வந்து டிக்கெட்களைப் பரிசோதிக்கும் போது சீனியர்  சிடிசன்களின் வயது ப்ரூஃப் கேட்கும் முகாந்திரமாக எல்லோரது ஐடிக்களையும்  கேட்டார். இதில் ஒரு டிக்கட்டுக்கான ஐடி புரூஃப் காண்பிக்க முடியாததால் ரூ 400 ஃபைன் கட்டவேண்டி இருந்தது
20ம் தேதி காலைஎட்டுமணி அளவில் இராமேஸ்வரம் வந்தடைந்தோம் பொதுவாக இராமேஸ்வரம் வருபவர்களை வரவேற்பதே சில வழிகாட்டிகளாக இருப்பர். ஆனால் இந்தமுறை யாருமே வரவில்லை ரயில் நிலையத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தில் இருந்தது எங்களுக்கு அறைகள் முன் பதிவு செய்திருந்த ஹோட்டல் சன் ரைஸ் வியூ. அன்றுதான் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்க இருந்தது.  இதை நாங்கள் எதிர் பார்க்கவில்லை என்றாலும் கும்பாபிஷேகம் காணும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளித்தது எங்கள் முதல் கவனமே ஹோட்டல் போய்ச் சேருவதுதான் 11 பேருடைய இரண்டு வாரப் பயணத்துக்கான லக்கேஜ் , ரயில் நிலையம் வாசலில் வராத ஆட்டோ ரிக்‌ஷாக்கள்( அதற்காகத் தனி பாஸ் வேண்டுமாம்)மேலும் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக ஒரு எல்லைக்கு மீறி உள்ளே போக விடாத காவல் கெடுபிடி. இவை எல்லாவற்றையும் மீறி  ஹோட்டலுக்கு அரை கிலோ மீட்டர் வரை ஆட்டோக்களில் பயணம் செய்து அங்கிருந்து லக்கேஜ்களை இழுத்துக் கொண்டு கூட்ட நடுவில் முண்டியடித்து ஒரு வழியாய் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்வரும் வழியிலேயே ஒரு பாட்டில் குடி நீரும் ஒரு கை விசிறியும் தன்னார்வலர்கள் கொடுத்தார்கள்
ப்லாட்ஃபாரக் கோவில் இரண்டாம் ப்லாட்ஃபார்முக்காகத் தோண்டும் போது கிடைத்தசிலை என்று எழுதி இருக்கிறது
  
ரயில் நிலையத்துக்கு வெளியே கணபதி கோவில்
  
ஆட்டோவுக்காகக் காத்திருப்பு 
ஹோட்டலின் முன்பிருந்து ஒரு காட்சி




சுவரில் வாசகம் 
சற்று நேரத்தில் காலை உணவுக்காக ஒரு ராஜஸ்தானி ஓட்டலுக்குச் சென்றோம் சுவையான பூரி சப்ஜி.  உண்டுமுடித்து வெளியில் வந்தால் கூட்டமான கூட்டம் காணொளி எடுத்தேன் அதில் கோபுர உச்சியிலிருந்து அபிஷேக நீர் பீய்ச்சி அடிப்பதும் பதிவாகி இருக்கிறது
 ஓட்டலின் உள்ளே எழுதி இருந்த வாசகம் கவனத்தை ஈர்த்தது.
அன்று இருந்த கூட்டத்தில் எங்கும்  போவது இயலாததானதால் குளித்து முடித்து சுவாமி தரிசனம் செய்யச் சென்றோம் அந்தக் கூட்ட நெரிசலில்  அப்போதே சென்று பார்ப்பதே விசேஷம் என்று பலரும் கருதியதால்  தரிசன வரிசையின் கூட்டத்தில் ஐக்கியமானோம்  ஒரு வழியாக தரிசனம் முடிந்தது. இராமநாதஸ்வாமி விஸ்வநாதர் பர்வத வர்த்தினி அனைவரையும் தரிசித்தோம்
 காலை உணவு  நன்றாக இருந்ததால் மதிய உணவுக்கும்  அங்கே சென்றோம் பின் சிறிதுநேர ஓய்வுக்குப் பின் அக்னி தீர்த்தம் எனப்படும் கடலைக் காணச் சென்றோம்
அக்னி தீர்த்தம் எனப்படும் கடல்  
 
அக்னி தீர்த்தக் கரையில்
கிழக்கே கோபுரப் பின்னணியில்  
 
காலை மதிய உணவு உண்ட ராஜஸ்தானி ஹோட்டல்.  


இரவு உணவுக்காக அக்னி தீர்த்தம் அருகில் இருக்கும் குஜராத்தி போஜனாலயா சென்றோம் சப்பாத்தி சப்ஜியுடன்  கிச்சடி என்று ஒன்றும் தருகிறார்கள். எதுவுமே ருசிக்கவில்லை. முதல் நாள் இராமேஸ்வரத்தில் கும்பாபிஷேகம் கண்டது தவிர எந்த ஒரு விசேஷ நிகழ்ச்சியும் இல்லாமல் கடந்து போனது. அடுத்த நாளும் பிறகும் செல்ல வான் பேசி முடித்து இருந்தான் மச்சினன் ( தொடரும் )