Thursday, June 30, 2011

வேலை தேடு படலம். ...

   வேலை தேடு படலம். .
---------------------------
 பள்ளி இறுதி முடித்துவிட்டு, வேலை வெட்டியில்லாமல் விரயமாக இருக்கிறேன் என்ற தாழ்வு மனப் பான்மை, என்னை முழுமையாக ஆக்ரமித்திருந்த காலமது. வீட்டில் வசதிகளும் மிகவும் குறைவு. நான் முன்பே கூறியிருந்ததுபோல, வளர்ச்சியும் இல்லாமல், மிகவும்சிறிய பையன் போல் காட்சி அளித்திருந்தேன். இருந்தாலும் வேலைக்குப்போய் வீட்டிற்கு உதவியாய் இருக்க வேண்டும், என்ற எண்ணம் மனம் முழுக்க வியாபித்துருந்த காலம். ஏதாவது வேலைக்குப் போக வேண்டும் என்று அப்பாவை நச்சரிக்க ஆரம்பித்தேன். என் தொந்தரவு தாங்க முடியாமலும், என்னால் ஏதாவது உதவி வராதா என்ற நப்பாசையிலும், அவர்
அவருடைய நண்பர்கள் சிலரிடமென் வேலைக்காக கூறியிருந்தார். கோவையில், ஒரு நண்பருடைய ஒரு கடையில், வேலைக்கு, எஸ். எஸ். எல் சி. படித்த ஒருவர் தேவைப் படுவதாகக் கேள்விப் பட்டு, அந்த நண்பரிடம் பேசியிருக்கிறார். அவரும் என்னை அனுப்பச் சொல்லிக் கேட்டார். எனக்கு தலைகால் புரியாத சந்தோஷம். முதன் முதலாக இரண்டு கால் சராய்களும் (பேண்ட்)ஒரு ஜோடி செருப்பும் வாங்கப் பட்டது. போக வேண்டிய இடம், நாங்கள் ஏற்கனவே கோயமுத்தூரில் குடியிருந்த குவார்டர்ஸ் வளாகம்தான். கையில் ரூபாய் பத்துடன் கோயமுத்தூர் போய்ச் சேர்ந்து, அந்த நண்பரின் கடையை அடைந்தேன். என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, அப்பா அனுப்பிய பள்ளி  இறுதி படித்த அவருடைய மகன் நான் தான் ,வேலைக்கு வந்திருப்பதாகக் கூறினேன். அவர் என்னைக் கீழிருந்து, கீழாக(மேலிருந்து கீழாக என்று சொல்லிக் கொள்ளும்படி நானிருக்க வில்லை. ) ஒரு முறை நோக்கி, “ தம்பி, மஹாதேவன் ,படித்த ஒரு பையன் இருப்பதாகச் சொன்னபோது, நான் ஒரு வளர்ந்த பையனை நினைத்திருந்தேன் நீ, ஒரு குழந்தை போல் இருக்கிறாய். உனக்கு வேலை தரும் நிலையில் நீ இல்லை. அப்பாவிடம் விவரம் கூறி என்னைத் தவறாக நினைக்க வேண்டாம், என்று கூறிவிடு. என்றார்.. எனக்கு அழுகை வந்து கண்களில் நீர் தளும்ப, “ நான் நன்றாக வேலை செய்வேன் “ என்று கூறிமன்றாடினேன். பலனிருக்கவில்லை. முதல் வேலை தேடும் படலம் தோல்வியாக முடிந்தது.
   ( ஏமாறத்துடன் வெல்லிங்டன் திரும்பிய நான் பெங்களூர் சென்று விதான சௌதாவில்
ஒரு மாதம் சம்பளமில்லாமல் வேலை செய்த அனுபவத்தை என் “பூர்வ ஜென்ம கடன்”
என்ற பதிவில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்)                                                      
         மறுபடியும் வெல்லிங்டன், மறுபடியும் அப்பாவிடம் நச்சரிப்பு, , மறுபடியும் அப்பாவின் முயற்சி என்று என் வேலை தேடும் பணி தொடர்ந்தது.

       கூனூரில் ஒரு ஓட்டல். மைசூர் லாட்ஜ் என்று பெயர். அதற்கு ஒரு அன்னெக்ஸ் கூனூர் ரயில் நிலையத்துக்கு எதிரில், சுமார் நூறு அடி உயரத்தில் இருந்தது. அதன் உரிமையாளர் கிருஷ்ண போத்தி. அங்கு வேலை செய்ய ஒரு படித்த , சற்றே ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்கும் இளைஞன் தேவை என்றும் தெரிவித்திருக்க, அப்பா அவரிடம் பேசி இருக்கிறார். என்னையும் அறிமுகப் படுத்தினார். என்னை வேலையில் சேர்த்துக் கொண்டார்கள். வாரம் ஆறு நாட்கள் வேலை. அங்கேயே தங்கி இருக்கவேண்டும். ஞாயிற்றுக் கிழமை வீட்டிற்குப் போய் வரலாம்.என் செலவு போக மாதம் ரூ.25/-சம்பளம். வேலையில் சேர்ந்து விட்டேன். அங்கு நான் தங்கி இருந்த நாட்கள் என்னை சிறிய பையனிலிருந்து, ஒரு இளைஞனாகவும் உலகம் தெரிய வழி செய்யும் வகையிலும் அமைந்தது.

                  காலையில் ஆறரை ஏழு மணிக்குள் நான் தயாராகி, கல்லாவில் இருக்க வேண்டும். சாதாரணமாக உள்ளஓட்டல்களிருந்து, சற்றே வித்தியாசப் பட்டதாக அமைந்திருந்தது. மேசை நாற்காலிகளுக்குப் பதில் சோஃபா.டீபாய்.இருக்கும்.  ஒரே நேரத்தில் இருபது நபர்களுக்கு மேல் சேவை செய்ய முடியாது. அங்கு அறை வசதிகள் இருந்தன. மாத வாடகைக்குத் தங்குபவர்கள் சிலர் இருந்தனர். ஒரு நாள் இரு நாள் தங்கிச் செல்வோரும் இருந்தனர். மொத்தத்தில் சற்றே போஷ்  ஆன இடமாக இருந்தது. என் வேலை கல்லாவைக் கவனித்துக் கொள்வதும், அறையில் தங்குபவரின் தேவைகளை பார்த்துக் கொள்வதுமாக இருந்தது. கூனூரின் மேல்தட்டு மத்தியதர
மக்கள் வந்து போயினர். அதிகக் கூட்டம் இருக்காது. இரவு ஒன்பது மணி வரை வேலையில் இருக்க வேண்டும்.

       வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே என்னிடம் இரண்டு கணக்குப் புத்தகங்களை பராமரிக்கச் சொன்னார்கள். ஒன்றில் சரியான வரவுக் கணக்குகளும், மற்றொன்றில் , அதில் இருபது சதவீதமே வரவாகக் காட்ட வேண்டுமென்றும்
கூறினார்கள். குறைந்த வரவு எழுதிய புத்தகமே விற்பனை வரிக் கணக்குக்குக் காட்டப்படும் என்றும் கூறினார்கள். அது தவறெனப்பட்டு நான் கூறியபோது, “சொன்னதைச் செய்என்று கட்டாயப் படுத்தினார்கள் அப்போது மது விலக்கு அமலில்
இருந்தது. அறையில் வாடகைக்கு வருபவர்கள் மது பானங்களை உபயோகிக்கக் கூடாது. ஆனால் சில பெரிய மனிதர்கள் விதியை மீறுபவராகவே  இருந்தனர். நான் பார்ப்பதற்கு மிகச் சிறியவனாக இருந்ததால், யாரையும் கேள்வி கேட்க முடியவில்லை.  முதலாளியிடம் கூறினால் கண்டு கொள்ளாமல் இருக்கப் பணித்தார்கள். சில பெரிய மனிதர்கள் அவர்களுடைய மனைவி என்று கூறிக்கொண்டு சில பெண்களுடன் தங்குவார்கள். பகல் நேரங்களில் அந்தப் பெண்கள் காட்டும் அதிகாரம், என் தன்மானத்தை பாதிப்பதாக இருக்கும். மாத வாடகைக்குத் தங்கும் சிலர் அந்தப் பெண்களிடம் பேச முயற்சி செய்து, அவர்களைவசப்படுத்த முயல்வார்கள். அந்தப் பெண்கள் என்னிடம் புகார் கூற, நான் மாத வாடகை அறைவாசிகளிடம் ஏதாவது கேட்கப் போனால், அவர்கள் எனக்குப் பாடம் நடத்துவார்கள் அவர்கள் விலை மாதர்கள் என்றும் அவர்களை நான் மதிக்க வேண்டாம் என்றும் கூறுவார்கள். இந்த மாதிரி அறைகளில் தினமும் படுக்கை விரிப்புகளை மாற்றச் சொல்வார்கள். அந்த விரிப்புகள் காட்டும் கோலம், அங்கு நடந்தவைக்குச் சான்றாக இருக்கும். இந்த நாட்கள் adolescent
ஆக இருந்த நான் அடல்ட்- ஆக மாற பெரிதும் காரணமாக இருந்தன. உலக நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தெரிய வந்தது. இதையெல்லாம் நான் முதலாளியிடம் கூறினால் என்னைக் கடிந்து கொள்வார்கள். காலையில் தொடங்கும் பணி இரவு ஒன்பது வரை ஒரேமாதிரி, காப்பி, இட்லி, வடை தோசை, என்ற சொற்களோடும், அறை சுத்தம், தங்குபவரின் தகாத செயல்கள் இவற்றைப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை. வாரம் ஆறு நாட்கள் வேலை பார்த்தால்ஞாயிறு ஒரு நாள் மட்டும் வீட்டிற்குப் போய் வரலாம், என்ற நிலை. எல்லாம் சேர்ந்து எனக்கு சலிப்பை உண்டாக்கியது, இருந்தாலும் வீட்டின் நிலை அறிந்தும், எனக்கு வேறு வேலை கிடைக்க வாய்ப்பு குறைவு என்பதாலும் சகித்துக் கொண்டிருந்தேன். இந்த நிலையில், அங்கு வருவோர் சிலரிடம், நல்ல தொடர்பு இருந்தது. அதில் குந்தா ஹைட்ரோ பவர் ஸ்டேஷனில்வேலையிலிருந்த, எக்ஸிக்யூட்டிவ் எஞ்சினேர்,மற்றும், டெல்கோ கம்பெனியில் வேலையிலிருந்த ஒரு மார்கெட்டிங் மானேஜர், பர்மா ஷெல் கம்பெனி இன்ஸ்பெக்டர் ஒருவரும், முக்கியமானவர்கள். குந்தா ப்ராஜெக்ட்டில்  வேலை வாங்கித் தருவதாக ஒரு காண்ட்ராக்டருக்கு, சிபாரிசு கடிதம் ஒன்றை அந்த எஞ்சினீயர் கொடுத்தார். நானும் எங்கெல்லாமோ வேலைக்கு மனு போட்டுக்கொண்டிருந்தேன் .இந்த நிலையில் ஓட்டல் முதலாளியிடம் நான்   என்னுடைய வேலை நேரத்தைக் குறைக்கும் படியும்,,தவறான முறைகளில் கணக்கு வழக்குகள் எழுதுவதை என்னிடம் கட்டாயப் படுத்தாமல் இருக்கவும் முறையிட்டேன். அவர்கள் என்னிடம் எதையுமே பேச விரும்பவில்லை. என்னுடைய தந்தையார் மூலம் நான் வேலைக்கு வந்ததால், அவரை வந்து பேசச் சொல்ல சொன்னார்கள். இதற்கு என் தன்மானம் இடங்கொடுக்கவில்லை.வேலை செய்வது நான், என் தந்தை பெயரைச் சொல்லி மிரட்டுவது சரியல்ல என்று எனக்குத் தோன்றியது.அப்பாவிடம் சொன்னால் வருத்தப் படுவார்கள் என்பதாலும், குடும்ப நிலைமை நான் வேலைக்குப் போவதை தேவைப் படுத்துவதாலும், யாரிடமும் சொல்லாமல் நான் வேலையை விட்டு விலகுவதாக, என் முதலாளியிடம் கூறி எனக்குச் சேர வேண்டிய சம்பளப்பணம்  சுமார் ரூ. 20/- பெற்றுக் கொண்டு, என் பெட்டியுடன் கோயமுத்தூர் சென்றேன்.எங்காவது வேலையில் சேர்ந்து, அப்பாவை சமாதானப் படுத்தலாம் என்று எண்ணிக்கொண்டேன். அந்த முடிவு வாழ்க்கையில் முக்கியமான அனுபவங்களைப் பெற்றுத் தந்தது.

