வெள்ளி, 6 ஜனவரி, 2012

விஜயவாடா நினைவுகள்

                                        விஜயவாடா நினைவுகள்
                                       ------------------------------------

         இரண்டு நாட்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “ஹலோ, அங்கிள், நேனு சலபதி ராவ் மாட்லாடுதானு, விஜயவாடலின்சி. குர்த்து ஒஸ்துந்தா.?எனக்கு யார் என்று பிடிபடவேயில்லை. அடுத்து என் மகன் பேசினான். அவன் அங்கு வேலை நிமித்தமாகச் சென்றவன் அவனுடைய மலரும் நினைவுகளால் உந்தப்பட்டு நாங்கள் 1976-/ முதல் 1980-/ வரை வாழ்ந்த வீட்டையும் அருகில் இருந்த அவனது நண்பர்களை காணவும் சென்றிருக்கிறான். அந்தக் காலத்தைய அவனுடைய நண்பனின் அழைப்புதான் நான் முதலில் குறிப்பிட்டது. நாங்கள் அங்கிருந்தபோது என் மகனின் வயது பத்து தொடங்கி பதிநாலு வரை.

               ஏற்கனவே என் நேரம் பழைய நினைவுகளை அசைபோடுவதில் செலவாகிறது. இந்த தொலைபேசி அழைப்பு என் விஜயவாடா நினைவுகளைக் கிளரி விட்டது. நான் BHEL-ல் இருந்தபோது என்னை புதியதாகக் கட்டவிருந்த விஜயவாடாதெர்மல் பவர் ஸ்டேஷன் கட்டுமானப் பணிகளைத் துவக்க இடமாற்றம் செய்து அனுப்பினார்கள் .இடமாற்றத்தில் எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இருக்கவில்லை. நான் செய்து கொண்டிருந்த பணிக்கும் அங்கு எனக்கிருக்கப்போகும் பணிக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. ஆரம்பமுதல் நான் அவ்வேலையைக் கற்று பொறுப்புகளை முடிக்க வேண்டும். பேசாமல் வேலையை ராஜினாமா செய்து ஏதாவது பெட்டிக்கடை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்று தீவிரமாக யோசனை செய்தேன். மேலும் என் பிள்ளைகளின் படிப்பும் பாதிக்கப் படுமோ என்ற அச்சமும் எனக்கிருந்தது. ஆனால் எனக்குள் இருந்த போராடும் குணம், எதுவும் என்னால் முடியும் என்ற நம்பிக்கை என்னுள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது. அப்போது துணை பொது மேலாளராக இருந்த திரு. K.P.ராஜ்குமார் அவர்கள் என்னை கூப்பிட்டு அனுப்பினார். அவருக்கும் இட மாற்றம் என்றும் என் மன நிலை அவருக்குப் புரிவதாகவும் சொல்லி ஒரு கதையும் சொன்னார்.

           ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார். ஜனங்களால் மதிக்கப் பட்டவர். எந்த ஒரு நல்லது கெட்டதுக்கும் அவர் முன் நின்று வழி நடத்துவார். எந்த வீட்டில் இழவு நடந்தாலும் இவர் அங்குள்ளவர்களைத் தேற்றி ஆறுதல் கூறுவார். பெரும்பாலும் ஜனங்கள் ஆறுதல் அடைந்து அவர் சொல் கேட்டு நடந்து கொள்வார்கள். ஒரு முறை அந்தப் பெரியவர் வீட்டில் ஒரு இழப்பு நேரிட்டது. கண்ணீரை அடக்க முடியாமல் அவர் தேம்பித் தேம்பி அழுவது கண்டு கூட இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள் “நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர். எல்லோருக்கும் வழிகாட்டி. நீங்களேஇப்படி மனம் தளரலாமா?என்று கூறி சமாதானப் படுத்த முயன்றனர்.அவரோ, “உங்களுக்கு இழப்பு வந்தபோது ஆறுதல் சொன்ன நான் எனக்கு அது நேரும்போதுதான் உங்கள் துயரம் புரிகிறதுஎன்றாராம்

         இந்தக் கதை சொன்ன ராஜ்குமார், என் நிலை அவருக்குப் புரிகிறது என்று கூறி என்னை முதலில் விஜயவாடா சென்று நிலைமையை புரிந்து கொள்ளவும் இருக்க வீடு பார்க்கவும் பள்ளிகளில் பிள்ளைகளை ( இனி மாற்றலாகி வருபவருக்கும் சேர்த்து ) சேர்க்க வேண்டிய  ஏற்பாடுகள் செய்யவும் பொறுப்புகளை கொடுத்து அனுப்பினார். எண்ணிப் பார்க்கவே மலைப்பாக இருந்தது.

       விஜயவாடா சென்றதும் அனல் மின் நிலையம் கட்டப் படப் போகும் இடம் பார்க்கச் சென்றேன் கொண்டப்பள்ளி என்னும் ரயில் நிலையத்திலிருந்துதான் வந்து சேரும் கட்டுமானப் பொருட்கள் எடுத்துவரப் படவேண்டும் ஒரு சூபர்வைஸர்  ஏற்கெனவே பணியில் இருந்தார். அவருக்கு நான் அங்கு வந்ததே பிடிக்கவில்லை. என்று சிறிது நேரத்திலேயே தெரிந்து விட்டது. எனக்குக் கீழே பதில் சொல்லும் நிலை அவருக்கு ரசிக்கவில்லை.

   விஜயவாடாவில் பென்ஸ் சர்கிள் அருகே ஆஃபீஸ் அமைந்திருந்தது அருகேயே வீடு பார்த்தேன். படமட்டாவில் NSM PUBLIC SCHOOL  நல்ல பள்ளி என்றறிந்து அங்கே சென்றேன். அது மாண்ட்ஃபோர்ட் குழுமத்தாரால் நடத்தப் படுவது என்று தெரிந்தது நான் கூனூரில் படித்த பள்ளியும் அவர்கள் நிர்வாகத்துக்குட்பட்டதே. என்னை அந்த ப்ரின்ஸிபாலிடம் அறிமுகப் படுத்திப் பேசிக் கொண்டிருந்தபொது, அவர் கூனூரில் அதே பள்ளியில் எனக்கு மூன்று வருடம் ஜூனியர் என்று தெரிந்தது. பள்ளியில் பிள்ளைகளுக்கு இடம் கொடுத்தால் பள்ளிக்கு நாங்கள் என்ன செய்வோம் என்று அவர் பேரம் பேசினார். அந்த மாநிலத்துக்கே மின்சாரம் தரப்போகும் அனல் மின் நிலையம் நாங்கள் தருவோம் என்றெல்லாம் கூறி பள்ளியின் முன்னேற்றத்துக்கு எங்களிடமிருந்து கணிசமான உதவி எதிர் பார்க்கலாம் என்று கூறி வரப்போகும் ஊழியர்களின் பிள்ளைகள் படிப்புக்கு உத்தரவாதம் பெற்றுத் திரும்பினேன்.

