ஞாயிறு, 19 டிசம்பர், 2021

ஐந்தும் இரண்டும்ஒரு கதை மீள்பதிவாக

 


ஐந்தும இரண்டும்..........( ஒரு சிறு கதை )
------------------------

       1952-ம் வருட நடுவில் அவருக்குக் கோயமுத்தூரிலிருந்து
வெல்லிங்டனுக்கு மாற்றலாகி இருந்தது.அப்பர் கூனூரில் வீடு
SIMS PARK-ல் இருந்து அரை கிலோமீட்டர் தூரம் கூட இருக்காது.
பூங்காவின் வாயில் எதிரே PASTEUR INSTITUTE.அதே ரோடில்
கீழே இறங்கினால்சற்று தூரத்தில் வலது புறம் ஒரு பேரிக்காய்த்
தோப்பு.கூடவே நிறைய ஆரஞ்சு மரங்களும் ஸிம்ஸ் பார்க்குக்கு
சற்று மேலேஒட்டிய நிலையில் St ANTONY"S HIGH SCHOOL.
வீட்டின் எதிரே நின்று பார்த்தால் TANERIFF மலை. அதிலிருந்து
விழும் அருவி வெள்ளித் தகடுபோல் தகத்தகாயமாகப்
பிரகாசிக்கும். அதனாலேயே அந்த வீட்டிற்கு டானெரிஃப் வ்யூ
என்று பெயர். பிள்ளைகளுக்காக பள்ளியருகிலேயே வீடு
பார்த்திருந்தார்.அவருக்கு அலுவலகத்துக்கு சுமார் மூன்று
நான்கு மைல்கள் நடக்க வேண்டும்.

      வீட்டைச் சுற்றி மரங்கள்.அடுத்து வீடு என்று கிடையாது.
தோப்புக்குள்ளே சென்றால் வீட்டின் பின்புறம் ஒன்றிரண்டு
வீடுகள். பெரிய பெரிய பேரிக்காய்கள் கைக்கு எட்டிய படி
காய்த்துத் தொங்கிக் கொண்டிருக்கும். தேவைப்பட்ட அளவு
பறிக்கலாம், தின்னலாம்.

      வாழ்க்கையின் மத்திய காலம் ஆனால் அனுபவம் என்னவோ
அதைப்போல் இரண்டு பாகம். என்னதான் அனுபவமிருந்தாலும்
வாழ்க்கையில் கற்க வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது
என்பதை உணர்த்த நடந்த நிகழ்ச்சிதான் அது.

       உடல் சற்றே நலக்குறைவாக இருந்ததால்,அலுவலகத்துக்கு
விடுப்பு எடுத்திருந்தார்.காலையிலிருந்து தலைவலி;ஜுரம்
வருவதுபோல் அறிகுறிகள். டாக்டரிடம் காண்பிக்கலாம் எனில்
எதற்கு வீண் செலவு என்ற எண்ணம். மேலும் கையில் இருப்பு
என்னவோ ரூபாய் பத்துதான். மாலைவரை பார்ப்போம்.முடியா
விட்டால் டாக்டரிடம் போகலாம்.என்றிருந்தார்.மதியம் மனைவி
வைத்துக் கொடுத்த கஞ்சியைக் குடித்துவிட்டு சிறிது படுத்து
எழலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது வாசலிலிருந்து
“ ஹர ஹர மஹாதேவ, ஓம் நமசிவாய” என்ற குரல் கேட்டு,
எட்டிப் பார்த்தார். அங்கே ஒருவர். அவரை எப்படி வர்ணிப்பது.?
பிச்சைக்காரனா, பைத்தியக்காரனா, சாமியாரா, முனிவரா,
ஒன்றும் புரியாத நிலையில் ,பட்டை பட்டையாய் விபூதியுடன்
ஜடாமுடியோடு வந்தவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் வீட்டிற்கு
உள்ளே வந்து விட்டார். என்ன செய்வது என்று தம்பதிகள் குழம்பிக்
கொண்டிருந்தபோது வந்தவர், “உங்களுக்கு நலம் உண்டாகட்டும்.
ஓம் நமசிவாய. நான் இவ்வளவு நாள் இமயமலையில் தபசு செய்து
கொண்டிருந்தேன். நீ செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.
தெற்கே போ ,என்று எனக்கு ஆணை கிடைத்தது.நேராக வந்து
விட்டேன். ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
முதலில் உன்னைப் போல நல்லவர்களிடம் பணம் வசூலிக்க
வேண்டும் என்ன.? தருவாயா.?” என்றுகையைப் பிடித்துக்
கொண்டு கொஞ்சம் அதட்டலாகவே கேட்டார்.

      சாமியார் வந்ததிலிருந்தே ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டில்
விட்டதுபோலுணர்ந்த அவர் ஏதாலோ கட்டுண்டது போல் மேலும்
கீழும் சரியென்று தலை ஆட்டினார். அந்த சாமியார் சுவரருகே
சென்று அதைக் கொஞ்சம் கிள்ளி அதை அவரிடம் கொடுத்து,
முகர்ந்து பார்க்கச் சொன்னார். ஒரே கற்பூர வாசனை. அவருடைய
கையைப் பிடித்துக் கொண்ட சாமியார் ”என்ன....அன்னதானத்துக்கு
எனக்கு 5-/ ரூபாய் தருவாயா.?”-என்று கேட்டார். “ ஓ.! பேஷாகத்
தருகிறேனே “,என்று இவரும் ஒப்புக்கொண்டார்.

“எனக்குப் பணம் ஒன்றும் வேண்டாம். வெறுமே உன்னை
சோதித்துப் பார்த்தேன்.அவ்வளவுதான்” என்றவர் வீட்டு
மனையாளிடம் அடுப்பிலிருந்துக் கொஞ்சம் சாம்பல் எடுத்துவரக்
கட்டளையிட்டார். அந்த அம்மணியும் ஓடிப்போய் சிறிது
சாம்பலை எடுத்துவந்து சாமியாரிடம் கொடுத்தார்.சாமியார்
அதை அவரிடமே கொடுத்து முகர்ந்து பார்க்கச் சொன்னார். அது
வும் கற்பூர வாசனையுடன் விளங்கியது. சாமியார் அவரிடம்
அவர் கையைப் பிடித்துக் குலுக்கி, “நீ எனக்கு 2-/ ரூபாய் தருவாயா”
என்று கேட்டார். அவரும் ஒப்புக்கொண்டார்.அவரிடமும் பணம்
வேண்டாம் என்று சொல்லி, வெளியே போகக் கிளம்பினார்.
பிறகு என்னவோ நினைத்துக் கொண்டவர் போல் “அன்னதா
னத்துக்கு உங்கள் பங்கு அவசியம். நீங்கள் தருவதாகச் சொன்ன
ரூபாய் ஐந்தும் இரண்டும் தாருங்கள் , ” என்றார்.

      மாலை டாக்டரைப் பார்க்க என்று வைத்திருந்த ரூ,10-ல் ஏழு
ரூபாயை சாமியாரிடம் கொடுத்து வணங்கி நின்றார்கள்.பணம்
பெற்றுக்கொண்ட சாமியார் போய் விட்டார்.

      சிறிது நேரம் பிரமை பிடித்தவர்கள் போல் உட்கார்ந்திருந்த
அவர்கள்சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு நடந்ததை
யோசித்துப் பார்த்து தாங்கள் ஏமாந்து விட்டதை உணர்ந்தார்கள்.

     வேண்டாம் வேண்டாம் என்பவர்களைப் பார்த்தாலேயே
அவர்களுக்கு ஐந்தும் இரண்டும் ஏழு என்று நினைவுக்கு வரும்.










7 கருத்துகள்:

  1. கதையா அல்லது அனுபவமா? ரசிக்கும்படி இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான கதைகள் ஏதோ அனுபவ அடிப்படையைச் சார்ந்ததே

      நீக்கு
  2. அனுபவமே கதையாக இல்லையா சார்?

    இமயமலை அது இது என்று வாசலில் வரும் சாமியார்கள் ஏமாற்றுகாரர்கள்தான். பலரும் செண்டிமென்ட்ஸ் காரணம் ஏமாறுகிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. என்னதான் அந்தக் காலத்தில் இந்தத்தொகை பேருந்து என்றாலும் நல்லவேளை, ஐந்தும் இரண்டுமோடு போச்சே!  அதிகம் ஆசைப்படாத திருட்டு சாமியார் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேண்டாம் வேண்டாம் என்பவர்களைப் பார்த்தாலேயே
      அவர்களுக்கு ஐந்தும் இரண்டும் ஏழு என்று நினைவுக்கு வரும்.

      நீக்கு