தந்தையும் மகனும்.
---------------------------
ஆடிவரும் மைந்தன் ஓடிவரக் கண்டு
ஓடிவந்தால் வீழ்ந்து விடுவாய் -காயம் படும்
கவனம் கவனம் என்றே பதறினாள்
ஒன்றே நன்றெனப் பெற்றெடுத்த தாய்.
இன்று நான் பள்ளியில் பந்தயத்தில்
வென்ற நாள் நானே முதல்வன், நானே முதல்வன்
எனை வெல்ல இங்கு யாருமில்லை என் வேகம் அதிவேகம்.
அப்பா, உன்னையும் நான் வெல்வேன்
பந்தயத்தில் என்னோடு ஓட நீ தயாரா.?
என்றே கேட்ட மகனிடம்
ஆறு வயதுச் சிறுவன் நீ ஒன்றும் அறியாத பாலகன்
உன்னோடு நான் ஓடினால் நானொன்றும் அறியாதவன்
என்றென்னைப் பழிப்பார்கள் நானில்லை ஓடுவதற்கு
என்னிடம் நீ தோல்வி காண விருப்பமில்லை எனக்கு
என்றே அப்பனும் மழுப்பிட
ஒப்புக்கொள் உன்னால் ஓடமுடியாது
ஓட்டத்தில் என்னை வெல்ல முடியாது என்றே
தன கீர்த்தி நிலை நிறுத்த சவாலுக்கு அழைத்தான் மகன்.
மகனை ஓட்டத்தில் வெல்ல விட மகிழ்ச்சிதான்
இருந்தாலும் வாழ்க்கைப் பந்தயத்தில் பங்கு பெற
இதையும் ஒரு பயிற்சியாகக முயற்சிப்போமே
என்றே மகனைப் பெற்றவனும் முனைந்து வந்தான்.
ஒடுகளமும் தூரமும் ஒழுங்காக நிர்ணயிக்கப்பட
ஓட்டமும் துவங்க இலக்கு நோக்கி முன்னேறினான் தந்தை.
அப்பனை முந்தவிட்டால் நாம் தோற்போம் ,அது
நடக்கக் கூடாது என்றே வேகமெடுத்தான் சின்னவன்.
அன்னவனை சற்றே முந்தவிட்டும் பின் தான் முந்தியும்
பந்தய நுணுக்கங்கள் நன்றாய் புரிய விட்டபின்
மகனை வெல்ல விட்டான் ,மகனின் வெற்றியில்
மனம் மகிழ்ந்து தோற்று நின்றான் தந்தை.
என்னை வெல்ல இங்கு யாராலும் முடியாது,
நானே முதல்வன், நானே முதல்வன் என்றே
முழங்கி ஓடிய மகனைப் பரிவுடன் கண்ட தந்தை
தன்னையும் அறியாமல் தன தந்தையை எண்ணினான்.
இதுபோல் தானே அன்றொரு நாள் என்
தந்தை என்னை ஓடவிட்டு தன தோல்வியில்
மகிழ்ந்தபோது நானும் எண்ணினேன்.
தோல்வி கண்டு துவளாது வெற்றியைத் துரத்த
என்னை முந்தவிட்டு ஊக்குவித்த தந்தையின்
அன்பும் நேசமும் அன்று அறிந்திலேன் இன்று
உணர்கிறேன் என்று எண்ணவும் அவன் இதழ்களில்
விரிகிறது ஒரு முறுவல், கண்களில் கசிகிறது இரு துளிக் கண்ணீர்.
============================================