Saturday, June 11, 2011

சாதாரணன் இராமாயணம்

சாதாரணன்   இராமாயணம்.
---------------------------------------

                        பால   காண்டம்.
                        ----------------------
      பூதேவி ஸ்ரீதேவி  இருபுறம் இருக்க,
      அனைத்துலகாளும்  ஆபத்பாந்தவன், 
      அனாதரட்சகன், பாம்பணையில் துயிலும்
      பரந்தாமன , அமரர் ம்ற்றேனையோர் துயர் 
      துடைக்க, தீவிலங்கை அரக்கர்கோனை
      வேருடன் அழிக்க, தயரதன்தன் வேள்விக்குப் 
      பலனாய், ரவிகுலத் திலகமாய் கோசலை மகனாய்
      பரத இலக்குவன் சத்துருகனன் எனும் 
      மூவருக்கும்  மூத்தவனாய் இராமனாய்
      அயோத்தியில் அவதாரம் செய்து 
       சகலகலாவல்லவனாய்த் தேறி வரும் வேளை,
       காட்டில் செய்யும் வேள்விக்கு 
        ஊறு விளைக்கும் அரக்கரை அழிக்க
        இராமனைத் தன்னுடன் அனுப்பப் பணித்த 
       விசுவாமித்திரன்  சொல் தடுக்க இயலாது, 
        வசிட்டனும் கூற , இளவல் இலக்குமனன் 
        கூடச்செல்ல தயரதன் வழியனுப்பக் காடேகி
         வேள்விக்கிடையூறு  ஈந்த சுபாகு உயிரெடுத்து, 
        அவன் தம்பி மாரீசனைத்  தன் அம்பால் கடலில் வீசி
         தாய் அரக்கி  தாடகையை வதம் செய்து, 
         மறைமுனியின்  வேள்வி காத்து ,அவன் 
         பின் செல்லக்  கானகத்தில் கால் இடர
         கல்லும் பெண்ணாக மாற,  பின் மிதிலை
         மாட வீதியில் அண்ணலும் நோக்க அவன் 
         மணக்க இருந்த அவளும் நோக்க
         சுயம்வரப் பந்தலில் சனகனின் சிலையறுத்து
         மைதிலியை மணம் புரிந்து, அயோத்தி 
         மீள்கையில் மூவேழு தலைமுறை  மன்னரை 
         அழிக்கச் சூளுரைத்த அந்தணன் பரசுராமன் 
         வில் இறுத்து , அவன் தவம் முற்றும் பெற்று
         அரசாள அயோத்தியில் அவன் தந்தை நாள் குறிக்க, 

                       அயோத்தியா    காண்டம்
                        ----------------------------------

           தாதி கூனி சொல்கேட்டுத் தரணி தன்னைத்
          தன் மகன் பரதன் ஆளக் குலக் குமரன் காடேக
           முன் பெற்ற வரம் கொண்டு கைகேயி வேண்டக்  
          கேட்ட தயரதன் மனம் மயங்கிச் சாய,
          கோசலை மைந்தன் இளவல் இலக்குவன் கூடவர
          வைதேகி பின் தொடர அனைத்தும் துறந்து
           மரவடி அணிந்து கானகம் சென்று, குகன் உதவிட
          கங்கைகடந்து, சித்திர கூடத்தில் இருக்க,
           அயோத்தியில் மயங்கி சாய்ந்த மன்னனும் வானேற
          தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி நீத்து
           குவலயமாள  பணிந்து  வேண்டிய  பரதனும்
           மன்னன் மரவடி பணயம் பெற்றுத் தானும் மீள,
          வனவாசம் துவங்க தண்டகாருண்யம்  புகுந்து,

                               ஆரணிய  காண்டம்.
                               ---------------------------

           ஆரணியத்தில்  அனைவருக்கும் அஞ்சேலென
           அருள் கொடுத்து, அகத்தியன் கை வில் பெற்றவன்
            பால், சீதைக்குத் தான் நிகரென்று காமத்தால் 
            முன் வந்த சூர்ப்பனையின் காதிரண்டும் கொடி மூக்கும்
            இலக்குவன் வாளால் அறுபட, அவள் துணை வந்த
            கரனொடு தூடணன் உயிரெடுக்க அவள் கதறி
            இலங்கையர் கோன் இராவணனிடம் முறையிட
             சீதையை அகல்விக்க மாயமான் உருக்கொண்ட
            மாரீசனால் அலைக்கழிக்கப்பட தவமுனிவேடம் பூண்ட
            அரக்கர்கோன் வஞ்சனையால் சீதையைக் 
            கடத்திக் கடல் சூழ்  இலங்கையில்  கடிகாவில் 
            சிறை வைக்க, மாயமானைச் செற்று வந்தவன் ,
            காதல் மனையாளைக் காணாது வருந்திக் கானகத்தில் 
            தேடியலைய, கோமகளைக் காக்க இயலாத 
            சடாயுவுக்குக் கிரியை செய்து மோட்சமளித்து
            கணையொன்றினால்  கவந்தனை மடித்து,
            சபரி ஈந்த கனி உவந்து உண்டு, 