     பெஜவாடா என்று முன் காலத்தில் அழைக்கப்பட்ட விஜயவாடா ஒரு ப்ளேஸ்வாடா (BLAZEVAADA) அதாவது அதிக உஷ்ணமான இடம்.,வெயில் காலத்தில் சர்வசாதாரணமாக உஷ்ணமானி 115 டிக்ரி முதல் 118 டிகிரி  ஃபாரன்ஹீட் வரை காண்பிக்கும். இரவில் ரேடியேஷன் சூட்டால் வெப்பம் குறைய வாய்ப்பேயில்லை. திருச்சிக்கும் விஜயவாடாவுக்கும் நிறையவே ஒற்றுமைகள் உண்டு. திருச்சி உச்சி பிள்ளையார் கோயில் மாதிரி  மலையில் கனகதுர்கா கோயில். காவிரி நதி மாதிரி  அங்கே கிருஷ்ணா நதி. கல்லணைபோல் கிருஷ்ணா பராஜ். இரண்டும்  விவசாய நிலங்கள் சூழ்ந்த வியாபார மையம். இந்திய ரெயில்வேயின் முக்கிய ஜங்ஷன்கள். ஃப்ளோட்டிங் பாபுலேஷன் ( வந்து போகும் மக்களின் எண்ணிக்கை ) இப்படிக் கூறிக்கொண்டே போகலாம்.

        1976- / முதல் 1980-/ வரை ( நான்கு வருடங்கள்) அங்கிருந்தேன் இரண்டு 210MW  சக்தியுள்ள அனல் மின் நிலையம் ஆரம்பத்திலிருந்து மின் உற்பத்தி துவங்கும் வரை அங்கு பணி ஆற்றினேன். திருச்சியில் கொதிகலன்கள் தயாரிக்கப் பட்டாலும் அங்கு ஒரு முழு கொதிகலனை யாராலும் பார்க்க முடியாது. அங்கு உற்பத்தியாகும் கட்டுமானப் பொருட்கள் தனித்தனியே அனுப்பப்பட்டு அனல் மின் நிலையத்தில் ஒருங்கிணைக்கப் படும். இவ்வாறு ஒருங்கிணைக்கப்ப்டும் ஒரு கொதிகலன் சுமார் பத்தாயிரம் டன்களுக்கும் கூடுதலாக இருக்கும். அங்கு பணி புரிந்த காலத்தில் ஆந்திராவில் கொடிய புயல் தாக்கி ஆயிரக் கணக்கானோர் மரண்மடைந்தனர், அந்த மாலை இன்றும் நினைவில் இருக்கிறது கட்டுமானப் பணியின் ஆரம்ப நிலை அது. மாலை காற்றடிக்கத் துவங்கி மழையும் வரத் தொடங்கவே சீக்கிரமே வீடு நோக்கித் திரும்பினோம் அன்று இரவு அடித்த காற்றில் கதவுகள் ஆடத் துவங்க அவற்றுக்கு கட்டில்களும் மேசைகளும் முட்டுக் கொடுத்து காற்றின் பயங்கர சப்தம் கேட்டு இரவு உறக்கம் இல்லாமல் கழித்தோம். மறு நாள் புயல் ஓய்ந்த பிறகு வெளியில் வந்து பார்த்தால் வெராந்தாவில் இருந்த ஒரு நீள மர பென்ச் காணவில்லை காற்று அதை தூக்கி முதல் மாடியிலிருந்து கீழே வீசியிருந்தது. கட்டுமான இடத்துக்குப் போகும் வழியெல்லாம் புயலின் கோர தாண்டவத்தின் அடையாளங்கள். சைட்டில் நாங்கள் ERECT செய்திருந்த STRUCTURAL  COLUMNS  எல்லாம் சரிந்து கீழே விழுந்திருந்தன. வாரக்கணக்கில் பாடுபட்டு செய்திருந்த பணிகள் எல்லாம் பாழாய்ப் போய் இருந்தன.

          அங்கு எனக்குக் கிடைத்த அனுபவங்கள் எனக்கு எதையும் எதிர் கொள்ள வைக்கும் துணிச்சலை தந்திருந்தது. அவற்றில் ஒன்றிரண்டு சொல்லியே ஆக வேண்டும். நீளம் கருதி  அதை பின்னொரு சமயம் தனி இடுகையாக பதிவிடுவேன்.
     காலை ஏழு மணியளவில் விட்டை விட்டால் இரவு எப்போது திரும்புவோம் என்று தெரியாது வாரம் ஆறு நாட்கள்  முழுநேரப் பணியும் ஞாயிறு மதியம் வரை பணியும் இருக்கும் . ஞாயிறு மாலைக்காக மனைவியும் மக்களும் காத்திருக்க சினிமா ஓட்டல் என்று கழியும். நான் விஜயவாடா பணியிலிருந்து மறுபடியும் திருச்சிக்கு கிளம்பும்போது VTPS –ன் SUPERINTENDING  ENGINEER  சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ரீங்கரிக்கிறது. அவர் சொன்னார்,BALU WHENEVER I COME NEAR THESE MACHINES  I WILL HEAR THEM CALL –BALU, -BALU” இருபது வருடங்களுக்குப் பிறகு 2001-ல்
நான் அந்த அனல் மின் நிலையம் சென்று என்னால் கட்டி முடிக்கப் பட்ட மெஷின்களின் அருகே நின்று புகைப் படம் எடுத்துக் கொண்டபோது எனக்கு அவை என்னை “ பாலு .பாலு “ என்று கூப்பிடுவதுபோல் இருந்தது.
--------------------------------------------
  

  






செவ்வாய், 3 ஜனவரி, 2012

போய்ச் சேர் வீடு நோக்கி....


          போய்ச் சேர் வீடு நோக்கி....
           ----------------------
காலாற நடை பயிலப் பூங்கா சென்றிருந்தேன்.
ஆங்கே, பொன்காட்டும் நிறம் காட்டிப்
பூ காட்டும் விழி காட்டி, இரு தனங்கனக்க,
இடையொடிய மனங்கிளர்க்க மாதொருத்தி,
கண் காட்டி மொழி பேசி,ஆடவர் மனங்கனக்க
விழியாலேவலைவீசி வழி நோக்கிக் காத்திருந்தாள்


காலன் கயிறு கொண்டு கடத்திச் செல்லக்
காத்திருக்கும் காலம்தான் என்றாலும் உள்மனதில் 
காமம்தான் முற்றும் ஒழியாத மன நிலையில்
நெஞ்சே நீயும் எத்தனை நாள்நெருப்பில் மூழ்கிடுவாய்
தஞ்சமாகத் துணையுடனே தழைக்கும் 
பூஞ்சோலை இங்கிருக்க நீ அதனில்கொஞ்சவே 
எண்ணுகின்றாய்,இது த்குமோ, முறையோ முரணன்றோ?


எண்ணிப் பார்க்கிறேன் எனக்கென்ன வயசு
எண்ணில் அடங்குவதோ மனசின் வயசு
காதலுடன் கழிந்த காலம் உன்னும்போது
உணர்கின்றேன் எனக்கென்றும் இளமைதான் என்று. 


என்னதான் நடக்கும் நோக்கலாமே என்றே எழுச்சியுடன்
ஓரடி ஈரடி நாலடி நான் நடந்தவள் முன் செல்ல
எனைக் கண்டெழுந்தவளிடம் நானறியாதே கூறிவிட்டேன்
உள்ளம் சொன்னதை அநுபவம் கற்றதை..


