சனி, 25 டிசம்பர், 2021

என்னைப்போல் அவனா அவனைப் போல் நானா

 


          
நாளும் பொழுதும் என் நாவில்

           தவறாது வந்தமரும் முருகா,

           எனக்கு உன்னைப் பிடிக்கும்.

 

முருகு என்றால் அழகு

அழகு என்றால் முருகன்

என் கண்ணுக்கும் சிந்தைககும்

இந்த அண்டமே அழகாகத் 

தெரியும்போது அது நீயாகத்தானே 

இருக்க வேண்டும்தெரிய வேண்டும்

 

            அழகை ஆராதிப்பவன் உன்னை 

            ஆராதிப்பதில் முரண் எங்குள்ளது.?

 

முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும் 

உன்னைப் பற்றிய கதைகள் பிடிக்கும் 

ஏன் எனக்குப் பிடிக்கவேண்டும் என்றென்

மூளையைக் கசக்கினால் ,உன்னைக் கூறும் 

கதைகள் மூலம் நமக்குள் இருக்கும் 

சமன்பாடு நன்றாகத் தெரிகிறது

 

            உன் தந்தையின் பெயர் மகாதேவன்.

            உன் தாயின் பெயர் பார்வதி,

            உன் பெயர் பாலசுப்பிரமணியம்.

            என் தந்தையும் மகாதேவன்
  
          என் தாயும் பார்வதி
            
நானும் பாலசுப்பிரமணியம்.
            
புரிகிறதா நமக்குள்ள ஒற்றுமை

கந்தா, குமரா எனக்கு உன் கோபம் பிடிக்கும்.
பந்தயத்தில் நீ தோற்க உன் பெற்றோரே
வழி வகுக்க வந்த கோபம் தணிய
பழனிமலை மீதேறி தண்டம் பிடித்த
கதையில் உன் கோபம் பிடிக்கும்
நேர்வழி கொள்ளாது குறுக்கு வழியில்
வென்றால் பின் வாராதா கோபம்.?
எனக்கும் வரும்..

             
பிரணவத்தின் பொருள் அறியா
             
பிரம்மனின் ஆணவம் அடக்க
             
அவனை நீ சிறை வைத்தாய்.
             
உனக்குத் தெரியுமாகற்பிப்பாயா
        
     என்றுன் அப்பன் உனைக்கேட்க
             
பொருளுணர்த்தி நீ தகப்பன் சாமியான
             
கதை எனக்குப் பிடிக்கும்.
             
அறியாதார் யாரேயாயினும் நானறிந்தால்
             
கற்பித்தல் எனக்குப் பிடிக்கும்.

புரமெரித்தவன் நுதல் உதிர்த்த
ஜ்வாலையில் உருவானவன் நீ.
தேவர்களின் அஞ்சுமுகம் தோன்ற
ஆறுமுகம் காட்டிஅவர் நெஞ்சமதில்
அஞ்சேல் என வேல் காட்டி,
சூரபதுமன் உடல் பிளந்து
இரண்டான உடலை மயிலென்றும்,
சேவல் என்றும் ஆட்கொண்ட உன்
அருள் எனக்குப் பிடிக்கும்.
எதிரியை நேசித்தல் எனக்கும் பிடிக்கும்.

              
நாவல் பழம் கொண்டு,
             
அவ்வைக் கிழவியின் தமிழ்
             
ஆழத்தின் மயக்கம் தெளிவித்த
            
உன் குறும்பு எனக்குப் பிடிக்கும்.
            
தமிழைக் குத்தகை எடுத்து
             
கொள்முதல் செயவதாய்க் கருதும்
            
சிலரைச் சீண்டுதல் எனக்கும் பிடிக்கும்.

தேவசேனாதிபதி  உனக்குப் பரிசாக
வந்த தெய்வானைக் கரம் பிடித்த
கந்தா உன் கருணை எனக்குப் பிடிக்கும்.
மனமுவந்து செய்த பணிக்கு மணமுடிப்புப்
பரிசானால் எனக்கு அது ஒப்புதலே
ஆக அதுவும் எனக்குப் பிடிக்கும்.

             
ஆனைமுகன் அண்ணன் துணை கொண்டு,
     
          காதல் குறமகள் வள்ளியின் கரம் பிடிக்க,
              
நீ நடத்திய நாடகங்கள் எனக்குப் பிடிக்கும்.
              
தம்பியின் துணை நாடி கைத்தலம் பற்றிய
              
எனக்கு காதலும் பிடிக்கும்.

அசை  சீர் தளையுடன் மரபு மாறா
யாப்பிசை எனக்குத் தெரியவில்லை.
தெரிந்ததை அறிந்தவரை மனசில் பட்டவரை,
எனக்குனை ஏன் பிடிக்கும் என்றே கூறியுள்ளேன்
உனக்கும் என்னைப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
========================================
=





10 கருத்துகள்:

  1. எனக்கு(ம்) உங்கள் கவிதைகளும் பிடிக்கும்!

    பதிலளிநீக்கு
  2. உங்களையும், முருகனையும் பொருத்தியது அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  3. இதைத்தான் தோழமை பக்தி என்பதா? உரைநடைக் கவிதை ஆனாலும் பூந்தானத்து ஞானப்பான போன்று  உள்ளது. நன்று.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. யாப்பிசை இல்லை என்றால் என்ன சார்? மிக அழகாக எழுதியிருக்கீங்க. முருகனை எதற்கெல்லாம் பிடிக்கும் என்று சொல்லியது நன்று. எனக்கும் உங்களின் கவிதைகள் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு