செவ்வாய், 28 டிசம்பர், 2021

ஆணின்சிம்ப்லிசிடிபெண்ணின் காம்ப்லிசிடி

 அவளது டைரி

இன்று மாலையிலிருந்தே அவன் அவனாயில்லை
மாலையில் காஃபி க்ளப்பில் சந்திக்க ஏற்பாடு.
தோழிகளுடன் ஷாப்பிங் செய்ததில் தாமத மாயிற்று
பார்த்தவன் ஒரு ஹாய் கூடச் சொல்லவில்லை
கடுகடு என இல்லாவிட்டாலும் ஒரு சுரத்து இல்லை.
என்ன பிணக்கமோ காரணம் தெரியவில்லை
என் மேல் கோபமா எனக் கேட்டேன்.இல்லையென்றான்
நான் அவனை மிகவும் நேசிப்பதாகக் கூறினேன்.
பதிலாய் வந்தது ஒரு வரண்ட சிரிப்பு.
என்னைப் பார்த்து அவனும் நேசிப்பதாய் ஏன்
சொல்லவில்லை ஏதும் பேசாமல் கார் ஓட்டினான்
எனக்கு அழுகை அழுகையாய் வந்தது.
வீட்டுக்கு வந்தவன் தொலைக்காட்சிப்
பெட்டியை முடுக்கினான். எந்த சானலும்
பார்க்காமல் மாற்றிக் கொண்டே இருந்தான்
படுக்கையில் வீழ முடிவு செய்தேன் வந்ததும்
அவனிடம் கேட்க எண்ணியிருந்தேன் வந்தவன்
வந்தவேகத்தில் உறங்கியும் போனான்
அவனுக்கு வேறு யாரிடமோ லயிப்பா.
நினைக்கவே அச்சமாயிருந்தது. கண்ணீர்
வடித்தவள் அழுகையிலேயே உறங்கிப் போனேன்


அவனது டைரி

இன்று இந்தியா கிரிக்கட் டெஸ்டில்
இங்கிலாந்திடம் தோற்றது. சே  டாம் இட்..!
         --------------------
ஆணின் simplicity vs பெண்ணின் complicity...?
       ------------------------ 

சனி, 25 டிசம்பர், 2021

என்னைப்போல் அவனா அவனைப் போல் நானா

 


          
நாளும் பொழுதும் என் நாவில்

           தவறாது வந்தமரும் முருகா,

           எனக்கு உன்னைப் பிடிக்கும்.

 

முருகு என்றால் அழகு

அழகு என்றால் முருகன்

என் கண்ணுக்கும் சிந்தைககும்

இந்த அண்டமே அழகாகத் 

தெரியும்போது அது நீயாகத்தானே 

இருக்க வேண்டும்தெரிய வேண்டும்

 

            அழகை ஆராதிப்பவன் உன்னை 

            ஆராதிப்பதில் முரண் எங்குள்ளது.?

 

முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும் 

உன்னைப் பற்றிய கதைகள் பிடிக்கும் 

ஏன் எனக்குப் பிடிக்கவேண்டும் என்றென்

மூளையைக் கசக்கினால் ,உன்னைக் கூறும் 

கதைகள் மூலம் நமக்குள் இருக்கும் 

சமன்பாடு நன்றாகத் தெரிகிறது

 

            உன் தந்தையின் பெயர் மகாதேவன்.

            உன் தாயின் பெயர் பார்வதி,

            உன் பெயர் பாலசுப்பிரமணியம்.

            என் தந்தையும் மகாதேவன்
  
          என் தாயும் பார்வதி
            
நானும் பாலசுப்பிரமணியம்.
            
புரிகிறதா நமக்குள்ள ஒற்றுமை

கந்தா, குமரா எனக்கு உன் கோபம் பிடிக்கும்.
பந்தயத்தில் நீ தோற்க உன் பெற்றோரே
வழி வகுக்க வந்த கோபம் தணிய
பழனிமலை மீதேறி தண்டம் பிடித்த
கதையில் உன் கோபம் பிடிக்கும்
நேர்வழி கொள்ளாது குறுக்கு வழியில்
வென்றால் பின் வாராதா கோபம்.?
எனக்கும் வரும்..

             
பிரணவத்தின் பொருள் அறியா
             
பிரம்மனின் ஆணவம் அடக்க
             
அவனை நீ சிறை வைத்தாய்.
             
உனக்குத் தெரியுமாகற்பிப்பாயா
        
     என்றுன் அப்பன் உனைக்கேட்க
             
பொருளுணர்த்தி நீ தகப்பன் சாமியான
             
கதை எனக்குப் பிடிக்கும்.
             
அறியாதார் யாரேயாயினும் நானறிந்தால்
             
கற்பித்தல் எனக்குப் பிடிக்கும்.

புரமெரித்தவன் நுதல் உதிர்த்த
ஜ்வாலையில் உருவானவன் நீ.
தேவர்களின் அஞ்சுமுகம் தோன்ற
ஆறுமுகம் காட்டிஅவர் நெஞ்சமதில்
அஞ்சேல் என வேல் காட்டி,
சூரபதுமன் உடல் பிளந்து
இரண்டான உடலை மயிலென்றும்,
சேவல் என்றும் ஆட்கொண்ட உன்
அருள் எனக்குப் பிடிக்கும்.
எதிரியை நேசித்தல் எனக்கும் பிடிக்கும்.

              
நாவல் பழம் கொண்டு,
             
அவ்வைக் கிழவியின் தமிழ்
             
ஆழத்தின் மயக்கம் தெளிவித்த
            
உன் குறும்பு எனக்குப் பிடிக்கும்.
            
தமிழைக் குத்தகை எடுத்து
             
கொள்முதல் செயவதாய்க் கருதும்
            
சிலரைச் சீண்டுதல் எனக்கும் பிடிக்கும்.

தேவசேனாதிபதி  உனக்குப் பரிசாக
வந்த தெய்வானைக் கரம் பிடித்த
கந்தா உன் கருணை எனக்குப் பிடிக்கும்.
மனமுவந்து செய்த பணிக்கு மணமுடிப்புப்
பரிசானால் எனக்கு அது ஒப்புதலே
ஆக அதுவும் எனக்குப் பிடிக்கும்.

             
ஆனைமுகன் அண்ணன் துணை கொண்டு,
     
          காதல் குறமகள் வள்ளியின் கரம் பிடிக்க,
              
நீ நடத்திய நாடகங்கள் எனக்குப் பிடிக்கும்.
              
தம்பியின் துணை நாடி கைத்தலம் பற்றிய
              
எனக்கு காதலும் பிடிக்கும்.

அசை  சீர் தளையுடன் மரபு மாறா
யாப்பிசை எனக்குத் தெரியவில்லை.
தெரிந்ததை அறிந்தவரை மனசில் பட்டவரை,
எனக்குனை ஏன் பிடிக்கும் என்றே கூறியுள்ளேன்
உனக்கும் என்னைப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
========================================
=





புதன், 22 டிசம்பர், 2021

மொழி மாற்றம்செய்யும்போது

when I was home alone

I was happy thinking about the freedom
But without you it was actually boredom
The fights we have and the love we share
I missed it all and wanted nothing but care
Time passed
Oh I never knew it was cause I was thinking only about you
Things have changed  and so have I
I don’t know whether it is good or bad
But my love  always  was you mom
You were the Sun rays that woke me up
And the moon that put me to sleep
Like that I convinced  myself that you were there within myself
You are the one and only one who is so complete and so damn sweet
You are mine and you make me shine
Mom you are the best
Love you mom


தளைகளும் கட்டுப்பாடும் அற்ற தனிமையில்
நானிருந்தபோது விடுதலை உணர்விருந்தது.
ஆனால் நீ இல்லாதது வெறுமை உணர்த்தியது
அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

உன் உதிரத்தின் உயிராய் தொப்புள் கொடி
உறவாய் உதித்தவன் நான்.காலங் கடந்து
உணர்கிறேனோஅம்மாநீயின்றி நானில்லை என்று ?. 

என்னுள் மாற்றங்கள் நிகழ்கிறது நான் அறிவேன்
அவை நல்லதோ அல்லதோ நானும் அறியேன் -ஆனால்
அறிகிறேன் அம்மாஎன் அன்பு என்றும் மாறாதது.

விடியலில் என்னை எழுப்பும் ஆதவன் நீ
அந்தியில் என்னை உறக்கும் நிலவும் நீ
என் எண்ணத்தில் உன்னை நிறுத்தி
நீயில்லா வெறுமையை விரட்டினேன்.

இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ
எல்லாம் எனக்கு நீயே அம்மா உலகில் சிறந்தவள் 
நீ உன்னை நேசிக்கிறேன் நான்





ஞாயிறு, 19 டிசம்பர், 2021

ஐந்தும் இரண்டும்ஒரு கதை மீள்பதிவாக

 


ஐந்தும இரண்டும்..........( ஒரு சிறு கதை )
------------------------

       1952-ம் வருட நடுவில் அவருக்குக் கோயமுத்தூரிலிருந்து
வெல்லிங்டனுக்கு மாற்றலாகி இருந்தது.அப்பர் கூனூரில் வீடு
SIMS PARK-ல் இருந்து அரை கிலோமீட்டர் தூரம் கூட இருக்காது.
பூங்காவின் வாயில் எதிரே PASTEUR INSTITUTE.அதே ரோடில்
கீழே இறங்கினால்சற்று தூரத்தில் வலது புறம் ஒரு பேரிக்காய்த்
தோப்பு.கூடவே நிறைய ஆரஞ்சு மரங்களும் ஸிம்ஸ் பார்க்குக்கு
சற்று மேலேஒட்டிய நிலையில் St ANTONY"S HIGH SCHOOL.
வீட்டின் எதிரே நின்று பார்த்தால் TANERIFF மலை. அதிலிருந்து
விழும் அருவி வெள்ளித் தகடுபோல் தகத்தகாயமாகப்
பிரகாசிக்கும். அதனாலேயே அந்த வீட்டிற்கு டானெரிஃப் வ்யூ
என்று பெயர். பிள்ளைகளுக்காக பள்ளியருகிலேயே வீடு
பார்த்திருந்தார்.அவருக்கு அலுவலகத்துக்கு சுமார் மூன்று
நான்கு மைல்கள் நடக்க வேண்டும்.

      வீட்டைச் சுற்றி மரங்கள்.அடுத்து வீடு என்று கிடையாது.
தோப்புக்குள்ளே சென்றால் வீட்டின் பின்புறம் ஒன்றிரண்டு
வீடுகள். பெரிய பெரிய பேரிக்காய்கள் கைக்கு எட்டிய படி
காய்த்துத் தொங்கிக் கொண்டிருக்கும். தேவைப்பட்ட அளவு
பறிக்கலாம், தின்னலாம்.

      வாழ்க்கையின் மத்திய காலம் ஆனால் அனுபவம் என்னவோ
அதைப்போல் இரண்டு பாகம். என்னதான் அனுபவமிருந்தாலும்
வாழ்க்கையில் கற்க வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது
என்பதை உணர்த்த நடந்த நிகழ்ச்சிதான் அது.

       உடல் சற்றே நலக்குறைவாக இருந்ததால்,அலுவலகத்துக்கு
விடுப்பு எடுத்திருந்தார்.காலையிலிருந்து தலைவலி;ஜுரம்
வருவதுபோல் அறிகுறிகள். டாக்டரிடம் காண்பிக்கலாம் எனில்
எதற்கு வீண் செலவு என்ற எண்ணம். மேலும் கையில் இருப்பு
என்னவோ ரூபாய் பத்துதான். மாலைவரை பார்ப்போம்.முடியா
விட்டால் டாக்டரிடம் போகலாம்.என்றிருந்தார்.மதியம் மனைவி
வைத்துக் கொடுத்த கஞ்சியைக் குடித்துவிட்டு சிறிது படுத்து
எழலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது வாசலிலிருந்து
“ ஹர ஹர மஹாதேவ, ஓம் நமசிவாய” என்ற குரல் கேட்டு,
எட்டிப் பார்த்தார். அங்கே ஒருவர். அவரை எப்படி வர்ணிப்பது.?
பிச்சைக்காரனா, பைத்தியக்காரனா, சாமியாரா, முனிவரா,
ஒன்றும் புரியாத நிலையில் ,பட்டை பட்டையாய் விபூதியுடன்
ஜடாமுடியோடு வந்தவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் வீட்டிற்கு
உள்ளே வந்து விட்டார். என்ன செய்வது என்று தம்பதிகள் குழம்பிக்
கொண்டிருந்தபோது வந்தவர், “உங்களுக்கு நலம் உண்டாகட்டும்.
ஓம் நமசிவாய. நான் இவ்வளவு நாள் இமயமலையில் தபசு செய்து
கொண்டிருந்தேன். நீ செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.
தெற்கே போ ,என்று எனக்கு ஆணை கிடைத்தது.நேராக வந்து
விட்டேன். ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
முதலில் உன்னைப் போல நல்லவர்களிடம் பணம் வசூலிக்க
வேண்டும் என்ன.? தருவாயா.?” என்றுகையைப் பிடித்துக்
கொண்டு கொஞ்சம் அதட்டலாகவே கேட்டார்.

      சாமியார் வந்ததிலிருந்தே ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டில்
விட்டதுபோலுணர்ந்த அவர் ஏதாலோ கட்டுண்டது போல் மேலும்
கீழும் சரியென்று தலை ஆட்டினார். அந்த சாமியார் சுவரருகே
சென்று அதைக் கொஞ்சம் கிள்ளி அதை அவரிடம் கொடுத்து,
முகர்ந்து பார்க்கச் சொன்னார். ஒரே கற்பூர வாசனை. அவருடைய
கையைப் பிடித்துக் கொண்ட சாமியார் ”என்ன....அன்னதானத்துக்கு
எனக்கு 5-/ ரூபாய் தருவாயா.?”-என்று கேட்டார். “ ஓ.! பேஷாகத்
தருகிறேனே “,என்று இவரும் ஒப்புக்கொண்டார்.

“எனக்குப் பணம் ஒன்றும் வேண்டாம். வெறுமே உன்னை
சோதித்துப் பார்த்தேன்.அவ்வளவுதான்” என்றவர் வீட்டு
மனையாளிடம் அடுப்பிலிருந்துக் கொஞ்சம் சாம்பல் எடுத்துவரக்
கட்டளையிட்டார். அந்த அம்மணியும் ஓடிப்போய் சிறிது
சாம்பலை எடுத்துவந்து சாமியாரிடம் கொடுத்தார்.சாமியார்
அதை அவரிடமே கொடுத்து முகர்ந்து பார்க்கச் சொன்னார். அது
வும் கற்பூர வாசனையுடன் விளங்கியது. சாமியார் அவரிடம்
அவர் கையைப் பிடித்துக் குலுக்கி, “நீ எனக்கு 2-/ ரூபாய் தருவாயா”
என்று கேட்டார். அவரும் ஒப்புக்கொண்டார்.அவரிடமும் பணம்
வேண்டாம் என்று சொல்லி, வெளியே போகக் கிளம்பினார்.
பிறகு என்னவோ நினைத்துக் கொண்டவர் போல் “அன்னதா
னத்துக்கு உங்கள் பங்கு அவசியம். நீங்கள் தருவதாகச் சொன்ன
ரூபாய் ஐந்தும் இரண்டும் தாருங்கள் , ” என்றார்.

      மாலை டாக்டரைப் பார்க்க என்று வைத்திருந்த ரூ,10-ல் ஏழு
ரூபாயை சாமியாரிடம் கொடுத்து வணங்கி நின்றார்கள்.பணம்
பெற்றுக்கொண்ட சாமியார் போய் விட்டார்.

      சிறிது நேரம் பிரமை பிடித்தவர்கள் போல் உட்கார்ந்திருந்த
அவர்கள்சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு நடந்ததை
யோசித்துப் பார்த்து தாங்கள் ஏமாந்து விட்டதை உணர்ந்தார்கள்.

     வேண்டாம் வேண்டாம் என்பவர்களைப் பார்த்தாலேயே
அவர்களுக்கு ஐந்தும் இரண்டும் ஏழு என்று நினைவுக்கு வரும்.