பொய்க் கனவாய்ப் புகுந்துன் பெண்மை புணர்ந்து
மெய்க்கனவாய் ஆக்கிடுவர் உன் இளமையதை. 
கூத்தாள் எனக் கொள்வர், இரவி மறையுமுன் உன்
ஆத்தாள் உனைத் தேடுமுன் போய்ச் சேர் வீடு நோக்கி.
---------------------------------------------  













சனி, 31 டிசம்பர், 2011

எண்ணச் சிதறல்கள்

                                          எண்ணச் சிதறல்கள்.
                                          -----------------------------
         ( இது 2011-ம் ஆண்டின் கடைசிப் பதிவு. ஒரு
           மாறுதலுக்காக சற்றே வித்தியாசமாக )    


            அண்மையில் ஒரு பதிவு படித்தேன். அதில் அத்வைதம்,
துவைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற விஷயங்களை எடுத்து
அலசியிருந்தார். அந்தப் பதிவர். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மா
வுக்குமுள்ள சமன்பாடுகள் குறித்த அலசல். அதைப் பற்றி நான்
எதுவும் எழுதப் பொவதில்லை. அடிக்கடி எழும் இந்த ஜீவன்
ஆத்மாபோன்றவற்றின் பொருள் விளங்காமலேயெ அல்லது,
விளங்கிக் கொள்ளும் புத்தி இல்லாமலேயே காலம் கழிந்து
விடுகிறது. இன்று நேற்று எழுந்த கேள்விகள் அல்ல இவை.
இருந்தும் அனைவரும் புரிந்து கொள்ளும் ,அல்லது ஒப்புக்
கொள்ளும் விளக்கங்கள் இருக்கிறதா.? இல்லை என்று சொல்
வதைவிடத் தெரியவில்லை என்று சொல்வதே சரியாகும். தினம்
இறந்து ,தினம் பிழைக்கும் நாம் இருக்கிறோம் என்று சொல்வதே
உயிர் என்று ஒன்று இருப்பதால்தானே. அதுதான் என்ன.?எளிதாக
சொன்னால் காற்று எனலாமா.? அதுவும் தவறாக இருக்கும்.
பிராணவாயு ( ஆக்சிஜன் ) என்பது கூடுதல் சரியாக இருக்கும்.
மூச்சுக் காற்று உடலுக்குள்ளேயும் உடலை விட்டு வெளியும்
சென்று கொண்டிருந்தால் உயிருடன் இருக்கிறோம் என்று
புரிகிறது.ஐம்புலன்களின் செயல் இழந்து விட்டாலும் மூச்சுக்
காற்று வந்து போய்க் கொண்டிருந்தால் உயிருடன் இருக்கிறோம்
என்று உணர்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தில் வாயு மண்டலத்தில்
இருக்கும் அநேக வாயுக்களில் பிராணவாயு மட்டுமே உயிருக்கு
உத்தரவாதம் அளிக்கிறது. இந்தப் பிராண வாயுவை மின்சாரத்
துக்குஒப்பானதாக எடுத்துக் கொள்ளலாம். வாஷிங் மெஷின்,
ஃப்ரிட்ஜ்,ஹீட்டர், லேத், பல்ப், போன்றவை மின்சாரம் என்ற
சக்தி செலுத்தப் பட்டால் வேலை செய்கிறது. அதேபோல இந்த
உடல் என்னும் மெஷினும் பிராணவாயு செலுத்தப் பட்டால்தான்
இயங்கும்.கேள்வி அதுவல்ல. உயிர்தான் ஆத்மாவா.? உயிர் உள்ள
உடலில் வந்து போகும் பிராணவாயுதான் ஜீவாத்மாவா.?பிரபஞ்சத்
தில் ஊடுருவி இருக்கும் வாயுமண்டலத்திலுள்ள பிராணவாயு
தான் பரமாத்மவா?ஜீவாத்மாவால் இயங்குவது இந்த உடல் என்பது
போல பரமாத்மாவால் இயங்குவதுதான் இந்த பிரபஞ்சமா.? இப்படி
எண்ணிக் கொண்டால் இந்த ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும்
உள்ளசமன்பாடு, ஒரு FINITE NUMBER-ஆ எது.எப்படியாயினும்
இரண்டையும் இயக்குவது என்ன, யார்.?மீண்டும் BACK TO SQUARE
ONE.  இதைத்தானே நான் ஒருமுறை எழுதியிருந்தேன்.,
அறியாமை இருளிலிருப்பதே சுகம் என்று.

       முடிவு காணமுடியாத,அல்லது முடிவு காணத் தெரியாத
எண்ணங்களை விட்டு விடு மனமே.அதெப்படி விட முடியும்.?
அநாதி காலந்தொட்டு கற்பிக்கப் பட்டும், நம்பப் பட்டும் வருகிற
விஷயங்கள் எல்லாம் மனதுக்கு ஒப்புவதில்லையே.கேள்வி
கேட்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதவர் மத்தியில்
சந்தேகமே வரக் கூடாது.!
                             **********************************

      இந்த அவதாரக் கதைகளை எடுத்துக் கொள்வோம். அவதாரங்
களைக் கதைகள் என்று சொல்லுவது ஆட்சேபிக்கப்படலாம்.
என்ன செய்ய. ..கதைகளையும் கற்பனைகளையும் உண்மை
என்று நம்ப இந்தப் பாழாய்ப் போன புத்தி மறுக்கிறதே. இந்தக்
கதைகள் கற்பனைகள் என்று ஒரேயடியாய் ஒதுக்கி விட்டு அதில்
கூறப்பட்டிருக்கும் கருத்துக்களையும் போதனைகளயும் தள்ளி
விடுவதும் சரியல்ல. மனம் ஒப்புவதை ஏற்போம்.இல்லாததை
ரசித்து விட்டு விடுவோம். நம்புபவர்கள் மனம் புண் படுதத
வேண்டாமே.

      “பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
        தர்ம ஸம்ஸ்தாபனார்த்தய ஸம்பவாமி யுகே யுகே “