      கோயமுத்தூரில் எங்கு தங்குவது, எப்படி வேலை தேடுவது, யாரைப் பார்ப்பது, என்று எதுவுமே யோசிக்க்ச்வில்லை. அப்போது கோயமுத்தூரில் சில சத்திரங்கள் இருந்தன. அங்கு ஒரு இரவு தங்க, ஒரு கட்டில் தருவார்கள். வாடகை எட்டணா. பல் விளக்க, குளிக்க எந்த வசதியும் கிடையாது. சாலையோரத்தில் உள்ள குழாய்களில்காலையில் பல் விளக்கி முகம் கழுவுவேன்.பிறகு கோயமுத்தூரில் நிறைய மில்கள் இருப்பது கேள்விப் பட்டிருந்ததால், ஏதாவது மில்லில் ஏதாவது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், காலையில் நடக்கத் தொடங்குவேன். ஒவ்வொரு மில் வாசல் முன்பு செல்லும்போதே, அங்குள்ள காவல்காரர்கள் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். மீறி ஒன்றிரண்டு மில் உள்ளே சென்று வேலை கேட்டால், உன் படிப்பு என்ன, டைப்பிங் தெரியுமா, ஷார்ட் ஹேண்ட் தெரியுமா, சான்றிதழ்கள் எங்கே, என்று கேட்டுத் துரத்தி விடுவார்கள். வெயிலில் அங்கங்கே சுற்றும்போது, சோடாவும் கலரும் வாங்கிக் குடிப்பேன். மிகவும் பசித்தால் ஏதாவது ஓட்டலில், எதையாவது வாங்கிச் சாப்பிடுவேன். இந்த நிலையில் கோவையில் நான் படித்தபோது ,என்னுடன் படித்த, பி. டி. ஆல்ஃப்ரெட். என்ற ஆலியின் நினைவு வந்து, அவனைப் பார்க்கப் போனேன். மிகவும் மகிழ்வுடன் என்னை வரவேற்ற அவன் என் கதையைக் கேட்டதும் மிகவும் கடிந்து கொண்டான். முடிந்தவரை எனக்கு உதவுவதாகவும் கூறினான். அவன் எஸ். எஸ். எல். சி.  ஃபெயில். ஏதோ ஒரு மில்லில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தான். என்னை அந்த மில்லுக்கு அழைத்துச் சென்று அவனுடைய மேலாளரிடம், எனக்கு ஏதாவது வேலை தரும்படிக் கேட்டான். அங்கும் அதே கதைதான். அட்டெண்டர் வேலை எதுவும் காலி இல்லை என்றும்,வேறு எந்த வேலைக்கும் எனக்குத் தகுதி இல்லை, என்றும் கூறி அனுப்பிவிட்டார்கள். உடற்சோர்வு, மனச் சோர்வு என்று சேர்ந்து வாட்டியது. கையில் இருந்த காசும் கரைந்து கொண்டு வந்தது..என்ன செய்வது என்று தெரியாத நிலையில், டெல்கோ கம்பெனி மார்க்கெட்டிங்  மேனேஜரின் நினைவு வந்தது.அவருடைய அலுவலக விலாசம் தெரிந்து, அவரைத் தேடிப் போனேன். என்னைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியுடனும், மரியாதையுடனும், என்னை வர வேற்ற அவர், “ஓட்டல் மேனேஜருக்கு மசால் தோசையும் காப்பியும் கொண்டு “ வரப் பணித்தார். என்னை அவர் மேனேஜர் என்றுதான் அழைப்பார். அந்த வரவேற்பையும் மரியாதையையும் பார்த்த பிறகு, அவரிடம் என் நிலையைக் கூறி, வேலை கேட்க என் “ஈகோஇடந்தரவில்லை. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவரிடம் விடை பெற்று வந்து விட்டேன். அப்பாவுக்கோ, அல்லது வீட்டில் யாருக்கோவாவது, நான் இப்படி அவதிப் படுவதும் ஊர் சுற்றி வேலை தேடுவதோ தெரியாது. அவர்கள் என்னை ஞாயிற்றுக்கிழமை எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். கையிலும் காசில்லை ,வேலையும் கிடைத்த பாடில்லை. மிகவும் வருத்தப் பட்டுக்கொண்டிருந்தபோது, ஆலி என்னை ஓரிடத்துக்கு அழைத்துப் போவதாகக் கூறி வரச் சொன்னான். அவன் என்னை அழைத்துச் சென்ற இடம் கோயமுத்தூர் ரெயில் நிலையம். எனக்கு வெல்லிங்டனுக்கு ஒரு டிக்கெட் வாங்கிரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டான். நானும் வேறு வழியின்றி வெல்லிங்டன் சென்று வீட்டிற்குப் போனேன். சனிக்கிழமையே நான் வந்து விட்டதாக நினைத்து, எனக்கு உடல் நலம் சரியில்லையோ என்று நினைத்துப் பதறி விட்டார். நான் ஏதும் கூறாமல் சாதாரணமாக இருப்பதுபோல்ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இருந்து விட்டேன். நான் ஓட்டலுக்குத் திரும்பிச் செல்லாதது ஏன் என்று கேட்ட போது நான் வேலை பிடிக்கவில்லை என்று கூறினேன்.கோயமுத்தூரில் அலைந்ததையோ, ஏமாற்றமடைந்ததையோ சொல்லவில்லை. அப்பாவும் என்னை வற்புறுத்தவில்லை.இந்த சின்ன வயதில் உன்னை வேலைக்குப் போகச் சொன்னதே என் கையாலாகாத்தனம் “என்று கூறி மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டார். நான் குந்தா ப்ராஜெக்டுக்குப் போய் அந்த எஞ்சினீயரின் சிபாரிசுக் கடிதத்துடன் வேலைக்குப் போவேன் என்று அப்பாவுக்கு தைரியம் கூறினேன். நான் மைசூர் லாட்ஜில் இருந்தபோது பல இடங்களுக்கு வேலைக்கு மனு போட்டிருந்தேன். அந்த நேரத்தில் எச்.ஏ.எல். ல் இருந்து ட்ரேட் அப்ப்ரெண்டிஸ்  ட்ரெயினிங்கில் சேர தேர்வுக்கு மெட்ராஸ் வரச் சொல்லி கடிதம் வந்திருந்தது. அதன் முடிவு தெரிந்த பிறகு குந்தாவில் முயற்சிக்கலாம் என்றிருந்தேன். ஆனால் மெட்ராசுக்கு தேர்வுக்குச் செல்லப் பணம் வேண்டுமே.வழக்கம்போல் அப்பாவிடம் பணம் இருக்கவில்லை. ரூபாய் பத்தோ பன்னிரண்டோதான் அவரால் சமாளிக்க முடிந்தது. அப்போது வெல்லிங்டனிலிருந்து மெட்ராசுக்கு ரெயில்வே கட்டணம் மூன்றாம் வகுப்புக்கு ரூபாய் பத்து என்று நினைவு. போக வரவும் அங்கு ஓரிரு நாட்கள் இருக்கவும் குறந்தது ரூபாய் முப்பது தேவைப் பட்டது. பணமில்லாததால் நேர்முகத் தேர்வுக்குப் போக முடியாத நிலை. அந்த நேரத்தில் மைசூர் லாட்ஜுக்கு அடிக்கடி வந்து செல்பவரும் என் மீது மிகவும் அன்பு வைத்திருந்தவரும் “ குழந்தே “என்று கூப்பிடுபவருமான பர்மா ஷெல் இன்ஸ்பெக்டர் திரு. சுப்பிரமணியம் நினைவு வந்து, அவரை அவர் வீட்டில் சந்தித்தேன். என் நிலைமை எடுத்துக் கூறினேன். அவர் என்னை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்துநான் இண்டர்வியூவுக்கு மெட்ராஸ் செல்ல உதவுவதாகவும் கூறினார். ஈரோடில் அவருக்கு ஒரு வேலை நிமித்தம் செல்ல வேண்டி இருப்பதாகவும் என்னை அவருடைய காரிலேயே ஈரோடு வரைக் கூட்டிச் சென்று, அங்கிருந்து மெட்ராஸுக்குரெயிலில் டிக்கெட் வாங்கி ஏற்றி விடுவதாகவும் கூறினார். எனக்கு மனதில் கொஞ்சம் தெம்பும் உற்சாகமும் வந்தது. அவர் கேட்டுக் கொண்டபடி அவருடைய வீட்டுக்கு காலை பதினொரு மணி அளவில் சென்றேன். அவருடன் அவருடைய காரில் ஈரோடு வரை பயணித்தேன். போகும் வழியெல்லாம் அவர் என்னை