                           கிஷ்கிந்தா  காண்டம்.
                            ------------------------------

             வைதேகிதனைத்தேட கானகக்  கவியரசன் 
             நட்பு நாட, மராமரம் ஏழு எய்து, தன் திறன் காட்டி
             அவனண்ணன் வாலியைக் கணையொன்றால்   
              முடித்து,தம்பிக்கு முடி சூட்ட,அவன் அமைச்சன்
             திறன் விளங்கு மாருதியும்  மாயோன் தூதுரைத்தல் செப்ப,

                            சுந்தர  காண்டம். 
                            ----------------------

             கடலேறி மும்மதில் சூழ்  இலங்கை புகுந்து,
             கடிகாவில் சிறையிருந்த சீதைதனைக் கண்டு 
             அண்ணல் இராமன் அனுப்பிய தூதன் ,அவன் 
             சொல் கேட்க, அன்னையிடம் விண்ணப்பித்து ,
             அடையாளம் தெளிவிக்க, கைகேசி வரம் கேட்க
             தந்தை சொல் தட்டாது இலக்குவன் சீதையோடு
             இராகவன் கானகம் சென்றதும் ,நால்வரோடு
             ஐவராகிய குகன் கங்கை கடத்தியதும், சித்திர 
             கூடத்தில் பரத நம்பிக்கு மரவடி பணயம் வைத்ததும்
             ஒரு நாள் அண்ணல் மடியில் தலை வைத்திருக்க, 
             ஒரு காக்கை துயர் கொடுக்க அதனை அத்திரம் 
              துரத்த வானெங்கும் பறந்தோடி, அபயம் தேடிக்
             கண் இழந்ததும், பெம்மான் பொன்மானைத்தேடி 
             சிலைபிடித்தேக, ஆங்கே இலக்குவனைப் பிரிந்ததும் 
              கூறி, அயோத்தியர்கோன் அடையாளம்  என அவன்
              கை மோதிரம் காட்ட, அடையாளம் ஒக்கும் 
              என்று உச்சி மேல் வைத்து  உகக்க,மாருதியும் 
             அரக்கர்கோன் மாக்கடிகாவை அழித்து, 
             ஆங்கிருந்த அனைவரையும் கொன்று இலங்கைதனை
             தீக்கிரையாக்கி, அரக்கர்கோன் சினமெழுப்பி, மீண்டு
              அன்பினால் அயோத்தியர்கோன் அடியினைப் பணிய,

                            யுத்த  காண்டம்
                            ----------------------

               அண்ணலும் இளவலும் வானரக் கோனுடன்
               அனுமன் மற்றனைவரோடும் இலங்கை புகல் வேண்டி, 
                கடற்கரையில் வீற்றிருக்க, இராவணன் தம்பி 
                வீடணன் அடைக்கலம் நாட,நல்லாசி புரிந்து
                நுரைகடலைத் தன் அம்பால்  விலக வைத்து
                விலங்குகள்  பணி செய்ய,  கல்லால் அணை கட்டி, 
                மறுகரை ஏறி, இலங்கைப்  பொடியாக்க 
                செஞ்சரங்கள் பல எய்யக் கும்பனொடு நிகும்பனும்
                மாள, இந்திரஜித்தும் அழிய ,கும்பகர்ணன் பட, 
                அரக்கர் அனைவரும் புறங்காட்டி  ஓட
                இலங்கை மன்னன் அத்திரமும் சத்திரமும் அழிந்து
                நிற்க,அன்று சென்று மறுநாள் வர அண்ணலும் கூற,
                பின் வந்தவன் தலை ஒரு பத்தும்,தோள் இருபதும்
                இராமன் விடுத்த சரம் உதிர்க்க,
                வெற்றி கண்ட களத்தில் வானோர் பூமாரி பொழிய, 
                மணிமுடி  தானேற்க ,வீடணன் வானரக் கோனுடன்
                அழகு தேர் ஏறி அனைவரும்  பின் தொடர 
                அயோத்தி எய்தி, நன்னீராடி, மாலைகள் சூடி,
                 திருமுடி தரித்து , மலர்க் குழலாள் சீதையுடன்
                 பரதனும் தம்பி சத்துருக்குனனும் இலக்குமனும்
                அனுமனோடு   அடியேனும்  அடிபணிய 
                 சீரிய சிம்மாசனம் அமர்ந்து , அனைத்துலகும் 
                 அவர் கோல் செலுத்த வாழ்வித்தருளினார்
            ===========================================


          (   இராமாயண காவியம் ஒரு கடல் .எத்தனையோ மகான்கள்
             இராகவனின் அருள் வேண்டி, அவன் கதையை யாத்திருக்கிறார்கள்
             நானும் ஆவலால் உந்தப்பட்டு  ஒரே வாக்கியத்தில்  இந்த 
             சாதாரணனின் இராமாயணம் எளிய கவிதை வடிவில் 
             எழுதி உள்ளேன். படித்துக் கருத்து கூறுங்கள் )
 


             .
 


 


 


 

                            
 

 
 

          


 

55 comments:

  1. ஹப்பா!எனக்கு மூச்சு வாங்கியது பாலு சார்.அற்புதம்.

    என் குழந்தைப் பருவத்தில் இத்தனை காண்டத்தையும் சொல்லிமுடிக்க என் தாத்தா ஒரு மாதம் எடுத்துக் கொண்டார் என் பாட்டி அலுத்துக் கொள்வாள்.

    எல்லாவற்றையும் அழகாகக் கோர்த்துவிட்டீர்கள். மீண்டும் தூசி துடைத்த ராமர் பட்டாபிஷேகப் படத்தைப் பார்த்தது போல ஓர் உணர்வு.

    கடுமையான உழைப்பும் ஆர்வமும்...சபாஷ் பாலு சார்.

    ReplyDelete
  2. பிரமித்துப்போய் நிற்கிறேன். எனக்குச் சொற்கள் கிடைக்கவில்லை உங்களை வாழ்த்த. நன்றாகத் தேர்ந்த பயிற்சியினால் மட்டுமே இதுசாத்தியம். வசனகவிதையில் இராமாயணம் படித்த நிறைவு. குழந்தைகளுக்கு இது எளிமையானது. குழந்தை இலக்கியத்தில் இதனை வைக்கலாம். அதாவது இப்படிப்பட்ட அணுகுமுறையை. அருமை ஜிஎம்பி ஐயா.

    உங்களிடம் இருக்கும் பலவித ஆற்றல்களைக் கண்டு சிலிர்த்து நிற்கிறேன். குழந்தை பாடல்போல இதனை சொல்லலாம் நீங்கள். படிக்கிற போது அலுப்பூட்டாது ஆர்வங்குறையாது மனசு நிறைகிறது. எளிமையாக சொல்லுதல் என்பது எளிதல்ல. நீங்கள் வித்தகர்தான்.

    அழகான கதைகோர்ப்பு. கதை சொல்லி நீங்கள். இதன் பின்னே உங்களின் கடுமையான அனுபவமும் பயிற்சி மேலோங்கி நிற்கிறது. உங்களிடம் கற்க நிறைய இருக்கிறது. எல்லா புராணங்களையும் இப்படி சொல்லுங்கள். காத்திருக்கிறோம்.

    என்னுடைய மனம்நிறை வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

    அற்புதம். வசீகரம். மாயாஜாலம். மனத்தைக் கட்டிப்போடும் சாதுர்யம். நிறைவு. திருப்தி. மகிழ்ச்சிகள்.

    ReplyDelete
  3. சார் நல்லாருக்கு ...

    படிக்கும் போது கற்பனையில் மனம் செல்கிறது தங்கள் எழுத்து நடையை உயிர்பிக்கும் பொருட்டு நடையோடு கூடி இராமயணம் கண் எதிரே காட்சிகளாக கற்பனையில் தோன்றுகின்றன ...

    ReplyDelete
  4. படிப்போருக்கு அறிமுகப்படுத்தும் முகத்தான் ஒரு காவியத்தின் கதைச்சுருக்கத்தை முன்னோட்டமாகக் கூறுவது 'பதிகம்' என்று பெயர். எனக்குத் தெரிந்து இப்படியான ஒரு புதுமை முயற்சியை முதல் முதலாகச் செய்து பார்த்தவர் நமதருமை இளங்கோவடிகள்.

    'சிலப்பதிகார'த்தின் பதிகம், 'குணவாயில் கோட்டத் தரசுதுறந் திருந்த'.. என்கிற வரியை ஆரம்ப வரியாகக் கொண்டு ஆரம்பித்து, 'இது, பால்வகை தெரிந்த படிகத்தின் மரபுஎன்' என்கிற ஈற்றடியுடன் முடியும். மொத்தம் 90 வரிகள். 90 வரிகளும் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை முற்றுப்புள்ளி வைக்காத ஒரே வரி.

    உங்களது இந்த முயற்சியைப் படித்த பொழுது அடிகளார் தான் நினைவுக்கு வந்தார். 'சாதாரணன் இராமாயணம்' அசாதாரணமான முயற்சி.

    அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இராமாயணத்தின் தனிச்சிறப்பே அதை எத்தனை முறை யார் யார் வாய்க்கேட்பினும், அதன் ருசி பன்மடங்கு பெருகுமே தவிர, ஒரு நாளும், ஒருவருக்கும், அலுப்பை ஏற்படுத்தாத ஓர் உன்னதமான காவியம்.

    தாங்கள் சாதாரணன் அல்ல என்பதை மிகச்சாதாரணமாக விளக்கி விட்டீர்கள்.

    பாராடுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அசாதாரண அருமையான படைப்பு.
    பல முறை படிக்கத்தூண்டும் அழகான நடைக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  7. ஆறு காண்டங்களில் முக்கிய அம்சங்கள் ஏதும் விடுபடாது
    மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
    வானத்தில் இருந்து உலகைப் பார்ப்பதுபோல்
    தங்கள் பதிவின் மூலம் ஒட்டுமொத்த
    இராமாயன காவியத்தை தரிசித்தது போன்ற உணர்வு
    நன்றி

    ReplyDelete
  8. @சுந்தர்ஜி,நான் கற்றதென்னவோ கையளவிலும் குறுகியது. ஆர்வமுந்த திடீரென்றுஎழுதத் துவங்கி முடித்தும் விட்டேன். பாராட்டலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. ஒரு கற்ற தமிழறிஞரிடமிருந்து வரும் பாராட்டுக்களை வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்று கேட்பதுபோல் இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  10. @தினேஷ்குமார். உங்கள் தமிழறிவுக்கு முன்னால் இது ஒன்றும் இல்லை. பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  11. @திரு.ஜிவி நீங்கள் குறிப்பிடும் பதிகம் பற்றிய எழுத்து முறை நான் உங்கள் மூலம்தான் கேள்விப் படுகிறேன். என்னைவிட அறிவும் ஞானமும் உள்ளவர்கள் ஊக்கமே எனக்கு தூண்டுகோல். நன்றி ஐயா.

    ReplyDelete
  12. @கோபு சார் தமிழெழுத்தில் முத்திரை பதித்த உங்களைப் போன்றோர் ஆதரவு என்றும் வேண்டும். மிக்க நன்றீ.

    ReplyDelete
  13. இராஜ இராஜேஸ்வரி தொடர்ந்து என் பதிவுகள் படித்து ஊக்கப் படுத்த வேண்டுகிறேன்.நன்றி

    ReplyDelete
  14. @ரமணி எல்லோரும் அறிந்த ராம கதையை வெகு சாதாரணனாக ஒரு உந்துதலில் ஒரே வாக்கியத்தில் எழுதினேன். என்னாலேயே மறுபடியும் இதேபோல் எழுத முடியுமா தெரியவில்லை கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி.

    ReplyDelete
  15. அற்புதம்... அபாரம்... பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. அன்பின் ஜிஎம்பி

    கமபனைக் கரைத்துக் குடித்தவரா தாங்கள் - ஒரே வாக்கியத்தில் கம்ப ராமாயணத்தை எழுதி - பெரும் சாதனை புரிந்துள்ளீர்கள் - அறிவு - அனுபவம் - ஆர்வம் - உழைப்பு - திறமை - இத்தனையும் கலந்து ஒன்றாக ஊக்குவிக்க - அழகான, எளிய, இயல்பான கவிதை - காவியம் - இடுகையாக மலர்ந்திருக்கிறது. பாராட்ட சொற்கள் இல்லை - வாழ்க வளமுடன் . நட்புடன் சீனா

    ReplyDelete
  17. அன்பின் ஜிஎம்பி - அனுமனோடு அடியேனும் அடி பணிய - அழகான சொல்லாட்சி - பட்டாபிஷேகம் - மணி முடி ஏற்ற காட்சியினை மனக் கண்ணில் காணக் கொடுத்து வைத்தவர் நீங்கள். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  18. அன்பு சரவணன், பாராட்டுக்கும் திரு, சீனா அவர்களை படிக்க வைத்ததற்கும் நன்றி.

    ReplyDelete
  19. அன்பு சீனா அவர்களுக்கு , என் எழுத்துக்களை வலையுலகில் மூத்தவரான நீங்கள் படித்து கருத்து சொன்னால் மகிழ்ச்சியாய் இருக்கும் என்றே திரு. சரவணனிடம் வேண்டினேன். இவ்வளவு சீக்கிரம் அது நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி. அனுமனுடன் அடியேனும் என்று எழுதும்போது இப்படி கதாகாலத்துக்குள் என்னை நுழைப்பது சரியா என்று ஐயத்துடன் கேட்டே எழுதினேன். .அதற்கு உங்கள் பாராட்டு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. அடிக்கடி வாருங்கள் .ஆதரவு தாருங்கள் . நன்றி.

    ReplyDelete
  20. sir !

    இந்த பதிவிற்கு comment எழுதும் அளவிற்கு எனக்கு ஞானம் போதாது! கதை தெரிந்த காரணத்தால் எதோ புரிந்தது என்று தான் சொல்ல வேண்டும்! நான் படிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் பல உள்ளன-- என்று மட்டும் தோன்றியது...
    ஒரு வரி-- என்ற விஷயம் மட்டும்-- என்னை ஒரு பெரும் பிரமிப்பில் தள்ளி விட்டது! இப்படி ஒரு விஷயமும் செய்ய முடியும் என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்!

    ப்ரமாதம்!

    ReplyDelete
  21. ராமாயணம் முழுக்கதையும் உங்கள் பதிவில் மெதுவாகப் படிக்கக் கூட பத்து நிமிடம் தான் தேவைப்படுகிறது. ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. சிறந்த முயற்சி. பாரட்டுக்கள் ஐயா.

    ReplyDelete
  22. தங்க‌ள் அறிவின் ஆழத்தையும். ஆவ‌ர்த்தையும் நாங்க‌ள் அறிய‌, இந்த‌ `ஒற்றை வ‌ரி` போதும்.
    "வாழ்த்த‌த் த‌குதியில்லை, வ‌ண‌ங்குகிறேன்" என உங்க‌ளிட‌ம் கூற‌லாம்.

    ReplyDelete
  23. நிஜமாகவே ஒரு நீளமான வாக்கியம் - கடைசிக்குறிப்பு பார்த்ததும் தான் புலப்பட்டது. அதுவரை 'சாதாரண' ராமாயணம் படிப்பது போலவே தோன்றியது.

    (அங்கதனைக் காணோம் - என் பேவரிட் கேரக்டர்களுள் ஒன்று. 'தன் தந்தையை வஞ்சகமாகக் கொன்றவனை தினம் பார்த்தபடி அவனால் எப்படி பணிவிடை செய்யமுடிந்தது?' என்பதற்கான motivation இன்று வரைக் கிடைக்கவில்லை.)

    தாமதமாக வருவதால் பின்னூட்டங்களைப் படித்து இன்னும் சுவாயானது. அவசர ராமாயணம். இப்படியும் எழுதலாமென்றால் பத்தாயிரம் பாடல்கள்... என்ற கேள்வி எழுந்தாலும் அடக்கினேன்.. சுந்தர்ஜி சொல்லியிருப்பது போல் உழைப்பு தெரிகிறது.

    ReplyDelete
  24. அற்புதம் ஐயா, தமிழின் எளிமையான சொற்களால் ஒரு பாமாலை. நல்ல தேர்ந்த பயிற்சி இருப்பதால் சாத்தியமாகி உள்ளது.

    ReplyDelete
  25. அருமையானதொரு முயற்சி இது. மிக நன்றாகவே வந்திருக்கிறது. ஒரு சில தட்டச்சுப் பிழைகளைச் சரி பாருங்கள். திரு. அப்பாத்துரை சுட்டியது போல அங்கதனும், அப்படியே மதுவனமும் இல்லாதது ஒரு சிறு குறை. சரி செய்துவிடக் கூடிய குறைதான்! எல்லா நிகழ்வுகளையும் சொல்லியதால்தான் இவை இல்லாததும் தெரிகிறது என்பதும் உண்மையே!:))

    'அனுமனுடன், அடியேனும்' என்னும் சொல்லாட்சியில் 'சிரஞ்சீவியாக' நீங்களும், எழுத்துலக 'ஜாம்பவானாக' வலம் வருகிறீர்கள் என அறிந்து மகிழ்கிறேன்.

    முருகனருள் முன்னிற்கும்.

    ReplyDelete
  26. ஷைலஜா அவர்களின் தளம் மூலம் இங்கு வந்தேன். ஒரே வாக்கியத்தில் என்றதும் எப்படி என்று அதிசயித்து வந்த நான் இங்கு வந்தபின் பிரமிப்பும் மலைப்பும் தட்டி நிற்கிறேன். ஒன்றுக்கொன்று சிக்கலில்லாமல் புரிதற்சிரமமில்லாமல் மிக அழகாக நேர்த்தியாக சரம்போல் நிகழ்வுகளை நயம்படத் தொகுத்தளித்த பாங்கு கண்டு நெகிழ்வோடு பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  27. எத்தனை நீளமான வாக்கியம்...ஆனாலும் தெளிவாக, எளிமையாக ராம காதையை எழிலுடன் இயம்பியிருக்கிறீர்கள், ஐயா!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  28. தங்களால் எப்பொழுதும் இப்படி எழுதமுடியுமாவென்று எனக்கு ஐயம் இருக்கிறது. சில சமயங்களில் நம்மையறியாமல், நம்பமுடியாத காரியங்களை முடித்திருப்போம். செயல் முடிந்த பிறகே இதனை நாம்தான் முடித்தோமா என்று ஐயம் ஏற்படும். அத்தகைய தருணமொன்றில் எழுதப்பட்ட பாடல் என்று நினைக்கிறேன். அல்லது இயற்கையாக தங்களுக்கு மொழியில் நல்ல புலமை இருக்குமென்று நினைக்கிறேன். ஒரே வரியில் இராமாயணத்தைக் கவிதையாக கூறுவதென்பது சாமானியர்களால் சாத்தியான செயல் கிடையாது. ஏதோ ஒரு காலத்தில் நான் கல்வி மாவட்டம் அளவில் மூன்று முறை தமிழில் முதல் மதிப்பெண் எடுத்த ஞாபகம் இருக்கிறது. இப்பொழுது பெருங்காய டப்பா மட்டுமே உள்ளது. ஒரே ஒரு வார்த்தையில் சிறிது சந்தேகம் உள்ளது.
    “ சுயம்வரப் பந்தலில் சனகனின் சிலையறுத்து”
    இதில் “வில்லைமுறித்து” என்று வரவேண்டுமென்று நினைக்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். எனக்கு தவறு கண்டுபிடிக்கும் எண்ணம் இல்லை.
    பாராட்டுக்கள்.
    அன்புடன்
    பக்கிரிசாமி நீலகண்டம்.

    ReplyDelete

  29. @ மாதங்கி மாலி
    @ வெங்கட்
    @ வாசன்
    @ அப்பாதுரை
    @ கீதா சாம்பசிவம்
    @ VSK
    @ கீத மஞ்சரி
    @ ரஞ்சனி நாராயணன்
    @ பக்கிரிசாமி.

    எழுதும்போது அங்கதன் பற்றியோ மதுவனம் குறித்தோ நினைவே வரவில்லை.. ஒரு வேளை என் மனதில் அவை முக்கியமாகப் படாதிருந்திருக்கலாம். திரு ரமணியின் பின்னூட்டத்துக்கு மறு மொழியாக நான் எழுதியதையே மீண்டும் கூறுகிறேன். சாதாரணனான நான் ஒரு அசாதாரண வேகத்தில் எழுதியதே இது. மீண்டும் முயற்சி செய்தால் முடியுமா என்று தெரியவில்லை. திரு பக்கிரிசாமிக்கு வில்லுக்கு சிலை என்றும் கூறுவர்.
    இந்தப் பதிவு மட்டுமல்ல , இன்னும் பல பதிவுகளும் இப்போது நான் படித்துப் பார்க்கும் போது எழுதியது நானா என்று எனக்கே வியப்பு ஏற்படுகிறது. என் வேண்டு கோளுக்கு இணங்கியும் என்னை ஊக்குவிக்கும் பொருட்டும் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  30. //...ஒரே வாக்கியத்தில் இந்த சாதாரணனின் இராமாயணம் ...//

    ஒரே வார்த்தை - பின்னீட்டீங்க.

    ReplyDelete

  31. @ தருமி
    நன்றி ஐயா.!

    ReplyDelete
  32. 6 காண்டங்களையும் பாலை சுண்டக் காய்ச்சுவது போல் காய்ச்சி வடித்திருக்கும் விதத்தை எண்ணுகையில் உள்ளம் உவகை கொள்கிறது அய்யா. ஆம் சுண்டிய பாலுக்கு தானே சுவை அதிகம். எளிமையான நடை. படம் பார்த்த உணர்வு. பதிவுக்கு நன்றி அய்யா.

    ReplyDelete

  33. @ அ.பாண்டியன்
    / சுண்டிய பாலுக்குத் தானே சுவை அதிகம்/ பாராட்டுக்கு நன்றி, பாண்டியன் அவர்களே.

    ReplyDelete
  34. கம்ப ராமாயணத்தையே ஐந்தாறு நிமிடங்களில் படித்து முடித்தது போன்ற பிரமை ஏற்பட்டது, தங்களின் சாமான்யனின் ராமாயணம். எனவே ஒரு வேண்டுகோள்: சிலப்பதிகாரத்தையும் இதுபோல் "சாமன்யனின் சிலப்பதிகார"மாக எழுதிக் கொடுங்களேன்! இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். –கவிஞர் இராய.செல்லப்பா (இமயத்தலைவன்). சென்னை.

    ReplyDelete
  35. சார் இது டெம்ப்ளெட் கமென்ட் இல்லை! மிக மிக அழகாக, எளிய நடையில் ராமாயணத்தை முழுவதும் கொடுத்து விட்டீர்கள். இதைப் பாடமாக கூட வைத்துவிடலாம் சார். எளிதாகப் புரிந்து கொள்ள முடிவதால். அழகிய தமிழ் அதேசமயம் எளிய தமிழ். தொடர் பிரவாகமாக இறுதிவரை அப்படியேச் செல்லும் நடை....

    வியந்தோம் சார். ராஜாஜி எழுதின ராமாயணம் படிக்கணும்னா கூட 2, 3 நாட்கள் தேவை...இது ஜஸ்ட் சில நிமிடங்களில் வாசித்துப் புரிந்து கொள்ள முடிகிறது...எங்கள் தலையாய வணக்கங்கள்!

    Ramayan in nutshell!!!

    ReplyDelete

  36. @ செல்லப்பா
    ஏதோ ஒரு உந்துதலில் எழுதியது. பாராட்டுக்கு நன்றி. சிலப்பதிகாரத்தை எழுத முடியுமா தெரியவில்லை.

    ReplyDelete

  37. @ துளசிதரன் தில்லையகத்து
    மனம் நிறைந்த பாராட்டுக்கு நன்றி ஐயா. இதுவும் டெம்ப்ளேட் நன்றி அல்ல. நான் அதிகம் தமிழ் படிக்காதவன். எழுதும் ஆர்வம் எழுதத் தூண்டுகிறது. சில நேரங்களில் சில பதிவுகள் நன்றாக வந்து விடுகின்றன. அம்மாதிரிய சில நல்ல பதிவுகளை பலரும் படிக்கவேண்டும் என்று எண்ணுவது உண்டு.

    ReplyDelete
  38. சார், மிகப் பெரிய இதிகாசத்தை ரத்தினச் சுருக்கமாக ஒரு வலைப்பதிவுக்குள் அடக்குகிற சாகசத்தை நிகழ்த்தியிருக்கிறீர்கள். மொழிநடையும் அருமை. அதற்குக் குவிந்துள்ள பாராட்டுகளைப் பார்க்கும்போது மனம் மகிழ்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் சார்.

    -சித்ரன் ரகுநாத்

    ReplyDelete

  39. @ சித்ரன் ரகுநாத்
    எனக்கு பதிவுலகின் ஆரம்பத்தில் மிகுந்த ஆதரவு தந்த நீங்கள் என் எழுத்துக்களில் சிலவற்றையாவது படிக்க வேண்டும் என்று தோன்றியதால் உங்களுக்கு அனுப்பினேன். எழுதுபவனுக்கு பின்னூட்டங்களொரு உத்வேகம் கொடுக்கும். குறைகள் இருந்தாலும் சுட்டிக் காட்டலாம். வருகைக்கு நன்றி ரகுஜி.

    ReplyDelete
  40. அய்யா,
    வணக்கம். முதலில் தமிழ் என் துறையன்று.
    வெகுசாதாரண ஆர்வம் மட்டுமே கொண்டு கிடந்துழலும் சாதாரண வாசகனே நான்.
    நீங்கள் என்னையும் பொருட்டென மதித்து இப்பதிவின் சுட்டி அளித்துச் சென்றமைக்கு முதலில் நன்றி.
    புறவுரை, பதிகம் தந்துரை, பாயிரம் என்னும் நான்கும் ஒரு பொருட் கிளவிகளாக இலக்கணக்காரர்களால் சொல்லப்படுகின்றன.
    இவை நான்கிற்கும் வேறுபாடு இருப்பதாக எனக்குப் படுகிறது.
    புறவுரை, ஒரு விமர்சனம்போல படைப்பின் வெளிநின்று அப்படைப்பை விமர்சிப்பது.
    படைப்பு நன்றா இல்லை.
    படைப்பின் நுட்பம் எப்படி இருக்கிது.
    அதற்குப் படைப்பில் சொல்லப்பட்ட பொருளை ஏற்றாக வேண்டியதில்லை.
    ஒரு சைவன் கம்பராமாயணம் என்னும் இலக்கியத்தை இலக்கித்தகுதி கருதி நடுநிலையோடு விமர்சிப்பது போன்றது இது.
    தந்துரை என்பது கவியறியா நயங்களையும் கண்காட்டும் விதத்தில் அமைவது.
    தான் ஒரு கண்ணாடியை அணிந்து கொண்டு ஒரு படைப்பைப் பச்சையாய்த் தெரிகிறது, நீலமாய்த் தெரிகிறது எனச சொல்லும் ஒருசார்பு விமர்சனமாக நிற்பது .
    புனைந்துரை என்பது பூனையை யானையாக்குவது போன்றது. மாறாக ப் யானையைப் பூனையாக்கினாலும் சரிதான், அது விமர்சகனின் சாமர்த்தியத்தைப் பொருத்தது.
    பாயிரம், அதுதான் நூலினுள் நுழையும் தோரணவாயில் ஆவது.
    முன்கதைச்சுருக்கமாய் நூலைப்படித்தால் இது விளங்கும்,
    இதன் மேல் ஆர்வமிருந்தால் உள்நுழைந்து பார் என்று காட்டிச் செல்வது.
    புத்தகங்களின் பின்னட்டையில் உட்பொருளின் சாரத்தை ஒருசில வரிகளில் விளக்கிச் செல்வதில்லையா அது போன்றது.
    தாங்கள் எழுதியுள்ள சாதாரணன் ராமாயணம் அந்தத் தோரண வாயில் தான்.
    நூலிற்கான அலங்காரங்களுள் இது சுருங்கச் சொல்லல்.
    விளங்க வேண்டுமா உள்ளே நுழைந்து பார் என்று விடுக்கும் அறைகூவல்!
    இந்த இனிப்பு நன்றாக இருக்கிறதே எனக்கும்
    ஒரு கிலோ கொடு என்று வாசகனை பேரிலக்கியப்பரப்பை சுவைத்துப் பார்க்கத் தூண்டும் வழிமுறை.
    பின்னர் கவிவடிவம்.
    இன்றைய புதுக்கவிதை உட்பட எல்லா வடிவங்களையும் நம் மரபு உள்ளடக்கி விதி தந்திருக்கிறது.
    சில அழகுக் குறிப்புகள் நீங்கிவிட்டால் அது மரபாகாது என்ற எண்ணத்தைப் பெரும்புலவர்கள் ஏற்படுத்திப் போய்விட்டனர்.
    இன்னும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
    உங்களின் பாவடிவம் இணைக்குறள் ஆசிரிய விருத்தம்.
    ஏன் மரபில்லை என்கிறீர்கள் என்பது தெரியவில்லை.
    தமிழ் மரபின் மிகப்பழம் வடிவமே ஆசிரியம்.
    உரிய நெகிழ்வும் அதே நேரம் உள்ளடக்கச்செறிவும் உள்ளது.
    நீங்கள் இக்காவியம் விளக்க இவ்வடிவைத் தேர்ந்தெடுத்து விட்டு மரபுக்கவிதையில் எழுதியிருக்க முடியும் எனத் தோன்றவில்லை என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
    சாதாரணனின் ராமாயணம் அசாதாரணம்!
    தங்களைப் போல இன்னும் அறியப்படாத ஆளுமைகள் எத்தனை பேர் இருக்கின்றார்களோ...............

    யாழ்ப்பாவாணர் காசிலிங்கராஜன் அவர்களுக்கு நன்றிகள்!
    திருவெழுக்கூற்றிருக்கை அதன் வடிவத்தை இணையத்தில் எப்படி விளக்க முடியும் எனத்தெரியவில்லை அய்யா!
    நான் இணையத்திற்குப் புதியவன்.
    போதுமான தொழில் நுட்ப அறிவு இல்லாதவன்.
    முயற்சிக்கிறேன்.
    தங்களைத் தொடர்கிறேன்.
    நன்றி

    ReplyDelete

  41. @ ஊமைக் கனவுகள்.
    இதனை எழுதத் துவங்கும்போது இது புறவுரையா பாயிரமா தந்துரையா பதிகமா என்று ஏதும் எண்ணிப் பார்க்கவில்லை நான் . ஏனென்றால் இவை எதுவும் எனக்குத் தெரியாது.ஒரு நண்பர் இது பதிகம் போல் இருப்பதாக எழுதி இருந்தார். நானே இன்னுமொரு முறை இது போல் எழுத முடியுமா தெரியவில்லை. இதற்கு ஆசிரியப்பாவின் வடிவுள்ளது என்று நீங்கள் சொல்லித் தெரிகிறேன் ஏதோ ஒரு உந்துதலில் எழுதியது இது.
    திருவெழுக்கூற்றிருக்கையின் வடிவத்தை நான் புரிந்து கொண்டதை பதிவிலேயே குறிப்பிட்டு இருக்கிறேன் வருகைக்கும் பல விஷயங்களைப் புரிய வைத்ததற்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  42. முழு விடயமும் கொடுத்து விட்டீர்கள்

    ReplyDelete
  43. அப்பாடா மூச்சு வாங்குகிறது ம்..ம்.ம் ஆறு காண்டத்தையும் ரத்தினச் சுருக்கமாக அழகாக படைத்துள்ளீர்கள் மலைப்பாகவே உள்ளது. நன்றி ஐயா! வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete

  44. @ கில்லர்ஜி
    அதற்குத்தானா முயற்சி நன்றி ஐயா

    ReplyDelete

  45. @ இனியா
    உங்கள் பாராட்டும் வருகைக்கு உங்களுக்கும் வலைச் சரத்துக்கும் நன்றி மேடம்

    ReplyDelete
  46. ஒரு வாக்கியத்தில் இராமாயணம் !!! அரிய முயற்சி . எளிய நடை ,
    முக்கிய நிகழ்வு அனைத்தும் கோர்த்து ஒரு அழகிய ஒற்றை வாக்கிய மாலை . அருமை !

    ReplyDelete

  47. @ சசிகலா
    வருகைக்கு வலைச்சரத்துக்கும் பாராட்டுக்கு உங்களுக்கும் நன்றி மேடம்

    ReplyDelete
  48. இராமாயணத்தில் எல்லாவற்றையும் உள்ளடக்கியிருக்கிறீர்கள். இராமாயணத்தை எந்த வடிவத்திலும் படிக்க நேர்வது சிறப்பு. உங்களுடைய திறமைக்கும், ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் பாராட்டுக்கள்.

    பெரியாழ்வார், திவ்யப்பிரபந்தத்தில், சுந்தரகாண்டத்தைப் பாடும்போது பின்வரும் பாடல் இடம்பெறுகிறது. உங்களுடையதைப் படிக்கும்போது, வார்த்தைகளினால் இந்தப் பாசுரம் நினைவுக்கு வந்தது. 'கடிகா' என்ற வார்த்தையைத் தவிர, மற்ற தனித்த வார்த்தைகள் (அத்திரம், ஒக்குமால் போன்றவை) அந்தப் பாசுரங்களில் வருகின்றன

    திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
    மிக்க பெரும் சபை நடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு
    ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சிமேல்
    வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே

    ReplyDelete
    Replies
    1. ராமாயணத்தைப் பல வடிவங்களில் ப்டித்திருப்பேன் பிற எழுத்துகளின் பாதிப்பு இருக்க வாய்ப்புண்டு அகர வரிசையில் ராமாயணம் படித்தேன் எப்போதாவது எங்காவது அதன் பாதிப்பில் எழுத்துகள் வரலாம்தானேபாசுரங்களில் தேர்ச்சி பெற்றவரோ நீங்கள் வருகைக்கு நன்றி சார்

      Delete
  49. மலைக்க வைத்தது ...!!! ஒரே வாக்கியத்தில் இதுவரை நான் படித்ததில்லை .மிகவும் அற்புதமாக அழகாக விளங்கியது ஒவ்வொரு வரியும்.. இராமாயணம் மிகவும் ரசித்து வாசித்தேன்

    ReplyDelete
  50. ஏஞ்செல் வருகை புரிந்து படித்ததற்கு நன்றி வித்தியாசமான முயற்சிகள் செய்திருக்கிறேன் பாராட்டுக்கு நன்றி மேம்

    ReplyDelete
  51. உங்கள் உழைப்பு தெரிகின்றது. சுந்தரகாண்டம் மட்டும் நான் வாசித்துள்ளேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முழுவதும் வசித்தால்தன் எனக்கு திருப்தி தரும் ஒரு வேளை ரசிக்க வில்லையோ

      Delete
  52. இது அத்தனையும் நீங்கள் படைத்த கவிதைகளா ? ஆச்சரியமாக இருக்கிறது. உங்களுக்குள் இத்துணை திறமைகள் இருப்பதை காணும்போது பிரமிப்பாக இருக்கிறது. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete