ஞாயிறு, 22 மே, 2011

அவதாரக் கதை...பாகம் 3 .......பன்றியாக..

அவதாரக் கதை--பாகம் 3...பனறியாக......
...........................................................................

ஜயன், விஜயன்  என்றிருவர் வைகுண்டக் காவலாளிகள
கடமை தவறாது பணி புரிந்தவருக்கு ஆணவம் அதிகரிக்க,
ஒரு நாள் திருமகளுக்கும் அனுமதி தர மறுத்தவர்,
மாலே போற்றும் சனகாதி முனிவரையும் தடுத்ததில்
சினந்தறியாத  முனிவரும் சினம் கொண்டு "பாமரருக்கு
ஏற்படும் ஆணவம் கொண்ட நீங்கள் பூமியில் பிறக்கக்
கடவீர்,"  என்றே சாபமிட்டார்.


திருமகளையும் முனிவரையும் அனுமதியாத காவலர்
பூமியில் பிறப்பதே நன்று என்று திருமாலும் எண்ணினார்.


அகந்தை அகன்று ஆழ்ந்த வருத்தத்தில் சாபவிமோசனம்
வேண்டியவருக்கு ,கருணாமூர்த்தி முனிவர்கள் ஒப்புதலுடன்
பக்தி பூண்டு நூறு பிறவி எடுத்து மீளவா இல்லை விரோதியாக
எதிர்த்து, மூன்று பிறவி எடுத்து மீளவா என்று வினவினார்.

நூறு பிறவி எடுத்து மீள நாட்படும் என்பதால்
மூன்றே பிறவியில் எதிரியாக பிறக்கவே விருப்பம்
தெரிவித்தவர் வேண்டுதல் ஒன்றைக் கூடவே வைத்தனர்.
எதிரியாக பிறப்பெடுத்தாலும் பரந்தாமன் கையால்தான்
மரணம் என்ற வரத்தைப் பெற்றனர்.

சாபம் அனுபவிக்க ,காஷ்யப முனிவருக்கு இரணியாட்சகன்
இரணியன் என்று இரட்டைப் பிறவிகளாக பூமியில் பிறந்தனர்.

மனிதராலும் தேவராலும் அழியக்கூடாத வரத்தை
நீண்டகால தவப்பயனாகப் பெற்றான் இரணியாட்சகன் .
பெற்ற வரம் கொண்டு பூவுலகை வென்றான், தேவலோகம்
வெல்ல வந்தவனைக் கண்டஞ்சி கடலடியில் மறைந்தான்
இந்திரன். தேவருக்கு நன்மை தரும் பூமிப் பந்தை
கடலுக்குள் அமிழ்த்தி அடியில் மறைத்து விட்டான்.

உலகம் மறைந்தது கண்டு மயங்கிய தேவர்களுடன்
நான்முகனும் படைப்புத் தொழில் செய்ய உலகமில்லையே
என்று திருமாலிடம் முறையிட, "அஞ்சேல் " என்று அபயம்
அளித்து பின் விட்ட மூச்சுக் காற்றிலிருந்து வெளிப்பட்ட
பன்றி ஒன்று சில கணத்தில் பெருங்கரியை விட வளர்ச்சி பெற்றது.

கடலுக்கடியில் சென்ற பன்றி பூமிப் பந்தை தன கோரைப்
பற்களில் தூக்கி வரக் கண்ட இரணியாட்சகன்  கோபமுற்று
தன கதாயுதத்தால் பன்றி மீது வீச ஓங்க , அதனை தன முன்
காலால் உதைத்த பன்றியினை, தன கைகளால் பிடித்துக்
கொல்ல வந்தவனை தன கோரைப் பற்களால் கடித்துக்
குதறிக் கொன்றது.

பன்றி வடிவெடுத்த பரந்தாமன் உலகை மீட்டுக் கொடுக்க
தேவர்களும் மகிழ்ந்து துதி பாடி வணங்கினர்.
----------------------------------------------------------------------------
              ( அடுத்த அவதாரக் கதை சற்று வித்தியாசமாகக் 
                     கூறப்படும்  )        
           












7 கருத்துகள்:

  1. புரியாதவரும் எளிதில் புரிந்து கொள்ளும்படியான எழுத்து நடையில் ஏழுலகம் காக்கும் ஏகாந்தனின் அவதார வரலாறு , ஆன்மீக அமுதம் நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  2. கேட்ட கதையென்றாலும் கேட்டு வெகு நாட்களாகிப் போனது. எத்தனை வளம் நம் இதிகாசங்களின்-புராணங்களின் கதைகளில்?

    பகிர்வுக்கு நன்றி பாலு சார். தொடருங்கள் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. மறந்து போகக்கூடிய ஒரு சில புராணக் கதைகளை மீண்டும் மறக்காதிருக்க எளிமையாகப்புரிய வைக்கிறீர்கள். நன்றி. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. மூன்றே பிறவியில் எதிரியாக பிறக்கவே விருப்பம்
    தெரிவித்தவர் வேண்டுதல் ஒன்றைக் கூடவே வைத்தனர்.
    எதிரியாக பிறப்பெடுத்தாலும் பரந்தாமன் கையால்தான்
    மரணம் என்ற வரத்தைப் பெற்றனர்.//

    பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. எனக்கு தசாவதாரக் கதைகள் தெரியும்
    என்று சொல்லி கொள்கிற அளவில்தான் தெரியுமே ஒழிய
    பெயர்களுடன் இத்தணை தெளிவாகத் தெரியாது
    தற்போது தங்கள் பதிவை வைத்து தெரிந்து கொள்வதோடு
    குறிப்புகளாக எடுத்துவைத்துக் கொண்டுள்ளேன்
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. ரத்தினசுருக்கமா முடிச்சுட்டீங்க. எனக்கு இதுமாதிரி சுருக்கமா எழுத வரலியே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கராச்சாரியார் எழுதி இருந்த புத்தகத் தகவல்கதையி கருத்து விளங்க போதுமே

      நீக்கு