என்று பகவான் கீதையில் கூறியிருக்கிறார். உலகில் எப்போது
எப்போது அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போது அப்போது
அவதாரம் எடுத்து தர்மத்தை நிலை நாட்டுவேன் என்கிறார். இது
கிருஷ்ணாவதாரத்தில் தெரியப் படுத்தியது. இதை
அடிப்படையாய் வைத்து மற்ற அவதாரங்களை அலசினால்
அவற்றை ஏற்பது எனக்குக் கஷ்டமாயிருக்கிறது. நான்முகனின்
ஆணவத்தை அடக்க மச்சாவதரம்;ஆணவத்தால் வலிமை
இழ்ந்த தேவேந்திரனுக்கு செல்வம் சிறப்புடன் கூடிய வலிமை
பெற்றுத்தர ,அமுதமெடுக்க, திருப்பாற்கடலைக் கடைய மந்தார
மலை நிலை பிறழாமல் இருக்க எடுத்த ஆமை அவதாரம்;
வைகுண்டக் காவலர்கள் ஜயன், விஜயன் ஆகியோர்,ஆணவம்
கொண்டு சனகாதி முனிவர்களால் சபிக்கப்பட அவர்களை
மீண்டும் ஆட்கொள்ள எடுக்கப்பட்ட அவதாரங்களே பன்றி
மற்றும் நரசிம்மாவதாரம்.;கோயில் விளக்கு அணையாமல்
இருக்கத் திரி தூண்டிக் கொண்டிருந்த எலிக்கு மூவுலகும் ஆள
சிவனார் கொடுத்த வரத்தின் பயனாய் பலிச்சக்கரவர்த்தியாகப்
பிறந்து மூவுலகை ஆண்டவனின் கர்வம் அடக்க எடுத்த வாமன
அவதாரம்;தந்தை சொல் கேட்டுத் தாயை வெட்டிதந்தையின்
காமதேனு பசுவுக்காக அவரைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க
இருபத்தொரு தலைமுறை அரசர்களை அழித்த பரசுராம அவ
தாரம்;மனைவியைக் கவர்ந்து சென்ற ராவணனைக் கொன்ற
ராமாவதாரம்;உழவுத் தொழிலின் மேன்மையை உணர்த்தக்
கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலராம அவதாரம்;பூமியின்
பாரத்தைக் குறைக்கவும் ( எப்படி.? கௌரவ பாண்டவர் போரில்
கணக்கற்றவர்களின் இறப்பாலா.?) சிலபல அரக்கர்களைக்
கொல்லவும் எடுத்த கிருஷ்ணாவதாரம் போன்றவற்றில் எல்லாம்
கடவுளை எங்கே காணமுடிகிறது.?கதைகளில் சொல்லப்பட்டுள்ள
சிலபல கருத்துக்கள் மனசுக்கு இதம் தரலாம். உதாரணத்துக்கு
சிறுவன் பிரகலாதனின் நம்பிக்கையை வலியுறுத்தும் நரசிம்மாவ
தாரக் கதை, தந்தை சொல் தட்டாத ராமன், நண்பனுக்கு உதவும்
ராமன், அநிதியை எதிர்க்கும் ராமன், என்று நல்ல குணங்களை
உணர்த்திச் செல்லும் ராமாயணக் கதை, பிறக்கும்போதே தான்
கடவுளின் அவதாரம் என்றுணர்ந்துஅதற்கேற்பச் செயல் புரியும்
கிருஷ்ணாவதாரக் கதை இவற்றிலிருந்து, வாழ்க்கைக்குப் பலன்
தரும் பல கருத்துக்கள் கொள்ளப்பட வேண்டியவையே தவிர
இவர்கள் எல்லோரும் அதர்மத்தை அடக்க வந்த கடவுளின் அவ
தாரங்கள் என்பது எனக்கு ஏற்றுக் கொள்வது இயலாததாய்
இருக்கிறது. அனைத்து கதைகளிலும் ஆங்காங்கே தெளிக்கப்
பட்டிருக்கும் நல்ல விஷயங்களை முடிந்த வரை பின்பற்ற
முயலுவோம். கதைகளைக் கதைகளாகவே உணர வேண்டும்.
நம்பிக்கை விளைவிக்கும் ,வாழ்வுக்கு ஆதாரமாயிருக்கும்
கருத்துக்களை உள் வாங்குவோம். மற்றவற்றைப் பதராக உதறு
வோம். எனக்குத் தெரியும், அறிந்தோ அறியாமலோ கேள்வி
கேட்காமல் பழக்கப் படுத்திவிட்ட உணர்வுகளை ஆராயத்தொடங்
கினால் எதிர்ப்புகள் பலமாய் இருக்கும் நான் என் எண்ணங்களைக்
கூறுகிறேன். இதை இன்னொரு கோணத்தில் அணுகுகிறேன்
அவ்வளவுதான்.வேறொன்றுமில்லை.
                                             *********************

       எதை எழுதும் போதும் தன்னிலைப் படுத்தாமல் பொதுவாக
எழுத முடிவதில்லை. எண்ணங்களைக் கடத்தவே எழுதுகிறோம்.
எழுதப்படும் எண்ணங்கள் பலரிடம் சென்றடைந்தால் மகிழ்ச்சியே.
பலரிடம் சென்றடைகிறதா, அதன் தாக்கம் என்ன என்று அறிய
வரும் பின்னூட்டங்களை அளவு கோலாகக் கொள்ளலாமா. ?அது
சரியென்று தோன்றவில்லை. பதிவர்களில் பலர், ஒருவருக்கு
நாம் பின்னூட்டம் எழுதினால் அவர்கள் நம் பதிவுக்கு வருகிறார்
கள். பின்னூட்டங்களின் எண்ணிக்கையில் பலவிதமுண்டு. ஒரு
பதிவுக்கு ஒருவரே ஏழெட்டு பின்னூட்ட மிடுவதை காண்கிறேன்.
சில சமயங்களில் பின்னூட்டங்கள் பதிவைவிட நீளமாகிப் போய்
விடுகிறது. அநேகமாக எல்லோரும் பாராட்டியே எழுதுகிறார்கள்
மீறிப் போய் யாராவது விமரிசனமாக எழுதினால் அது விரும்பப்
படுவதில்லை. விமரிசனம் எனும் போது எழுத்துத்தான் விமரி
சிக்கப்பட வேண்டுமே தவிர எழுதுபவரல்ல. ஒரு சிலர் சளி பிடிக்
கும் அளவுக்குப் பாராட்டில் குளிப்பாட்டுகிறார்கள் அந்தக் காலப்
பரிசில் வேண்டும் புலவர்கள் நினைவு வருகிறது. ஒரு சிலர்
பதிவிடும்போது என்ன சொல்ல வருகிறார் என்று புரிவதில்லை.
சில ABSTRACT எண்ணங்கள் சென்றடைவதில் சிரமமிருக்கிறது.
புரிந்தால் என்ன, புரியாவிட்டால்தான் என்ன.. இருக்கவே இருக்
கிறது டெம்ப்ளேட் காமெண்ட்ஸ். என்னை பொறுத்தவரை நான்
எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடாக இருக்க வேண்டும்
என்று எண்ணுவதில்லை. சிந்தனையைக் கிளறினாலேயே நான்
எழுதுவதன் பலனை அடைந்ததாக எண்ணுகிறேன். யாருடையப்
பதிவையும் யாரும் கட்டாயப் படுத்திப் படிக்க வைக்க முடியாது.
எழுத்துக்கள் வாசகரை ஈர்த்து வர வேண்டும்.என்னுடைய மெயில்
பெட்டியில் வந்து சேரும் பதிவுகள் பற்றிய தகவல்கள்
எண்ணிக்கை என்னைத் திக்கு முக்காடச் செய்கிறது. எழுத்தால்
ஈர்க்கப்பட்டு நான் படிக்க விரும்பினால் அவர் பதிவின் தொடர்
பாள்னாகிறேன். அவர் எழுதும் பதிவுகள் உடனுக்குடன் தெரியும்.
சில நேரங்களில் சிலரது பதிவுக்கு நான் இடும் பின்னூட்டம்
எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்று தெரிய மீண்டும் அவர்கள்
வலைக்குச் செல்வேன். மற்ற பதிவர்களும் அப்படித்தான் என்று
எண்ணுகிறேன். சில காமெண்டுகளுக்கு எவ்வாறு REACT  செய்வது
என்று தெரிவதில்லை. முன்பே ஒரு முறை எழுதி இருக்கிறேன்.
பதிவுகளில் நான் ஒரு I ALSO RUN  என்னும் ரகம்தான் என்று
          -----------------------------------------------------------

நிச்சயமாக இப்படித்தான் நடக்கும் என்று ஏதும் கூற முடியாத
இரண்டு விஷயங்களுக்குப் போராட்டங்கள் நடக்கின்றன.
ஒன்று--கூடங்குளம் அணு உலை. இரண்டு--முல்லைப் பெரியாறு
அணை.அணு உலையினால் அசம்பாவிதங்கள் நடக்கலாம்.
அதனால் அழிவை எதிர்நோக்கும் நிலை இருக்கிறது என்றும்
அதனால் அது செயல்படுத்தப்படக் கூடாது என்றும் கருத்துக்கள்
வெளியாகின்றன. அதேபோல முல்லைப் பெரியாறு அணை
வலுவிழந்து வருகிறது என்றும், நில அதிர்வுகளால் அணை
உடைய வாய்ப்பு உள்ளது என்றும் ,அதனால் அதில் நீர் சேமிக்
காமல் புது அணை கட்ட வேண்டும் என்றும் போராட்டங்கள்
நடக்கின்றன. இந்த இரண்டு கருத்துக்களுக்குமே பயமே அடிப்
படை. இது இப்படி இருக்கும்போது பயத்தால் அணு உலையை
எதிர்த்துப் போராடுபவர்கள், ஏன் அணையால் ஏற்படும் பயத்தை
யும் உணர்வுகளையும் எதிர்கொள்ளத் தயங்கு கிறார்கள் என்று
புரிவதில்லை.
-----------------------------------------------------------------------

                   மாறுதலுக்கு இப்படியும் ஒரு சிறுகதை
                       ------------------------------------------------
தினமும் நான் செல்லும் பஸ்ஸிலேயே வருகிறான். நான்
இறங்கும் நிறுத்தத்தில் அவனும் இறங்குகிறான். என்னையே
பார்த்துக் கொண்டு வருகிறானோ.?நான் பார்த்தால் வேறு
பக்கம் பார்க்கிறான். இது இப்படியே தொடர்ந்தால் நல்லதற்கல்ல.
வீட்டில் சொல்லலாமா ? வேண்டாமா.?

நான் அவனுக்குத் தெரியாமல் கண்காணித்ததில் அவன் வேலை
செய்யுமிடம் நான் பணிபுரியும் கட்டிடத்தின் மேல் மாடியில்
இருந்தது. அவன் வீடு எங்கள் தெருவில் எங்கள் வீட்டுக்கு
மூன்றாம் வீடு.

ஒரேதெருவில் குடியிருந்தும் ,இரே கட்டிடத்தில் பணி புரிந்தும்
ஒருவரை ஒருவர் தெரியாமல் இருந்திருக்கிறோம். !!!1!!1
---------------------------------------------------------------------------

ஒரு ஜோக் படித்தேன்.ஆங்கிலத்தில் இருந்தது. தமிழாக்கினால்
சுவை போய்விடும் .அதனால் அதனை அப்படியே தருகிறேன்.
இது ஒரு "A" ஜோக். ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.


Do you speak English.?
Yes.
Name.?
Abdul al-Rhasib.
Sex.?
Three to five times a week.
No, no, - I mean , male or female.?
Yes, male female, and sometimes camel.
Holy cow.!
Yes. cow,sheep,animals in general. 
But, is it not hostile.?
Horse style, doggy style, any style.
Oh, dear.!
NO, no , deer runs too fast. 
-----------------------------------------------------


புனித தாமஸ் கேரளாவுக்கு வந்தார். அவர் ஏசு நீரின் மேல் 
நடந்தார் என்றார்.

யாரும் நம்பவில்லை.

அவர் மேலும் சொன்னார்.”ஏசு நீரை வைன்( wine ) ஆக மாற்றினார்.”

பாதி கோட்டயம் கிருஸ்தவர்களாக மாறியது. !
---------------------------------------------------------------

( எல்லோருக்கும் என் புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.)
                                    ================













வியாழன், 29 டிசம்பர், 2011

இப்படியும் ஒரு சாமியார்...

                                       இப்படியும் ஒரு சாமியார்..
                                       -----------------------------------

        நான் இதற்கு முன்பு ஐந்தும் இரண்டும் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் எப்படி ஒரு சாமியார் ஒரு கணவன் மனைவியை ஏமாற்றி பணம் வாங்கிச் சென்றார் என்று கதை எழுதியிருந்தேன்.


      அண்மையில் நான் கோயமுத்தூரிலிருந்து குருவாயூர் சென்று திரும்பி வரும் போது பாலக்காட்டில் ஒரு வீட்டுக்குச் சென்றேன். என் தம்பியின் மாமியார் வீடு அது.  அது இருநூறு வருடத்துக்கு முந்தைய கட்டுமான வீடு. அங்கு ஒரு அறையில் ஒரு நந்தா விளக்கு வெகு காலமாக அணையாமல் காக்கப் பட்டு வருகிறது. அதன் உண்மைப் பின்னணியைப் பற்றி ஒரு சம்பவம் விவரிக்கப் பட்டது. அவர்களின் முன்னோரில் மூதாட்டி ஒருவர் மிகவும் கொடைக்குணம் மிகுந்தவர். அதிதிக்கு உணவு படைத்த பிறகே தான் உண்ணும் வழக்கம் கொண்டவர். ஆனால் அவருடைய இந்த உதார குணம் அவருடைய உறவினர்களுக்குப் பிடிக்காமல் இருந்தும் மூதாட்டி அதை சட்டை செய்யாமல் வறியோரையும் முதியோரையும், பக்தர்களையும் தொடர்ந்து ஆதரித்து வந்திருக்கிறார்.


           ஒரு முறை சுவாமிஜி ஒருவர் இவர்கள் வீட்டுக்கு வந்து மதுரை மீனாட்சியின் அருளும் முருகனின் கடாட்சமும் இவர்களுக்கு இருப்பதாகவும், தினமும் விளக்கேற்றி வழிபடுமாறும் கூறி சில மயில் பீலி இதழ்களைக் கொடுத்து அதை பாதுகாக்குமாறும் கூறி இருக்கிறார். வழக்கம்போல் அந்த மூதாட்டி அவருக்கு உணவளித்து உபசரிக்க வழக்கம்போல் உறவினர்கள் இவரைக் குறைகூற வந்த சுவாமிகள் புறப்பட்டுச் செல்லும்போது அவரை வழியனுப்ப வந்த அம்மூதாட்டி பார்த்துக் கொண்டிருக்கும் போதே வந்தவர் காணாமல் போய்விட்டார். அவர் நின்றிருந்த இடத்திலிருந்து ஒரு ஒளிப் பிழம்பு வானில் போவதைக் கண்டவருக்கு வந்தவர் சாட்சாத் முருகனே என்னும் நம்பிக்கை தோன்ற, அன்று ஏற்றப்பட்ட தீபம் இன்னும் அணையாமல் பாதுகாக்கப் படுவதாகக் கூறினார்கள்.


             ஆண்டுதோறும் தை மாதம் ஒரு குறிப்பிட்ட நாளில் அக்குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கூடி அந்த விளக்கு பூஜையை ஒரு விழாவாகவே நடத்துகிறார்களாம்.
---------------------------------------------------------------------------

புதன், 28 டிசம்பர், 2011

இளைய பாரதம்-நம்பிக்கை.

