Thursday, December 15, 2011

அரண்டவன் கண்ணுக்கு....

                                     அரண்டவன் கண்ணுக்கு
                                    ------------------------------------
                                           (  ஒரு சிறு கதை )

அவர் அலுவலகப் பணி நிமித்தமாக வந்திருந்தார்.விருந்தினர்
விடுதி என்று ஏதும் தனியாக இல்லாததால், ஆஃபீஸில் ஒரு
அறையையே  விருந்தினர் விடுதியாக உபயோகப்படுத்தினர்
பணி நடக்கும் இடத்துக்குப் போக வரவும், போக்குவரவு
வசதிக்கும் அந்த இடமே சரியாக இருக்கும் என்பதால்,அவரை
அங்கே தங்க வைத்தனர்.

வந்தவர் வேலை எல்லாம் முடித்து வந்து மாலையில் ஒரு
திரைப்படமும் பார்த்து இரவு பதினோரு மணியளவில் அறை
வந்தவர், சற்று நேரத்தில் உறங்கி விட்டார். அவருக்கு திடீரென
“ஜல் ஜலங்” என்ற சப்தம் கேட்டு, கண்முழிப்பு வந்தது. உடல்
எல்லாம் வியர்க்க ஆரம்பித்தது நாக்கு வரண்டு விட்டதுஎழுந்து
சென்று தண்ணீர் எடுத்துக் குடிக்கவும் பயத்தால் முடியாமல்                                                                        
போய்விட்டது. சிறிது நேரத்தில் எல்லாம் பிரமையாய் இருக்கும்
என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு உறங்க எத்தனித்தார். சற்று
நேரத்தில் மறுபடியும் “ஜல்ஜலங் “என்ற சப்தம் கேட்டது அவருக்கு
பயத்தில் நெஞ்சே வாய்க்குள் வந்து விட்டது போலிருந்தது.
இருட்டில் பயம் அதிகரிக்கவே கஷ்டப்பட்டு எழுந்து விளக்கைப்
போட்டார். ஃபானின் வேகத்தை கூட்டினார். மனம் ஒரு நிலைப்பட
மறுத்தது. என்ன என்னவோ எண்ணங்கள் ..கந்தர் சஷ்டிக் கவசம்
சப்தமாகச் சொல்லப் பார்த்தார். வாயசைந்ததே தவிர வார்த்தை
வெளிவரவில்லை. ஒருபேயோ, பிசாசோ வாழும் இடத்தில் தங்க
வைத்து விட்டார்களே என்று அந்த நிர்வாகிகள் மீது கோபம்
கோபமாய் வந்தது. ஆஃபீஸுக்கு ஒரு வாட்ச் மேன் கூடக்
கிடையாது. இந்த நேரத்தில் யாரிடம் போவது.?எங்கே செல்வது
என்றெல்லாம் எண்ணிக்கொண்டு எல்லோரையும்ஒருவழியாகத்
திட்டித் தீர்த்தார். காலையில் வெளிச்சம் படர ஆரம்பித்தது.
முதலில் இந்த இடத்தை விட்டு எங்காவது செல்ல வேண்டும்
என்று தன்னுடைய பெட்டியைத் தன் உடமைகளால் நிரப்பி
வெளியே கிளம்பினார்.

வெளியே வந்தவர் எதிரில் ஒரு லம்பாடிப் பெண் மாடிக்குச்
செல்லும் படிக்கட்டுகள் கீழே இருக்கும் இடத்திலிருந்து எழுந்து
வந்தாள். அவள் நடக்கும்போது அவள் கை அசைவிலும் கால்
அசைவிலும் “ ஜல், ஜலங் “ என்று சப்தம் கேட்டது.
-------------------------------------------------------------------------
     

18 comments:

  1. ஒன்றின் அசைவிலிருந்து வெளிப்படும் ஒலியே, அந்த ஒன்று என்னவென்று சொல்லாமலே, புலப்படுகிறது பாருங்கள்!

    ReplyDelete
  2. பீதி கிளம்பிவிட்டால் புத்தி ஸ்ட்ரைக் செய்து விடுகிறது.

    ReplyDelete
  3. பயம் எல்லா வடிவிலும் வரும் போல! அருமை.

    ReplyDelete
  4. மிகச் சுருக்கமான ஆயினும்
    மிக அருமையான சிறுகதை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம

    ReplyDelete
  5. எனக்குக்கூட இன்னமும் பேய் என்றால் அத்தனை பயம் .உங்கள் பகிர்வைப் பார்த்ததும் இந்த அவஸ்த்தையை
    சட்டென உணர முடிந்தது .அருமையான பகிர்வு மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  6. இருட்டின் அமைதியில் லேசான சப்தம் கூட என்னன்னமோதான் நினைக்க வைக்கும். அதை அழகாக சொன்ன து நல்லா இருக்கு.

    ReplyDelete
  7. அவள் நடக்கும்போது அவள் கை அசைவிலும் கால்
    அசைவிலும் “ ஜல், ஜலங் “ என்று சப்தம் கேட்டது.
    -------------------------------------------------------------------------அரண்டவன் கண்ணுக்கு...."

    பயந்தவன் மனதுக்கு ..மிரண்டுவிட்டார் பாவம்..

    ReplyDelete
  8. இது போன்ற அனுபவங்கள் எல்லோருக்கும் உண்டு. கடிகாரத்தின் டிக் டிக் ஓசை கூட நிசப்தத்தில் பயம் உண்டு பண்ணும். கதை அருமை.

    ReplyDelete
  9. பதிவுக்குக் கருத்திட்ட ஜீவி,ரிஷபன், வி.ராதாகிருணன்,ரமணி, அம்பாளடியாள், லக்ஷ்மி,இராஜராஜேஸ்வரி, ஷக்திப் ப்ரபா,கந்தசாமி ஐயா, அனைவருக்கும் நன்றி. கந்தசாமி ஐயாவுக்கு, இது அனுபவமல்ல, வெறும் புனைவே.

    ReplyDelete
  10. //அவள் நடக்கும்போது அவள் கை அசைவிலும் கால்
    அசைவிலும் “ ஜல், ஜலங் “ என்று சப்தம் கேட்டது.//

    ஆஹா, இருட்டில் பயமுறுத்திய சம்பவத்திற்கு, விடிந்ததும் விடையளித்து விட்டது அதே ”ஜல், ஜல்ங்” சப்தம்.

    பகலில் வெளிச்சத்தில் என்றால் எதையும் ரஸிக்கலாம். இரவில் என்றால் எனக்கும் பயமே!

    நல்ல பகிர்வு, சார்.

    ReplyDelete
  11. காற்று சற்று வேகமாக அடித்தாலும் பய(ம்)மாக இருக்கும்.
    பகிர்விற்கு நன்றி Sir!
    என் வலையில் :
    "நீங்க மரமாக போறீங்க..."

    ReplyDelete
  12. கதை நன்றாக வந்துள்ளது..

    நூறை தாண்டி பயணிக்கும் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் சார்!!

    ReplyDelete
  13. இருளிலும் மூடிய கதவுகுள்ளும் இருக்கும் பயம் (இருளாயினும்) வெட்ட வெளியிலும் வெளிச்சத்திலும் குறைந்து விடுகிறது!

    ReplyDelete
  14. அருமை.
    நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. ஐயா, அருமையான பதிவு,அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் இரவின் அரவங்களின் அவஸ்தை.

    ReplyDelete
  16. பயத்தில் எதுவுமே புரியாமல் தான் போய் விடும் போலிருக்கிறது.
    அருமையான பதிவு

    ReplyDelete
  17. பயம் எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது....

    நல்ல சிறுகதை.

    ரசித்தேன்.

    ReplyDelete