எப்படி நேர்முகத் தேர்வை சந்திக்க வேண்டும் என்று பயிற்சி அளித்தார். என்னை கேள்விகள் கேட்டு, நான் பதில் சொல்வதுகேட்டு, என்னை ஊக்கப் படுத்தி, எனக்கு அந்த தேர்வில் வெற்றி கிடைக்கும் என்றும் வாழ்த்தினார். ஈரோடில் என்னை ரயில் ஏற்றியும் விட்டார். ஆக காலணா செலவில்லாமல் தேர்வுக்கு மெட்ராஸ் வந்து விட்டேன். ரயிலில் இருந்து இறங்கி ராயப்பேட்டா பைக்ராஃப்ட்ஸ் ரோட் க்ராசில் இருந்த என் சித்தப்பா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வீட்டுக்குச் சென்று குளித்து உடையணிந்து, வேப்பேரியில் குறிப்பிட்ட இடத்துக்கு நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். அந்த தூரங்களையெல்லாம் நடந்தே சென்றேன் என்பதை இப்போது நினைத்தாலும் வியப்பாயிருக்கிறது. என்னிடம் இருந்த ஒரு நல்ல பேண்ட்டோடு, ஷ்ர்ட்டும் அணிந்து, ஒரு டையும் கட்டிக் கொண்டு( உபயம். திரு. சுப்பிரமணியம்.)நான் நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களையெல்லாம் கவனித்தபோது, அந்த இண்டர்வியூவுக்கு டை அணிந்து சென்றது நான் மட்டுமே என்று உணர்ந்தபோது, கொஞ்சம் கூச்சமாகவும் வெளிக்குப் பெருமையாகவும் இருந்தது. அதுதான் என் வாழ்க்கையில் பங்கு பெற்ற முதல் இண்டர்வியூ. நன்றாகவே நினைவுக்கு வருகிறது. என்னுடைய முறை வந்து என்னை கூப்பிட்டபோது,மிடுக்காகவே சென்று, வணங்கி இருக்கையில் அமர்ந்தேன். என் பெயர், தகுதி குடும்பம் போன்ற விஷயங்களைப் பற்றிக் கேட்டார்கள்.நானும் தைரியமாகவே பதில் சொன்னேன். படிப்பில் நான் காம்பொசிட் மாத்ஸெடுத்திருப்பதாகக் கூறி அதில் என்ன கற்றுக் கொடுத்தார்கள் என்பதையும் கூறினேன். அப்போது தேர்வுக் குழுவின் தலைவர் எனக்கு பித்தாகோரஸ் தீரம் தெரியுமா என்று கேட்டார்கள். நானும் பித்தாகோரஸ் தீரமை தமிழில்சொன்னபோதுதான் அவர்களுக்கு நான் தமிழ் வழிக் கல்வி பயின்றது தெரிந்தது. என்னுடைய ஆங்கில பதிகளை கேட்டுக் கொண்டிருந்த அவர்களுக்கு நான் தமிழில் கற்றவன் என்ற செய்தி வியப்பளித்தது. அந்த தேற்றத்தை என்னால் ஆங்கிலத்தில் கூற முடியுமா என்று கேட்க, நானும் அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன். அது அவர்களுக்கு திருப்தி அளித்திருக்க வேண்டும். தேர்வு முடிந்து என்னைப் போகச் சொல்லி, மற்றவர்களைக் கூப்பிட ஆரம்பித்தனர். வெளியே வந்தவன் தேர்வின் முடிவு தெரியாததால் காத்திருந்தேன். உணவு இடைவேளைக்கு வெளியே வந்த தேர்வுக் குழு தலைவரிடம்முடிவு பற்றிக் கேட்டேன். மிகவும் விறைப்பாக தேர்வானால் தபாலில் தெரிவிப்பதாகக் கூறினார். முடிவு தெரியாத நிலையில் சற்றே மனபாரத்தோடு, வீடு வந்து , அன்று மாலையே ரயிலில் வெல்லிங்டன் செல்லப் பயணப் பட்டேன். இவ்வளவு விலாவாரியாக நான் இங்கு இதை விவரிப்பது, என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு இவையெல்லாம் அஸ்திவாரமாக இருந்ததாலும், என் வாழ்க்கைடின் பாதையையே எனக்கு காட்டிய நிகழ்ச்சிகள் என்பதாலும்தான்


 (எச்.ஏ.எல். ட்ரேட் அப்ரெண்டிஸ் பயிற்சி தேர்வுக்கு மெட்ராஸ் சென்று 
நேர்காணல்  முடிந்து வெல்லிங்டன் திரும்பிய சில நாட்களில்
(மார்ச், ஏப்ரல் 1955 என்று நினைவு.)நான் தேர்வு செய்யப்பட்டதாகவும் 
மே மாதம் முதல் தேதியன்று சேருமாறு கடிதம் வந்தது.)



















23 comments:

 1. தங்களது வேலைதேடும் அனுபவ பதிவைப் படிக்கையில்
  சிறுவயதிலேயே எப்படி இவ்வளவு வாழ்வினை தைரியமாக
  எதிர்கொள்ளும் சக்தியைப் பெற்றிருந்தீர்கள் எனப் படிக்க
  ஆச்சரியமாக இருந்தது
  உண்மையில் அந்த வயதில் அந்த துணிச்சல் ஆச்சரியமானதுதான்
  தன்னம்பிக்கையூட்டும் பதிவு

  ReplyDelete
 2. //கூனூரில் ஒரு ஓட்டல். மைசூர் லாட்ஜ் என்று பெயர். அதற்கு ஒரு அன்னெக்ஸ் கூனூர் ரயில் நிலையத்து க்கு எதிரில், சுமார் நூறு அடி உயரத்தில் இருந்தது.//

  இந்த ஹோட்டல் எனக்குத் தெரியும்.
  1967-வாக்கில் குன்னூரில் தொலைபேசி இலாகாவில் நான் பணியாற்றிய காலம் அது. தொலைபேசி இணைப்பகம் மேல் குன்னூரில் இருந்தது. தினமும் ஒரு தடவை, நடைப்பயிற்சியாக கீழ்க்குன்னூர் பஸ் நிலையம் வரை குறுக்குப் பாதையில் நடந்து வரும் நேரங்களில் இந்த ஹோட்டலுக்கு வந்து போவது உண்டு. இந்த ஹோட்டல் பற்றி எனது 'பெற்றால் தான் பெண்ணா?' பதிவில் (இலக்கிய இன்பம்) குறிப்பிட்டிருக்கிறேன். குன்னூரில் பணியாற்றிய காலம் அற்புதமான காலம். எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் உண்டு.

  ReplyDelete
 3. இந்த ஓட்டல் பற்றி எனது தளத்தில், இலக்கிய இன்பம் பகுதியில், 'உயிரில் க்லந்து உணர்வில் ஒன்றி' பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்-- என்று திருத்தி வாசிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 4. இந்தப்பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது சார். ஏனென்றால் இதே போலவே நான் என் 16-17 வயதுகளில் மிகவும் கஷ்டப்பட்டவன். என் கதை வேறு ஒரு மாதிரி. பிறகு வாய்ப்புக்கிடைத்தால் எழுத முயற்சிக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் சார், சிறு வயதில், இளமையில் வறுமை மிகவும் கொடுமை தான். அதன் கஷ்டம் பட்டவர்களுக்கே தெரியும். ஆனாலும் அவர்கள் பிற்காலத்தில் நேர்மையாளராகவும், உண்மை பேசுபவராகவும், உழைப்பாளியாகவும், இரக்க குணம் கொண்டவராகவும், பணத்தின் அருமை தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள். சிறப்பான வாழ்க்கையும் அமையும்.

  பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 5. நல்ல பதிவு.
  இளமை அனுபவங்களை நன்கு பகிர்ந்திருக்கிறீர்கள்.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 6. உங்கள் கட்டுரையைப் படித்ததும் வாழ்வின் அர்த்தங்கள் நிறைய விளங்கியது. அன்றும்..இன்றும் எப்படி எல்லாம் காலம் மாற்றியிருக்கிறது.
  உங்கள் எழுத்துக்கள் மிக நேர்த்தி. இன்னும் உங்கள் அனுபவ வாழ்க்கையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு உதவியாய் இருக்கும்.

  ReplyDelete
 7. நல்ல அனுபவம். பதிவை பத்தி பிரித்துப் போட்டால் இன்னும் நன்றாக இருக்குமே.

  ReplyDelete
 8. மிக அற்புதமான நம்பிக்கையும் பாடமும் சொல்லும் பதிவு.

  எந்த இடத்தில் நிற்கும்போதும் நம் கடந்த காலம் நமக்கு ஆச்சர்யமூட்டுவதாகவே இருப்பதும் எதிர்காலம் அச்சமூட்டுவதாகவே இருப்பதுமே காலத்தின் மாயை.

  ReplyDelete
 9. அருமையான அனுபவப் பகிர்வு...வேலையில் சேரச் சொல்லி உத்தரவு கிடைக்கும் வரை மன உணர்வு எப்படி இருந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது...

  ReplyDelete
 10. அற்புதமான பதிவு..

  தற்காலத்திற்கு மிகவும் தேவையான ஒன்றும் கூட..

  வாழ்த்துக்கள்.

  God Bless YOu.

  ReplyDelete
 11. ஒரு தன்னம்பிக்கையாளரின் கதை. பிரமிப்பாக இருக்கிறது. என் தந்தையாரின் அனுபவங்களைப் போல இருக்கிறது.
  தலை வணங்குகிறேன் அய்யா .

  ReplyDelete
 12. தங்களது வேலைதேடும் அனுபவ பதிவைப் படித்து நான மிகவும் த வியந்து போனேன்
  பட்ட துன்பங்களும் அதை எடுத்து
  எழுதியுள்ள பாங்கும் சிற்பானதாகும்
  மேலும் தொடருங்கள்
  புலவர் சா இரமாநுசம்

  ReplyDelete
 13. Hello sir, How are U?
  seems you are busy these days...
  How is life

  ReplyDelete
 14. கருத்துபகிர்வு செய்த திருவாளர்கள்.ரமணி, ஜிவி, கோபாலகிருஷ்ணன்,ரத்னவேல், ஸ்ரீராம்,குணசேகரன், வெட்டிப்பேச்சு, சிவகுமாரன், கந்தசாமி, புலவர் ராமாநுசம், சுந்தர்ஜி, மற்றும் நலம் விசாரித்த சமுத்ரா அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.நான் கடந்து வந்த பாதையை நினைத்து எழுதியது, வாழ்க்கை கரடு முரடானது , என்பதை உணரவும், பழையதை மறக்கக்கூடாது என்பதாலும்தான். படிப்பவர்க்கும் சில நிகழ்வுகள் தன்னம்பிக்கை தரலாம்.

  ReplyDelete
 15. படிக்க படிக்க மனதில் எங்கெங்கோ பல எண்ணங்களை கிளறி கண்களில் குளம்.

  ReplyDelete
 16. ம்ம்...ம் .. உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டால் நான் ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். நீங்கள் கஷ்டப்பட்டு ஆரம்பித்த வாழ்க்கை.

  ReplyDelete
 17. தங்களது அனுபவம் பிறருக்கு பாடம் ஐயா

  ReplyDelete

 18. @ கில்லர்ஜி
  என் அனுபவங்களை வாசித்தால் தானே பிறருக்குப் பாடமாக இருக்கும் வாழ்க்கை எட்டெட்டாக சுட்டிகள் மூலம் வந்ததற்கு நன்றி ஜி

  ReplyDelete
 19. ஏ அப்பா ! எவ்வளவு நெஞ்சுறுதி உங்களுக்கு இருந்திருக்கவேண்டும் சமாளிக்க !

  ReplyDelete
 20. அப்போது அப்படியெல்லாம் தோன்றவில்லை வேலை கிடைக்க வேண்டும் என்பதே ஒரே நொக்கம்

  ReplyDelete
 21. நான் போட்ட கமெண்ட் வெறு பெயரில் எப்படி தெரியவில்லை

  ReplyDelete
 22. எனக்கு இப்படி கஷ்டப்பட்டு முன்னுக்கு வருபவர்களின் அனுபவங்களை கேட்டறிவது ரொம்ப பிடிக்கும் ... ஏனெனில் என்னுடைய வாழ்க்கையும் அப்படியே அமைந்துள்ளதால் ... நீங்கள் கடந்துவந்த பாதை கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை விதைப்பதாக உள்ளது ... உங்கள் வாழ்க்கையை ஒரு சுய சரிதையாக எழுதவும்.. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete
 23. என் வாழ்வின் பல நிகழ்வுகளை பல இடங்களில் பதிவாக்கி இருக்கிறேன்

  ReplyDelete