திங்கள், 31 டிசம்பர், 2012

சிகரம் தொட இன்னொரு வாய்ப்பு.


                       சிகரம் தொட இன்னொரு வாய்ப்பு.
                       -----------------------------------------------  

 ஆண்டொன்று கழிகிறது, இன்னொன்று மலர்கிறது.
நாளெல்லாம் ஒன்றுபோல் தோன்றினும் ஒன்றாவதில்லை.
ஒவ்வொரு விடியலிலும் மீண்டும் உயிர்க்கிறோம்
புலரியில் புள்ளினங்கள் பறக்கும்போது அவை
நேற்றை நினைக்கின்றனவா ?. இன்றைக்கென்று புதுப்
பிரமாணங்கள் எடுக்கின்றனவா ?..மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த
இன்று, நேற்று, நாளையெல்லாம் .ஓ......! அவனுக்கு ஓரறிவு கூட
இருப்பதாலா. இருக்கட்டும். நேற்றின் நாளையாம் இன்று பற்றி
நேற்றே கவலை கொண்ட அவன் இன்றின் நாளையைப் பற்றி
சிந்திக்காமல் இருப்பானா. சிந்திக்கட்டும் சிந்திக்க வேண்டும்
நாளெல்லாம் ஒன்றுபோல் தோன்றினும் ஒன்றாவதில்லை.
ஒவ்வொரு நாளும் சிகரம் தொட இன்னொரு வாய்ப்பு.
வாழ்க்கைப் பயணம் தொடர்வோம் . புத்தாண்டில் புது
சிகரம் தொடப் பிரமாணம் எடுப்போம்.
(ஒரு இழப்பின் வேதனையில் என்னையே தேற்றிக் கொள்ள 
எழுதிய வரிகள். எல்லோருக்கும் பொருந்தும்தானே.) 

எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


       

புதன், 26 டிசம்பர், 2012

நான் நல்ல பையன்...


                         நான் நல்ல பையன்.
                         ---------------------------


நாலாறு வயதிலும் நல்ல பையன் நான்
கண்முன்னே கார்குழல் விரித்த கன்னியர்


(இப்போதெல்லாம் பின்னிய கூந்தல் காண்பதரிது)

பத்மினி,சித்தினி,சங்கினி, அத்தினிப் பெண்டிர்
பவிசாக வந்தாலும் பத்திர காளியாய் நின்றாலும்
பயமாய் இருக்கிறது.. தலை தூக்கிக் கண்டாலே
காவலரிடம் புகார் செய்வரோ, என்றே அச்சம்.
அவர்களுக்கென்ன ..பாரதியே கூறிவிட்டான்
நிமிர்ந்து நடக்கவும்  நேர்கொண்டு பார்க்கவும்.

எனக்கேன் இந்த பயம்..?

பேதையோ, பெதும்பையோ
மங்கையோ மடந்தையோ , அரிவையோ தெரிவையோ
இல்லை பேரிளம்பெண்ணோ , பார்வையால்
துகில் உரியப்பட்டு பருவ பேதமின்றி சிதைக்கப்படும்
அச்சத்தின் உச்சத்தில் வளைய வரும் தாய்க்குலம்
யாரைப் பார்த்தாலும் பாம்பா பழுதையா என்றறியாது
தற்காப்புக்காக எதுவும் செய்யலாம்தானே

பாரதிதாசன் கூறியதுபோல் “ கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கென குதித்ததைப் போல் கிளைதோறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதையெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன் வால் பார்க்கும்.”

பாவிகள் பலரது செயல்கள்
பூவையரிடையே அச்சத்தை விளைவிக்க் நானிருக்கிறேன்
நாலாறு வயதிலும் நல்ல பையனாக.
--------------------------------






                     

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

துருவங்கள்


                                     துருவங்கள்.
                                   -------------------
                            ( ஆணும் பெண்ணும்)

அவளது டைரி.
------------------------

இன்று மாலையிலிருந்தே அவன் அவனாயில்லை
மாலையில் காஃபி க்ளப்பில் சந்திக்க ஏற்பாடு.
தோழிகளுடன் ஷாப்பிங் செய்ததில் தாமத மாயிற்று
பார்த்தவன் ஒரு ஹாய் கூடச் சொல்லவில்லை
கடுகடு என இல்லாவிட்டாலும் ஒரு சுரத்து இல்லை.
என்ன பிணக்கமோ காரணம் தெரியவில்லை
என் மேல் கோபமா எனக் கேட்டேன்.இல்லையென்றான்
நான் அவனை மிகவும் நேசிப்பதாகக் கூறினேன்.
பதிலாய் வந்தது ஒரு வரண்ட சிரிப்பு.
என்னைப் பார்த்து அவனும் நேசிப்பதாய் ஏன்
சொல்லவில்லை ஏதும் பேசாமல் கார் ஓட்டினான்
எனக்கு அழுகை அழுகையாய் வந்தது.
வீட்டுக்கு வந்தவன் தொலைக்காட்சிப்
பெட்டியை முடுக்கினான். எந்த சானலும்
பார்க்காமல் மாற்றிக் கொண்டே இருந்தான்
படுக்கையில் வீழ முடிவு செய்தேன் வந்ததும்
அவனிடம் கேட்க எண்ணியிருந்தேன் வந்தவன்
வந்தவேகத்தில் உறங்கியும் போனான்
அவனுக்கு வேறு யாரிடமோ லயிப்பா.
நினைக்கவே அச்சமாயிருந்தது. கண்ணீர்
வடித்தவள் அழுகையிலேயே உறங்கிப் போனேன்


அவனது டைரி

இன்று இந்தியா கிரிக்கட் டெஸ்டில்
இங்கிலாந்திடம் தோற்றது. சே  டாம் இட்..!
         --------------------
ஆணின் simplicity vs பெண்ணின் complicity...?
       ------------------------ 

உலகமே நீ வாழ வந்தவன்..!
---------------------------
காலையில் கண் விழிப்புக் கொடுத்தது. இது காலையா.?இன்னும் வெளிச்சம் வரவில்லை. தோட்டத்து மாமரத்துக் குயில் கூவவில்லை.புள்ளினங்களின் இரைச்சல் இல்லை.ஓ.! இன்று உலகம் அழியும் தினமல்லவா. ? எங்கும் கும்மிருட்டு. லைட்டைப் போட்டால் எரியவில்லை. மின் தடையா இல்லை எதுவுமே இயங்கவில்லையா. அருகில் படுக்கும் மனைவியையும் காணோம். இருந்தாற்போல் இருந்து தலை சுற்றுவதுபோல் தோன்றுகிறது. நான் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன் நடக்காமல் ஓடாமல் ஏன் எந்த இயக்கமுமில்லாமல் எங்கேயோ இழுக்கப் படுகிறேன்.உலகம் எந்த அறிகுறியும் காட்டாமல் அழியுமா.? பூகம்பம் இலலை, புயல் இல்லை. இடி இல்லை மழை இல்லை. எந்த சப்தமும் இல்லாமல் எல்லாம் போய்விட்டது. இருட்டின் அந்தரங்கத்துக்கே இழுக்கப் படுகிறேன்  என்னதான் நடக்கிறது பார்த்துவிடலாமே. அந்தகாரத்தில் ஒரு குதிரை அதன் மேல் ஒருவன். ஓ...! இவன் தான் கலி புருஷனோ.? எல்லாவற்றையும் அழித்துவிட்டு மனித குலம் தழைக்க என்னை மட்டும் விட்டு விட்டானோ. என் ஒருவனால் மனித குலம் எப்படித் தழைக்க முடியும். எனக்கு மனைவி வேண்டுமே. ... மெள்ள மெள்ள இருள் விலகுகிறது.ஒளி சிறிது சிறிதாய் அதிகரிக்கிறது. மெல்ல யாரோ நடந்துவரும் சப்தம் கேட்கிறது. அருகில் வந்தவளைப் பார்த்தால்.... என் மனைவி. “ இந்த உலகம் தழைக்க நம் இருவரை மட்டும் வாழ விட்டிருக்கிறான் அந்தக் கலி புருஷன் “என்ற என்னைப் பார்த்து
” ஏதாவது கனா கண்டீர்களா.?” என்றாள் என் மனைவி. 
----------------------------------------------- 




 .


வெள்ளி, 21 டிசம்பர், 2012

இதையும் மறப்போம்....!


                        இதையும் மறப்போம்....!
                        --------------------------------                                    



கன்னிப்பெண் பேரூந்துப் பயணத்தில்
சிதைக்கப் பட்டு சின்னாபின்னம்-தலை
நகரில் அல்லோலகல்லோலம் நாடெங்கிலும்
இதே பேச்சு. இன்னும் சில காலம் மூச்சு விடாமல்
நடக்கும்.-பிறகென்ன. நாடும் மறக்கும்
நாமும் மறப்போம் அதுதானே வழக்கம்.

நிகழ்வின் ஆணிவேர் எங்கிருக்கிறது?
பெண் ஒருத்தி ஆணுக்குச் சமமாகலாமா?
படித்துப் பட்டம் பெற்று பளிச் என்று இருக்கலாமா?
ஆணாதிக்கச் சமூகம் அதனை சும்மா ஏற்குமா?
வெளிச்சத்துக்கு வருவது ஏதோ சில நிகழ்வுகள்.
தினம் தினம் நான்கு சுவற்றுக்குள் நடக்கும்
அக்கிரமங்களும் அராஜகங்களும் யாருக்கும் தெரியாதா?


பெண் எனப் படுபவள் கருவிலேயே தவிர்க்கப் படுபவள்.
மீறி வந்துவிட்டால் வளர்ந்த பிறகு போகப் பொருளே
ஆயிரம் சொன்னாலும் இதுவன்றோ இன்றிருக்கும் நிலை.
இருந்தும் ஆண் பெண் இருவரும் சமம் என்னும்
எண்ணம் நம்மில் இல்லாதவரை பெண் என்றாலே
பலமற்றவள், போகப் பொருள், என்னும் உணர்வு
மரபணுவில் கலந்து விட்டதோ.சந்தேகம் வலுக்கிறது


சட்டம் கொண்டு வரலாம் மனதில் அச்சமேற்படுத்தலாம்

சில நேரங்களில் பெண்களே தவறுகளுக்குக் காரணமாகலாம்

ஆனால் பற்றியெரிகிறது நெஞ்சம், பாவிகள்
பச்சிளங் குழவிகளைப் பாலியல் பலாத்காரம் செய்வது
தினம் ஒரு சேதியாகப் பத்திரிகைகளில்படிக்கையில்.
பாலியல் பலாத்காரம் என்பது மிருகத்தனம் என்பதும் தவறு
மிருகங்களில் இச்சையின்றி இணைதல் இல்லை.
மனிதர்கள் செய்கிறார்கள் என்றால் மனோவியாதியோ?

சட்டத்தை மாற்று; குற்றவாளிகளைத் தூக்கிலிடு
கூக்குரல் எழுப்பலாம். எழுப்பத்தான் வேண்டும்
அச்சத்தை மனதில் விதைக்க வேண்டும் இவையெல்லாம்
வினைகள் முடிந்தபின்தானே நடைமுறையாகும்.
நடக்காது தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
சிறுவயது முதல் நல்லியல்புகள் உணர்வுகளில்
ஊட்டப்பட வேண்டும் நல்லவை அல்லவை 
வேறுபாடுகள் போதனையில் புகுத்தப் பட வேண்டும்
நற்செயல்களில் நம்பிக்கை வைப்போம் பலன் தெரியும்


இல்லாவிட்டால் என்ன. ?   

முன்பே ஒரு முறை எழுதி இருக்கிறேன் நமக்கு
நடந்தால் நினைவில் நீடிக்கும் சில நாள்.
இல்லையென்றால் மறந்து தொலைப்போம்-
இன்னுமொரு நிகழ்வு நடந்து செய்ய வேண்டியது
நிறையவே இருக்கிறது
என்பதை நினைவு படுத்தும்வரை
--------------------------------
(பார்க்க என் பழைய பதிவு “மறதி போற்றுவோம்.”
gmbat1649.blogspot.in/2010/09/marathy-potruvom.html  )
         

 



புதன், 19 டிசம்பர், 2012

மடே ஸ்நானமா..இல்லை. மட ஸ்நானமா.?


                           மடேஸ்நானமா இல்லை மடஸ்நானமா.?
                          ----------------------------------------------------------


கர்நாடகத்தில் ஏறத்தாழ எல்லா பிரசித்தி பெற்ற கோயில்களுக்கும் சென்றிருக்கிறோம். தர்மஸ்தலா மல்லிகார்ஜுனா ஆலயம். ஹொரநாடு அன்னபூரணி ஆலயம், சிருங்கேரி சாரதா தேவி கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், கொல்லூர் மூகாம்பிகை ஆலயம், குக்கே சுப்பிரமணியா கோயில்போன்றவற்றில் அன்னதானம் பிரசித்தம். பலரும் ஆண்டவனின் பிரசாதமாக உணவை உட்கொள்ளுகின்றனர். எல்லோருக்கும் உணவு என்ற மட்டில் மகிழ்ச்சியளித்தாலும் உணவு பரிமாறப் படுவதில் பேதம் காட்டுகிறார்கள். எல்லா இடத்திலும் அந்த பேதம் கடைபிடிக்கப் படுகிறதா என்று அனுபவத்தில் சொல்ல முடியாவிட்டாலும், குக்கே சுப்பிரமணியாவில் அதை நேரிலே பார்த்தேன். பிராமணர்களுக்கு தனி பந்தி .பிராமணன் என்று நிலை நாட்ட வேட்டியணிந்து பூணூல் இருக்கவேண்டும். எனக்கு இந்த வித்தியாசம் உடன்பாடில்லாததால் அங்கு உணவருந்துவதைத் தவிர்த்தோம். எங்களுடன் வந்த அந்தண நண்பர்கள், உணவருந்தி வந்தனர்.
இதையெல்லாம் மீறி அங்கு நடைமுறையில் இருக்கும் இன்னொரு வழக்கம்/ சடங்கு மிகவும் வருத்த மளிக்கிறது. அப்படி பிராமணர்கள் உண்டு முடித்த இலைகளின் மேல் அங்கப் பிரதட்சிணம்போல் உருண்டு வேண்டுதல்கள் நிறை வேற்றுகிறார்கள். அதற்கு மடே ஸ்நானா என்று பெயர். இதனை எதிர்த்துக் குரல் எழுப்பி நீதிமன்றம் வரை போய் உயர் நீதி மன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து இப்போது உச்ச நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கி விட்டது. இனி என்ன .? எல்லோரும் பிராமணர் உண்ட எச்சில் இலையில் தாராளமாக உருண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.
நம்பிக்கை என்னும் பெயரில் என்னென்னவோ நடக்கிறது. மனசு வலிக்கிறது. உயர்வு தாழ்வு பற்றி எழுதுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய எனக்கு செய்தித் தாள்களில் படித்தபோது மனசில் பட்டதைச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை இந்த கதியில் நாம் முன்னேறுவது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும். குருட்டு நம்பிக்கைகளை வளர விட்டு வேற்றுமை காட்டும் பழக்கங்களை தொடர்வதில் யாருக்கோ பலன் இருக்க வேண்டும்.இந்த மாதிரி கோயில்களில் உணவு அளிப்பதில் வேற்றுமை காண்பிக்கும் போது நெஞ்சில் நியாய நிலை கொண்டவர் அதை முற்றிலும் புறக்கணிக்க வேண்டாமா.? ஆண்டவன் பெயரில், அவனிருக்கும் இடத்தில் வித்தியாசம் பாராட்டுவது பலரது கீழான எண்ணங்களின் வெளிப்பாடல்லவா. வர்ணாசிரம தர்மத்தின் (?) மிச்ச மீதிகளைக் கண்டு பொங்கி எழ வேண்டாமா. ? என் பதிவுகளுக்கு ஆதரவாகப் பின்னூட்டங்கள் இல்லாதிருப்பது , நம்மில் பலரும் மாறவில்லையோ, அல்லது மாற விரும்பவில்லையோ என்பதைத்தானே காட்டுகிறது. .உச்ச நீதிமன்றமே இந்த நம்பிக்கைகளில் தலையிடுவதில்லை என்பது இன்னும் வருந்தத்தக்க விஷயம்
                                             -------------------------------
என் பதிவொன்றில் சுடோகு புதிர் ஒன்றை பிரசுரித்து அந்தப் புதிரை சால்வ் செய்பவருக்கு பட்டம் கொடுக்கலாம் என்று எழுதி இருந்தேன். அந்தப் புதிர் ஃபின்லாண்டின் கணித மேதை டாக்டர் ஆர்டோ இங்காலா என்பவர் உருவாக்கியது. மிகக் கஷ்டமான புதிர் என்று கருதப் பட்டது. நான்கு , ஐந்து நட்சத்திரக் கடினமான புதிர்களை சால்வ் செய்து பழக்க முள்ள எனக்கு லாஜிக்கலாக தீர்வு காண முடியவில்லை. புத்திசாலித்தனமான யூகங்களால்மட்டுமே முடியும் என்று அப்படி செய்யாமல் இருந்து விட்டேன். என்னால் முடியாதது சிரமமானதாகத்தான் இருக்கும் என்னும் மதர்ப்பில்(?) இருந்தேன். ஆனால் இரண்டு பதிவர்கள் அதை சால்வ் செய்து எனக்கு அஞ்சல் அனுப்பி இருந்தனர் . அவர்களுக்கு நான்

GENIUS

என்று பட்டம் கொடுத்து மகிழ்கிறேன். மூன்றாம் சுழி திரு அப்பாதுரை அவர்களும் மணிராஜ் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களும் இந்தப் பட்டத்தை பெறுகிறார்கள். அவர்கள் தயை கூர்ந்து இதை அங்கீகரிக்க வேண்டுகிறேன்.அவர்களுக்கு  என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.  
 ------------------------------------------------------------





ஞாயிறு, 16 டிசம்பர், 2012

சாந்தனுவின் சந்ததிகள்..


                              சாந்தனுவின் சந்ததிகள்.....
                             ---------------------------------



திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டிகளை பெற்றுக் கொள்வது அவரவர் வம்சம் தழைக்க என்பதுதான் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படும் செய்தி. நமது சமூகத்தில் வம்சம் தழைப்பது என்று கூறும்போது தகப்பனின் வம்சாவளி என்றுதான் பொருள்படுகிறது. இன்னாரின் மகன் என்று சொல்வதும் தந்தையைக் குறித்தே இருக்கும். நான் இங்கு கூறுவது சட்டப்படி அனுமதிக்கப் பட்ட குடும்ப வாழ்க்கை முறையையும் அதன் மூலம் வளரும் தலை முறையையும் குறிப்பிடுவதாகும். எக்செப்ஷனல் கேஸ்களைக் காட்டி என்னிடம் கோபம் கொள்ளக் கூடாது.
தலைமுறை இடைவெளி என்பதே தலைமுறைகளைப் பற்றிய செய்திகள் தெரியாமல் இருப்பதைக் குறிக்கிறதோ.?நான் ,என் தந்தை ,என் தந்தையின் தந்தை- இதை மீறிய தலைமுறை பற்றி இக்காலத்தில் தெரிந்து கொள்ள முடிகிறதா.? இதையெல்லாம் பற்றி சிந்தனை எழுவது நியாயம்தானே. சந்ததி தழைக்க வேண்டி மறுமணம் செய்யும் பலரையும் நாம் காணலாம். 

நம்முடைய மிகப் பெரிய இதிகாசமான மஹாபாரதத்தின்/ல் வம்சாவளி குறித்துப் படிக்கும்போது என்னவெல்லாமோ நினைக்கத் தோன்றுகிறது. சிலவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.அவற்றைக்குறித்தஅபிப்பிராயங்களை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்..மஹாபாரதக்கதையை அதன் ஆதி வடிவில் நான் படித்ததில்லை. பலரும் படித்திருக்க வாய்ப்புமில்லை
மஹாபாரதம் வியாசமுனிவர் கூற விநாயகரால் எழுதப் பட்டது என்று நம்பப் படுகிறது. வியாசர் பராசர மஹரிஷிக்கும் சத்தியவதி எனும் செம்படவப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்று அறியப்படுகிறார். இந்த வியாசமுனிவர் மஹாபாரதக் கதையின் ஒரு பாத்திரமாகவும் அறியப் படுகிறார். பராசர முனிவரிடம் கலந்ததில் இருந்து சத்தியவதியைச் சுற்றி ஒரு நறுமணம் திகழ்ந்திருந்ததாம். அந்த நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு சாந்தனு மஹாராஜா அவள் மேல் காதல் வசப்பட்டாராம். இந்த சாந்தனு மஹாராஜா ஏற்கனவே மணமானவர்.. கங்கையின் மேல் காதல் கொண்டு அவளை மணமுடிக்க விரும்பியபோது கங்கை ஒரு நிபந்தனை இட்டாள். அவளது எந்த செய்கையையும் சாந்தனு ராஜா கண்டு கொள்ளக் கூடாது என்பதே அது. சாந்தனு கங்கை திருமணத்தின் விளைவாய் பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றையும் கங்காதேவி நீரில் எறிந்து விட . ஏதும் பேசாமல் இருந்த ராஜா எட்டாவது குழந்தையை நீரில் இடப் போகும்போது தடுத்துக் காரணம் கேட்கிறார். நிபந்தனையை மீறி கேள்வி கேட்ட சாந்தனு ராஜாவைவிட்டுப் பிரிந்து போகிறார் கங்காதேவி அந்த எட்டாவது குழந்தையை அரச குமாரனுக்கு வேண்டிய எல்லாத்தகுதிகளையும் கற்பித்து அவனை சாந்தனு ராஜாவிடம் ஒப்படைக்கிறார். அவர்தான் மஹாபாரதத்தில் பிதாமகர் என்று அழைக்கப்பட்ட பீஷ்மர்.

என்ன செய்வது.?சில விஷ்யங்களைப் பற்றிக் கூறும்போது, கதையையும் கொஞ்சம் கூறத்தான் வேண்டியுள்ளது. படிப்பவர்களுக்கும் மஹாபாரதக் கதையின் ஆரம்ப பகுதிகளை ரிவைஸ் செய்ததுபோலும் இருக்கும்.

வேட்டையாடச் சென்ற சாந்தனு ராஜா சத்தியவதியை மணக்க வேண்டுமென்றால் அவளது பிள்ளைகள்தான் அரசுக்கு வாரிசாக இருக்க வேண்டும் என்பதே நிபந்தனையாக சத்தியவதியின் தந்தை விதித்தார். அதை ஏற்றுக் கொண்டால் தேவவிரதன் என்று பெயர் கொண்ட பீஷ்மர் அரசுரிமையைத் துறக்க வேண்டும். அவர் துறந்தாலும் அவருக்குப் பிறக்கும் வாரிசுகள் உரிமை கோராமல் இருக்க வேண்டி தேவ விரதன் பிரம்ம சாரியாய் காலங்கழிக்க சபதம் பூண்டார்.

சத்தியவதிக்கும் சாந்தனு ராஜாவுக்கும் சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்று இரண்டு மகன்கள் பிறந்துஅவர்களுக்கு மணமுடிக்க பீஷ்மர் அம்பிகை அம்பாலிகை எனும் ராஜகுமாரிகளை சுயம்வரத்திலிருந்து அபகரித்து வந்து மணமுடித்தது ஒரு பெரிய கதை. அதை விட்டு விட்டு நம் கதைக்கு வருவோம். சித்திராங்கதன் அல்பாயுசில் உயிர் துறக்க விசித்திர வீரியன் மூலமும் மக்கள் இல்லாமலிருக்க சந்ததி வேண்டி ( யாருடைய சந்ததி.?), தாயார் சத்தியவதி, தன் முதல் கணவர் பராசர மஹரிஷி மூலம் பிறந்த வியாசரிடம் அம்பிகை அம்பாலிகைக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டுகிறார். வியாச மஹரிஷியும் தன் சகோதரர் மனைவிகளைப் புணர்ந்து மக்கட் செல்வம் தருகிறார். அம்பிகையுடன் சேர்ந்தபோது ரிஷியின் கோலத்தைக் கண்டு பயந்து கலவியின் போது கண்களை மூடிக் கொண்டதால் அவளுக்குப் பிறந்த குழந்தை குருடாகப் பிறந்ததாம், அவர்தான் திருத ராஷ்டிரர் என்னும் பெயர் பெற்றவர் அம்பாலிகையோ பயந்து முகமெல்லாம் வெளிறிப் போயிற்றாம். அந்தக் கலவியின் விளைவாய்ப் பிறந்தவர் பாண்டு என்று அழைக்கப் பட்டார். இரு பேரப் புத்திரரும் குறையுடன் பிறக்க மறுபடியும் முயல வியாசரை சத்தியவதி வேண்ட அம்பிகை அம்பாலிகை இருவரும்  விரும்பாமல் அவர்களது பணிப் பெண்ணை வியாசரிடம் அனுப்பி விடுகின்றனர். அந்த சேர்க்கை மூலம் பிறந்தவர் விதுரர்.

.திருதராஷ்டிரர், பாண்டு இவர்கள் சாந்தனு ராஜாவின் சந்ததிகளா.?

இது மட்டுமல்ல. மூத்தவன் பிறவிக் குருடன் என்பதால் இளையவன் பாண்டு வுக்கு முடி சூட்டுகிறார்கள். பாண்டுவுக்கு ஒரு சாபம். மனைவியுடன் கலந்தால் மரணம். அவரும் வெறுத்துப் போய் தன் இரண்டு மனைவிகளுடன் காட்டுக்குப் போய் விடுகிறார். அவரது சந்ததி தழைக்க என்ன செய்வது.? குந்தி தேவிக்குக் கிடைத்த வரம் அதற்கு வழி வகுக்கிறது. மந்திரம் உச்சாடனம் செய்ததும் யமதர்மன், வாயு, இந்திரன் மூலம் பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறாள் குந்திதேவி. தான் பெற்ற பேறு பாண்டுவின் இளைய மனைவிக்கும் அருளி, அவளும் தேவர்கள் மூலம் இரண்டு புத்திரர்களை பெற்றுக்கொள்கிறாள். இவர்களே பஞ்ச பாண்டவர்கள். இவர்கள் சாந்தனு ராஜாவின் சந்ததிகளா.?

மஹாபாரதக் கதையில் தர்மம் உபதேசிக்கப் படுவதாகக் கூறப் படுகிறது. குருடன் என்னும் காரணத்தால் அரசைத் துறக்க வேண்டி வந்த திருதராஷ்டிரன் தம்பி பாண்டு இறந்தபோது தன் மக்கள் அரசுரிமை பெற விரும்பியது தவறா? துரியோதனனைவிட  யுதிஷ்டிரர் மூத்தவர் என்பதால் அவருக்கு அரசுரிமை என்பது சரியா.? இந்த மாதிரியான பின்னணியில் பங்காளிச் சண்டையை முன் வைத்து எழுதப் பட்ட மஹாபாரதம் , தன்னுள்ளே நூற்றுக் கணக்கான கிளைக்கதைகளை அடக்கி மிகப் பெரும் இதிகாசமாய் திகழ்கிறது.

சுவையான கதை என்பதை ஒப்புக்கொள்ளும்போது, பல நெருடலான விஷயங்கள் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

ஒருவரை சுய அறிமுகம் செய்து கொள்ளும்போது அபிவாதயே சொல்லச் சொல்கிறார்கள் ( ஒரு சமூகத்தில் ) அப்படி அறிமுகம் செய்து கொள்ளும்போது  தன்னுடைய குலம் கோத்திரம் போன்றவற்றைக் கூறி இன்னாரின் பேரன் இன்னாரின் புதல்வன்  இன்ன பெயர் கொண்டவன் என்று கூறி வணங்க வேண்டுமாம். அதைப்பற்றிப் படிக்கும்போது சாந்தனுவின் சந்ததிகள் சொல்வது எப்படி இருக்கும் , சரியாக இருக்குமா என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு.
மேலும் இந்தப் பதிவில் நான் குறிப்பிடும் சம்பவங்கள் படித்துப் பெற்றதும் கேட்டுப் பெற்றதுமாகும். சரியெது தவறெது என்று கூறமுடியாது. மூலக் கதையை மூல வடிவில் படித்துணர்ந்தவர் உள்ளாரோ?
--------------------------------------------------------------------------         .    
  

வெள்ளி, 14 டிசம்பர், 2012

கற்றதும் பெற்றதும்....


                                  கற்றதும் பெற்றதும்......
                                 -----------------------------


 கடந்த பதிவொன்றின் பின்னூட்டத்தில் திரு. அப்பாதுரை நானே கேள்விகேட்டு பதிலும் சொல்கிறேன் என்று எழுதி இருந்தார். இப்போதெல்லாம் அவரது பின்னூட்டத்திலிருந்து பதிவிடக் கரு கிடைத்து விடுகிறது. அவருக்கு நன்றி. உனக்கு என்ன தெரியும் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். இப்பதிவு எனக்கு என்ன தெரியும் என்பதை கேள்வி பதிலாக எழுதி நான் கற்றதும் பெற்றதும் என்ன என்று தெரிவிக்கிறேன் இந்தக் கேள்விகளும் பதில்களும் சிலருக்குக் குதர்க்கமாய்த் தெரியலாம்..ஆனால் என்ன செய்ய. ? இது என் வழி... தனி வழி...!

கேள்வி:- உனக்கு எந்தக் கடவுளைப் பிடிக்கும். ?
பதில்:-   எனக்கு எல்லாக் கடவுளையும் பிடிக்கும். ஏனென்றால் கடவுள் என நம்பப் படுகிறவர் நல்ல குணங்களின் சேர்க்கை.அந்த நல்ல குணங்களின் சேர்க்கையை என்னுள் கொண்டு வரமுடியுமானால் நானும்கடவுள். என்னுள்ளும் அவர் இருக்கிறார்.
கேள்வி:- அப்போது கடவுள் என்பவருக்கு ஒரு வடிவம் இல்லையா.?
பதில்:-   கடவுள் என்பதே ஒரு concept.வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் குறிப்பிடப் படும்  பிரம்மன் ஆத்மன் புருஷன் போன்றவை எல்லாம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மூல ஆதார சக்தியைக் குறிப்பிடும் குறியீடுகளே தவிர கடவுள் என்பவரைப் பற்றிக் கூறுவதல்ல. அப்படிப்பட்ட சக்தியை நம்மால் ஒருமுகப் படுத்தி நினைக்க முடியாது என்பதால்தான், நம்மைப் போன்ற உருவங்களுடன் ஆன கடவுளைப் படைத்து அவர்களுக்கு ஆயு, தங்களும் கொடுத்து அருளுபவர் என்றும் தண்டிப்பவர் என்றும் நம்பவைத்து நாம் நற்செயல்கள் புரியவும்  நம்மைக் கட்டுப் படுத்தவும் பயத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வழி வகுத்துள்ளனர்.
கேள்வி:- இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா.?
பதில்:- பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோர் முறையே ஆக்கல், காத்தல் அழித்தல் எனும் செயல் புரிபவர்களாக சித்தரிக்கப் படுகிறார்கள். இதையே சக்தியின் வெளிப்பாடாகவும் இருத்தலாகவும் மறைதலாகவும் கொள்ளலாம் இதையே manifestation, establishment and withdrawal  ஆக எண்ணலாம் ஒரு சக்தியிடம் இருந்து வெளிப்பட்டு இருப்பதுபோல் இருந்து மறைவதைக் குறிக்கும்
கேள்வி: -இந்த விளக்கத்துக்கு முந்தையதே தேவலாம் போலிருக்கிறதே .உதாரணமாக ஏதும் கூற முடியுமா. ?
பதில்:- நான் ஓரிடத்தில் படித்ததைக் கூறுகிறேன் இதை விளக்க பிரதானமாக இரண்டு உதாரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று தூக்கம். மற்றொன்று மண்பாண்டம். ஆழ்ந்த தூக்கத்தில் நம் எண்ணங்கள் ஓய்ந்து விடுகின்றன. ஆனால் மறுபடி விழித்தவுடன் எண்ணங்கள் தோன்றஆரம்பித்து விடுகின்றன. உருவாவது இல்லை. மனதின் வெளிப்பாடு (manifest) எண்ணங்கள். அப்படித் தோன்றிய எண்ணங்கள் நம் மனதில் நிலையாகஇருப்பது போல இருக்கின்றன. ஏன் போல”? மறுபடி தூங்கினால் அவை இருக்காது. நமது மனதினுள்ளே சென்று ஒடுங்கி (லயித்து / withdraw) விடுகின்றன. அதே போல மண்ணாய் இருந்தது, ஒரு பானையாக மாறி பின் உடைந்தாலோ நீரில் கரைந்தாலோ மறுபடி மண்ணோடு மண்ணாய் ஒடுங்கி விடுகிறது

கேள்வி:- நாம் கேள்விப்படும் ஆண்டவனின் அவதாரங்கள் எல்லாம் பொய்யா.?

பதில் :- பொய் என்று ஏன் எண்ண வேண்டும்.?இந்தமாதிரி அவதாரக் கதைகள் மூலம் மக்கள் நல் வழிப்படுவார்களானால் அந்த நம்பிக்கைகள். இருந்து விட்டுப் போகட்டுமே. நான் கற்றதும் பெற்றதும் இதனால் என்னவென்றால் வாழ்க்கை முறை என்று எண்ணப்படும் நமது சனாதன மதத்தின் அடி நாதமாக இருக்கும் வேதங்களிலோ, உபநிஷத்துக்களிலோ இறைவனுக்குப் பெயர் கொடுத்து வழி பாடு இருந்ததாகத் தெரியவில்லை.

கேள்வி:- வேதங்களையும் உபநிஷத்துக்களையும் படித்திருக்கிறாயா.?

பதில்:- அவை படித்தறிந்து கொள்ளக் கூடியதல்ல. கேட்டறிந்து வருவதே ஆகும். படித்தும் கேட்டும் அறிந்தவரை நான் புரிந்து கொண்டதைத்தான் சொல்ல முடியும்

கேள்வி. :- வேதங்களில் இந்திரன் ,சூரியன் வருணன் என்னும் பல இறை வடிவங்களுக்கு செய்ய வேண்டிய வேள்வி முறைகளும் , கிரியைகளும் மந்திரங்களாகச் சொல்லப் பட்டிருக்கிறதாமே. உண்மையா.?

பதில்.:- நான் வேதம் படித்ததில்லை. மேலும் இந்த மாதிரியான விஷயங்கள் பற்றிக் கூற வேண்டுமானால். இவை ஆதி காலத்தில் நிர்ணயிக்கப்பட்டபோது இருந்த நடை முறைகள் இந்த காலத்துக்கு ஒத்துவருமா என்ற என் கேள்வியே பதிலாக இருக்கும். ஏன் என்றால் வேதங்களும் உபநிஷத்துக்களும் வாய்வழியே வந்தவை. காலத்துக்கு ஏற்றபடி இடைச் செருகல்கள் இருக்கலாம். வேதங்களைத் தொகுத்தவர் வேத வியாசர் என்று கூறப் படுகிறது. அவர் கூற அவரது சீடர்கள் மனதில் வாங்கி அவற்றை பலருக்கும் பரப்பி இருக்க வேண்டும். ஒரு விஷயம் வாய்வழியே பரப்பப்படும்போது நிறையவே மாற்ற்ங்களுக்கு உள்ளாகலாம். ஏன் ,அண்மைக்கால பாரதியின் பாடல்களிலேயே பாடபேதம் இருப்பது புரிகிறது. எந்தவிதமான பராமரிப்புகளும் இல்லாத வாய் வழிவந்த வேதங்கள் அவற்றின் ஒரிஜினல் ஃபார்மில் இருக்குமா.? நான் இவை எல்லாம் சரியில்லை என்று சொல்லவில்லை. ஆனால் சரியாக இல்லாமலிருக்க நிறையவே சாத்தியக் கூறுகள் இருக்கின்றன
.
கேள்வி:- பட்டும் படாமலும் பதில் சொல்லிவிடக் கூடாது. எதையாவது சொல்லி மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையா.?

பதில்:-  நான் தப்பித்துக் கொள்ள பதில் சொல்லவில்லை. ஏற்கனவே சொன்னதுபோல் நிறைய விஷயங்கள் ஆதியில் சொன்னதுபோல் இல்லையோ எனத் தோன்றுகிறது. கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றபடி நிறையவே மாற்றங்கள் இருக்கிறது. உதாரணத்துக்கு வியாசரால் இயற்றப்பட்ட பாரதக் கதை 8000- அடிகளைக் கொண்ட தாக பாரதத்தின் ஆதிபர்வம் கூறுவதாகவும் அது வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது 24000 அடிகளிக் கொண்டிருந்ததாகவும் அதன் பிறகு உக்கிராசராவ சௌதி ஓதியபோது 90000 அடிகளைக் கொண்டிருந்ததாகவும் விக்கிப் பீடியாவில் படித்தேன். இந்த 8000 அடிக் கதை 90000 அடிகளாகும் போது அந்தந்த காலத்துக்கு ஏற்றபடி மாற்றங்கள் இருக்கத்தானே வேண்டும். அதேபோல் கி.மு. 8-ஆம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்ப்பட்டதாக ( ஓதப்பட்டதாகக் ) கருதப் படும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அவற்றில் முதலில் சொல்லப்பட்டது மாதிரியே இருக்கும் என்று எண்ண முடியவில்லை. . செய்யும் தொழில்முறைக்கேற்ப  பிரிக்கப்பட்ட நான்கு பிரிவினரும் இந்த இடைச் செறுகல்களால் மனுநீதி என்றும் , தர்ம சாஸ்திரம் என்றும் பெயர்களால் வகைப்படுத்தப்பட்டு இருக்க சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன. எல்லோரும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அத்தியயனம் செய்ய அனுமதிக்கப் படவில்லை என்பது பலராலும் கூறப்பட்ட கருத்து.
எந்தவிதமான செய்தியும் ஆராயப்பட்டால் உயர்வு தாழ்வு என்று பாதிப்பின் காரணம் புரியும். புரிந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வது நான் அவர்களின் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கிறேனோ என்ற எண்ணத்தாலா.?
கேள்வி:- உறங்குபவரை எழுப்பலாம். உறங்குவதுபோல் பாசாங்கு செய்வோரை எழுப்ப முடியுமா.?
பதில்:- தனிமரம் தோப்பாகாது. என்னைப் போல் சிந்தனை கொண்டவர்கள் இருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன். நடப்பவை எல்லாம் காலத்தின் கோலம் என்பது தெரிகிறது. தவறுகள் திருத்தப் படவேண்டும் charity begins at home  என்பார்கள். நாம் நமது எண்ணங்களை சீராக்கிச் செதுக்குவோம் . உண்மை நிலையை அறிவோம். நம்மை நாமே மாற்றிக்கொள்ள முயலலாமே என்பதுதான் என் ஆதங்கம். நான் கற்றதும் பெற்றதும் சரியோ தவறோ தெரியவில்லை. கற்றுப் பெற்றதை பதிவிடுகிறேன்.அவ்வளவுதான். .
------------------------------------------------------------------------------------------------------------------           




திங்கள், 10 டிசம்பர், 2012

மீண்டும் சில அனுமானங்கள்.


                         மீண்டும் சில அனுமானங்கள்.
                        --------------------------------------------


நான் கேட்டால் ஏன் இந்த சுணக்கம் ?என்று எழுதி இருந்தேன். அதை எப்படி புரிந்து கொள்ள முடிகிறது என்று அப்பாதுரை கேட்டிருந்தார். இர்ண்டு மூன்று வருட வலையுலக அனுபவம் ப்ளஸ் இந்த வயதின் அனுபவம் ஒரு உணர்வாய் தெரியப் படுத்துகிறது என்று நினைக்கிறேன். மேலும் வலையில் எழுதுபவர்களை நானும் படித்துக் கொண்டு வருகிறேன். அவர்கள் எழுத்தை வைத்தும் அவர்கள் இடும் பின்னூட்டங்கள் வைத்தும் இன்னார் இன்ன மாதிரி என்று ஓரளவு அனுமானிக்கிறேன் . இந்த ரீதியில்  அனுமானங்கள் என்னும் ஒரு பதிவே எழுதி இருந்தேன்.


ஒரு விஷயம் எனக்கு நன்றாக விளங்குகிறது. என்னிடம் நட்பு பாராட்ட பலரும் தயங்குகிறார்கள். அதற்கு என்னால் இரண்டு காரணங்கள் அனுமானிக்க முடிகிறது. ஒன்று என் வயது. கிழவனுடன் நட்பு பாராட்டபலரும் விரும்புவதில்லை. எண்ணங்களில் தலைமுறை இடைவெளி இருக்கும் என்று எண்ணலாம். ஆனால் வயதில் முதியவனாய் இருப்பினும் எண்ணங்களில் இன்றும் இளைஞன்தான் , இரண்டு  என் எண்ண ஓட்டங்கள் பலரும் எண்ணுவதுபோல் இல்லாதிருப்பது. நான் ஒளிவு மறைவு இல்லாமல் இருப்பது எனக்கே தெரியும் அதுதான் என் பலமும் பல வீனமும்.
மேலும் பதிவுலகில் பலரும் முகமூடி அணிந்தவர்களாக இருக்கிறார்களோ என்றும் சந்தேகம் எழுகிறது. எழுதுபவர்கள் ஆணா பெண்ணா, வயது என்ன அவர்களது பின்னணி என்ன என்று தெரிந்து கொள்வதும் அரிதாயிருக்கிறது. நட்பு பாராட்ட நாம் பாதி தூரம் கடக்கலாம். அவர்களும் பாதி தூரம் வந்தால்தானே இதமாய் இருக்கும்.. திருச்சியில் ஒரு பதிவரைப் சந்திக்க விருப்பம் தெரிவித்து அவரது பதில் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தது குறித்து. ஒரு முறை எழுதி இருந்தேன். என் பதிவுகளின் தொடர்பாளராக இருந்தவர்கள் விலகிக் கொள்கிறார்கள். எனக்கு ஒரு முறை ஒரே பதிவர் இரண்டு பெயர்களில் பின்னூட்டம் இடுகிறாரோ என்னும்சந்தேகம் . புகைப் படங்களால் வந்தது.விளக்கம் கேட்டிருந்தேன். இல்லை என்று பதில் கிடைத்தது. இப்போது பார்த்தால் இருவரும் என் பதிவுகளில் தொடர்பாளகள் அல்ல என்று அறிகிறேன். இவ்வளவையும் நான் குறிப்பிடக் காரணம் எல்லோரையும் ஒரு அனுமானத்துடன்தான் அணுக வேண்டி இருக்கிறது. அப்படி அணுகும்போது யார் என் எழுத்துக்களை விரும்பிப் படிக்கிறார்கள், யார் படிக்கும்போது சுணங்குகிறார்கள் என்றும் அனுமானிக்க முடிகிறது.
என்னுடைய இன்னொரு அனுமானம் பதிவுலகில் ( நான் பார்த்த/ படித்த வரையில் ) நான் எழுதுவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாதபடி இருக்கிறதோ என்பதுதான். நான் உயர்வு தாழ்வு , சம வாய்ப்பு இல்லாமை என்று எழுதுவதும் அதற்குக் காரணமாக நமது சமுகப் பின்னணியை குறை கூறுவதும் காரணமாக இருக்கலாம். நான் விருப்பு வெறுப்பு இல்லாமல்தான் என் எண்ணங்களின் அடிப்படையில் எழுதுகிறேன். என்னவோ ஏதோ எழுதுகிறோம் என்பதைவிட என்ன எழுதுகிறோம் என்பதில் கவனம் செலுத்துகிறேன். வெறும் பொழுது போக்காகவோ  என் எழுத்தாற்றலைக் காண்பிக்கவோ மட்டும் நான் எழுதுவதில்லை. பலமுறை நான் கூறி உள்ளதுபோல் என் எண்ணங்களைக் கடத்தவும் வலையை நான் உபயோகிக்கிறேன். அவற்றையே கதைகளாக கவிதைகளாக கட்டுரைகளாக எழுதுகிறேன். அப்படி எழுதுவதன் தாக்கம் என்ன என்று அறியவே நான் பின்னூட்டங்களைப் பார்க்கிறேன். நண்பர் ஒருவர் நான் பின்னூட்டங்களுக்காக ஏங்குகிறேன் என்று எழுதி இருந்தார். ஆம். நான் பின்னூட்டங்களை ஆர்வத்துடன் பார்க்கிறேன், பலரும் என்னை, என் எழுத்தைப் புகழுகிறார்களா என்று பார்க்க அல்ல. என் எழுத்தின் தாக்கம் என்ன என்று அறியவேதான்.
எழுதுவது எழுதுவதன் நிமித்தம் , படிப்பது படிப்பதன் நிமித்தம் ஆனால் அந்த நிமித்தங்கள்தான் எவ்வளவு வேறுபடுகின்றன, ஒருவரைப் படிக்கும்போது இன்ன ரசனைக்காக இவரைப் படிக்கிறோம் என்பதே முக்காலும் உண்மை. சிலரது எழுத்து என்னைப் பொறாமைப் படுத்தும். நடையும் எழுத்தும் மொழியின் ஆளுமையும் வலை உலகில் பலரிடம் அபரிமிதமாக இருப்பதைக் காண முடிகிறது. சரளமான நடையில் ஆர்வத்தைத் தூண்டும் எழுத்து அப்பாதுரையுடையது. அவரைப் பற்றிய என் எண்ணங்கள் அவர் என் வீட்டிற்கு வருகை தந்து என்னை சந்தித்ததில், அவருடன் உரையாடியதில் சரி என்று நினைக்க வைத்தது.அவருக்கு என்று சமூக மற்றும் MORAL கண்ணோட்டங்கள் இருந்தாலும் அதை யார் மேலும் திணிக்கும் ( எனக்கு நேர் எதிர்? ) எண்ணம் கிஞ்சித்தும் இல்லாதவர். அயல் நாட்டில் இருந்து கொண்டு தமிழில் இவ்வளவு அழகாக எழுதுபவர் அவருக்குத் தெரியாததை ஒப்புக்கொள்ளும் குணம் எனக்குப் பிடிக்கும். இந்தப் பதிவுக்கு முக்கிய காரண கர்த்தாவே அவர்தான்.
நேர் எதிர்மறைகளின் நடுவே சராசரி மனிதனின் எண்ணங்களை கவிதைகளாக எழுதும் ரம்ணி அவர்களின் எழுத்து எனக்குப் பிடிக்கும். அவற்றுக்கு நான் எழுதும் பின்னூட்டங்கள் அவருக்குப் பிடிக்குமோ தெரியாது, சில கருத்துக்களை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்வதும் கண்டிருக்கிறேன். ஆனால் அவரது பின்னூட்டங்கள் எல்லாம் நிறைவாகவே இருக்கும். என் பதிவுக்கு மட்டுமல்ல. யாருடைய பதிவிற்கும் அவர்  இடும் பின்னூட்டம் குறையே சொல்லாது. ஒரு முறை அவர் எழுதியதாக நினைவு. “ ஒருவரை மகா புத்திசாலி என்று புகழ்ந்தால் , அவர் உங்களை புத்திசாலி என்றாவது ஏற்றுக் கொள்வார் “( இதே வார்த்தைகள் இல்லாவிட்டாலும் இதே ரீதியில் இருந்தது.)
சிறுகதை எழுதுவதில் பலர் பல பாணிகளைக் கடை பிடிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை சிறுகதை சம்பவங்களுக்காக பாத்திரம் அமைப்பது, இல்லையென்றால் பாத்திரங்களுக்காக சம்பவங்கள் அமைப்பது. இதில் வேறு பட்ட கருத்துக்கள் இருக்கலாம்.
சிலர் ஆன்மீக விஷயங்களை மட்டுமே பதிவாக இடுகிறார்கள். திருமதி இராஜராஜேஸ்வரி அருமையான படங்களுடன் இறைவன் சம்பந்தப்பட்ட பதிவுகளே அதிகம் இடுகிறார். என்னைப் போன்றவர்கள் படங்களை ரசிப்பதும் அவருடைய வேகத்தைக் கண்டு ஆச்சரியப் படுவது மட்டுமே செய்ய முடியும்..சில கேட்டிராத கதைகளும் கிடைக்கலாம்.
ஒரு வேகத்துடன் பதிவுலகில் எழுதிக் கொண்டிருந்த சுந்தர்ஜியின் எழுத்துக்களில் திசை மாற்றம் தெரிகிறது. அவர் பாராட்டி எழுதும் பின்னூட்டங்கள் டானிக் மாதிரி இருக்கும். அவரும் எதிர்மறைக் கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பவர்.
பதிவுலகில் பலரும் பலவிதம். திடீரென்று ஒருவர் எதிர்பாராத கருத்தை தெரிவிப்பார். பின் அவரைக் காணவே முடியாதிருக்கும். நான் கவிச்சோலைக் கவிதைப் போட்டிக்கு ஒரு கவிதை “மெட்ராஸ் “ தமிழில் எழுதி இருந்தேன். சொற்குற்றம் பொருட்குற்றம் என்று எழுதி திணர அடித்தார் அமெரிக்காவில் இருந்து பின்னூட்டம் எழுதிய ‘பாரதசாரி ..என்பவர். பாரதத்துக்கு சாரி சொல்லவே அந்தப் பெயர் என்றும் எழுதி இருந்தார்.
வித்தியாசமாகப் பதிவர்களைப் பற்றிய அனுமானங்களாகி விட்டது இந்தப் பதிவு. நான் அறிந்த எல்லாப் பதிவர்களைப் பற்றியும் எழுதலாம். பதிவின் நீளம் கூடும். மேலும் அது விரும்பப் படுமா தெரிய வில்லை
முன்பொரு முறை எழுதி இருந்தேன். பதிவுலகில் I ALSO RUN..
!பதிவுலகத்தில் பொழுது போக்கவோ திறமையைத் தீட்டவோ பலரும் SUDOKU  சால்வ் செய்யும் பழக்கம் உடையவர்களாக இருக்கலாம். கீழே நான் கொடுத்திருக்கும் சுடோகோ சால்வ் செய்ய முடிந்தால் தெரியப் படுத்துங்கள். ஒரு பட்டமே தரக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
சுடோகு விதி முறைகள் தெரியும் என்று நம்புகிறேன். நான் கொடுத்திருக்கும் 81 சிறிய கட்ட சதுரங்களை ஒன்பது  ஒன்பது கட்டச் சதுரங்களாக் எடுத்துக் கொள்ளவும் எனக்கு அவற்றை SHADEசெய்து காட்டத் தெரியவில்லை. SUDOKU   SOLVE  செய்பவர்களுக்குப் புரியும். 

. .   


5
3





8






2


7


1

5


4




5
3



1


7



6


3
2



8


6

5




9


4




3






9
7




(ஒரு குறியீட்டைக் குறிக்கும் பதிவு இது. வித்தியாசமாக இருக்கிறதா.?)

     

          
: