வியாழன், 16 டிசம்பர், 2021

பள்ளி நினைவுகள் சில

 

நினைவுகள் சில 

நான் ஃபோர்த் ஃபார்ம் முடித்திருந்தேன். அந்த நேரத்தில் அப்பாவுக்கு வெல்லிங்டனுக்கு மாற்றலாகி இருந்தது. அப்பா அப்பர் கூனூரில் வீடு பார்த்திருந்தார். ஒரு பேரிக்காய் தோப்புக்கு நடுவே ஒரு வீடு. அடுத்தடுத்து வீடுகள் இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்தன. ஸிம்ஸ் பார்க், பாஸ்டியர் இன்ஸ்டிட்யூட் அருகில் வீடு. கோயமுத்தூரிலிருந்து நாங்கள் கூனுருக்கு பஸ்ஸில் வந்தபோது, மாலை நேரமாகி இருந்தது.பழக்கப்படாத குளிர் வெடவெடத்தது. அரை நிஜாரும் சொக்காயும்தான் உடை. இதெல்லாம் இப்போது நினைக்கும்போதுதான்,அந்த அனுபவம் உறைக்கிறது.நாங்கள் அந்த வீட்டில் இருக்கும்போது, சுற்று முற்றும் பேரிக்காய் மரங்களும், ஆரஞ்சு மரங்களும் ஆக கைக்கெட்டிய நிலையில் பழங்கள் .எவ்வளவு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பறித்துத் தின்னலாம்.வீட்டிலிருந்து ஐந்து பத்து நிமிட நடையில் பள்ளிக்கூடம்.செயிண்ட். ஆண்டனிஸ் ஹைஸ்கூல்..பத்தாம் வகுப்பில் சேர்ந்தேன். பள்ளிக்கட்டணம் மாதம் ரூபாய் ஆறேகால் என்று நினைவு.


      பள்ளியில் சேர்ந்த புதிதில் நடந்த சம்பவம் ஒன்று நன்றாக நினைவுக்கு வருகிறது. வகுப்பில் ஆங்கிலப் பாடம் நடக்க இருந்தது. நான் புதிதாக சேர்ந்த பையன். வகுப்பு ஆசிரியர் ப்ரதர். மாண்ட்ஃபோர்ட் என்னிடம் அவர் நடத்திக் கொண்டிருந்த பாடத்தைப்படிக்கச் சொன்னார். ஷேக்ஸ்பியரின் ட்வெல்ஃப்த் நைட் என்ற பாடம். அதில் செபாஸ்டியன், வயோலா என்ற பாத்திரங்கள் வருவர். நான் மிகவும் இயல்பாக தைரியமாகப் படிக்க ஆரம்பித்தேன். VIOLA என்று இடம் வரும்போது, வயோலா என்று படித்தேன். வகுப்பே கொல்லென்று சிரித்தது. எனக்கு அவமானமாகவும் வெட்கமாகவுமிருந்தது. ப்ரதர். மாண்ட்ஃபோர்டும் புன் முறுவலித்துக் கொண்டே வகுப்பை அடக்கி, என்னையும் அமரச் சொன்னார். வகுப்பு முடிந்ததும் என்னருகில் அமர்ந்திருந்த சக மாணவர்களிடம் அவர்கள் கேலியாக சிரித்ததற்குக் காரணம் கேட்டேன்நான் வயோலா என்று படித்தது தவறு என்றும் வியோலா என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்றும் கூறினார்கள். நான் ஒரு ப்ராப்பர் நௌனில் வேற்றுமொழியில் உச்சரிப்பு தவறு என்று கூற முடியாது என்று வாதிட்டேன். யாரும் நம்பவில்லை. கேலியும் தொடர்ந்தது. அடுத்த நாள் ஆங்கிலப் பாடம் நடத்த ப்ரதர் மாண்ட்ஃபோர்டுக்குப் பதிலாக தலைமை ஆசிரியர்,ப்ரதர் ஜான் ஆஃப் த க்ராஸ் வந்தார். அதே பாடத்தை அவர் நடத்தும்போது, வயோலா என்றே படித்தார். அப்போது நான் எழுந்து நின்று முதல் நாள் நடந்த சம்பவத்தைக் கூறினேன். அவர் என்னுடைய நிலை சரியென்று கூறினார்.

அன்று நான் அடைந்த கர்வம், ஆங்கிலப் பாடத்தில் நான் வகுப்பில் முதலாம் மாணவனாக நிலைக்க உறுதுணையாய் இருந்தது. அந்த பள்ளியில் இருந்த காலத்தில் உற்ற நண்பர்களாக இருந்த வெங்கட ராவ், விஸ்வநாதன், தாமோதரன், மற்றும் கால்பந்தாட்ட வீரன் தியோஃபிலஸ் இவர்களையெல்லாம் மறக்க முடியாது.


        பரீட்சை பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தவர்களில் ப்ரத்ர் மாண்ட்ஃபோர்ட், ப்ரதர் ஜான்        ஆஃப் த க்ராஸ், திரு. வேங்கடராம ஐயர், திடு. எம். பி. காமத், திரு. எஸ்.பி. காமத், திரு. தர்மராஜ ஸிவா மறக்க முடியாதவர்கள். ப்ரதர் மாண்ட்ஃபோர்ட் ஐந்தாம் ஃபார்ம் வகுப்பாசிரியர். ;ப்ரதர் ஜா ஆஃப் த க்ராஸ் ஆறாம் ஃபார்ம் வகுப்பாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்;.வேங்கடராம ஐயர் தமிழாசிரியர். எம்.பி. காமத் கணித ஆசிரியர், மற்றும் என்.சி.சி. ஆசிரியர், எஸ்.பி. காமத் சோஷியல் ஸ்டடிஸ்  மற்றும் திரு.சிவா விஞ்ஞான ஆசிரியர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் அவர்கள் தொழிலை தெய்வமாக மதித்தவர்கள். மாணவர்களிடம் பெரும் அன்பு கொண்டவர்கள். ஒவ்வொரு ஆசிரியரையும் நினைவில் நிற்க வைத்த சம்பவங்கள் ஏராளம். ஆனால் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு குறிப்பாவது அவசியம். ஒரு முறை வகுப்பு பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கரும்பலகையில் வினாக்களை எழுதி அதற்கு பதில் எழுதப் பணித்திருந்தார்கள். நான் எப்போதும் முதல் பெஞ்சில் உட்காருபவன். அன்று பரீட்சைக்காக என்னைக் கடைசி பெஞ்சில் உட்கார வைத்தார்கள்.எனக்கு கரும்பலகையில் எழுதியது சரியாகத் தெரியாததால் அடுத்திருந்த மாணவனை எட்டிப் பார்த்து, கேள்விகளை தெரிந்து கொண்டேன். நான் காப்பி அடிப்பதாக எண்ணி தலைமை ஆசிரியரிடம் அனுப்பினார்கள். எனக்கு அழுகை அடக்க முடியவில்லை. நான் வகுப்பில் முதல் மூன்று இடங்களில் வருபவன். ஆதலால் காப்பியடிக்க வேண்டிய நிலையில் நான் இல்லை என்று அழுது கொண்டே வாதாடினேன். என் நிலையைப் புரிந்துகொண்ட தலைமை ஆசிரியர் ப்ரதர் ஜான் என்னை சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி பார்க்கச் சொன்னார். நான் சற்றே அருகில் சென்று பார்க்க முயன்றபோது,என்னைத் தடுத்து, இருந்த இடத்திலிருந்தே நேரம் பார்க்கச் சொன்னார். என்னால் முடியாததால், அவர் என்னிடம் என் கண் பார்வையில் குறையிருப்பதையும், அதை என் தந்தையிடம் கூறும் படியும் கூறி, என்னைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் அளித்தார். அப்போதுதான் என் கண் பார்வையில் குறை இருப்பது தெரிந்தது. இருந்தும் கண் பார்வையின் குறை அறியவும் கண்ணாடி அணியவும் அப்போது முடியவில்லை. பெங்களூர் வந்தபோதுதான் என் மாமா டாக்டரிடம் காட்டிக் குறையறிந்து கண்ணாடி அணிந்தேன். காலம் கடந்து பரிசோதனை செய்ததால் கண்ணாடியின் வீரியமும் அதிகமாக மைனஸ் ஆறு என்ற நிலையில் இருந்தது.


      கணக்கு ஆசிரியர், எம்.பி. காமத் ட்ரிக்னோமெட்ரி பாடம் நடத்தும்போது, ஒரு கதை சொல்லி பாடம் புரிய வைத்தார். அத்தை மாமன் மக்களை ஆங்கிலத்தில் கசின் என்று அழைப்பர். ஒரு முறை எல்லை மீறிய போது அந்தப் பெண், ah cos,..oh sin.  என்று சொல்லி அணைப்பிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டாளாம். Ah Cos என்பது

ADJACENT SIDE /HYPOTANEUS  FOR COSINE என்றும்  OH SIN என்பது OPPOSITE SIDE / HYPOTANEUS  FOR  SINE என்றும் விளங்க வைத்தார். இதையே என் பேரன் விபுவுக்கும் நான் சொல்லிக் கொடுத்தேன். சயின்ஸ் ஆசிரியர் சற்றே குள்ளமானவர். தலைப்பாகை அணிந்திருப்பார். மெல்லிய குரலில் பேசுவார். அவர் பேசுவது கேட்க வேண்டுமானால் வகுப்பில் நிச்சயம் அமைதி காக்கப்பட வேண்டும். மிகவும் கண்டிப்பானவர். அவர் மாணவர்களுக்கு தரும் அதிகபட்ச தண்டனை, வகுப்பில் உள்ள சுவற்றில் பதிக்கப் பட்டுள்ள புத்தக அலமாரிக்கு அடியில் நிற்க வேண்டும். நேராக நிற்க இயலாது. சுவற்றுடன் சேர்ந்து கால்களை சற்றே மடக்கித்தான் நிற்க முடியும். தனிப்பட்ட முறையில் எல்லோரும் சுத்தமாக இருக்க வற்புறுத்துவார். பௌடர் ஸ்னோ போன்றவை உடம்பின் துர்நாற்றத்தை மறைக்கவா என்று கேள்வி கேட்பார். திரு.எஸ்.பி. காமத் சோஷியல் ஸ்டடிஸ் பாடம் நடத்துவார். THE SOLE JUSTIFICATION FOR EXISTENSE IS THE SEARCH FOR TRUTH. என்ற காந்தியின் வாக்கினை எங்களுக்கு முறையாகப் பயிற்றுவித்தவர். சமுஸ்கிருதமும் தமிழுங் கற்று பாரதப் பண்பாட்டினை வளர்க்க வேண்டும் என்று பாடங்களூடே பயிற்றுவித்தவர் எங்கள் தமிழாசிரியர். இவர்களைத் தவிர பள்ளி கரஸ்பாண்டண்ட்  ஆக ப்ரதர் க்ளாடியஸ் இருந்தார். பள்ளி மாணவர்களை அவர்களுடைய குழந்தைகள் போல நடத்துவார். ஹூம்.! அது ஒரு கனாக் காலம். ! 



ST.ANTONY"S HIGH SCHOOL-ல் ஃபிஃப்த் ஃபார்ம் படித்துக் கொண்டிருந்தபோது

பள்ளி ஆண்டு விழாவில் ஒரு நாடகத்தில் நடித்தேன். ஆங்கில நாடகம். கடன்

வாங்கி ஏமாற்றியவன் அவனுக்காக வாதாடும் வக்கீலுக்கும் “பெப்பே”என்று 

கூறும் நகைச்சுவை நாடகம். நாடகத்தில் நடிக்க உடை வேண்டும்.கால்சராய்

(பேண்ட் )எதுவும் என்னிடம் இல்லை.அரைநிஜார்தான் இருப்பு. அதற்காக நான்

ஒருவனிடம் இரவல் வாங்கி அதை உடுத்த நான் பட்ட பாடு, இப்போதும் 

சிரிப்பாக வருகிறது.பேண்ட் இரவல் கொடுத்த பையன் என்னைவிட மிகவும் 

உயரமானவன். அவனுடைய பேண்ட் அளவு எனக்கு மிகவும் நீளமானது.

கணுக்கால் அருகே மடித்து என்னுடைய அளவுக்குக் கொண்டுவந்து உடுத்தி 

நடித்தேன். அந்த பேண்டின் நிறம் கூட நினைவிருக்கிறது.ஊதாவும் சிவப்பும் 

கலந்த நிறம். !நாடகம் நடிக்கும்போது அப்பா முன் வரிசையில் உட்கார்ந்து 

இருந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு நடிக்க பயம் ஏற்பட்டு, ஏதேதோ

கூறியிருக்கிறேன். அதுவே அந்த பாத்திரத்துக்கு ஏற்புடையதாக இருந்ததால் 

நன்றாக நடித்ததாய் பெயர் கிடைத்தது. ஒரு சமயம் அந்த அனுபவம்தான் 

பிற்காலத்தில் நான் நாடகங்கள் எழுதி, நடிக்கவும் ,இயக்கவும் உதவி 

செய்ததோ என்னவோ



 நாங்கள் படிக்கும்போது ஹிந்தியும் ஒரு பாடம். ஆனால் இறுதித் தேர்வுக்கு 

அதில் தேற வேண்டிய கட்டாயம் இருக்க வில்லை. அப்போது படித்த ஹிந்திப்

படம் இப்போதும் நினைவில் இருக்கிறது.”மானே ஹம்கோ ஜன்ம தியா ஹை. 

உசி கா தூத் பீகர் ஹம் படே ஹுவே ஹைன்”அந்த ஹிந்தி பண்டிட் வகுப்பு 

நடத்தும்போது அநேகமாக எல்லோரும் பெஞ்சின் மேல் இருப்போம். ஏதோ 

தோடா தோடா ஹிந்தி வருகிறதென்றால் அது அந்த ஆசிரியர் உபயம்.

                    -----------------------------------  


                    


 




20 கருத்துகள்:

  1. நானும் செயின்ட் ஆண்டனீஸ் தான்.  ஆனால் தஞ்சாவூர்!!

    பதிலளிநீக்கு
  2. பேரிக்காய், ஆரஞ்சு...   தோட்டத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும்...

    இப்படி சுலபமாக சாப்பிடக் கிடைக்கும் பழங்கள் நாளடைவில் அலுத்து விடும். அது அப்படி சல்லிசாகக் கிடைக்கும்வரை!

    பதிலளிநீக்கு
  3. பொதுவாக உங்கள் பதிவில் உங்கள் நினைவாற்றல் வெளிப்படுகிறது.  உங்கள் திறமைகளின் பல்வேறு முகங்கள் வெளிப்படுகிறது. 

    பள்ளிக்காலங்கள் சுவாரஸ்யமானவை, மறக்க முடியாதவை.

    துள்ளி திரிந்ததொரு காலம், பள்ளிப் பயின்றதொரு காலம் காலங்கள் போனது பூங்கொடியே பூங்கொடியே 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக உங்கள் பதிவில் உங்கள் நினைவாற்றல் வெளிப்படுகிறது. உங்கள் திறமைகளின் பல்வேறு முகங்கள் வெளிப்படுகிறது. மிகவும் புகழ்கிறீர்கள்

      நீக்கு
  4. அந்த கர்வம் மிகவும் அருமை ஐயா... தங்களின் ஞாபக ஆற்றல் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  5. பள்ளிக்காலத்து நினைவுகள் எப்போதும் அழிவதில்லை. செய்த குறும்புகள் மற்றும் கிடைத்த தண்டனைகள் உட்பட. 

    Trignometry யில் All silver Tea cups ஞாபகம் இருக்கிறதா? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. மிக ரசித்தேன்.

    அப்போதிருந்த ஆசிரியர்கள் இப்போது இல்லை எனத் தோன்றுகிறது.

    காலத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள். நல்ல நினைவு சக்தி

    பதிலளிநீக்கு
  7. உங்கள் நினைவுத்திறனுக்கு ஒரு சபாஷ்!

    ரொம்பவும் ரசித்து வாசித்தேன் சார். எனக்கு அமைந்த பள்ளி ஆசிரியர்களும் மிக அருமையான ஆசிரியர்கள்.

    உங்கள் ஆங்கில வகுப்பு அனுபவங்களை வாசித்து வந்த போது நான் அப்படியே என் பள்ளி நினைவுகளுக்குக் குறிப்பாக ஆங்கில வகுப்பு மற்றும் கணக்கு வகுப்புகள் நினைவுகள் வந்தன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுத்திறனுக்கு ஒரு சபாஷ்!அவைதானே துணை

      நீக்கு
  8. உங்கள் திறமைகள் அசாத்தியம் சார். நிஜமாகவே பன்முகத் திறமைகள் உடையவர் நீங்கள். நாடகம் எழுதி இயக்குவது என்பது அத்தனை சுலபமில்லை.

    கைக்கு எட்டிய அளவு ஆரஞ்சு, பேரிக்காய்...அட! சுவையான நாட்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. நல்ல நினைவுகள். இனிய நினைவுகள். அக்கணங்களை நாம் மீண்டும் பெற இயலாது எனவே பல சமயங்களில் நம் இனிய நினைவுகள் தான் நம்மை உற்சாகப் படுத்தித் துணையாக இருக்கின்றன.

    உங்கள் பள்ளி ஆங்கில வகுப்புகள் போன்று என் காலத்தில் இருந்ததில்லை. அதுவும் குன்னூர் ஊட்டியில் பள்ளிகள் நல்ல பள்ளிகள் என்றும் கேட்டதுண்டு.

    அருமையான நினைவுகள் மற்றும் உங்கள் நினைவுத்திறனும் பாரட்டிற்குரியது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கிருந்த ஹெட் மாஸ்டர் என்மகன்களின் ப்ரின்சிபாலாகவும்வந்தார் திருச்சியில்

      நீக்கு