                                    இளைய பாரதம் -நம்பிக்கை.
                                   ---------------------------------------

கூட்டம் அலை மோத நெரிசலில் பெண்ணொருத்தி
படும் பாடு கண்டு கொதித்தது அவன் மனசு.
பேரூந்தொன்றில் பயண்ம் செய்கிறான் அவ்விளைஞன்
சந்தடி சாக்கில் அரைக் கிழவன் ஒருவன் அப்பெண்ணின்
மேல் வேண்டுமென்றே உராய்தல் கண்டு அருகில்
வந்த நடத்துனரிடம் சுட்டிக் காண்பிக்க அவரும்
சமயோசிதமாக நடுவில் சென்று மெள்ள அக்கிழவனை
அப்புறப் படுத்துகிறார். பிறகு தன் கட்டை விரல் உயர்த்தி
இளைஞனுக்கு சமிக்ஞை செய்கிறார். பார்த்துக் கொண்டிருந்த
எனக்கு இளைய பாரதம் மேல் நம்பிக்கை கூடியது
-------------------------------------------------

திங்கள், 26 டிசம்பர், 2011

பள்ளி நாட்கள்

                                              பள்ளி நாட்கள்...
                                             ----------------------
(அண்மையில் கூனூர் சென்று வந்தேன். படித்த பள்ளிக்குச் சென்று திரும்பும்
போது எழுந்த நினைவுகள் இந்தப் பதிவில் )

      ( நான் கோயமுத்தூர் ராமநாதபுரம் முனிசிபல் ஹைஸ்கூலில் சேர்ந்து படித்தது
       பற்றி “இது லஞ்சமா “என்ற பதிவு எழுதி இருந்தேன்.அதன் தொடர்ச்சியாக இதனைப்
         எடுத்துக்கொள்ளலாம் .)

நான் ஃபோர்த் ஃபார்ம் முடித்திருந்தேன். அந்த நேரத்தில் அப்பாவுக்கு வெல்லிங்டனுக்கு மாற்றலாகி இருந்தது. அப்பா அப்பர் கூனூரில் வீடு பார்த்திருந்தார். ஒரு பேரிக்காய் தோப்புக்கு நடுவே ஒரு வீடு. அடுத்தடுத்து வீடுகள் இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்தன. ஸிம்ஸ் பார்க், பாஸ்டியர் இன்ஸ்டிட்யூட் அருகில் வீடு. கோயமுத்தூரிலிருந்து நாங்கள் கூனுருக்கு பஸ்ஸில் வந்தபோது, மாலை நேரமாகி இருந்தது.பழக்கப்படாத குளிர் வெடவெடத்தது. அரை நிஜாரும் சொக்காயும்தான் உடை. இதெல்லாம் இப்போது நினைக்கும்போதுதான்,அந்த அனுபவம் உறைக்கிறது.நாங்கள் அந்த வீட்டில் இருக்கும்போது, சுற்று முற்றும் பேரிக்காய் மரங்களும், ஆரஞ்சு மரங்களும் ஆக கைக்கெட்டிய நிலையில் பழங்கள் .எவ்வளவு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பறித்துத் தின்னலாம்.வீட்டிலிருந்து ஐந்து பத்து நிமிட நடையில் பள்ளிக்கூடம்.செயிண்ட். ஆண்டனிஸ் ஹைஸ்கூல்..பத்தாம் வகுப்பில் சேர்ந்தேன். பள்ளிக்கட்டணம் மாதம் ரூபாய் ஆறேகால் என்று நினைவு.

      பள்ளியில் சேர்ந்த புதிதில் நடந்த சம்பவம் ஒன்று நன்றாக நினைவுக்கு வருகிறது. வகுப்பில் ஆங்கிலப் பாடம் நடக்க இருந்தது. நான் புதிதாக சேர்ந்த பையன். வகுப்பு ஆசிரியர் ப்ரதர். மாண்ட்ஃபோர்ட் என்னிடம் அவர் நடத்திக் கொண்டிருந்த பாடத்தைப்படிக்கச் சொன்னார். ஷேக்ஸ்பியரின் ட்வெல்ஃப்த் நைட் என்ற பாடம். அதில் செபாஸ்டியன், வயோலா என்ற பாத்திரங்கள் வருவர். நான் மிகவும் இயல்பாக தைரியமாகப் படிக்க ஆரம்பித்தேன். VIOLA என்று இடம் வரும்போது, வயோலா என்று படித்தேன். வகுப்பே கொல்லென்று சிரித்தது. எனக்கு அவமானமாகவும் வெட்கமாகவுமிருந்தது. ப்ரதர். மாண்ட்ஃபோர்டும் புன் முறுவலித்துக் கொண்டே வகுப்பை அடக்கி, என்னையும் அமரச் சொன்னார். வகுப்பு முடிந்ததும் என்னருகில் அமர்ந்திருந்த சக மாணவர்களிடம் அவர்கள் கேலியாக சிரித்ததற்குக் காரணம் கேட்டேன்நான் வயோலா என்று படித்தது தவறு என்றும் வியோலா என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்றும் கூறினார்கள். நான் ஒரு ப்ராப்பர் நௌனில் வேற்றுமொழியில் உச்சரிப்பு தவறு என்று கூற முடியாது என்று வாதிட்டேன். யாரும் நம்பவில்லை. கேலியும் தொடர்ந்தது. அடுத்த நாள் ஆங்கிலப் பாடம் நடத்த ப்ரதர் மாண்ட்ஃபோர்டுக்குப் பதிலாக தலைமை ஆசிரியர்,ப்ரதர் ஜான் ஆஃப் த க்ராஸ் வந்தார். அதே பாடத்தை அவர் நடத்தும்போது, வயோலா என்றே படித்தார். அப்போது நான் எழுந்து நின்று முதல் நாள் நடந்த சம்பவத்தைக் கூறினேன். அவர் என்னுடைய நிலை சரியென்று கூறினார்.
அன்று நான் அடைந்த கர்வம், ஆங்கிலப் பாடத்தில் நான் வகுப்பில் முதலாம் மாணவனாக நிலைக்க உறுதுணையாய் இருந்தது. அந்த பள்ளியில் இருந்த காலத்தில் உற்ற நண்பர்களாக இருந்த வெங்கட ராவ், விஸ்வநாதன், தாமோதரன், மற்றும் கால்பந்தாட்ட வீரன் தியோஃபிலஸ் இவர்களையெல்லாம் மறக்க முடியாது.

        பரீட்சை பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தவர்களில் ப்ரத்ர் மாண்ட்ஃபோர்ட், ப்ரதர் ஜான்        ஆஃப் த க்ராஸ், திரு. வேங்கடராம ஐயர், திடு. எம். பி. காமத், திரு. எஸ்.பி. காமத், திரு. தர்மராஜ ஸிவா மறக்க முடியாதவர்கள். ப்ரதர் மாண்ட்ஃபோர்ட் ஐந்தாம் ஃபார்ம் வகுப்பாசிரியர். ;ப்ரதர் ஜா ஆஃப் த க்ராஸ் ஆறாம் ஃபார்ம் வகுப்பாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்;.வேங்கடராம ஐயர் தமிழாசிரியர். எம்.பி. காமத் கணித ஆசிரியர், மற்றும் என்.சி.சி. ஆசிரியர், எஸ்.பி. காமத் சோஷியல் ஸ்டடிஸ்  மற்றும் திரு.சிவா விஞ்ஞான ஆசிரியர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் அவர்கள் தொழிலை தெய்வமாக மதித்தவர்கள். மாணவர்களிடம் பெரும் அன்பு கொண்டவர்கள். ஒவ்வொரு ஆசிரியரையும் நினைவில் நிற்க வைத்த சம்பவங்கள் ஏராளம். ஆனால் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு குறிப்பாவது அவசியம். ஒரு முறை வகுப்பு பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கரும்பலகையில் வினாக்களை எழுதி அதற்கு பதில் எழுதப் பணித்திருந்தார்கள். நான் எப்போதும் முதல் பெஞ்சில் உட்காருபவன். அன்று பரீட்சைக்காக என்னைக் கடைசி பெஞ்சில் உட்கார வைத்தார்கள்.எனக்கு கரும்பலகையில் எழுதியது சரியாகத் தெரியாததால் அடுத்திருந்த மாணவனை எட்டிப் பார்த்து, கேள்விகளை தெரிந்து கொண்டேன். நான் காப்பி அடிப்பதாக எண்ணி தலைமை ஆசிரியரிடம் அனுப்பினார்கள். எனக்கு அழுகை அடக்க முடியவில்லை. நான் வகுப்பில் முதல் மூன்று இடங்களில் வருபவன். ஆதலால் காப்பியடிக்க வேண்டிய நிலையில் நான் இல்லை என்று அழுது கொண்டே வாதாடினேன். என் நிலையைப் புரிந்துகொண்ட தலைமை ஆசிரியர் ப்ரதர் ஜான் என்னை சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி பார்க்கச் சொன்னார். நான் சற்றே அருகில் சென்று பார்க்க முயன்றபோது,என்னைத் தடுத்து, இருந்த இடத்திலிருந்தே நேரம் பார்க்கச் சொன்னார். என்னால் முடியாததால், அவர் என்னிடம் என் கண் பார்வையில் குறையிருப்பதையும், அதை என் தந்தையிடம் கூறும் படியும் கூறி, என்னைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் அளித்தார். அப்போதுதான் என் கண் பார்வையில் குறை இருப்பது தெரிந்தது. இருந்தும் கண் பார்வையின் குறை அறியவும் கண்ணாடி அணியவும் அப்போது முடியவில்லை. பெங்களூர் வந்தபோதுதான் என் மாமா டாக்டரிடம் காட்டிக் குறையறிந்து கண்ணாடி அணிந்தேன். காலம் கடந்து பரிசோதனை செய்ததால் கண்ணாடியின் வீரியமும் அதிகமாக மைனஸ் ஆறு என்ற நிலையில் இருந்தது.

      கணக்கு ஆசிரியர், எம்.பி. காமத் ட்ரிக்னோமெட்ரி பாடம் நடத்தும்போது, ஒரு கதை சொல்லி பாடம் புரிய வைத்தார். அத்தை மாமன் மக்களை ஆங்கிலத்தில் கசின் என்று அழைப்பர். ஒரு முறை எல்லை மீறிய போது அந்தப் பெண், ah cos,..oh sin.  என்று சொல்லி அணைப்பிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டாளாம். Ah Cos என்பது
ADJACENT SIDE /HYPOTANEUS  FOR COSINE என்றும்  OH SIN என்பது OPPOSITE SIDE / HYPOTANEUS  FOR  SINE என்றும் விளங்க வைத்தார். இதையே என் பேரன் விபுவுக்கும் நான் சொல்லிக் கொடுத்தேன். சயின்ஸ் ஆசிரியர் சற்றே குள்ளமானவர். தலைப்பாகை அணிந்திருப்பார். மெல்லிய குரலில் பேசுவார். அவர் பேசுவது கேட்க வேண்டுமானால் வகுப்பில் நிச்சயம் அமைதி காக்கப்பட வேண்டும். மிகவும் கண்டிப்பானவர். அவர் மாணவர்களுக்கு தரும் அதிகபட்ச தண்டனை, வகுப்பில் உள்ள சுவற்றில் பதிக்கப் பட்டுள்ள புத்தக அலமாரிக்கு அடியில் நிற்க வேண்டும். நேராக நிற்க இயலாது. சுவற்றுடன் சேர்ந்து கால்களை சற்றே மடக்கித்தான் நிற்க முடியும். தனிப்பட்ட முறையில் எல்லோரும் சுத்தமாக இருக்க வற்புறுத்துவார். பௌடர் ஸ்னோ போன்றவை உடம்பின் துர்நாற்றத்தை மறைக்கவா என்று கேள்வி கேட்பார். திரு.எஸ்.பி. காமத் சோஷியல் ஸ்டடிஸ் பாடம் நடத்துவார். THE SOLE JUSTIFICATION FOR EXISTENSE IS THE SEARCH FOR TRUTH. என்ற காந்தியின் வாக்கினை எங்களுக்கு முறையாகப் பயிற்றுவித்தவர். சமுஸ்கிருதமும் தமிழுங் கற்று பாரதப் பண்பாட்டினை வளர்க்க வேண்டும் என்று பாடங்களூடே பயிற்றுவித்தவர் எங்கள் தமிழாசிரியர். இவர்களைத் தவிர பள்ளி கரஸ்பாண்டண்ட்  ஆக ப்ரதர் க்ளாடியஸ் இருந்தார். பள்ளி மாணவர்களை அவர்களுடைய குழந்தைகள் போல நடத்துவார். ஹூம்.! அது ஒரு கனாக் காலம். ! 


ST.ANTONY"S HIGH SCHOOL-ல் ஃபிஃப்த் ஃபார்ம் படித்துக் கொண்டிருந்தபோது
பள்ளி ஆண்டு விழாவில் ஒரு நாடகத்தில் நடித்தேன். ஆங்கில நாடகம். கடன்
வாங்கி ஏமாற்றியவன் அவனுக்காக வாதாடும் வக்கீலுக்கும் “பெப்பே”என்று 
கூறும் நகைச்சுவை நாடகம். நாடகத்தில் நடிக்க உடை வேண்டும்.கால்சராய்
(பேண்ட் )எதுவும் என்னிடம் இல்லை.அரைநிஜார்தான் இருப்பு. அதற்காக நான்
ஒருவனிடம் இரவல் வாங்கி அதை உடுத்த நான் பட்ட பாடு, இப்போதும் 
சிரிப்பாக வருகிறது.பேண்ட் இரவல் கொடுத்த பையன் என்னைவிட மிகவும் 
உயரமானவன். அவனுடைய பேண்ட் அளவு எனக்கு மிகவும் நீளமானது.
கணுக்கால் அருகே மடித்து என்னுடைய அளவுக்குக் கொண்டுவந்து உடுத்தி 
நடித்தேன். அந்த பேண்டின் நிறம் கூட நினைவிருக்கிறது.ஊதாவும் சிவப்பும் 
கலந்த நிறம். !நாடகம் நடிக்கும்போது அப்பா முன் வரிசையில் உட்கார்ந்து 
இருந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு நடிக்க பயம் ஏற்பட்டு, ஏதேதோ
கூறியிருக்கிறேன். அதுவே அந்த பாத்திரத்துக்கு ஏற்புடையதாக இருந்ததால் 
நன்றாக நடித்ததாய் பெயர் கிடைத்தது. ஒரு சமயம் அந்த அனுபவம்தான் 
பிற்காலத்தில் நான் நாடகங்கள் எழுதி, நடிக்கவும் ,இயக்கவும் உதவி 
செய்ததோ என்னவோ


 நாங்கள் படிக்கும்போது ஹிந்தியும் ஒரு பாடம். ஆனால் இறுதித் தேர்வுக்கு 
அதில் தேற வேண்டிய கட்டாயம் இருக்க வில்லை. அப்போது படித்த ஹிந்திப்
படம் இப்போதும் நினைவில் இருக்கிறது.”மானே ஹம்கோ ஜன்ம தியா ஹை. 
உசி கா தூத் பீகர் ஹம் படே ஹுவே ஹைன்”அந்த ஹிந்தி பண்டிட் வகுப்பு 
நடத்தும்போது அநேகமாக எல்லோரும் பெஞ்சின் மேல் இருப்போம். ஏதோ 
தோடா தோடா ஹிந்தி வருகிறதென்றால் அது அந்த ஆசிரியர் உபயம்.
                    -----------------------------------  

                    

 


வெள்ளி, 23 டிசம்பர், 2011

சாமியே சரணம் ஐயப்பா...

                                           சாமியே சரணம் ஐயப்பா..
                                            -----------------------------------
                மோகன் ஜியும்  சுந்தர்ஜியும் சபரிமலைப் பயணம் என்று கேள்விப்பட்டதும் என்னுடைய இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. முதல் முறையாக 1970-ம் வருடம் சபரி மலைக்கு மகர ஜோதி காணச் சென்றிருந்தோம். மகர ஜோதியை ஆண்டவனின் ஜோதிஸ்வரூபமாய் நினைத்து கண்கலங்கி ,மெய் விதிர்த்து விம்மி விம்மி அழுதது , 1971-ம் வருடம் மீண்டும் அதே அனுபவம் பெற என்னைத் தூண்டி  48 நாட்கள் கடும் விரதம் இருந்து , இம்முறை என் மூத்த மகனையும் ( அப்போது அவனுக்கு ஐந்து வயது ) கூட்டிக் கொண்டு எங்கள் குருஸ்வாமியுடன் BHEL –ல் இருந்து சுமார் 40 பேருடன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பஸ்ஸில் பயணப் பட்டோம். வயதானவர்களும் குழந்தைகளும் இருந்ததால் நேராக பம்பாவிலிருந்து மலை ஏற திட்டமிடப்பட்டது. கன்னி சாமிகளும் இருந்ததால் எருமேலி சென்று பேட்டை துள்ளிப் பின் பம்பா செல்ல தீர்மானிக்கப் பட்டது. போகும் வழியில் ஆலய தரிசனமாக நிறையவே கோவில்களுக்குச் சென்று எருமேலி போய்ச் சேர்ந்தோம். அப்போது எங்களை ஏற்றி வந்த பஸ் ட்ரைவர் பம்பா செல்லப் பெர்மிட் இல்லை என்றும் எருமேலியிலிருந்தே எங்களை திரும்பக் கூட்டிச் செல்வதாகவும் சொன்னார். என்னவெல்லாமோ தாஜா செய்து ( என்ன.. பணம் கொடுத்துத்தான் )ஒரு வழியாக பம்பா சென்று மலை ஏறி அய்யப்பன் தரிசனம் முடித்து திரும்பினோம். (இதை சொல்லவா இவ்வளவு பீடிகை. என்று நினைப்பது தெரிகிறது. ) இனிமேல்தான் கதையே. திரும்பும்போது குருவாயூர் வந்து நிர்மால்ய தரிசனம் காண திட்டம். இரவு சுமார் ஒரு மணியளவில் குருவாயூர் வந்தோம். சிறிது நேரம் கண்ணயர்ந்து பிறகு நிர்மால்ய தரிசனம் காணலாம் என்று நாங்கள் சிலர் பஸ்ஸிலேயே இருந்து விட்டோம். மற்றவர்கள் அங்கு நடை பெற்றுக்கொண்டிருந்த ‘கிருஷ்ணாட்டம் “ காணச் சென்றனர். அப்போது ஆஜானுபாகுவாக ஒருவர் எங்கள் பஸ்ஸில் ஏறினார், SORRY, ஒருவர் என்றுசொன்னது தவறு. ஒரு ஐயப்பஸ்வாமி ( நன்றாகக் குடித்திருந்தார் ) பஸ்ஸில் ஏறி , மலையாளத்தில் மிக நேர்த்தியான கெட்ட வார்த்தைகள் கூறிக்கொண்டே,பஸ்ஸின் சீட்டைக் கத்தியால் கீறி கிழித்துக் கொண்டிருந்தார். முரட்டு உருவத்துடன் இருந்த அவரிடம் நல்ல வார்த்தைகளில் பேசிப் பிரயோசனம் இல்லாதிருந்ததால்  அங்கே அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டது. யாரும் வரவில்லை. அவரை வண்டியிலிருந்து கிழே இறக்கி விட்டு எங்களைப் போகச் சொன்னார்கள். இதற்குள் சிலர் அவரிடமிருந்த கத்தியை எடுத்துவிட்டால் அபாயமில்லை என்று கருதி  மெல்ல அவரிடம் பேச்சுக் கொடுத்து அவரைப் படுக்க வைத்தனர். சற்று நேரம் கழிந்ததும் மெள்ள அவரிடமிருந்த கத்தியை எடுக்க முயற்சி செய்யும்போது , திடீரென்று அவர் அருகிலிருந்தவரை காலால் எட்டி உதைத்து கத்தியால் குத்த வந்தார்.
கூட இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு அவரை அமுக்கிப் பிடித்து அவருடைய துண்டாலேயே அவரைக் கட்டி கொஞ்சம் ஆத்திரம் தீரப் புடைத்தனர் பிறகு அவரை பஸ்ஸிலிருந்து கீழே இறக்கி பஸ்ஸை நகர்த்த முயன்றனர்.

                      அது கடை வீதியாக இருந்ததாலும் ஜன சந்தடியாக இருந்ததாலும் கூட்டம் கூடிவிட்டது. சிறிது நேரத்தில் “ ஒரு மலையாள ஐயப்பசாமியை தமிழம்மார்  அடிச்சுட்டுப் போகுன்னு “ என்று ஒரே களேபரமாகி பஸ்ஸைச் சுற்றி கலவரம் எழுந்தது. எங்களில் யாரையும் இறங்க விடாமலும் ஏற் வருபவரை அனுமதித்தும் கூச்சலும் குழப்பமுமாக “ பஸ்ஸின் காற்றை இறக்கவும் பஸ்ஸுக்குள் மண்ணை வீசி குத்து கொல்லு என்று கத்தவும் தொடங்கினர். அப்போது எங்கள் குருசாமி , அவரும் நல்ல பெர்சனாலிடி, வந்து என்ன செய்யலாம் என்று பேசலாம் என்றார். அதற்குள் அங்கு ஒரு தலைவன் உதயமாகி இருந்தான். ஐய்யப்பசாமி வைத்திருந்த பணம் காணாமல் போய்விட்டதென்றும் அதை ஈடு செய்து நாங்கள் செல்லலாம் என்றும் உத்தரவு இட்டான். தரிசனம் எல்லாம் முடிந்து திரும்பும் எங்களிடம் இருந்த எல்லாப் பணத்தையும் (சுமார் ரூ.300-/ தேறியது என்று நினைவு )அந்தத் தலைவனிடம் கொடுக்க உடனே அவன் “ போலாம்..ரைட் “ என்று உத்தரவிட தலை தப்பியது என்று நாங்கள் திரும்பினோம்.



            அன்றிலிருந்து எனக்கு ஐயப்ப சாமிகள் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் கணிசமாகக் குறைந்து விட்டது. அதன் பிறகு பத்தாண்டுகளுக்கு முன் என் பேரன் மகன் மனைவியுடன் சபரிமலைக்குச் சென்றுவந்தேன். வசதிகள் கூடிவிட்டன. சபரிமலைப் பயணம் அவ்வளவு கடினமல்ல என்று தோன்றுகிறது. ஆனால் கூட்டம் கும்மி யடிக்கிறது.


          என்னவெல்லாமோ எழுத மனம் விழைகிறது. ஆனால் உண்மை 
பக்தர்கள் மனம் நோகுமே என்று தவிர்க்கிறேன்.
------------------------------------------------------------